கனவே 11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீரா மருத்துவமனை படுக்கையில் மயங்கிக் கிடந்தாள். இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தும் விதமாக மூச்சு சீராக வெளிவந்துக் கொண்டிருந்தது.

"என் பொண்ணுக்கு ஏன் விதி இவ்வளவு சோதிக்குது?" என்று அழுதாள் அம்மா. அம்மாவிற்கு சமாதானம் சொல்லியே மைவிழிக்கு நேரம் தீர்ந்தது.

மீராவின் கனவிலும் கூட பழைய நினைவுகள்தான் துரத்திக் கொண்டிருந்தன.

***

மகிழனை நினைத்து தினமும் கல்லூரி சென்றுக் கொண்டிருந்தாள். கல்லூரியில் அவளை சுற்றி இருந்த பலரும் நேரடியாகவே அவளை தாக்கிப் பேசினர்.

பாத்ரூமின் சுவரிலும், கல்லூரியின் பின்பக்க காம்பவுண்ட் சுவரிலும் மீராவின் கால் உடைந்துப் போனதால்தான் மகிழன் விட்டுச் சென்றான் என்று எழுதி வைத்தார்கள் சிலர்.

மீரா ஊமையாகவும், செவிடாகவும், குருடாகவும் இருக்க முயன்றாள். ஏனெனில் அவள் சாதாரணமாக இருக்க முயன்ற நேரங்களில் எல்லாம் மற்றவர்களோடு அவளுக்கு சண்டைதான் வந்தது. சண்டையிட்டே சோர்ந்து விட்டாள் மீரா.

தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இந்த அளவிற்கு இவர்கள் காயப்படுத்துவார்கள் என்று மீரா கனவில் கூட நினைக்கவேயில்லை. மகிழனோடு இருந்தபோது மென்னகையோடு அவளை கடந்துச் சென்றவர்கள் கூட இப்போது உதடு கோணி கேலி செய்து விட்டு நகர்ந்தனர்.

'சிஸ்டர்.' என அழைத்து பாடத்தில் சந்தேகம் கேட்டவர்கள் கூட ஓடி போனவனின் காதலி என்றுக் கேலிச் செய்துப் பேசினர்.

திரும்ப திரும்ப பேசி அவர்களுக்கே சலித்து விடும் என்று நம்பினாள் மீரா. ஆனால் அவர்கள் திருந்தவில்லை.

"உன் லவ்வரை இன்னைக்கு ஒரு பொண்ணோடு பார்த்தேன்." என்றான் ஒருவன்.

மீரா பயத்தோடு அவனை ஏறிட்டாள்.

"நல்ல அழகான பொண்ணு, உன்னை‌ விட! இரண்டு பேரும் கை பிடிச்சிட்டு ரோடு கிராஸ் பண்ணி போனாங்க!" என்று அவன் சொல்ல மீராவின் கண்கள் தானாகவே கலங்கியது.

எதிரில் இருந்தவன் குபீரென்று சிரித்தான்.

"வாவ்.. இவ நிஜமாவே நம்பிட்டா போல!" என்றான்.

அவனின் அருகில் இருந்தவன் அவனின் தோளில் அடித்தான்.

"ஏன்டா.. இன்னும் கொஞ்ச நேரம் டீஸ் பண்ணி இருக்கலாம்." என்றான்.

'இது டீஸிங் கிடையாது. புல்லியிங்.. ஹராஸ்மென்ட்!' என்றது மீராவின் மனம். ஆனால் எதிரில் இருந்தவர்களுக்கு எங்கே இவளின் வலி புரிந்தது?

அவளின் முகம் மாறுவதை கண்ட எதிரில் இருந்தவன் "நாங்க சொல்லலன்னாலும் அவன் இப்ப அப்படிதான் சுத்திட்டு இருப்பான். என்னவோ ஸ்ரீராமனையே காதலிச்ச மாதிரி பீல் பண்ணிட்டு இருக்க.." என்றுவிட்டு நகர்ந்தான்.

மீரா அன்று இரவில் உடைந்து அழுதாள். அழவே கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்திருந்த மனம். ஆனால் மகிழனுக்கு வேறு காதலி இருப்பாளோ என்ற சந்தேகம் வந்து சேர்ந்ததில் தன்னை மீறி அழுதாள்.

அன்று இரவு உணவு இறங்கவில்லை. உணவு வேண்டாமென்று நகர்ந்தவளை வீட்டில் இருந்தவர்களும் திட்டினார்கள்.

"ஒரு குடும்பம்ன்னா ஆளாளுக்கும் பிரச்சனை உண்டு. உன் ஒருத்தியையே தலையில தூக்கி வச்சி ஆட முடியாது. உன் தேவையை நீதான் பார்த்துக்கணும். உனக்கு சாப்பாடு கூட கெஞ்சி கொஞ்சி ஊட்டி விடணுமா?" என்றுத் திட்டினாள் அம்மா.

மீரா எச்சில் விழுங்கியபடி அம்மாவை பார்த்தாள். இப்போதெல்லாம் அவளுக்கு கோபமே வருவதில்லை. தனது எல்லா உணர்வுக்கும் காரணமானவன் அவன் ஒருவனேதான் என்று நினைத்து விட்டாள் போல.

மீராவின் வருத்தம் சுமந்த கண்களை அம்மாவாலும் பார்க்க முடியவில்லை. அந்த வீட்டிலேயே கலகலப்பு இவள்தான். இப்போது இவளே இப்படி இருந்தால் யாருக்குதான் சோகமாக இருக்காது?

"பசிக்கலம்மா. மீதியாகும் சாப்பாட்டை ஃப்ரிட்ஜில் வச்சிடு. பசிச்சா அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்!" என்றுவிட்டு தனது அறைக்கு நடந்தாள்.

அப்பாவால் அதற்கு மேல் உண்ண முடியவில்லை. எழுந்து விட்டார். மகள் மீண்டும் சாப்பிட மாட்டாள் என்று அவருக்குத் தெரியும்.

வேதா மீதும், மைவிழி மீதும் கொண்ட அன்பை விட இவள் மீதுதான் அதிக அன்பு இருந்துள்ளது. அதையே இப்போதுதான் இவர் புரிந்துக் கொண்டார். சிறு வயதில் எல்லாம் குரங்கு குட்டிப் போல தோளில் ஏற்றிக் கொண்டு திரிந்ததாலோ என்னவோ இன்று அவளின் மனதின் பாரத்தை தனது மன பாரமாக எண்ணிக் கலங்கினார்.

மீரா கட்டிலில் படுத்தபடி கூரையை பார்த்தாள். அவர்களுடையது பெரிய அளவிலான அழகான ஓட்டு வீடு. சொந்தங்களுக்கும் இடம் இருந்தது. ஆனால் கூரையை கான்கிரீட்டாக மாற்ற மனம் இல்லாமல் அப்படியே விட்டு வைத்திருந்தனர்.

திறந்திருந்த ஜன்னல் வழியே காற்று பலமாக வீசியது. விசிறியும் காற்றை அள்ளித் தெளித்தது. ஆனால் அவளின் இதயம்தான் ஆறாமல் கிடந்தது.

"வேற பொண்ணை உனக்குப் பிடிச்சிருக்கா மகி? அதனாலதான் என்னை விட்டுப் போயிட்டியா?" எனக் கேட்டு தலையணையில் முகம் புதைத்து விம்மினாள்.

"நீ சொல்லி இருந்தா நான் சந்தோசமா உன்னை அவளோடு அனுப்பி வச்சிருப்பேன்.. ஏன் என்கிட்ட சொல்லாம போன?" எனக் கேட்டு அழுதாள்.

எவளோ ஒருத்தியின் கை பற்றி அவன் நடப்பதை நினைத்து நினைத்து அன்று இரவு முழுக்க அழுதுக் கொண்டே இருந்தாள்.

மறுநாள் காலையில் அவளின் அழுது வீங்கிய முகத்தை முறைத்து பார்த்துவிட்டு தனது வேலைக்கு கிளம்பினார் அப்பா.

"அக்கா.. எல்லாம் சரியா போயிடும்." என்று அவளின் கையை அழுத்தினான் பிருந்தன்.

மீரா அவனுக்காக என்று தலையசைத்தாள். ஆனால் அவளின் வாழ்க்கையை பற்றி யோசிக்கதான் பயமாக இருந்தது. எப்படி யோசித்தாலும் வெறும் இருள்தான் தெரிந்தது.

இன்றைக்கு கல்லூரியில் யாராவது தொல்லைச் செய்தால் கல்லூரி மேலிடத்தில் சொல்லி விட வேண்டும் என்று எண்ணியபடி கல்லூரிக்குள் நுழைந்தாள்.

"ஹேய் மீரா.. இது உன் புக்கா?" என்று கேட்டபடி ஒருவன் அவளை இடித்தபடி வந்து நின்றான்.

அவளின் புத்தகம்தான். அவளின் பையிலிருந்து நேற்று இவன்தான் எடுத்திருப்பான் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது.

புத்தகத்தை வைத்திருந்தவன் பக்கங்களை புரட்டினான்.

"ஒரு பக்கம் விடாம மகி மகின்னு கிறுக்கி வச்சிருக்க.. பாவம்ப்பா நீ!" என்று சோகமாக சொன்னான் அவன். ஆனால் அவனின் உள்ளமெல்லாம் நஞ்சு என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"என் புக்கை கொடு ராஜேஸ்.." என்று கையை நீட்டினாள்.

"தரேன். தராம எங்கே போறேன்?" என்றவன் அங்கே சுற்றி நின்றிருந்த மாணவர்களிடம் புத்தகத்தின் பக்கங்களை பிரித்துக் காட்டினான்.

"லவ் பண்ணா நம்ம மீராவை போல லவ் பண்ணணும். இப்படியெல்லாம் புத்தகத்துல கிறுக்கணும். அப்போதான் அது உண்மையான லவ்.." என்றான் கேலியாக.

சுற்றி இருந்தவர்கள் பெரிய ஜோக்கை கேட்டது போல சிரித்தார்கள். மீரா தன் கோபத்தை முழுமையாக கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்.

"ஆனா பாவம் பொண்ணு.. இவ இவ்வளவு லவ் பண்ணியும் வேஸ்ட்டாவே போயிடுச்சி. இவ லவ்வர் இவளை விட்டுட்டுட்டு ஓடிப் போயிட்டான்!" என்றான் பரிதாப குரலில்.

அவன் மேலே பேசும் முன் அவனின் கையிலிருந்த புத்தகம் பறிக்கப்பட்டது. மீரா நிமிர்ந்துப் பார்த்தாள். மகிழனை அந்த நேரத்திலும் அவள் எதிர்ப்பார்த்தாள். ஆனால் அங்கே வினய் நின்றிருந்தான்.

"உங்களுக்கு சலிக்கவே இல்லையா? இவளும் நம்ம கூட படிக்கறவதானே?" என்றுக் கேட்டான் கோபமாக.

ராஜேஸின் புறம் திருப்பியவன் "இவளோடு ஒன்னாவதுல இருந்துப் படிக்கற நீ. நீயே இவளை இவ்வளவு கிண்டல் பண்ணா மத்தவங்க எப்படி இருப்பாங்க? இத்தனை வருசத்துல நீ ஒருநாள் கூட இவளுடனான பிரெண்ட்ஷிப்பை உணரலையா?" என்றான்.

ராஜேஸ் உதட்டை வளைத்தான். "இத்தனை வருசமா இவ என்னோடுதான் படிச்சாளா? சாரிப்பா மறந்துட்டேன்." என்றான்.

மீரா தரை பார்த்தாள். அவள் தனது எட்டாம் வகுப்பில் மகிழனை கண்ட பிறகு பிறகு வேறு யாரோடும் நெருங்கி பழகவில்லை. அனைவரிடம் ஒதுங்கினாள். அனைவரையும் ஏதோ ஒரு விதத்திலும் ஒதுக்கி வைத்தாள். அவள் வானில் ஒற்றை சூரியனாக மகிழனை மட்டுமே கண்டாள். அதனாலயே நட்சத்திரங்களாக மின்னிய நண்பர்கள் அனைவரையும் தொலைத்து விட்டாள். ஏதோ ஒரு விதத்தில் இந்த தவறுக்கு அவளின் அலட்சியமும்தான் காரணம்.

அவர்கள் பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"கேலி கிண்டல் போதும் ராஜேஸ்.. இங்கே பசங்க யாருக்கும் லவ் பெயிலியர் ஆனதே இல்லையா? போன மாசம் கூட ஒரு பொண்ணு உன்னை ரிஜெக்ட் பண்ணாதானே? ஒரு பையன் உனக்கு லவ் பெயிலியர் ஆகலாம். ஆனா அதே இவளுக்கு ஆனா அது கொலை குத்தமா? இவளை தொந்தரவு பண்ணாத. இவ நம்ம பிரெண்ட்.." என்றான்.

ராஜேஸ் மீராவை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு நகர்ந்தான்.

வினய் புத்தகத்தை மீராவிடம் நீட்டினான்.

"ஏதாவது ஹெல்ப் வேணுமா?" என்றுக் கேட்டான்.

வேண்டாமென தலையசைத்தவள் "தேங்க்ஸ்.." என்றுவிட்டு தனது வகுப்பறை நோக்கி நடந்தாள்.

அன்றைய நாளுக்கு பிறகு சக மாணவர்களின் கேலி பேச்சுகள் ஓரளவிற்கு குறைந்து விட்டிருந்தது. 'எவனோ ஒருவன் வந்து சொன்ன பிறகுதான் நான் இவர்களுடைய சக தோழி என்று தெரிந்ததோ!?' என தனக்குள்ளேயே கேட்டு சிரித்தாள்.

வினய் தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவளோடு பழக ஆரம்பித்தான்.

அவள் படியேறுகையிலும், இறங்குகையிலும் அவளுக்கு கை தந்து அழைத்துச் சென்றான். அவளோடு சேர்ந்து பாடங்களை படிக்க ஆரம்பித்தான்.

மீராவிற்கு இந்த புது நட்பு பிடித்திருந்ததோ இல்லையோ ஆனால் அவசியமாக இருந்தது. என்னேரமும் மகிழனை பற்றியே நினைக்காமல் இப்போது சில நிமிடங்களுக்கு மற்ற விசயங்களை யோசிக்கும் அளவிற்கு மனம் பக்குவப்பட்டு விட்டிருந்தது. பக்குவப்பட்டது என்பதை விட எண்ணங்களின் பாதை சற்று விலக ஆரம்பித்து விட்டு என்றுச் சொல்லலாம்.

மீராவை தனது பைக்கிலேயே வீட்டிற்கு அழைத்துச் சென்று இறக்கி விட்டான் வினய்.

"டேக் கேர்.. குட் நைட்.." என்றுத் தினமும் சொல்லிவிட்டுச் சென்றான்.

மீரா இயல்புக்கு திரும்புகிறாள் என புரிந்து வீட்டில் இருந்தவர்களும் நிம்மதியடைய ஆரம்பித்தார்கள்.

ஆனால் கல்லூரியில் நேர் எதிராய் நடந்தது. இதுவரை மகிழனை வைத்து கேலி செய்தவர்கள் இப்போது வினய்யை வைத்து கிண்டல் செய்தார்கள்.

"நான் கூட புனிதமான காதல்ன்னு நினைச்சேன். ஆனா அவன் போனதும் இவனை பிடிச்சிட்டியே!" என்றனர்.

மீரா அவர்களை கண்டுக் கொள்ளாமல் இருக்கதான் முயன்றாள். ஆனால் அவர்கள்தான் விடவில்லை.

"உன் நேர்மை புரிஞ்சிதான் மகி உன்னை விட்டுட்டு போயிட்டான் போல." என்றாள் ஒருத்தி. பத்தாம் வகுப்பில் ஒருநாள் அவள் மகிழனுக்கு காதல் கடிதம் தந்தது கண்டு கன்னத்தில் ஒன்று விட்டிருந்தாள் மீரா. அதற்காய் இப்போது பழி வாங்கினாள் அவள்.

"தூர போ." என்று இவள் விலகினாலும் அவள் விடவில்லை.

"உனக்கு அவன் இல்லன்னா இவன். இவன் இல்லன்னா இன்னொருத்தன். கேட்டா ப்யூர் லவ்வுன்னு சீன் போடுவ. உன்னை போல சீட்டரை தேடி தேடி லவ் பண்றாங்களே அவங்களை சொல்லணும்.." என்றாள்.

மீரா கண்களை மூடித் திறந்தாள்.

"நீ பத்தினியா இருந்தா அதை உன்னோடு வச்சிக்க. நான் எப்படி இருந்தா உனக்கென்ன? உங்களுக்கு எப்பவும் வாயை அரைச்சிட்டே இருக்கணும். மெல்லுறதுக்கு எதுவும் இல்லன்னா கிடைக்கற ஆளை போட்டு மெல்லுவிங்க. நான் ரொம்ப பொறுமையா இருக்கேன். என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணாத‌. போயிடு தூரமா." என்றுவிட்டு நகர்ந்தாள் மீரா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN