கனவே 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அகிலன் பெருமூச்சோடு மகிழனுடைய அறையின் வாசற்படியில் நின்றான். இருட்டிக் கொண்டிருந்த வானில் நிலா ஊர்கோலம் செல்வது அந்த அறையின் ஜன்னல் வழியே தெரிந்தது. அவனின் சகோதரன் நிலவை ரசிக்க எங்கே விட்டான்?

அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் மகிழனின் கை வண்ணத்தால் சிதறு தேங்காயாக மாறி இருந்தது.

"ஏன்டா இப்படி பண்ற?" எனக் கேட்டவனை நோக்கி வந்தது உடைந்த மேஜையின் கால் துண்டு.

விலகி நின்ற அகிலன் "முட்டாள்.!" என்றான்.

"எதுக்கு என்னை அங்கிருந்து கூட்டி வந்த?" என்றான் ஆத்திரத்தோடு. அவனின் கையில் மேஜையின் மற்றொரு கால் இருந்தது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தூக்கி வீசுவேன் எனும்படிதான் பார்த்து நின்றான்.

"உன்னை கொலைக்காரனா பார்க்க நாங்க ஆசைப்படல.!" என்ற அகிலன் தம்பியின் கண்களில் இருந்த சிவப்பு குறையாது இருப்பதை கண்டு "அந்த பொண்ணு.. அந்த பொண்ணு இந்த மாதிரி உன்னைக் கொலைக்காரனா பார்க்க தயாரா இருக்காளா?" என்றான் சிறு குரலில்.

தம்பியை கட்டுப்படுத்தும் வித்தையை இந்த ஒரு வருடத்தில் நன்றாகவே கற்றுக் கொண்டான் அகிலன். யார் சொல்லியும் கேட்காதவன் மீரா என்ற பெயரைச் சொன்னாலே பெட்டிப் பாம்பாக அடங்கினான்.

மகிழனின் கையில் இருந்த கட்டை கீழே விழுந்தது. மண்டியிட்டான். உள்ளங்கைகளால் முகத்தை பொத்திக் கொண்டு "ஆஆஆ.."வென கத்தினான்.

கத்தல் மெள்ள கதறலாக மாறியது. அகிலன் பொறுக்க முடியாமல் வந்து தம்பியை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"அண்ணா.. நான் என்ன அண்ணா பண்ணுவேன்?" அழுகையோடு கேட்டவனை தோளில் சாய்த்துக் கொண்டவன் "எல்லாம் சரியா போயிடும் மகி.. கொஞ்சம் டைம் கொடு.. அவளுக்கும் உனக்கும் கொஞ்சமே கொஞ்சம் டைம் கொடு.." என்றான்.

மகிழனின் கண்ணீர் அகிலனின் சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது. சற்று முன் கொலைக்காரனாக துணிந்தவன் இப்போது சிறு பிள்ளை போல அழுகிறானே என்று அகிலனுக்குதான் வேதனையாக இருந்தது.

காலையில் நடந்ததை நினைக்கவே அவனுக்கு பயமாக இருந்தது.

***

காலையில்...

***

மகிழனின் கை பற்றி நடந்துக் கொண்டிருந்தாள் மீரா. ஈரமான மாலை. இரவு நெருங்கும் வேளை.

"நீயும் நானும் இந்த மொத்த உலகத்தையும் சுத்தி வரணும் மகி." என்றாள்.

இருவரின் தோளும் உரசுவதை கண்டும் காணாதது போல நடந்தவன் "ஓகே.. அப்படியே இன்னொன்னும்.!" என்றான்.

"என்ன?" ஆர்வமாக கேட்டவளின் மூக்கை தொட்டவன் "என் உலகம் நீதான்னு நான் உன்கிட்ட சரணடையணும்." என்றான்.

மீராவிற்கு பேச்சு வர சில நொடிகள் பிடித்தது.

"அப்கோர்ஸ் பேபி!" என்றவள் எட்டி அவனின் கன்னத்தில் உதடு பதித்தாள்.

"பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி செய்யாதன்னு எத்தனை முறை சொல்றது? ரொம்ப மோசம் நீ மீரா!" என்றான் பொய்யான கோபத்தோடு.

"பப்ளிக்ஸ்க்கு வேற வேலையே இல்லையா? எதுக்கு நம்மை பார்க்கணும்?" புருவம் உயர்த்திக் கேட்டவளை அழைத்துக் கொண்டு நகர்ந்தவன் "பொது இடம்ன்னா குழந்தைகளும் இருப்பாங்க. இந்த சொசைட்டிக்கு நம்மால நல்லதுதான் செய்ய முடியல. அட்லீஸ்ட் வருங்கால சந்ததிகளை கெடுத்து வைக்காமலாவது இருக்கலாம் இல்ல?" என்றான்.

மீரா ஒத்துக் கொள்ளவில்லை.

"நீ ஒரு சினிமா பாட்டை பாரு.. அவங்க அந்த பாட்டுல.." அவள் மீதி சொல்லும் முன் திரும்பிப் பார்த்து முறைத்தவன் "அவங்க தப்பு செய்றாங்கன்னு நாமும் செய்ய முடியாது மீரா." என்றான்.

"ஓ.. ஓகே பேபி. உன் பேச்சை கேட்காம வேற என்ன செய்ய போறேன்?" என்றவள் அடுத்த நாளில் இருந்து நல்ல பிள்ளையாக இருந்தாள் என நினைத்தால் அது அவனின் கற்பனை என்றுதான் சொல்ல வேண்டும்.

எத்தனையோ விசயங்களில் நல்ல பெண்ணாகவே இருக்கும் மீரா மகிழனை விட்டு ஒரு நூலிழை விலகி இருந்து காதலை காட்டுவதில் மட்டும் நல்லவளாக இல்லை. அவனை தன்னிடமிருந்து யாராவது பிரித்து விடுவார்கள் என்ற பயமோ, இல்லை அவனை விட்டு விலகினால் இறந்து விடுவோம் என்ற எண்ணமோ யார் கண்டது. அவன் அருகில் இருக்கும் வேளைகளில் அவனின் கைப்பற்றியபடிதான் இருக்க வேண்டும். அவன் அமர்ந்திருந்தால் அவனின் தோளிலோ மடியிலோ அவளின் தலை சாய்ந்திருந்த வேண்டும்.

"மீராம்மா.." படுக்கையில் இருந்தவள் கண்களை திறக்க முயல்வது கண்டு அழைத்தாள் அம்மா.

மீரா வேதனையோடு கண்களை திறந்தாள். கனவு இன்னும் சற்று நேரம் தொடர்ந்திருக்க கூடாதா என்று ஏங்கினாள்.

"ஏன்ம்மா காப்பாத்துனிங்க?" என்றாள் கண்களில் நீர் வழிய.

"எங்களை வதைக்காத மீரா. உன்னை சாக கொடுக்கவா பத்து மாசம் சுமந்து பெத்தேன்? நடந்தது அத்தனையும் கனவுன்னு நினைச்சி மறந்துடு தங்கம். உனக்கு நாங்க இருக்கோம். அப்பா, அண்ணன், அக்கா, தம்பி உன் மாமனுங்க எல்லோரும் உனக்காக இருக்கோம். எங்களை கொஞ்சமாவது நினைச்சிப் பாருடி. நீ சரின்னு சொன்னா செழியன் உன்னை கல்யாணம் பண்ணிப்பான். ஆனா இப்படி பண்ணாதடி.!" என்றாள் கெஞ்சலாக.

மீரா முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள். கண்ணீர் தீராத மழை மேகமாய் வந்துக் கொண்டே இருந்தது.

செழியன் தனக்காக அவன் காதலை துறப்பானா என்று மீரா யோசிக்க கூட முயலவில்லை. அவளுக்கு தன் காதலை மறப்பதே இந்த ஜென்மத்தில் முடியாத காரியம்.

அழுதபடியே தன் முன் இருந்த காலண்டர் காட்டிய தேதியை பார்த்தாள். சரியாய் ஒரு வருடமும் இரு வாரங்களும் ஆகியிருந்தது மீராவுக்கும் மகிழனுக்குமான விபத்து நடந்து.

இந்த ஒரு வருட தண்டனை நரகத்தில் கூட தனக்கு கிடைக்காது என்றெண்ணினாள். அம்மா அந்த பக்கம் நகர்ந்ததும் இந்த ஜன்னலின் வழியே கீழே குதித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

'இதற்கு மேல் வாழ்வதில் பயன் என்ன?' என்று யோசித்து யோசித்து தனக்குள் இறந்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கை சூனியம். நாளை வரும் நாட்கள் அனைத்தும் அந்தகாரம். பார்வையில் படுபவை அனைத்தும் இற்றுப் போன வெளிச்சம்.

"அந்த பசங்களுக்கு தண்டனை கிடைச்சிடுச்சி அத்தை.." கதிர் மருத்துவமனை அறைக்குள் வந்து நின்றுச் சொன்னான். மீரா நடுங்கும் தன் கரங்களை மாமன் முன் காட்டாமல் மறைக்க முயன்றாள்.

மீராவிற்கு இந்த சேதியை கேட்பதில் எந்தவித ஈடுபாடும் இல்லை. எல்லாம் முடிந்த பிறகு என்ன நடந்து என்ன ப்ரயோஜனம் என நினைத்தாள்.

"வெளங்கவே மாட்டாங்க அவங்க.. அவங்க படுகேவலமாதான் செத்துப் போவாங்க.!" என்றாள் அம்மா.

அம்மா சாபமிடுவது மிகவும் சொற்ப காரணங்களின் போது மட்டும்தான்.

"அவங்களை என் கையாலேயே கொல்லணும்ன்னு வெறி அத்தை. ஆனா அதுக்குள்ள போலிஸ் பிடிச்சிடுச்சி" என்றான் கதிர்.

அனைவருக்கும்தான் அவர்களை கொல்ல ஆசை. ஆனால் தன் பொருட்டு தன் குடும்பத்தில் உள்ளவர்கள் கொலைக்காரர்கள் ஆவதை மீராதான் விரும்பவில்லை.

"அவங்க ஜெயிலுக்கு போகட்டும். ஆனா என்னை மட்டும் விட்டுடுங்க அம்மா. கொஞ்சமே கொஞ்சம் விஷம் கொடுங்க. ப்ளீஸ்.." என்றவளின் அருகே வந்து கன்னத்தில் ஓர் அறை விட்டான் கதிர்.

அம்மா விக்கித்து போய் மகளையும் மருமகனையும் பார்த்தாள்.

மீரா பயத்தில் கண்களை மூடினாள். கைகள் இரண்டும் கடகடவென நடுங்கியது. உடம்பு மொத்தமும் உதறியது. தெம்பிருந்தால் ஓடி ஒளிந்திருப்பாள். ஆனால் கையை அறுத்துக் கொண்டதால் உண்டான ரத்த போக்கின் காரணமாக உடல் அசதியாய் உணர்ந்தது.

"உங்க அக்காவை கூட நான் இதுவரை அடிச்சது இல்ல.. ஆனா உன்னை.." என்றுப் பற்களை கடித்தபடி கையை விலக்கியவன் "என்னையே கடுப்பேத்திட்டு இருக்கியா நீ? செத்துட்டா போனதெல்லாம் வந்துடுமா? நாங்க இத்தனை பேர் ஆறுதல் சொல்லிட்டு இருக்கோம். உன் வேதனையை நாங்க அனுபவிச்சிட்டு இருக்கோம். உன்னை எப்படியாவது மீட்டுக் கொண்டு வந்துட மாட்டோமான்னு தலையை பிச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா உனக்கு சாக ஆசையா?" என்று ஆத்திரத்தோடுக் கேட்டான். அதன் பிறகுதான் அவளின் நடுங்கும் உடம்பை கண்டான்.

அவளின் மூடிய விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளை கண்டு தன் நெஞ்சில் குத்திக் கொண்டான்.

"நான் வெளியே போறேன் அத்தை.. அவளுக்கு சமாதானம் சொல்லுங்க.. கோபத்துல அடிச்சிட்டேன்.!" என்றவன் வெளியே நடந்தான். விழிகள் இரண்டும் கலங்கியது அவனுக்கு.

"மாமா.. எனக்கு இந்த ஹேர் ஸ்டைல் அழகா இருக்கா? என் அக்காவை விட நான் டக்கரா இருக்கேன் இல்ல? அவளுக்கு பதிலா என்னை கல்யாணம் பண்ணி இருக்கலாம்ன்னு நினைக்கிறிங்கதானே?" என்று கேட்டு மீரா தன்னைக் கேலி செய்த நேரங்கள் அவனின் நினைவில் வந்துச் சென்றது.

மைவிழிக்கு குழந்தை பிறந்தபோது மாமனின் தோளைக் கட்டிக் கொண்டுத் துள்ளி குதித்தவள்தான் இவள். அவன் குளிக்க சென்ற நேரங்களில் துண்டையும் உடைகளையும் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு "ஐநூறு ரூபா காசு கொடுங்க மாமா.. அப்பதான் டிரெஸ் தருவேன்!" என்று விளையாடியவள்தான் இவள். மைவிழியோடு இவன் சண்டையிட்டான் என்று தெரிந்ததும் கோபமாக வந்து இவனின் கையை பிடித்து கடித்து வைத்துவிட்டு "என் அக்காவை ஏதாவது சொன்னிங்கன்னா உங்களை கடத்திக் கொண்டுப்போய் மலையிலிருந்து உருட்டி கீழே தள்ளி விட்டுடுவேன்." என்று மிரட்டியவள்தான் இவள்.

ஆனால் இன்று பார்த்தாலே பயந்து நடுங்குகிறாள். இவனை மட்டுமல்ல வீட்டில் எந்த ஆண்களுமே அவளை நெருங்க முடியவில்லை. பெற்ற தந்தையை கூட பயத்தோடு பார்க்க வைத்து விட்டதே இந்த விதி என்று தனக்குள் உடைந்துப் போனான் அவன்.

அவன் மருத்துவமனை வராண்டாவிற்கு வந்தபோது கைபேசி ஒலித்தது. இப்போதெல்லாம் கைபேசி அழைத்தாலே பயம்தான் வந்தது.

***

சில வாரங்கள் முன்பு அதிகாலை நேரத்தில் மைவிழியின் கைபேசிக்கு அழைத்திருந்தாள் மீரா. அதற்கும் சில நாட்கள் முன்புதான் தனது பழைய போனிற்கு ஒரு புது சிம்மை வாங்கிப் போட்டு மீராவிடம் தந்திருந்தான் சரண். மைவிழி அந்த நேரத்தில் தோட்டத்தில் நடை பயிற்சிக்கு சென்று விட்டாளே என்று கதிர்தான் போனை எடுத்தான்.

"அக்கா.. நான் எங்கேயோ இருக்கேன் அக்கா.. என்னை கண்டுப்பிடிச்சி கூட்டிப் போ ப்ளீஸ்.." என்று மீரா சொன்னதும் அதிர்ந்தவன் அவள் அடுத்ததாக "இரண்டு பசங்க எ.. என்னை ரே..ரேப் பண்ணிட்டாங்க அக்கா.. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. மறக்காம வரும்போது போலிஸை கூட்டி வா.. இல்லன்னா இவங்க இதே மாதிரி மத்த பொண்ணுங்களையும்.. தலையெல்லாம் சுத்துதுக்கா.. உடம்பு வலிக்குது. பார்க்கற இடமெல்லாம் ப்ளட் மாதிரியே தெரியுது. அரை மயக்கம்.. கனவு மாதிரி இருக்கு.. இவங்க ரூம்க்கு வெளியே இருக்காங்க போல. எனக்கு இப்பதான் கொஞ்சம் மயக்கம் தெளிஞ்சது. அவங்க மறுபடியும் ரூம்க்குள்ள வரும் முன்னாடி வந்துடுக்கா. ப்ளீஸ்.. அம்மா அப்பாக்கிட்ட சொல்லாத அக்கா.. என்னை திட்டுவாங்க!" என்று அவள் சொல்லி முடித்த பிறகு கைபேசியின் இணைப்பு துண்டாகிப் போனது.

கதிருக்கு பேச்சே எழவில்லை. கைபேசியை பற்றியிருந்த கரம் கடகடவென நடுங்கிக் கொண்டிருந்தது.

"அதுக்குள்ள எழுந்துட்டியா கதிர்?" எனக் கேட்டபடி நடை பயிற்சியை முடித்துக் கொண்டு வந்த மைவிழி இவனின் வியர்த்துக் கொட்டும் முகம் கண்டு "நான்தானே நடக்க போனேன்? உனக்கு ஏன் வேர்க்குது?" என்றாள்.

முந்தானையால் தன் முகத்தை துடைத்து விட முயன்றவளின் கையை பற்றியவன் நடந்ததை திக்கிக் திணறிச் சொன்னான். மைவிழி இடம் வலமாக தலையசைத்தாள்.

"ச்சே.. அவ கனவு ஏதாவது கண்டிருக்காளோ என்னவோ?" என்றாள் நடுங்கும் குரலில். அக்கா இறந்த சோகமே இன்னும் அவளின் மனதை விட்டு செல்லாத நிலையில் தனது தங்கைக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று யோசிக்க முடியவில்லை அவளால்.

"நாம போலிஸ்க்கு போகணும்!" என்றவன் அவசரமாக தனது சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பினான்.

மைவிழி மீராவுக்கு அழைக்கவில்லை. நடந்தது உண்மையென்றால் இப்போது அவள் என்ன நிலையில் உள்ளாளோ, எதிரிகள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்களோ என்றுத் தெரியாமல் போனை போட்டு தங்கையை ஆபத்தில் விட மனமில்லை அவளுக்கு.

அப்பாவுக்கு அழைத்து தங்கை எங்கே என்றுக் கேட்டாள்.

"அவளோட பிரெண்டுக்கு பர்த்டே பார்ட்டின்னு சொன்னா விழி. இன்னைக்கு ஒரு நாளைக்கு பிரெண்ட் வீட்டுல தங்கிக்கிறேன்னு சொன்னா.." என்றார் அவர் அரை தூக்கத்தில்.

மைவிழி நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

கதிர் அதற்குள் தனக்குத் தெரிந்த காவல் துறை அதிகாரி ஒருவருக்கு போனில் விசயத்தை சொல்லி உதவிக் கேட்டான்.

"பிரெண்ட்ஸ்.. அவளுக்கு ஏது பிரெண்ட்ஸ்?" என்றாள் மைவிழி தனக்குள்.

கதிரும் மைவிழியும் அந்த வீட்டிற்கு சென்றபோது இரண்டு பையன்களை காவல் துறையினர் கைது செய்திருந்தனர். அந்த பையன்கள் இருவரும் அதிர்ச்சியோடு போலிஸை பார்த்து நின்றனர்.

"அந்த பொண்ணு எங்கேடா?" என்றுக் கேட்டு ஒருத்தனின் கன்னத்தில் அறைந்தார் போலிசார் ஒருவர்.

கிழக்கே இருந்த அறை ஒன்றை நடுங்கும் விரல்களோடு சுட்டிக் காட்டினான் அவன். மைவிழி அந்த அறைக்கு ஓடினாள். உள் பக்கம் பூட்டியிருந்த கதவை தட்டினாள்.

"மீரா.. நான் அக்கா வந்திருக்கேன். கதவை திற.!" என்றாள்.

சில நொடிகளுக்கு பிறகு கதவை திறந்தாள் மீரா. அக்காவை அணைத்துக் கொண்டாள்.

"பயமா இருக்குக்கா.." என்றாள். அந்த ஒரு வாக்கியம்தான். இதுவரையிலும் அதையேதான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

அலங்கோலமாக இருந்தவளை பார்க்க கதிராலும் முடியவில்லை. அணையும் முன் பிரகாசிக்கும் சுடரை போலதான் அந்த போனில் பேசியிருந்தாள் மீரா. அதன் பிறகு முழுமையாக தன்னை இருட்டுக்குள் தொலைத்து விட்டாள்.

உடலின் காயங்கள் ஆறவே இரண்டு வாரங்கள் ஆனது. ஆனால் அவள் செய்துக் கொண்ட சுய காயத்தால் உடம்பின் நிலை இன்னும் மோசமாகிக் கொண்டிருந்தது.

***

"கதிர்.. போன் அடிக்குது." மைவிழி இவனின் தோளை தட்டிச் சொன்னாள்.

போனின் ஒற்றை ரிங்கில் பழைய நினைவுகளுக்கு சென்று விட்டவன் தலையை உதறிக் கொண்டு போனை எடுத்தான். அதியன்தான் அழைத்திருந்தான்.

"கதிர்.. அந்த பசங்க இரண்டு பேரையும் ஜெயிலுக்கு கொண்டு போற டைம்ல யாரோ கடத்திட்டாங்க.." என்றான்.

கதிருக்கு குழப்பமாக இருந்தது.

"யாராவது அவங்களை காப்பாத்த டிரை பண்றாங்களா?" என்றான் கோபத்தோடு.

"தெரியல கதிர். ஆனா அவங்களை தூக்குல போடும் நாள் வரைக்கும் எனக்கு நல்ல தூக்கமே வராதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்ப இப்படி.." என்று கடுப்பு குரலில் சொன்னான் எதிரில் இருந்தவன்.

"ஸ்பாட்டுக்கு நான் வரேன்." என்றவன் மைவிழியிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

***

"இவ உடம்புக்கு பெரிய சேதம் ஆகல விழி.. ஆனாலும் சில காயங்கள் சரியாக நாள் ஆகும். இன்னும் கொஞ்ச நாள்ல இவ க்ளீன். ஆனா மைன்ட் ரொம்ப பாதிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அவ மனரீதியா சரியாக நீங்கதான் பக்க பலமா இருக்கணும்.." அந்த சம்பவத்திற்கு பிறகு மீராவை பரிசோதித்த மருத்துவர் சொன்னது இதைதான்.

விசயம் கேள்விப்பட்டு மருத்துவமனை வந்த அப்பாவும் அம்மாவும் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்கள். 'இவளுக்கு ஏன் இப்படி விதி சுத்தி சுத்தி பழி வாங்குது?' என அழுதுப் புலம்பினாள் அம்மா.

மீரா கண் விழித்தபிறகு மருத்தவரிடம் கேட்டது "எனக்கு விஷ ஊசி போட்டுடுங்க டாக்டர்." என்றுதான்.

"நீ எந்த தப்பும் செய்யாத போது நீயே ஏன் சாக நினைக்கிற?" எனக் கேட்டார் மருத்துவர்.

"உங்களுக்கு சொன்னா புரியாது டாக்டர். இனி நான் வாழ எந்த காரணமும் இல்ல. ப்ளீஸ்.." என்றவள் மருத்துவர் இவளின் வேண்டுக்கோளை கேட்க மறுத்து விட்ட பிறகு தானே தன்னை கொன்றுக் கொல்ல துணிந்து விட்டாள்.

"மீரா.." என்றபடி அவள் இருந்த அறைக்குள் நுழைந்த கதிரை கண்டு பயந்து அக்காவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள். நடந்த விபரீதத்தில் வாங்கிய இன்னொரு கடனாய் இந்த பயம்.

அவளின் பயத்தை வெளிப்படையாகவே அனைவராலும் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆண்கள் அவர்களாகவே விலகினர். அவள் சரியாகி வருவாள் என்று நம்பினார்கள். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தினமும் மோசமாகிக் கொண்டிருந்தாள் மீரா.

"நான் சாகணும்.." இதை தவிர அவளிடம் வேறு எண்ணம் இல்லை.

அதியனும், கதிரும் அந்த பையன்களுக்கு விரைவான தண்டனை வாங்கி தருவதற்கு போராடிக் கொண்டிருந்தார்கள்.

"தெரியாம செஞ்சிட்டோம்.." என்றான் அதில் ஒருவன்.

"அடப்பாவி.. தெரியாம உன் வீட்டுப் பொண்ணுங்க கூட இப்படிதான் செய்வியாடா?" எனக் கேட்டார் காவலர் ஒருவர்.

ஆனால் முழுதாய் விசாரித்த பிறகுதான் தெரிந்தது சம்பவம் நடந்த காலையில் கண் விழித்த உடன் அவளை கொன்றுவிட்டு தாங்கள் பிரச்சனையில் மாட்டாமல் தப்பித்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள் என்று.

அதிகாலை நேரத்திலேயே மீராவிற்கு மயக்கம் தெளிந்து விட்டது அவளின் நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். மதுவருந்த அறையை விட்டு சென்ற அவர்கள் இருவரும் போதையின் காரணமாய் ஹாலிலேயே படுத்து உறங்கி விட்டதும் நல்லதாகவே போயிற்று என்றும் சொல்லலாம்.

***

கதிர் அந்த இடத்திற்கு சென்ற போது இனியன் போனில் பேசிக் கொண்டிருந்தான்.

குற்றவாளிகளை ஏற்றிச் சென்ற ஜீப் மரத்தின் மீது மோதி நின்றது. அந்த இடத்தின் அருகே வீடுகள் கடைகள் என்று எதுவும் இல்லை. நன்றாக திட்டமிட்டு கடத்தி உள்ளார்கள் என்பது பார்க்கும்போதே புரிந்தது.

கதிர் செழியனையும், அதியனையும், ஒரு ஓரமாக சோகமாக நின்றிருந்த சரணையும் மாறி மாறி பார்த்தான். இவர்கள் யாரும் இதை செய்திருக்க மாட்டார்கள் என்று நம்பினான். அப்படி ஏதாவது செய்வதாக இருந்தால் தன்னையும் கூட்டு சேர்த்திருப்பார்கள் என்றும் நம்பினான். அப்படி இருக்கையில் யார் இந்த புது வரவு என்று அவனுக்கு புரியவில்லை.

"இல்ல சார்.. கொஞ்ச நேரத்துல கண்டுபிடிச்சிடலாம் சார்.." என்று போனில் பேசி முடித்து விட்டு திரும்பிய இனியன் தன் முன் நின்றிருந்த மூவரையும் சந்தேகமாக பார்த்தான்.

"நீங்கதான் அவங்களை கடத்தி இருக்கிங்களா?" எனக் கேட்டான்.

செழியனும், கதிரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"கடத்த நினைச்சா இன்னைக்கு ஏன் கடத்த போறோம்? மீரா தகவல் சொன்னதும் உங்ககிட்ட தகவலே சொல்லாம போய் அவங்களை அங்கேயே வெட்டி புதைச்சிருக்க மாட்டோமா?" என்றுக் கேட்டான் கதிர்.

"உங்க மேலதான் தப்பு கதிர். அன்னைக்கு நீங்க தகவலை முதல்ல எனக்கு சொல்லி இருந்தா இன்னைக்கு இவங்க இரண்டு பேரும் செத்த இடத்துல புல்லு முளைச்சிருக்கும்.!" என்றுக் காற்றைக் குத்தினான் செழியன்.

"பொறுப்புள்ளவங்களா நடந்துக்கங்க.." இனியன் சொன்னதும் கோபத்தோடு அவனை நெருங்கினான் செழியன்.

"தன் வீட்டுப் பொண்ணுக்கு இந்த மாதிரி நடக்காத வரை எல்லோரும் பொறுப்பானவங்கதான்." என்றான்.

இனியன் கோபத்தோடு அவனை நெருங்க இருந்த நேரத்தில் இருவருக்கும் இடையில் வந்து நின்றான் அதியன்.

"நடந்ததை விடுங்க. இப்ப அவங்க இரண்டு பேரையும் கண்டுபிடிக்கணும். யாராவது அவங்களை தப்பிவிக்க டிரை பண்ணி இருக்கலாம்‌ இல்லையா?" எனக் கேட்டான்.

கதிருக்கும் அதுதான் பயமாக இருந்தது. இவ்வளவு தூரம் வந்த பிறகு அவர்கள் தப்பி விடுவார்களோ என்று பயமாக இருந்தது. அந்த நேரத்தில்தான் அவனின் போன் ஒலித்தது.

"நான் சொல்ற இடத்துக்கு சீக்கிரம் வாங்க.. நீங்க தேடுற இரண்டு பேரும் இங்கேதான் இருக்காங்க.." என்றுவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

கதிர் விசயத்தை மற்றவர்களிடம் சொன்னான்.

"இது என்ன புது குழப்பம்?" எனக் கேட்டபடி கதிருக்கு அழைத்தவரின் எண்ணுக்கு திருப்பி அழைத்தபடியே அந்த இடத்திற்கு புறப்பட்டார்கள் அனைவரும்.

"நானே அவங்களை என்கவுண்டர் பண்ணிடலாம்ன்னுதான் இருந்தேன். ஆனா வரலாற்றிலேயே முதல் முறையா இவ்வளவு சீக்கிரமா ஒரு கேஸ்க்கு தீர்ப்பு வழங்கியது இப்பதான்." என்றான் இனியன்.

சட்டத்தை பற்றிய அவனது புகழுரையை கேட்க அங்கிருந்த யாருக்குமே விருப்பம் இல்லை.

அவர்கள் சென்று சேர்ந்த இடம் இடியும் நிலையில் இருந்த ஒரு இரும்பு பொருட்கள் உற்பத்திச் செய்துக் கொண்டிருந்த கட்டிடம். இங்கே நடந்துக் கொண்டிருந்த பணிகள் இடம் மாற்றப்பட்டு கூட ஏழெட்டு வருடங்கள் ஆகியிருக்கும் என்பது பார்க்கும்போதே புரிந்தது. நான்கு புறமும் இருந்த கட்டிடங்களில் எங்கே அவர்கள் இருக்கிறார்கள் என்றுத் தெரியாமல் ஆளாளும் ஆளுக்கொரு பக்கம் சென்றார்கள்.

கதிரும் அதியனும் ஒரு திசையில் ஓடினார்கள்.

இருக்கும் இடர்பாடுகளில் சிக்கிக் கொள்ளாமல் முன்னேறியவர்கள் தங்கள் முன் இருந்த ஜன்னல் வழியே தெரிந்த காட்சியை கண்டு குழம்பி விட்டனர். யாரோ ஒருவன் குற்றவாளிகள் இருவரையும் அடி துவைத்து எடுத்துக் கொண்டிருந்தான்.

"உங்களுக்கு நாங்க என்னடா துரோகம் செஞ்சோம்? அவளை ஏன்டா இப்படி பண்ணிங்க? சின்ன பொண்ணுடா அவ!" என்றவன் தன் கையிலிருந்த கட்டையால் இருவரின் தோளிலும் மாறி மாறி அடித்தான்.

"இந்த வாய்ஸ்.." அதியன் குழப்பத்தோடு கதிரை பார்த்தான்.

"எங்கேயோ கேட்ட குரல் மாதிரியே இருக்கு. ஆனா டென்சன்ல யார்ன்னு தெரியல.. இப்ப என்ன பண்றது? இந்த ரூமோட டோரை கண்டுபிடிக்கலாம்.." என்றவர்கள் ஜன்னலை விட்டு அகன்றனர்.

சாரதி கையெடுத்துக் கும்பிட்டான்.

"என்னை விட்டுடுங்க ப்ளீஸ்.. தெரியாம பண்ணிட்டோம்!" என்றான்.

எதிரில் இருந்தவன் தன் கையிலிருந்த கட்டை உடைந்துப் போனது கண்டு கோபமாகி அந்த கட்டையை தூக்கி எறிந்தான். சாரதியின் கழுத்தைப் பற்றினான்.

"தெரியாமலா?" எனக் கேட்டு அவனைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றான். அதே நேரத்தில் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் அகிலன்.

"வந்து தொலைடா.. போலிஸ் வந்துடுச்சி.." என்றவன் அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். கடந்த முக்கால் மணி நேரமாக ஒற்றை கதவை உடைக்க போராடியது அகிலனுக்கு அல்லவா தெரியும்?

"விடுண்ணா.. அவங்களை கொல்லணும்.." என்றவனை எப்படியோ இழுத்துக் கொண்டு வந்து காரில் தள்ளியவன் அவசரமாக காரை எடுத்தான்.

"உன்னை நான் கொலைக்காரனாக விட மாட்டேன்." என்ற அவன்தான் குற்றவாளிகள் இங்கிருக்கும் விசயத்தை கதிருக்கு தெரிவித்து இருந்தான்‌. கதிரின் நம்பரை தெரிந்துக் கொள்வது அவனுக்கு பெரிய போராட்டமாக இருக்கவில்லை. தம்பிக்காரன் மீராவின் வீட்டை சேர்ந்த அனைவரது எண்ணையும் பட்டியல் போட்டு எழுதி அவனது அறையில் ஒட்டி வைத்திருக்கிறான். எப்போதாவது உதவும் என்று அந்த போன் நம்பர்ஸை போட்டோ எடுத்திருந்தான் அகிலன். ஆனால் அது இப்படி ஒரு சூழ்நிலையில் உதவும் என்றுதான் அவன் அப்போது நினைத்திருக்க மாட்டான்.

அகிலன் இழுத்து வந்து விட்டானே என்ற கோபத்தில்தான் தன் அறையிலிருந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கி இருந்தான் மகிழன். அவன் இரண்டு நாட்களாக திட்டமிட்டு அவர்கள் இருவரையும் கடத்தி வந்திருந்தான். ஆனால் கொல்லும் முன் இப்படி ஆகிவிட்டதே என்ற கோபம். ஆனால் இப்போது மீராவின் பெயரை அண்ணன் சொல்லி விடவும் கோபம் மறந்து துக்கத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.

"எல்லாம் சரியா போயிடும்!" என்றான் அகிலன் தன் சட்டை நனைவதை கண்டபடி.

"அவளுக்கு வலிக்குமேன்னு நான் இதுவரைக்கும் அவ கையை கூட இறுக்கமா பிடிச்சது இல்ல அண்ணா.. அவ ரொம்ப பாவம் அண்ணா.." சோகத்தில் புலம்பிக் கொண்டிருந்தவனின் தலையை வருடி தருவதை தவிர வேறு என்ன செய்வதென்று அகிலனுக்கு தெரியவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN