கனவே 13

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சில நாட்களுக்கு முன்பு..

மீராவிற்கு கல்லூரிக்கு செல்லவே பிடிக்கவில்லை. ஆனால் வீட்டில் இருந்தவர்கள் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

"மகி மகின்னு எங்க உயிரை வாங்கறதுக்கு பதிலா காலேஜ் போனா படிச்சாவது நீ உருப்படலாம்." என்றாள் மைவிழி.

"பிடிக்கல அக்கா. படிச்சி மட்டும் நான் என்ன பண்ண போறேன்?" என்றவளை முறைத்தவள் "உன் உலகம் அந்த பையனோடவே முடிஞ்சி போச்சின்னு நினைச்சின்னா உன்னை போல முட்டாள் வேற யாருமே இருக்க மாட்டாங்க.!" என்றாள்.

"அவனை தாண்டி எனக்கு எந்த உலகமும் வேணாம் அக்கா!" எங்கோ பார்த்தபடி சொன்னவளை தன் பக்கம் திருப்பியவள் "நம்மை வேணாம்ன்னு சொல்லி விட்டுட்டு போனவங்க முன்னாடி நாம வாழ்ந்துக் காட்டணும் மீரா. அவனுக்காக உன் லைப்பை வேஸ்ட் பண்ணாத. நாங்க இத்தனை பேரும் உனக்காக இருக்கோம். அவன் ஒரு வழிப்போக்கன் போல. நாங்கதான் நிரந்தரம்." என்றாள்.

மீராவின் விழிகள் ஈரமாகியது.

'என் வாழ்க்கையில் நீதான் முதல் நிரந்தரம் மகி!' அவனிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது.

"நீ நினைச்சிருப்பதானே அக்கா?" எனக் கேட்டவளை குழப்பமாக பார்த்தாள் மைவிழி.

"என்னோடது இம்மெச்சூர் லவ்வுன்னும், இந்த லவ் தோத்து போகணும்ன்னும் நீயும் நினைச்சிருப்ப இல்ல?" எனக் கேட்டாள்.

மைவிழி இடம் வலமாக தலையசைத்தாள்.

"அ.. அப்படி நினைக்கல மீரா." என்றாள் மெதுவாக. ஆனால் இந்த காதல் சேருவதற்கு வாய்ப்பிருக்காது என்று வேண்டுமானால் பலமுறை நினைத்துள்ளாள். அதை இப்போது சொன்னால் இவள் மனம் வாடுமே என்று சொல்லவில்லை மைவிழி.

"என் காலேஜ்ல எல்லோரும் அப்படிதானா சொல்றாங்க அக்கா.. உன் காதல் புட்டுக்கும்ன்னு எங்களுக்கு ஏற்கனவே தெரியும்ன்னு சொல்லி சிரிக்கிறாங்க. காதலிச்சா தப்பா அக்கா? விவரம் தெரியாத வயசுல காதல் வரகூடாதுதான். ஆனா அப்படி விபத்து போல ஒரு காதல் வந்துட்டா அது அவ்வளவு பெரிய தப்பா?" கலங்கும் விழிகளோடு கேட்டவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் மைவிழி.

"மாமா கூட சொன்னாரே அக்கா.. நீயும் அவரும் சின்ன வயசு பிரெண்ட்ஸ்ன்னும், அவர் பெரியவராகி காதலிக்கும் சூழ்நிலை வந்தபோது கூட அங்கே உன்னை மாதிரி ஒருத்தர் வேணும்ன்னுதான் ஆசைப்பட்டதா சொன்னாரே அக்கா. அவரோட காதல் சரி. என் காதல் தப்பா அக்கா? இவனை போல இவளை போல ஒருத்தர் நம்ம லைஃப் லாங்கா வரணும்ன்னு எல்லோரும்தானே சின்ன வயசுல ஆசைப்பட்டிருப்பாங்க. ஆனா நான் இவனை போல வேணுங்கறதுக்கு பதிலா இவனே வேணும்ன்னுதானே நினைச்சேன். அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?" என்றாள்.

மைவிழி மறுப்பாக தலையசைத்தாள். "தண்டனை அது இதுன்னு எதுக்கு சொல்ற மீரா? இது விதி. இதை இத்தோடு விட்டுடு!" என்றாள்.

ஆனால் மீரா விடவில்லை. தன்னால் முடிந்த அளவு விவரங்கள் சேகரித்தாள். நிறைய பேரிடம் கேட்டு கெஞ்சி எப்படியோ மகிழனின் ஊரையும் வீட்டு முகவரியையும் கண்டுபிடித்து விட்டாள். அவனது வீட்டிற்கு சென்றாள். ஆனால் வாசலிலேயே அவளை மறித்தார் காவலாளி.

"மீரா வந்திருக்கேன்னு மகிக்கிட்ட சொல்றிங்களா?" என்றவளை விந்தையாக பார்த்தார் அவர்.

"மகி?"

"மகிழன்.."

"அவர் வெளிநாட்டுக்கு போயிருக்காரு.." காவலாளி சொன்னது கேட்டு அதிர்ந்தவள் "ஆனா ஏன்?" என்றாள்.

"தெரியல மேடம். படிக்க போயிருக்காருன்னு பெரிய அம்மா அவங்களோட பிரெண்ட்ஸ்க்கிட்ட சொல்லிக்கிட்டாங்க."

மீரா தன் சோகத்தை கூட மறைக்க முடியாமல் அந்த வீட்டை பார்த்தாள். மகிழனின் வீடு அழகாக இருந்தது, அவனைப் போலவே என்று நினைத்தாள்.

'வெளிநாட்டுக்கு படிக்க சென்றானா, இல்லை தன்னிடமிருந்து தப்பிக்க நினைத்து சென்றானா' என்ற சந்தேகத்தைத் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.

"மகிழனோட அம்மாவை பார்க்க முடியுமா?" என அவள் கேட்டதும் தனது போனை எடுத்தவர் ரோகிணிக்கு அழைத்தார்.

சில நொடிகளுக்கு பிறகு போனை வைத்துவிட்டு இவளைப் பார்த்தவர் அமைதியாக கேட்டை திறந்து விட்டார்.

மீரா தயக்கத்தோடு வீட்டுக்குள் நுழைந்தாள்.

'நீ ரொம்ப பணக்காரனா மகி? ஆனா என்கிட்ட இதை கூட சொல்லவே இல்லையே? நான் உன் பாட்டி வீட்டோடு ஒப்பிட்டு பார்த்துட்டு நீயும் நானும் இணைய எந்த தடையும் இருக்காதுன்னு நினைச்சேனே!' என்றெண்ணினாள்.

"நீ.. நீங்க?" குரல் வந்த திசைக்கு திரும்பினாள் மீரா. அவளை விட நான்கைந்து வயது பெரியவளாக இருந்த ஒரு மங்கை அறை ஒன்றிலிருந்து வெளியே வந்தாள்.

"நான்.." மீரா தன்னை பற்றிச் சொல்லும் முன் "இவதான் மீரா. உன் தம்பி லவ் பண்ண பொண்ணு!" என்றொரு குரல் கேட்டது.

மீரா எதிர் பக்கம் பார்த்தாள். சோஃபாவில் அமர்ந்திருந்த ரோகிணி தனக்கு முன்னால் இருந்த இருக்கையை கை காட்டினாள். "வந்து உட்கார். பேசலாம்." என்றாள்.

அவள் பேசிய தோரணை மீராவுக்கு பயத்தை தந்தது. ஆனால் மகிழனுக்கும் ரோகிணிக்கும் இடையில் இருந்த முக ஒற்றுமை அவளின் மனது பயத்தை ஓரளவு இல்லாமல் போக செய்தது.

"வணக்கம் ஆன்டி." என்றபடி வந்து அமர்ந்தவளை மேலும் கீழும் பார்த்தாள் அவள். அகிலன் ஏற்கனவே புகைப்படம் காட்டிருந்தான். ஆனால் நேரில் பார்க்கையில் இன்னும் சிறு பெண்ணாக தெரிந்தாள். பள்ளி உடை அணிந்தால் சந்தேகம் இல்லாமல் பள்ளி மாணவி என ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவள் தாங்கி தாங்கி நடந்ததுதான் வித்யாவிற்கும் கூட வருத்தத்தை தந்தது.

"இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க.. என்ன காரணம்?" எனக் கேட்டபடி தன் அம்மாவின் அருகே வந்து அமர்ந்தாள் வித்யா.

"நானும் மகியும் லவ் பண்றோம்." என சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தாள். இருவரும் முகம் மாறாமல் அமர்ந்திருந்தனர்.

"ஆனா அவன் என்னோடு சண்டை போட்டுட்டு வந்துட்டான். அவங்க பாட்டி வீடும் காலி பண்ணிட்டாங்க.. அவனை பார்க்காம பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு. அதனாலதான் நானே அவனைத் தேடி வந்துட்டேன்." என்றாள் உதட்டை கடித்தபடி.

வித்யாவிற்கு மீராவின் கன்னத்தை பிடித்து கிள்ள வேண்டும் போல இருந்தது. இவள் மகிழனுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பாள் என்று நம்பினாள்.

"அவன் உன்னோடு சண்டை போட்டுட்டு வந்த பிறகும் அவனை தேடி வரது சரியா?" ரோகிணியின் கேள்வியால் மீராவின் முகம் வாடி போனது.

ஆனாலும் நொடியில் புன்னகையை வரவழைத்துக் கொண்டவள் "அங்கிள் கூட உங்ககிட்ட நிறைய முறை சண்டை போட்டிருப்பாரு. ஆனா நீங்க சமாதானம் பேசி இருப்பிங்க இல்லையா?" என்றாள்.

"ஓவர் வாய்!" ரோகிணி முணுமுணுத்தாள்.

வித்யா தனக்கு வர இருந்த சிரிப்பை மறைத்துக் கொண்டாள்.

"இது அவன் வாழ்க்கை. நான் அவனோட எந்த விசயத்திலும் தலையிடுறது கிடையாது. அவன் ஸ்டடிஸ்காக வெளிநாடு போயிருக்கான். அவன் திரும்பி வந்த பிறகு அவனை தேடி நீ வந்தன்னு சொல்றேன். அவன் வரும்போதே ஒரு வெள்ளைக்கார பொண்ணோட வந்தான்னா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது." என்றாள்.

மீராவிற்க்கு வலித்தது. அதை வெளிக்காட்டாமல் இருக்க பெரிதும் முயன்றாள்.

"அவன் போன் நம்பர் கிடைக்குமா?" வித்யாவை பார்த்துக் கேட்டாள்.

"இல்ல.. அவன்கிட்ட போன் கிடையாது. அவன் தங்கியிருக்கும் இடத்தோட போன் நம்பரை எல்லார்கிட்டயும் எங்களால தர முடியாது." என்றாள் ரோகிணி.

மீரா எழுந்து நின்றாள். "என் போன் நம்பர் இது.. அவன் மறுபடி போன் பண்ணும்போது இந்த நம்பரை தரிங்களா? ரொம்ப முக்கியமா நான் பேச விரும்புறேன்னு அவன்கிட்ட சொல்லுங்க. ப்ளீஸ்.." என்றபடி தனது போன் நம்பர் அடங்கிய காகிதத்தை அவர்களிடம் நீட்டினாள்.

ரோகிணி காகிதத்தை வாங்காமல் பார்த்தாள். வித்யாதான் வாங்கினாள்.

"சொல்றேன்." என்றாள்.

"தேங்க்ஸ்.." என்றவள் திரும்பி நடந்தாள்.

ரோகிணியின் பார்வை அவளின் கால் மீதே இருந்தது.

ஹாலிலிருந்து வாசலை நோக்கி நடந்த மீரா தயங்கி நின்றாள். ஹால் சுவரில் இருந்த மகிழனின் புகைப்படத்தை சில நொடிகள் பார்த்தவள் ரோகிணியின் புறம் திரும்பினாள்.

"தேங்க்ஸ்.." என்றாள்.

ரோகிணி கேள்வியாய் புருவம் உயர்த்தினாள்.

"ரொம்ப அழகான பையனை பெத்திருக்கிங்க.. நான் பார்த்ததில் ரொம்பவும் அழகு மகி மட்டும்தான்!" என்றாள்.

உண்மையில் ரோகிணிக்கு வெட்கத்தால் முகம் சிவந்தது. ஆனால் அவளின் எதிர்கால மருமகளோ புகைப்படத்தில் இருந்த உருவத்தைக் கண்களால் களவாடிக் கொண்டிருந்தாள்.

"இவனுக்கு என் மேல ஏன் கோபம்ன்னு தெரியல ஆன்டி. ஆனா நாங்க இதுவரைக்கும் இவ்வளவு பெரிய சண்டை போட்டுக்கிட்டதே இல்லை. நான்தான் கம்பல் பண்ணி பைக் ரைட் போகலாம்ன்னு கூப்பிட்டேன். ஆக்சிடென்ட் ஆகவும் பையன் என் மேல ரொம்ப கோச்சிக்கிட்டான். இப்படி ஆகும்ன்னு நான் மட்டும் கனவா கண்டேன்? ரொம்ப மோசம் இந்த பையன்." என்றவள் தலையை இடம் வலமாக அசைத்தபடி வெளியே நடந்தாள்.

மீரா கேட்டை தாட்டியது கண்டதும் அவசரமாக தண்ணீரை எடுத்துக் குடித்தாள் ரோகிணி.

"பொண்ணா இவ?" என்றாள்.

"ஆனா நாம அவளுக்கு குடிக்க கூட எதுவும் தரல!" வித்யா குறையாக சொன்னாள்.

"ஏன் நீதான் கூட்டி போய் விருந்து வச்சிருக்கலாம் இல்ல?" மகளைக் கடிந்துக் கொண்டவள் "அவன்.. இவன்.. பையன்.. இப்படிதான் மகிழோடு பழகிட்டு இருந்தாளா இவ? என் பையன் அழகுன்னு என்கிட்டயே தைரியமா சொல்றா!" என்றாள் பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டபடி.

வித்யா சிரித்தாள்.

"ஆனாலும் அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்குதான்!" என்றாள்.

ரோகிணி மகளை நிமிர்ந்து நோக்கினாள். மகள் தோள்களைக் குலுக்கினாள். அவள் சொன்னது என்னவோ உண்மைதான். போன ஜென்ம பந்தமோ இல்லை அடுத்த ஜென்ம பந்தமோ.. மீராவை பார்த்த உடன் ரோகிணிக்கும் பிடித்து விட்டது.

தன் கையில் இருந்த காகித துண்டை கவனித்தவள் அன்று மாலையிலேயே மகனுக்கு போன் செய்து விசயத்தைச் சொன்னாள்.

"ரொம்ப மோசம்மா அவ. கிட்டத்தட்ட ஒன்பது மாசத்துக்கும் மேல ஆச்சி, நானும் அவளும் கடைசியா பேசிக்கிட்டு. இப்பதான் என்னை தேடி வந்திருக்கா. ஒன்பது மாசமா இவன் செத்தான்னா பிழைச்சானான்னு கூட கவனிக்காம இருந்திருக்கா. இந்த பொண்ணுங்களே இப்படிதான் போல. சான்ஸ் கிடைச்சதும் கழட்டி விட்டுடுவாங்க போல!" என்றான் அவன்.

ரோகிணி தலையை கீறிக் கொண்டாள். இரண்டு பைத்தியங்கள். அதில் ஒரு பைத்தியம் தனது வயிற்றில் பிறந்த கடைசி குரங்கு குட்டி என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.

"அவ போன் நம்பர் தந்துட்டு போயிருக்கா மகிழ். தரட்டா?"

"வேணாம்மா.. நான் சீக்கிரம் வந்துடுவேன். வந்து நேர்லயே பேசிக்கிறேன். ஐ மிஸ் ஹேர். அன்ட் ஐ மிஸ் யூ டூ!" என்றான்.

ரோகிணி பெருமூச்சி விட்டாள்.

"நல்லபடியா வந்துடு மகிழ்!" என்றுவிட்டு போனை வைத்தாள்.

மீரா மகிழனின் வீட்டிற்கு சென்று வந்த நாள் அன்று அவளின் வீட்டில் சண்டை நடந்தது.

"யாரை கேட்டு அங்கே போன நீ? உனக்கு சூடு சொரணையே கிடையாதா?" என்றுக் கத்தினாள் மைவிழி.

"ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா. அவனை பார்த்துட முடியாதான்னுதான் போயிட்டேன்‌. சாரி." என்றாள்.

"இன்னொரு முறை எங்களை மீறி அங்கே போனா உன்னை சும்மா விட மாட்டேன் மீரா." என மிரட்டினார் அப்பா.

எப்படியோ இத்தோடு விட்டார்களே என்று அமைதியாக தனது அறைக்குள் புகுந்துக் கொண்டாள் மீரா. ஆனால் கனவிலும் நினைவிலும் மகிழனேதான் இருந்தான். அந்த வீட்டின் புகைப்படத்தில் பார்த்து விட்டு வந்த அவனின் முகம் அவளை உறங்க விடவில்லை. முன் எப்போதையும் விட அதிகமாக அவனை நினைத்து ஏங்கினாள்.

'அவ்வளவு பெரிய வீட்டையும், உன் அம்மா அக்காவையெல்லாம் விட்டுட்டு இங்கே ஏன் வந்த மகி?' எனத் தனக்குள்ளேயே கேட்டாள்.

அடுத்த நாள் கல்லூரிக்கு சென்றவளை தேடி வந்து வரவேற்றான் வினய்.

"மீரா.. உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?" எனக் கேட்டவனை குழப்பமாக பார்த்தாள்.

இந்த சில மாதங்களில் நண்பன் அளவிற்கு முன்னேறி விட்டான் வினய். மற்றவர்கள் அனைவரும் திட்டுகையில் இவன் ஒருவனாவது நட்பாக பழகுகிறானே என்று மீராவும் அவன் மீது மரியாதை காட்டினாள்.

அடுத்த பலிகடாவா என்று இப்போதும் கூட பலர் கேலி செய்தார்கள். ஆனால் அவள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

மீரா தடுமாறி விழும்போதெல்லாம் தாங்கி பிடித்தான் வினய். ஆனால் அவள் தடுமாறி விழ காரணமே அவன்தான் என்பதை அவள்தான் அப்போது அறியாமல் போய் விட்டாள்.

அந்த வாரத்தின் இறுதியில் "வர சன்டே அன்னைக்கு என் தங்கச்சிக்கு பர்த்டே.. நீ வரணும்." என்று அழைத்தான்.

"உனக்கு தங்கச்சி இருக்காளா? சொல்லவே இல்ல! எங்கே படிக்கிறா அவ?" ஆர்வமாக கேட்டாள் மீரா.

"பக்கத்துல இருக்கும் வுமண்ஸ் காலேஜ்ல படிக்கறா. அவளுக்கு இது பதினெட்டாவது பிறந்தநாள். நீயும் கண்டிப்பா வரணும்." என்றான்.

இதுவரை மகிழனுடைய வீட்டை தவிர வேறு எங்கேயும் சென்றிராதவள்.

"வரேன்ப்பா." என்றாள் அவன் மீதிருந்த நம்பிக்கையில்.

வீட்டில் தகவல் சொன்னாள் மீரா.

"யாருக்கு பிறந்தநாள்?" அப்பா தனது குறுக்கு விசாரணையை தொடங்கினார்.

"என் பிரெண்ட் மாலதிக்குப்பா. புது பிரெண்ட்!" என்றவள் வினயின் தங்கை அவள் என்றே சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் வீட்டில் விட மாட்டார்கள் என்று நினைத்தாள். அப்பா வெகுநேரம் யோசித்துவிட்டு சரியென தலையசைத்தார்.

அந்த ஞாயிறு அன்று மாலையில் வினய் சொன்ன முகவரிக்கு சென்றாள்.

மூடியிருந்த வீட்டின் கதவை தட்டும்போதே சிறு சந்தேகம் வந்தது அவளுக்கு. ஆனால் அப்போதே திரும்பிச் செல்லாமல் வினயின் பதிலுக்காய் காத்து நின்று விட்டாள்.

கதவை திறந்த வினய் "ஹேய்.. வாப்பா.." என்றான் முகம் மலர.

"யாரையும் வீட்டுல காணோம்." வீட்டை சுற்றிப் பார்த்து விட்டுக் கேட்டாள்.

"எல்லோரும் கோவிலுக்கு போயிருக்காங்க.. அவங்க வரும் முன்னாடி வீட்டை நானும் சாரதியும் டெக்கரேட் பண்ணலாம்ன்னு இருக்கோம்.." என்றவன் ஹாலின் நடுவே இருந்த கார்ட்போர்ட் பாக்ஸை கை காட்டினான். பலூன்களும், வண்ண காகிதங்களும் பெட்டியைச் சுற்றிச் சிதறிக் கிடந்தன.

"நானும் ‌ஹெல்ப் பண்றேன்ப்பா.." என்றவள் தனது ஹேண்ட் பேக்கை மாட்டியபடியே சென்று பலூன்களை கையில் வாரினாள்.

"நிறைய வேலை இருக்கு மீரா.." சாரதி சமையலறையிலிருந்து வெளியே வந்தபடி சொன்னான்.

"ஆளுக்கு கொஞ்சமா செய்யலாம்ப்பா." என்ற மீராவிடம் காப்பி டிரேயை நீட்டியவன் "அதுக்கும் முன்னாடி காப்பி குடிச்சிடலாம்." என்றான்.

மீராவின் பின்னால் வந்து நின்ற வினய் காப்பி கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு சாரதியை பார்த்தான்.

"காப்பி கேவலமாதான் இருக்கும்." என்றான் கிண்டலாக.

மீரா காப்பியை குடித்துவிட்டு "இல்லப்பா. ஓரளவுக்கு பரவால்ல.. ஆனா டேஸ்ட்தான் வித்தியாசம்." என்றாள்.

"ஏனா அதுல மயக்க மருந்து கலந்திருக்கு மீரா." சாரதி சொன்னது கேட்டு கலகலவென நகைத்தவள் "எதுக்கு இவ்வளவு கொடூரமான காமெடி?" என்றுக் கேட்டாள்.

"இல்ல உண்மை!" அவன் சொன்னது உண்மையென்று அவளுக்கும் விரைவிலேயே புரிந்துப் போனது.

கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. சரிந்தவளை தாங்கி பிடித்தது இரு கரங்கள்.

சற்று நேரம் கழித்து அவளின் கன்னத்தில் அறை விழவும் அரை பாதியாய் கண்களை திறந்தாள்.

வினய் அவளின் அருகே அமர்ந்திருந்தான்.

"எத்தனை நாள் திட்டம் தெரியுமா இது?" எனக் கேட்டவனை குழப்பமும் பயமுமாக பார்த்தவள் "என்ன திட்டம்? என்ன பண்ண போறிங்க நீங்க?" என்றாள்.

"சரியா இரண்டு வருசம் முன்னாடி என்ன ஆச்சி தெரியுமா? உன் காதலன் நாய் குட்டி இருக்கான் இல்லையா, அவன் என்னை நடுரோட்டுல வச்சி புரட்டி எடுத்தான். காரணம் என்ன தெரியுமா, நான் தெரியாம உன் மேல மோதிட்டேன்னு!"

மீரா யோசித்துப் பார்த்தாள். அவளின் நினைவில் அப்படி எந்த நிகழ்வும் பதிந்து இருக்கவில்லை.

"உனக்கு தெரியாது இல்ல? அந்த பொறம்போக்கு எப்படி சொல்வான்? அவனுக்கு பெரிய **ன்னு நினைப்பு. நான் ரொம்ப கெட்டவன். அது அவனுக்கு புரியல. ஆனா அவன் செஞ்ச தப்புக்கு அவனுக்கு தண்டனை கொடுக்க முடியல. அதுக்கு பதிலா நீ அனுபவிக்கப் போற!" என்றவன் அவளின் துப்பட்டாவை பிடுங்கி வீசினான்.

கை கால்களை அசைக்க முடியவில்லை அவளால்.

"அவன் செஞ்சதுக்கு சாரி வினய். என்னை விட்டுடு ப்ளீஸ்.." என்றவளுக்கு இப்போது வரையிலுமே கூட அவனின் திட்டத்தின் மீது சந்தேகம்தான். ஏனெனின் அவனை அந்த அளவிற்கு நம்பியிருந்தாள்.

"உன் மேல மோதினேன்னுதானே என்னை நடு ஊர் பார்த்திருக்க அடிச்சான். ஆனா இப்ப உன்னை முழுசா.. அக்கு வேறு ஆணி வேறா பிரிக்க போறேன். அவன் எப்பவாவது உன்னை பார்க்க வந்தான்னா.. உன் கல்லறை கூட அவனுக்கு கிடைக்க கூடாது." என்றவன் அவளின் முகம் நோக்கி குனிய முகத்தை வேறு பக்கம் திரும்பினாள் மீரா‌.

"எ.. என்னை விட்டுடு.. நான் உன்னை பத்தி வெளியே கூட சொல்ல மாட்டேன். இப்ப அவனும் கூட என்னை விட்டுட்டு போயிட்டான். என்னை யூஸ் பண்ணி ஒரு பிரயோசனமும் இல்ல!" என்றாள் கெஞ்சலாக. கண்ணீர் காதுகளை தொட்டு விட்டது.

"உன் கருத்தை நான் கேட்டேனா?"

இடம் வலமாக தலையசைத்தவள் "உன் கால்ல கூட விழுறேன். என்னை விட்டுடு.. நான் மகிக்கு மட்டும்ன்னு எனக்கு நானே சத்தியம் பண்ணியிருக்கேன். நீ என்னை தொட்டா சத்தியமா நான் செத்துப் போயிடுவேன்!" என்றாள் அழுகையோடு.

சிரித்தான் வினய்.

"உன்னை உயிரோடு வெளியே அனுப்பினாதானே உனக்கு அவ்வளவு சிரமம் இருக்கும்?" எனக் கேட்டவன் அவள் மீது படர்ந்தான்.

"ப்ளீஸ்.. விட்டுடு.." எவ்வளவோ கெஞ்சினாள். ஆனால் அவன் அவளின் கெஞ்சலையும், கதறலையும் ரசித்துக் கொண்டிருந்தான்.

அவள் மறுக்க மறுக்க அவனுக்கு வெறி பிடித்தது.

மீராவிற்கு மீண்டும் மயக்கம் வந்தது. தன் மீது இருந்தவனை தள்ளி விட அவளுக்கு சக்தி இல்லாமல் போய் விட்டது. இவனையும் நண்பனென நம்பி வந்ததிற்கு தன்னை கழுவில் ஏற்றினாலும் தகும் என்று நினைத்தாள்.

"உன் பொண்டாட்டி உனக்கு பத்தினியா வேணும்ன்னு சொல்ற.. அதானே?" அன்று மகிழனோடு பேசிக் கொண்டது நினைவில் வந்தது. கசந்த சிரிப்பில் கண்ணீர் கலந்தது. வாழ்வின் அத்தியாயங்கள் அனைத்தும் இந்த நொடிகளிலேயே முடிந்து போனதாக எண்ணினாள்.

"ஆண்டாண்டுக் காலமா தொடரும் இந்த கோரம் முடியாதா? மன்னனை வெற்றிக் கொண்டவனும் அவன் நாட்டு பெண்களைதான் அடிமைப்படுத்தி இழுத்துச் சென்று தன் கைப்பாவைகள் ஆக்க முயன்றான். ஓர் ஆணோடு நேராய் நின்று போராடி வெற்றிக் கொள்ள இயலாதவர்கள் அந்த ஆணோடு சம்மந்தப்பட்ட பெண்களை பலிகடாவாக்கும் கொடூரம் முடியாதா?" அரை மயக்கத்தில் கேட்டாள். ஆனால் அது வினயின் காதில்தான் ஏறவில்லை.

அவள் கண்களை திறக்கவில்லை. திறக்க முடியவில்லை. ஆனால் வினய்யும், சாரதியும் பேசிக் கொள்வது காதில் விழுந்தது. மயக்க மருந்து தந்து ஒரு பெண்ணோடு புணர்ந்தது வீரமென்று இருவரும் பேசி கொண்டது கேட்டு அவளுக்கு அந்த நிலையிலும் சிரிப்பு வரும் போல இருந்தது.

சாரதி தன்னை தொட்டதும் அவளுக்கு நினைவில் இருந்தது. இருவரும் அவளைப் பற்றி கமெண்ட் சொன்னதும் அவளுக்கு நினைவில் இருந்தது.

அவர்கள் இருவரும் அந்த அறையை விட்டு வெளியே சென்ற பிறகு எழுவதற்குதான் முயன்றாள் அவள். ஆனால் எழ முடியவில்லை. மீண்டும் கண் விழித்தபோது நேரம் காலமே தெரியவில்லை. கட்டிலின் ஒரு ஓரத்தில் கிடந்த தன் கைப்பையை எடுத்து மைவிழிக்கு அழைத்து விசயத்தை சொன்னவள் அந்த அறை கதவின் பின்னால் மைவிழியின் குரல் கேட்கும் வரையிலும் நடுங்கியபடியேதான் இருந்தாள்.

உடல் வலியை பொருட்படுத்தாமல் அந்த அறையின் கதவை உள் பக்கம் பூட்டி விட்டாள். ஆனாலும் அந்த கதவை அவர்கள் இருவரும் உடைத்து விடுவார்களோ என்ற பயம் அவளைக் கொன்றது.

நரகத்திற்குள் ஓரடி நுழைந்து விட்ட ஒரு மனநிலையில்தான் இருந்தாள் அவள்.

அஸ்தமன சூரியனை மறுநாள் பார்க்க விரும்பவில்லை அவள்.

பெண்ணாய் தோற்றது மனதைச் சுட்டதை விட மகிழனுக்கு எந்த விதத்திலும் தான் தகுதியில்லை என்ற எண்ணம்தான் அவளை அதிகமாக சுட்டது.

"நீ எனக்கு எல்லாமுமா வேணும். எனக்கு உரிமைப்பட்டவளா வேணும். நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷலா வேணும்." மகிழனின் வார்த்தைகள் அவளின் செவிகளை விட்டு அகலவில்லை.

கையை அறுத்துக் கொண்டு இப்போது மருத்துவமனை படுக்கையில் கிடக்கும் போதும் கூட அந்த வார்த்தைகள் அவளை விட்டுச் செல்லவில்லை.

'சாரி மகி.' என்று மனதுக்குள் கோடி முறை மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN