கனவே 14

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகிழன் அன்றைக்குதான் இந்தியா திரும்பி இருந்தான்.

அம்மா தன் மகனைத் தயக்கமாக அணைத்துக் கொண்டாள். ஒன்றிரண்டு முறை வீடியோ காலில் பேசியிருந்தாலும் கூட இந்த புது முகத்தை ஏற்றுக் கொள்ள சற்று தயக்கமாகதான் இருந்தது. அவன் அந்நியன் இல்லை,‌ தன் மகன் என்று தனக்கு தானே சில பல முறை சொல்லிக் கொண்டாள்.

பாட்டி அவனுக்கு திருஷ்டி சுற்றினாள்.

"நல்லாருக்கியா மகி?" அன்போடு கேட்டாள் வித்யா.

சிகிச்சையால் வரும் பக்கவிளைவுகளை எண்ணி அதிகம் பயந்து விட்டிருந்தாள் அவள். தம்பி பத்திரமாக வந்து சேர்ந்தது அவளுக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது.

"நல்லாருக்கேன் வித்யா." என்றவன் "இந்த முகம் உனக்குப் பிடிச்சிருக்கா?" என்றுத் தயக்கமாக கேட்டான்.

வித்யா அவனின் அருகே அமர்ந்து அவனின் தலையைக் கலைத்து விட்டாள்.

"லூசு பயலே. நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். இந்த முகம் உனக்கு பர்பெக்டா இருக்கு. இதுதான் மகி.. அழகா இருக்கடா!" என்றாள். ஆனால் இதை சொல்லுக்கையில் அவளின் இதயம் இருமடங்கு வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.

உணர்வு பூர்வமாகவும் கூட அவனை ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் அவனின் புது முகம் புதிதாகதான் அறிமுகம் ஆனது. நேற்று வரை நினைவில் வைத்திருந்த முகத்தை சட்டென்று மாற்றிப் புதியதைப் பதிய வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் யாருக்குதான் வித்தியாசமாக இருக்காது?

வீட்டில் இருந்த அனைவரும் சகஜமாக இருக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் முயல்கிறார்கள் என்ற விசயத்தை மகிழனாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.

அவனுக்குள் இருந்த பயம் அதிகமானது. இந்த புது முகத்தை மீராவால் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ள முடியும் என்று எண்ணி பயந்தான். 'நீ யார் என்று கூட தெரியாது‌. போய் விடு!' என்று அவள் சொல்லி விடுவாளோ என்றெண்ணி கலங்கினான்.

வீட்டிற்கு வந்ததில் இருந்து அகிலனை தேடிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் இரவு வெகுநேரம் கழித்துதான் வீடு வந்து சேர்ந்தான்.

தனது அறைக்கு வந்தவன் சோர்வோடு தனது சட்டையை கழட்ட இருந்த நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் மகிழன்.

திடீரென கதவு திறக்கப்படவும் பயந்து விட்டவன் தன் நெஞ்சின் மீது கையை வைத்தான். திரும்பிப் பார்த்தவன் "ம்.‌. ம்.. மகிழ்.." என்றான் தயக்கமாக.

மகிழன் உள்ளே வந்தான். ஸ்விட்ச் போர்டில் தட்டினான்.

"லைட்டை கூட போடாம என்ன பண்ற?" என்றுக் கேட்டான்.

தம்பியின் முகத்தை நேரில் பார்த்தவன் தன் வித்தியாசத்தை வெளிக்காட்டாமல் "தூங்கலாம்ன்னுதான்.. நீ.. நீ இன்னும் தூங்கலையா?" என்றான்.

மகிழன் அண்ணனின் முகத்தை ஆராய்ந்தான். 'அவ்வளவு சீக்கிரத்தில் திக்கி திணர மாட்டானே, என்ன விசயமாக இருக்கும்' என்று யோசித்தான்.

"உனக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அண்ணா.." என்றவன் அகிலன் பயந்தவாறே "மீரா எப்படி இருக்கா அண்ணா?" என்றுக் கேட்டான். தம்பியின் இந்த கேள்விக்கு தன்னால் பதில் சொல்ல முடியாது என்று பயந்துதான் அகிலன் இந்த நடு இரவில் வீடு வந்தான்.

அகிலன் பதில் சொல்லாமல் சுவற்றின் திசைப் பார்த்தான்.

"ஏன் அண்ணா? நான்தான் 'வாரம் ஒரு முறையாவது அவளைப் போல் பார்த்துட்டு வா'ன்னு சொன்னேன் இல்லையா?" எனக் கேட்டான் மகிழன்.

அகிலன் தன் தலையை கோதினான்.

"பார்த்துட்டுதான் வந்தேன்." என்றான்.

"ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்காளா?" என்றுக் கேட்டவனை நேராக பார்த்தவன் "ஒரு விசயம் உன்கிட்ட சொல்லணும் மகிழ். டென்ஷன் ஆகாம கேட்கணும் நீ. இட்ஸ் எ ஆக்சிடென்ட். பட் யூ வாண்ட் கன்ட்ரோல் யுவர் செல்ஃப்!" என்றான்.

"நீ பம்பரம் சுத்தாம விசயத்தைச் சொல்லு. அவ வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா என்ன? அவ ஒத்துக்கிட்டு இருக்க மாட்டாளே. அப்படி ஏதாவது இருந்தா கல்யாண மேடையில் ஏறி அவளை இழுத்துட்டு வந்துட மாட்டேன்? யார் நான்? மீராவோட மகியாச்சே!" காலரை தூக்கி விட்டபடி வந்து அண்ணனின் கட்டிலின் மீது அமர்ந்தான்.

"விசயம் சீரியஸ் மகிழ்."

"அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பாங்கன்னு நான் நினைச்சதை விட சீரியஸா?" என குழம்பியவன் பயத்தோடு அண்ணனை பார்த்தான்.

"வே.. வேற யாரையாவது லவ் பண்றாளா?" கேட்கும்போதே வியர்த்தது அவனுக்கு.

இடம் வலமாக தலையசைத்த அகிலன் தன் போனில் இருந்த செய்தி ஒன்றை தம்பியிடம் காட்டினான்.

"நான்கு நாட்கள் முன்பு இளம்பெண் ஒருவருக்கு பாலியல் பலாத்காரம் நடந்த வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கில் போட சொல்லிப் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மகளிர் அமைப்புகளும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.." செய்தி வாசிப்பை கேட்டு விட்டு அண்ணனை பார்த்தான் மகிழன். அண்ணன் சொல்ல வருவது அவனுக்குப் புரியவில்லை.

"அந்த பொண்ணு.. மீராதான்!" என்றான்.

மகிழனுக்கு முகத்தில் ஈயாடவில்லை. சிலை போல மாறி விட்டான். அண்ணன் சொன்னதை மனதிற்குள் ஏற்றிக் கொள்ளவே அவனால் முடியவில்லை. அந்நிய கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக செய்தியில் வாசிப்பது போல அண்ணன் சொன்னதும் கூட அந்நியமாக தோன்றியது.

உலகம் இயங்குகிறது, அதில் தானும் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற விசயம் அவனுக்குள் புரிய ஆரம்பித்த பிறகு அண்ணனை நிமிர்ந்துப் பார்த்தான்.

"பொ.. பொய்.. மிஸ் அண்டர்ஸ்டேன்டிங்க்.. நீ கவனிக்காம சொல்றதானே?" என்றான்.

தம்பியின் கன்னத்தை தாண்டி விட்டிருந்த கண்ணீரை கண்டு பெருமூச்சு விட்ட அகிலன் "உண்மைதான் மகிழ். சாரி.. ஞாயித்துக் கிழமை அவளோட பிரெண்ட்ஸ் இரண்டு பேர் அவளுக்கு மயக்க மருந்து கலந்து தந்து இப்படி பண்ணியிருக்காங்க.!" என்றான்.

மகிழன் இரு கைகளாலும் தன் தலை முடியை பற்றினான். முடியை வேரோடு பிடுங்கி விடும் நோக்கோடு வலுவாக இழுத்தது அவனின் கரங்கள். தலையை இடம் வலமாக அசைத்தான். பற்களை கடித்தான். கத்துவதற்கு கூட முடியவில்லை. பற்கள் அப்படியே கிட்டித்துப் போய் விட்டது.

அகிலன் பயந்துப் போய் தன் அறையை விட்டு வெளியே ஓடினான்.

"அப்பா.." பலநாள் கழித்து தனது வீட்டில் உறங்க முயன்றவரை பாதியில் எழுப்பி விசயத்தைச் சொன்னான். ரோகிணிக்கும் கூட இப்போதுதான் விசயம் தெரிந்தது.

"இதை என்கிட்டயாவது முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல?" மருமகளுக்காக கண்ணீர் வடித்தபடி கேட்டாள்.

"பயமா இருந்தது அம்மா. எப்படி சொல்றதுன்னே தெரியல. அப்புறம் சொல்லலாம்ன்னே தள்ளி போட்டுட்டேன். ஆனா இப்ப இவன்.." என்றவன் தாய் தந்தையரை அழைத்துக் கொண்டு தனது அறைக்கு ஓடினான்.

இவர்கள் வந்தபோது கட்டிலின் அருகே குப்புற விழுந்துக் கிடந்தான் மகிழன்.

"என்னாச்சி இவனுக்கு?" பயந்துப்போய் அவனருகே ஓடி அவனை திருப்பினான் அகிலன்.

மகிழன் மரக்கட்டை போல கிடந்தான். தம்பியின் நெஞ்சில் காது வைத்துக் கேட்டான் அகிலன்.

"ஹார்ட் ரொம்ப வித்தியாசமா துடிக்குதுப்பா.. பயமா இருக்கு எனக்கு. நான்தான் தப்பு பண்ணிட்டேன். இவன்கிட்ட விசயத்தை சொல்லியே இருக்க கூடாது." என்று நொந்தான்.

அவசரமாக மகிழனை மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள்.

"அட்டாக்.." என்று மருத்துவர் சொல்லவும் அனைவருக்கும் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

"அவனுக்கு இன்னும் இருபத்தி நாலு கூட ஆகல டாக்டர். ரொம்பவும் சின்ன பையன்." என்றார் அப்பா.

"இந்த வயசுல ஹார்ட் அட்டாக் வரக் கூடாதுதான். ஆனா வந்திருக்கே!" என்ற மருத்துவர் நடந்தது என்ன என்று இவர்களிடமே விசாரித்தார்.

அகிலன் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

"கோபத்துல எதையாவது அடிச்சி நொறுக்கிடுவானோன்னு பயந்து என் ரூம்ல இருந்த கிளாஸ் அயிட்டம்ஸையெல்லாம் பத்திரமா எடுத்து வச்சேன் டாக்டர். ஆனா இப்படி ஆகும்ன்னு கனவுல கூட நினைக்கல. ரொம்ப ஆரோக்கியமான பையன் டாக்டர்." நடுங்கும் குரலில் சொன்னான் அகிலன்.

"சைட் எஃபெக்ட்ஸ் எதுவும் வந்துட கூடாதுன்னு பயந்து எல்லா இடத்திலும் தேடி முடிவெடுத்து இங்கே எங்கேயும் இல்லாம வெளிநாடு கூட்டிப் போய் அவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வந்தோம் டாக்டர்.. இப்ப அட்டாக் வந்திருக்கு. சின்ன சின்ன சைட் எஃபெக்ட்ஸை கூட ஏத்துக்கலாம். ஆனா இவ்வளவு பெரிய பிரச்சனையை.." வசந்த் வருத்தத்தோடு சொன்னார்.

மருத்துவர் இடம் வலமாக தலையசைத்தார். "இதுக்கு சைட் எஃபெக்ட்ஸ் மேலயே பழி போட முடியாது. இவர் சொன்ன அந்த விசயம்தான் அவரை பாதிச்சிருக்கு.. மைல்ட் அட்டாக்தான். பெருசா பாதிப்பு இல்ல. இனி கவனமா இருந்தா போதும். இதுக்கு மேலாவது இந்த மாதிரி அதிர்ச்சியான சம்பவங்களை சொல்லாதிங்க.. அதிகமா உணர்ச்சி வசப்படாம பார்த்துக்கங்க.." என்றார்.

"இவனோட விதி மட்டும் ஏன் முடியாம போய்கிட்டே இருக்கு?" நெற்றியில் அடித்தபடிக் கேட்டாள் ரோகிணி.

வித்யா விம்மியபடி இருக்கை ஒன்றில் முடங்கிக் கிடந்தாள். அகிலன் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான். நடு இரவில் மருத்துவமனையில் இவர்கள் யாருமே தூங்கவில்லை.

"மைல்ட் அட்டாக்தான் வித்யா.. பெரிய பிரச்சனை இல்ல!" என்றான்.

வித்யா அழுதபடி அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

"அட்டாக் வர வயசா அவனுக்கு?" எனக் கேட்டு விம்மினாள்.

விடியற்காலை நேரத்தில் அவர்கள் அனைவரையும் வீட்டில் விட்டுவிட்டு திரும்பி வந்தான் அகிலன். ஆனால் அறையில் மகிழன்தான் இருக்கவில்லை.

தம்பி அதற்குள் எங்கே போனான் என்று தெரியாமல் தேடி திரிந்தவன் நர்ஸ்களிடம் விசாரித்தான். அனைவரும் பார்க்கவில்லை என்றே சொன்னார்கள். தேனீர் பருகியபடி அமர்ந்திருந்த ஒரு கிழவி மட்டும் "உன் உசரத்துக்கு ஒரு பையன்தானே? இந்த படியில ஏறி போனான்!" என்று மாடிப்படிகளை கை காட்டினாள்.

அவசரமாக படிகளை ஏறினான் அகிலன். மொட்டைமாடிக்கு கூட்டிச் சென்றது அந்த படிக்கட்டுகள்.

சுற்றும் முற்றும் பார்த்தவன் மாடியின் கைப்பிடி சுவரில் ஏறி நின்றிருந்த தம்பியை கண்டு அதிர்ச்சியில் உறைந்துப் போனான்.

"டேய் பாவி.. என்னடா பண்ற? அட்டாக் வந்தவன் கட்டில்ல மயங்கி கிடக்காம இங்கே எப்படிடா வந்த?" அதிர்ச்சியோடு கேட்டான்.

மகிழன் வியர்த்த முகத்தோடு அண்ணனை திரும்பிப் பார்த்தான்.

"மீரா இல்லாத உலகத்துல நானும் இருக்க வேணாம் அண்ணா.. நானும் அவக்கிட்டயே போயிடுறேன்!" என்றான். கண்கள் இரண்டிலும் கண்ணீர் கண்ணாடியாக மின்னியது.

அவன் சொன்னது கேட்டு குழம்பிய அகிலன் சற்று நேரம் கழித்தே தம்பி சொல்ல வந்ததை புரிந்துக் கொண்டான்.

"அவ சாகலடா.." என்றான் அவசரமாக.

தம்பி நம்பாமல் இருப்பதை கண்டவன் "சத்தியமா சாகலடா. அந்த பசங்க மயக்க மருந்து தந்திருக்காங்க. அதனால இவ எதிர்க்க சான்ஸ் இல்லாம போயிட்டதால அதிக பாதிப்பு இல்ல. அவங்களும் கூட அவ்வளவா வயலன்ஸ் யூஸ் பண்ணலன்னுதான் நினைக்கிறேன். ஸீ இஸ் சேப். ஆனாலும் ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட் எடுக்கும் போதே இரண்டு முறை சூஸைட் பண்ணிக்க டிரை பண்ணியிருக்கா. ஆனா அட்டெம்ட்ஸ் பெயில். இப்ப நல்லாதான் ஹாஸ்பிட்டல்ல இருக்கா.. நீ கீழே இறங்கி வா." என்றான்.

மகிழன் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

"பாவம் அண்ணா அவ. சின்ன பொண்ணு. அவளோட ஹர்டை என்னால தாங்க முடியும்ன்னு எனக்கு தோணல.. ரொம்ப வருத்தமா இருக்கு. அவளை எப்படி என்னால நேருக்கு நேரா பார்க்க முடியும். நான் இருக்கிறது வேஸ்ட் அண்ணா." என்று அவன் சொல்லவும் அகிலனுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.

'இது என்ன புது பூதம்?' என நினைத்தவன் "அவளுக்கு அப்படி நடந்ததுக்கு நீ ஏன்டா இப்படி பண்ற?" என்றான் தன்னையும் மீறி.

மகிழன் மிடறு விழுங்கியபடி அண்ணன் முகம் பார்த்தான்.

"நானும் அவளும் வேற வேறையா அண்ணா?" எனக் கேட்டான்.

"பருவ கோளாறு பையனோடு சகவாசம் வச்சிக்கறதுக்கு நான்தான் சூஸைட் பண்ணிக்கணும் போல!" என முனகியவன் தம்பியை கோபத்தோடு பார்த்தான். "அந்த பொண்ணு ஏற்கனவே நொந்துப் போய் இருக்கு. அவளுக்கு சமாதானம் சொல்ல உனக்கு வக்கில்ல. ஆனா சூஸைட் பண்ணிக்க டிரை பண்ற. பைத்தியமாடா நீ? பெத்து வளர்த்த அப்பா அம்மா, கூட பிறந்தவங்க, சொந்த பந்தம் எல்லோரையும் நொடியில் மறந்துட்டு சாக கிளம்பிட்ட.. உன் லோயலிட்டியை பார்த்து எனக்கே புல்லரிக்குதுடா!" என்றான் கடுப்போடு.

மகிழன் கசந்து சிரித்தான். "என் இடத்துல நீ இல்ல." என்றான்.

"உன் இடத்துல நான் இருக்க வேண்டிய அவசியமே எனக்கு கிடையாது.." என்று எரிந்து விழுந்தவன் உண்மையை மறைக்க இயலாமல் "அந்த பசங்க இரண்டு பேரும் அப்படி பண்ண காரணமே நீதான்.‌‌ நீ அவங்களை நடு ரோட்டுல வச்சி அடிச்சிருக்க. அதுக்குதான் அவங்க அவளை பழி வாங்கி இருக்காங்க. நான் அந்த மாதிரி யாரையும் வன்முறையால் தாக்க மாட்டேன். என்னை சுத்தி உள்ளவங்களுக்கு நானே ஆபத்தா மாறவும் மாட்டேன்." என்றான்.

மகிழனின் விழி நீர் சட்டென்று நின்றுப் போனது. அவனுக்கு அதிர்ச்சி மேலும் அதிகமாகியது.

அவசரப்பட்டு விட்டோமோ என்று அகிலன் நினைத்த அதே நேரத்தில் தன் நெற்றியை பிடித்தான் மகிழன். தள்ளாடியவனை கண்டு பயந்து போனவன் அவசரமாக சென்று அவனை தன் மீது சாய்த்துக் கொண்டான். சிரமப்பட்டு அவனை கீழே இறக்கினான்.

தலை சுற்றியது மகிழனுக்கு.

"மயக்கம் வர மாதிரி இருக்கு அண்ணா.." என்றான் மெல்லிய குரலில்.

"நீயெல்லாம் நல்லா வருவடா. எங்களை இதுக்கும் மேலேயும் உன்னால டார்ச்சர் பண்ண முடியுமா?" என கேட்டபடி தம்பியை தரையில் அமர வைத்தான் அகிலன்.

ரோகிணியும் வசந்தும் ஒன்பது மணி வாக்கில் வந்தபோது மகிழன் படுக்கையில் குறுங்கிப் படுத்திருந்தான்.

அகிலன் கூரையை பார்த்தபடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான். தாய் தந்தையரை கண்டவன் கூரையை பார்த்தபடியே நடந்ததை சொல்லி முடித்தான்.

"ராஸ்கல்.. நான் உனக்காக காசை தண்ணியா செலவு பண்ணிட்டு இருக்கேன். நீ சூஸைட் பண்ணிக்க டிரை பண்ணி இருக்க. என்னை பார்த்தா உனக்குப் பைத்தியம் மாதிரி தெரியுதா?" எனக் கேட்டுத் திட்டினார் வசந்த்.

ரோகிணி முந்தானையை வாய் மீது பொத்தியபடி அழுதாள்.

"கடைசி கடைசியா உன்னை பெத்தேன். கடைசியில நீதான் எங்களை கொல்லுவ போலிருக்கு." என்றாள்.

மகிழன் வாயே திறக்கவில்லை. தலையணையின் ஓரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள் அங்கேயே நிலைத்துப் போனது. அவ்வப்போது கண்ணீர் மட்டும் வழிந்து நின்றது.

ஒரு வாரம் அவனை மருத்துவமனையில் வைத்திருந்தார்கள் மருத்துவர். மொத்த குடும்பமும் அவனுக்கு புத்திமதி சொன்னார்கள்.

"இனி என்ன செய்றதுன்னு யோசி மகிழ். நடந்த காரியத்தை சரி பண்ண முடியாது. ஆனா பாதிக்கப்பட்ட மனங்களை சரி செய்ய முடியும். வேற ஒரு குடும்பமா இருந்திருந்தா கெட்டுப் போன பொண்ணுன்னு அவ மேல பேர் சொல்லி அவளை ஏத்துக்க மறுத்திருப்பாங்க. ஆனா நாங்க அவளையும் நம்ம வீட்டு பொண்ணா பார்க்கறோம். நாய் கடிச்ச தழும்பு மறைஞ்சிடும்ன்னு நம்புறோம். ஆனா நீ ஏன் இப்படி எங்களை வதைக்கிற? இதுக்கு மேலயும் எந்த ஃபேமிலிதான் இவ்வளவு சப்போர்ட் பண்ணும்?" எனக் கேட்டான் அகிலன்.

மகிழனுக்கு எல்லாமும் புரிந்துதான் இருந்தது. ஆனால் மீராவின் முகத்தை நினைத்த பிறகு வேறு எதுவும் சிந்தையில் தோன்ற மறுத்தது. அவள் எப்படி துடிதுடித்திருப்பாளோ என்று நினைத்து நினைத்து தனக்குள் மாய்ந்தான். அவள் நிஜத்தில் ஒரு முறை அனுபவித்த வலியை இவன் கற்பனையில் கோடி முறை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

அவனை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். "இனியாவது அநாவசியமா ஹாஸ்பிட்டல் பக்கம் போகாம இருக்கணும் ஆண்டவா!" என்று வேண்டிக் கொண்டாள் ரோகிணி.

மகிழன் தனது அறைக்குள் அடைந்தான். ஆனால் மற்றவர்கள் விடவில்லை. அவனோடு அதிகம் பேசினார்கள். பாட்டி அவனுக்கு நிறைய புத்திமதிகள் சொன்னாள்.

மீரா தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்கிறாள் என்று அகிலன் வந்து சொல்லியும் கூட அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. தன்னுடைய மன போராட்டத்தில் இருந்தே அவனால் வெளி வர முடியவில்லை.

நாட்கள் அனைத்தும் நரகமாக போய் கொண்டிருந்த நாளில், அவன் முடங்கி முடங்கி படுத்திருந்த ஒரு நாளில் "அந்த பசங்களுக்கு நாளைக்கு தீர்ப்பு சொல்ல போறாங்க." என்று வந்துச் சொன்னான் அகிலன்.

மகிழன் மெள்ள தலையுயர்த்திப் பார்த்தான்.

"நம்மூர் கோர்டுல உடனடி தீர்ப்புங்கறது நடக்காத விசயம். கேஸை ஒத்தி வைப்பாங்க. அதை தவிர வேற எதுவும் பண்ண மாட்டாங்க. அதனால நான் அவங்க இரண்டு பேரையும் போட்டு தள்ள ஆள் ரெடி பண்ணி இருக்கேன். கோர்ட் வாசல்லயே அவங்களை சுடப் போறாங்க நான் செட் பண்ண ஆளுங்க." என்றான் அகிலன்.

மகிழன் யோசனையோடு அண்ணனைப் பார்த்தான். கருவளையம் தாண்டி தெரிந்த தம்பியின் கண்களை கவலையோடு பார்த்தவன் "எங்களை டார்ச்சர் பண்ணாத மகிழ்.. ஏதோ இரண்டு ஆக்சிடென்ட். அதுக்காக வாழ்க்கையே முடிஞ்சி போன மாதிரி ஏன் இப்படி பண்ற.?" என்றுச் சலிப்போடுக் கேட்டான்.

மகிழன் பெருமூச்சு விட்டான். "நான் செத்திருந்தா இந்த சொத்துக்களை இரண்டா பிரிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது அண்ணா. உனக்கு நல்ல லாபம். ஏன் என்னை காப்பாத்தின? காப்பாத்திட்டு இருக்க?" என்றுக் கேட்டான்.

அகிலனால் சட்டென்று பதிலே சொல்ல முடியவில்லை. இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வியை கேட்க இவனால்தான் முடியும் என்று நினைத்தான்.

"சொத்தை என்னாலயும் சம்பாதிக்க முடியும். ஆனா நான் என்ன பண்ணாலும் சகோதரன் கிடைக்க மாட்டான். ஓவரா நடிக்கறதை நிப்பாட்டு. உனக்கு நான் ஷேர் எல்லாத்தையும் சமமா பிரிச்சி தரப்போறது கிடையாது. நீ சின்ன வயசுல உடைச்ச என் சைக்கிளுக்கும் கூட பில் போட்டு வாங்கிட்டுதான் உன்னை விடுவேன்." என்றான்.

மகிழன் எழுந்து நின்றான். அண்ணனின் அருகே வந்து அவனை அணைத்துக் கொண்டான்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா‌‌.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கான என் நன்றிக்கடன் தீரவே தீராது.." என்றவன் "அவங்களை சுட வேண்டாம்.. நீ செட் பண்ண ஆளுங்களோட போன் நம்பரை கொடு. மீதியை நானே பேசிக்கிறேன்." என்றான்.

"மறுபடியும் வம்பை இழுத்து விட போறியா?" சந்தேகமாக கேட்ட அண்ணனிடம் மறுப்பாக தலையசைத்தவன் "அவங்களை எப்படி கொல்றதுன்னு நானே அவங்களுக்கு சொல்றேன்." என்றான்.

ஆனால் அண்ணன் அந்த ரவுடிகளின் கைபேசி எண்ணை தந்தவுடன் இவன் அவர்களின் திட்டத்தை மாற்றி விட்டான்.

அவர்களை கடத்திக் கொண்டு வர சொன்னவன் அவர்களை தன் கையாலேயே அடித்துக் கொல்ல முயன்றான். கடைசி நேரத்தில்தான் அந்த ரவுடிகள் அகிலனுக்கு விசயத்தைச் சொன்னார்கள். எப்படியோ தம்பி அவர்களை கொல்லும் முன் அவனை அங்கிருந்து இழுத்து வந்துவிட்டான் அகிலன்.

"அவங்க பண்ற கொலையை நான் பண்ணா தப்பா?" எனக் கேட்டவனுக்கு அறை ஒன்று விட்டவன் "அவங்க ப்ரொபசனலே அதுதான். அவங்களை போலிசால பிடிக்க முடியாது. நான் நம்ம வீட்டு பொண்ணுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு ஆதங்கத்துல இப்படி அவங்களை ஏற்பாடு பண்ணிட்டேன். ஆனா நீ இங்கேயும் உன் குதர்க்க புத்தியை யூஸ் பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா அமைதியாவே இருந்திருப்பேன்." என்றான்.

அண்ணனை மகிழனாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"எனக்கு நீ எவ்வளவோ உதவி பண்ண.. இப்ப கடைசியா ஒரு உதவி கேட்கறேன். செய்றியா?" என அவன் கேட்கவும் அகிலன் தனக்குள் யோசித்துப் பார்த்தான். 'ஏதோ வில்லங்கமா கேட்க போறான்னு மட்டும் தெரியுது. இன்னும் இரண்டு தம்பிங்க இருந்திருந்தா என்னை ஃப்ரீ சர்வீஸ்ல புதைச்சிருப்பாங்க போல..' என நினைத்தவன் "கேளு.." என்றான்.

ஆனால் அவன் உதவியை கேட்ட பிறகு "என்னால முடியாது‌." என்று முதல் நொடியிலேயே மறுத்து விட்டான்.

"ப்ளீஸ் அண்ணா.. உன்னை கெஞ்சிக் கேட்கிறேன்.." என்று உடும்பு பிடி பிடித்தான் மகிழன்.

மீரா வீட்டில் தன் அறை கட்டிலில் அமர்ந்திருந்தாள். மருத்துவமனையில் இருந்து ஒட்டிக் கொண்டே இருந்த மைவிழி தங்கையை விட்டு நகரவே இல்லை.

"தூக்கம் வருது அக்கா. நீ போய் உன் வேலையை பாரு.." என்று விட்டு கட்டிலில் சாய்ந்தாள்.

மீரா பத்து நிமிடங்கள் கழித்து கண்களை திறந்தாள். மைவிழி அசையாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.

"அக்கா.. உனக்கு வேலை இல்லையா?" சிறு குரலில் கேட்டாள் மீரா.

"இருக்கு. ஆனா எனக்கு மனசு சரியாகும் வரை உன்னை விட்டுப் போறதா இல்ல.. ஹாஸ்பிட்டல்ல காசு கட்டி உட்கார்ந்திருப்பதை விட இங்கேயே உட்கார்ந்துட்டு போயிடுறேன். ஹாஸ்பிட்டலும் வீடுமா மாறி மாறி அலைஞ்சி அலுத்துப் போச்சி." என்றாள்.

மீரா இமைகள் நனைய தரையைப் பார்த்தாள். மைவிழியின் மீது என்றுமே இவள் இந்த அளவிற்கு பாசம் காட்டியது கிடையாது. அக்கா அழகு இல்லை. தான்தான் பேரழகு என்ற எண்ணத்தில் பலமுறை அவளை கேலி கிண்டல் செய்துள்ளாள். ஆனால் அவள் அது எதையும் மனதில் நினைக்காமல் தனது அருகிலேயே தவமாக இருப்பது கண்டு உள்ளுக்குள் நெகிழ்ந்துப் போனாள். குற்ற உணர்வும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

"ஹாஸ்பிட்டல்ல கதிர் உன்னை அடிச்சிட்டானாம். என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டான். அவனுக்கு டென்சன்ப்பா. அதுல எல்லை மீறிட்டான். அவனுக்கு பதிலா நான் சாரி கேட்கிறேன். மன்னிச்சிடு." என்று தங்கையின் தலையை வருடி தந்தாள் மைவிழி.

மீரா அவளின் கையை பற்றினாள். அக்காவின் கரங்களில் முகம் புதைத்தாள்.

"என்ன சொல்றதுன்னே தெரியல அக்கா. நானும் கூட போன ஜென்மத்துல ஏதோ ஒன்னு இரண்டு புண்ணியம் பண்ணியிருக்கேன் போல. அதனாலதான் நீ கிடைச்சிருக்க.. நான் உன்னை மதிச்சதே இல்ல. ஆனா நீ கட்டுப்பாடு இல்லாம பாசம் காட்டுற. நீ ரொம்ப நல்லவ அக்கா. அதனால்தான் கதிர் மாமாவே உனக்கு புருசனா கிடைச்சிருக்காரு. நான் மோசம்க்கா. யாரையும் மதிப்பதே இல்ல. ரொம்பவும் திமிரா இருந்தேன். அதனாலதான் மகிக்கும் என்னை பிடிக்காம போயிடுச்சி.. எனக்கு இன்னம் எவ்வளவு தண்டனை கிடைச்சாலும் போதாதுன்னு நினைக்கிறேன் அக்கா.. நான் ரொம்ப கெட்டவ.." என்று அழுதாள்.

மைவிழி திகைத்துப் போனாள். சிறு பெண்ணின் விளையாட்டாகதான் தங்கையின் கேலியை அவள் நினைத்துக் கொண்டாளே தவிர இப்படி தங்கைக்கு திமிர் என்று நினைத்ததே இல்லை. அதை சொல்லி தங்கையை சமாதானம் செய்தாள். ஆனால் மீராவுக்குதான் சமாதானம் ஆகவில்லை.

அழுது ஓய்ந்து விட்டு அப்படியே மயக்கத்தால் உறங்கிப் போனாள். தம்பியை அழைத்து மீராவுக்கு காவலாக வைத்துவிட்டு வெளியே வந்தாள் மைவிழி.

குளிக்க வேண்டும் என்று நினைத்தபடி தனது அறை இருந்த திசை நோக்கி நடந்தவள் வீட்டுக்குள் யாரோ வருவது கண்டு நின்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN