தேவதை 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கவி உறைந்து போனது போலானான்.

அதிர்ச்சியில் தயங்கித் தயங்கி மூச்சு விட்டான்.

"நன்றிகள் ஏந்தலே!" என்றுச் சிறு குரலில் சொன்ன ஆதியை எப்படி விலக்கி நிறுத்துவது என்று அவனுக்குத் தெரியவில்லை. இவ்வுலகில் இத்தனை பெண்களும், ஆண்களும் இருக்கையில் வேற்று உலகத்தை சார்ந்த ஒருத்தி அணைத்ததும் தனக்குள் ஏன் இத்தனை மாற்றாங்கள் என்று குழம்பினான்.

"இவளை எங்களிடம் ஒப்படைத்தால் எங்கள் உலகில் பாதியை உனக்கு ஒப்படைக்கிறோம்!" வித்யநயன் சொன்னது கேட்டு ஆச்சரியமாக இருந்தது கவிக்கு.

'இவள் ஒரு சாதாரண அன்பின் தேவதை. இவளுக்காக இவன் ஏன் இவ்வளவு இறங்கி வருகிறான்? இதில் ஏதோ விசயம் உள்ளது. கண்டுபிடித்தே ஆக வேண்டும்.' என்றெண்ணியவன் யோசிப்பது போல சில நொடிகள் மௌனம் காத்தான்.

"சில நாட்களுக்கு பிறகு சொல்கிறேன்." என்றான்.

ஆதி அவளாகவே அவனை விட்டு விலகிக் கொண்டாள்.

மௌனமாய் தரை பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அன்பின் தேவதையாக இருப்பதின் கஷ்டத்தை மீண்டும் ஒருமுறை அனுபவித்தாள்.

அன்பின் தேவதையாக இருப்பது வரம் போல தோன்றினாலும் சில சமயங்களில் அதுவே சாபம்தான். சுலபமாக மற்றவர்கள் மீது அன்பு வந்து விடும். அந்த அன்பை அவர்கள் உடைக்கையில் துரோகம் நெஞ்சை குத்தி கிழிக்கும்.

இப்போதும் இவன் காப்பாற்ற முன் வந்தவுடன் அவனை நொடியில் நம்பிவிட்டாள். பிரபஞ்சம் அளவுக்கு நம்பி விட்டாள். ஆனால் அவனின் அடுத்த உரையாடல் அவளை உடைத்து விட்டது. அங்கே நிற்கவே முடியவில்லை.

அங்கிருந்து திரும்பி நடந்தாள். தானாகவே எதிரிகளிடம் சரணடைந்து விடலாமா என்று கூட எண்ணினாள்.

வித்யநயன் தூரமாக சென்றவளை விழியசைக்காமல் பார்த்தான். கவிக்கு இவளின் திடீர் மாற்றம் புரியவில்லை.

வித்யநயன் அவளை பின்தொடர முயன்றான். ஆனால் அவனை தடுத்து நிறுத்திய கவி "அப்புறம் சேதி அனுப்புகிறேன். நீ இப்போது கிளம்பலாம்." என்றான்.

வித்யநயன் ஆதியை பார்த்தபடியே அங்கிருந்து கிளம்பிச் சென்றான். சற்று நேரத்தில் அவனது படையும் கூட அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

பெரிய சேதாரம் இல்லாமல் சண்டை முடிந்து விட்டது. ஆனால் அதன்பிறகு ஐந்தாறு நாட்கள் வரை கவியின் கண்களுக்கு ஆதி தென்படவேயில்லை.

கவி தேடினான் அவளை. சிறையில் இருந்தவளை திறந்து விட்டது தவறு என்றுத் தன்னையே திட்டிக் கொண்டான்.

கவி மட்டுமல்ல அந்த உலகில் இருந்த யாருமே அவளை பார்க்கவில்லை.

வானா அண்டத்தின் ஒரு ஓரத்தில் இருந்தது நெவத்ஸி கிரகம். தேவ தேவதைகளை போலில்லாமல் மரணத்தை தங்களின் ஆயுளோடு கொண்டிருக்கும் சாதாரண மனிதர்கள் வாழும் கிரகம் அது. ஆதி அந்த கிரகத்தில்தான் இருந்தாள்.

அன்பின் தேவ உலகம் அழியும் முன் அந்த உலகிற்கு நெவத்ஸி கிரகத்தை சார்ந்த பாவள் என்றொரு பெண் வந்திருந்தாள். அவள் எப்படி அந்த உலகத்தை கண்டறிந்தாள் என்று அன்பின் தேவ உலகை சார்ந்த யாருக்கும் தெரியாது. அந்த உலகிற்கு அவள் வந்திருந்தபோது ஆதியோடு பேசி பழகியிருந்தாள். தனது கிரகத்தை பற்றிய விவரங்களையும் சொல்லி இருந்தாள். 'முக்கிய வேலையாக செல்கிறேன், விரைவில் திரும்பி வருகிறேன்' என்று சொல்லி விட்டு வந்தாள் அவள். ஆனால் அதன் பிறகு அவள் வரும் முன்பே கவியால் ஆதியின் உலகம் அழிந்துப் போனது.

இப்போது பாவளை தேடி நெவத்ஸி கிரகத்திற்குதான் வந்திருந்தாள் ஆதி. அந்த கிரகம் வித்தியாசமாக இருந்தது. வானுயர்ந்த கோபுரங்கள் எதற்கு? பாதாள சுரங்கங்கள் எதற்கு என்று ஆதியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அந்த கிரகத்திற்குள் இவள் நுழைந்த உடன் அந்த கிரகத்தின் மனிதர்கள் பலர் இவளைச் சுற்றி வளைத்தனர். இவளைக் கேள்வியாக கேட்டனர். ஜனத்தொகை இங்கு அதிகம் என்பதையும் ஆதியால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

பாவளின் வாசத்தை ஆதியால் உணர முடிந்தது. அதனால் அவள் இருக்கும் இடத்தின் அருகில் வந்த பிறகுதான் அந்த மண்ணில் கால்தடம் பதிந்திருந்தாள்.

ஆதி பாவளை பற்றிச் சொன்னாள். தான் ஒரு அன்பின் தேவதை என்பதையும் சொன்னாள். சுற்றி இருந்தவர்கள் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்.

"நீங்க நிஜமா தேவதையா?" எனக் கேட்டாள் ஒருத்தி.

ஆதி மேலும் கீழும் தலையசைத்தாள்.

அவளை சுற்றி வந்து கவனித்தனர் சிலர். ஆதியின் முகத்தில் தெரிந்த தேஜஸை கண்டு தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டனர் சிலர்.

பாவள் விரைவில் அவ்விடம் வந்து சேர்ந்தாள்.

"ஆதி.." என்றாள் அதிர்ச்சியோடு.

ஆதி பாவளை கண்டுப் புன்னகைத்தாள்.

"என் உலகம் அழிஞ்சி போச்சி. சத்திய தேவ உலகில் என்னை சிறை வச்சிருந்தாங்க. ஆனா நான் அங்கிருக்க பிடிக்காம வந்துட்டேன். எங்கே போவதுன்னு தெரியல. உன் நினைவு வந்தது. அதனாலதான் இங்கே வந்தேன்." என்றாள்

பாவள் தன் மக்களை கவனித்தாள்.

"எல்லோரும் கலைஞ்சி போங்க.. இவங்க தேவதை.. இவங்க நம்ம கிரகத்துக்கு வந்தது நாம செய்த புண்ணியம்." என்றாள்.

சுற்றி இருந்தவர்கள் ஆதியை வழிபட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

"என்னோடு வாங்க.." ஆதியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் பாவள்.

"உங்களால எப்படி இங்கே வர முடிந்தது? விண் ஓடம் எதையும் உங்க கிரகத்தில் நான் பார்க்கலையே!" என்றாள்.

"நான் பிரபஞ்ச வெளியில் நடந்துதான் வந்தேன்." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தாள் பாவள்.

'தேவதையாய் இருப்பதில் இதுவும் ஒரு அனுகூலம் போல!' என நினைத்தாள்.

"கவி என்னை அந்த காழர்களின் கையில் ஒப்படைக்க இருக்கிறான். நானே சாக நினைத்துதான் காழர்களுக்கு செய்தி அனுப்பினேன். ஆனால் அதன் பிறகு பயம் வந்து விட்டது. இடைப்பட்ட நாட்களில் கவியின் மீது அதிக அன்புக் கொண்டு விட்டேன். காரணமே புரியவில்லை. ஆனால் அவனை விட்டு சாக விருப்பமில்லை. ஆனால் கவி எனக்கு துரோகம் செய்து விட்டான். என் மீது அன்பு காட்டுவது போல காட்டி என்னைக் காழர்களின் கையில் ஒப்படைக்க துணிந்து விட்டான். என்னால் இந்த துரோகத்தை தாங்க இயலவில்லை. அதனால்தான் அங்கிருந்து வந்து விட்டேன்." என்றாள் கண்ணீர் விட்டபடி.

பாவள் அவளின் கண்ணீரை வெறித்துப் பார்த்தபடி இருக்கை ஒன்றை கை காட்டினாள்.

"அமருங்கள் இங்கே." என்றாள்.

"கவிக்கு உங்களை விட அதிக சக்தி உள்ளதா?" என்றுக் கேட்டாள்.

ஆதி ஆமென தலையசைத்தாள்.

"அவர்கள் சத்திய தேவர்கள் அல்லவா? அதனால் அவர்களுக்கு எங்களை விட அதிக சக்திதான். ஆனால் அதற்காக என்னை நம்பி வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லையே!" என்றாள்.

"எல்லாம் சீக்கிரம் சரியாகி விடும்." என்றவள் 'சத்திய தேவர்களுக்கு அதிக சக்தி. அப்படியானால் இவளை விட அவர்களால்தான் அதிக பயனுள்ளவர்கள். எப்படியாவது அவர்களின் உலகை கண்டறிந்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் எங்களின் திட்டத்தை செயல்படுத்த முடியும்.' என்று வஞ்சகமாக எண்ணினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN