கனவே 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அகிலனை முறைப்போடு பார்த்தாள் மீரா.

"கல்யாண தேதியை குறிச்சிடுங்க அப்பா!" என்றான் அகிலன்.

"நான் வேற ஏதாவது செய்றேன்னு சொன்னேன். மேரேஜ்.. என்னால முடியாது." என்ற மீராவை சலிப்போடுப் பார்த்தவன் "பொண்ணு பார்க்க வந்த இடத்துல பட்டி மன்றம் நடத்த வைக்கிறாயா?" எனக் கேட்டான்.

மீரா தயங்கினாள். அங்கிருந்தவர்களை கவனித்துவிட்டு இவன் பக்கம் திரும்பினாள். "நா.. நாம கொஞ்சம் தனியா பேசலாமா?" என்றாள் மெல்லிய குரலில்.

மைவிழி ஆச்சரியமாக தங்கையைப் பார்த்தாள். கூட்டத்தோடு இருந்தால் கூட ஆண் வாசம் வீச கூடாது என்று சொல்லுபவள் இப்போது இவனோடு தனியாக பேசும் அளவிற்கு முன்னேறி விட்டாளா என்ற அதிர்ச்சியில் இருந்தாள் அவள்.

"உன் ரூம் எந்த பக்கம்?" என கேட்டவனுக்கு கையை காட்டினாள். அவன் முன்னால் நடந்தான். மீரா அக்காவை பார்த்தாள்.

"துணைக்கு வரட்டா?" என கேட்டாள் மைவிழி.

மறுப்பாக தலையசைத்தவள் அருகே இருந்த சுவற்றை ஒற்றை கையால் பிடித்து தைரியத்தை வர வைத்துக் கொண்டு தனது அறையை நோக்கி நடந்தாள்.

அவள் வந்தபோது அகிலன் அவளது கட்டிலின் மீது அமர்ந்திருந்தான். அந்த அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். சுத்தமான அறைதான். ஆனால் கட்டிலை தவிர வேறு எந்த பொருட்களுமே இருக்கவில்லை.

மீரா சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டாள்.

அகிலன் அவளை பார்த்தபடி எழுந்து நின்றான்.

"உட்காருவதா இருந்தா நீ உட்கார்." என்றான்.

"இல்ல வேணாம்." என்றவள் "நாம கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் உங்க தம்பியை லவ் பண்றேன். உங்களை எப்படி கட்டிக்க முடியும்? என் மனசுல அவனை தவிர வேற யாருமே வர முடியாது. எட்டாவதுல இருந்து நான் அவனை லவ் பண்றேன். நீங்க நினைக்கிற மாதிரி சாதாரணம் கிடையாது. என் லவ் என் சொந்தம். அவனை லவ் பண்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு உங்களோட கருணை, கல்யாணம் எதுவுமே வேணாம். நான் இந்த மாதிரி தற்கொலை முயற்சிகள் இனி எப்போதும் செய்ய மாட்டேன். நீங்க என்னை நம்பலாம். ப்ளீஸ் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கங்க!" என்றவள் அகிலனின் முகத்தை கவனித்தாள். ஒரு சிறு மாற்றம் கூட இல்லை அவனிடம்.

தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்தவன் "லைட்டர் இருக்குமா? நான் எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன் போல." என்றான்.

மீரா திருதிருவென விழித்துவிட்டு "சா.. சாரி நான் ஸ்மோக் பண்றது இல்ல!" என்றாள்.

ஆச்சரியமாக அவளைப் பார்த்தவன் "குட் ஹேபிட்.. கிச்சன் எங்கே இருக்கு?" எனக் கேட்டான்.

மீரா வழி சொன்னாள்.

"ஒரு நிமிசம்.." என்றவன் அங்கிருந்து செல்ல மீரா நெஞ்சின் மீது கையை வைத்தபடி சுவரில் தலை சாய்த்தாள்.

"என்னை இன்னும் எவ்வளவு கஷ்டபடுத்தணும்ன்னு நினைக்கிறிங்க கடவுளே? ப்ளீஸ் இந்த அரை மெண்டலை எப்படியாவது இங்கிருந்த அனுப்பி வச்சிடுங்க. நான் இனி நல்லா பொண்ணா இருக்கேன். அம்மா அப்பா பேச்சைக் கேட்கறேன். சூஸைட் பண்ணிக்க டிரை பண்ணாம இருக்கேன். தினமும் கரெக்டா சாப்பிடுறேன். இவனை அனுப்பிடுங்க!" என்றுக் கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தவள் சுவாசத்தில் சிகரெட்டின் நெடி கலக்கவும் அதிர்ச்சியோடு அவசரமாக கண்களை திறந்தாள்.

வாசற்படியின் அருகே நின்றிருந்தான் அகிலன்.

"எட்டாவதுல இருந்து லவ் பண்ணா அது லவ்வே கிடையாது. வெறும் ஈர்ப்பு. அழகின் மீதான ஈர்ப்பு." கடுமையான குரலில் சொன்னவன் "உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டம் இல்லன்னு தெரியுது. நீ சந்தோசமா இருக்கணும். அவ்வளவுதான். மகிழனை வர வைக்கிறேன் நான்‌. அவனை கல்யாணம் பண்ணிக்கறதுல உனக்கு எந்த தயக்கமும் இல்லன்னு நினைக்கிறேன். அவனோட வெள்ளைக்கார மனைவியை டைவர்ஸ் பண்றது ஒன்னும் பெரிய விசயம் கிடையாது." என்றான்.

மீரா அதிர்ச்சியோடு இடம் வலமாக தலையசைத்தாள்.

"வேணாம். வேணாம். அவனுக்கு நான் பொருத்தமானவ இல்ல. அவனை நேரா பார்க்க கூட முடியாது என்னால. நீங்க யாரையும் லவ் பண்ணல. அதனாலதான் சில விசயங்கள் புரியல. நான் ரொம்ப தாழ்வான நிலையில் இருக்கேன். என்னால எப்பவும் மேலே வரவே முடியாது."

உதட்டை பிதுக்கியவன் "உனக்கு அவன் பொருத்தமானவன் இல்லன்னா என்னை மேரேஜ் பண்ணிக்க. மேரேஜ் வேணும்ன்னு நானும் இங்கே வரல. எங்க பாட்டிக்காக. எங்க பேமிலிக்காதான் இது. நீ தாழ்ந்து இருந்தாலும் உயர்ந்து இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்ல.‌" என்றான்.

எல்லாமுமாக இருந்தவனை விட்டுவிட்டு அவனுக்கே அண்ணியாக செல்வது எப்படி சாத்தியம் என்று அவளுக்கு புரியவேயில்லை. நாளைய நாளும் இன்றைய நாளும் அவளை வெந்தணலில் வாட்டி எடுத்தது.

உயிர் போகும் நேரம் வந்தாலும் அவனை பார்க்கும் தைரியமோ, அவனோடு பேசி, அவனோடு வாழும் தைரியமோ வர போவதில்லை. இப்படி ஒரு கூடுதல் தடையை ஏற்படுத்திக் கொண்டால் பிறகு அவனையும், தன் குற்ற உணர்வையும் சமாளித்து விடலாமோ என்று யோசித்தாள்.

'இதென்ன கிறுக்கதனமான யோசனை?' என்றுத் தன்னையே திட்டிக் கொண்டவளின் முன்னால் சொடக்கிட்டவன் "ஐயம் வெயிட்டிங்." என்றான்.

மீரா தன் நெற்றியை துடைத்துக் கொண்டாள்.

"நீங்க என்னை ஏன் கல்யாணம் பண்ண நினைக்கிறிங்களோ? என்னை இரண்டு பேர் ரேப் பண்ணி இருக்காங்க. யாரும் தன் மனைவி கெட்டுப் போனவளா இருக்கணும்னு ஆசைப்பட மாட்டாங்க." என்றாள்.

பிடித்து முடித்த சிகரெட்டை காலில் போட்டு நசுக்கியவன் "ஐ ஹேவ் சம் கேர்ள் பிரெண்ட்ஸ்.. சாரி. ஐ ஹேட். நாட் நவ். இதை ஏன் சொல்றேன்னா நானும் கன்னிப்பையன் கிடையாதுன்னு சொல்லதான்." என்றான்.

'சம்!? இவன் என்ன மாதிரி ஆள்? ஐ லவ் யூ மகி!' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் "என்னால நார்மலா நடக்க முடியாது. நான் ரொம்ப வீக்.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கறது போல முட்டாள்தனம் வேற எதுவுமே கிடையாது." என்றாள்.

"ரொம்ப மொக்கை போடுற நீ. நான்தான் சொன்னேனே, இந்த மேரேஜ் ஒரு கமிட்மெண்ட்ன்னு."

மீரா தலை குனிந்தாள். தரையை பார்த்தபடி சில நொடிகள் கண்ணீர் விட்டவள் "நான் ஓகே சொல்றேன். ஆனா சில கண்டிசன்ஸ்." என்றாள்.

"ம்." என்றவன் பெப்பர்மிண்ட் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். "உனக்கு வேணுமா?" எனக் கேட்டான்.

மீரா வேண்டாமென்று தலையசைத்தாள்.

"மகியை நான் எப்பவும் பார்க்க கூடாது. அவன் ஊருக்கு வரதா இருந்தா எனக்கு நீங்க முன்னாடியே சொல்லிடணும். நான் அவன் இருக்கும்போது அந்த வீட்டுல இருக்க மாட்டேன்." என்றாள்.

அகிலன் அவளை வியப்போடு பார்த்துவிட்டு "ஓகே. அவன் இங்கே வருவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல. அப்படி அதிசயமா வந்தா கண்டிப்பா முன்னாடியே சொல்லிடுறேன்." என்றான்.

"அடுத்து நீங்க எப்பவும் மகியை துன்புறுத்த கூடாது. இந்த பலி, பழி வாங்கல் இப்படியெல்லாம் அவனை வச்சி யோசிக்க கூடாது. அவன் மேல கீறல் கூட விழக்கூடாது."

"நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் அந்த நாயை எதுக்கு தொடப் போறேன்?" என்றவனை அதிர்ச்சியாக பார்த்தவள் "என் மகியை என் முன்னாடி எப்பவும் மரியாதை குறைவா பேச கூடாது." என்றாள்.

சிரித்தவன் "கூடப் பிறந்த நானே மகிழன்னுதான் சொல்றேன். ஆனா நீ என் மகி, என் மகின்னு ஓவரா பொங்கற. என்ன கன்றாவி காதலோ?" என்றான்.

மீரா அவனை முறைத்தாள்.

"அடுத்து.. நீங்க எப்பவும் என்னை டச் பண்ண கூடாது."

இந்த முறை சற்று அதிகமாகவே சிரித்து விட்டவன் "அப்படின்னா நான் இப்ப இருக்கற மாதிரி ப்ரியாவே இருக்கலாம்ன்னு சொல்ற. ரொம்ப தேங்க்ஸ். இந்த மாதிரி ஒரு ஆஃபர் கிடைக்கும்ன்னு நான் யோசிக்கவே இல்ல." என்றான்.

மீரா உதட்டை கடித்தாள். கடுப்பாக இருந்தது. அதே சமயம் குற்ற உணர்வின் அளவு கூடிக் கொண்டிருந்தது.

"நான் போய் மத்த விசயங்களை பார்க்கறேன். நீ வேற ஏதாவது சொல்லணுமா?" எனக் கேட்டான் அவன்.

மீரா இல்லையென தலையசைத்தாள்.

"அப்புறமா உனக்கு போன் பண்றேன்." என்றவன் அங்கிருந்துச் சென்றான்.

மீரா தரையோடு அமர்ந்தாள். அழுகை பொங்கி வந்தது. மகிழன் தன்னை மறந்து திருமணம் செய்துக் கொண்டான், அதுவும் காதல் திருமணம் செய்துக் கொண்டான் என்பதையே அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அத்தோடு இந்த திருமணம் அவளுக்கு மன அழுத்தத்தை தந்தது.

"எனக்கு உன்னை பார்க்க பிடிக்கல." என்று மகிழன் அன்றுச் சொல்லி சென்றதை நினைத்து விம்மினாள். அவனுக்கு உண்மையிலேயே தன்னை பிடிக்கவில்லை என்று எண்ணி மாய்ந்தாள்.

அகிலனை சுத்தமாகவே பிடிக்கவில்லை. அவனின் நடை உடை பாவனை எல்லாம் எரிச்சலை தந்தது.

'பிடிக்கலன்னு சொல்லிட்டு போன காதலன் செஞ்ச தப்பால அவளையே இழந்தா. அவன் வாழணும்ன்னு இப்ப கல்யாணமும் பண்ணிக்கறா.. சரியான பைத்தியக்கார காதல்!' என நினைத்தபடி வந்த அகிலன் தாய் தந்தையரிடம் அவள் திருமண சம்மதம் தந்ததாக சொன்னான்.

வசந்த் மீராவின் தந்தையோடு பேசி முடித்தார்.

மைவிழி அகிலனின் அருகே வந்தாள்.

"என்ன சொல்றதுன்னே தெரியல. கொஞ்ச நேரம் முன்னாடி வரை அவளை எங்க யாராலும் சரி பண்ண முடியாம இருந்தது. இப்ப அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்காங்கறதை என்னால நம்பவே முடியல. அவளை நல்லா கன்ட்ரோல் பண்றிங்க போல." என்று கசந்த சிரிப்போடு சொன்னாள்.

"எல்லாம் சீக்கிரம் சரியா போயிடும்." என்றவன் பெற்றோரோடு அங்கிருந்து புறப்பட்டான்.

மைவிழி மீராவை தேடி வந்தாள். அதுவரை அவளிடம் காவலாக இருந்தான் பிருந்தன். அகிலன் அந்த பக்கம் சென்றவுடன் இந்த பக்கம் வந்து விட்டான் அவன்.

மைவிழி அவனை அனுப்பி விட்டு தங்கைக்கு கை தந்தாள்.

"எழுந்திரு மீரா. இங்கே ஏன் உட்கார்ந்திருக்க?" என்றாள்.

"ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா. இந்த ஆள் ரொம்ப டார்ச்சரா பேசுறான். நான் எவ்வளவு கஷ்டத்துல இருக்கேன். இப்ப வந்து இப்படி ஒரு குழப்பம் எனக்குத் தேவையா? மகி என்னை கேவலமா நினைப்பான் இல்லையா?" என்றுக் கேட்டாள் சோகமாக.

மைவிழி தங்கையின் கூந்தலை சரி செய்து விட்டாள்.

"கால்ல பிரச்சனை வந்ததும் விட்டுட்டு போனவன்தானே அவன்? அவன் என்ன நினைச்சா உனக்கென்ன? அவனை மாதிரி ஒரு சீட்டருக்கு முன்னால நீ வாழ்ந்து காட்டணுமே தவிர சோர்ந்துப் போக கூடாது."

"அவன் என்னை எவ்வளவு காதலிச்சாங்கறது எனக்கு எதுக்கு? நான் அவனை எவ்வளவு காதலிச்சேங்கறதுதான் விசயம்.!"

"உன்னை அவசரப்படுத்துறதுக்கு சாரி. ஆனா உன்னை எத்தனை வருசம் விட்டாலும் இதே போலதான் இருப்ப. அது மட்டும் நல்லா தெரியுது. அதனாலதான் அகிலனுக்கு ஓகே சொன்னேன் நான்." என்றாள்.

"சிரிப்பா வருதுக்கா. எல்லாமே கனவு மாதிரி ரொம்ப விசித்திரமாக நடக்குது. மகி என்னோடு இருந்திருந்தா இந்த மாதிரி எந்த விபத்தும் விசித்திரமும் நடந்திருக்காது இல்ல?" எனக் கேட்டாள்.

நடக்கும் விசயங்களை ஜீரணிக்கவே முடியவில்லை அவளால். நம்பவும் கூட முடியவில்லை.

இரண்டு நாட்களுக்கு பிறகு அகிலன் போன் செய்தான்.

"சேலை போட்டோஸ் அனுப்பி இருக்கேன். உனக்கு எது பிடிச்சிருக்குன்னு சொல்லு." என்றான்.

"கல்யாணமே பிடிக்காத கல்யாணம். இதுல சேலை பிடிச்சி என்னாக போகுது?"

எதிரில் இருந்தவன் சிரித்தான்.

"ஓகே. எங்க பாட்டி செலக்ட் பண்றதே இருக்கட்டும். இனி இந்த மாதிரி விசயத்துக்கு போன் செய்ய மாட்டேன்." என்றான்.

அவன் தொடர்பை துண்டிக்கும் முன்பு "மகி வருவானா?" என்று அவசரமாக கேட்டாள் இவள்.

எதிரில் சில நொடிகள் மௌனம் நிலவியது.

"அவன் வரணுமா? வேணாமா?" எனக் கேட்டான்.

மீரா வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"அ.. அவனுக்கு நிஜமாவே கல்யாணம் ஆகிடுச்சா?" என்றாள்.

"அவன் வொய்ப் நம்பர் அனுப்பி வைக்கட்டா?"

"இ.. இல்ல. நான் அந்த மீனிங்கல கேட்கல. அவனுக்கு மேரேஜ் ஆகியிருக்கணும்ன்னு மனசார வேண்டிக்கிறேன். அவன் நல்லா இருந்தா போதும். நான் குப்பை. அவனுக்கு என்னை பத்தி எதுவும் தெரியாம இருந்திருக்கலாம். அவன் ஹேப்பியை தவிர எனக்கு வேற எதுவும் வேணாம்!" சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ உளறியவளின் குரலில் கலந்திருந்த சிறு விம்மலை அவனாலும் அறிய முடிந்தது.

"இப்ப கூட லேட்டாகிடல. அதே நாள்ல அதே மேடையில வேற நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணிக்கங்க. பாவ புண்ணியம் எதுவும் இங்கே கிடையாது. இது என் விதி. உங்களை எதுவும்.." அவள் மேலும் சொல்லும் முன் எதிரில் இருந்தவன் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

'சிறு வயதிலிருந்து மனதில் உரு போட்டு வைத்த முகத்தை மறக்க முடியுமா?' என கேட்டுக் கொண்டவள் தலையணையில் முகம் புதைத்தாள்.

இப்போதெல்லாம் ஓரளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள் வீட்டில் இருந்தவர்கள். எப்படி அவர்களுக்கு தன் மீது திடீர் நம்பிக்கை வந்தது என்று அவளுக்கு புரியவில்லை.

"என் வாழ்க்கை ரொம்ப டிராஜிடியா போய்ட்டு இருக்கு மகி. உனக்காவது நல்ல வாழ்க்கை அமைஞ்சதேன்னு சந்தோசப்படுறேன்‌. ஆனா ஆண்டவன் உன் லூசு அண்ணனை என் வாழ்க்கையோடு கோர்த்து விட்டுட்டாரு. அவனை எனக்குச் சுத்தமா பிடிக்கவில்லை. எனக்குக் கல்யாணம் எதுக்கு? நீயே இல்ல. சாக டிரை பண்ணலன்னும் சொல்லிட்டேன். அப்புறமும் ஏன்? ஐ ஹேட் மை லைஃப் மகி!" என்றாள்.

அடுத்த சில நாட்களில் கோவில் ஒன்றில் வைத்து அகிலனுக்கும் மீராவுக்கும் எளிமையாக திருமணம் நடந்தது. சொந்தக்காரர்கள் யாரும் வரவில்லை. இரு வீட்டு குடும்பம் மட்டும்தான் இருந்தது‌.

கதிரும் மற்றவர்களும் கூட அகிலனோடு நெருங்கி விட்டார்கள். மீராவுக்குதான் எதிலும் ஒட்டுதல் இல்லை. மகிழன் வருவானா மாட்டானா என்ற குழப்பத்திலேயே இருந்தாள். தனது கன்டிஷனுக்காக அவனை வரவைக்கவில்லையோ என்று யோசித்தாள். ஆனால் தனக்காக தன் சொந்த தம்பியை கூட ஒருவன் ஒதுக்கி வைப்பானா என்றும் குழம்பிப் போனாள்.

வித்யாவும் மைவிழியும் மீராவின் அருகிலேயே இருந்து அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்தனர். அகிலன் தாலியை கட்டுகையில் மீராவையும் மீறி விம்மல் சத்தம் வெளியே கேட்டு விட்டது. ஏற்கனவே உடல் நடுக்கம் வேறு. இந்த அழுகையும் சேர்ந்து பார்ப்போருக்குதான் சங்கடத்தை தந்தது.

மகிழனோடு சேர்ந்து அவள் கட்டிய கற்பனை கோட்டைகள் அனைத்தும் நொடியில் தரைமட்டமாகியது போலிருந்தது.

"முகூர்த்த நேரத்துல அழறா.. என்ன பொண்ணோ?" என்றுத் திட்டினாள் பாட்டி.

பெரியோர் காலில் விழ சென்றாள் மீரா. ஆனால் அகிலன் வேண்டாமென்று விட்டான்.

மீராவை புகுந்த வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

"அதுதான் நீங்க சொன்னது போலவே கல்யாணம் பண்ணியாச்சி இல்ல? இனி நான் எங்க வீட்டுலயே இருந்துக்கட்டா?" என்றுக் கேட்டாள் மீரா வாசலில் ஆரத்தி எடுத்த நேரத்தில்.

அகிலன் தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி வித்யாவிடம் தந்தான்.

"சொந்தக்காரங்க முன்னாடி எங்க வீட்டு மானம்தான் போகும். எங்க பாட்டி ரொம்ப கட்டுப்பாடு. நீ உன் இஷ்டத்துக்கு இருக்க முடியாது." என்றான் பட்டென்று.

மீராவிற்கு மீண்டும் கண்ணீர்தான் வந்தது. திருமண நாளில் இவ்வளவு அழுதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று நினைத்தாள்.

ஹாலுக்குள் நுழைந்ததும் அவளின் கண்கள் முதலில் தேடியது மகிழனின் புகைப்படத்தைதான். ஆனால் புகைப்படம் அங்கே இருக்கவில்லை. மனம் வாடியது அவளின் முகத்தில் தெரிந்தது.

பெரியதாக எந்த சடங்கும் அதன் பிறகு நடக்கவில்லை.

"விளக்கேத்திடு!" என்று மட்டும் சொன்னாள் ரோகிணி.

மீரா அவசரமாக மறுத்தாள்.

"வேணாம்!" என்றாள். புகுந்த வீட்டில் விளக்கேற்றுவது என்பது புனிதமான காரியம் என்று நினைத்தாள். கெட்டுப் போன தான் அதை செய்ய கூடாது என்று நினைத்தாள்.

அகிலன் அவளை விசித்திரமாக பார்த்துவிட்டு தனது அறை நோக்கி நடந்தான்.

ரோகிணி மைவிழியையும் சம்மந்தியையும் பார்த்தாள்.

"அவங்களே சொல்றாங்க.. உனக்கு என்னடி? போய் விளக்கேத்தி வைடி." என்றாள் அம்மா.

"அம்மா.. சாமி கண்ணை குத்தும்மா!" என்றவளை தன் புறம் திருப்பினாள் மைவிழி.

"லூசா நீ? நீயெல்லாம் படிச்சும் தண்டம். இவ்வளவு மோசமான பிற்போக்குவாதியாவா இருப்ப?" என்றுத் திட்டினாள்.

மீரா எதுவும் பேசாமல் தரைப் பார்தது நின்றாள்.

அறையிலிருந்து வெளிய வந்தான் அகிலன். வெள்ளை வேட்டியை கலர் வேட்டியாக மாற்றி இருந்தான்.

"நானே விளக்கேத்துறேன். வந்து சாமியாவது கும்பிடு." என்றவன் பூஜையறை நோக்கி நடந்தான்.

மீரா தயங்கி நின்றாள். மைவிழி தங்கையை இழுத்துக் கொண்டு சென்றாள்.

அகிலன் விளக்கேற்றிய பிறகு அனைவரும் கடவுளை வணங்கினார்கள்.

வித்யா அனைவரையும் அமர வைத்து காப்பி கொடுத்தாள்‌.

மீரா ஒட்டியும் ஒட்டாமல் இருந்தாள். இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.

"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. வெளியே போறேன்!" என்றுவிட்டு அங்கிருந்துச் சென்றான் அகிலன்.

அடைத்துக் கொண்டிருப்பது போல இருந்த வீடு அவன் சென்று விடவும் காற்றோட்டமாக மாறி விட்டது போலிருந்தது மீராவிற்கு.

"வித்யா அக்கா.." தயக்கமாக அழைத்தவளை திரும்பிப் பார்த்தாள் அவள்.

"மகி நல்லாருக்கானா?" என்று அவள் கேட்கவும் அங்கிருந்த அனைவரும் ஆளுக்கொரு திசை பார்த்தனர்.

"மீரா நீ என்ன லூசா? அகிலை கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு மகியை பத்தி கேட்டுட்டு இருக்க." என்றாள் மைவிழி மெல்லிய குரலில்.

"ஏன்க்கா? ஒரு பிரெண்டா கேட்க கூடாதா?" வருத்தமாக கேட்டவள் "சாரி.. நான் தெரியாம கேட்டுட்டேன்." என்றாள்.

வித்யாவிற்கு ஏதோ போல் ஆகி விட்டது.

"நான் வேணா ஸ்பீக்கர்ல அவனோடு பேசட்டா?" என்றாள்.

"வித்யா.." கண்டித்தார் வசந்த்.

"அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு தம்பியை விசாரிக்கறா அவ. நீ அதுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க.. இது எங்கே போய் முடியுமோ?" என்ற பாட்டி எழுந்து தனது அறைக்கு சென்றாள்.

"வேணாம்க்கா." என்று தலை குனிந்த மீரா அதன் பிறகு அதை பற்றி நினைக்கவும் இல்லை.

"மீரா நாங்க கிளம்பட்டுங்களா?" மாலை நேரத்தில் கேட்டாள் மைவிழி.

வேண்டாம் என்று சொல்லதான் மீராவுக்கு ஆசை. ஆனால் அவள் ஆசையை யார் மதிக்கிறார்கள்?

"சரிக்கா!" என்றவளின் தோளை தட்டி தந்துவிட்டு எழுந்து நின்றாள் மைவிழி.

"நீ இங்கே பத்திரமா இருப்பன்னு நம்பி விட்டுட்டு போறோம் மீரா. உனக்கு ஏதாவது ஆனா அப்புறம் நாங்க யாருமே நிம்மதியா இருக்க மாட்டோம். புரிஞ்சி நடந்துக்க." என்று அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பினாள் அம்மா.

இரவு உணவை தயார் ஆகி கொண்டிருந்தது. மீரா சோபாவிலேயே முடங்கி கிடந்தாள். நகைகளை கூட அவள் இன்னும் கழட்டி வைக்கவில்லை.

பாட்டியை அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பாவம் புண்ணியம் என்றுச் சொல்லி தன்னை இந்த பந்தத்தில் பிடித்து வைத்து விட்டாளே என்று மனதுக்குள் திட்டினாள்.

மகிழனின் நினைவில் ஆழ்ந்து சுகமாய் வாழ்வது எப்படிப்பட்ட வரம் என நினைத்துப் பார்த்தாள்.

'இப்ப மட்டும் என்ன கெட்டுச்சி? நீ இனி மகியை எவ்வளவு வேணாலும் நினைக்கலாம்! இந்த கல்யாணத்துல இவனுக்கும் விருப்பம் இல்ல! இவனால உனக்கு எந்த டிஸ்டர்ப்பும் இல்ல. நீ உன் மன உலகில் நிம்மதியா இருக்கலாம். வீட்டுல இருந்திருந்தா கூட யாருக்காவது உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு டார்ச்சர் பண்ணிட்டே இருந்திருப்பாங்க. ஆனா இப்ப அந்த பிரச்சனையும் இல்ல!' என்று நிம்மதியடைந்தாள்.

"டிரெஸ்ஸும் நகையும் அன்கம்பர்டபிளா இல்லையா மீரா? வா போய் சாதாரண டிரெஸ் மாத்திட்டு வந்துடுவ." என்று மீராவை அழைத்தாள் வித்யா.

மீரா தயங்கி எழுந்தாள். குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த வித்யாவின் கணவன் இவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தான். இவளுக்கும் பதில் புன்னகை தர ஆசைதான். ஆனால் முடியவில்லை. அமைதியாக தலை குனிந்துக் கொண்டாள்.

அறை ஒன்றைத் திறந்தாள் வித்யா.

அலங்கரிக்கப்பட்ட கட்டில் ஒன்று ஓரத்தில் இருந்தது. மீராவிற்கு கால்கள் நடுங்கியது.

"இது அகிலனோட ரூம்மா?" என்றாள்.

வித்யா திரும்பிப் பார்த்து ஆமென தலையசைத்தாள்.

"மேலேதான் இருந்தது. ஆனா உனக்காக கீழே மாத்திட்டான்‌." என்றாள்.

ஏனோ மீராவிற்கு அவனைப் பாராட்ட வேண்டும் என்றுத் தோன்றவில்லை.

"உன் டிரெஸ்ஸெல்லாம் அந்த கப்போர்ட்ல இருக்கு." என்று கை காட்டிவிட்டு வெளியே நடந்தாள் வித்யா.

மீரா நெற்றியை பிடித்தாள்.

"தர்மசங்கடம். மகி நீயாவது இப்ப ஹேப்பியா இருப்பன்னு நம்புறேன்‌." என்றபடியே சென்று அலமாரியை திறந்தாள்.

சாதாரண சுடிதார் ஒன்றை தேர்ந்தெடுத்தாள். அவள் அந்த உடைக்கு மாறி விட்டு வந்து கதவை திறந்தபோது வெளியே நின்றிருந்தான் அகிலன்.

மீராவிற்கு திக்கென்று இருந்தது. அனிச்சையாக பின்னால் நகர்ந்துக் கொண்டாள்.

"மகிழனைப் பத்தி கேட்டியாம்." என்றான் ஒரு மாதிரி குரலில்.

அவன் இப்படி பேசும் போதெல்லாம் அவளுக்கு எரிச்சல்தான் வந்தது.

"உங்களுக்கு தேவையில்லாதது அது." என்றவளை மேலும் கீழும் பார்த்தவன் அவளை இடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

அவன் மோதியதால் நடுங்க ஆரம்பித்த உடல் மீண்டும் பழைய நிலைக்கு வர ஐந்தாறு நிமிடங்கள் ஆனது.

அலமாரியை திறந்தவன் மீராவின் நகைகள் அங்கே கிடப்பதை கண்டுவிட்டு அவள் பக்கம் திரும்பினான். அவள் கைகளை இறுக்கியபடி கதவோரம் நின்றிருந்தாள். அவளின் கடித்த உதட்டையும், மூடிய விழிகளையும், நடுங்கும் கரங்களையும் பார்க்கையில் அவனுக்குமே சற்று பரிதாபமாகதான் இருந்தது.

அவனே நகைகளை பெட்டியில் அடுக்கி அலமாரியின் உட்பகுதியில் வைத்து பூட்டினான்.

"சுடிதார் போட்டுட்டு இருக்க.. பட்டு புடவையும், ஆறேழு முழம் மல்லியுமா பர்ஸ்ட் நைட்டுக்கு ரெடியாகி இருப்பன்னு நினைச்சேன் நான்." என்றவனை ஆத்திரத்தோடு திரும்பிப் பார்த்தவள் "நமக்குள்ள அப்படி எதுவும் நடக்க போறது இல்ல.. போட்டிருந்த கன்டிசன் மறந்துப் போயிடுச்சா?" என்றுக் கேட்டாள்.

"இந்த சில நாள்ல மனசு மாறி இருப்பியோன்னு நினைச்சேன். இட்ஸ் ஓகே. நான் ஒன்னும் கண்டிப்பா வேணும்ன்னு கேட்கலையே!" என்றுத் தோளைக் குலுக்கியவன் "ஆனா நம்ம கன்டிசன் பத்தி என் வீட்டுல யாருக்கும் தெரியாது. நீதான் மேனேஜ் பண்ணனும்." என்றான்.

அதிர்ச்சியில் உறைந்தவள் "உன்னை மாதிரி ஒரு சேடிஸ்டை நான் பார்த்ததே இல்ல!" என்றாள்.

சிரித்தபடி அவளருகே வந்தவன் "ஒருமையில கூப்பிட ஆரம்பிச்சிட்ட!" என்றான். அவளின் கழுத்தில் இருந்த தாலியை கையில் எடுத்தவன் "காரணம்‌ இதுதானோ?" எனக் கேட்டான்.

அவன் அருகாமை தந்த நடுக்கத்தையும் தாண்டி எரிச்சல் வந்தது அவளுக்கு.

அவனின் கையை தட்டி விட்டவள் "என் பக்கத்துல வராதிங்க. ப்ளீஸ்.. எனக்கு பயமா இருக்கு!" என்றாள் நடுங்கும் குரலில்.

திகைப்பாக பார்த்தவன் நகர்ந்து நின்றான். "சாரி.." என்றான்.

"என் மேல அவ்வளவு வெறுப்பா?"

"இது வேற.. அந்த பசங்க டச் பண்ணதுல இருந்து.. உங்களுக்கு எதுக்கு டீடெயில். என்னை அமைதியா விடுங்க. எனக்கு அதுவே போதும்." என்றவள் அந்த அறையை விட்டு வெளியே செல்ல எண்ணி திரும்பினாள். ஆனால் அரையாய் சாத்தியிருந்த கதவில் மோதியவள் நிற்க தடுமாறி பின்னால் சாய்ந்தாள்.

விழ இருந்தவளை தாங்கிப் பிடித்தான் அருகில் இருந்தவன்.

அருகாமையே நடுக்கம் தரும். அணைத்தால் எப்படி இருக்கும்? நொடியில் வியர்த்து, அதிகம் நடுங்கி, அவனின் சட்டையையே இறுக்க பற்றி இருந்தவள் சுவாசத்தில் வித்தியாசம் உணர்ந்து மெள்ள கண்களை திறந்தாள்.

"மகிக்கும் உங்களுக்கும் ஒரே வாசம்!" என்றாள் கனவு குரலில்.

"ஒன்னா பிறந்தவங்களாச்சே!" என்றவன் சொல்லி முடிக்கும் முன் மயங்கி விட்டாள் அவள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN