கனவே 18

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சின்ன சின்னதாக மழை துளிகள் தூறிக் கொண்டிருந்தது. மகிழனின் மடியில் படுத்திருந்தாள் மீரா.

படித்துக் கொண்டிருந்தவனின் பார்வை புத்தகத்தில் இருக்க அவனின் கரம் மீராவின் தலையை கலைத்து விட்டுக் கொண்டிருந்தது.

பாட்டி வெள்ளியானால் கோவிலுக்கு செல்வாள் என்பதை அறிந்தே இந்த விடுமுறை வெள்ளியில் இவர்களின் வீட்டிற்கு வந்திருந்தாள் மீரா. இவள் வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நொடியிலிருந்து தூற ஆரம்பித்த மழை இன்னும் விடவில்லை. பேசியவளுக்கு வாய் வலிக்கவில்லை. ஆனால் கேட்ட அவனுக்குத்தான் அவளின் வாயை நினைத்து பரிதாபமாக இருந்தது. அதனாலேயே படுத்துத் தூங்கு என்றுச் சொல்லி அவளை மடியில் உறங்க செய்து விட்டான்.

இவள் அருகே இருக்கையில் பாடங்களை ஒருமுறை படித்தால் கூட அப்படியே நெஞ்சில் நின்றது. இவள் ஒருத்தி அருகே இருந்தால் இந்த உலகத்தையே வளைத்து விடலாம் என்றுக் கூட தோன்றியது.

பின்வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தான் அவன். மழையின் தூறல் லேசாக அவன் மீதும் வீசிக் கொண்டிருந்தது. சுகமாக இருந்தது. தோட்டத்தில் இருந்த மரங்கள் இந்த சிறு மழையில் நனைந்து சொர்க்கத்தை காட்டின.

மீராவை திருமணம் செய்த பிறகு இன்னும் கொஞ்சம் மரங்கள் வைக்க வேண்டும் என்று நினைத்தான்.

மீரா அசைந்தாள். புத்தகத்தை ஓரம் வைத்தான் மகிழன். அவளின் முகம் பார்த்தான்.

"டால்.. மை டால்!" என்று முணுமுணுத்தான். அவளின் கன்னத்தில் இருந்த சிறு மச்சத்தை வருடினான்.

"மகி.." என்றுக் கண் விழித்தவளைக் கேள்வியாக பார்த்தான்.

அவனின் வயிற்றில் முகம் புதைத்தவள் அவனின் முதுகை கட்டிக் கொண்டாள்.

"நாளைக்கு தியேட்டர் போலாமா?" எனக் கேட்டாள்.

"படிக்க வேண்டிய வேலை இருக்கு." என்றவனின் கழுத்தைத் தன் கரங்களால் சுற்றி வளைத்தவள் "ரொம்ப நல்ல பையனா இருக்க நீ.. உன்னை தவிர வேற யாராவது என்னை லவ் பண்ணி இருந்தா புத்தகத்தை படிப்பதை விட்டுட்டு என்னை மட்டுமே படிச்சிட்டு இருந்திருப்பாங்க." என்றாள்.

அவளின் மூக்கோடு தன் மூக்கை உரசியவன் "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே.. நான் உன்னால ஆகணும்ன்னுதான் ஆசைப்படுறேன். சுலபத்துல விழுந்துட்டு அப்புறம் நீதான் என்னைக் கெடுத்தன்னு உன் மேல பழி போட விரும்பல. அவங்கவங்க கட்டுப்பாடு அவங்கவங்க மனசுல இருக்கு. என்னைப் பொறுத்தவரை நீ குழந்தையை போல. பாய் டால்க்கிட்ட முத்தம் தந்துட்டு பதில் முத்தம் கேட்கிற அதே குழந்தை. ஆனா நான் டால் கிடையாது." என்றான்.

"நீ இப்படியே சொல்லி தப்பிச்சிட்டு இரு.. மகனே ஒருநாளைக்கு உன்னை கருணையே இல்லாம களவாட போறேன்." என்றாள் மூக்கு சிவக்க.

சிரித்தபடி அவளின் கரத்தை தன் கழுத்திலிருந்து விலக்கியவன் "அந்த நாளுக்கு நானும் கூட வெயிட்டிங்தான். ஆனா அதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு பேபி!" என்றான்.

மீரா எழுந்து அமர்ந்தாள். "பசிக்குது. சாப்பிடலாம் வா.." என்று அவனை இழுத்துக் கொண்டு ஓடினாள். பாட்டி செய்து வைத்திருந்த சமையலை இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

மீண்டும் அவனை பின் வாசலுக்கு இழுத்து வந்தாள் மீரா.

"வா.. இரண்டு பேரும் மழையில நனையலாம்." அவன் மறுத்தும் கூட அவனை இழுத்து விட்டாள்.

சிறு மழைதான். ஆனாலும் அவளின் ஆட்டம் பெரியதாக இருந்தது. அவனுக்கு அவளின் நடனத்தில் கலந்துக் கொள்ள விருப்பம் இல்லை. ஆனால் அவளை ஒரு நொடி கூட ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவளின் சிறு சிறு அசைவுகளும் கூட அவனை சோதித்துப் பார்த்தது.

'இவளை வச்சிக்கிட்டு கன்னிப் பையனா இருப்பது ரொம்ப கஷ்டம்டா!' என்று நினைத்தபடி வானம் பார்த்தான்.

'ஆனாலும் நல்லா இருக்கு. செம த்ரில்லா இருக்கு. இது மாதிரி சுய பரிசோதனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு கிடைக்காது. அடங்காத காட்டாற்று வெள்ளத்துக்கிட்ட இருந்து தப்பிச்சி ரொம்ப சாதாரணமா நீச்சல் அடிக்கற. நீ கிரேட்ரா மகி!' என்று தன்னையே பாராட்டிக் கொண்டான்.

மழையில் துள்ளியாடிக் கொண்டிருந்தவள் ஓடி வந்து இவனை அணைத்தாள். எதிர்பார்த்திருந்த காரணத்தால் கீழே விழவில்லை இவன்.

"குளிருது.." என்று அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவளுக்கு குளிரவில்லை. தனக்குத் தொல்லையை தர வேண்டும் என்று விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தான். அவளை விலக்கவும் முடியாது. விலக்கி நிறுத்தினால் முகம் சோர்வாள். அருகில் அணைத்திருக்கவும் இயலவில்லை. அவள் முன் தன் தவிப்பை வெளிக்காட்ட விரும்பவில்லை.

மனதை திசை திருப்ப வேண்டி அவளின் தோளிலேயே முகம் புதைத்தான். மழை வாசத்தில் கலந்த அவளின் வாசம் கிறக்கத்தை தந்தது. 'இப்படி ஓராண்டு நின்றாலும் கால் வலிக்குமா' என்று யோசித்துப் பார்த்தான். 'ஆனால் அவளுக்கு வலிக்குமே' என்று அவனே பதிலும் சொல்லிக் கொண்டான்.

உண்மையாக குளிர ஆரம்பித்த பிறகு அவளே அவனை விட்டு விலகிக் கொண்டாள்.

"ஏன்!? இரு!" விலகிச் சென்றவளின் கையை பற்றினான் அவன்.

திரும்பிப் பார்த்தவள் அவன் தன்னை சீண்டுக்கிறான் என தெரிந்து, அவனின் கையை பிடித்து சுற்றியபடி அவனருகே வந்து நின்றாள்.

அவனின் நெஞ்சில் தனது வலதுக் கரம் பதித்தவள் "மாட்டேன்னு நினைச்சியா? ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு வருசம்.. நான் ஒரு யுகமே தாங்குவேன்." என்றாள் புருவம் உயர்த்தி.

மழை நீர் நனைத்த அவளின் இமைகள் அவனின் கவனத்தை திசை திருப்பின. அவளோடு இருக்கையில் இது ஒரு பிரச்சனை. அவளின் விழிகளோ, இதழ்களோ, செவிகளோ.. ஏதோ ஒன்று அவனின் மனதைக் கட்டுப்படுத்த முயன்றுக் கொண்டே இருக்கும்.

"நீ ரொம்ப அழகா இருக்க மகி!" என்றவளின் விழிகளைப் பார்த்தான். ஆசைகள் ஏக்கர் கணக்கில் நிரம்பிய விழிகள் அவை. என் மீது ஏன் உனக்கு இவ்வளவு ஆசை என்றுக் கேட்க துடித்தது அவனின் இதயம்.

"என் பேராசைகளின் குவியல் நீ." என்றான் அவளின் கன்னங்களை கைகளால் அள்ளியபடி.

மீராவின் முகம் சிவந்தது. விழிகள் தானாய் தரை பார்த்தன.

மகிழனுக்கு சிரிப்பு வரும் போல இருந்தது. அவள் எப்போதும் அப்படிதான். வேண்டும் வேண்டும் என்றுத் துள்ளுவாள். ஆனால் அவன் ஆரம்பிக்கும் முன்பே வெட்கத்தில் சுருண்டு விடுவாள்.

அவளை மேலிருந்து கீழாக கவனித்துக் கொண்டு வந்தவன் அவளின் உள்ளங்கை தோல் அதிக ஈரத்தால் சுருங்கியிருப்பது கண்டு அவளை விட்டு விலகி நின்றான். ஆனால் உடனே நெருங்கினான். வெறுமனே விலகினாள் அவளின் நெஞ்சம் உடையும் என்பது அவனின் கணக்கு. அவளின் இடது இமையின் மீது முத்தம் ஒன்றை பதித்து விட்டு மீண்டும் விலகினான்.

"எனக்கும் குளிருது." என்றான்.

அவனை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் மீரா.

பின் தாழ்வார கொடியில் இருந்த துண்டு ஒன்றை எடுத்து அவனின் தலையை துவட்டினாள்.

எம்பி நின்று அவள் தனக்கு செய்யும் சேவகம் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டவன் குனிய வேண்டும் என்று முயலவே இல்லை.

மீரா அவனின் தலையை முடிந்த அளவு துவட்டிய பிறகு அவனின் தாடையை பற்றினாள்.

"பளபளப்பா இருக்க வெட்டி எடுத்த வைரக்கல் மாதிரி. உன் முகம் கூட டிவென்டி போர் கேரட் தங்கமா மின்னுது மகி." என்றபடி அவனின் உதடுகளை நெருங்கினாள்.

"பாட்டி.." என்றபடி அவசரமாக விலகி நின்றான் மகிழன். மீரா துடிக்கும் இதயத்தோடு திரும்பிப் பார்த்தாள். வீடு அப்படியேதான் இருந்தது. "ப்ராடு.." என்றபடி அவனைத் திரும்பிப் பார்த்தவள் கையை ஓங்கினாள். அவளின் கையை பற்றி அவளோடு பின்னங்கழுத்தோடு வளைத்தவன் அவளின் முகத்தை நோக்கி குனிந்தான்.

"அழகு ஆபத்து. ஆசை பேராபத்து." என்றான் தன் உதடுகளை மென்றபடி.

"என்னை விடு." எங்கோ பார்த்தபடி சொன்னவளைச் சிரிப்போடு விட்டான்.

***

அகிலன் வீட்டிற்கு வந்தபோது மீரா தொலைக்காட்சியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

"வெளியே போலாமா?" எனக் கேட்டவனை திரும்பிப் பார்த்தாள். ரிமோட்டை எடுத்து அவன் முகத்தின் மீது வீச வேண்டும் போல அவளுக்கு கோபம் வந்தது.

"சாருக்கு நிஜமான புருசன்னு நினைப்பு போல." என்றாள்.

அகிலன் நக்கலாக அவளருகே வந்தான். மீரா சோபாவில் ஒண்டினாள். அவளை விட்டு சற்று தள்ளி அமர்ந்தவன் "நிஜமான பொண்டாட்டி கூட இவ்வளவு வெட்கப்பட மாட்டா." என்றான்.

பற்களை கடித்தவள் "நேர்மையா ஒரு விசயம் சொல்லட்டா.. உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல. நீங்க பேசினாலே ரொம்ப கடுப்பா இருக்கு." என்றாள்.

உதட்டை பிதுக்கியபடி சுற்றும் முற்றும் பார்த்தவன் "என் பாட்டி காதுல இது விழுந்திருக்கணும். மகளே உனக்கு சமாதி கட்டியிருப்பாங்க." என்றான்.

மீரா முறைத்தாள். "என் புஜ்ஜி குட்டி பாட்டி அவங்க. உன்னோடு சகவாசம் வச்ச பிறகு அவங்களும் வில்லியை போலவே மாறிட்டாங்க!" என்றாள் சோகமாக.

சிரித்தான் அவன். "நீ ரொம்ப க்யூட்டா இருக்க!" என்றான்.

அவளின் மூக்கு மேலும் சிவந்தது. எழுந்தவள் அவனின் அருகே வந்தாள். சிரித்துக் கொண்டிருந்தவனின் மூக்கின் மீது ஒரு குத்து விட்டாள்.

"அம்மா.." அவசரமாக அவன் மூக்கை பொத்திய அதே நேரத்தில் வீட்டுக்குள் ஜோடியாக நுழைந்தார்கள் வசந்தும், ரோகிணியும்.

மீரா அவர்களை கண்டுவிட்டு விழித்தாள். 'மாட்டிக்கிட்டோமே!' என நினைத்தவள் அவசரமாக காரணங்கள் யோசித்தாள்.

"ரா.. ராக், பேப்பர், சிசர் கேம் விளையாடிட்டு இருந்தோம் அத்தை. இவர் தோத்துட்டாரு!" என்று அவன் புறம் கையை காட்டினாள்.

மூக்கை தேய்த்துக்கொண்டே நிமிர்ந்தவன் "அது ராக் இல்ல ஸ்டோன்." என்றான். தன் காலை எடுத்து அவன் காலின் மீது வைத்து அழுத்தியவள் "எல்லாம் ஒன்னுதானே?" என்றாள் பொய் சிரிப்போடு பற்களை காட்டியபடி.

வசந்த் சிரித்தபடியே அவர்களை தாண்டி சென்றார். ரோகிணி இவர்கள் சொன்னதை காதில் வாங்காதவளாக "மணியம்மா.. காப்பி கொண்டு வாங்க!" என்றபடியே தனது அறை நோக்கி நடந்தாள்.

"பொய் சரளமா வருது‌. ரொம்ப வருச பழக்கம் போல!" என்றவனின் காதை பற்றினாள்.

"நான் ரொம்ப கெட்ட பொண்ணு. என்கிட்ட உங்க விளையாட்டை காட்டாதிங்க." என்று எச்சரித்தாள்.

"பயந்துட்டேன்." நாக்கை சுழற்றியபடிச் சொன்னவனின் மீசையை பிடித்து வேகமாக இழுத்து வைத்தாள்.

"அம்மா.." மீண்டும் கத்தியவன் தங்களைத் தாண்டிச் சென்ற மணியம்மா முகத்தை அந்த பக்கம் திருப்பியபடி சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டுச் செல்வதைக் கண்டு முகம் சிவந்தான்.

"ஏன்டி என்னை கொல்லணும்ன்னு முடிவே பண்ணிட்டியா?" என்றவன் சொல்லி முடிக்கும் முன் அவன் வாயின் மீது அடியை விட்டாள்.

"டி போட கூடாது." என்றாள் விரல்களை நீட்டி எச்சரித்தபடி.

"மகிழுக்கு லக்கு. அதான் அவன் தப்பிச்சிட்டான்."

பொய்யான கோபம் நிரம்பியிருந்த அவளின் முகம் சட்டென்று மாறிப் போனது. உணர்ச்சிகளை தொலைத்தவளாக அவனை விட்டு விலகினாள். அவள் தூரம் செல்லும் முன் அவளின் கையை பற்றினான்.

இவ்வளவு நேரம் அவனின் நெருக்கத்தையே யோசிக்காதவளுக்கு இப்போது கரம் நடுங்கியது.

அவளின் மாற்றத்தை கவனித்தவன் "நீயா நெருங்கிட்டு நீயா விட்டுப் போகாதே.. நான் நல்லவன் கிடையாது. பின் விளைவுகளை சந்திக்க தைரியம் இருந்தா மட்டும் இனி என்னை நெருங்கு." என்றான்.

மீராவுக்கு முகத்தில் இருந்த மொத்த ரத்தமும் வடிந்து விட்டது. அவள் கோபத்தில் நெருங்கினாள். ஆனால் அவன் அதற்கும் இப்படி ஒன்று கற்பிப்பான் என்று தெரிந்திருந்தால் சோபாவின் அந்த மூலையிலேயே சுருண்டிருப்பாள்.

"சாரி.." என்றவளுக்கு கண்களும் கூட கலங்கி விட்டது. அவளின் கையை தள்ளி விட்டுவிட்டு அவளை இடித்தபடி தாண்டி நடந்தான். அவன் இடித்ததில் தடுமாறியவள் காலை ஊன்றி நேராய் நிற்பதற்கு சில நொடிகள் பிடித்தது.

மீரா உதட்டை கடித்தபடி அதே இடத்தில் சில நிமிடங்கள் நின்றாள். அழுகை பொங்கி வந்தது. மகிழனை நினைத்தாள். அவன் இருந்திருந்தால் தனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்குமா என்று வெம்பினாள். அவன் மீது கோபமாக வந்தது. அதே சமயம் தன்னைப் போல ஒருத்தியை அவன் மட்டும் எப்படி விரும்புவான் என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

இரவு உணவை உண்ண செல்லவில்லை அவள். அறையில் இருந்த ஜன்னலின் ஓரம் நாற்காலியை போட்டு அமைதியாக அமர்ந்துக் கொண்டாள். வானத்தில் பார்த்த இடத்திலெல்லாம் மகிழனின் முகம்தான் தெரிந்தது.

"இன்னைக்கும் தூங்கிட்டாளா?" இரவு உணவை பரிமாறியபடி அம்மா கேட்டபிறகே அவள் இங்கே இல்லை என்பதை அறிந்தான் அகிலன்.

"ஒரு நிமிசம். வந்துடுறேன்." என்றவன் அறைக்குள் வந்தான். முட்டிக்காலை கட்டியபடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் அருகே வந்தான்.

"சாப்பாட்டு டைம் நைட் எட்டு மணிக்கு!" என்றான்.

மீரா வானம் பார்த்தபடியே சரியென்று தலையசைத்தாள்.

"சாப்பிட வரலையா?" அவனே சில நொடிகள் காத்திருந்து விட்டுக் கேட்டான்.

"வேணாம்.‌ பசிக்கல." என்றவள் அவன் புறம் திரும்பியும் பார்க்கவில்லை.

"நாளைக்கு உனக்கு இப்படி பசிக்காம போனா அதை முன்னாடியே சொல்லு. ஓர் ஆள் சாப்பாடா இருந்தாலும் சாப்பாடு வேஸ்டா போறது எங்க வீட்டுல யாருக்கும் பிடிக்காது." என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.

மீராவின் விழிகளில் மீண்டும் கண்ணீர் வழிந்தது. அக்காவையும் அம்மாவையும் நினைத்துக் கொண்டாள். "சாப்பிட வா!" என்றுக் கெஞ்சி, கொஞ்சி அழைத்தவர்கள் இனி தன்னருகில் இருக்க மாட்டார்கள் என்றுப் புரிந்து வேதனைக் கொண்டாள். இங்கே தான் சாப்பிடா விட்டாலும் கூட யாருக்கும் வருத்தம் கிடையாது என்பதையும் புரிந்துக் கொண்டாள்.

அகிலன் வந்து சொன்னது கேட்டு அவனை முறைத்தாள் ரோகிணி.

"அவ வேணாம்ன்னு சொன்னா விட்டுட்டு வந்துடுவியா? அதட்டியோ கெஞ்சியோ கூட்டி வந்திருக்கலாம் இல்ல?" எனக் கேட்டாள்.

அகிலன் தன் தட்டில் உணவை கொட்டிக் கொண்டான்.

"அவ வயிறு. அவ பசி. அவளுக்கு தேவைன்னா அவதான் சாப்பிடணும்.." என்றான் விட்டேறியாக.

அவன் உணவை முடித்துக் கொண்டு எழுந்தபோது பாட்டி பால் டம்ளரை கொண்டு வந்து வைத்தாள்.

அவன் எடுத்து கடகடவென குடிக்கவும், நெற்றியில் அடித்துக் கொண்ட பாட்டி மீண்டும் ஒரு டம்ளர் பாலை கொண்டு வந்து வைத்தாள்.

"அவளுக்குடா!" என்றாள்.

தன் வயிற்றை வட்டமாக தேய்த்து விட்டவன் அந்த பாலையும் குடித்து முடித்தான்.

பாட்டி முறைத்தாள்.

"ஒரு நாளாவது பட்டினியா கிடந்தாதான் பசி, சாப்பாடுக்கெல்லாம் மரியாதை தரணும்ன்னு அவளுக்கும் புரிய வரும். அவங்க வீட்டுல நல்லா செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்காங்க." என்றான் எரிச்சலோடு.

ரோகிணியும் வசந்தும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"வயிறு புல்லா இருக்கு!" ஏப்பம் விட்டபடியே அங்கிருந்துக் கிளம்பினான்.

அவன் வந்தபோதும் மீரா அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். அவளை கண்டுக் கொள்ளாதவன் ஒரு தலையணையும் போர்வையையும் எடுத்து தரையில் எறிந்தான்.

மீரா திரும்பிப் பார்த்தாள்.

"டெய்லியும் சோபாவுல தூங்க முடியாது என்னால. நான் ஒரு நாள் தூங்கினா நீ ஒரு நாள் தூங்கு. நீயே டெய்லியும் சோபாவுல தூங்கினா கூட சந்தோசம்தான்.!" என்றான்.

மீரா சரியென்று தலையசைத்தாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. அகிலனின் பார்வை சோபாவிற்குதான் முதலில் சென்றது. ஆனால் சோபா காலியாக கிடந்தது. பதட்டமாக எழுந்தவன் சுற்றியும் பார்த்தான். ஜன்னலருகே நாற்காலியிலேயே உறங்கி விட்டிருந்தாள் மீரா. அவன் எடுத்து எறிந்த போர்வையும் தலையணையும் தரையிலேயே கிடந்தன.

"உடம்பு முழுக்க கொழுப்பு." என்றபடி எழுந்தவன் போர்வையை எடுத்து உதறி அவள் மீது வீசிவிட்டு குளியலறை நோக்கி நடந்தான்.

அவன் வந்தபோதும் மீரா அப்படியேதான் இருந்தாள்‌. தலையை கோதியவன் ஈர விரல்களை அவளின் முகத்தின் மீது உதறினான். பதறி எழுந்தவள் அவனைக் கண்டுவிட்டு நேராய் எழுந்து அமர்ந்தாள். முகத்தை துடைத்தவள் ஈரத்தை கண்டுவிட்டு சந்தேகமாக அவனைப் பார்த்தாள்.

"நேத்தே பாட்டி உன்னை திட்டினாங்க. அதனாலதான் பாவம் பார்த்து எழுப்பி விட்டேன்." என்றவன் மீண்டும் தலை கோதி கையை உதறி விட்டு நகர்ந்தான்.

"கொடுமை." என்றபடி இறங்கி நின்றாள். போர்வையை பார்த்தாள். அவள் கேட்கும் முன்பே "உன் நெக் தெரிஞ்சது. அதனாலதான்." என்றான்.

திகைத்தவள் தரையில் கிடந்த துப்பட்டாவை எடுத்து அவசரமாக அணிந்துக் கொண்டாள்.

அவனை முறைக்க முடியவில்லை அவளால். கடுப்பின் அளவு அதிகமாக இருந்தது.

அன்று அவனும் மற்றவர்களும் வெளியே கிளம்பிய பிறகு மீரா அந்த வீட்டை சுற்றிப் பார்த்தாள். பாட்டி தனது அறையில் ஏதோ ஒரு இதிகாச புத்தகத்தோடு அமர்ந்து விட்டிருந்தாள்.

மாமனார் மாமியார் பயன்படுத்தும் அறையையும், பாட்டியின் அறையையும் திறக்கவில்லை மீரா. மற்ற அறைகளை பார்த்தாள். மகிழனின் அறை எதுவாக இருக்கும் என்று தேடினாள்.

கீழே எந்த அறையுமே அவனுடைய அறையாக தெரியவில்லை. யோசித்து தயங்கிவிட்டு மாடி ஏறினாள். கால் வலித்தது. பாலியல் வன்முறைக்கு பிறகு அதிகம் நடக்கவில்லை அவள். கால்களின் இயக்கம் மோசமாகி விட்டிருந்தது. படி ஏறுவது சிரமமாக இருந்தது. ஆனால் மகிழனின் அறையை தேடும் ஆசையில் எப்படியோ ஏறி விட்டாள்.

மாடியில் இருந்த முதல் அறையை திறந்தாள். வித்யாவின் அறை அது. அவளுடைய புகைப்படம் பெரியதாக சுவரில் இருந்தது.

கதவை அப்படியே மூடிவிட்டு அடுத்த அறைக்கு சென்றாள். பூட்டியிருந்தது. திறக்க முயன்று தோற்றவள் அதற்கு அடுத்ததாக நேர் எதிரில் இருந்த அறையை திறந்தாள். அவள் தொட்டதும் கதவு திறந்துக் கொண்டது. ஹாலில் அன்றுப் பார்த்த மகிழனின் புகைப்படம் தரையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. மீரா அவசரமாக உள்ளே நுழைந்து கதவை சாத்தினாள்.

"மகி.." மகிழ்ச்சியாக இருந்தது. அவனையே பார்த்தது போல இருந்தது.

தன்னால் முடிந்த அளவு வேகமாக நடந்தாள். கால் சரியாய் இருந்தால் ஓடி இருப்பாள். அவனின் புகைப்படத்தின் முன் மண்டியிட்டவள் புகைப்படத்தை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டாள். முத்தங்களை வாரி வழங்கினாள்.

"மகி.." புகைப்படத்தை வருடியபடி சாய்ந்து அமர்ந்தாள். கண்ணீர் பொங்கியது.

அன்று இரவு யாரும் அழைக்காமல் அவளே இரவு உணவிற்கு வந்து அமர்ந்து விட்டாள். நேற்றைய பட்டினி புத்தி தந்து விட்டது போல என்று நினைத்தான் அகிலன்.

அவளின் நடையில் இருந்த மாற்றத்தையும் கவனித்தான் அவன்.

இரவில் பற்களைத் துலக்கி விட்டு அறைக்குள் நுழைந்தவன் சோஃபாவில் அமர்ந்திருந்தவளை கண்டு அதிர்ந்தான்.

மகிழனின் சட்டை ஒன்றை அணிந்துக் கொண்டிருந்தாள் அவள். காலர் பட்டனை போட்டுக் கொண்டு நிமிர்ந்தவள் "நான் இனி இந்த சோபாவுலயே தூங்கிக்கிறேன். என்னால உங்களுக்கு சிரமம் வேணாம்." என்றாள்.

அவன் அவள் சொன்னதை காதில் வாங்கவில்லை. அவனின் பார்வை அவளின் காலில் இருந்தது.

கோபத்தோடு அருகே வந்தவன் அவளின் முன் மண்டியிட்டான். அவளின் பாதத்தை எடுத்து தன் மடி மீது வைத்தான். அவன் எதிர்ப்பார்த்திருந்தது போலவே அடிப்பட்ட கால் வீங்கிப் போயிருந்தது.

தன் பாதத்தை பின்னுக்கு இழுக்க முயன்றாள் மீரா. ஆனால் அவனின் பிடி இரும்பாக இருந்தது.

"எ.. என்னை விடுங்க." என்றாள்.

"முட்டாளா நீ?" அவன் கர்ஜிக்கவும் அவளின் உடலில் நடுக்கம் கூடியது.

"இல்ல நான் உனக்கு முட்டாள் மாதிரி தெரியறேனே? நீ மாடி ஏற கூடாதுன்னுதானே நான் ரூமை கீழே மாத்தி இருந்தேன். உனக்கு என்ன அவ்வளவு திமிர்? அவ்வளவு அகங்காரம்? இந்த சட்டை.." பற்களை அறைத்தான். "உன் காலை விட இந்த சட்டைதான் உனக்கு முக்கியமா போயிடுச்சா?" என்றான்.

அவனின் கோபம் கண்டு பயந்து கண்களை மூடிக் கொண்டவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"ஏதாவது சொன்னா இப்படி அழுது நடி." என்றவன் அவளை விட்டுவிட்டு சென்று அலமாரியை திறந்து ஆயின்மென்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தான்.

மீரா இன்னமும் கண்களை திறக்கவேயில்லை. அவளின் காலுக்கு மருந்திட்டவன் "உன்னை மாதிரி ஒரு பொண்ணை நான் எங்கேயும் பார்த்ததே இல்ல." என்றுவிட்டு அவளை விட்டு நகர்ந்தான்.

அவள் கண்களைத் திறந்தபோது இரவு விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அகிலன் கட்டிலில் படுத்திருந்தான்.

மீரா நடுங்கும் கரங்களால் கண்களை துடைத்துக் கொண்டாள். சட்டையை நுகர்ந்தபடி சோபாவில் சாய்ந்தாள்.

'மகி..' என்று அரற்றியது அவளின் மனம்.

'மீரான்னு எங்க அப்பா எனக்கு பேர் வச்சிருக்கவே கூடாது. மாற்றான் கட்டிய தாலியை கழுத்தில் வாங்கிய பிறகும் மனதில் உன்னோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். ஒரு காலத்துல இதையெல்லாம் கேவலமா நினைச்ச எனக்கே இந்த வாழ்க்கையை விதி அமைச்சி கொடுத்துடுச்சி..' என்று ஆறாக கண்ணீர் வடித்தாள்.

அடுத்தடுத்த நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தது. மீரா அறைக்குள்ளேயே அடைந்துக் கிடந்தாள். மகிழனின் சட்டைகள் ஐந்தாறு அவளிடம் இருந்தது. அவள் வாழ அதுவே போதுமானதாக இருந்தது. அந்த அறையை விட்டு வெளியே சென்றால் பாட்டி தன்னை உயிரோடு கொளுத்தி விடுவாள் என்று எண்ணியவள் இந்த சட்டையை சுதந்திரமாக அணிய வேண்டியே அறைக்குள் இருந்தாள்.

"புருசன் இருக்கும்போது கொழுந்தனார் சட்டையில் வாசம் பிடிக்கறவ நீயாதான் இருப்ப." இரண்டு நாட்களுக்கு பிறகு கேலியாக சொன்னான் அகிலன்.

பற்களை கடித்தாள். "நீங்க என்னை வேணும்ன்னே வெறுப்பேத்துற மாதிரி இருக்கு." என்றாள்.

மொத்தமாக உதடு பிதுக்கியவன் "நாளைக்கு வெளியே போகலாமா?" எனக் கேட்டான்.

"கண்டிப்பா நீங்க பைத்தியம்தான்!" என்று அவள் சொல்லவும் கலகலவென சிரித்தான். மீரா அவனைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டாள். அந்த சிரிப்பில் இடறி விழுவது போல மோசம் ஏதும் இல்லை என்றுத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

"என் பிரெண்ட்ஸ் சிலர் நம்ம கல்யாணத்துக்கு ஹனிமூன் டிக்கெட்ஸ் பிரசென்ட் பண்ணி இருக்காங்க. அங்கேயாவது போலாமா?" எனக் கேட்டான்.

பயத்தோடு இடம் வலமாக தலையசைத்தவள் அதற்கு அடுத்து வந்த நாட்களில் அவனோடு பேசவே பயந்தாள். அவன் வந்தாலே ஏதாவது வேலையிலோ, இல்லையென்றால் புத்தகம் படிப்பதிலேயோ ஆழ்ந்து விடுவாள்.

அகிலன் அவளின் விலகலை கண்டும் காணாதவனாக இருந்தான்.

"என் பெரியம்மா நம்ம வீட்டுக்கு வர போறாங்க.." என்றாள் ரோகிணி அன்று இரவு.

அகிலன் குழப்பத்தோடு புருவம் உயர்த்தினான்.

"எந்த பெரியம்மா?" எனக் கேட்டான்.

"குப்பாயி.. உனக்கு அவ்வளவா தெரியாது. நாங்க பார்த்தே பத்து வருசத்துக்கு மேல ஆச்சி!" என்ற வசந்த் மனைவி பக்கம் திரும்பினார்.

"நிஜமாவே அந்த பெரியம்மா நம்ம வீட்டுக்கு வேணுமா? அவங்க சாங்கியத்துலயே உருவானவங்க. நீ என் பக்கத்துல உட்கார்ந்தா கூட புருசனுக்கு மரியாதை தர மாட்டேங்கிறன்னு உன்னையே திட்டுவாங்க." என்றார் அவர் கவலையாக.

ரோகிணி சிரித்தபடி கணவனின் தோளில் அடித்தாள்.

"அவங்க இப்ப அப்படி இல்லப்பா. இத்தனை வருசத்துல மாறி இருப்பாங்க. அவங்க மருமகளோடு ஏதோ சண்டையாம். சன்னியாசம் போறேன்னு கிளம்பிட்டாங்களாம். அண்ணன் என் ஞாபகம் வந்து போன் நம்பர் தேடி எனக்கு போன் பண்ணான். கொஞ்ச நாள் இங்கே இருக்கட்டுமான்னு கேட்டான். எனக்கு பாவமா இருந்தது. அதனாலதான் சரின்னு சொல்லிட்டேன். என்ன இருந்தாலும் என்னை சின்ன வயசுல பாசமா பார்த்துக்கிட்டவங்கப்பா." என்றாள்.

வசந்த் "உன் இஷ்டம்.. ஆனா அவங்க வந்த பிறகு நீ புது பொண்ணு மாதிரி என்கிட்ட பழகினன்னா கடுப்பாகிடுவேன்." என்று எச்சரித்தார்.

ரோகிணி சிரிப்போடு சரியென்று தலையசைத்தாள்.

வரும் முன்பே மாமனாரை இப்படி பயமுறுத்தும் பாட்டி நேரில் எப்படி இருப்பாள் என்று யோசித்தாள் மீரா. ஆனால் அந்த பாட்டியின் வரவு மாமனாரை விடவும் தனக்குதான் அதிக கஷ்டத்தை தரும் என்று அப்போது அவள் அறியவில்லை‌.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN