கனவே 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அகிலன் அலுவலகம் செல்ல வேண்டி தயாராகிக் கொண்டிருந்தான்.

"நான் வித்யா அக்கா ஸ்கூலுக்கு போகணும்!" என்றாள் மீரா.

அகிலன் ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தான். அவளின் இந்த சிறு மாற்றம் அவனுக்குள் புத்துயிர்ப்பை தந்தது.

"ஏன்?" அவளுக்கு மாற்றம் தேவை என்று தெரிந்திருந்தும் கேட்டான்.

"இங்கே தனியா இருக்க போர் அடிக்குது. மகியும் இல்ல!" தரைப் பார்த்துச் சொன்னவள் "நீங்க வில்லன் போலவே நடந்துக்கிறிங்க.. மகியோட அண்ணன்.. ஆனா பிரெண்டா கூட உங்களை நினைக்க முடியல. நானும் அவனும் சோல் மேட்ஸ்ன்னா நீங்களும் நானும் ஜென்ம ஜென்மமா எதிரியா இருப்போம் போல! வித்யா அக்கா கூட பேசும்போது கொஞ்சம் நல்லா இருந்தது. அதுதான். அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணலாமேன்னு!" என்றாள்.

பேன்ட் பெல்டை போட்டுக் கொண்டிருந்தவன் அதை விட்டுவிட்டு இவளருகே வந்தான். மீரா அவனின் நெருக்கம் கண்டுப் பயந்து ஓரடி பின் நகர்ந்தாள். அவளின் தோளைப் பற்றி நிறுத்தினான் அவன். கண்களில் சிறு கோபமும், ஏமாற்றமும் இருந்தது அவனுக்கு.

தலை முதல் கால் வரை நடுங்கினாள். அவன் கண்டுக் கொள்ளவே இல்லை.

"வில்லன் மாதிரி நடந்துக்கிறேனா?" ஆச்சரியமாக கேட்டவன் "நான் எனக்குத் தெரிஞ்சி வில்லன் போல இல்ல. ஆனா உனக்கு எப்படி பிடிக்கும்ன்னு சொல்லு. அது மாதிரி இருக்க டிரை பண்றேன். ஆப்டர் ஆல் யூ ஆர் மை வொய்ப். உனக்காக இதை கூட செய்ய மாட்டேனா?" எனக் கேட்டான் ஒருமாதிரி கொஞ்சும் குரலில்.

மீராவுக்கு எரிச்சலாக வந்தது. அவனின் அருகாமை தந்த பயத்தால் நடுக்கம். அவனின் வாசம் தந்த மகிழனை பற்றிய நினைவுகள். எதற்கோ அடி போட முயலும் அவனின் ஆர்வம். கணவன் என்ற பெயரில் அவன் எடுத்துக் கொள்ளும் உரிமை என்று எல்லாம் சேர்ந்து அவளை வாட்டி எடுத்தது. இப்படியே சென்றால் மகிழனுக்கு மறுமுறையும் துரோகம் செய்து விடுவோமோ என்று பயந்தாள்.

மகிழனுக்கு திருமணம் ஆனதை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை அவள். என்ன ஆனாலும் அவன்தான் தன் காதலன், கணவன் என்று நினைத்தாள்.

ஆனால் இவனோடு இருக்கவும் பயமாக இருந்தது. இவன் தன் மீது கொண்ட ஆர்வம் தான் மகிழன் மீது கொண்ட ஆர்வத்தை விடவும் அதிகமாக இருப்பது கண்டு பயந்தாள். எங்கே இவனின் ஆர்வத்திற்கு இளகி விடுவோமோ என்று கலங்கினாள். தனது நேர்மைக்கும், காதலுக்கும் துரோகம் செய்ய கூடாது என்று நினைத்தாள்.

"பலமான யோசனை!? உன்னோட டிமான்ட்ஸ் அவ்வளவு பெருசா?" எனக் கேட்டவனிடம் மறுப்பாக தலையசைத்தவள் "எ.. என்னை நீங்க அமைதியா விட்டிங்கன்னா போதும். இப்படி உரிமை எடுத்துக்காம இருந்தா போதும். நீங்க மகியோட அண்ணன். உங்களை வெறுக்க நினைக்கல நான். அதே மாதிரி ஜென்மமே ஆனாலும் உங்களை கணவனவோ காதலனாவோ என்னால பார்க்கவும் முடியாது. நாம நல்ல பிரெண்ட்ஸா இருக்கலாம். நீங்க எப்படி வேணாலும் இருங்க. ஆனா என்னை மட்டும் டச் பண்ணாதிங்க. சிம்பிள்தானே?" என்றாள்.

சிரிப்போடு அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.

"அழகான பொண்டாட்டியை கட்டி வச்சிக்கிட்டு ஊர் மேயணும்ன்னு சொல்ற.. இட்ஸ் நாட் பேர் பேபி.." என்றான். மீராவின் விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டியது.

அழகாய் இருப்பதற்காக ஒரு காலத்தில் பெருமைப்பட்டவள், கர்வப்பட்டவள் இன்று அதே அழகிற்காக வருத்தப்பட்டாள். அழுதாள்.

"ஒரு பொண்ணு அழகா இருக்க கூடாதா? என்னை ரேப் பண்ணவங்களுக்கும் உங்களுக்கும் நடுவுல என்ன வித்தியாசம்.? அவங்க பிரெண்ட்ஸ்ன்னு சொல்லி ஏமாத்தினாங்க. நீங்க கழுத்துல ஒரு கயிறைக் கட்டி வான்னு கூப்பிடுறிங்க! இதுவே உங்க தங்கச்சிக்கு இப்படி ஒன்னு நடந்திருந்தா அப்பவும் இப்படிதான் கொடுமை பண்ணியிருப்பிங்களா? லவ் பண்ணது தப்புன்னு சொல்லி என்னைச் சுத்தி இருக்கும் எல்லோரும் என்னை விரட்டுறாங்க. நான் லவ் பண்ணது பிடிக்கலன்னு என் கிளாஸ்மேட்ஸே என்னை ஒதுக்கினாங்க. ஹராஸ்மென்ட் பண்ணாங்க. என் மகி என்னைப் பிடிக்கலன்னு விட்டுப் போனதும் என் பேமிலியே என்னை திட்டித் தீர்த்தாங்க. நான் லவ் பண்ணதுதான் எனக்கு ரேப் நடக்கவும் காரணமா இருந்தது. உங்களை நான் கட்டிக்கவும் அதே காதல்தான் காரணம்.." என்றவள் அழுகை அதிகமாக வரவும் முகத்தை மூடிக் கொண்டாள்.

"லவ் பண்ண கூடாதா? இல்ல எனக்கெல்லாம் லவ் வர கூடாதா? என் மகி எப்படி இருப்பான்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க பார்த்த மகியும், நான் பார்த்த மகியும் ஒன்னுக் கிடையாது. ஹீ இஸ் எ காட் டூ மி. என் சேவியர். என் பேபி. என் டால். மை லைஃப். மை யுனிவர்ஸ் அவன். சாப்பாட்டுல டேஸ்ட் இல்லன்னாலும் கூட அவனோடு பேசிட்டு சாப்பிட்டா மொத்த டிபனும் காலியாகிடும். அவனோடு பல கிலோமீட்டர் நடந்தாலும் எனக்கு கால் வலிக்காது. என் லவ் தப்புன்னு மொத்த உலகமும் சொல்லுது. விதியும் அப்படி சொல்லிதான் அவனை என்கிட்ட இருந்து பிரிச்சி வந்தது. இங்கே இருந்திருந்தா என் மகியும் கூட அதேதான் சொல்லியிருப்பானோ என்னவோ? ஆசை அதுவாதான் வந்தது. ஆசை ஏன் எப்படி வந்ததுன்னு எனக்குமே தெரியல. ஆனா வந்துடுச்சே.." என்றாள் அழுகையின் இடையே.

அகிலன் அழுதவளைத் தன்னோடு அணைத்தான். அவசரமாக விலகி நின்றுக் கொண்டாள் மீரா.

கதவைப் பார்த்தாள். மூடியிருந்தது. யோசிக்காமல் அவனின் காலில் விழுந்தாள்.

"ப்ளீஸ்.. என் பக்கத்துல வராதிங்க. என்னால முடிய மாட்டேங்குது. உடம்பு உதறுது. இதயம் படபடன்னு அடிச்சிக்குது. அதையெல்லாம் தாண்டி என் மனசு முழுக்க மகி. உங்களுக்கு புரியலையா?" எனக் கேட்டாள்.

நின்றிருந்தவன் சிலையாக இருந்தான்.

மீரா அழுதுக் கொண்டே இருந்தாள்.

"ஓகே.. " அவன் சொன்னதும் அவசரமாக நிமிர்ந்தாள்.

"நான் உனக்கு டைம் தரேன்!" என்று அவன் சொல்லவும் அவளின் முகம் வாடி விட்டது.

"பர்ஸ்ட் நைட் அன்னைக்கு சில மனைவிகள் புருசன் கால்ல விழுவாங்க. ஆனா நீ பர்ஸ்ட் நைட்டே நடக்க கூடாதுன்னு என் கால்ல விழற.. நடக்கட்டும். எல்லாம் உன் இஷ்டப்படியே நடக்கட்டும்." என்றான்.

மீரா கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவன் தரும் நேரம் இந்த ஜென்மத்திற்குள் முடியாது என்று நினைத்தாள்.

எழுந்து நின்றவளை சலிப்போடு வெறித்தவன் "போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா.. இப்படியே போனா அ.. வித்யா நிறைய கேட்பா.." என்றான்.

மீரா தயாராகி வந்தபோது இவனும் தயாராகி இருந்தான்.

இவன் வருவதற்குள் வசந்த் கிளம்பி விட்டிருந்தார்.

அகிலன் காரை எடுத்ததும் பின்னால் சென்று அமர முயன்றாள் மீரா.

"பரவால்ல முன்னாடி வா. நான் ஒன்னும் உன்னை கடிச்சி தின்னுட மாட்டேன்!" என்றான்.

இவனோடு வம்பு வளர்க்கவே பிடிக்கவில்லை. அதனாலேயே அமைதியாக வந்து அமர்ந்தாள். பயமாக இருந்தது. ஜன்னலின் வழியே பார்த்தபடி ஒடுங்கி அமர்ந்துக் கொண்டாள்.

அகிலன் அடிக்கடி அவளை திரும்பிப் பார்த்தான்.

"மீரா.." என்றான்.

திரும்பிப் பார்த்தவளிடம் "அழகா இருக்க நீ!" என்றான்.

மீரா பற்களைக் கடித்தாள். 'ஆண்டவா இந்த லூசுக்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தி விடுப்பா!' என்று வேண்டினாள்.

"உன் மச்சம் கூட சூப்பர்." என்றான்.

செவிடு போல அமர்ந்திருந்தாள் அவள்.

வித்யாவின் பள்ளி வந்ததும் காரை நிறுத்தினான் அகிலன்.

"அவக்கிட்ட சொன்னா எப்ப வேணாலும் உன்னை வீட்டுக்கு அனுப்பி வைப்பா. இல்லன்னா ஈவ்னிங் வரை வெயிட் பண்ணு. நானே வந்து பிக்அப் பண்ணிக்கிறேன். அவங்க மாமியார் ஒரு மாதிரி. அவளுமே ஒரு மாதிரிதான். சரியான அளவுல மரியாதைக் கொடுத்து நடந்துக்க.. ஏதாவது அன்கம்பர்டபிளா பீல் பண்ணா எனக்குப் போன் பண்ணு!" என்றான்.

மீரா இறங்கி நின்றாள். அவன் கையசைத்தான். இவள் கண்டுக் கொள்ளாமல் அந்த காம்பவுண்ட் கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே நடந்தாள்.

அழகாய் பல வண்ணங்களில் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது அந்த இடம். சிறு கட்டிடம்தான். ஆனால் வாசலும் தோட்டமும் பெரியதாக இருந்தது. தோட்டத்தில் சிறு சிறு ஊஞ்சல்களும், விளையாட்டு பொருட்களும் இருந்தன. வண்ணமயமான பூச்செடிகளும் இருந்தன.

குழந்தைகளின் சிறு மணி குரல்கள் அந்த கட்டிடத்தின் உள்ளிருந்து வந்துக் கொண்டிருந்தன.

மீராவின் இதயம் லேசாக இருந்தது. இந்த இடத்தைப் பார்த்த உடனே பிடித்து விட்டது.

"மீரா.." யாரோ அழைப்பது கண்டு திரும்பினாள். நான்கடி தள்ளி அரை வயது பெண்மணி ஒருவர் அவளைப் பார்த்து நின்றிருந்தாள்.

மீரா மேலும் கீழுமாக தலையசைத்தாள்.

"நான் மாரி. உன் நாத்தனாருக்கு மாமியார்." என்றாள் அவள்.

"வணக்கம்மா!" கை கூப்பினாள் மீரா.

"நல்லா இருக்க.. அந்த பையனுக்கு பொருத்தம்தான்." என்றாள். மீரா தரைப் பார்த்தாள்.

"வா உள்ளே போகலாம்." அவளின் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் அவள்.

இருபது குழந்தைகள் இருந்தார்கள். அவர்களோடு மூன்று வயதான வித்யாவின் குழந்தையும் இருந்தான்.

குழந்தைகளுக்கு இடையே அமர்ந்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த வித்யா இவர்கள் புறம் திரும்பினாள்.

"ஹேய்.. மீரா.. இங்கே வா!" என்று அழைத்து தன் அருகே அமர வைத்தாள்.

குழந்தைகள் மீராவை பார்த்து புன்னகைத்தன.

"எப்படி வந்த?" வித்யாவின் கேள்விக்கு பதிலை சொன்னாள் மீரா.

"எல்லாம் சீக்கிரம் சரியா போயிடும் மீரா!" என்று கையை அழுத்தி தந்தாள் அவள்.

எல்லோருமே அதைதான் சொன்னார்கள். ஆனால் எப்படி சரியாகும்? தான் கற்பென என்னும் கன்னிமை தன்மை திரும்ப வருமா என்று எண்ணினாள். மகிழனின் திருமணம் இல்லையென்று ஆகி அவன் தன்னோடு வருவானா என்று எண்ணினாள்.

எதுவும் சரியாகாது. எல்லாரும் ஆறுதல் என்ற பெயரில் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தவள் அதை வெளியே சொல்லாமல் தனக்குள் மட்டும் வெந்துக் கொண்டாள்.

குழந்தைகள் விளையாடினார்கள். கொஞ்ச நேரம் தூங்கினார்கள். சிலர் பொம்மைகளோடு நேரம் கடத்தினார்கள். அனைவருமே அழகாய் இருந்தார்கள்.

வித்யாவின் பையன் ரோசன் மீராவோடு ஒட்டிக் கொண்டான். அத்தை என்று அவனே வந்து மடி ஏறினான். பிறகு இறங்கவேயில்லை.

அலுவலகம் செல்லும் பெற்றோர் விட்டுச் செல்லும் குழந்தைகள் அவர்கள். மாலை வரையிலுமே இந்த பள்ளி இருக்கும். அதனால் மீராவுக்கும் பொழுது நன்றாக சென்றது இங்கே.

மாலை வந்ததே தெரியவில்லை. காரின் சத்தம் கேட்டு "உன் புருசன் வந்துட்டான் போலம்மா!" என்றாள் மாரி.

மீரா தன் கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு "போய்ட்டு வரேன் அம்மா. வரேன் அக்கா!" என்றுவிட்டு வெளியே நடந்தாள்.

அவளைப் பார்க்காமல் ஹாரனை அடித்துக் கொண்டிருந்தான் அவன். அப்புறம்தான் திரும்பிப் பார்த்தான். ‌ மீரா வேக வேகமாக நடந்து வந்துக் கொண்டிருந்தாள். அவசரமாக காரை விட்டு இறங்கியவன் ஓடிச் சென்று அவளை நிறுத்தினான்.

"ஏன் இவ்வளவு வேகம்? நான் என்னை உன்னை விட்டுட்டா போக போறேன்? உன் காலை நீயே ஏன் வதைக்கிற?" என்றான்.

அவனின் அக்கறைதான் அவளுக்கு வதையாக இருந்தது.

"என்னை விடுங்க!" என்று அவனை விட்டு விலகி நின்றாள்.

பெருமூச்சோடு அவனும் விலகிக் கொண்டான்.

அவள் காரில் ஏறிய பிறகு "நல்லா என்ஜாய் பண்ணியா?" எனக் கேட்டான்.

மீரா தயக்கமாக தலையசைத்தாள்.

"உனக்கு பிடிச்சிருந்தா நீ டெய்லியும் கூட இங்கே வரலாம்!" என்றான்.

"தேங்க்ஸ்." என்றாள் சிறு குரலில்.

"ஹேப்பியா இருந்திருக்க. அதுக்கு ஒரு கிஸ் தரலாமே!" என்றான்.

பயந்துப் போனவள் "நான் அழுவேன்!" என்றாள்.

கலகலவென சிரித்தவன் "குழந்தைகளோடு பழகியதுல உனக்கும் நீ ஒரு குழந்தைன்னே நினைப்பு போல!" என்றான் அவளின் மூக்கை ஆட்டி.

ஒதுங்கி அமர்ந்திருந்தவள் அவனின் செய்கையால் மேலும் ஒதுங்கினாள்.

"மீரா!" என்றான் சற்று தூரம் சென்ற பிறகு.

"ம்." என்றவளிடம் "நான் அழகா இருக்கேனா?" என்றுக் கேட்டான்.

மீரா திரும்பிப் பார்த்தாள்.

"என் மகி அளவுக்கு இல்ல!" என்றாள்.

எதிர்பார்த்திருந்தவன் போல சிரித்தான்.

"அட்லீஸ்ட் ஓரளவுக்காவது இருக்கேனா?"

மீராவுக்கு எரிச்சல்தான் வந்தது. "நீங்க எப்படி இருந்தா எனக்கென்ன?"

"அட! ஒரு பிரெண்டா சொல்லும்மா. இதுக்கு ஏன் இவ்வளவு சீன்?"

அவனின் முகத்தை சில நொடிகள் பார்த்தாள். அழகாய்தான் இருந்தான். மகிழனின் சாயல் கொஞ்சம் இருந்ததாலோ இல்லை இவனின் அழகேவோ ஓரளவுக்கு ரசிக்கும்படிதான் இருந்தான்.

"நல்லாதான் இருக்கிங்க!" என்றாள் நேரே இருந்த சாலையை பார்த்தபடி.

"மகிழனை பார்க்கும் முன்னாடி நீ என்னைப் பார்த்திருந்தா அவனுக்கு பதிலா என்னை லவ் பண்ணி இருப்பியா?" காரை நிறுத்தி விட்டு தயக்கமாக கேட்டவனை திரும்பிப் பார்த்தாள். இவன் பைத்தியமா என நினைத்தாள்.

"நீங்க ஏன் எனக்கு நூல் விடுறிங்க? நான் உங்க தம்பியை லவ் பண்றேன். இதே மத்தவங்களா இருந்திருந்தா இப்படி ஒரு லவ்வுக்கும், எனக்கு ஆன பிரச்சனைக்கும் என்னை சாக்கடை போல நினைச்சி இருப்பாங்க. ஆனா நீங்க ஏன் இப்படி நடந்துக்கிறிங்க? ரோட்டுல கிடக்கற குப்பைக்கும் எனக்கும் நடுவுல எந்த வித்தியாசமும் இல்ல. மகி மட்டும் நேர்ல வந்திருந்தானா என்னோட குற்ற உணர்ச்சிக்கு நான் அந்த செகண்டே செத்திருப்பேன். உங்க பாட்டி பண்ண தப்பால நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சி. ஆனா அதுக்காக நீங்க என்னை லவ் பண்றேன், கணவனா நடந்துக்கிறேன்னு சொல்லியோ என்னை இம்சை பண்ணாதிங்க!" என்றாள்.

அவள் சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் பேசி முடித்ததும் அவளின் கன்னங்களை பற்றி தன் பக்கம் திருப்பினான். திகைத்துப் போயிருந்தவளின் இதழ் நோக்கி குனிந்தான். மீரா பயந்து அவனை தள்ளினாள்.

"ப்ளீஸ்!" என்றாள்.

தன்னை தள்ளி விட்டவளின் கைகள் இரண்டையும் ஒன்றாய் சேர்த்து பிடித்தான்.

"என்னை விடுங்க." என்றாள் தலையை திருப்பியபடி. மற்றொரு கரத்தால் அவளின் கழுத்தை பற்றியவன் அவள் மறுப்பதை கண்டுக் கொள்ளாமல் அவளின் இதழில் முத்தம் பதித்தான்.

திமிறியவளை விடவேயில்லை. தன் முத்தத்தில் இருப்பது கோபமா இல்லை ஆதங்கமா என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவளின் பேச்சைக் கேட்டு நகர வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அழுகையில் கண்கள் நனைந்து கன்னங்களில் ஓடியது கண்ணீர் அவனுக்கு. அவனின் கண்ணீர் அவளின் கண்ணீரோடு கலந்துக் கொண்டிருந்தது.

அவனிடமிருந்து விலக எண்ணி போராடிக் கொண்டிருந்தவள் சற்று நேரத்தில் அடங்கிப் போனாள். அவளை விட்டு விலகினான் அவன். மயங்கி விட்டவளின் சிரம் ஜன்னல் கண்ணாடியின் புறம் சாய்ந்தது. தலை மோதும் முன் தாங்கிப் பிடித்தான்.

"உன்னை யார் மீரா குப்பைன்னு சொன்னது? நீ என் பொக்கிஷம்ங்கறது உனக்கு தெரியவேயில்லையா? நாய் கடிச்சதுக்காகவெல்லாம் உன்னை நீயே இப்படி தாழ்வா நினைச்சா அப்புறம் நான் எப்படி மீரா வாழ்வேன்? நீ இல்லன்னா எனக்கு உலகமே இல்ல. என்னை உனக்குப் புரியவே இல்லையா? என் காதல், என் பேராசை, என் கஷ்டம், என் பைத்தியம் உனக்குக் கொஞ்சமும் தெரியலையா?" எனக் கேட்டான். ஆனால் பதில் சொல்ல அவள்தான் விழித்திருக்கவில்லை. அவளின் நெஞ்சில் சாய்ந்து கண்களை மூடினான்.

"என்னை ஏத்துக்கோ மீரா. நீ குப்பை இல்ல மீரா!" என்று மென் குரலில் முணுமுணுத்தான்.

ஆரவல்லி தன் வீட்டிற்கு திரும்பிப் போய் விடலாமா என்று நினைத்தாள். இந்த வீட்டில் இனியும் இருக்க முடியும் என்றுத் தோன்றவில்லை. கலர் புடவை கட்டி, நெற்றியில் ஒரு காவி நிற பொட்டு வைத்ததற்கு அவளின் சம்பந்தியம்மா விமர்சன் செய்துக் கொண்டிருந்தாள்.

"குப்பாயி.. நல்லா வச்சாங்கையா பேரு!" என்று முணுமுணுத்தவள் வெள்ளை புடவை, திருநீறு, கழுத்தில் ஸ்படிக மாலையுமாக இருந்த தன் பெரிய சம்பந்தியை ஆராய்ந்தாள்.

'என் புருசன் இறந்தபோது நல்ல வேளையா இந்த கிழவி வரல. இல்லன்னா புத்தி சொல்லி என்னையே உடன்கட்டை ஏற வச்சிருப்பா. அப்புறம் என் பையன் அனாதையா தெருவுல நின்னிருப்பான்!' என்று நினைத்தாள்.

ஆரவல்லிக்கு ஒரு மனிதரை பார்த்த உடன் பிடிக்காமல் போனது இப்போதுதான். மகிழனின் முகம் அப்படி ஆனபோது அடங்காத மீராவால்தான் இத்தனையும் என்று மனதுக்குள் திட்டியுள்ளாள். ஆனால் அப்போதும் கூட வெறுத்ததில்லை. ஆனால் இந்த சம்பந்தி கிழவியை பார்த்த நொடியே பிடிக்காமல் போய் விட்டது.

மணியம்மா கொடுத்த காப்பியையும் பழித்தாள் அந்த குப்பாயி. வீட்டை பழித்தாள். வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருளையும் பழித்தாள். கிச்சனை அழகுப் படுத்துக்கிறேன் என்ற பெயரில் பாத்திரங்களை ஆங்காங்கே வைத்து மணியம்மாவிற்கு இரட்டை வேலை வைத்தாள்.

வசந்த் வீட்டிற்கு வந்ததும் மாமியாரை கண்டுவிட்டு தனது அறைக்கு நழுவ முயன்றார்.

"தம்பி நல்லாருக்கிங்களா?" எனக் கேட்டு அவரை இழுத்துத் தன் அருகே அமர வைத்தாள் குப்பாயி.

"நல்லாருக்கேன் அத்தை!" சிறு குரலில் சொன்னவரை ஆராய்ந்தவள் "என்ன நல்லாருக்கிங்களோ? வயிறெல்லாம் ஒட்டிப்போய் கன்னமே காணாம போய் இருக்கிங்க! ரோகிணியை படிக்க வச்சது தப்பா போயிடுச்சி. அதனாலதான் புருசனுக்கு சமைச்சி கூட போடாம வெளியே வேலைக்கு போய்ட்டு இருக்கா!" என்றாள்.

அதே நேரத்தில் ரோகிணி வீட்டுக்குள் வந்தாள். பெரியம்மாவை கண்டவள் ஆசையோடு விசாரிக்க நெருங்கினாள். ஆனால் பெரியம்மா சொன்னது கேட்டு சப்பென்று ஆகிவிட்டது அவளுக்கு.

"மணியம்மா நல்லா சமைப்பாங்க அத்தை!" தலை குனிந்துச் சொன்னவரின் தலையில் ஆசிர்வதிப்பது போல கை வைத்தாள்.

"உங்களை மாதிரி ஒரு புருசன் கிடைக்க எங்க ரோகிணி பாக்கியம் பண்ணி இருக்கணும்." என்றாள்.

"இல்ல அத்தை. உங்க ரோகிணி கிடைக்க நான்தான் கொடுத்து வச்சிருக்கணும்!" என்றார் அவசரமாக.

ரோகிணி கணவனை சந்தேகமாக கணவனைப் பார்த்தாள். அவர் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

ரோகிணி அவரின் அருகே வந்து அமர்ந்தாள்.

"பெரியம்மா நல்லா இருக்கிங்களா?" என கேட்டவளை முறைத்தாள் குப்பாயி.

"புருசனுக்கு சரி சமமா உட்காராதன்னு எத்தனை முறை சொல்றது? வேலைக்கு போய்ட்டு வந்து புருசன் காலடியில உட்கார்ந்து அந்த மனுசன் காலை பிடிச்சி விடலாம் இல்ல? நீயே இப்படி இருந்தா உன் மருமக எப்படி இருப்பா?" என்று வள்ளென்று விழுந்தாள்.

ரோகிணிக்கு தலை சுற்றியது.

"நான் குளிக்க போறேன்." என்று எழுந்தவள் பெரியம்மாவை திரும்பிப் பார்க்காமல் தன் அறை நோக்கி நடந்தாள்.

"உன் புருசனுக்கு சுடுதண்ணீர் வச்சி கொடு புள்ளை.. உடம்பு தேச்சி குளிக்க வச்சி விடு!" என்றாள் குப்பாயி.

ரோகிணி குனிந்த தலை நிமிரவேயில்லை.

ரோகிணி அரை மணி நேரம் கழித்து ஈர தலையை உலர விட்டபடி வெளியே வந்தாள்.

"இது என்ன? அமங்கலமா தலையை விரிச்சி போட்டுட்டு திரியற? தலையை அள்ளி முடி புள்ளை!" என்றாள் பெரியம்மா.

"தலை ஈரம் காயாம முடிஞ்சா தலை வலிக்கும் பெரியம்மா!" என்றவள் "மணியம்மா." என்று அழைத்தாள்.

மணியம்மா காப்பியோடு வந்தாள்.

அவள் அந்த பக்கம் சென்றதும் பெரியம்மா இந்த பக்கம் திரும்பினாள்.

"என்னத்த சமையக்காரி.. ருசியே இல்ல குழம்புல." என்றாள்.

ரோகிணி தலையை பிடித்தாள். காப்பியை பருகியும் கூட தலைவலி நீங்காது என்றுத் தோன்றியது.

இப்போதுதான் தன் மாமியார் ஒரு கடவுள் என்பதும் அவளுக்கு புரிந்தது. அத்தையை ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள். அமைதியாய் அமர்ந்திருந்தாள். எதுவும் காதில் விழாதது போல சாமியாராக அமர்ந்திருந்தாள்.

திறந்திருந்த கதவின் வழியே அகிலன் உள்ளே வருவது கண்டு பதறி எழுந்தாள் ஆரவல்லி.

"என்னடா ஆச்சி அவளுக்கு?" என்றபடி பேரனின் அருகே ஓடினாள். மயங்கி இருந்த மீராவை கைகளில் தூக்கிக் கொண்டு வந்தவன் பாட்டியின் கேள்வியால் நின்றான்.

"மயக்கம் போட்டுட்டா பாட்டி!" என்றவன் ஹாலில் அமர்ந்திருந்த குப்பாயியை வித்தியாசமாக பார்த்தான்.

"எப்படிடா மயக்கம் வந்தது? வித்யா மதிய சாப்பாடு தந்தாளா இல்லையா? நீயும் நேர நேராத்துக்கு இவளை சாப்பிட கூட்டி வரதே இல்ல.!" என்று அருகே வந்து மகனைத் திட்டினாள் ரோகிணி.

"இது வேற மயக்கம்மா.." என்றவன் அதற்கு மேல் நின்றால் அம்மாவும் பாட்டியும் தன் வாயை பிடுங்கி உண்மையை தெரிந்துக் கொள்வார்கள் என பயந்துத் தனது அறை நோக்கி நடந்தான்.

மீராவை கட்டிலில் கிடத்தினான். அவளின் முகத்தை வெறித்துப் பார்த்தான்.

"சாரி மீரா.. உன்னை நான் கிஸ் பண்ணி இருக்க கூடாது. கோபம். வருத்தம். உனக்கு சொன்னாலும் புரியாது. மகிழனை பார்க்க உன்னால முடியாது. உன்னை பார்க்க மகிழனால முடியாது. இந்த விதி மாறும் நாள் எப்ப வரும்ன்னு எனக்கும் தெரியல மீரா. என்ன ஆனாலும் உன்னை என் கண்ணுல வச்சி பார்த்துப்பேன். இது மட்டும் சத்தியம்." என்றான் அவளின் நெற்றியில் முத்தமிட்டு.

"மகி.." என்றாள் அவள் முனகலாக.

கலங்கியது கண்கள் அவனுக்கு. துடைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"பெரியவனா இது?" எனக் கேட்டாள் குப்பாயி பாட்டி.

ஆமென தலையசைத்தபடி வந்து அவளின் முன்னால் அமர்ந்தான் அகிலன்.

"வளராத மாதிரியே இருக்கான்.‌ நல்ல சத்தான சாப்பாடு கொடுத்தாதானே ஆகும்?" எனக் கேட்ட குப்பாயியை முறைத்தாள் ஆரவல்லி.

"அந்த சின்ன வாலு எங்கே?" என்றாள் குப்பாயி.

"அவன் ஸ்டடிஸ்காக வெளிநாடு போயிருக்கான் பெரியம்மா!" என்றாள் ரோகிணி.

"பாரேன்.. இந்த பாப்பா புள்ளை என்னை பார்க்க கூட வரல.. ஏதோ ஒரு கிழவின்னு நினைச்சிட்டா போல!" சோகமாக மூக்கை உறிந்தாள்.

"அப்படி இல்ல பெரியம்மா. அவ ஞாயித்துக் கிழமைதான் வருவா. அவளுக்கு வேலை இருக்கு." என்றாள் ரோகிணி.

பாட்டி நிறைய பேசினாள். அகிலன் எல்லாவற்றிற்கும் தலையசைத்து வைத்தான்.

இரவு உணவு தயாராகி விட்டிருந்தது.

"அவ தூங்கியது போதும். போய் கூட்டி வா." என்று பேரனை அனுப்பி வைத்தாள் ஆரவல்லி.

"பொழுதான நேரத்துல தூங்க கூடாதுன்னு சொல்வாங்க. என்ன புள்ளையோ?" என்ற குப்பாயி பாட்டியை ஒரு கணம் நின்று முறைத்தான் அகிலன். குப்பாயி அமைதியாய் தலை குனிந்துக் கொண்டாள்.

அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தவன் கதவருகிலேயே உறைந்து நின்று விட்டான்.

மீரா கத்தி ஒன்றை எடுத்து தன் மணிக்கட்டில் வைத்திருந்தாள். அவள் அழுத்தும் முன் வந்து விட்டிருந்தான் அகிலன். இல்லையேல் அவன் வர வேண்டும் என்று அவள் காத்திருந்தாளோ என்னவோ?

முதல் நாள் முதலிரவுக்காய் வைத்திருந்த பழத்தட்டில் இருந்த கத்தியை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தாள் அவள்.

"மீரா!" என்றான் எச்சரிக்கும் விதமாக.

"ஐ பெல்ட் லைக் எ ப்ராஸ்டியூட்!" என்றவளை முறைத்தவன் "இன்னொரு முறை இப்படி நீ சொன்னா உன் சாவு என் கையாலாதான் இருக்கும்." என்றுவிட்டு ஆத்திரத்தோடு சுவற்றைக் குத்தினான்.

மீரா பயந்து கண்களை மூடினாள்.

அவளின் அருகே பாய்ந்து வந்தவன் அந்த கத்தியைப் பிடுங்கித் தூர எறிந்தான்.

"நீ இன்னொரு முறை உன்னை ஹர்ட் பண்ணிக்கிட்டா நான் மகிழை தேடிப் போய் கொல்வேன். ப்ராமிஸ்!" என்றான்.

மீரா குலுங்கினாள். அழுதாள்.

"ஆனா நான் வேற என்ன செய்யட்டும்? அவங்க இரண்டு பேர் தொட்ட போதே அப்படிதான் பீல் பண்ணேன். இப்ப நீங்களும்.!" என்றாள் முகத்தை மூடியபடி.

"ஜஸ்ட் ஸ்டாப்இட் மீரா. என் பெரியப்பா பையனுக்கும் அவன் வொய்ப்க்கும் அது செகண்ட் மேரேஜ்தான். அவங்க புனிதம் அவங்களோட. ஒரு ப்ராஸ்டியூட்டுக்கு புனிதம் இல்லன்னு சொல்ல கூட உனக்கோ எனக்கோ உரிமை கிடையாது. அவங்கவங்க சுத்தம் அவங்கவங்களோட.! விருப்பத்தோடு பத்து பேரை லவ் பண்ணி பதினொராவது ஆளை கல்யாணம் பண்றவங்க கூட உன்னை போல சொல்லி இருக்க மாட்டாங்க. விருப்பம் இல்லாம இரண்டு பேருக்கு பலியானதுக்கு இப்படி உன்னையே டார்ச்சர் பண்ணி எங்களையும் இம்சை பண்ணி தொலையுற.." என்றான் ஆத்திரமும் எரிச்சலுமாக.

அவளோ அவன் சொன்னதைக் கூட காதில் வாங்காமல் அழுதுக் கொண்டிருந்தாள்.

"மகிழுக்கு போன் பண்றேன். அவனோடு பேசு நீ. அவனாவது ஏதாவது சமாதானம் சொல்லட்டும்!" என்றவனை அதிர்ச்சியாக பார்த்தவள் "ப்ளீஸ். வேணாம். உங்களை கெஞ்சி கேட்கிறேன். அவனுக்கு போன் பண்ணாதிங்க. இனி நான் ஹர்ட் பண்ணிக்க மாட்டேன். ப்ளீஸ் அவனுக்கு மட்டும் போன் பண்ணாதிங்க!" என்றுக் கெஞ்சலாக கை கூப்பினாள்.

ஆனால் அவன் அதற்குள் போன் பண்ணி விட்டிருந்தான். எதிர் முனையில் "ஹலோ" என்று மகிழனின் குரல் கேட்டவள் உறைந்துப் போனாள். அழுதுக் கொண்டிருந்தவள் அவசரமாக தன் வாயை பொத்திக் கொண்டாள். விம்மல் விரல்களை தாண்டி வெளிவரவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN