தேவதை 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கவி வெறுமையை உணர்ந்த தன் நெஞ்சத்தை தடவி விட்டுக் கொண்டான். ஆதி இப்போது எங்கிருப்பாள் என்று யோசித்துப் பார்த்தான்.

"அவள் எங்கிருந்தால் உனக்கென்ன?" என்றுத் தன்னையே கேட்டும் கொண்டான்.

ஆதியின் முகம் நினைவை விட்டு மறைய மறுத்தது. அவளின் குழந்தை முகமும் கொஞ்சல் மொழியும் அவனை என்னவோ செய்தது. இத்தனை பெண்களையும் ஆண்களையும் கடந்த பிறக்கும் கூட அவளின் நினைவு வருகிறதே என்று சோர்ந்துப் போனான்.

அவளுக்கு ஏன் பூ மாலைகள் மேல் ஆசை என்று அறிந்துக் கொள்ளும் முயற்சியில் தனது கழுத்திலும் அதே போல மாலை கோர்த்து அணிந்துக் கொண்டான். ஆனாலும் அவளை பற்றிய சிந்தனைதான் குறையாமல் அதிகரித்துக் கொண்டிருந்தது.

***

இயனியின் படைகள் சத்திய தேவ உலகில் மறைந்து இருந்தன.

செழின் வெற்றி மிதப்போடு கவியை தேடி வந்தான். கவியை கொன்றால் பிறகு இந்த சத்திய தேவ உலகிற்கு தானே அரசனாகி விடலாம் என்றுக் கணக்கிட்டு உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

கவி தனது மரத்தில் சாய்ந்துப் படுத்திருந்தான். ஆதியின் உருவத்தை அங்கிருந்த பனிப்பூக்கள் அனைத்திலும் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கவி.." செழினியின் குரல் கேட்டு குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தான் கவி.

"நீ எப்படி வெளியே வந்த?" எனக் கேட்டான்.

"எப்படியோ?" கையை விரித்தவன் "என் கண்களின் அன்பு உனக்குப் புரியவில்லையா கவி? என் நேசம். உனக்காய் துடிக்கும் என் இதயம்.. நான் ஒரு உயிராய் இரு உடலாய் இருக்க பிறந்தவர்கள் கவி.." என்றான் தன் சக்தியை முழுதாய் பயன்படுத்தி.

ஆதியின் அன்பிற்கே விழாதவன் இவனின் பொய் வேஷத்திற்கா மயங்குவான்?

தனது மரத்தை விட்டு கீழே குதித்தான். வாளை உருவியப்படி செழினியை நெருங்கினான்.

"எனது வீரர்கள் இருவரை கொன்றுள்ளாய் நீ!" என்றான் ஆத்திரத்தோடு.

'உன்னையும்தான் கொல்ல போகிறேன் கவி!' என மனதுக்குள் நினைத்தவன் அவனை நோக்கி ஓரடி முன்னேறினான். தனது கையை முறுக்கிக் கொண்டான். அவனின் அருகே சென்றதும் அவனின் இதயத்தை பிடுங்கி எறிந்து விட என நினைத்தான்.

கை கெட்டும் தூரம் வரும் முன்பே செழினியின் நெஞ்சில் கத்தியை பதித்தான் கவி

"என்னை கொல்ல போகிறாயா கவி? நான் ஒரு அன்பின் தேவதை. அன்பை மதிக்க மாட்டாயா நீ? அன்புதான் உன்னை வாழ வைக்கிறது!" என்றான்.

கவி சிரித்தான். "நான் மயங்குவேன் என்று நினைத்தாயா முட்டாள்?" என்றவனின் முன்னால் தனது மொத்த அன்பின் சக்தியையும் காட்டினான் செழினி. அவனின்‌ கண்களை பார்க்க முடியவில்லை கவியால்.

சூரியனின் ஒளி போல பிரதிபலித்தது செழினியின் கண்கள. கவியின் பார்வை குறைந்துக் கொண்டிருந்தது. அவன் கையிலிருந்த வாள் கீழே விழுந்தது. செழினிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பட ஆரம்பித்தான். அந்த நேரத்திலும் அவனுக்கு ஆதியின் நினைவுதான் வந்தது. அவள் சிறந்த தேவதையாக இருந்தும் கூட ஒருமுறை கூட இவனை மயக்க நினைத்ததில்லை. அவளின் அன்பு பற்றி இப்போதுதான் அவனுக்கு புரிந்தது. அவளை நினைத்து ஏங்கினான். அவள் வேண்டுமென்று ஆசைப்பட்டான்.

'ஆதி அப்பாவி. எங்கேயாவது எதிரிகளிடம் மாட்டிக்கொண்டு விட்டாளோ!' என்று பயந்தான். அவளை தேடி அழைத்து வர வேண்டும் என்று நினைத்தான்.

அவனின் நினைவுகள் முடியும் முன்பு அவனின் நெஞ்சில் கை பதித்தான் செழினி. அவனின் வளர்ந்த நகங்கள் கவியின் நெஞ்சில் பாய ஆரம்பித்தது‌.

"வந்த வேலைக்கு வேலையே இல்லன்னு நினைக்கிறேன். இவன் கவியை கொன்னுடுவான் போலிருக்கு!" என்றான் இயனி தன் அருகே நின்றிருந்த தனது படை வீரன் ஒருவனிடம்.

"எனக்கொன்றும் அப்படி தோன்றவில்லை இயனி. கவியை குறைவாக எடைப் போடுவது தவறு!" என்றான் அவன்‌

இயனிக்கு கவி மீதிருந்த நம்பிக்கை குறைந்துப் போய் விட்டது.

"என் இனத்தையே அழித்துள்ளாய் நீ! அன்பின் தேவதைகளில் மிஞ்சியிருந்த ஒரே பரிசுத்த தேவதையான ஆதியை உன் அடிமையாக கொண்டு வந்து வைத்திருந்திருக்கிறாய். ஓர் அன்பின் தேவதை என்றும் பாராமல் என்னையும் சிறை பிடித்து கொண்டு வந்து அடைத்து வைத்தாய். உன்னை கொன்றாலும் தவறே இல்லை கவி!" என்று பற்களை அறைத்தான் அவன்.

கவி வலியை பொறுத்துக் கொண்டு கண்களை திறந்தான்.

'ஆதி மட்டும்தான் ஒரே ஒரு பரிசுத்த தேவதையா?' குழம்பியவன் தன் நெஞ்சை தொட்டிருந்தவனின் மணிக்கட்டை பற்றினான். அவனின் கையை வளைத்தான். கத்தினான் செழினி. ஆனால் கவியின் பிடி விடவில்லை.

"நீ பரிசுத்த தேவதை இல்லையா?" என்றான்.

செழினி குழம்பினான். அவன் பதில் சொல்லும் முன் அவனின் தொண்டையில் வந்து பாய்ந்தது ஒரு அம்பு. கவி சுற்றிலும் பார்த்தான். தன் சக்தியை பயன்படுத்தி வாசம் பிடித்தான். தூரத்தில் இயனியின் படைகள் இருப்பதாக சந்தேகித்தான். தரையில் கிடந்த தன் வாளை நோக்கி கை காட்டினான். வாள் அவன் கையை வந்து சேர்ந்தது.

தன் முன் நின்றிருந்தவனின் அடி வயிற்றில் கத்தியை பாய்ச்சினான் கவி. செழினி அதிர்ந்தான். அவனின் கண்களில் இருந்த சக்தி நொடியில் காணாமல் போனது. அந்த நொடியிலேயே அவனின் நெஞ்சில் மோதியது கவியின் கத்தி. துடிதுடித்து தரையில் விழுந்தான் செழினி.

"எதற்காக இயனியின் படை இங்கே வந்துள்ளது?" என்றுக் கேட்டான். ஆனால் பதில் சொல்ல செழினிதான் உயிரோடு இல்லை.

செழினியின் உடலைப் புரட்டினான். செழினி இறந்து விட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

இயனியின் படை இருக்கும் பக்கம் நடந்தான்.

"ஏந்தலே!" தன் மக்களின் குரல் கேட்டு நின்றான். இரு வீரர்கள் நின்றிருந்தார்கள்

"பூர்வ உலகின் வாசம் உணர்ந்தோம் ஏந்தலே! ஆனால் எங்களால் எதுவும் யோசிக்கவோ செயலாற்றவோ முடியவில்லை. எங்களோடு இருந்த வீரன் ஒருவன் பூர்வ உலகின் வீரர்களிடம் உயிரை பலி தர சென்றுள்ளான். அவனுக்கு இந்த வாழ்க்கை சலித்து விட்டதாம் ஏந்தலே! எங்களுக்கும் மிகவும் பயமாக உள்ளது. சில வருடங்கள் முன்பு ஏற்பட்டது போலவே இப்போதும் மனமெங்கும் சோகமும்,‌ வருத்தமுமாகவே உள்ளது.. வாழ்க்கையே வீண் என்று தோன்றுகிறது!" என்றான் சோகம் ததும்பும் குரலில்.

கவிக்கு பயமாக இருந்தது. இப்படி நடக்க கூடாது என்று நினைத்தான். தான் ஒரு நல்ல ஏந்தல் இல்லை என்று தன்னையே திட்டிக் கொண்டான். தன் மக்களுக்காக எதையும் செய்பவனாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தான்.

கவி பூர்வ உலக வீரர்கள் இருந்த இடத்திற்கு சென்றபோது அங்கே சத்திய தேவன் ஒருவன் மட்டும் இறந்து கிடந்தான். மற்றவர்கள் யாரையும் காணவில்லை.

"கொன்று விட்டு சென்றுள்ளார்கள்!" என்று தன் வீரனை பரிசோதித்தான். கண்கள் கலங்கியது கவிக்கு.

"வென்றேன் இனி! விரைவில் இந்த சத்திய தேவ உலகம் அழியப்போகிறது. கவியின் ஆணவமும் முடிவுக்கு வரப் போகிறது!" என்று பிரபஞ்ச வீதியில் நடந்தபடி சிரித்தான் இயனி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN