கனவே 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீட்டிற்கு வந்த பிறகுதான் மகிழன் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பதை அறிந்தார் வசந்த். அவனுக்கு அழைத்தார். ஆனால் அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

"என்ன ஆச்சி இவனுக்கு?" குழப்பமாக கேட்டவர் மூத்த மகனுக்கு அழைத்து விசயத்தைச் சொன்னார்.

இருள் சூழ்ந்த பிறகுதான் அகிலன் அலுவலகம் வந்துச் சேர்ந்தான். மகிழனின் அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

விளக்கை கூட ஏற்றாமல் அமர்ந்திருந்த மகிழன் அண்ணனின் வருகைக்கு பிறகும் நிமிரவில்லை.

"மகி.." என்றபடி வந்தவன் விளக்கை போட்டுவிட்டு தம்பியை பார்த்தான். வடியும் கண்ணீரோடு உட்கார்ந்திருந்தான் அவன்.

"என்னாச்சிடா?" எனக் கேட்டவனிடம் சொல்லாமல் தலையசைத்தவன் இடது கையால் முகத்தை மூட முயன்றான்.

"மீராவுக்கும் உனக்கு சண்டையாடா?" அகிலன் கேட்ட நேரத்தில் மகிழனின் போன் ஒலித்தது.

மகிழன் போனை மறைக்க முயன்றான்.

"யார் அது?" அகிலன் போனை பிடுங்க முயன்றான். மகிழன் போனை பின்னுக்கு இழுக்க முயன்றதில் போனிற்கு வந்த அழைப்பில் விரல் மோதி விட்டது.

அழைப்பு ஏற்கப்பட்டதைக் கண்டுப் பயந்தான் மகிழன்.

அகிலன் தம்பியின் நடுக்கத்தை கண்டுவிட்டு போனைப் பிடுங்கி ஸ்பீக்கரில் வைத்தான்.

மகிழன் தன் போனைப் பிடுங்க முயன்றுத் தோற்றுக் கொண்டிருந்தான்.

"என்ன சகோ.. போன் செய்யவே இல்ல? இன்னுமா வீடியோவை பார்க்காம இருக்க? உன் பொண்டாட்டிதானே? அப்புறமும் என்னப்பா?" என்றான் எதிர் முனையில்.

அகிலன் குழப்பத்தோடு தம்பியையும் போனையும் பார்த்தான்.

"இந்த வீடியோ நெட்ல அப்லோட் ஆகாம இருக்கணும்ன்னா எனக்கு ஐம்பது லட்சம் பணம் வேணும். இல்லன்னா அவளை என்கிட்ட தந்துடு." என்றான்.

மகிழன் கோபத்தில் பற்களை கடித்தான்.

அவன் கத்தும் முன் அகிலன் அழைப்பைத் துண்டித்து விட்டான். மகிழன் "ஆ.." வென காட்டுக் கத்தல் கத்தினான். அகிலன் தன் காதுகள் இரண்டையும் பொத்திக் கொண்டான்.

மகிழன் எழ முயல்வது கண்டு அவசரமாக அவனின் தோளைப் பற்றி அமர வைத்தான்‌.

"வெயிட்.. இது ஆபிஸ்டா.. உனக்கு மேரேஜ் ஆயிடுச்சி. உனக்கு வொய்ப் இருக்கா. உன் கோபத்தை வழக்கம் போல காட்ட முடியாது நீ!" என அகிலன் சொல்லி முடிக்கும் முன் மகிழனின் மேஜை தூரத்தில் சென்று விழுந்து விட்டது.

"கண்ட்ரோல் மகி!" என்றான் அமைதியாக.

மகிழனும் அதைதான் முயற்சித்தான். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் போனில் அவன் சொன்னது நினைவை விட்டு அகல மறுத்தது.

ஒற்றை வீடியோவை பார்த்து முடிப்பதற்குள் கோடி முறை செத்து விட்டான். அவள் 'மகி மகி' என்றதற்கு பதிலாக நேராய் வந்து தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கலாம் என்று நினைத்தான்.

அவளை எப்படியெல்லாமோ கவனத்தோடு பார்த்துக் கொள்ள நினைத்திருந்தான் அவன். ஆனால் இப்படி சிதைய தருவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.

மீராவின் பயத்தை இதுவரையிலுமே கூட சாதாரணமாக நினைக்கவில்லைதான். ஆனால் இன்று அவளின் பயம் அவனைத் தொற்றிக் கொண்டது.

மயக்கம் என்று பொய் சொல்லி விட்டார்கள் என்றுக் கோபம் கொண்டான். வீழ்ந்த கண்ணீரோடு அவளின் கண்கள்தான் மூடியிருந்தது. ஆனால் அவளின் புலம்பலும், மகியென்ற முனகலும் கடைசி வரையிலுமே நிற்கவில்லை.

'ஏன் மீரா? கூப்பிட்டா நான் காப்பாத்த வந்துடுவேன்னு நினைச்சியா?' என்று நெற்றியில் அடித்துக் கொண்டான்.

'நான் போயிருக்க கூடாது. உன்னை விட்டு போயிருக்க கூடாது. அந்த நாய்களை நடு ரோட்டுல அடிச்சிருக்க கூடாது. அவங்களை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருக்கணும். உனக்கு நானே எதிரிகளை உருவாக்கி விட்டுட்டு விலகி போயிருக்க கூடாது.' என்றுத் தனக்குள் வெதும்பினான்.

வினய்யையும், சாரதியையும்தான் மீராவிற்கு தெரிந்திருந்தது. ஆனால் அறையின் மூலையில் நின்றிருந்த மூன்றாமவனை அவள் கவனிக்கவில்லை. அவனின் கையிலிருந்த கேமராவையும் அவள் கவனித்திருக்கவில்லை.

வினய்யும் சாரதியும் நகர்ந்த பிறகுதான் அவனின் முகமே வீடியோவில் தெரிந்தது. அந்த நொடி வருவதற்குள் ஆயிரம் முறை வீடியோவை நிறுத்தி அழுது விட்டான் மகிழன். இடையில் பல முறை அருகில் இருந்த சுவரோடு கை முட்டியை மோதவும் தந்து விட்டான்.

ரோகித்தின் முகம் தெரிந்த பிறகு கண்களை மூடியபடி வீடியோவை அணைத்தான். ஒரு பெரிய தண்டனையிலிருந்து தப்பித்தது போலிருந்தது.

ரோகித்தை கொல்ல வேண்டும் போல இருந்தது. இந்த புது பிரச்சனையை எப்படி கையாள்வது என்று அவனுக்கு புரியவில்லை. வீடியோ பற்றி தெரிந்தால் மீரா தனக்கென இருக்கவே மாட்டாள் என்பது அவனின் பயம்.

'ஐ பெல்ட் லைக் எ ப்ராஸ்டியூட்!' என்ற அவளின் வார்த்தைகள் வேறு இடை இடையே வந்து இம்சையை தந்துக் கொண்டிருந்தது.

வீடியோவை பார்த்து முடித்த பிறகு அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. பித்து பிடித்தவன் போல அமர்ந்திருந்தவன் அண்ணனின் வருகைக்கு பிறகுதான் இருளானதையே கண்டான். ஆனால் போனில் ரோகித் சொன்னதைக் கேட்ட பிறகு ஆத்திரம் அடங்காமல் பொங்கிக் கொண்டிருந்தது. நேரில் இருந்திருந்தால் அவனை கொன்றே இருப்பான். அவ்வளவு வெறி உடம்பில் கலந்துக் கொண்டிருந்தது.

"விசயத்தை சொல்லாம நீ குழம்பிட்டு இருந்தா ஒன்னும் சரியாகாது மகி.. ஹெல்ப் வேணும்ன்னா நீதான் கேட்கணும்.!" என்றான் அகிலன் கோபத்தோடு.

மகிழன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

"அவங்க இரண்டு பேர் இல்ல மூணு பேர்." தம்பி சொன்னது அவனுக்கு புரியவில்லை. "அவங்ககிட்ட ரேப் வீடியோ இருக்கு!" என்றான். அகிலன் அதிர்ச்சியில் வாயை பொத்தினான்.

"வாட்.? இது மீராவுக்கு தெரியுமா?" என்றான்.

"இல்லன்னுதான் நினைக்கிறேன்!" என்றவன் கோபத்தோடு போனைப் பார்த்தான்.

"இவனை கொல்லணும் அண்ணா.. அப்பதான் எல்லா பிரச்சனையும் தீரும்!" என்றான்.

"முட்டாள்.. அவனை கொன்னா பிரச்சனை தீராது. பெருசாகும். ஏற்கனவே முன்னாடி கேஸ்ஸால மீரா அரை பைத்தியமாகிட்டா. இப்ப இந்த பிரச்சனையும் சேர்ந்து அவளை படுத்தணும்ன்னு நினைக்கிறியா?" எனக் கேட்டான்.

மகிழன் அண்ணன் புறம் பார்த்தான்.

"நான் வேற என்ன அண்ணா பண்ணட்டும்? மீரா ஹேப்பியா இருக்கணும். அதுக்காக நான் எதையும் செய்வேன். நான் என்ன செஞ்சா இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். நான் என்ன பண்ணா மீரா இதுல சம்பந்தப்படாம இருப்பா!" எனக் கேட்டான்.

அகிலன் யோசித்தான். "பொறுமையாதான் நடந்துக்கணும் மகி. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எதையும் பண்ண முடியாது.." என்றவன் யோசனை வந்தது போல "அதியன் கதிருக்கு போன் பண்ணு.. அவங்ககிட்ட பிரச்சனையை சொல்லலாம். அவங்களால அந்த பையனை கேட்ச் பண்ண முடிஞ்சா பிரச்சனை ஓரளவுக்கு தீர வாய்ப்பு இருக்கு!" என்றான்.

மகிழன் அவசரமாக கதிருக்கு அழைத்தான். அவனிடம் விசயத்தை சொன்னான். எதிர் முனையில் கதிர் கோபப்படுவது புரிந்தது.

"அந்த நாய்க்கு என் கையாலதான் சாவு.." என்றான்.

"நான் இன்ஸ்பெக்டர் இனியன்கிட்ட பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன் மகிழ்!" என்றுவிட்டு போனை வைத்து விட்டான் கதிர்.

அகிலன் தம்பியின் கசங்கிய சட்டையை நீவி விட்டான். கலைந்த தலையை சரி செய்து விட்டான்.

"கோபம் வேணாம். அவசரம் வேணாம். எல்லாம் உன் நல்லதுக்குதான் நான் சொல்றேன். மாத்திரை சாப்பிட்டியா?" எனக் கேட்டான்.

மகிழன் தலையசைத்தான்.

"குட்.. பாரு.. ரூமையே கேவலமா மாத்தி வச்சிருக்க. நாளைக்கு இந்த ரூமை பார்க்கறவங்க உன்னைதான் தப்பா நினைப்பாங்க.." என்றவன் மேஜையை நேராக நிறுத்தினான். கீழே சிதறிக் கிடந்த பொருட்களையெல்லாம் எடுத்து மேஜையின் மீது ஒழுங்குப் படுத்தி வைத்தான்.

தரையில் ஒரு ஓரமாக கிடந்த மீராவின் புகைப்படத்தின் மீதிருந்த கண்ணாடி பிரேம் விரிசல் விட்டு போயிருந்தது. கண்ணாடி துண்டுகளை அலுங்காமல் கொண்டுச் சென்று குப்பை கூடையில் கொட்டிவிட்டு வந்தான்.‌ புகைப்படத்தை மீண்டும் மேஜையின் மீதே வைத்தான்‌. மகிழன் மீராவின் புகைப்படத்தைக் கண்டுக் கையை நீட்டினான்.

"வீடியோ நெட்டுல அப்லோட் ஆனா மீராவுக்கு பிரச்சனை இல்ல. ஆனா அந்த பையன்தான் ஜெயிலுக்கு போவான். அவனுக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் ஏதோ கேம் ஆடுறான். நாமதான் கவனமா இருக்கணும்!" என்றான் அகிலன்.

தம்பி புரிந்ததாக தலையசைத்தான்.

இரவு ரோந்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான் இனியன்‌. அதியன் போன் செய்தான். குடும்ப விசயம் பேசுகிறான் என்றெண்ணி அழைப்பை ஏற்றான் இனியன். ஆனால் அவன் சொன்ன விசயத்தை கேட்ட பிறகு அவனின் கோபமும் அதிகரித்தது.

மீராவின் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடி தூக்கில் ஏற்ற வேண்டும் என்றுதான் அவனின் வெறியும் சொன்னது. ஆனால் சட்டம் நீதி என்று அமைதியாக இருந்து விட்டான்.

ஆனால் இப்போது அப்படி இருக்க முடியவில்லை அவனால்‌.

"நான் அப்புறமா கூப்பிடுறேன்!" என்றவன் தேவனுக்கு போன் செய்து ரோகித்தை பற்றிய தகவலை விசாரிக்க சொன்னான்.

மகிழன் வீட்டிற்கு சென்றபோது மணி ஒன்பதைக் கடந்து விட்டிருந்தது.

அவன் சென்றபோது மீராவை தவிர மற்ற அனைவரும் ஹாலில் காத்திருந்தார்கள்.

"என்னடா ஆச்சி?" அம்மா இவனைக் கண்டதும் எழுந்து வந்துக் கேட்டாள்.

மகிழனின் முக சோர்வும், கையின் காயமும் ரோகிணிக்கு கவலையை தந்தது.

"ஒன்னும் இல்லம்மா.!" என்றவனை அமைதியாக செல்ல விட்டாள் அவள். அகிலன் ஏற்கனவே போன் செய்து விசயத்தைச் சொல்லி விட்டிருந்தான். ஆனால் அதை பற்றி இவனிடம் விசாரிக்கதான் பயமாக இருந்தது. ஏற்கனவே நொந்துப் போயிருப்பான் என்று வசந்த் சொன்னாலும் கூட ரோகிணியால் அவனின் சோக முகம் கண்டு அமைதியாக இருக்க முடியவில்லை.

"சீக்கிரம் எல்லோரும் சாப்பிட வாங்க.. சாப்பாடு ருசியே மாறிடும் போல!" என்று மணியம்மா சமையலறை வாசலில் நின்றபடி சொன்னாள்.

மகிழன் தலையசைத்துவிட்டு தனது அறையை திறந்தான். இருட்டாக கிடந்தது அறை.

"மீரா" என்று அழைத்தபடியே சட்டையை கழட்டினான். பதில் எதுவும் வரவில்லை. விளக்கை ஒளிரவிட்டான். அவளை அறையில் காணவில்லை. பாத்ரூமை திறந்துப் பார்த்தவன் வெளியே வந்தான்.

"மீரா எங்கே?" என்றான் அம்மாவிடம்.

"ரூம்ல இல்லையா?" என்று ஆரவல்லி கேட்கவும் இல்லையென தலையசைத்தான்.

அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். "நானும் வந்ததுல இருந்துப் பார்க்கல.." என்றார் வசந்த்.

"மதிய சாப்பாடு இரண்டு பேரும் ஒன்னாதான் உட்கார்ந்து சாப்பிட்டோம். அப்புறம் அவ ரூம்க்குள்ள போனா. அதிகமா டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு நீ சொன்னதால நானும் கண்டுக்கல!" என்றாள் ஆரவல்லி.

மகிழன் சில நொடிகள் அதே இடத்தில் நின்றுத் தன்னையே அமைதிப்படுத்திக் கொண்டான்.

"மீரா.." அவளை அழைத்தபடியே வீட்டில் தேட ஆரம்பித்தான்.

"வீட்டுலதான் இருந்தா. வெளியே போய் இருந்தா வாட்ச்மேன் சொல்லி இருப்பாரே!" என்ற மணியம்மாவும் அவர்களோடு சேர்ந்து மீராவை தேட ஆரம்பித்தாள்.

கீழே தேடி முடித்த பிறகுதான் மகிழனுக்கு தனது பழைய அறை பற்றிய நினைவே வந்தது. அவசரமாக மாடிக்கு ஓடினான்.

மாடியின் விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றவன் தனது அறையை திறந்தான். மீரா அங்கேதான் இருந்தாள். சுவரோரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்த மகிழனின் பழைய புகைப்படத்தின் அருகே சுருண்டுப் படுத்துக் கிடந்தாள்.

நிம்மதியோடு மூச்சு விட்டுக் கொண்டவன் "இங்கே என்ன பண்ற மீரா?" எனக் கேட்டபடி அவளருகே சென்றான். அருகே சென்ற பிறகுதான் தரையில் உறைந்துக் கிடந்த ரத்தத்தை கவனித்தான். இதயம் நிற்காத குறைதான்.

"மீரா!" அதிர்ச்சியோடு கத்தியபடி அருகே சென்று மண்டியிட்டான். அவளின் மணிக்கட்டிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அருகே கத்தி ஒன்று இருந்தது.

நெற்றியில் அடித்துக் கொண்டவன் "என்னை கொல்ல நீ ஒருத்தியே போதும் மீரா!" என்றபடி அவசரமாக அவளின் துப்பட்டாவை எடுத்து மணிக்கட்டை சுற்றிக் கட்டினான். மயங்கி கிடந்தவளின் கன்னத்தில் தட்டினான். பயத்தோடு சுவாசத்தை பரிசோதித்தான். மூச்சு வந்துக் கொண்டிருந்தது.

அவளை தூக்கிக் கொண்டு கீழே நடந்தான்.

ரோகிணி அருகே ஓடி வந்தாள்.

"என்னடா ஆச்சி?" என்றாள்.

"சூஸைட் அட்டெம்ட்!" வெறுத்துப் போன குரலில் சொன்னான் அவன்.

"பைத்தியமா இவளுக்கு? மதியம் கூட என்னோடு நல்லாதானே பேசிட்டு இருந்தா? அதுக்குள்ள என்ன வந்தது?" ஆரவல்லி புலம்பலாக கேட்டாள்.

வசந்த் அவசரமாக வெளியே ஓடினார். காரை ஸ்டார்ட் செய்தார்.

அம்மா மகனோடு சேர்ந்து நடந்தாள்.

"என்னடா ஆச்சி இவளுக்கு! நாங்க கூட எதுவும் சொல்லலையே!" என்றாள்.

"நானும் கூட எதுவும் சொல்லல அம்மா!" சிறு குரலில் சொன்னவனுக்கு ஜீவனே இருக்கவில்லை.

மீராவை காரில் கிடத்தி அருகே அமர்ந்தான். ரோகிணி அமர்ந்ததும் வசந்த் காரை எடுத்தார்.

"செத்துடுவாளா அம்மா?" என்றான் மகிழன் செல்லும் வழியில்.

"அப்படி எதுவும் ஆகாது. நீ தைரியமா இரு!" என்றார் வசந்த்.

'நான் ஆபிஸ் கிளம்பும் போது கூட நல்லாதானே மீரா இருந்த? அப்புறம் ஏன்? உன்னை நான் டார்ச்சர் பண்ணிட்டேனா? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா மீரா? சாக முயற்சி பண்ணவளுக்கு என்னையும் கூப்பிடணும்ன்னு தோணலையா?' அவளின் முகம் பார்த்துத் தனக்குள் கேட்டான்.

மீராவின் முகத்தில் காய்ந்த கண்ணீர் கோடுகள் இருந்தது.

'ஏன் மீரா இவ்வளவு அழுதிருக்க? என்னாச்சிம்மா? என்ன பிரச்சனை? நான் வரும் வரை காத்திருக்க தோணலையா? என்கிட்ட சொல்ல தோணலையா உனக்கு?' என தனக்கு தானே கேட்டவனுக்கு பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது.

மருத்துவமனையில் மீராவுக்கு சிகிச்சை நடந்துக் கொண்டிருந்த நேரத்தில் அகிலன் வந்து விட்டான்.

"என்னாச்சிடா? வீடியோ மேட்டர் இவளுக்கும் தெரிஞ்சிடுச்சோ?" சந்தேகமாக கேட்டான் அவன்.

மகிழன் முகத்தை தேய்த்தான். "எனக்கு எதுவும் தெரியல அண்ணா. ஆளை காணோமேன்னு தேடினா இப்படி இருக்கா." என்றவனின் குரல் கூட மிகவும் மாறி போயிருந்தது.

"என்னாச்சிடா?" என்றான் அகிலன்.

மகிழன் கூரையை பார்த்தான்.

"வெறுத்துப் போச்சி அண்ணா. வாழ்க்கையே இவதான்னு நான் இருக்கேன். ஒரு செகண்ட் கூட யோசிக்காம இப்படி பண்ணி வச்சிருக்கா. பேசாம விஷத்தை கொஞ்சம் வாங்கி இரண்டு பேரும் குடிச்சிட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும்ன்னு தோணுது!" என்றான் இறங்கிய குரலில்.

அகிலன் தம்பியை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

"விஷம் குடிச்சா பிரச்சனை தீரும்ன்னா இந்த உலகத்துல விஷத்துக்குதான் முதல் தட்டுப்பாடே வரும்டா. உனக்காவது சில பிரச்சனை. அவனவன் ஆயிரம் பிரச்சனைகளோடு சுத்திட்டு இருக்கான்.. கொஞ்ச நேரம் பொறு. எல்லாம் சரியாகிடும்!" என்றான்.

அன்று இரவில் மகிழனுக்கு துணையென அகிலன் இருந்தான். ரோகிணியும் வசந்தும் அகிலனிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்கள்.‌ மீரா உயிரோடு வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் ரோகிணி.

இனியன் இரவென்றும் பாராமல் ரோகித்தின் வீடு வந்துச் சேர்ந்தான். சாதாரண உடையில் நண்பன் போல விசாரிக்க வந்திருந்தான் அவன்.

"ரோகித் எங்கே?" என்றான் அவனின் பெற்றோரிடம்.

"அவன் வீட்டுக்கு வரதே இல்ல தம்பி. எங்கேயாவது பொறுக்கிட்டு இருப்பான்!" என்றார் அவனின் அப்பா.

அவன் வேறு எங்கே இருப்பான் என்று விசாரித்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டான் இனியன்.

அகிலனும் மகிழனும் விடிய விடிய தூங்கவே இல்லை.

மீராவுக்கு சிகிச்சை முடிந்து விட்டதாகவும், அவள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் மருத்துவர் சொன்ன பிறகும் கூட மகிழனுக்கு இதயத்தின் படபடப்பு குறைய மறுத்தது.

'மீரா தயவுசெஞ்சி பிழைச்சிடு. நான் ரொம்ப வருசம் வாழ ஆசைப்படுறேன்!' என்று அவளோடு மனதுக்குள் பேசிக் கொண்டிருந்தான் அவன்.

அகிலன் இரவில் இரண்டு மூன்று முறை தேனீரை வாங்கி வந்து தம்பியிடம் தந்தான்.

"இவளைக் கொல்லணும் போல கோபம் வருது அண்ணா!" என்றான் ஒரு முறை. "அவ மட்டும் எழலன்னா அவளை எரிக்கிற அதே நெருப்புல நானும் குதிச்சிட போறேன்!" என்றான் இன்னொரு முறை.

அகிலன் எதற்குமே பதில் சொல்லவில்லை. மீரா எழும் வரை இவனின் பைத்தியம் இப்படி முத்திப் போய்தான் இருக்கும் என்பது அவனின் கணிப்பு.

காலை விடிந்தது. மீராவுக்கு மயக்கம் தெளியவில்லை. ஆரவல்லி உணவை எடுத்துக் கொண்டு வந்தாள்.

"அவளோட அம்மாவும் அப்பாவும் வந்துட்டு இருக்காங்க!" என்றாள்.

'அவங்க வந்து என்ன கேட்க போறாங்களோ?' என்றுச் சலிப்பாக இருந்தது மகிழனுக்கு.

அகிலன் கட்டாயப்படுத்தி மகிழனை உணவு உண்ண வைத்தான்.

"ஏன் அண்ணா என் மேல பாசம் காட்டுற?" என்றான் மகிழன் உணவை உண்டபடி.

அகிலன் விழிகளைச் சுழற்றினான். "நீ என்ன கருமத்துக்கு மீரா மேல பாசமா இருக்கியோ அது மாதிரிதான்!" என்றான்.

மகிழன் கசப்பாக சிரித்தான்.

"லவ் இஸ் ப்ளைண்ட் அண்ணா!"

"ஆமா. அதுக்கு நீ ஒரு உதாரணம். நான் ஒரு உதாரணம்!" என்றவன் தம்பிக்கு இன்னும் சிறிது உணவை பரிமாறினான்.

மகிழன் அண்ணனைப் பார்த்தபடியே உணவை உண்டு முடித்தான்.

மணி பதினொன்று கடந்த நேரத்தில் மைவிழியும் அவளது பெற்றோரும் வந்துச் சேர்ந்தனர்.

மீரா மயங்கியபடியே இருக்கிறாள் என்பதை அறிந்த அப்பா "அவளை விட்டுடுங்க தம்பி. விஷ ஊசி போட்டு டாக்டர் கொன்னுடட்டும். இவளை வச்சிட்டு இருந்தா கடைசி வரை நமக்கு இம்சைதான்!" என்றார் கனத்துப் போன மனத்தோடு.

மகிழன் மாமனாரை வருத்தமாக பார்த்தான். "அதுக்காகவா நான் இத்தனை துயரங்களை தாங்கி வந்திருக்கேன்?" என்றான் வராத சிரிப்போடு.

"அவளை என்கிட்டயே கொடுத்துடுங்கன்னு அன்னைக்கே கேட்டேனே மாமா! மறுபடியும் ஏன் இப்படிச் சொல்றிங்க?" எனக் கேட்டான்.

அப்பா குமுறினார். "ஏன் தம்பி? உங்களுக்கும் அவளுக்கும் என்னதான் சம்பந்தம்? ஏன் இப்படி?" என்றார். அவருக்கே இந்த கேள்வி முட்டாள்தனமாகதான் தெரிந்தது.

மகிழனுக்கு தன் பதிலும் கூட முட்டாள்தனமாகதான் தோன்றியது. "அவ என் விதி மாமா!" என்றான் மருத்துவமனை அறையின் கதவைப் பார்த்தபடி.

'விதி வாழ்க்கையை அளிக்குமா? இல்ல அழிக்குமான்னு எனக்கே தெரியல மாமா. ஆனா அழிஞ்சாலும் அவளோடு சேர்ந்துதான் அழிவேன் நான்!' என்றான் மனதோடு.

ரோகித் எங்கு தேடியுமே கிடைக்கவில்லை. அவனிடமிருந்து மகிழனுக்கு போனும் கூட வரவில்லை. கதிர், அதியன், செழியன், சரண் என அனைவரும் ரோகித்தைதான் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவனின் நிழலை கூட கண்டறிய முடியவில்லை.

சிறையில் சாரதிக்கும் வினய்க்கும் பயங்கர கவனிப்பு நடந்தது. ஆனால் அவர்களுக்கும் கூட ரோகித் இருக்கும் இடம் தெரியவில்லை.

சாரதிக்கும், வினய்க்கும் நடக்கும் கவனிப்பு பற்றி வெளியே விசயம் கசியவில்லை.

மைவிழி மகிழனுக்கு ஆறுதல் சொன்னாள்.

"அவளோட பிடிவாதத்தை ஆரம்பத்துலேயே கண்டிக்காம விட்டது எங்க தப்புதான்!" என்றாள் அவள்.

மகிழனுக்கு மைவிழி மீதுதான் கோபம் வந்தது.

"அவளுக்கு பிடிவாதம் கிடையாது சிஸ்டர்.. அவளோடது ரொம்ப சாதாரண கோபம். ஆனா அவளோட இந்த முடிவுக்கு காரணம் இந்த சமூகம்.. இந்த சூழ்நிலை." என்றான் ஆத்திரத்தோடு.

அவனின் கோபம் கண்டு மைவிழிக்கு பயமாக இருந்தது.

"அவளோட இடத்துல யாரா இருந்தாலும் இதைதான் செய்வாங்க. ஏனா இங்கிருக்கும் *** அப்படி!" என்றான்.

அவன் பேசுவதை கேட்டு அகிலனுக்கு சங்கடமாக இருந்தது.

"சாரிங்க.. சரியா சாப்பிடல. நைட்டும் தூங்கல. அதான் இப்படி பேசுறான். நீங்க தப்பா எடுத்துக்காதிங்க!" என்றான். மைவிழி புரிந்ததாக தலையசைத்தாள்.

அன்று இரவு வரையிலுமே மகிழன் அமர்ந்த இடத்தை விட்டு நகரவில்லை.

மைவிழியும் அவளின் பெற்றோரும் மகிழனின் வீட்டிற்கு சென்று விட்டிருந்தனர். மீரா கண் விழிப்பாளா என்று காத்திருந்தான் மகிழன்.

முன்னிரவு நேரத்தில் மெள்ள கண்களைத் திறந்தாள் மீரா. கண்களைச் சுருக்கியவளுக்கு முதல் பார்வையிலேயே கணவன்தான் கண்ணுக்கு தெரிந்தான்.

சாகவில்லை என்பது புரிந்துக் கோபமும் வருத்தமும் ஒரு சேர வந்தது.

"மீரா.. மெண்டல் பொண்ணே! உனக்கு என்ன வந்ததுன்னு இப்படி செஞ்ச?" கோபத்தில் காதோரம் கத்தியவனை பொருட்டாக மதிக்காவள் தன் கையிலிருந்த சலைன் இணைப்பை பிடுங்கி எறிய முயன்றாள்.

அவசரமாக அவளின் கையைப் பற்றினான் அவன்.

"என்னைப் பார்த்தா உனக்கு பைத்தியம் போல இருக்கா?" எனக் கேட்டான்.

"என்னை விட்டுடுங்க. ப்ளீஸ். மகி இல்லாத உலகத்துல என்னால இருக்க முடியாது!" என்றாள் காற்றோடு உரசும் சிறு குரலில்.

மகிழனுக்கு விசயமே புரியவில்லை.

"என்ன சொல்ற?" என்றான்.

"என் மகி செத்துட்டான்னு ஏன் என்கிட்ட சொல்லல நீங்க? எனக்கு நீங்க பிரெண்ட்ன்னு சொன்னிங்க. ஆனா என் மகி இறந்துட்டான்னு.." மேலே சொல்ல முடியாமல் விம்மினாள்.

மகிழன் தலையை கீறிக் கொண்டான்.

"மகி செத்துட்டான்னு உனக்கு யார் சொன்னது?" என்றான் நிதானமாக.

அழுதுக் கொண்டிருந்தவள் இவனின் கேள்வி காதில் விழாதது போல இருந்தாள்.

"கேட்கிறேன் இல்ல?" பெருங்குரலில் அதட்டினான்.

அவளின் அழுகை சத்தமும் அதிகரித்தது. "போன்ல சொன்னாங்க.. மகிக்கு ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டான்னு சொன்னாங்க. நான் அவனோட ரூம்ல டாக்டர் சர்டிபிகேட்ஸையும் பார்த்தேன்!" என்றவள் முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள்.

போன் செய்தது யாராக இருக்குமென்று அவனால் சட்டென்று யூகிக்க முடியவில்லை.

அழுதுக் கொண்டிருந்தவளின் கையைப் பற்றினான்.

"மகி சாகல!" என்றான்.

இல்லையென தலையசைத்தவள் "என் மகி செத்துட்டான். அவன் சொன்னதாலதான் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. நான் என் மகிக்கு மறுபடியும் துரோகம் செஞ்சிட்டேன்.." என்றாள் அழுகையின் இடையே.

"மீரா வில் யூ செட் அப் ப்ளீஸ்?" அதட்டிக் கேட்டவனுக்கு மறுப்பாக தலையசைத்துவிட்டு அழுதுக் கொண்டு இருந்தாள் அவள்.

"மகி சாகல. அவன் இங்கே வந்தா உன் அழுகை நின்னுடுமா? இந்த தற்கொலை முயற்சி நின்னுடுமா?" எனக் கேட்டான்.

மீரா அழுகையை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள். 'மகி இறந்துப் போனதாக சொன்னார்களே. அது பொய்யா?' என்று குழம்பினாள்.

"அவனுக்கு போன் பண்ணட்டா?" எனக் கேட்டான்.

வேண்டாமென தலையசைத்தவள் "நீங்க மிமிக்ரி பண்ணி என்னை ஏமாத்திடுவிங்க!" என்றாள்.

'சம்பந்தமே இல்லாத நேரத்துல புத்தி வேலை செய்யுது!' என்று நொந்தவன் "உன் மகி சாகல. உன் குற்ற உணர்ச்சிக்கு பயந்து நான் இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன். ஆனா நீ சூஸைட் டிரை பண்ணி என்னை உயிரோடு புதைக்க டிரை பண்ற. அதனால மட்டும் சொல்றேன். நான்தான் உன் மகி!" என்றான் அவனின் உண்மை குரலில்.

மீரா அவனை வித்தியாசமாக பார்த்தாள்.

"பேஸ்ல சர்சரி பண்ணி இருக்கேன் மீரா. நான்தான் உன் மகி. முகம் மாறிடுச்சி. ஆனா என்னை அடையாளம் தெரியலையா? அட்டாக் வந்தது உண்மைதான். ஆனா நான் சாகல. உனக்கு டாக்டர் சர்டிபிகேட்ஸை சரியா படிக்க தெரியல. நான் உன் கண் முன்னாடி உயிரோடுதான் இருக்கேன். யாரோ போன்ல உன்கிட்ட பொய் சொல்லி இருக்காங்க. நான் உன்னை விட்டுப் போயிடுவேன்னு நினைச்சியா?" எனக் கேட்டான்.

மீரா மறுப்பாக தலையசைத்தாள்.

"பொய் சொல்றிங்க!" என்றாள் பயத்தோடு.

அவளின் கன்னங்களை அள்ளினான்.

"சத்தியமா உனக்கு என்னை அடையாளம் தெரியல? வீ ஆர் நாட் செப்பரேட் பர்சென்ஸ் மீரா.. உன்னால என்னை உணர முடியலன்னு நீ சொன்னா அதை விட கேவலமான பொய் வேற எங்கேயும் இருக்காது!" என்றான்.

மீராவின் கண்களில் ஈரம் மின்னியது. இதழ்கள் துடித்தது. ஆனால் ஏதும் பேசாமல் கண்களை மூடியபடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN