கனவே 23

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீரா மகிழனின் புறம் திரும்பவில்லை. இதழின் ஓரத்தில் இருந்த துடிப்பும் நிற்கவில்லை.

"மீரா.." அழைத்தான் அவன்.

"ப்ளீஸ்!" என்றாள். அவள் சொல்ல வந்ததை அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

"அன்னைக்கு ஆக்ஸிடென்ட் நடந்தது இல்லையா? அப்ப என் முகத்துல ரொம்ப அடிப் பட்டுடுச்சி. என்னாலயே என் முகத்தை ஏத்துக்க முடியாத அளவுக்கு அடி. அந்த முகத்தோடு உன்னைப் பார்க்க எனக்கு பயமா இருந்தது மீரா. நீ என்னை வேண்டாம்ன்னு சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன். நீ வேணாம்னு சொன்னா அப்புறம் நான் என்ன செய்வேன்? என் லைப்பே நீதான். அதான் உன்கிட்ட முகத்தை காட்டாம வந்துட்டேன். சாரி மீரா.. நான்தான் மகி. நான் சாகல. உன்னை விட்டு போனேன். ஆனா திரும்பி வந்துட்டேன்!" என்றான்.

மீரா தன் கீழ் உதட்டை கடித்தாள். பெரிய முத்தாக கண்ணீர் துளி ஒன்று கீழே விழுந்தது.

"நீ.. நீங்க யாரா இருந்தாலும் பரவால்ல.. தயவு செஞ்சி என்னை விட்டு போங்க!" என்றாள் திக்கித் திணறி.

மகிழன் அதிர்ந்துப் போய் அவளைத் தன் பக்கம் திருப்பினான். அவனை நேரே பார்க்க மறுத்தாள்.

"மீரா!" என்றான். அந்த ஓர் அழைப்பில் ஓராயிரம் உணர்வுகள் கலந்து இருந்தது. கோபம், ஆதங்கம், துக்கம், காதல், வருத்தமென்று அனைத்தும் இருந்தது.

"ப்ளீஸ்.. விட்டு போங்க!" என்றாள் மீண்டும்.

"எங்கே போகட்டும்?"

சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவள் "எங்கேயாவது.. என்னை விட்டு விலகினா போதும். ஐ டோண்ட் வான்ட் யுவர் கம்பர்ட் ஆர் மெர்சினெஸ்!" என்றாள்.

அவன் பற்களை கடித்த சத்தம் அவளுக்கும் கேட்டது.

"கருணைக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கிறது கூட தப்பு கிடையாது மீரா. ஆனா உனக்கும் எனக்கும் நடுவுல வித்தியாசம் இருக்குன்னு நினைக்கிற பார்த்தியா.. அதுதான் தப்பு!" என்றவன் அவளை விட்டுவிட்டு எழுந்து நின்றான்.

"நீங்க கேட்ட தனிமையை நான் தரேன். ஆனா விட்டு போவேன்னு கனவுல கூட நினைச்சிடாத!" என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான்.

நான்கடி நடந்தவன் மீண்டும் திரும்பி வந்தான். "ஒன் லாஸ்ட் வார்னிங். இனிமே நீ செல்ஃப் ஹார்ம் பண்ணிக்கிட்டன்னா பின்விளைவு ரொம்ப மோசமா இருக்கும். நீ நினைக்கிற டால் கிடையாது நான். ரொம்ப மோசமா மாறிட்டு இருக்கேன். நீ அதை இன்னும் மோசமா மாத்திடாத!" என்றுவிட்டு சென்றான்.

மீரா இடதுக் கரத்தால் வாயைப் பொத்தினாள். அழுகைச் சத்தத்தைத் தனக்குள்ளேயே புதைத்தாள். ஆனால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

மகிழனுக்கு தன்னால்தான் அடிப்பட்டது என்ற எண்ணமும், அவன் தனக்காக தன்னையே ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்டான் என்ற உண்மையும் சேர்ந்து அவளின் மனதை உடைத்துக் கொண்டிருந்தது.

எதை யோசித்தாலும் பைத்தியம் பிடிக்கும் என்ற ஒரு நிலையில் இருந்தாள் அவள். திருமணம் முடிந்த பிறகு அவன் தன்னோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்துப் பார்த்தாள். அனைத்துமே சுட்டது. யாரின் முகத்தை நேரில் பார்க்கவே கூடாது என்று தனக்குள் வெந்துக் கொண்டிருந்தாளோ அவனையே மணம் முடித்து இருக்கிறோம் என்ற உண்மை அவளின் மூளைக்கு வலியை தந்தது.

எதையும் யோசிக்காமல் இருந்தால் மட்டும்தான் அடுத்த நொடி உயிர் வாழ முடியும் என்ற ஒரு நிலை. எப்படிப்பட்ட சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற புரிதலை நினைக்க விரும்பவில்லை அவள்.

வாழ்வு இந்த நொடியோடு முடிய வேண்டும் என்று எதிர்ப்பார்த்தாள். அடுத்து வரும் எந்த நொடியையும் எதிர்கொள்ள தைரியம் இல்லை அவளுக்கு.

மகிழன் அவள் இருந்த அறையின் வாசலோரம் கிடந்த நாற்காலியில் அமர்ந்தான். நெற்றியை பற்றியபடி வானம் பார்த்து அமர்ந்திருந்தவனின் தோளை தொட்டான் அகிலன்.

"என்ன சொன்னா? ஏன் இப்படி செஞ்சாளாம்?" எனக் கேட்டான்.

மகிழன் அனைத்து விசயத்தைச் சொன்னான்.

அகிலன் அவனை அணைத்துக் கொண்டான்.

"விடுடா.. அவ குழப்பத்துல இருக்கா. அவ நிலையில் யாரா இருந்தாலும் இப்படிதான் இருப்பாங்க!" என்றான்.

புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான் மகிழன்.

மீரா கண் விழித்து விட்டாள் என்று அறிந்து மைவிழி தங்கையை காண வந்தாள்.

"உனக்கு எங்களைக் கொல்லணும்ன்னு அவ்வளவு ஆசையா?" எனக் கேட்டுத் திட்டினாள்.

மீரா உணர்ச்சிகளைத் தொலைத்தவளாக படுத்திருந்தாள்.

"அது மகின்னு உனக்கு தெரியுமா அக்கா?" எனக் கேட்டாள்.

மைவிழி பெருமூச்சோடு ஆமென்று தலையசைத்தாள்.

"அவனைப் பார்க்க நீ பயந்த. ஆனா அவனுக்கு உன்னை விட விருப்பம் இல்ல. அதனாலதான் அப்படி பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனோடு இருந்தா நீ சரியாகிடுவன்னு அவனுக்கு நம்பிக்கை!" என்ற அக்காவை ஆச்சரியமாக பார்த்தாள் மீரா.

"அவன் சொன்னதும் உண்மைதான். நீ அவன் பக்கத்துல இருக்கும்போது குணமாகிட்டு வந்த. பசி தூக்கம் சரியாச்சி. எங்களோடு பேச ஆரம்பிச்ச. மாமாக்களோடு கூட பேசும் அளவுக்கு முன்னேறிட்ட!" என்றாள் அவள்.

மீரா யோசித்துப் பார்த்தாள். அனைத்தும் உண்மைதான். பெயர் விளங்காத மாத்திரையில் குணமாகும் கொள்ளை நோயை போல, காதலனின் அருகாமையில் தானும் ஓரளவு சரியாகி விட்டோம் என்பதைப் புரிந்துக் கொண்டாள்.

"ஏன்க்கா இப்படி பண்ணிங்க? நான் அவனுக்கு பொருத்தம் இல்லன்னு உனக்குத் தெரியாதா?" என்றவளை முறைத்தாள் மைவிழி.

சோர்ந்துப் போன முகத்தில் எவ்வளவு வலியைதான் தாங்க முடியும் என்றிருந்தது அவளை காணுகையில்.

தங்கையின் தலையை வருடினாள். "உனக்கு அவன் பொருத்தம் இல்லன்னு நினைச்சி உன்னை அவன் விட்டுப் போனான். நீயும் அதே தப்பை பண்ணாத மீரா. உங்களோட லவ் ஆரம்பத்துல எனக்கும் கூட பிடிக்கலதான். ஆனா உங்களின் காயங்களுக்கு நீங்களேதான் மருந்து எனும்போது ஏன் பிரிஞ்சி இருக்கணும்ன்னு ஆசைப்படுற?" எனக் கேட்டாள்.

தன்னை, தன் வலியை புரிந்துக் கொள்ள யாராலும் முடியாது என்று எண்ணியபடி வாயை மூடிக் கொண்டாள் மீரா.

அவளுக்கு உணவை வாங்கி வந்தான் மகிழன். மீரா அவன் பக்கம் மறந்தும் திரும்பவில்லை. மைவிழி தங்கைக்கு உணவை தந்தாள்.

மீராவின் போனை பரிசோதித்தான் மகிழன்.‌ அவளுக்கு போன் செய்தது‌ ரோகித் என்பது புரிந்தது.

இனியனிடம் விசயத்தை சொன்னான். "எங்களை வாட்ச் பண்ணிட்டு இருக்கான்னு நினைக்கிறேன் சார். நான்தான் மகின்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. நான் மீராக்கிட்ட உண்மையை சொல்லலன்னும் அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. ஏதோ கேம் ப்ளே பண்றான் சார். அவன் எங்கே இருக்கான்னு சீக்கிரம் கண்டுபிடிச்சி சொல்லுங்க சார். ப்ளீஸ்!" என்றான்.

"அவனை நாங்களும் தேடிட்டுதான் இருக்கோம் மகிழ். அவன் போன் ஆன் பண்ண அடுத்த செகண்ட் செத்தான். அதுவரைக்கும் நீங்க மீராவை கவனமா பார்த்துக்கங்க!" என்றான்.

இரண்டு நாட்கள் கடந்து விட்டது. மைவிழி மீராவின் அருகிலேயே இருந்தாள். மீரா மகிழனை அருகே ஏற்கவில்லை. அதனாலேயே மைவிழி இங்கே இருந்தாள்.

டிஸ்சார்ஜ் செய்ததும் "நான் நம்ம வீட்டுக்கு வரட்டா?" எனக் கேட்டாள் மீரா.

அவள் சொன்னதை தள்ளி நின்றுக் கேட்டுக் கொண்டிருந்த மகிழன் அவளருகே வந்தான். அவளின் கையைப் பற்றினான். மீரா கையை உருவ முயன்றாள்.

"வா இரண்டு பேரும் போய் செத்துப் போலாம்!" என்றான்.

தம்பியின் பின்னால் நின்றுக் கொண்டிருந்த அகிலன் முகத்தை மூடியபடி மறுபக்கம் திரும்பி நின்றான்.

"நான் கூப்பிட்டா எங்கே வேணாலும் வருவேன்னு ஒரு காலத்துல சொல்லி இருக்க நீ! இப்ப ஏமாத்திட்டு போகலாம்ன்னு நினைக்காத! சேர்ந்து சாகலாம். நான் ஹேப்பிதான்!" என்றான்.

மீரா சிரமப்பட்டு கையை உருவிக் கொண்டு அக்காவின் முதுகின் பின்னால் சென்று நின்றுக் கொண்டாள்.

மகிழன் நெருங்கினான். அவள் நடுக்கத்தோடு பின் நகர்ந்தாள்.

"மகி!" தம்பியை எச்சரித்தான் அகிலன்.

"உன்னை என்னால எங்கேயும் அனுப்ப முடியாது மீரா. என்னோடு வர. அவ்வளவுதான்.!" என்றவன் அவளது பொருட்கள் அடங்கிய பையோடு வெளியே நடந்தான்.

"அக்கா!" மைவிழியின் தோளில் முகம் புதைத்தாள் மீரா.

"சுயநலமா யோசிக்கிறதுக்கு சாரி மீரா. ஆனா நீ அவனோடு இருந்தா பெட்டரா இருப்ப. உன்னால சுயமா நிற்கவே முடியல. அவனுக்கும் இப்ப அதான் பிரச்சனை. இரண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சி சேர்ந்து நிற்க டிரை பண்ணுங்க. அவனுக்கும் நிறைய பிரச்சனை இருக்கு. நீ என்னைக்கும் உனக்காக யோசிச்சதே இல்ல. அட்லீஸ்ட் அவனுக்காகவாவது யோசி!" என்றாள்.

மீராவிற்கு மனமே இல்லை.

அவள் வீட்டிற்கு வந்தபோது ரோகிணி எதிர்கொண்டு அழைத்து அணைத்துக் கொண்டாள்.

"நீ இல்லாம வீடே வீடு போல இல்லை!" என்றாள்.

"என்னதான் உங்க அப்பன் உன்னை வளர்த்தினானோ? ஆவூன்னா எதையாவது செஞ்சி எங்களை இம்சை பண்ணிட்டே இருக்க!" என்று திட்டினாள் ஆரவல்லி.

"தேங்க் காட். இன்னைக்காவது நான் நல்லா தூங்குவேன்!" என்றார் வசந்த்.

"நானும்ப்பா!" என்றபடி தந்தையை அணைத்தான் அகிலன்.

"மணியம்மா சமையலையும், என் ரூமையும், உங்களையும் நான் எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?" எனக் கேட்டான் அவன்.

மீராவுக்கு திகைப்பாக இருந்தது. அவர்கள் அனைவருமே அவள் மீது பாசம் காட்டினார்கள். அது அவளுக்கு பயத்தைதான் தந்தது.

மணியம்மா சத்தான உணவு என்று ஏதேதோ பரிமாறினாள். அத்தைக்கும் அக்காவிற்கும் இடையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு நிமிர கூட தைரியம் வரவில்லை.

மகிழன் பார்த்துக் கொண்டேதான் இருந்தான். அவளின் முகத்தில் தெரிந்த கருமையும், அவளின் கண்களில் தெரிந்த பயத்தையும். உயிர் போகும் பயத்தை விடவும் பெரிய பயத்தைக் கொண்டிருந்தாள். அவள் அவனை நேராக பார்த்து முழுதாக இரண்டரை நாட்கள் முடிந்து விட்டது. அவனின் நிழலை கண்டும் பயந்தாள். அவன் மற்றவர்களோடு பேசினால் கூட தனக்குள் ஒடுங்கினாள். அவன் தன்னருகே வருகையில் தன்னையும் மீறி நடுங்கினாள்.

அன்றைய மாலை வேளையில் மைவிழியும் அவளின் அப்பாவும் ஊருக்கு கிளம்பினார்கள்.

"அந்த பையனுக்கு உன்னை கட்டித் தரதுல எனக்கு ஆரம்பத்துல விருப்பம் இல்ல மீரா. ஆனா என் கால்ல விழுந்து உன்னை கல்யாணம் பண்ணியிருக்கான். அவன் மட்டுமில்ல அவன் மொத்த குடும்பமும் என்கிட்ட கெஞ்சி கேட்டதாலதான் உன்னைக் கல்யாணம் பண்ணித் தந்தேன். என்னை நீ தப்பா நினைக்க மாட்டேன்னு நம்புறேன். எப்படியாவது நீ சரியாகிடணும்ன்னு ஆசை எனக்கு. அவ்வளவுதான்!" என்றபடி அவளின் தலையை வருடி தந்தார் அப்பா.

மீரா தந்தையின் நெஞ்சில் சாய்ந்தாள். அவளின் நெருக்கம் அவருக்குச் சற்று நிம்மதி தந்தது. சில வாரங்கள் முன்பு வரை பெற்ற தந்தையை கண்டே பயந்து நடுங்கியவள் அவள். இப்போது இந்த அளவிற்கு அவள் மாறியிருப்பதே அவருக்குப் பெரிய நிம்மதியை தந்தது.

"தேங்க்ஸ் அப்பா!" என்றாள் சிறு குரலில்.

மைவிழியும் அப்பாவும் கிளம்பிய பிறகு தனியாய் ஹாலில் அமர்ந்திருந்தாள் மீரா. அனைவரும் அங்கேயேதான் இருந்தார்கள். ஆனால் அவள் யாரோடும் பேசாமல் நெருங்காமல் அமர்ந்திருந்தாள்.

மகிழனும் அவளைத் தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை. வீட்டில் நிலவும்‌ அமைதி கண்டு ஆரவல்லிதான் மருமகளிடம் பொதுவான விசயங்களை பேசினாள்.

சூழும் இருளை ஜன்னல் வழி வெறித்தபடி அமர்ந்திருந்த மீராவிற்கு யாரின் உரையாடலும் காதில் ஏறவில்லை. நெஞ்சாம் கூட்டில் வெறுமை மட்டும் எக்கச்சக்கமாக இருந்தது.

"மீரா!" அகிலன் அழைத்தபடி வந்து அவளருகே அமர்ந்தான்.

மீரா நிமிர்ந்துப்‌‌ பார்த்தாள்.

"சாரி.." என்றான்.

அவளின் அமைதி கண்டவன் "அவன் என் பேரை யூஸ் பண்ணிக்கிட்டான். ரொம்ப கெஞ்சினான். அதனாலதான் ஓகே சொன்னேன். ஆனாலும் அவன் உன்னை ஏமாத்தியதுல எனக்கும் பங்கு இருக்கு. சாரி. உனது ஏமாற்றத்திற்கும், உனது மன உளைச்சலுக்கும் சாரி." என்றான்.

மகிழனின் சாயல் இவனிடம் அதிகம் இருந்தது. வித்யாவை விடவும் இவனிடம் சாயல் அதிகம். மீரா அவனின் முகத்தை ஆராய்வது கண்டு மகிழனுக்கு கடுப்பாக இருந்தது.

அகிலனுக்குமே கூட வெட்கம் வந்தது. மச்சினனை ஆளை அடிக்கும் பார்வை பார்த்தால் யாருக்குதான் வித்தியாசம் தோன்றாது?

"இட்ஸ் ஓகே!" என்றாள் நிமிடங்கள் கடந்து. அரை புன்னகை இருந்தது அவளின் இதழில். அகிலனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

"தேங்க்ஸ்யா! அவனையும் மன்னிச்சிடு. நல்ல பையன்தான்!" என்றான் தம்பியை கை காட்டி. மீரா அவன் கை காட்டிய திசையைப் பார்க்கவில்லை. ஜன்னல் பக்கம் மீண்டும் பார்வையை திருப்பிக் கொண்டாள். அகிலன் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு எழுந்துக் கொண்டான். தம்பியை பார்த்து உதடு பிதுக்கினான்.

இரவு உணவிற்கு மணியம்மா அழைத்தாள். எந்திரம் போல அமர்ந்து உணவை முடித்தாள். மாத்திரைகளையும் மணியம்மாவே கொண்டு வந்து தந்தாள். வாங்கி போட்டுக் கொண்டாள்.

மகிழன் தந்தையோடு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அறைக்கு வந்து விட்டாள். முதல் நாள் அவன் அணைத்தபடி படுத்திருந்ததை நினைத்தாள். கண்ணீர் வற்றிய கண்களில் சோகம் மட்டும் நிரம்பியது.

அவன் பயன்படுத்தும் தலையணையையும், போர்வையையும் எடுத்துக் கொண்டு வந்து சோஃபாவில் படுத்துக் கொண்டாள். அறுத்துக் கொண்ட கை எரிந்தது. மருத்துவமனையை வெறுத்தாள். அடிக்கடி அங்கே செல்வது போலிருந்தது.

கையை பார்த்தாள். இப்படி அறுத்துக் கொண்டதற்கு பதிலாக மகி என்று கீறிக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்தாள். ஆனால் அந்த கீறலை பார்க்கையில் தனக்கு மட்டும்தான் பெருமையாக இருக்கும், அவனுக்கு வலியாக மட்டும்தான் இருக்கும் என்பது புரிந்து தனது எண்ணத்திற்கு தன்னையே திட்டிக் கொண்டாள்.

"நீ நிஜமா இங்கேதான் தூங்க போறியா?" மகிழனின் குரல் கேட்டு துள்ளி விழுந்தவள் அவன் பக்கம் பார்த்தாள். அரை நொடியில் பார்வையை மாற்றிக் கொண்டவள் "ம்!" என்றாள்.

மகிழன் அவளின் அருகே மண்டியிட்டான். மீரா போர்வையை முகத்தோடு போர்த்தியபடி திரும்பிக் கொண்டாள்.

"கண்ணாமூச்சி விளையாடுறியா?" என்றான் சிரிப்போடு.

அவனின் சிரிப்பு இதயத்திற்கு இதம் தந்ததை அவளால் மறுக்க முடியவில்லை. இந்த சிரிப்பிற்காக எதையும் செய்வாள் அவள்.

"மீரா!" என்றான். அவனின் அழைப்பு இயல்பாய் நடுக்கம் தந்தது.

"போ மகி!" என்றாள்.

"துரத்தாதே மீரா!"

"என்னை கொல்லாதே நீ! போ.. ப்ளீஸ்! இல்லன்னா நான் வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்!" என்றாள்.

அவனுக்குச் சிரிப்பாக வந்தது. வலி மிகுந்துப் போகையில் வரும் சிரிப்பு அது.

"என்னையும் கூட்டிட்டுதானே ஓடப் போற?" என்றான். அவள் மௌனமாக இருந்தாள். போர்வையின் மீது கையை பதித்தான்.

மீரா இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டாள். ஏதேதோ யோசனைகள் வந்தது. அவனின் கரம் பட்ட இடமெல்லாம் ஒரு மாதிரி உணர்வை தந்தது. சாக்கடையாய் இருப்பவளை தொடுகிறானே என்று அழுகையாக வந்தது.

சாரதியும் வினய்யும் தொடுகையில் அருவெறுப்பு வந்தது போலவே இவன் தீண்டலில் அதற்கு நேர் எதிராய் என்னவோ தோன்றியது. அவனுக்கு அருவெறுப்பாக இருக்குமோ என்ற எண்ணம் வந்தது. குப்பை, பழங்களை சிதைக்கும் புழுக்கள், அலங்கோலம், அசிங்கம் என்று எதுவாக எல்லாம் நினைக்க கூடாதோ அதுவாகவெல்லாம் தன்னை நினைத்துக் கொண்டாள்.

"தொடாதே மகி. ஐயம் பெக்கிங் யூ!" என்றாள்.

மகிழன் கரத்தை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

"என்னை வதைக்காத மகி. என்னை விட்டுடு. ப்ளீஸ்!" என்றுக் கெஞ்சினாள்.

"சீன் போதும். நான் இனி பக்கத்துல வரல. அமைதியா தூங்கு. குட் நைட்!" என்றுவிட்டு எழுந்துச் சென்றான்.

இரவெல்லாம் இருவரும் உறங்கவேயில்லை. அரை வெளிச்சத்தில் தெரிந்த அவனின் முகத்தை போர்வை சந்தில் பார்த்தாள் அவள்.

"இங்கே வா மீரா. நல்லா ரசிப்ப என்னை!" என்றான் சில நிமிடங்கள் கடந்த பிறகு.

மீரா அவசரமாக போர்வையை இழுத்துக் கொண்டாள். சிரித்தான் அவன்.

"விளையாடுற.. விளையாடு!" என்றான் கேலியாக.

"தூக்கம் வர மாட்டேங்குது மீரா. இங்கே வா. உன்னை எதுவும் செய்ய மாட்டேன் நான். உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?" என்றான்.

மீரா பதில் சொல்லவில்லை. அவளை திரும்பிப் பார்த்தான். அசையாமல் இருந்தாள்.

"தூங்கிட்டியா? இல்ல தூங்குற மாதிரி நடிக்கிறியா? என்னவோ போ.. பல வருச நரகம். ஒரு நாள்ல முடியும்ன்னு ஆசைப்படலாமா?" என்றவன் கண்களை மூடி உறங்க முயன்றான்.

பொழுது விடிந்தது. ஆனால் இடையில் நூறு முறை கண் விழித்திருப்பாள் மீரா. மாத்திரை மருந்து எதுவும் வேலை செய்யவில்லை.

அவன் குளித்து விட்டு வந்த போது அவள் ஹாலில் அமர்ந்து காப்பியை பருகிக் கொண்டிருந்தாள்.

மகிழன் ஈர தலையை கலைத்து விட்டபடி அவளருகே வந்து அமர்ந்தான். அவன் தீண்டியதும் அனிச்சையாக நடுங்கியவள் எவ்வளவோ முயன்றும் முடியாமல் காப்பியை கீழே சிதற விட்டு விட்டாள். காப்பி முழுக்க அவள் மீதுதான் கொட்டியிருந்தது.

"மீரா!" அதிர்ச்சியோடு அவளை எழுப்பி நிறுத்தினான் மகிழன். நடுக்கத்தோடு அவனை விட்டு விலகியவள் "ஒன்னும் ஆகல. என்னை விடு!" என்று விட்டு அறைக்கு சென்றாள்.

தொடையிலும் காலிலும் எரிந்தது. மாற்று உடையோடு குளிக்க சென்றாள். குளியலறை முழுக்க அவன் வாசம். குளிக்க மறந்து நின்றாள்.

இவ்வளவு நாள் இவனை இனம் காணாமல் போனது வருத்தத்தை தந்தது.

மனம் முழுக்க சோகம் இருந்தும் அழுகை வரவேயில்லை. அவளுக்கே வியப்பாக இருந்தது.

அவள் குளித்து விட்டு வந்தபோது மகிழன் காத்திருந்தான். அவளின் கையை பார்த்தான். காயத்தை சுத்தம் செய்து விட்டிருந்தாள்.

"காப்பி சுட்டுடுச்சா?" எனக் கேட்டவனிடம் இல்லையென தலையசைத்தாள்.

அவன் மருந்து எடுத்து வந்து அவளின் கையில் தடவி விட்டான். அவள் நடுங்கினாலும் அவன் கண்டுக் கொள்ளவில்லை‌. அவள் கெஞ்சினாலும் அவன் பொருட்படுத்தவில்லை.

"என்னை பார்க்கவே மாட்டியா நீ?" அவளின் கையை விட்டுவிட்டு கேட்டான்.

மீரா நிமிரவில்லை. அவளின் தாடையைப் பற்றி நிமிர்த்தினான்.

தரை பார்த்திருந்தது விழிகள்.

"மீரா.. கிவ் அப் யுவர் ஸ்டப்பர்ன் ப்ளீஸ்!" என்றான்.

அவளின் விழிகளில் இருந்த சிறு நிம்மதியை அவனால் காண முடிந்தது. அவளின் முகத்தில் இருந்த பழைய சோர்வு கூட மறைந்து விட்டிருந்தது.

"நீ என்னைப் பார்க்கும் வரை நான் இன்னைக்கு இந்த இடத்தை விட்டு நகருவதா இல்ல!" என்றான்.

"பிடிவாதம் எனக்கு இல்ல. உனக்குதான்!" என்றாள் எங்கோ பார்த்தபடி.

"நாம நார்மலா பேசி ரொம்ப நாள் ஆச்சி!" என்றவன் அவளை நெருங்கினான்.

அவசரமாக அவனைப் பிடித்துப் பின்னால் தள்ளினாள்.

"பக்கத்துல வராத மகி!" கண்களை மூடியபடி கத்தினாள்.

அவளின் திடீர் ஆத்திரம் கண்டு கொஞ்சம் பயந்து விட்டான் அவன்.

"மீரா!"

"டோன்ட் கால் மீ! அன்ட் டோன்ட் டச் மீ! நீ டச் பண்ணா எனக்கு ஒரு மாதிரி இருக்கு மகி. ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிற? அருவெறுப்புக்கு எதிர் பதம் எதுன்னு தெரியல மகி. ஆனா அந்த மாதிரிதான் பீல் ஆகுது. உன்னை நான் எப்படி லவ் பண்றேன், என்ன லவ் பண்றேன்னு உனக்கு புரியாது. உனக்கு நான் எந்த விதத்திலும் சமம் கிடையாது. நீ எதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி நிம்மதியா இருந்திருக்கலாம். ஏன் என்னை கல்யாணம் பண்ணி என்னை டார்ச்சர் பண்ற? என்னை சித்திரவதை செய்ற நீ! என் பயமும் உனக்கு புரியாது. என் கஷ்டமும் உனக்கு புரியாது.." என்றவளின் முகத்தை மீண்டும் பற்றியது அவனின் கரம்.

சலிப்பாக இருந்தது அவளுக்கு. என்ன சொன்னாலும் புரியாமல் இருக்கிறானே என்று எரிச்சல் வந்தது.

"உனக்கு பைத்தியம் பிடிச்சிட்டு இருக்கு. அதை என்னால குணப்படுத்த முடியும். உன்னை நான் டச் பண்ண கூடாதுன்னு சொல்ல உனக்கு எந்த உரிமையும் கிடையாது. யூ ஆர் மைன். உன் பைத்தியக்காரத்தனத்தை இவ்வளவு நாள் பொறுத்துட்டு போறேன்னா அதுக்கு காரணம் என் லவ்! எனக்கு சொந்தமானவளை, என்னுடையவளை நீ கேவலமா நினைக்கிறதையோ, பேசுறதையோ என்னால ஏத்துக்க முடியாது. உன் ப்ராபர்டி நான். என்னை என்ன வேணாலும் சொல்லிக்க. ஆனா உன்னை எதுவும் சொல்லிக்காத.!" என்றான்.

அவனின் கையை தட்டி விட்டாள். நிமிர்ந்து அவனை முறைத்தாள். அவளின் சிவந்த மூக்கின் மீது சுட்டு விரல் பதித்தான் அவன்.

"கெட் லாஸ்ட்!" என்றவள் அவனை தாண்டிக் கொண்டு நடந்தாள். விலக விடாமல் பிடித்து இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன் "கோபத்துல கூட நீ க்யூட்!" என்றான்.

"ஆனா நீ எல்லா நேரத்திலும் எருமை மாடு மட்டும்தான்!" என்றாள் அவள்.

அவளின் நடுக்கமும் கோபமும் சரி சமமாக இருந்தது கண்டு பரிதாபமும் நிம்மதியும் ஒன்றாய் வந்து சேர்ந்தது அவனுக்கு.

"எருமைகளும் கூட க்யூட்தான்!" என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவளின் மனநிலை அவளையும் மீறி விட்டது. குற்ற உணர்வின் அதிகப்படியும், தாழ்வை உணர்வின் கடைசி நிலையும் சேர்ந்துக் கொண்டு விட்டது. அவனின் கன்னத்தில் ஒரு அறையை விட்டாள்.

அவனை விட்டு நகர்ந்து வந்து நின்றாள். அவளை வெறித்தபடி நின்றிருந்தான் அவன்.

"நான் ரொம்ப நொந்துப் போயிருக்கேன். ப்ளீஸ் என்னை விட்டுடு. இல்லன்னா நான் மனசொடிஞ்சே செத்துடுவேன். ஐ நோ யுவர் பீலிங்க்ஸ். பட் ஐ காண்ட்! எனக்கு மட்டும் இந்த நரக மன நிலையோடு வாழ ஆசையா? உன்னுடனான என் லைப்பை எப்படியெல்லாம் கற்பனைப் பண்ணி வச்சிருந்தேன் தெரியுமா? அத்தனையும் நாசமாயிடுச்சின்னு உள்ளுக்குள்ள அழுதுட்டு இருக்கேன். நீரழிவு நோயாளியிடம் தர பால்கோவாவுக்கும் நீ என்கிட்ட காட்டுற பீலிங்ஸ்க்கும் நடுவுல எந்த வித்தியாசமும் இல்ல." என்றாள் கோபத்தோடு.

மகிழன் தலையை கோதி விட்டுக் கொண்டான்.

"வருசம் முழுக்க அழுதுட்டே இருக்க போறியா நீ?" என்றான் புருவம் உயர்த்தி.

இவனை திருத்த முடியாதா என்பது போல பார்த்தவள் "நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவ! உன் மரமண்டைக்கு புரியுதா அது? என்னாலதான் உன் முகம் சிதைஞ்சி போச்சி. என்னாலதான் உனக்கு அட்டாக் வந்தது. என்னை பக்கத்துல வச்சிருப்பதே ஒரு பேட் சைன்தான். தயவு செஞ்சி என்னை தொல்லை பண்ணாம விட்டுடு!" என்று கடைசி வரியில் கெஞ்சலை இணைத்தாள்.

"உன் லைஃப்ல நடந்த கெட்ட காரியங்களுக்கும் நான்தான் காரணம். என்னையும் இப்படி ஒரு கெட்ட சகுனமாகதான் நினைக்கிறியா மீரா? என்னை லவ் பண்ணாம இருந்திருந்தா உன் லைஃப் நல்லா இருந்திருக்கும்ன்னு நினைக்கிறியா?" என்றான் அடிப்பட்ட குரலில்.

மீரா அதிர்ச்சியோடு நிமிர்ந்தாள். இல்லையென தலையசைத்தாள்.

"இல்லன்னு சொன்னாலும் அப்படிதான் நினைச்சிருக்கன்னு பார்த்தாலே தெரியுது. சாரி. உன் லைப் நாசமாக காரணமானதுக்கு சாரி. நீ போகலாம். நான்தான் தப்பு பண்ணிட்டேன். டைவர்ஸ் தந்துடுறேன்‌. நான் கட்டிய தாலியை தந்துட்டு நீ இப்பவே போயிடு. உன்னை இனி பார்க்க விரும்பல நான். என் துரதிஷ்டம் என்னோட முடியட்டும்!" என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN