கனவே 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீரா யோசித்தாள். மகிழன் இப்போது கோபத்தில் பேசுகிறான் என்றாலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவனை விலகிச் சென்றால் அவன் நலமாய் வாழ்வான் என்று நினைத்தாள்.

'கொஞ்ச நாள் திட்டுவான். கஷ்டப்படுவான். ஆனா அப்புறம் சரியா போயிடுவான். உன்னை போல ஒரு சாக்கடை அவனுக்கு வேணாம் மீரா. அவனுக்கு எப்போதும் பெட்டர் மட்டும்தான் கிடைக்கணும்!' எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவள் கழுத்தைத் தொட்டாள்.

'உன்னை கல்யாணம் செஞ்சிக்க நான் விரும்பல மகி. உன் முன்னாடி நிற்க கூட நான் பயப்படுறேன். நீ இப்படி கேம் ப்ளே பண்ணி என்னை இந்த சிக்கலான சுழல்ல சிக்க வச்சிட்ட. ஆனா நான் உன்னை ஏமாத்த விரும்பல.' என நினைத்தபடி தாலிக் கயிறை கையில் எடுத்தாள். அதே நேரத்தில் அவளின் சுண்டு விரலை பற்றினான் மகிழன். தனது கட்டை விரல் நகத்தை அவளின் சுண்டுவிரல் மீது வைத்து அழுத்தமாக கிள்ளினான்.

யோசனையில் இருந்தவள் தன் முன் இருந்தவனை கவனிக்கவில்லை. ஆனால் இப்போது அவன் சுண்டுவிரலை பிடித்துக் கிள்ளவும் வலியில் நிமிர்ந்தாள்.

வலித்தது. சுண்டு விரல் தனியே வந்து விடும் போலிருந்தது.

பற்களைக் கடித்தபடி தன்னை வெறித்தவனை முறைத்தாள்.

"நான் சொன்னா தாலியைக் கழட்டுவியா நீ? என்னைப் பார்த்தா உனக்கு லூசு மாதிரி தெரியுதா?" எனக் கேட்டான் அவன்.

"விரலை விடுடா தடி பயலே.. வலிக்குது!" துள்ளியவள் மறு கையால் அவனைத் தன்னிடமிருந்து தள்ள முயன்றாள்.

"உன்னை விட மாட்டேன் நான். இது உனக்கே தெரியும். இருந்தும் ஏன் இவ்வளவு போராடுற?"

"விரலை விட்டுட்டு பேசுடா பைத்தியக்காரா!" துள்ளிக் கொண்டிருந்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டியது.

மறு கரத்தால் அவனின் தோளில் அடித்தாள். கல் சிலையாக அசையாமல் நின்றான்.

"என்னை பிரிஞ்சி போவியா?"

"இப்படியே நீ விரலை கட் பண்ணி விட்டா நான் செத்துட மாட்டேனா?" பரிதாபமாக கேட்டவளை கோபத்தோடு பார்த்தவன் "என் கேள்விக்குப் பதில் வரல!" என்றான்.

மீரா தன் விரலை பார்த்தாள்.

"டூ யூ லவ் மீ!?"

"அதைதானடா இத்தனை வருசமா பண்ணிட்டு இருக்கேன்!? மெண்டல் கையை விடு.. இல்லன்னா நான் அத்தை பாட்டி எல்லோரையும் கூப்பிடுவேன்."

"யார் வந்தாலும் நான் பயப்பட மாட்டேன். நீ லவ் யூ சொல்லு. என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லு!" என்றான் கண்டிப்போடு.

மீரா சலித்துப் போய் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். பாதி வெற்றியும் பாதி கோபமும் அவனின் விழிகளில் தெரிந்தது.

"அன்னைக்கு ஒருநாள் இதே மாதிரி லவ் சொல்ல சொல்லி உன் காதை கடிச்சி வச்சேனே.. அதுக்கு பழிதானே வாங்கற நீ?" என்றாள்.

மகிழன் நினைத்துப் பார்த்தான்.

அவன் நல்ல உறக்கத்தில் இருந்த ஒரு மதிய வேளையில் வீட்டிற்கு வந்திருந்தாள் அவள். உறங்கிக் கொண்டிருந்தவனின் அருகே அமர்ந்து ஏதேதோ காதல் மொழி பேசிக் கொண்டிருந்தவள் அவன் கண் விழிக்காமல் இருப்பது கண்டு அவனின் காதை கடித்து வைத்தாள். பதறி எழுந்தவனிடம் "லவ் யூ சொல்லு!" என்றாள்.

பழைய நினைவுகளை அசை போட்டுவிட்டு அவளைப் பார்த்தவன் இடம் வலமாக தலையசைத்தான்.

"இல்ல. இது புது கணக்கு." என்றான்.

"சரி.. நான் இனி தாலியெல்லாம் கழட்ட மாட்டேன். கையை விடுடா!" என்றாள்.

மகிழன் தன் கரத்தை பின்னுக்கு இழுத்தான். கையை உதறினாள். பின்னர் விரலைப் பார்த்தாள். அவனின் நகம் பிறை நிலவு போல அவள் விரலின் மீது பதிந்திருந்தது.

"ம்ம்ம்.. அம்மா.." சிணுங்கி அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகை சத்தம் அதிகமாவது கண்டு அவசரமாக அவளின் வாயை பொத்தினான் மகிழன்.

"இப்ப ஏன் மத்தவங்களை கூப்பிட பார்க்கற?" என்றான் மூக்கு சிவக்க.

மீரா அவனின் கையை தள்ளி விட்டாள்.

"வயலன்ஸ் யூஸ் பண்ற நீ. நான் எல்லோர்க்கிட்டயும் சொல்லி உன்னை மாட்டி விடப் போறேன்!" என்றாள்.

"ஓ.. தாராளமா போய் சொல்லு. நீ இதுவரை எத்தனை முறை என்னைக் கடிச்சி, அடிச்சி, கொட்டி, கிள்ளி வச்சன்னு நானும் கணக்கு சொல்றேன். என்னை விட நீதான் லீட்ல இருப்ப. உன் கொடூர குணம் என்னன்னு அவங்களுக்கும் தெரியட்டும்!" என்றான் கைகளை கட்டியபடி.

வாயை மூடிக் கொண்டவள் அவனை முறைத்து விட்டு நகர்ந்தாள். எப்படி கணக்கிட்டாலும் அவள்தான் அவனுக்கு அதிக காயத்தை தந்திருப்பாள். அவன் மீது கோபம் வரும் வேளையிலெல்லாம் கொஞ்சிக் கொண்டே நிறைய முறை தலையில் தட்டி உள்ளாள்.

மீரா அன்று வித்யாவின் பள்ளிக்குச் சென்றாள். "நீங்களும் கூட என்கிட்ட உண்மையை சொல்லல அக்கா!" என்றாள் அவளிடம் வருத்தமாக.

"நீதான் அவன் பேர் சொன்னாலே பயப்படுற.. அவன் மட்டும் என்ன செய்வான்?" எனக் கேட்டாள் அவள்.

"எப்படி அக்கா உங்களால் இப்படி யோசிக்க முடியுது? எந்த அக்காவும் கெட்டு போன பொண்ணை அவங்க தம்பிக்கு கட்டி வைக்க நினைக்க மாட்டாங்க!" என்றாள் மீரா.

வித்யா சிரித்தாள். தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கவனித்தபடியே அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள்.

"இப்படி உட்கார்!" என்றாள் மீராவிடம்.

தன் அருகே அவள் அமர்ந்ததும் குழந்தைகளின் பக்கம் கை நீட்டினாள்‌.

"ரோஸ், ஜாஸ்மின்.. அந்த இரண்டு குழந்தைகளையும் பார்த்தா உனக்கு என்ன தோணுது?" எனக் கேட்டாள்.

மீரா அந்த குழந்தைகளை பார்த்தாள். இரட்டைப் பெண் குழந்தைகள். அழகான குழந்தைகள். இரண்டரை வயது இருக்கும். எப்போதும் புன்னகையோடு இருப்பார்கள்.

"அவங்களுக்கு அப்பா இல்ல!" வித்யா சொன்னது கேட்டு அதிர்ந்தாள்.

"என்னாச்சி அவருக்கு?"

"யார்ன்னே தெரியாது.!" கையை விரித்தாள் வித்யா.

"அவங்க அம்மா கொஞ்சம் தன்னிலை மீறியவள். நிறைய பாய் பிரெண்ட்ஸ், பொறுப்பு கொஞ்சமும் இல்லாம வாழ்க்கையை ஜஸ்ட் என்ஜாய் மட்டும் பண்ணிட்டு இருந்தவ. தினம் ஒருவனோடு இருப்பது நாகரீகம், பேஷன்னு நம்பி சுத்திட்டு இருந்தவ. இத்தனைக்கும் சின்னப் பொண்ணு. பசங்க அவளை யூஸ் பண்ணாங்க. அவ பசங்களை யூஸ் பண்ணா. இரண்டு பேர் மேலேயும்தான் தப்பு. தன் குழந்தைக்கு அப்பா யாருன்னு கூட தெரியாம பிரகனென்ட் ஆனவ அவ. அப்பவும் கூட குழந்தையை கலைச்சிட்டு பழைய லைஃப் ஸ்டைலுக்கு திரும்பதான் இருந்தா. ஆனா அவ அவளுக்குன்னு இருந்த அப்போதைய பிரச்சனைகளை முடிக்கும் முன்னாடி டேட் தாண்டிடுச்சி. குழந்தையை அபார்ட் பண்ண முடியாத நிலை. அதுவும் இரட்டை குழந்தைன்னு அப்புறம்தான் அவளுக்கே தெரிஞ்சது. தினமும் கை நிறைய பணம் தந்து அவளை கண்டுக்காம விட்டு கெட்டுப் போக செஞ்ச அவளோட பேரண்ட்ஸே அவளை வீட்டு விட்டு துரத்திட்டாங்க. பத்து பைசா கையில இல்ல. வயித்துல இரண்டு குழந்தைங்க. அவளோட நிலமையில் வேற யாராவதா இருந்திருந்தா தற்கொலை பண்ணியிருப்பாங்க. இல்லன்னா மறுபடியும் தவறான பாதையிலேயே நடந்திருப்பாங்க. ஆனா அவளுக்கு புத்தி வந்தது. தனக்குன்னு வேலையை தேடிக்கிட்டா. குழந்தைகளை பத்திரமா பெத்து அவங்களையும் பார்த்துக்க ஆரம்பிச்சா. அவளுக்கு இப்ப சாப்பிட கூட டைம் இல்ல. அவ்வளவு பிசியா பிசினஸ் பண்ணிட்டு இருக்கா. அவளோட அம்மா அவளை ஏத்துக்கிட்டாங்க‌. அவங்கதான் இந்த குழந்தைகளை இப்ப பார்த்துக்கறாங்க. அவ எந்த நாட்டுல இருக்காளோ இப்ப!?"

மீராவிற்கு ஆச்சரியமாக இருந்தது. முகம் தெரியாத அந்த பெண்ணின் மீது பரிதாபமும் வந்தது.

"இப்ப அவளுக்கு பாய் பிரெண்ட் இருக்கான். அவளுடைய பாஸ்டை கவலைப்படாதவன் அவன். அவளுக்கும் அவளோட பாஸ்டை நினைச்சி எந்த வருத்தமும் கிடையாது. ஏனா அவளுக்கு இப்ப முக்கியம் ப்ரொபசன் மட்டும்தான். இருபது வயசுல கற்பும் காதலும் முக்கியம்ன்னு தோணுற நமக்கே முப்பது வயசுல ப்ரொபசன் பெருசுன்னு தோணும். நாற்பது வயசுல பேமிலிதான் பெருசுன்னு தோணும். ஐம்பதுல எதுவுமே பிடிக்காது. இதுதான் நிஜம். நீ எதை கற்புன்னு நம்புறியோ அது கற்பு கிடையாது மீரா. கற்பு இங்கே இருப்பது!" என்று மீராவின் இடது நெஞ்சின் மீது கை பதித்தாள் வித்யா.

"நம் மனசோட தூய்மைதான் கற்பு. என் தம்பியை நினைச்ச அந்த மனசால அவன் கூட இருக்கும்போதே நீ இன்னொருத்தனை நினைச்சா அப்ப வேணா கற்பு கெட்டு போனதா சொல்லலாம். உன் காதல் புனிதமா இருக்கும்வரை உன் கற்பும் புனிதம்தான். சின்ன பொண்ணு நீ. லைப்ன்னா என்னன்னே தெரியல. மகிழோடு சேர்ந்து ஒரு சின்ன கூட்டுக்குள்ளயே இருந்துட்ட. லைஃப் என்னன்னு தெரிஞ்ச பிறகு இப்ப அழுததை நினைச்சி பீல் பண்ணுவ. என்னடா இவ இப்படி சொல்றாளேன்னு நினைக்காத! எந்த காலமா இருந்தாலும் கற்புங்கறது மனசுக்கு மட்டும்தான் சொந்தம். உடம்புக்கு கிடையாது.!" என்றாள்.

வித்யா தன் மனதை மாற்ற முயல்கிறாள் என்பது மீராவுக்கு புரிந்தது. ஆனால் எதையும் ஏற்றுக் கொள்ளதான் மனம் வரவில்லை.

"விரும்பி தப்பு பண்ணவங்க கூட தான் நல்லவங்கன்னு நம்பும்போது ஏதோ ஒரு சதிக்கு பலியான நீ ஏன் இவ்வளவு பீல் பண்ற?" எனக் கேட்டாள்.

'புரியாது அக்கா. என் வருத்தமெல்லாம் சொன்னா புரியாது. நான் மகிக்கு என்னை பரிசுத்தமா தரணும்ன்னு நினைச்சேன். என்னையே என்னால பாதுகாக்க முடியல. நான் எவ்வளவு கேவலமா பீல் பண்றேன்னு யாருக்கும் புரியாது!' மனதுக்குள் சொல்லிக் கொண்டவளின் தோளை பற்றினாள் வித்யா.

"எல்லாம் ஒருநாள் மாறும்.!" என்றாள்.

அவளுக்காக வேண்டி சரியென்று தலையசைத்தாள் மீரா.

ரோஸ் மற்றும் ஜாஸ்மின்னை பார்க்கையில் சிறிது வலித்தது. நடந்த விபத்தில் தான் கருவுற்றிருந்தால் என்னாகியிருக்கும் என்று யோசித்தாள். யோசிக்கவே பயமாக இருந்தது.

மாலையில் அவளை அழைத்துச் செல்ல மகிழன் வந்தான். அக்காவோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மீராவின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு நடந்தான்.

வித்யாவை விட்டு தள்ளி வந்ததும் தன் கையை தனியே இழுத்துக் கொண்டாள் மீரா.

"ரொம்ப பண்ற!" என்றான் அவன்.

பதில் சொல்லாமல் காரில் ஏறி அமர்ந்தாள்.

"மன்னிக்க மாட்டியா?" சற்று தூரம் சென்ற பிறகு கேட்டான்.

ஆத்திரங்களை அடக்கிக் கொண்டு அவன் பக்கம் பார்த்தாள்.

"நீ மனுசனா மகி? என்னை சாகடிக்கவே பிறந்தியா நீ? இங்கே தப்பு பண்ணது நான்தான். நீ உன்னை மன்னிச்சியான்னு கேட்கற! எனக்கு வர ஆத்திரத்துக்கு.." மேலே சொல்லாமல் பற்களை கடித்தாள்.

"கூல் டவுன் பேபி!" என்றான்.

மீரா எரிச்சலோடு திரும்பினாள்.

"கையை கிள்ளி வச்சதுக்கு மன்னிக்க மாட்டியான்னு கேட்டேன். ஆனா நீ எந்த தப்பு பண்ணதாகவும் எனக்கு ஞாபகம் இல்ல!" என்றான் சாலையைப் பார்த்தபடி.

மீரா தன் விரலைப் பார்த்தாள். இன்னமும் சிவந்துதான் இருந்தது. இதற்காய் அவனை வெறுக்க முடியவில்லை.

காரை செலுத்திக் கொண்டிருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். பழைய முகத்தை மிகவும் நேசித்தாள். இம்முகம் புது மனிதனை போல இருந்தது. ஆனால் இயல்பாய் இருக்கும் ஈர்ப்பின் காரணமாய் அவனை வேற்றாளாக நினைக்க முடியவில்லை. அவன் எப்படி இருந்தாலும் அவளுக்கு பிடிக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

"நீ என்னை வெறுக்கலையா மகி, உன் முகம் இப்படி ஆனதுக்கு!?" தயக்கமாக கேட்டவளின் கையை பற்றினான்.

"நான் எப்பவும் என்னை வெறுத்துக்கறது இல்ல மீரா. அது உனக்கே தெரியும்!"

மீரா அவனின் கையைப் பார்த்தாள். அதே பழைய கரம்தான். இப்போது கொஞ்சம் மிருதுவாக இருந்தது. முக மாற்று அறுவை சிகிச்சையின் காரணமாக படுக்கையில் இருந்ததால் உடம்பின் கட்டுகளை கோட்டை விட்டிருந்தான். இதுவும் நன்றாக இருப்பதாகதான் தோன்றியது அவளுக்கு. அந்த கொஞ்சம் தொப்பையும் கூட பிடித்திருந்தது.

"அப்புறம் ஏன் மகி என்னை விட்டுப் போன? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? உன் முகம் மாறியதுக்கு நான் உன்னை வெறுத்துடுவேன்னு நம்பிட்டியா? அவ்வளவுதான் என் லவ்வா? நீ எப்படி இருந்தாலும் என் காதல் அப்படியேதானே இருந்திருக்கும்!?" சிறு குரலில் கேட்டவளின் புறங்கையை வருடினான்.

எப்படி சொல்வது, அவளின் அழகன் என்ற வார்த்தைதான் அவனை ஒடுங்க செய்தது என்ற விசயத்தை?

மௌனமாய் இருந்தவனின் பதிலுக்கு சில நொடிகள் காத்திருந்தவள் அவனுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என்பது புரிந்துத் திரும்பிக் கொண்டாள். அவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லை என்று எண்ணி தனக்குள் மனமுடைந்தாள்.

பழைய காதல்தான். ஆனால் இருவரும் பழைய மனிதர்கள் இல்லை என்ற உண்மை அவளுக்கும் புரிந்துதான் இருந்தது. அவளின் டால் அல்ல அவன். அடிக்கடி கோபப்பட்டான். சிகரெட் பிடிக்க கற்றுக் கொண்டிருந்தான். பொய் சொல்ல பழகியிருந்தான். அவளால் சமாளிக்க முடியாத அளவிற்கு பெரியவனாகவும் வளர்ந்து விட்டிருந்தான்.

மகிழனுக்கும் கூட அவளின் மாற்றம் தெரிந்துதான் இருந்தது. அவனை நம்ப மறுத்தாள். அவளின் பிடிவாதத்தை விட மறுத்தாள். அழுக கற்றுக் கொண்டிருந்தாள். கண்ணீரால் அவனை வதைக்கவும் கற்றுக் கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் நேராய் சென்று அறையில் முடங்கி விட்டாள் மீரா.

"அந்த பையன் ரோகித்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியல மகிழ்.." என்று தகவல் சொன்னான் அகிலன்.

மற்ற இருவரும் பழி வாங்க கூட காரணம் இருந்தது. இவன் ஏன் சம்பந்தமில்லாமல் தங்களை தொல்லை செய்கிறான் என்று மகிழனுக்கு புரியவில்லை. மீராவின் போனுக்கு வரும் அழைப்புக்கள் அனைத்தும் ஏற்கனவே கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் கூட அவனுக்கு பயமாக இருந்தது. ரோகித் ஏதாவது சொல்லி மீரா மீண்டும் அதை நம்பி ஏதாவது செய்துக் கொள்வாளோ என்று பயமாக இருந்தது. வீடியோ பற்றி சொல்லவும் பயமாக இருந்தது. இதை பற்றி யோசிக்கும் போதெல்லாம் சிகரெட்டைதான் தேடியது கரங்கள்.

அவனின் அறையில் அவனின் சட்டையை அணிந்துக் கொண்டு சோஃபாவில் முடங்கினாள் மீரா.

வந்து பார்த்தவன் "ஆறடியில் எருமை மாடு மாதிரி நான் இருக்கேன். சட்டையை ஹக் பண்ணிட்டு இருக்க. நீ ரொம்ப மோசம் மீரா!" என்றான் கேலியாக.

அவனால் எப்படி கேலி பேச முடிகிறது என்று வியப்பாக இருந்தது அவளுக்கு.

அவளின் மன ரணங்கள் தீர இந்த வாசம் தேவைப்பட்டது. அதை அவளும் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக அவனிடம் தன்னை ஒப்படைக்கவும் விரும்பவில்லை.

அவளின் யோசனைகளை கண்டு பெருமூச்சு விட்டவன் அவளின் முன்னால் வந்து மண்டியிட்டான்.

"மீரா!" என்றான் கன்னங்கள் பற்றி.

"நீ என் மீரா இல்லையா? இப்படி நீ உனக்குள்ள உடைஞ்சா எனக்கு வலிக்காதா? நான் இருக்கேன் மீரா. எனக்கு ஒரு சான்ஸ் தர மாட்டியா? என் லவ்வை நம்ப மாட்டியா?" எனக் கேட்டான்.

அவனின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அழுகை பொங்கியது.

"மீரா.. நம்ம லவ்வை மறந்துட்டியா? நான் உன் செல்ல டால் இல்லையா? என்னை கை விட ஆசைப்படுறியா?"

மீரா இடம் வலமாக தலையசைத்தாள். பொங்கும் கண்ணீரோடு அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

பல ஆண்டுகள் கழித்து மூச்சு விடுவது போலிருந்தது மகிழனுக்கு. அவசரமாக அவளை அணைத்துக் கொண்டான்.

"அ.. அவங்க என்ன செஞ்சாங்கன்னு உனக்கு தெரியாது மகி!" அழுகையின் இடையே ஒவ்வொரு வார்த்தையாக திக்கித் திணறிச் சொன்னாள்.

"அவங்க இரண்டு பேரும் ஏழு முறை.." சொல்ல தெரியாமல் அழுதவள் "ஏன் மகி என்னை விட்டு போன?" எனக் கேட்டாள்.

இரண்டு பேர் அல்ல. மூன்று பேர். ஏழு முறை அல்ல. ஆறு முறை. ஆனால் அவளிடம் சொல்ல பயந்தான்.

"எப்படி வலிச்சது தெரியுமா?" அவளின் சொல்லில் பாதி செத்து விட்டான். அணைத்திருந்த கரம் எவ்வளவு இறுகியும் கூட அவள் காற்றாக இருப்பது போலவே உணர்ந்தான். விட்டு மறைந்து விடுவாளோ என்று கவலைப்பட்டவனாக தன்னால் முடிந்த அளவுக்கு அவளை தன்னோடு பிணைத்துக் கொள்ள முற்பட்டான்.

"சாரி மீரா!" என்றான் கலங்கிய விழிகளோடு. இதை சொல்வதற்குள்ளாகவே தொண்டையில் வலி வந்து விட்டது.

"எவ்வளவு பயந்தேன் தெரியுமா?" எனக் கேட்டு அழுதவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியவே இல்லை.

"அ.. அதெல்லாம் கனவு மீரா.. மறந்துடு!" என்றான் சில நிமிடங்களுக்கு பிறகு.

அவனின் கழுத்தில் முகம் புதைந்திருந்தவள் இடம் வலமாக தலையசைத்தாள்.

"கனவு இல்ல மகி. இன்னமும் அவங்க டச் பண்ற மாதிரியே இருக்கு.. உடம்பெல்லாம் தேளும், பூரானும் ஊறுற மாதிரியே பயமா இருக்கு!" என்றாள் குலுங்கி அழுதபடி.

அவளுக்கு அப்படி இருந்ததோ இல்லையோ அவள் சொல்ல சொல்ல அவனுக்கு விஷமாகதான் இருந்தது.

"தூக்கமே வர மாட்டேங்குது மகி. கண்ணை மூடினா அவங்க மறுபடியும் வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கு. எந்த டிரெஸ் போட்டாலும் நியூடா இருக்கற மாதிரியே பீல் ஆகுது மகி!" அவனின் கழுத்தை நனைத்த கண்ணீரின் அதே அளவில் அவனின் கண்ணிலும் கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது.

"அசிங்கமா இருக்கற மாதிரி இருக்கு மகி. ரொம்ப சாக்கடையா பீல் பண்றேன். மனுசங்க முகத்தை பார்க்க முடியல மகி. பயமா இருக்கு. உன்னோடு பேசவும், உன்னை பார்க்கவும் ரொம்ப பயமா இருக்கு மகி. அப்படி ஆனதுக்காக நான் சூஸைட் அட்டெம்ட் பண்ணல மகி. உன்னை பார்க்க பயந்துதான் சூஸைட் டிரை பண்ணேன். என்னை என் குற்ற உணர்ச்சியில் சாக விட்டுடாத மகி. ப்ளீஸ் என்னை அனுப்பிடு.!" என்றாள் கடைசியாக.

அவளின் முகத்தை பற்றினான். தன் முகத்திற்கு நேரே கொண்டு வந்தான்.

"நீ எந்த தப்பும் செய்யல மீரா. நீ என்னை பார்க்க பயப்படுவதா சொல்ற ஒவ்வொரு டைம்மும் எனக்குத்தான் குற்ற உணர்ச்சியா இருக்கு. உனக்கு என் வலி புரியலையா? நீ படுறதை விட அதிகமா வேதனை படுறேனே.. அதுவும் புரியலையா? அங்கே மாட்டிக்கிட்டது நீன்னு நினைக்கிற நீ. ஆனா பலியானது நாமன்னு நினைக்கிறேன் நான். இரண்டு பேருக்கும் தனி தனி லைஃப்பா மீரா? நீ அழுதா எனக்கும்தானே கண்ணீர் வரும்? நம்ம லவ்வை மறந்துட்டியா மீரா? ஒன் இயர் கேப் நம்ம லவ்வை மறக்கடிச்சிடுச்சா? இல்ல நமக்கு நடந்த இரண்டு ஆக்சிடென்ட்டும் லவ்வை அழிச்சிடுச்சா? அவங்க என்னை காரணம் காட்டிதானே உன்னை இப்படி செஞ்சாங்க. நீ என்னை வெறுக்கதானே செய்யணும் மீரா? உனக்கு எதுக்கு குற்ற உணர்ச்சி?" என்றான் கண்ணீரோடு.

கண்களை மூடியபடி குலுங்கியவள் "ஏன்னா லவ் யூ மகி. யூ டிசர்வ் பெட்டர் மகி!" என்றாள்.

இதுதான் உண்மையில் வலித்தது. இவ்வளவு நேரம் கடந்த நிமிடங்களை விடவும் இதுதான் அதிகம் வலித்தது.

இதே வார்த்தையை காரணம் காட்டிதான் அவளை விலகிச் சென்றான் அப்போது. ஆனால் அவளும் அதையே காரணமாக சொல்லி தன்னை விலக்கி தள்ளுவாள் என்று அப்போது அவன் நினைக்கவில்லை.

மாலையில் வீடு வருகையில் அவள் கேட்டாளே என்று உண்மையை சொல்லி இருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைக்கவே பயமாக இருந்தது.

தனது தவறை வெளிக்காட்டினால் அது இன்னும் பெரிய தவறுக்களுக்கே இட்டுச் செல்லும் என்பதை கண்டுக் கொண்டவன் தனது முகத்தின் குற்ற உணர்வுகளை மறைத்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.

"ஆமா மீரா. எனக்கு பெட்டராதான் கிடைக்கணும். அதனாலதான் நான் உன்னை தேடி வந்தேன். எனக்கு உன்னை விட பெட்டரா வேற யாரும் இல்ல!" என்றான்.

மீரா மறுத்து தலையசைத்தாள்.

அவளின் பின்னந்தலையில் கரம் பதித்து இருந்தவன் அவளை தன் மீது சாய்த்துக் கொண்டான்.

"ப்ளீஸ் மீரா. நீ என்னுடையவ. நீ என்னை பிரிஞ்சி போனா அதை விட பெரிய தண்டனை வேற இருக்காது. எனக்காகவாவது எனக்கு ஒரு சான்ஸ் கொடு. உனக்கு இப்படி ஆக காரணம் நான். அதனால இது பிராயச்சித்தம்ன்னு கேட்க வரல. இது சத்தியம். நீ எனக்காக பிறந்தவ. நீ என் ஜீவன். நீ இல்லாம போனா நான் முழுமை ஆக மாட்டேன். எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் மீரா. இந்த ஒரு வருசமா நான் பட்ட அவஸ்தை உனக்கு தெரியாது. என் அப்பாவும் அண்ணனும் என் புலம்பலை கண்டு கேவலமா திட்டினாங்க மீரா. நைட்டெல்லாம் உன் பேர்தான் முனகிட்டு இருந்தேன். எனக்கு நடந்த ஒவ்வொரு ஆபரேசனுக்கு முன்னாடியும் உன் போட்டோவை பார்த்துட்டுதான் மயக்க ஊசியே போட்டுக்கிட்டேன். என் வலியெல்லாம் மறக்கடிச்சது உன் நினைப்புதான் மீரா‌. படிப்பு, வேலை, பிஸ்னெஸ், வாழ்க்கைன்னு ஆயிரம் பாடம் எடுத்தாரு எங்க அப்பா. ஆனா என்ன கனவு கண்டாலும் உன்னை ஒதுக்கி வச்சிட்டு என்னால கனா காண முடியல மீரா. முகத்துல கண் இரண்டும் எப்படி இயல்போ அது போலதானே மீரா நீ என் லைப்ல இருப்பதும். உனக்காக நான் எது வேணாலும் செய்வேன் மீரா. இந்த வார்த்தையை சொல்றதுக்காக நான் வெட்கப்படல மீரா. நான் உனக்காக செய்யாம வேற யாருக்காக செய்யட்டும்? நான் உனக்கு கடவுள் போலன்னு சொன்ன இல்ல.!? நீயும் எனக்கு அப்படிதான் மீரா.!"

அவன் சொல்ல சொல்ல அவளுக்கு அழுகை மட்டும்தான் வந்தது. அவனின் அருகாமையில் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் அழலாம் போல இருந்தது.

"நான் என்ன செஞ்சா உன் துக்கம், கவலையெல்லாம் மறையும்ன்னு சொல்லு. நான் செய்றேன். ஆனா என்னை விட்டு போறேன்னு சொல்லாதே.." என்றான் அவளின் கூந்தலில் முகம் புதைத்தபடி.

ரோகித் பாழடைந்த வீட்டு மாடி ஒன்றின் மீது நின்றிருந்தான். எதிரே இருந்த அப்பார்ட்மெண்டை கவனித்தான். நான்கு வயது குழந்தையோடு கேட்டை தாண்டி உள்ளே நடந்த இளம்பெண்ணை வெறித்துப் பார்த்தான்.

"ஷோபா!" என்றான் தனக்குள். அவள் தன்னை யாரோ அழைப்பது போல உணர்ந்து அவன் இருந்த கட்டிடத்தின் புறம் திரும்பினாள். ஆனால் அவன் அதற்கும் முன் அருகே இருந்த தூணின் பின்னால் மறைந்துக் கொண்டான்.

அவன் மீண்டும் எட்டிப் பார்த்தபோது அவள் அங்கே இருக்கவில்லை. அவளின் வீட்டைக் கவனித்தான். வீட்டு ஜன்னலின் கர்ட்டனை திறந்து விட்டாள் அவள். அவளின் முகத்தில் சூரிய ஒளிக் கதிர் பட்டுத் தெறித்தது.

ஷோபாவின் கணவனின் முகம் தெரிந்தது. ஜன்னலோரம் நின்றிருந்தவளை அணைத்தான் அவன். ரோகித் பற்களை கடித்தபடி திரும்பினான். தூணை குத்தினான்.

"என் காதலை பிரிச்ச நீங்க கடைசி வரை சேர முடியாது!" என்றுக் கர்ஜித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

கதை கொஞ்சம் எமோசனலா போகுது. அதுக்காக சாரி. இதுக்கடுத்த கதை ஒரு பேமிலி ஸ்டோரி. அடுத்ததுதான் பிரெண்ட்ஷிப் ஸ்டோரி. அந்த பிரெண்ட்ஷிப் ஸ்டோரியில் காமெடிதான் அடித்தளம். இந்த கதையிலும் நெடுவனம் கதையிலும் பீல் பண்ண வச்சத்துக்கு அதுல சரி பண்ணிடுறேன்..😁
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN