கனவே 25

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கல்லூரி முடிந்து விட்டிருந்தது. முதல் பேருந்தை பிடிக்க வேண்டும் என்று எண்ணியபடி தனது இருக்கையை விட்டு எழுந்து நின்றான் மகிழன்.

"மகி!" ஓடி வந்து அவனோடு ஒட்டிக் கொண்டாள் மீரா.

"இரண்டு பேரும் பொருட்காட்சி போகலாம்!" என்றவள் அவன் பதில் சொல்லும் முன்பே அவனை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினாள்.

"ஊர் சுத்த கூடாது மீரா. இதெல்லாம் தப்பு!" என்றவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள் "இப்ப நீ என்னோடு வரலன்னா அப்புறம் நான் நாளைக்கு நம்ம கிளாஸ் ரூம்ல வச்சி உனக்கு கிஸ் தந்துடுவேன். நான் பேட் கேர்ள். உனக்கே தெரியும்தானே!?" என்றாள்.

மகிழன் நெற்றியில் அடித்துக் கொண்டு அவளோடு பொருட்காட்சிக்கு சென்றான்.

"மகி இந்த சட்டை உனக்கு சூப்பரா இருக்கு! மகி இந்த தொப்பி உனக்கு நல்லாருக்கு. மகி இந்த பிரேஸ்லெட் உனக்கு நல்லாருக்கு.." என்றபடி கண்டதையும் எடுத்து அவனுக்கு அணிவித்துப் பார்த்தாள்.

"எவ்வளவு மீரா வச்சிருக்க?" என அவன் கேட்கவும் பர்ஸை திறந்துப் பார்த்தவள் "முன்னூறு ரூபா இருக்கு மகி.." என்றாள்.

"அப்புறம் எதுக்கு இத்தனையை பார்க்கற!?"

"இப்ப எதெல்லாம் உனக்கு பொருத்தம்ன்னு பார்த்து வச்சிப்பேன். அப்புறம் வேலைக்கு போய் சம்பாதிச்சி வாங்கி தருவேன்!" கண்சிமிட்டிச் சொன்னவளின் கன்னம் கிள்ளினான்.

"கடைக்கார அண்ணா முறைக்கிறாரு. வா நாம போயிடலாம்!" என்று அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

ராட்சச சாகச விளையாட்டு பொருட்கள் இருந்த இடத்திற்கு அவனை இழுத்துக் கொண்டு சென்றாள். அங்கிருந்த ஒவ்வொன்றையும் பார்த்தவள் "நாம அதுல போலாம்!" என்றுக் கை காட்டினாள். உயரே சென்று பின் தலைகீழாக சுற்றும் விளையாட்டு சாதனம் அது. பார்க்கும்போதே மகிழனுக்கு குடலை புரட்டும் போல இருந்தது.

"நான் வரல!" என்றான்.

"பேபி பாய்க்கு பயமா?" கேலியாக கேட்டவளை முறைத்தவன் "உனக்கு பயம் இல்லையா?" எனக் கேட்டான்.

"நீ பக்கத்துல இருக்கும்போது எனக்கு எதுக்கு பயம்?" என்றவள் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றாள். மகிழன் சுற்றிலும் வேடிக்கை பார்த்தான். மீராவோ அவனை வேடிக்கைப் பார்த்தாள். அங்கிருந்த பொருட்களை பார்க்க அவன் காட்டிய அரை குறை ஆர்வம் அந்த கண்களில் அப்படியே தெரிந்தது. இரண்டு நாட்களாக ஷேவ் செய்யப்படாத கன்னங்கள் அழகாக இருந்தது. ஒரு வாரம் முன்பு அவள் கிள்ளி வைத்திருந்த முகப்பருவின் தழும்பு மறைந்து விட்டிருந்தது. காதின் பின் பக்கத்தில் நேற்று அவள் கிறுக்கி வைத்திருந்த பேனா மை சுவடு இன்னமும் சிறிது தெரிந்தது.

"காலையில குளிக்கலையா மகி?" எனக் கேட்டபடி அவனின் காதின் பின் பகுதியை தேய்த்தாள்.

அவளின் கையை விலக்கியவன் பற்களை கடித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தான். அனைவரும் அவர்களையே பார்ப்பது போலிருந்தது.

அவளின் அருகே குனிந்தவன் "குளிச்சேன். ஆனா ஹேர் வாஷ் பண்ணல." என்றான் சிறு குரலில்.

மீரா அவனின் தலையை கோதி விட்டாள். "டெய்லி தலை குளிக்காத.. அப்புறம் காய்ச்சல் வந்துடும்!" என்றாள்.

டிக்கெட்டை பெற்றுக் கொண்டு கூட்டம் விளையாட்டு சாதனத்தை நோக்கி சென்றது.

மகிழன் தன் கையில் இருந்த டிக்கெட்டை பார்த்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த மீரா எட்டி அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"மீரா!" சிறு அதட்டலோடு சுற்றிப் பார்த்தான். அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த குடும்பம் ஒன்று இவர்களை வெறித்தது. கொஞ்சமாக முறைத்தது என்றும் சொல்லலாம்.

"அழகா இருக்க மகி!" அவனின் கையை பற்றியபடி தோளில் சாய்ந்தாள்.

'எனக்கு மட்டும்தான் வெட்கம் வருது. இவளுக்கு ஒரு விசயமும் வொர்க் ஆக மாட்டேங்குது!' நொந்துக் கொண்டான்.

விளையாட்டு சாதன இருக்கையில் ஏறி அமர்ந்ததும் அவனை கட்டிக் கொண்டாள்.

"அமைதியா நேரா உட்காரு மீரா. ஏதாவது எசகுபிசகா பண்ணி வச்சிட்டாத. அப்புறம் இரண்டு பேரும் பல்டி அடிச்சிடுவோம்!" என்றவன் அவளை அப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று அவளின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

ராட்டினம் அசைந்தது. கொஞ்சமாக மேலே ஏறியது. "சூப்பரா இருக்கு மகி!" என்று அவனின் காதோரம் கத்தினாள்.

மூன்று நிமிட விளையாட்டு. முன்னூறு முறை அவன் பெயரை சொல்லி கத்தியிருப்பாள்.

"செம செம செமையோ செம.. நாளைக்கும் வரோம். விளையாடுறோம்!" என்றாள் வானம் நோக்கி கை தூக்கி துள்ளி குதித்தபடி.

முக்கால் இருள். ஆனாலும் அவள் ஒளி வீசும் தேவதையாகதான் இருந்தாள். அருகில் ஒருவரும் இல்லை. அவளின் முகத்தில் தெரிந்த கொண்டாட்டத்தில் முழுதாகவே விழுந்து விட்டான்‌. சட்டென்று அவளைத் தன்னோடு அணைத்தான்.

மீராவிற்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. அவனாய் அணைத்தது இதுவே முதல்முறை. எப்போதும் அவள் அணைத்தால் பதிலுக்கு அணைப்பான். ஆனால் இன்று..

"நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க மீரா!" என்றவனின் உதடு அவளின் நெற்றியில் பதிந்தது.

"ஆ.. ஆனா எனக்கு மூச்சு முட்டுது.. நீ டைட்டா ஹக் பண்ற.. இட்ஸ் ஹர்ட்ஸ் மீ!" என்றாள்.

"சாரி.." அவசரமாக விலகியவன் அவளை‌ மேலும் கீழுமாக பார்த்தான்.

"சாரி.. சாரி.." என்றான் அவளை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு.

"தடி மாடு நீ!" என்றாள். சிரித்தவன் அமைதியாக அவளின் பின்னந்தலையை வருடி தந்தான்.

அவளை கவனித்துக் கொண்டிருந்தவன் தங்களை நெருங்கிய உருவத்தை அப்போது கவனிக்கவில்லை. யாரோ மோதியதும் இருவரும் ஒருசேர தடுமாறி பின்னர் நிலைத்து நின்றனர்.

மீரா அந்த உருவம் போன திசையை பார்த்தாள்.

"ரோகித் கழுதை. அவனுக்கு என்ன கேடு வந்தது?" என்றுத் திட்டியவள் மகிழனின் புறம் திருப்பினாள்.

"ஆர் யூ ஓகே?" என்றாள்.

"ம்!" அவன் தலையசைத்ததும் அவனை இழுத்துக் கொண்டு இருள் வழியும் சாலையில் நடக்க தொடங்கினாள்.

***

மீரா திரும்பினாள். ஆனால் அசைய கூட முடியவில்லை. கண் விழிக்க முயன்றாள்.

"தூங்கு மீரா!" அவளின் காதோரம் கேட்டது மகிழனின் குரல்.

பதறியவள் எழும் முன் "தூங்கு மீரா.. நான் தூங்கி ரொம்ப நாள் ஆச்சி. ப்ளீஸ்.. தூங்க விடு!" என்று கெஞ்சலாக கேட்டான்.

மீராவுக்கு ஒன்றுமே புரியவில்லை. விழிகளை திறந்தாலும் இருட்டுதான் இருந்தது. அவனின் மூச்சுக்காற்று கழுத்திலும் முகத்திலும் படர்வது போலிருந்தது. அரை தூக்கம். அவன் எத்திசையில் இருக்கிறான் என்று கூட கண்டறிய முடியவில்லை.

அரை தூக்கம் முழு தூக்கமாக மாறியது. ஏதேதோ எண்ணங்கள். ஆனால் யோசிக்க முடியவில்லை. மயக்க மருந்து உண்டது போல இருந்தது. கண் விழித்ததும் நினைவில் இல்லை. உறங்கிய விதமும் புரியவில்லை.

அவள் மீண்டும் கண் விழித்தபோது அரை வெளிச்சம் இருந்தது. எங்கிருக்கிறோம் என்று சுற்றிப் பார்த்தாள். மகிழனின் மேல் படுத்துக் கொண்டிருந்தாள். அவன் சோஃபாவில் உறங்கிக் கொண்டிருந்தான். தன் மீது இருந்தவளை இரு கரங்களாலும் அணைத்திருந்தான்.

விலக்கித் தள்ளினாலும் மீண்டும் அணைக்கிறானே என்று வருத்தமாக இருந்தது.

"காலையிலேயே அழாதே மீரா.. எனக்கு ஒரு சிறந்த நாளை உன்னால தர முடியலன்னாலும் பரவால்ல. ஒரு சாதாரண நாளாவாவது இது இருந்துட்டு போகட்டும்.!" கண் விழிக்காமல் பேசிக் கொண்டிருந்தவனை தலை தூக்கி வெறித்தாள்.

"நீ இல்லாம என்னால இருக்க முடியாது மீரா. போ போன்னு சொல்லாத.. அப்படி நீ சொல்லும்போது வலிக்குது!" என்றான் இமைகளை மூடியபடி.

மீரா உதட்டை கடித்தாள். தன்னை அவன் மௌன சாமியாரினி ஆக்குவது புரிந்து அமைதியாக இருந்தாள்.

மகிழன் கண்களை திறந்தான். வலதுக் கரத்தால் அவளின் கன்னம் பற்றினான்.

"உனக்கு இங்கே பிடிக்கலன்னா சொல்லு.. எங்கேயாவது மனுசங்களே இல்லாத இடத்துக்கு போயிடலாம். வாழ பிடிக்கலன்னா சொல்லு. தூக்க மாத்திரை சாப்பிட்டு இரண்டு பேரும் சேர்ந்துச் செத்துப் போயிடலாம். ஆனா என்னைத் தனியே விட்டுப் போகாதே! உன்னை விட்டு.." மேலே பேசும் முன் அவனின் வாயை பொத்தினாள். மீண்டும் அவனின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள்.

நெஞ்சம் வலித்தது. அவனின் வார்த்தைகளும் அவனின் காதலுமே தன்னைக் கொன்று விடும் போல இருந்தது.

அவளின் கையை பற்றியவன் அவளது உள்ளங்கையில் தன் இதழ் பதித்தான்.

"கடந்து போன நிமிசங்களை சரி செய்யணும்ன்னு எனக்கும் ஆசைதான் மீரா. ஆனா முடியல. அட்லீஸ்ட் வர போற நிமிசங்களையாவது நல்லபடியா வாழ சந்தர்ப்பம் கொடு. நீ செய்யாத தப்புக்கு உனக்கு குற்ற உணர்ச்சின்னு சொல்லி அழற.. ஆனா நான் செஞ்ச தப்புகளுக்கு எனக்கு உண்டான குற்ற உணர்ச்சிக்கு என்னன்னு அழட்டும்? வாழ்க்கை முழுக்க அழுதாலும் நான் செஞ்ச தப்புகள் சரி ஆகாது. உன் காலை பார்க்கும் ஒவ்வொரு செகண்டும் நான் உடையுறேன். நீ என்னோட பட்டாம்பூச்சி. உன்னை இப்படி பார்க்கணும்ன்னு நான் ஆசைப்படல. அவனுங்க என்னை பழி வாங்குறேன்னு நம்மை பழி வாங்கிட்டாங்க. அதை நினைச்சி நீ அழுது, பயப்படும் போதெல்லாம் நான் செத்துப் பிழைக்கிறேன். கருணை இல்ல மீரா. குற்ற உணர்ச்சி நிறைய இருக்கு. ஆனா அதையும் தாண்டி காதல்தான் அதிக வலியை தருது. உனக்கு அப்படி ஆச்சின்னு தெரிஞ்சதும் அட்டாக் வந்துடுச்சி. நீ செத்துட்டன்னு நினைச்சி அப்பவும் கூட ஹாஸ்பிட்டலேயே சூஸைட்தான் டிரை பண்ணேன். ஆனா அகி காப்பாத்திட்டான். அப்பவே செத்திருக்கலாம்ன்னு இப்ப தோணுது மீரா."

மீரா குலுங்கினாள். அவனின் கழுத்தை ஈரம் நனைத்தது.

அவன் தற்கொலை செய்ய முயன்றது கேட்டதும் அவளுக்கு அதிர்ச்சியில் உயிர் தொலைவது போலிருந்தது.

"ஏன் மகி?" என்றபடி நிமிர்ந்தவள் அவனின் தோளில் அடித்தாள்.

"பைத்தியமா நீ?" என்றாள் கோபமும் அழுகையுமாக.

அவளின் கையை பற்றியவன் "அப்படின்னா நீ பைத்தியமா மீரா!? நான் செஞ்ச அதே தப்பைதானே நீயும் செஞ்ச. நம்ம வாழ்க்கை இது‌. நல்லா வாழ ஆசைப்பட்டோம். ஆனா நாசம் ஆயிடுச்சி. அதுக்காக அப்படியே விட்டுடலாமா? நீயும் நானும் காதலன் காதலி, புருசன் பொண்டாட்டி, தோழன் தோழி மட்டுமா!? இது எல்லாம் கடந்த ஒரு உறவு இல்லையா நம்மோடது? நான் எப்படி நானோ அது போலதானே நீயும் நானே!?" எனக் கேட்டான்.

மீரா பதில் சொல்லாமல் விம்மினாள்.

அவளின் விழிகளை துடைத்து விட்டான்.

"எல்லாம் சரியாகிடும் மீரா. பிலீவ் மீ!" என்றான்.

அவளின் முகத்தைப் பற்றி தன் முகத்தோடு உரசினான்.

"இதை விடவும் குட்டி இடத்துல நீயும் நானும் இருக்கணும் மீரா.!" என்றான்.

மீரா மெதுவாக புன்னகைத்தாள். மேனியின் தோல் போல இருந்தான் அவன்.

"பசிக்குது மகி!" என்றாள்.

தன் கையை விலக்கினான். மீரா மெதுவாக எழுந்து நின்றாள்.

"எப்படி மகி நீ தூங்கின? நான் வெயிட்டா இல்லையா?" தயக்கமாக கேட்டாள்.

"இன்னைக்கேதான் நிம்மதியா தூங்கியிருக்கேன் மீரா.!" சிரிப்போடு சொல்லியபடி எழுந்து அமர்ந்தான்.

"பல் விளக்கிட்டு போகலாம். மணியம்மா நமக்காக ஏதாவது சாப்பாடு எடுத்து வச்சிருப்பாங்க.!" என்றான்.

இரவில் அவளை சமாதானம் செய்துக் கொண்டிருந்தவன் அவள் அழுது சோர்ந்து அப்படியே தன் தோளில் உறங்கி விடவும், அவளை விலக மனம் இல்லாமல் அவளோடு சேர்ந்து சோபாவிலேயே உறங்கி விட்டான்.

இரவு அவனும் சாப்பிடவில்லை. பசித்தது.

இருவரும் பல் துலக்கிக் கொண்டு சென்றபோது இருவருக்கும் பெரிய டம்ளரில் பால் கொண்டு வைத்தாள் மணியம்மா.

"நேரா நேரத்துக்கு சாப்பிடுறது இல்ல. அப்புறம் நீ மயங்கினா வீட்டுல உள்ள எல்லோரும் என்னை திட்டுறது!" என்று சலித்துக் கொண்டாள் மணியம்மா.

அன்று பகல் வேளையில் மகிழன் தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தபோது புது எண் ஒன்றிலிருந்து அழைப்பு வந்தது.

"ஹலோ.." எதிரில் ரோகித் குரல் கேட்டதும் கோபத்தில் நரம்புகள் முறுக்கேறியது அவனுக்கு.

"என்ன சகோ!? இன்னமுமா முடிவு செய்யல நீ! அவளை என்கிட்ட தந்துடு. உன்னோட மொத்த பிரச்சனையும் தீர்ந்துடும்!" என்றான்.

"நீ மட்டும் என் கையில கிடைச்சா செத்த!" பற்களை கடித்தான் மகிழன்.

"அவ்வளவு சீக்கிரமெல்லாம் உன் பிரச்சனை தீர்ந்துடுமா? நீ என் கால்ல விழுந்து கதறணும். அப்பவும் கூட என் கோபம் தீராது. உன் பொண்டாட்டி கை எப்படி இருக்கு? அவ செத்திருந்தா பிரச்சனை தீர்ந்திருக்கும். பிழைச்சி பிரச்சனையை இழுத்து விடுறா.. அவ சாக நல்ல வலுவான கன்டென்ட் தேவை போல. ரெடி பண்ணிடுறேன்." என்றான்.

"ரோகித்.. நாம நல்ல முறையில் பேசி தீர்த்துக்கலாம். நீ கேட்கற பணத்தை நான் தரேன். அவளை மட்டும் விட்டுடு!" தன்னையும் மீறி மகிழனுக்கு குரல் இறங்கி விட்டது.

ரோகித் சிரித்தான்.

"உன் கண்ணுல ரத்த கண்ணீர் வரணும். அவ சாகணும். அதை நான் கண் குளிர பார்க்கணும்.!"

"பைத்தியமா நீ? எங்களை கொல்றதுல உனக்கு என்னடா லாபம்?"

"லாபமா!? ஆன நட்டத்துக்கு கணக்கு கழிக்கிறேன்.." என்றவன் அத்தோடு இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

மகிழனுக்கு கோபமும் ஆத்திரமும் வந்தது.

உடல் நலத்தை காக்க வேண்டும் என்றெண்ணி அமைதி காத்தான். இனியனுக்கு போன் செய்து விசயத்தைச் சொன்னான்.

"கொஞ்ச நேரத்துல கால் பண்றேன் மகிழன்!" என்ற இனியன் ஒரு மணி நேரம் கழித்து அழைத்தான்.

"அவன் போன் சிக்னல் கட் ஆன இடத்துல அவன் இல்ல.. எங்கேயோ தப்பிச்சிட்டான். அவனைக் கூடிய சீக்கிரம் நான் பிடிச்சிடுவேன். நீங்க பயப்படாம இருங்க!" என்றான்.

ரோகித்தை சிறையில் அடைக்கும் வரை தனக்கு உறக்கம் வராது என்று கவலைப்பட்டான் மகிழன். விசயத்தை மீராவிடம் சொல்வதா வேண்டாமா என்று யோசித்து குழம்பினான்.

'ஐ பெல்ட் லைக் எ ப்ராஸ்டியூட்..!' அவள் சொன்னது கோடி முறை நினைவில் வந்தது. பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது.

அவளைச் சரி செய்வது எப்படி என்று அவனுக்குப் புரியவே இல்லை.

அவன் வீட்டிற்கு வந்தபோது ஆரவல்லியின் மடியில் தலை சாய்ந்துப் படுத்திருந்தாள் மீரா. அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த ஊடல் சரியானதில் அவனுக்குதான் உண்மையில் நிம்மதியாக இருந்தது.

ஏதோ ஒரு ஸ்லோகத்தை படித்துக் கொண்டிருந்தாள் மீரா. ஆரவல்லி அவள் சொன்ன ஸ்லோகத்தை மனதுக்குள் அசை போட்டபடி அமர்ந்திருந்தாள்.

மகிழன் சத்தமில்லாமல் அவர்களின் பின்னால் வந்து நின்றான். கையை கட்டியபடி இருவரையும் வேடிக்கைப் பார்த்தான்.

ஸ்லோகங்களை இரண்டு பக்கங்கள் படித்து முடித்த மீரா "போதுமா?" என்றாள் சில நிமிடங்களுக்கு பிறகு.

"இன்னும் இரண்டு பக்கம் படிடி!" என்றாள் ஆரவல்லி.

"புரியவே மாட்டேங்குது பாட்டி.!" என்றாள் சிணுங்கலாக.

"இத்தனை வருசமா இந்த ஸ்லோகங்களை படிக்கற.. என்னைக்குதான் புரிஞ்சிக்க போறியோ!?" திட்டினாள் பாட்டி.

மீரா எழுந்து அமர்ந்தாள்.

"இத்தனை வருசமா நான் படிச்சி காட்டுறேன் இல்ல.. நீங்க அர்த்தம் சொல்லுங்க!" என்றாள்.

"எனக்கு தெரியாத அர்த்தமா?" எனக் கேட்டு சிரித்தாள் ஆரவல்லி.

மீரா பாட்டியை மேலும் கீழும் பார்த்தாள். அவளின் பார்வையில் கேலி இருந்தது.

"ம்க்கும்.." மகிழன் கணைத்தான்.

மீரா திரும்பிப் பார்த்து விட்டு சட்டென்று தன் நெஞ்சின் மீது கை வைத்தாள்.

"லூசு பயலே.. பயந்துட்டேன்டா!" என்றாள் கோபமாக.

ஆரவல்லி கீழே கிடந்த புத்தகத்தை எடுத்து சுருட்டி மீராவின் தலையில் அடித்தாள்.

"பாட்டி!" தலையை தேய்த்துக் கொண்டுப் பாட்டியை முறைத்தாள்.

"அவனை டா போடாதேன்னு எத்தனை முறை சொல்றது? அப்பவாவது பரவால்ல.. இப்ப புருசனாகிட்டான். மரியாதையா வாங்க போங்கன்னு கூப்பிடலாம் இல்ல?" என்றாள் முறைப்போடு.

மீரா வலிக்காத தலையை மீண்டும் தேய்த்துக் கொண்டாள்.

"இன்னும் ஐம்பது வருசம் ஆனாலும் அவனை வாடா போடான்னுதான் கூப்பிடுவேன்!" கையை கட்டிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டுச் சொன்னாள்.

"நான் உன் வாயிலேயே சூடு வைப்பேன்!"

"அப்புறம் நான் உங்களுக்கு பேரான்டி பெத்து தர மாட்டேன்!" மீண்டும் முகத்தை முறுக்கிக் கொண்டுச் சொன்னாள்.

மகிழனுக்கு சிரிப்பாக வந்தது. வாயைப் பொத்தியபடி அடக்க முயன்றுக் கொண்டிருந்தான்.

மீராவின் காதை பற்றினாள் ஆரவல்லி.

"என் பேரனுக்கு ஆயிரம் பொண்ணுங்களை கட்டி வைப்பேன் நான்! அப்ப என்னடி பண்ணுவ?" எனக் கேட்டாள்.

மீரா பாட்டியின் கையை தள்ளி விட்டாள்.

"அந்த சந்து பல்லனுக்கு எவ வந்து வரிசை கட்டுறான்னு நானும் பார்க்கறேன்!" என்றாள் எழுந்து நின்றபடி.

மகிழன் அதிர்ச்சியோடு மீராவை பார்த்தான். "ச.. சந்து பல்லன்னா?" என்றான்.

மீரா சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள்.

"டேய் பேரான்டி.. நான் சொல்றேன்டா. இவ உனக்கு என்னவெல்லாம் பட்டப்பெயர் வச்சிருக்கா தெரியுமா!?" பாட்டி மீதி சொல்லும் முன் பாட்டியின் வாயைப் பொத்தினாள் மீரா.

"பாட்டி.. அப்புறம் நான் சுலோகம் படிச்சி காட்ட மாட்டேன்!"

பாட்டி அவளின் கையை விடுவித்தாள்.

"கோண மூக்கன்.. கொக்கு காலன்.. கெடா தலையன்.. குரங்கு பையன்.." பாட்டி சொன்னது கேட்டு உதடு பிதுக்கினான் மகிழன்.

"அடிப்பாவி.!" என்றான் மீராவை பார்த்து.

மீரா உதட்டை கடித்தபடி தரையைப் பார்த்தாள். "பாட்டி பொய் சொல்றாங்க!" என்றாள் சிறு குரலில்.

"நம்பிட்டேன்!" என்றவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

மகிழன் சிவந்த மூக்கோடு அவளை தாண்டிக் கொண்டு அறைக்கு நடந்தான்.

மீரா பாட்டியின் பக்கம் பார்த்து நாக்கை நீட்டி பழித்துக் காட்டி விட்டு மகிழனை பின்தொடர்ந்து ஓடினாள்.

"மகி.. பேபி டால்.!" அழைத்தபடியே அறைக்குள் நுழைந்தவள் மகிழன் சட்டென்று திரும்பி நிற்கவும் தடுமாறி பின்னால் நகர்ந்தாள்.

"ஆள் இருக்கும்போது பேபி டால்ன்னு சொல்றது.. ஆள் இல்லாதபோது ஆளை திட்டி வைக்கிறது!"

"சாரி மகி.." இரண்டு காதுகளையும் பிடித்தபடி கெஞ்சலாக கேட்டாள்.

"அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்னது. நான்.." அவள் மேலே சொல்லும் முன் அவளின் கன்னங்களில் கைகளை பதித்தான் மகிழன்.

மீரா பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தாள்.

"யூ ஆர் க்யூட்!" என்றான் இரு விழிகளையும் மாறி மாறி பார்த்து‌.

மீராவின் முகம் குழம்பியது.

"பயந்துட்டியா?" ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டான்.

மீராவின் முகத்தில் மேலும் குழப்பம் சேர்ந்தது.

"நீ எனக்கு இப்படியெல்லாம் பெயர் வச்சது கோபம் தரல. பிடிச்சிருக்கு!" என்றான்.

மீரா கண்களை கொட்டினாள்.

அவளின் நெற்றியில் முத்தமிட்டான். இங்கே வரும்போது மனதில் எவ்வளவோ கோபத்தோடு வந்தான். ஆனால் மீராவின் முகம் நொடியில் மனதை மாற்றி விட்டது.

பிரச்சனைகள் இருந்தது. ஆனால் அதை கவனித்துக் கொள்ளலாம் என்ற நிம்மதி இருந்தது இப்போது.

மீரா தரைப் பார்த்தாள். "உனக்கு கோபம்ன்னு பயந்துட்டேன்!" என்றாள்.

தோளோடு அவளை அணைத்துக் கொண்டான்.

"உன்கிட்ட கோபப்பட முடியாது மீரா!" என்றான்.

அதன் பிறகு இருவரும் சேர்ந்து வீட்டு தியேட்டரில் திரைப்படம் ஒன்றைப் பார்த்தார்கள்.

அவளை தன் மடியை விட்டு நகர விடவில்லை அவன். நிமிடத்திற்கு ஒருமுறை முத்தமிட்டான். அவன் தன் உதட்டின் அருகே வரும்போதெல்லாம் முகத்தை திருப்பிக் கொண்டாள் மீரா.

அவன் என்னதான் பாடம் எடுத்தாலும் கூட தன்னை தர விரும்பவில்லை அவள்.

"கோபமா மீரா?" எனக் கேட்டான்.

இல்லையென தலையசைத்தவள் "உன் மேல எதுக்கு கோபம் மகி?" என்றாள் திரையை பார்த்தபடி.

"நான் உன்கிட்ட நிறைய பொய் சொல்லிட்டேன்!" என்றவனைத் திரும்பிப் பார்த்தாள். "நீ எங்கேயாவது நிம்மதியா இருப்பன்னு நினைச்சேன். ஆனாலும் வலிச்சது. நீ யாரோ ஒருத்தியை லவ் பண்ணன்னு.." மேலே பேச விடாமல் அணைத்துக் கொண்டவன் "நான் அப்படி செய்ய மாட்டேன் மீரா. சாரி.. எனக்கு வேற வழியே தெரியல. நீ என்னைப் பார்க்க மாட்டன்னு தெரியும். உன்னை தூர வச்சி பார்த்துட்டு இருந்தா பைத்தியம் பிடிச்சிடும் போல இருந்தது. அதனாலதான் அப்படி பொய் சொல்லிட்டேன்!" என்றான்.

"ம்.. சாருக்குதான் சம் கேர்ள் பிரெண்ட்ஸ் உண்டே!" என்றாள் கேலியாக.

"நூறு கோடி உண்டு!" என்றவன் அவள் திரும்பிப் பார்த்ததும் "அத்தனை பேருக்கும் ஒரே பெயர். அவ பேர் மீரா!" என்றான்.

மீரா உதட்டை சுழித்தாள்.

"உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்!" அவன் ஆரம்பிக்கும் முன் அவனின் தலையில் கொட்டியவள் "சிகரெட் ஏன்டா பிடிக்கற?" எனக் கேட்டாள்.

பற்களை கடித்தபடி தலையை தேய்த்துக் கொண்டவன் "நீ அழுறதையும் பீல் பண்றதையும் பார்க்க முடியல.." என்றான்.

"அப்படின்னா இனி நானும் பிடிக்கிறேன்!" என்றவள் அவனின் பாக்கெட்டுகளை சோதித்தாள்.

சட்டை பாக்கெட்டில் போன் மட்டும்தான் இருந்தது. பேன்ட் பாக்கெட்டில் எதுவுமே இல்லை.

"எங்கடா ஒளிச்சி வச்சிருக்க?" என கேட்டு நிமிர்ந்தவளை முறைத்தவன் "நான் முழு நேர அடிக்ட்ன்னு நினைச்சி கேட்கறியா? அது ஏதோ ஒன்னு இரண்டு வச்சிருப்பேன். ஆனா இன்னைக்கு அதுவும் இல்ல!" என்றவனின் தோளில் அடித்தாள்.

"ஏன்டி?" என்றவனின் காதை திருகி, நெற்றியில் விரலை சுண்டி விட்டாள். கையை பிடித்து கிள்ளி வைத்தாள். வாயின் மீது அடித்தாள்.

"என் பொண்டாட்டி என்னை அடிச்சி கொல்றா!" கத்தியவனின் மூக்கின் மீது குத்தினாள்.

"இனி சிகரெட் பிடிப்பியா எருமை?"

"மாட்டேன்!"

"எனக்கு நம்பிக்கை இல்ல.. இரு நான் போய் தோசை கரண்டி சூடு பண்ணி எடுத்துட்டு வரேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனுசனுக்கு ஒரு சொல்லு. ஆனா நீதான் மனுசன் இல்லையே. மாடாச்சே!" என்றபடி கிளம்பியவள் அந்த அறையின் கதவை தொடும் முன் ஓடிச் சென்று அவளை நிறுத்தினான்.

"பழமொழியின் அர்த்தம் தப்பு. ஆனாலும் பாரு.. இங்கே அம்மா அப்பா இருக்காங்க மீரா. நீ பழையபடி என்னைக் கொடுமை பண்ண முடியாது. அப்புறம் எல்லோரும் உன்னைத் தப்பா பார்ப்பாங்க.." என்றான்.

மீரா யோசித்தாள். அவன் சொல்வது சரியென்றுதான் தோன்றியது.

"ஆமா!" என்றபடி அவனின் நெஞ்சில் சாய்ந்தவள் அவனின் இடுப்பில் கை பதித்தாள். நறுக்கென்று இடுப்பை கிள்ளி வைத்தாள்.

"அம்மா!" கத்தியவன் அவளின் கையை பிடிக்க முயன்றான்.

"இந்த தழும்பு அவங்க யாருக்கும் தெரியாது இல்ல?" என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் "நீ ஒரு சேடிஸ்ட்!" என்றான்.

அவள் காது கேளாதவள் போல நின்றிருந்தாள்.

"இனி சத்தியமா சிகரெட் பிடிக்க மாட்டேன். என்னை விடுடி!" கத்தினான்.

"பிழைச்சி போ!" என்றவள் அவனை விட்டாள்.

அவன் அவளிடம் என்னவோ கேட்க முயலும் முன் அவனின் போன் ஒலித்தது.

புது எண். எடுத்து காதில் வைத்தான்.

"ஹலோ.." ரோகித்தின் குரல் கேட்டது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம்‌ நட்புள்ளங்களே.

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN