வாழ்வு 1.1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதைக்குள் செல்லும் முன் சில முன்னுரைகள்:

# அழகான காலை வேளை. தனது பள்ளியை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள் சாகித்யா. இரட்டை சடையில் மல்லிகை குடியிருந்தது. கைகளில் சாப்பாட்டு பை இருந்தது. கனமான புத்தக பை முதுகில் இருந்தது.

சாகித்யாவை நோக்கி வந்துக் கொண்டிருந்தது ஒரு கார். வெகுவான வேகம். கார் நெருங்க நெருங்க காரின் மேல் கையை கட்டியபடி நின்றிருந்த வினீயின் கண்களில் பளபளப்பு கூடியது.

***

# வினோதன் அந்த நீண்ட தண்டவாளத்தின் மத்தியில் குறுக்காய் படுத்திருந்தான். சுற்றிலும் காடுகள். யாருமற்ற இடம். இன்று தனது தற்கொலையை யாராலும் தடுக்கவே இயலாது என்ற நம்பிக்கையோடு கண்களை மூடி படுத்திருந்தான்.

உச்சி மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தாள் சயா. இறக்க முயன்றவனை கண்டு உதடு பிதுக்கினாள்.

***

# சரயு குழம்பின் ருசி பார்த்தாள். சுவைத்தது. சாப்பாடு மேஜையின் மீது உணவை கொண்டுப் போய் வைத்தாள். சரயுவின் கணவன் கங்கா குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்தான். ஒரு வாய் உண்டான். சரயு தண்ணீரை கொண்டு வந்து அவனருகே வைத்தாள். அருகே வந்தவளின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டான் கங்கா. குழம்பும் சாதமும் கன்னங்களில் ஒட்டிக் கொண்டது. வலியில் கொடகொடவென்று கண்ணீர் கொட்டியது.

"மனுசன் சாப்பிடுவானா இந்த குழம்பை?" என்று கர்ஜித்தவன் உணவை அப்படியே சாப்பாடு மேஜையின் மீது கொட்டினான். பாத்திரங்களை கீழே இறைத்துவிட்டு‌ வெளியே நடந்தான். சரயு கண்ணீரோடு அதே இடத்தில் நின்றாள். அவளுக்கு பின்னால் நின்றிருந்த வினீ சந்தோச விசில் அடித்துக் கொண்டிருந்தான்.

***

#வித்யன் இறக்கும் தறுவாயில் இருந்தான். தன் காதலியின் மனம் மாற்ற ஆசைக் கொண்டு கல்லூரியின் உயர கட்டிடத்தின் மீதிருந்து கீழே குதித்தான். விளைவாய் கையிலும் காலிலும் பலத்த அடி. தலையிலும் கூட அடி. மருத்துவமனை வராண்டாவில் இழுத்துக் கொண்டிருந்தது அவனின் உயிர். சயா எங்கிருந்தோ ஓடி வந்தாள். "வினீ.. எழு!" என்று அழுதாள்.

***

*** சத்யா விமானத்தை பிடிக்க ஓடிக் கொண்டிருந்தான். இந்த விமானத்தை அவன் பிடித்தால்தான் அவனால் வாழ்க்கையில் முன்னேற முடியும். இந்த பயணம் அவனின் மொத்த வாழ்க்கையையும் மாற்ற போகிறது. அவனை சந்தோசத்தின் உச்சிக்கு கொண்டு செல்ல போகிறது. ஆனால் வினீ சத்யாவின் முன்னால் வந்து நின்றாள். "உன்னால் எங்கேயும் போக முடியாது முட்டாள்!" என்றாள்.

***

# வினிதா நல்ல அலங்காரத்தோடு அந்த அறையின் கட்டிலில் படுத்திருந்தாள். இன்றைக்கு வரும் கஸ்டமருக்கு வருமானம் அதிகமென்று லீலா சொல்லி இருந்தாள். இவனிடம் கறந்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று எண்ணினாள். கதவு தட்டப்பட்டது. வினிதா எழுந்து நின்றாள். புடவையை ஒரு ஓரமாக தள்ளி விட்டாள். தெரிய கூடாத பாகங்கள் தெரிந்தது. இடுப்பில் சேலையை சற்று இறக்கி கட்டிக் கொண்டாள். சென்று கதவை திறந்தாள். வெளியில் காக்கி சட்டையணிந்த காவல் துறை மனிதர் ஒருவர் கேலி சிரிப்போடு நின்றிருந்தார்.

*** இன்னும் நிறைய முன்னுரைகள் உண்டு. மெதுவாக பதிவிடப்படும். இப்போது வாங்க நாம முதல் அத்தியாயத்துக்கு போவோம்.

சத்யா தன் முன் இருந்த நீண்ட நெடும்பாதையை பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருப்பு நிற தார்சாலை நீண்டுக் கொண்டே இருந்தது.

தான் எங்கே இருக்கிறோம் என்ற கவனம் கூட இல்லாமல் நடந்துக் கொண்டிருந்தாள் அவள்.

வானின் நடு உச்சியில் இருந்த வெயில் அவளின் நெற்றியில் வியர்வையை மின்ன வைத்தன. நடந்துக் கொண்டிருந்ததின் காரணமாக கால்கள் இரண்டும் வலிப்பது போல இருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாதையின் இருபக்கமும் மணல் மட்டுமே இருந்தது. நடுவே பாதை சென்றதே தவிர பாதையின் ஓரத்தில் ஒதுங்கி நிற்க ஒரு மரம் கூட தென்படவில்லை.

"ஒரு கட்டிடம் கூட இல்ல.. நிழலுக்கும் மரம் இல்ல. சுடும் காலுக்கு கொஞ்ச நேரம் நிற்க புற்களும் கூட இல்ல.. எந்த இடத்துலதான் இருக்கேன் நான்.?" என்று தன்னையே கேட்டுக் கொண்டவள் இலக்கின்றி நடக்க வேண்டும் என்ற ஒரு விசயத்தை மட்டும் புரிந்துக் கொண்டு நடந்தாள்.

சுடும் காற்று முகத்தில் வீசியது. புறங்கையை கண்கள் முன் காட்டி புயல் மணல் காற்றை தடுத்தாள்.

"சுடும் காற்று.." என்றாள் பெருமூச்சோடு.

அவள் நடந்துக் கொண்டே இருந்தாள். சூரியன் அசையவே இல்லை. நடு உச்சியில் நிலைக்கொண்டு நின்றிருந்தது. வெற்று பாதம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் சுரீர் சுரீரென்று சுட்டது. வெப்ப சலன காற்றில் அவள் உடுத்தியிருந்த சுடிதார் காற்றில் பறந்துக் கொண்டிருந்தது. அவளின் கழுத்தில் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டிருந்த அந்த சுடிதாரின் துப்பட்டா அடிக்கும் காற்றில் எப்போது வேண்டுமானாலும் அவளை விட்டு சென்று விடுவதை போல பறந்துக் கொண்டு இருந்தது.

அவளின் காலில் இருந்த கொலுசு அவளது ஒவ்வொரு அடிக்கும் மெல்லிய சத்தமிட்டது.

"அம்மா அப்பாவெல்லாம் எங்கே போனாங்க.?" என கேட்டவளின் இமைகளை தாண்டி விழுந்தது வியர்வை துளி ஒன்று.

வியர்வையை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து வானம் பார்த்தாள். சூரியன் அவளை பார்த்து தன் செங்கதிர்களை வீசியது. கண் கொண்டு பார்க்க முடியவில்லை அந்த கதிரவனை. ஆனால் தரையை பார்த்தாலும் கூட தாரின் வெம்மையில் கண்கள் இரண்டும் எரிந்தன.

பைத்தியம் பிடித்தது போல நடந்தவளுக்கு அந்த சாலை எப்போது முடியும் என்று இருந்தது. திடீரென்று அவளின் முன்னால் வந்து விழுந்தது பெரிய மேகம் ஒன்று. பயந்து போய் ஓரடி பின்னால் நகர்ந்தாள் சத்யா. அந்த மேகம் அவளை நோக்கி நகர்ந்தது. திடீரென்று அவளை நோக்கி வேகமாக உருண்டு வந்தது. சத்யா பின்னால் திரும்பி ஓடினாள். அந்த மேகம் அவளை துரத்திக் கொண்டு வந்தது. அவள் அணிந்திருந்த துப்பட்டா எப்போதோ பறந்து விட்டிருந்தது. காலின் சூட்டை கூட பொருட்படுத்தவில்லை அவள்‌.

வெகு தூரம் வந்த பிறகு அந்த மேகம் தன்னை பின்தொடர்கிறதா என்று அறிய நினைத்து திரும்பி பார்த்தாள். அவள் திரும்பி பார்த்த அதே வேளையில் அவளை நெருங்கி விட்ட அந்த மேகம் அவளை தனக்குள் மூடியது.

ஈரம் அவளை முழுதாக நனைந்திருந்தது. மேகத்தின் உள்ளே சிக்கிக்கொண்ட சத்யா குழப்பத்தோடும் பயத்தோடும் அந்த மேகத்தின் சுவர்களை தொட்டு பார்த்தாள். பனிமலையின் இடையே சிக்கியது போல குளிர் இருந்தது அந்த மேகத்தின் இடையே. நடுங்கும் கரங்களால் தன்னையே கட்டிக் கொண்டவள் அந்த மேகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றாள். ஆனால் அவளை தனக்குள் பத்திரமாக பிடித்து வைத்திருந்த மேகம் அவளை வெளிவிடவில்லை.

சத்யாவிற்கு மூச்சு முட்டுவது போல இருந்தது. அந்த மேகத்திற்குள்ளேயே மயங்கி போனாள். அந்த மேகத்தின் விளிம்புகளில் இருந்து சொட்டியது தண்ணீர் துளிகள். சுடும் சூரியனின் வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மேகம் கரைந்தது. அரையாய் மயங்கி இருந்த சத்யா "நீ மேகமா இல்ல பனிக்கட்டியா‌.? எந்த மேகமாவது வெயிலுக்கு கரையுமா.?" எனக் கேட்டாள்.

சிறிது நேரத்தில் அந்த மேகம் கரைந்ததும் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டாள் சத்யா. தரையில் அமர்ந்திருந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எழுந்து நின்றாள்.

அவளை நனைத்திருந்த மேகம் ரத்தமாக தரையில் ஓடிக் கொண்டிருந்தது. பயந்து போய் நாலடி தள்ளி ஓடிய சத்யா எதேச்சையாக பார்த்தபோதுதான் தானும் அதே ரத்தத்தில் நனைந்து போய் உள்ளோம் என்பதைப் புரிந்துக் கொண்டாள்.

வெறுப்போடு கையையும் காலையும் உதறினாள். "என்னை யாராவது காப்பாத்துங்க.." என்றாள் கத்தலாக.

கதறியழுதபடி தரையில் மண்டியிட்டவளின் முன்னால் வந்து நின்றான் ஒரு இளைஞன்.

"உன்னால ஏன் பாதையோட முடிவு வரை வர முடியல.?" என்றான்.

சத்யா அவனை கண்டு அவசரமாக எழுந்து நின்றாள்.

"நான் இந்த இடத்துல மாட்டிக்கிட்டேன்.. என்னை காப்பாத்துங்க. என் அப்பா அம்மாகிட்ட கொண்டு போய் என்னை விடுங்க.." என்றாள் கெஞ்சலாக.

அவளை மேலும் கீழும் பார்த்தவன் முடியாதென தலையசைத்தான். "நீ இறந்துட்ட.. உன்னை மரணத்திற்கு பிறகான வாழ்க்கைக்கு வரவேற்கதான் நான் இந்த பாதையின் முடிவில் காத்திருந்தேன். நீ வரல. அதனால்தான் நானே உன்னை பார்க்க வந்தேன்.." என்றான் அவன்.

சத்யா திகைத்து போனாள். தன் கை கால்களை தொட்டு பார்த்தாள். கை கால்களை உணர முடிந்தது. எதிரே இருந்தவனை பார்த்தால்தான் பயம் அதிகரித்தது.

"நான் சாகல.." என்றவள் அவன் நின்றிருந்த இடத்திலிருந்து எதிர் திசையில் ஓட ஆரம்பித்தாள்.

"ஏன் ஓடுற.? நீ இறந்துட்ட.. உன்னால இங்கிருந்து தப்பிக்க முடியாது.." என்றான் ஓடிக் கொண்டிருந்தவளின் முன்னால் வந்து நின்று.

சத்யா கண்ணீரோடு அவன் பக்கம் பார்த்தாள்.

"ஏன் இப்படி.? நான் இதை நம்ப மாட்டேன்.." என்றாள் தலையில் அடித்தபடி.

"என்னோட குழந்தைக்கு இன்னும் கொஞ்ச நாளுல முதல் வருசம் பிறந்தநாள் வர போகுது.. என் வீட்டுக்காரர் என்னை விட்டுட்டு ஒருநாள் கூட பிரிஞ்சிருக்க மாட்டாரு.. நான் எங்கப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு.. எனக்கு ஏன் இப்படி நடக்கணும்.?" என்றாள் கண்ணீரோடு.

"இறந்தவர்கள் அனைவரும் சொல்ற அதே விசயத்தைதான் நீயும் சொல்ற.. உனக்கு யாரும் கிடையாது. உன்னோட உடல், சொந்தம், பந்தம், சொத்து, படிப்பு, உன் பிறவியில் நீ வாழ்ந்த நினைவுகள் எதுவும் உனக்கு சொந்தமில்ல.. என்னோடு வா.. உன்னோட இந்த வாழ்வின் நினைவுகளை அழிச்சிடலாம். அதுக்கப்புறம் எதுவுமே உனக்கு கஷ்டமா இருக்காது.." என்றான் அவன்.

சத்யா அழுதபடியே மறுப்பாக தலையசைத்தாள். "நான் இறந்து போகல.. நான் வாழணும்.. என் குழந்தையை விட்டுட்டு என் புருசனை விட்டுட்டு என்னால வர முடியாது.." என்றாள்.

சத்யாவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை சலிப்போடு பார்த்தான் அவன். "நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கிங்க.? இறப்பை ஏத்துக்க உங்களுக்கு மனசே வராதா.?" என்றான் கோபத்தோடு.

சத்யா கோபத்தோடு நிமிர்ந்தாள். "எனக்கு இன்னும் இருபத்தி அஞ்சி வயசு கூட முடியல.." என்றாள்.

எதிரில் இருந்தவன் சிரித்தான். "நீ மானிட கருவில் உருவான அதே நொடியில் உன் மரணமும் உன்னோடு பயணிக்க ஆரம்பிச்சிடுச்சி. இதை மறந்துடாத.." என்றான்.

சத்யா கண்ணீரை துடைக்க முயற்சித்தாள். ஆனால் கண்ணீர் நிற்கவே இல்லை. இப்படி ஒரு ஏமாற்றத்தை அவள் எதிர் பார்க்கவேயில்லை. எத்தனை ஆயிரம் கற்பனைகள், எத்தனை விதமான ஆசைகள், எப்படிப்பட்ட எதிர்கால கனவுகள்.. அத்தனையும் நொடியில் முடிந்து போனதே என நினைக்கையில் கோபமாக வந்தது. இயலாமை வடித்த கண்ணீர் ஆத்திரத்தை தந்தது.

"நான் வரல. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க. நான் மறுபடியும் என் புருசன்கிட்டயும் குழந்தைக்கிட்டயும் போயிடுறேன்.." என்றவளின் கையை பற்றினான் அவன்.

"செத்து போய் வரவங்க எல்லோரும் இதைதான் சொல்றிங்க. நீ தூரத்து மரண வாயிலை கடக்க உதவி பண்றது மட்டும்தான் நான். உன்னை மட்டுமல்ல உன்னை போல ஆயிரக்கணக்கானவங்க இதே பாதையில் வந்துட்டு இருக்காங்க. நான் அவங்க எல்லோரையும் கொண்டு போய் மரணவாயில்கிட்ட சேர்த்தணும். உன்னை போல அழுதுட்டு இருப்பவங்களோட கதையை கேட்க எனக்கு நேரம் இல்ல.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

சத்யா தன் தாய் தந்தையருக்கு ஒரே மகள். செல்ல மகள். அவளுக்காக உலகத்தையே புரட்டி போடுவார் தந்தை. மகளை உள்ளங்கையில் வைத்து தாங்குவாள் அம்மா. சத்யா ஆசை ஆசையாய் காதலித்து தன் கணவனை கட்டிக் கொண்டாள். கணவனுக்கோ இவள்தான் எல்லாமே. மனைவியின் முந்தானையை பற்றிக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பான் அவன். குழந்தை இப்போதுதான் மண்டியிட்டு தவழ்ந்து போகவே ஆரம்பித்திருந்தாள்.

சத்யா வளர்த்திருந்த தோட்டத்தில் இருந்த ரோஜாக்கள் நேற்றேதான் மொட்டு விட்டிருந்தன. பூக்களின் மென் மொட்டுகளை மகளின் கையால் தொட வைத்து மகளுக்கு புது அனுபவத்தை கற்று தந்தாள். அத்தனையும் கனவாக கலைந்து போனதை நினைத்தவளுக்கு தனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை தந்து அதையும் பாதியில் பிடுங்கிக் கொண்ட கடவுள் மீது கோபம் வந்தது.

அவளை இழுத்துக் கொண்டு நடந்தவன் ஓரிடத்தில் நின்றான். அவனின் முன்னால் பெரிய வட்ட வடிவ நுழைவாயில் தெரிந்தது. "இதுலதான் போகணும்.. போ.." என்று சத்யாவை பாதையினுள் தள்ளி விட்டுவிட்டு அவன் கிளம்பி போனான். சத்யா கோபமும் கண்ணீருமாக அந்த நுழைவாயினுள் நுழைந்தாள்.

நுழைவாயினுள் நுழைந்ததுமே அவளை சுற்றி இருந்த சூழ்நிலை மாறியது. அவளின் முன்னால் கண்ணாடி ஒன்று தெரிந்தது. அதில் தெரிந்த தன் பிம்பத்தை நோக்கி கையை நீட்டினாள்.

"உன் உருவம் உரிக்கப்படுகிறது.." என்று குரல் ஒன்று கேட்டது. குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை.

மீண்டும் அவளின் பார்வை கண்ணாடிக்கே போனது. அவளின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தது. அவளின் அழகு முகம் சிதைந்துக் கொண்டிருந்தது. எத்தனை அலங்காரங்கள் செய்திருக்கிறாள் அந்த முகத்திற்கு. அந்த முகத்தை பார்த்து கணவன் எத்தனையோ முறை ரசித்திருக்கிறான். அழகாய் இருக்கிறாய் என்று முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து கூட பாராட்டை பெற்றிருக்கிறாள். ஆனால் அத்தனையும் நொடியில் காணாமல் போனது. அவள் அழகழாய் உடுத்தி பார்த்த உடல், அவள் விதவிதமாய் பின்னலிட்டு பார்த்த கூந்தல் என அத்தனையும் அழிந்து போனது.

வெள்ளை நிறத்தில் வெறும் காற்றின் பின்னலாய் மாறி போனது அவளின் உருவம்.

"அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.." என்று குரல் ஒன்று ஒலித்தது.

சத்யாவை யாரோ தூரமாக தள்ளி விட்டது போல இருந்தது. வட்ட வடிவமாக இருந்த அறை ஒன்றிற்குள் வந்து நின்றாள். "இவ்வாழ்க்கை நினைவுகளை அழிக்கும் நேரம் வந்து விட்டது.." என்றது ஒரு குரல்.

சத்யா மறுப்பாக தலையசைத்தாள். அந்த அறையிலிருந்து வெளியேறும் வழி எங்கே கிடைக்கும் என்று தேடினாள்.

"நான் என் நினைவுகளை அழிச்சிக்க மாட்டேன். நீங்க எனக்கு துரோகம் பண்ணிட்டிங்க. நீங்க யாரா இருந்தாலும் என் முன்னாடி வந்து நில்லுங்க.." என்றாள் ஆத்திரத்தோடு.

"இங்கே வர எல்லோரும் அழுது தீர்த்துக்கதான் அந்த நீண்ட நெடுவழி பயணம். நீ உறக்கத்துல செத்ததால மரணத்தை பத்தி தெரியாம இவ்வளவு தூரம் வந்திருக்க. விதியின் இயல்பை மாத்தாம வந்து உன் நினைவுகளை அழிச்சிக்கோ.. உங்க விருப்பத்தை மீறி நாங்க எந்த நினைவுகளையும் அழிக்க முடியாது.." என்றது அந்த குரல்.

"என்னை விட்டுடுங்க.. நான் என்னோட குழந்தைக்கிட்டயும் புருசன்கிட்டயும் போறேன்.. நான் இல்லாம எப்படி என் குழந்தை வளருவா.?" என்று அழுதாள் சத்யா.

"யாரும் யாரை நம்பியும் பிறக்கறது இல்ல.." என அந்த குரல் சொன்ன நேரத்தில் அடுத்த ஆன்மா அந்த அறைக்குள் வந்தது.

"விதிவிலக்குகளின் அறைக்கு அனுப்பி வைக்கிறேன். உன் மனம் மாறும் வரை அங்கே இரு.." என்ற குரல் முடிந்ததும் சத்யாவின் ஆன்மா வேறு எங்கோ தூக்கி வீசப்பட்டது.

சத்யா தான் எங்கிருக்கிறோம் என்று பார்த்தாள். வெண்மையான பனிக்கட்டிகள் ஆங்காங்கே கொட்டி கிடந்தது. அவளை போன்ற சில ஆன்மாக்கள் அங்கே சுற்றி திரிந்துக் கொண்டிருந்தன. சத்யா அந்த இடத்தில் இருந்த ஒரு வெள்ளை நிற பனிக்கட்டி இருக்கையில் அமர்ந்தாள். குழந்தையை நினைத்தும் தாய், தந்தை, கணவனை நினைத்தும் அழுதாள்.

நேரங்கள் கடந்தபோது வெள்ளை நிறத்தில் தரை தொடும் அங்கியை அணிந்திருந்த ஒருவர் அங்கே வந்தார்.

சத்யாவை போன்று இருந்த ஆன்மாக்கள் அவரை கண்டதும் அவரருகே ஓடினர்.

"என் ஜென்ம கணக்கை சொல்லுங்க.. நான் ஏன் என் திருமண மேடையில் மாரடைப்பு வந்து இறந்தேன்னு சொல்லுங்க.. என் ஆசை காதலியிடம் இருந்து ஏன் பிரிச்சிங்க.?" என்று கேட்டான் ஒருவன்.

"முதல்ல எனக்கு சொல்லுங்க.. என்னோட கடன் மொத்தத்தையும் கட்டி முடிச்சிட்டு நிம்மதியா கோவிலுக்கு போயிட்டு வந்தவன் மேல ஏன் லாரி ஏறியது.? கடன் கடன்னு காலம் முழுக்க இருந்தவன் ஒருநாள் கூட நிம்மதியா வாழாம ஏன் செத்தேன்.?" என்றான் ஒருவன்.

"நீங்க இறந்த நேரத்தின் வரிசையில்தான் பதில் சொல்வேன் நான்.." என்றவர் தன் இருக்கையில் அமர்ந்தார். தன் முன் இருந்த மேஜையின் மீது புத்தகத்தை விரித்து வைத்தார்.

"இந்த ஜென்மத்துல சபாபதி என பெயர் கொண்டவன் இருபத்தியிரண்டு வயசுல காதலியிடம் காதலை சொல்ல போகும் போது இறந்தவன் முன்னாடி வா.." என்றார் அவர்.

சபாபதி முன்னால் வந்து நின்றான். அவனின் கணக்கை பார்த்தார் அவர். "இது உன்னோட ஜென்ம விளையாட்டு. நீயும் உன் ஆன்ம நட்பும் போட்டுக்கிட்ட ஒப்பந்தம் இது‌. நீ ஒருத்தியை ரசிச்சி காதலிச்சு உருகி காதலை சொல்ல வரும்போது செத்து போறதா ஒப்பந்தம் போட்டு கையெழுத்து போட்டிருக்க. இது உன் ஆன்மாவோட கையெழுத்து. நீயே பாரு. உங்க இரண்டு பேரோட ஆன்மாக்கள் போட்டுக்கிட்ட ஒப்பந்தத்தையும் பாரு.. ஒப்பந்தம் படிச்சி முடிச்ச பிறகாவது இந்த விளையாட்டின் நினைவுகளை அழிச்சிக்க ஆசைப்பட்டா அடுத்த அறைக்கு கிளம்பு. உன் நினைவுகள் அழிஞ்சதும் உன்னோட ஆன்ம தோழி உனக்காக காத்திருப்பா. அவளோடு சேர்ந்து அடுத்த விளையாட்டு விளையாடி நாசமா போ.. ஆனா மறுபடியும் வந்து என்னைக் கொல்லாதே.." என்றவர் வெள்ளை நிற தாளை அவனிடம் நீட்டினார்.

அங்கிருந்த மற்றவர்களிடம் அவர்களது ஆன்மாவின் இந்த ஜென்ம ஒப்பந்தத்தை படித்து காட்டினார் அவர். சத்யாவின் முறை வந்ததும் அவளை நோக்கி தாளை நீட்டினார்.

"உன் ஆன்ம நட்போடு நீ போட்ட ஒப்பந்தம் முடிஞ்சி போச்சி. அதான் செத்துட்ட. இது உங்களோட விளையாட்டு. பிரபஞ்ச வெளியில் அழகான ஆன்மாக்களா பறந்துட்டு இருந்தா பிரச்சனையே இல்ல. ஆனா நீங்கதான் போர் அடிக்குதுன்னு புது ஜென்மத்துல புது விளையாட்டு விளையாட போறிங்க. உங்க விளையாட்டை சுவாரசியமாக்கிக்க நீங்களே உங்க ஆன்ம நட்புக்களோடு ஒப்பந்த விளையாட்டு விளையாடுறிங்க. உங்களோட நினைவுகளை ஓரம் தள்ளிட்டு விளையாட்டின் நினைவுகளை மட்டுமே உண்மைன்னு நம்புறிங்க.. கடைசியில எங்களை போல அப்பாவி கணக்கர்களை தொல்லை பண்றிங்க.." என்று சலித்துக் கொண்டவர் சத்யாவிடம் தாளை நீட்டினார்.

சத்யா தன்னிடம் தரப்பட்ட தாளோடு வந்து இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். அவளும் அவளின் ஆன்ம நட்பும் போட்டுக் கொண்ட விளையாட்டு ஒப்பந்தம் அதில் எழுதப்பட்டிருந்தது.

சத்யா இந்த ஜென்மத்தில் வாழ்ந்த ஒவ்வொரு விசயங்களும் அதில் தெளிவாக இருந்தது. அதை அவளால் நம்பவே முடியவில்லை. தாளின் கடைசியில் சயா என்று கையெழுத்து இருந்தது. இப்படி ஒரு வாழ்க்கையை வாழ எப்படி சம்மதித்திருப்போம் என்று அவளுக்கே புரியவில்லை.

தாயையும் தந்தையையும் தேர்ந்தெடுத்ததும் அவளே. மகளை தேர்ந்தெடுத்ததும் அவளே. அனைத்துமே அவள்தான் தேர்ந்தெடுத்திருந்தாள். ஆனால் அதை நம்பதான் முடியவில்லை.

அந்த கணக்கு எழுதப்பட்டிருந்த தாளின் ஓரங்களில் சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது. "சயா இந்த விளையாட்டு முடிஞ்சதும் உனக்கு மனசு கஷ்டமா இருக்கும். ஆனா இது எதுவும் உண்மை கிடையாது. இது சாதாரண விளையாட்டு. தாயற்றவளாக பிறக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டுக் கொண்ட ஒரு ஆன்மாவிற்கு தாயானாய். மனைவியை விரைவில் இழந்து அவள் நினைவில் காலம் முழுக்க வாழ வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்ட ஒரு ஆன்மாவிற்கு மனைவியானாய்.. அவரவர்களின் வாழ்வை அவர்வர்கள்தான் தேர்ந்தெடுக்கறாங்க. இதில் உன் தப்பு ஏதும் இல்ல. உனது ஜென்மம் முடிந்ததும் அடுத்ததாக நான் எனது வாழ்வியல் விளையாட்டை விளையாட போறேன். என்னை மேற்பார்வை செய்யும் கடமை உனக்கு இருக்கு. இதே தாளின் பின் பக்கத்தில் என் வாழ்வியல் விளையாட்டின் ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்கு. நீ உன் ஜென்ம நினைவை மறந்துவிட்டு உன் ஆன்ம நினைவோடு வந்து என்னை மேற்பார்வை செய்வன்னு நம்புறேன்.. வினீ.." எழுதியிருந்ததை படித்தவள் கசப்பாக சிரித்தாள்.

அந்த பக்கத்தில் இன்னும் ஒரு விசயமும் எழுதப்பட்டிருந்தது. சிறு வயதில் சிறுவன் ஒருவனின் மரணத்திற்கு காரணமாகி காலமெல்லாம் அந்த குற்ற உணர்விலேயே வாழ வேண்டும் என்றும் எழுதியிருந்தது. ஆனால் அதன் மேல் மாற்றி எழுதியிருந்தார்கள். சாக இருக்கும் ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்றி அதன் பெருமித நினைவில் வாழ வேண்டும் என்று இருந்தது. இதை மாற்றி எழுதியது வினீதான் என்பதும் யாரும் சொல்லாமலேயே அவளுக்கு புரிந்தது.

தான் வாழ்ந்த ஜென்மத்தில் நடந்ததை நினைத்து பார்த்தாள். சிறு வயதில் அவளின் நண்பன் ஒரு சிறுவனை தண்ணீர் தொட்டியில் தள்ளி விட்டுவிட்டான். அந்த சிறுவன் சாக இருந்த நேரத்தில் இவள்தான் சத்தமிட்டு பெரியவர்களை அழைத்து அந்த சிறுவன் உயிர் பிழைக்க காரணமானாள்.

நினைவுகளை நினைத்து பார்த்தவள் தன் கையில் இருந்த தாளை கசக்கினாள். "அப்படின்னா அந்த ஆன்ம நட்பு நினைச்சிருந்தா நான் செத்திருக்க தேவையில்லை. இதை மாத்தி எழுத அவங்களுக்கு மனசு வரல.." என்று கோபத்தோடு சொன்னவள் அந்த பக்கத்தை திருப்பி பார்த்தாள்.

வினீயின் இந்த ஜென்மம் ஒரு ஆண் இனம். அன்பான குடும்பம், அழகான உறவுகள், பாசமான மனைவி, செல்ல குழந்தைகள், செலவுக்கு மிகுதியான வருமானம், குற்ற உணர்வற்ற வாழ்க்கை, செய்யும் ஒவ்வொரு செயலிலும் பெருமிதம்.. என்று அருமையான வாழ்க்கை ஒன்று எழுதப்பட்டிருந்தது.

சத்யா மறுப்பாக தலையசைத்தாள். "அருமையான வாழ்க்கை இல்ல. மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ போற நீ.. என்னை நீ கஷ்டப்படுத்தின. நான் உன்னை கஷ்டப்படுத்த போறேன்.." என்றவள் எழுந்து நின்றாள்.

அந்த அறையில் இருந்தவர்கள் அடுத்திருந்த அறைக்கு நடந்துக் கொண்டிருந்தார்கள். சத்யா கடைசி ஆளாக அடுத்த அறைக்குள் நுழைந்தாள். "நான் என் ஜென்ம நினைவுகளை அழிச்சிக்க விரும்பல.. என் ஆன்ம நட்பின் வாழ்வியல் விளையாட்டை வழிநடத்த போறேன்.." என்றாள் அங்கிருந்த கண்ணாடியிடம்.

கண்ணாடியிலிருந்து நீண்டு வந்தது ஒரு கரம். "இது வாழ்வியல் விளையாட்டை மாற்றி எழுத பயன்படும் எழுதுக்கோல். இதை வச்சி அவனோட வாழ்க்கையை அழகா மாத்து.." என்றது ஒரு குரல்.

சத்யா உள்ளுக்குள் சிரித்தாள். எழுதுக்கோலை பெற்றாள். அவளின் ஆன்மா மீண்டும் பூமிக்கு சென்றது.

பெரிய மாளிகை போன்ற ஒரு வீட்டில் ஆண் குழந்தை ஒன்று தவழ்ந்துக் கொண்டிருந்தது.

சத்யா தன்னிடமிருந்த தாளையும் எழுதுக்கோலையும் எடுத்தாள். வினீயின் அம்மா தன் உறவினர் வீட்டிற்கு செல்கையில் பாதி வழியில் மகிழுந்து விபத்துக்குள்ளாக வேண்டும். அந்த நேரத்தில் வினீயை திருடன் ஒருவன் திருடி செல்ல வேண்டும் என்று மாற்றி எழுதினாள். மனதில் புது சந்தோசம் வந்தது.

வினீயின் வாழ்வியல் விளையாட்டு எப்படியெல்லாம் செல்ல போகிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN