தேவதை 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹார்ட் தனது மரத்தின் அடியில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.

"கடவுள்தானே நீர்? பிறகேன் இந்த தியானம் யோகமெல்லாம்?" நக்கலாக கேட்டபடி அவரின் அருகில் வந்து அமர்ந்தாள் ஃபயர்.

"என்னை தொந்தரவு செய்யாதே பெண்ணே! உனக்கு விளையாட தோன்றினால் ஆக்சிஜனோடு சென்று விளையாடு!" என்றார் அவர் பொறுமையாக.

"ஆனா உங்களை போல இல்ல அவன்!"

ஹார்ட் ஆச்சரியமாக அவளைப் பார்த்தார். முதல் முறையாக புகழ்ந்து உள்ளாளே என்று நினைத்தார்.

"அவனுக்கு அறிவு உள்ளது. நான் எனக்கு சமமான அறிவு உள்ளோரோடு கேலி பேசிக் கொள்வதில்லை!" என்றாள்.

ஹார்ட் தனது கோபத்தை புன்னகையாக வெளி காட்டினார்.

"கடவுளுக்கு கோபம் வராது ஃபயர்.." என்றார்.

"ஓ.. சம்பந்தம் இல்லாத பதில் சொல்லலாம் இல்லையா?" எனக் கேட்டு சிரித்தவள் தங்களின் உலகிற்குள் நுழைந்த கவியை கண்டு தன் ரகசிய சிரிப்பை மறைத்தாள்.

"வணக்கம் விருந்தினரே.. வாருங்கள்!" என்று எதிர்சென்று அழைத்தாள் ஃபயர்.

மலை ஒன்றின் மீது ஓயாத நடனம் ஒன்றை ஆடிக் கொண்டிருந்த அக்வா கவியை கண்டு தன் நடனத்தை நிறுத்தினார்.

மலையை விட்டு கீழே இறங்கி ஓடி வந்தார்.

"வந்தனம் தேவனே!" என்றார்.

கவி அவர்களை தயக்கமாக பார்த்தான். அவனின் அண்டத்தை சேர்ந்த கடவுள்களை அவனால் காண முடியாது‌ ஏனெனில் அவர்கள் அந்த அண்டத்தில் உயிர்களை உருவாக்கிய மறுநொடியே தங்களது வேலைகளை கவனிக்க சென்று விட்டனர். ஆனால் இந்த பால்வீதியின் கடவுள்கள் எப்போதும் இங்கே இருப்பது அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

"நான் உங்களிடம் சிறு உதவி கேட்டு வந்துள்ளேன்!" என்றான்.

"நீ கேட்கும் முன்பே ஹார்ட் உன்னிடம் ஆன்மாக்களை வழங்க இருக்கிறார்!" என்ற ஃபயரை திரும்பிப் பார்த்து முறைத்தார் ஹார்ட்.

"அக்வா.. இவளை அழைத்துச் சென்று ஏதாவது புது கலைகளை கற்றுக் கொடு!" என்றார்.

"தேவி.. நாம் சென்று சிற்பம் வடிப்பதை கற்றுக் கொள்ளலாமா?" எனக் கேட்டார் அவர்.

"அதனால் பயன் என்ன?" என்றவளின் கைப்பிடித்து வானில் பறந்தார் அக்வா.

மலையின் உச்சியில் இருந்த பெரிய பாறையின் முன்னால் வந்து நின்றார். பாறையை தன் கைகளின் சக்தியால் வெட்ட ஆரம்பித்தார். பிறகு செதுக்க ஆரம்பித்தார். அழகான ஒரு பெண். ஃபயரின் உருவத்தில் இருந்தது.

"நானே இது!" என்றாள்.

"ஆம் தேவி! இந்த கலையால் உங்களை என்னால் மகிழ்விக்க முடியும்!" என்றார் அக்வா.

அந்த சிலையை மிகவும் பிடித்திருந்தது ஃபயருக்கு.

"வந்த நோக்கம் என்ன சத்திய தேவனே?" எனக் கேட்ட ஹார்டை வணங்கினான் கவி.

"எனக்கு சில ஆன்மாக்கள் வேண்டும் கடவுளே! எனது அன்புக்குரியவள் மன வேதனை தீர சில மனிதர்கள் தேவை. அவர்களை உருவாக்கவே ஆன்மாக்களை கேட்கிறேன்!" என்றான்.

உள்ளுக்குள் மகிழ்ந்துப் போனார் ஹார்ட். ஆனால் பின்விளைவு தெரிந்தும் அவர் மகிழ்ந்ததுதான் ஆக்சிஜனுக்கு ஆச்சரியத்தை தந்தது.

"உனக்கு இல்லாத ஆன்மாக்களா?" எனக் கேட்ட ஹார்ட் தனது கையை அவனிடம் நீட்டினார்.

அவர் தந்த நூறு ஆன்மாக்களையும் ஆசையோடு பெற்றுக் கொண்டான் கவி. அனைத்தும் வெண்ணிறத்தில் இருந்தது. அவை புதிதாய் பிறந்த ஆன்மா என்பது கவியின் கணக்காக இருந்தது. பழைய ஆன்மாக்களுக்கு அவர்களின் அருவ உருவிற்குள் சிறிதாவது கருப்பு படிந்திருக்கும். ஆனால் இவை கண்ணை பறிக்கும் நிறத்தில் இருந்தது.

"என்னிடம் உள்ள அனைத்து ஆன்மாக்களுமே புதிதாக பிறந்தவைதான் கவி. எங்களின் பால்வெளி அண்டத்தில் இது ஒரு சிறப்பு. எங்களின் ஆன்மாக்கள் விரும்பும் நேரத்தில் கடவுளுக்குள் ஐக்கியமாகி கொள்வார்கள். மீண்டும் விரும்புகையில் புதிதாய் பிறப்பார்கள்.!" என்றார்.

"ஆச்சரியம்!" என்றவன் தன் கைகளில் தவழ்ந்துக் கொண்டிருந்த அந்த குட்டி ஆன்மாக்களை வியப்போடுப் பார்த்தான்.

"உனது வேலையில் வெற்றி காண வாழ்த்துகள் தேவனே!" என்று ஆசிர்வதித்தார் ஹார்ட்.

மகிழ்ச்சியில் முகம் மலர கிளம்பினான் கவி. ஆனால் அடுத்த சில நூற்றாண்டுகளிலேயே தனது கத்தியோடு இதே உலகிற்கு கடவுள்களை கொல்ல வேண்டும் என்று ஆத்திரத்தோடு வந்துச் சேர்ந்தான்.

இடையில் அப்படி என்னதான் நடந்தது?

கவி ஆன்மாக்களோடு பூமிக்கு வந்துச் சேர்ந்தான். ஆதி தனது இடத்தை விட்டு எழாமல் இருந்தாள்.

கவிக்கு அவளை சமாதானம் செய்ய வேண்டிய பொறுப்பு இருந்தது. அதனால் அவளின் உருவில் மனிதர்களை உருவாக்கினான். சிறிய இறக்கைகளோடு அழகு மனிதர்கள். தன்னை போல கறுப்பு நிறமாக இல்லாமல் அவளை போலவே பால் நிறத்தில் உருவாக்கினான் அவர்களை. தனக்கு இருக்கும் கார் கூந்தலாக இல்லாமல் அவளுக்கு இருப்பது போல வெள்ளிக் கம்பி கூந்தல். ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்துச் செய்தான். ஒற்றை ஆதிக்கு பதிலாக அவளின் சாயலில் நூறு மனிதர்கள் இருந்தார்கள். நாற்பத்தியெட்டு ஆண்கள். நாற்பத்தியெட்டு பெண்கள். இரு இனங்களும் கலந்தவர்களாக நால்வர்.

மனிதர்கள் உரு பெற்று நடமாட ஆரம்பித்தார்கள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் கவி.

"அனைவரும் ஆதியின் பிம்பம்!" என்று அந்த பூமியின் அனைத்து மூலைக்கும் ஒலிக்கும்படி கத்தினான்.

ஆனால் அவன் அவர்களுக்கு குணமென தனது குணத்தை தந்திருந்தான்.

வனத்திற்குள் ஓடி வந்தான். குகையில் தான் உண்டு தனது வேலை உண்டு என்று படுத்திருந்த ஆதியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

"என்னை விடுங்கள் ஏந்தலே!" என்றாள்.

"அமைதியாய் வா முட்டாள் தேவதையே!" என்றவன் சமவெளியில் கொண்டு வந்து அவளை நிறுத்தினான்.

நூறு பேர் இருந்தார்கள். சிதைந்து கிடந்த கல் கோட்டைகளை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

"இவர்கள்.." கை நீட்டி கேட்டாள் ஆதி.

"நம் குழந்தைகள்!" என்றான் அவன்‌.

இவனது குரல் கேட்டு நூறு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். செய்யும் வேலையை நிறுத்தி விட்டு இவர்களிடம் ஓடி வந்தார்கள்.

"தந்தையே.." என்றவர்கள் ஆதியை கண்டதும் "எங்களின் அன்பு தாயே!" என்று அவளை அணைத்துக் கொண்டார்கள். நூறு பேரின் மத்தியில் திக்கு முக்காடி போனாள் ஆதி.

ஆனால் அவர்களின் அன்பு தாயே என்ற வார்த்தை அவளை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. அவள் உயிரின் ஒரு பாதி பட்டை தீட்ட ஆரம்பித்து விட்டது.

"எங்களின் தாய்!" என்றவர்கள் அவளை விட்டு நகர தயங்கினர்.

ஆதிக்கு அழுகை வந்தது. அவளின் உடைந்த மனம் மீண்டும் சரியாகாது என்றே இவ்வளவு வருடங்களும் நினைத்திருந்தாள். ஆனால் இவர்களின் தாயே என்ற வார்த்தை அனைத்தையும் மாற்றுவது போலிருந்தது.

அவசரப்பட்டாள். அவள் ஒரு அன்பின் தேவதை. அன்புக்கு கட்டுப்படுவதே அவளின் விதி. அதுதான் இப்போதும் வேலை செய்தது. பின்விளைவுகளை அறியாமல் அந்த புது பிள்ளைகளின் மீது பாசம் வைக்க ஆரம்பித்து விட்டாள்.

அவளின் இந்த அவசரம் எத்தனை பேருக்கு எதிரியாய் மாற போகிறது என்பதை அப்போது அவள் அறியவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE.

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN