கனவே 29

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீராவை விட்டு விலகி நடந்தான் ரோகித். அருகே இருந்த அறைக்குள் நுழைந்தான். தொலைக்காட்சியின் ஸ்விட்சை போட்டான். மீராவின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலோடு திரும்பினான்.

"அவ்வளவு அவசரம் வேண்டாம்!" அறையின் வாசலில் துப்பாக்கியோடு நின்றிருந்த இனியனை கண்டு அதிர்ந்துப் போனான். எப்படி இவன் இங்கே வந்தான் என்று குழம்பினான்.

"சாருக்கு பலமான விருந்து ஏற்பாடு பண்ணி இருக்கோம். வரிங்களா?" என கேட்டபடி அவனை நெருங்கினான் இனியன்.

ரோகித்திற்கு கை கால்கள் உதற ஆரம்பித்தது. தனது திட்டம் கடைசி நேரத்தில் சொதப்பும் என்று அவன் நினைக்கவே இல்லை.

இனியன் தன் கையிலிருந்த துப்பாக்கியை கீழே இறக்காமல் பிடித்திருந்தான். ரோகித் தப்பிக்க வழி இருக்கிறதா என்று கவனித்தான்.

"இந்த கட்டிடத்தை சுத்தி போலிஸ் இருக்கு. நீ தப்பிக்க முடியாது. அமைதியா சரணைஞ்சிடு. இல்லன்னா நான் என்கவுண்டர் பண்ணிடுவேன். நான் ஒரு மாதிரி!" என்றவன் டிரிக்கரில் விரலை பதித்தான்.

ரோகித் தோல்வியின் வலியோடு கைகள் இரண்டையும் மேலே தூக்கினான். இந்த போலிஸ் இன்னும் கால் மணி நேரம் கழித்து வந்திருக்க கூடாதா என்று கவலைக் கொண்டான்.

அவனின் கைகளில் விலங்கை பூட்டினான் இனியன். ரோகித்திற்கு அழுகை வரும் போல இருந்தது. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதை போல இருந்தது. எப்படி சிக்கி இருப்போம் என்று யோசித்தான்.

மீராவின் பர்ஸில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த கைபேசியை அவன் பார்க்கவும் இல்லை. அதை பற்றி யோசிக்கவும் இல்லை.

மகிழன் சொன்னது கேட்டு வலிதான் மிகுந்தது மீராவுக்கு.

அதிக காதல். அவன் கண்ணில் தூசு கூட பட்டு விட கூடாது என்று பயந்தவள். அவனின் முகத்தில் புன்னகை நிலைக்க உலகத்தையும் வீழ்த்த முயல்பவள். இன்று தானே அவனுக்கு உயிர் போகும் வலியை தந்துக் கொண்டிருப்பது அறிந்து உயிரோடு வெந்தாள்.

"உன்னை ரொம்ப லவ் பண்றேன் மகி!" என்றவளின் விழிகளில் தேங்கியிருந்த கண்ணீரை கண்டவன் "நானும்தான் மீரா. நீ லவ் பண்ணது தப்பில்ல. நீ என்னை நம்பாம போனதுதான் தப்பு!" என்றான் அமைதியாக.

இப்போதும் அவளின் மனதை மாற்றி விட முடியாதா என்றுதான் பேராசை கொண்டது அவனின் மனம். அவனுக்கு தன் மீதே கோபம் வந்தது. அவள் மீது ஆத்திரமாக வந்தது.

நம்பாமல் இல்லை. தன் காதலை விட அவன் காதலை அதிகம் நம்பினாள். அவனின் கண்களில் தெரியும் காதலின் ஆழம் அறிந்தவள் அவள். அவனின் வார்த்தைகளில் உள்ள உண்மையின் உயிரோட்டம் பற்றி புரிந்தவள்.

"எ.. எப்படி மகி? நீ ஒவ்வொரு முறை என்னை பார்க்கும்போதும் அந்த வீடியோதானே உனக்கு ஞாபகம் வரும்?" காலம் முழுக்க அவனுக்கு வலியையும் வேதனையையும் நிரந்தரமாக தர விரும்பவில்லை அவள். அவன் மகிழ்ந்திருக்க பிறந்தவன் என்று நினைத்தாள்.

மகிழன் தலை முடியை கோதினான்.

"அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்ங்கற? என்னாலதான் அந்த எழவு பாஸ்டை மாத்த முடியலன்னு சொல்றேன் இல்ல. அப்புறம் இப்படி டிசைன் டிசைன்னா கேள்வி கேட்டா எப்படி? இதோ பாரு.. உனக்கு இஷ்டமா இருந்தா வா. இல்லையா செத்து தொலை.. அவ்வளவுதான் லிமிட். நீ செத்த பிறகு எனக்கு வர வலி பெருசா இல்ல இந்த வெளங்காத வீடியோ தர வலி பெருசான்னு நீயே உன் முட்டாள் மூளைக்கிட்ட கேட்டுக்கோ. *** மாதிரி யோசிச்சி உயிரை வாங்கறா!" என்று எரிச்சலோடு சொன்னவன் அங்கிருந்து கிளம்ப முயன்றான்.

மீரா உதட்டை கடித்தபடி தரையைப் பார்த்தாள். ரேப் நடந்தது என்று கேள்விப்பட்டதற்கே ஹார்ட் அட்டாக் வரை பார்த்து வந்தவன் தனது முட்டாள்தனமான தற்கொலை முயற்சியால் இன்னும் எவ்வளவு வேதனைகளை தாங்குவான் என்று யோசித்தாள். என்ன செய்தால் இந்த மொத்த பிரச்சனையும் தீரும் என்று தெரியவில்லை.

'நட்டவுடன் எந்த செடியும் பூக்காது. போ என சொன்னவுடனே எந்த பிரச்சனையும் போயிடாது. ஆனா கொஞ்ச நாள் கழிச்சி இதெல்லாம் பிரச்சனைன்னு நினைச்சி அழுதோமான்னு யோசிச்சி பீல் பண்ணுவோம்!' மனதுக்குள் யாரோ சொல்வது போலிருந்தது. மீராவுக்கு குழப்பமாக இருந்தது.

யாரோ அவளின் கையை பற்றினார்கள். நிமிர்ந்துப் பார்த்தாள். மகிழன் நெருக்கத்தில் நின்றிருந்தான். தன் பற்களை கடித்தபடி அவளிடம் இருந்த கத்தியை பிடுங்கி தூர எறிந்தான்.

"ஒரு அப்பாவி பையனை இவ்வளவு கொடுமை பண்றதுக்காக உன்னை நரகத்துக்கு கொண்டுப் போனதும் எண்ணெய் சட்டியில் போட்டு பொறிக்க போறாங்க!" என்றான்.

மீரா உதடுகள் இரண்டையும் ஒன்றாய் இணைத்து கடித்தபடி அவனை முறைத்தாள்.

"என் மேல உனக்கு கோபமே வராதா மகி?" என்றாள்.

"இருக்கு. உன்னை எண்ணெய் சட்டியில் பொறிச்சி தந்ததும் யாருக்கும் தராம நானே சாப்பிடணும்ங்கற அளவுக்கு இருக்கு!" என்றான் அவளின் மூக்கை பிடித்து ஆட்டியபடி.

அவளின் கன்னத்தில் இருந்த காயத்தை கண்டவனுக்கு வேதனை மிகுந்தது.‌

"லேட்டா வந்ததுக்கு சாரி!" என்றான் கன்னத்தை தொட்டும் தொடாமல்.

நெகிழ்ந்த மனது காரணமே இல்லாமல் துள்ளிக் குதித்தது.

"வேற எங்கேயாவது காயம் ஆகியிருக்கா.. அவன் வேற ஏதாவது பண்ணானா? வேற எங்காவது ட..டச் பண்ணானா?" பயத்தோடு கேட்டவனிடம் இல்லையென தலையசைத்தவள் அவனின் கண்களில் தெரிந்த தவிப்பை சிமிட்டாமல் பார்த்தாள்.

'அனைத்து உறவுகளும் கடவுள் தந்ததுதான். ஆனால் ஒரு சில உறவுகள்தான் கடவுள் வரமா தந்த உறவுகள். இவன் உன் வரம் மீரா. சின்ன காரணங்களை பெருசா நினைச்சி வாழ்க்கையை அழிச்சிடாத. பார்த்த நொடியில் இவன்கிட்ட விழுந்தவ நீ. பத்து வருடங்கள் இவனோடு பழகி இருக்க. இன்னும் எழுபத்தி அஞ்சி வருடங்கள் பழக போற. வெறும் ஒரு ராத்திரியில் நடந்த விபத்துக்காக உங்க இரண்டு பேரோட எதிர்கால, இறந்த கால வாழ்க்கையை நரமாக மாத்திடாத!' மீண்டும் அதே குரல் கேட்டது.

'மனசாட்சி பேசுதா? ஆனா என் மனசாட்சியா இது? ரொம்ப வித்தியாசமா இருக்கு!' என்று குழம்பினாள்.

மகிழன் அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்துக் கொண்டிருந்தான். அவளின் கழுத்தில் ஒற்றைத் துளி ரத்தம் இருந்தது. சுட்டு விரலால் துடைத்து விட்டான்.

"சாரி.!" என்றான்.

"வ.. வலிக்கல மகி!" என்றாள்.

பொய் சொல்கிறாள் என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை.

அவளை விட்டுவிட்டு தொலைக்காட்சியின் அருகே சென்றான். மொத்தமாக பிடுங்கி தரையில் போட்டான். உடைந்த தொலைக்காட்சியின் மீது மீண்டும் அதே நாற்காலியை தூக்கிப் போட்டான். சுற்றிலும் பார்த்தான். பெரிய அறை அது. மைதானம் போல இருந்தது. தண்ணீர் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் மேஜையும் உடைந்த நாற்காலிகள் சிலவும் இருந்தன அறையின் ஒரு ஓரத்தில் கெரசின் கேன் இருந்தது. கேனை எடுத்து கொண்டு வந்து தொலைக்காட்சியின் மீது ஊற்றினான். பாக்கெட்டில் இருந்த லைட்டரை எடுத்து பற்ற வைத்து அதன் மீது எறிந்தான்.

அவன் செய்வது அனைத்தையும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா. திரும்பி வந்தான்.

எங்கோ சலசலப்பு கேட்டது. மீரா திரும்பிப் பார்த்தாள். ரோகித்தும் இனியனும் தூரத்து அறையிலிருந்து வந்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நடக்கும் சத்தம் தண்ணீரில் எதிரொலித்தது.

மீரா ரோகித்தை வெறித்தாள். அவளின் தோளில் கை பதிந்தது.‌ திரும்பிப் பார்த்தாள். மகிழன் அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

"பீ எ பிரேவ் கேர்ள்!" என்றான்.

மீரா சரியென்று தலையசைத்தாள்.

"தேவையில்லாம எங்களை ஏன்டா டார்க்கெட் பண்ண?" அவர்கள் அருகே வந்ததும் ரோகித்தை அடிக்க பாய்ந்தான் மகிழன்.

"பொறுமையா இருங்க மகி!" தடுத்தான் இனியன்.

"இவனால எவ்வளவு கஷ்டம் சார்? இந்த சில மாசமா நல்ல தூக்கம் கூட இல்ல!" ஆத்திரத்தோடு ரோகித்தை முறைத்தான்.

"இவனோடு கொஞ்சம் பேசணும் சார்!" இனியனிடம் அனுமதி வாங்கியவன் "எதுக்குடா எங்களை பழி வாங்கின?" என்று கண்களில் கோபம் மின்ன ரோகித்திடம் கேட்டான்.

ரோகித் அவனையும் மீராவையும் முறைத்தான்.

"உங்களால என் லைஃப் நாசமா போச்சி. அதனாலதான்!" என்றான் பற்களை கடித்தபடி.

மீரா அதிர்ச்சியோடு மகிழனின் அருகே வந்தாள்.

"நா.. நாங்களா?" அதிர்ச்சி குறையாமல் கேட்டாள்.

"யெஸ்‌.. நீங்கதான். நீங்க இரண்டு பேரும் கண்டபடி திரிஞ்சதாலதான் என்.. என் லவ்வருக்கு அவசர கல்யாணம் ஆச்சி. உங்களை போல அவ கெட்டுப் போயிடுவாளோன்னுதான் அவ வீட்டுல அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க!" விலங்கிட்ட இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டவன் கட்டுப்பாடு இழந்து விம்மினான்.

மீராவுக்கு பேச்சே எழவில்லை. மகிழனுக்கும் குழப்பம்தான் வந்து சேர்ந்தது.

நொடிகள் கடந்த பிறகு தன் கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான். இருவரையும் முறைத்தான்.

"உங்க இரண்டு பேராலதான்‌.. உங்களுக்கு சுற்றுப்புறத்தை பத்தி ஒரு கவலையும் இல்ல. உங்களை பார்க்கும் மத்தவங்க தன் பிள்ளைகளை பாதுகாக்க விரும்பி ஏதாவது ஒரு சொதப்பல் முடிவு எடுப்பாங்கன்னும் புரியாது. அவளுக்கு படிக்க எவ்வளவு விருப்பம் தெரியுமா? அவளோட கனவு லட்சியம் எல்லாம் உங்க மண்ணாங்கட்டி காதலாலதான் அழிஞ்சிப் போச்சி.." என்று சொன்னவன் "அவளோட கனவோடு சேர்த்து என் வாழ்க்கையும் அழிஞ்சி போச்சி!" என்றான் மெல்லிய குரலில்.

மீராவுக்கு மூச்சு நிற்பது போல இருந்தது. எங்கே தவறு செய்தோம் என்று யோசித்தாள். மகிழனோடு காதல் கொண்டு பழகிய நாட்களை நினைத்துப் பார்த்தாள். அனைத்து நாட்களிலும் அவனை அணைக்க முயன்றிருக்கிறாள். அருகே இருந்த பெரும்பாலான நேரங்களில் அவனின் நிழலோடு கலந்தபடிதான் இருந்துள்ளது அவளின் நிழல்‌. கை கோர்த்து, தோள் சாய்ந்தபடிதான் ஒவ்வொரு உரையாடலும் நிகழ்ந்துள்ளது.

ரோகித் சொன்னது இதயத்தில் அடியாக விழுந்தது. யாரோ ஒரு பெண்ணின் வாழ்வு அழிய தான் காரணமாக இருந்துள்ளோம் என்ற எண்ணம் அவளின் எண்ணத்தில் குற்ற உணர்வாக கலக்க ஆரம்பித்தது.

தலையை பற்றினாள். அறை தலைகீழாக சுற்றுவது போலிருந்தது. மயக்கம் வருவது போலிருந்தது. கூரை தலைகீழாக சுழன்றதும் சட்டென்று கண்களை மூடிக் கொண்டாள். கரம் ஒன்று தன்னை தாங்கியது உணர்ந்து கண்களை திறந்தாள். மகிழன் அவளை அணைத்தபடி பிடித்துக் கொண்டிருந்தான்.

"ஆர் யூ ஓகே?"

'கலவரத்தில் கேட்கும் கேள்வியா இது?' என்று கேட்க தோன்றியது அவளுக்கு.

நேராக எழுப்பி நிறுத்தினான். ரோகித்தின் புறம் திரும்பினான்.

"நீ சொல்றதை எங்களால ஏத்துக்க முடியாது. நாங்க லவ் பண்றேன்னு உன் காதலியை காலேஜை விட்டு நிறுத்தினா அது அவங்க அப்பா அம்மா மேல உள்ள தப்பு. அவங்க தன் பொண்ணை நம்பாம போனதுக்கு நாங்க பொறுப்பா? லவ் பண்ண எங்களையே எங்க பேரண்டஸ் நம்பும்போது உன் லவ்வரை அவளோட பேரண்ட்ஸ் நம்பலன்னா அவங்கதான் தப்பானவங்க. யாரோ பண்ண தப்புக்கு எங்க மேல பழி போடாத.! ஊர்ல நாங்க மட்டுமே லவ் பண்ணல. நீ இவளை ரேப் பண்ண. இதை காரணம் சொல்லி மத்த பொண்ணுங்களை வீட்டோடு அடைச்சி வச்சிட்டா அப்புறம் அது யோக்கியம் ஆகிடுமா? அது போலதான் உன் கேனதனமான குற்றச்சாட்டும்! உன் லவ்வருக்கு மேரேஜ் ஆனா அவளோட மேரேஜ்ல போய் கலாட்டா பண்ணி தொலைய வேண்டியதுதானே? இல்லன்னா அவளை கடத்தி வந்து ரேப் பண்ணியிருக்க வேண்டியதுதானே?" பற்களை அரைத்தபடி அவன் கேட்கவும் "மகி!" கெஞ்சலாக அவனை அழைத்தாள் மீரா.

மகிழன் தன் கை வளைவில் இருந்தவளை பார்த்தான். "யாரா இருந்தாலும் ரேப் பண்ண கூடாது மகி!" என்றாள் தரை பார்த்த வண்ணம்.

மூச்சு விட மறந்தவனுக்கு தான் பேசியதில் உள்ள தவறு புரிந்தது. அவளை சற்று இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் "சாரி!" என்றான்.

ரோகித்தின் புறம் திரும்பியவன் "உன்கிட்ட உள்ள வீடியோ ஆதாரங்களை முதல்ல என்கிட்ட கொடு. அப்புறம் உன் நேர்மையான வாதத்தை கேட்டுக்கிறேன். உனக்கு தைரியம் இருந்திருந்தா உன் லவ்வரோட பேரண்ட்ஸ்கிட்ட சண்டை போட்டு இருக்கணும். அவளோட படிப்பை காப்பாத்தி இருக்கணும். என்னவளை தொட்டு இருக்க கூடாது.!" என்றான் கடுப்போடு.

"இவனை செக் பண்றிங்களா?" இனியன் கேட்டதும் மீராவை விட்டுவிட்டு ரோகித்தின் அருகே வந்தான் மகிழன்.

"நீ எதிர்பார்க்கும் சாட்சிகள் எதுவும் என்கிட்ட இல்ல. இந்த டிவியோடு இருந்த கனெக்ட் ஆகி இருந்த வீடியோ ப்ளேயர்ல இருந்த பென்டிரைவ் மட்டும்தான் ஒரே ஆதாரம். உள்ளே ரூம்ல இருக்கு‌. போய் எடுத்துக்கோ. பக்கத்துல வராத!" என்றான்.

மகிழன் அவனை குழப்பமாக பார்த்தான். அப்படி என்ன அவனிடம் உள்ளது என்று யோசித்தான்.

தன்னை முறைத்தவனை கண்டுக் கொள்ளாமல் அவனின் பாக்கெட்டுகளை சோதனையிட ஆரம்பித்தான்.

"என்கிட்ட எதுவும் இல்ல மகி!" துள்ளினான் அவன்.

பேண்ட் பாக்கெட்டில் இருந்து மடங்கிய தாள் ஒன்று மட்டும் கிடைத்தது. கையில் எடுத்துப் பிரித்துப் பார்த்தான். பள்ளி சிறுமி ஒருத்தியின் புகைப்படம் அது. நான்காய் மடிக்கப்பட்டு பழுப்பேறிப் போயிருந்தது அந்த புகைப்படம். ஆனாலும் முகத்தை பார்த்த உடன் அடையாளம் கண்டுக் கொள்ள முடிந்தது மகிழனால். அந்த புகைப்படம் கண்டதும் அதிர்ச்சியில் இதயம் ஒரு நொடி நின்றுத் துடித்தது.

"அந்த போட்டோவை தந்துடு மகி.." என்ற ரோகித்தை நிமிர்ந்துப் பார்த்தவன் "ஷோபாவோட லவ்வர் நீயா?" என்றான் கண்களை விரித்து.

அவனின் அதிர்ச்சி கண்டு மீராவிற்கு குழப்பம் மிகுந்தது.

ரோகித்தின் முகத்திலும் அதிர்ச்சி மிகுந்தது.

"இதை வெளியே சொல்லாத. அவ ஹஸ்பண்டுக்கு தெரிஞ்சா அவளுக்கு பிரச்சனை வரலாம். அவ வாழ்க்கையில் வேற.." ரோகித் மேலே சொல்லும் முன் அவனின் முகத்தில் ஒரு குத்து விட்டான் மகிழன்.

"மகிழ்!" கர்ஜித்தான் இனியன். "இங்கே நான் இருக்கேன். உங்களுக்காக இவனை இவ்வளவு நேரம் உங்களோடு பேச விட்டிருக்கேன்! எல்லை மீறாதிங்க!" என்று எச்சரித்தான்.

மகிழன் இடம் வலமாக தலையசைத்தான்.

"பழைய கணக்கு ஒன்னு இருக்கு சார்!" இனியனை பார்த்து சொன்னவனின் முகத்தில் வேதனை பளிச்சிட்டது.

ரோகித் மேலும் குழம்பினான். அவனின் தொடையில் உதைத்தான் மகிழன்.

"ஷோபா ஸ்கூல் விட்டு நிற்க நாங்களும் எங்க லவ்வும் காரணமாடா நாயே?" எனக் கேட்டு சிரித்தான். சிரிப்பின் பின்னால் இருந்த வருத்தத்தையும் வேதனையையும் கண்டு மீராவுக்கு பயமாக இருந்தது. மகிழனின் அருகே வந்து அவனின் கையை பற்றினாள்.

அவளை திரும்பிப் பார்த்தான். கோபத்தின் உணர்வுகள் மெள்ள மெள்ள எங்கோ ஒரு ஆழத்தில் புதைந்து மறைய ஆரம்பித்தது.

"நீ சொன்னதும் காலேஜ்ல ஏதோ ஒரு பொண்ணு டிராப்அவுட் ஆகியிருப்பா. நீ அவளுக்காக எங்களை பழி வாங்கினேன்னு நினைச்சேன். ஆனா ஷோபா.. ஷோபாவுக்காக நீ என் மீராவை சிதைச்சியா ரோகித்?" எனக் கேட்டவனுக்கு வேதனை சிரிப்பு மறைய மறுத்தது.

"ஷோபா ஸ்கூல் விட்டு நிற்க காரணம் எங்க காதல் இல்ல.. உன் காதல்." என்று ஆத்திரத்தோடு பற்களை அரைத்தவன் "அவளுக்கு ஏன் கல்யாணம் ஆச்சின்னு உனக்கு தெரியாது போல!" என்றான் இளக்காரமாக.

பதினொன்றாம் வகுப்பின் கடைசி பரிட்சை நாளில் ஷோபாவை பார்த்தான் ரோகித். மீண்டும் பன்னிரெண்டாம் வகுப்பின்போது முதல் நாள் பள்ளிக்கு வந்ததும் அவனின் கண்கள் தேடியது ஷோபாவைதான். ஆனால் அவள் வந்திருக்கவில்லை. மறுநாளும் வரவில்லை. அடுத்தடுத்த நாட்களிலும் வரவில்லை.

ஒரு வாரம் பொறுத்திருந்து விட்டு அவளின் வீடு தேடி சென்றான்‌ ரோகித். அவளின் வீடு அலங்காரத்தில் இருந்தது. அவளுக்கு அன்று அதிகாலையில் திருமணம் நடந்து விட்டதாக அங்கிருந்த பெரியவர் ஒருவர் சொன்னார். இதயத்தை யாரோ வெட்டியது போலிருந்தது அவனுக்கு.

"ரோகித்.. நான் டாக்டரானதும் முதல் ஊசி உனக்குதான் போட போறேன்!" என்றவளை அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

"டாக்டர் ஆகணும் ரோகித். அதுதான் என் ஒரே லட்சியம். நீயும் டாக்டராகு. இரண்டு பேரும் படிக்கிறோம். இரண்டு பேரும் டாக்டராகுறோம். சொந்தமா ஹாஸ்பிட்டல் வைக்கிறோம். நம்மை தேடி வர ஏழைகளுக்கு இலவசமா டிரீட்மெண்ட் பார்க்கிறோம். ஊரே பொறாமைபடும்படி ஹேப்பியா வாழுறோம்.!" என்றவளின் வார்த்தைகளை அவனால் மறக்க முடியவில்லை. அவளின் கண்களில் தெரிந்த உண்மையையும், அவளின் வார்த்தைகளில் இருந்த சத்தியத்தையும், அவள் தன் மீது கொண்டிருந்த காதலையும் அவனால் சந்தேகிக்க முடியவில்லை.

"ஏன் தாத்தா இந்த வயசுல கல்யாணம் பண்றாங்க.. அவளுக்கு நிறைய படிக்க ஆசையாச்சே!" தயக்கமாக கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தார் அந்த வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த தாத்தா.

"இந்த புள்ளை படிக்கிற பள்ளிக்கூடத்துல எல்லாம் காதலிச்சிக்கிட்டு சுத்துதுங்களாம். தன் பொண்ணும் அதே மாதிரி கெட்டுப் போயிட கூடாதுன்னு இவங்க கல்யாணத்தை பண்றாங்க. படிச்சி என்னாக போகுது? பொம்பளை புள்ளை சம்பாதிச்சா பொறந்த வீட்டுக்கா தர முடியும்? வயசுக்கு வந்த புள்ளைக்கு எப்ப கல்யாணம் பண்ணா என்ன?" என்றார் அவர்.

ரோகித் நிலை குலைந்தவனாக பின்னால் நகர்ந்தான். வீட்டின் அலங்காரங்களை கொளுத்தி விட்டு அவளை அங்கிருந்து இழுத்துச் சென்று விட வேண்டும் என்று இருந்தது.

அவள் இந்த திருமணத்திற்கு சம்மதித்து இருப்பாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை. அதே சமயம் அவள் மீது கொண்ட தன் காதலை குறைத்துக் கொள்ளவும் முடியவில்லை.

தான் அங்கேயே நின்று, தான் அவளுக்கு என்ன உறவு என்று யாருக்காவது தெரிந்தால் பிறகு அவளின் திருமண வாழ்வில் குழப்பம் வந்து விடுமோ என்று பயந்தான். நடந்து முடிந்த திருமணத்தை தன்னால் மாற்ற முடியாத பட்சத்தில் அவளின் நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டியாவது விலகிக் கொள்ளலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டை விட்டு திரும்பி நடந்தபோது இதயத்தை அங்கேயே தொலைத்து விட்டு போவது போலதான் இருந்தது.

அவன் பள்ளிக்கு திரும்பி வந்தபோது பள்ளியின் மைதானத்தில் மீராவும் மகிழனும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பத்து நிமிட இடைவேளை கிடைத்தால் கூட போதும். அவர்கள் விளையாட ஆரம்பித்து விடுவார்கள். இவ்வளவு நாளாக அதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை ரோகித். ஆனால் இன்று அமைதியாக கடந்து செல்ல தோன்றவில்லை.

'இந்த புள்ளை படிக்கிற பள்ளிக்கூடத்துல எல்லாம் காதலிச்சிக்கிட்டு சுத்துதுங்களாம். தன் பொண்ணும் அதே மாதிரி கெட்டுப் போயிட கூடாதுன்னு இவங்க கல்யாணத்தை பண்றாங்க.' அந்த தாத்தா சொன்ன சொற்கள் காதுகளில் மாறி மாறி ஒலித்தது.

மீராவும் மகிழனும்தான் அந்த பள்ளியில் இருந்த ஒரே வெளிப்படை காதலர்கள். ஆனால் யாராவது சென்று அவர்களிடம் கேட்டால் 'நாங்க இன்னும் லவ்வர்ஸ் ஆகல. பிரெண்ட்ஸ் மட்டும்தான்.!' என்று கையில் அடித்துச் சத்தியம் செய்வார்கள். ஆனால் அவர்களின் புன்னகையையும், விளையாட்டையும், ஒற்றுமையையும் நட்பின் வட்டத்திற்குள் மட்டும் பொருத்தி பார்க்கும் அளவிற்கு அங்கே யாரும் நேர்மையானவர்களாக இல்லை. கிசுகிசுக்களும், வதந்திகளும் தாராளமாக சுற்றி வந்த பருவங்கள் அவை. அதனாலேயே இவர்களின் நட்பை நட்பாக யாரும் பார்க்காமல் போய் விட்டார்கள். அடுத்து ஒரு முக்கிய காரணமும் இருந்தது. இந்த இருவரின் நட்பில் மூன்றாவது மனிதர்களால் நுழைய முடியவில்லை. யாரையும் இவர்கள் கூட்டு சேர்க்கவில்லை. எந்த பெண்ணாவது மகிழனிடம் பேசினால் அவளை நேர் நின்று விரட்டினாள் மீரா. எந்த பையனாவது மீராவிடம் நெருங்கினால் அவனை மறைமுகமாக விரட்டினான் மகிழன். எந்த நண்பர்களும் இப்படி இல்லை என்பது அனைவரின் கணக்கு. மகிழனும் மீராவும் போட்டு வைத்திருந்த எதிர்கால காதல் விதிகளை பற்றி அறியாதவர்கள் இவர்கள். அதனால் அவர்களின் நட்பையும் விஷமென்றே கண்டனர்.

தன் ஷோபாவின் வாழ்வு வீணாக இவர்கள்தான் காரணம் என்று எண்ணிய ரோகித்திற்கு அப்போது கூட அவ்வளவு கோபம் இல்லை. அவனது கோபத்தை அவனுக்கு வெளிக்காட்டவும் தெரியவில்லை. ஆனால் நாட்கள் நகர நகர, மீராவும் மகிழனும் ஓயாத ஜோடி பறவைகளாக திரிய ஆரம்பிக்கவும் அவனின் மனதில் துளி துளியாக பழியுணர்ச்சி சேர்ந்தது.

அவனால் ஷோபாவை மறக்க முடியவில்லை. நாள் ஆக ஆக அவனின் காதல் மனதுக்குள் அசுர வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்தது. தன் காதல் கை கூடாமல் போனதன் வலியும் அதிகரித்துக் கொண்டிருந்தது. மீராவையும் மகிழனையும் காண காண அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற குரூர எண்ணமும் வளர்ந்துக் கொண்டே இருந்தது.

மீராவும் மகிழனும் பின்னி பிணைந்துக் கொண்டிருந்தனர். தங்களை காதலர்கள் என்று வெளிப்படையாக சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்கள். மகிழனின் பாட்டி மீராவை 'தன் பேரன் மனைவி' என்று வெளியாட்களிடம் சொல்லும் அளவுக்கு குடும்பங்களும் நெருங்கி விட்டது. மீராவின் அண்ணன் மகிழனை 'மச்சி' என்று அழைத்தான். அவளின் அப்பா 'மருமகனே' என்றார். தம்பி பையனும் 'மாமா மாமா' என்று மகிழனின் பின்னால் சுற்றினான்.

தன் வாழ்க்கையை கெடுத்தவர்கள் ஆனந்தத்தில் மிதப்பதை ரோகித்தால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை‌. அதன் விளைவாய்தான் அனைத்தையும் செய்திருந்தான்.

ரோகித்தின் முன் விரல் சொடுக்கிட்டான் மகிழன்.

"என் மீராவோட மனசை சிதைச்ச பாவம் மட்டும்தான் உனக்கு சேருதுன்னு நினைச்சேன். ஆனா ஷோபா வாழ்க்கையை அழிச்ச பாவம் அதை விட அதிகமா சேர்ந்திருக்கு!" என்றான்.

"எ.. என்ன மகி சொல்ற? ஷோபாவும் நானும் லவ் பண்ணது யாருக்கும் தெரியாது. அவ வீட்டுல இருப்பவங்களுக்கும் சுத்தமா தெரியாது!" என்றவனின் சட்டையை கொத்தாக பிடித்தான் மகிழன்.

"யாருக்கும் தெரியலன்னா என்ன, அவ வயித்துல வளர்ந்துட்டு இருந்த உன் குழந்தைக்கு தெரியுமே!" என்றான் ஆக்ரோசத்தோடு.

மீரா அதிர்ச்சியில் வாயை பொத்தினாள்.

ரோகித்தின் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது. அவனால் மகிழன் சொன்னதை நம்பவே முடியவில்லை.

"என்ன மகி சொல்ற?" அவசரமாக கேட்டான். தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

அப்படி இருக்க கூடாது என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டான். 'ஷோபா.. ப்ளீஸ்.. அப்படி இல்லதானே.? லவ் யூ ஷோபா.. உன் படிப்பு கெட்டுப் போக காரணம் நானா இருந்தா.. மை காட்.. ஷோபா..!' தலையை பிடித்தான்.

"என்னாச்சி மகிழ்?" இனியன் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு கேட்டான்.

"என் கிளாஸ்மேட் சார். ஷோபா. ரொம்ப நல்லா படிப்பா. ஆனா லெவன்த்ல இவனால பிரகனென்ட்.. வெளியே தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்ன்னு அவங்க வீட்டுல அவளை ஸ்கூல்லை விட்டு நிறுத்திட்டாங்க. அப்பவே அவளோட சொந்தக்கார பையனோடு அவளை கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அவளுக்கு அப்படி ஆக காரணம் யாருன்னு எனக்கு இவ்வளவு நாளா தெரியாது சார்.. யோக்கியம் மாதிரி எங்களை பழி சொன்ன இவனாலதான் அந்த பொண்ணோட படிப்பு கெட்டுப் போச்சி!" என்று ரோகித்தை நோக்கி கையை நீட்டினான் மகிழன்.

ரோகித் கால் மடிந்து தரையில் விழுந்தான். மண்டியிட்டவனின் கண்களில் நீர் திரண்டது. உண்மையை அறிந்துக் கொண்டதை விட அதை ஏற்றுக் கொள்ள முயன்றதில்தான் அதிகமாக இதயம் வலித்தது. நெஞ்சை பற்றினான்.

'ஷோபா!' வேதனையோடு அழைத்தது அவனின் இதயம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN