கனவே 32

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீரா மொட்டை மாடியில் வத்தலை காய வைத்துக் கொண்டிருந்தாள். மணியம்மா கீழேயே காய வைத்துக் கொள்வதாக சொன்னாள். ஆனால் இவள்தான் நடக்க ஒரு வாய்ப்பு என்று எடுத்து வந்து இங்கே காய வைத்துக் கொண்டிருந்தாள்.

ஷோபா இறந்து சில வாரங்கள் ஆகி விட்டது. அவளின் நினைவுகளை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியவில்லை மீராவால். ஆனால் மகிழன் அருகில் இருந்ததால் வருத்தங்கள் மனதில் நிற்காமல் நகர்ந்துக் கொண்டிருந்தது.

இந்த சில வாரங்களாக வாழ்க்கை சாதாரணமாக போய் கொண்டிருந்தது. தனக்கு நடந்த காயங்களை பற்றி அவள் மறக்க ஆரம்பித்து விட்டிருந்தாள் என்றே சொல்லலாம். வீட்டில் இருந்த அனைவருமே அவள் மீது பாசமும் அக்கறையும் காட்டினார்கள்.

சில நேரங்களில் இவ்வளவு அன்புக்கு தான் தகுதி உடையவளா என்று கூட நினைத்திருக்கிறாள். ஆனால் அதற்கு பதிலென அவர்களுக்கு தனது அன்பை தந்தால் வேலை முடிந்து விடுகிறது என்றுப் புரிந்துக் கொண்டாள்.

ஆரவல்லிக்கு தினமும் ஸ்லோகம் படித்துக் காட்டினாள். நேரங்கள் இருக்கும்போது ரோகிணியோடு சென்று அவளது நிறுவனத்திற்கு என்று சிறு சிறு வேலைகள் செய்துத் தந்தாள்.

சரணை விடவும் அவளிடம் அதிகம் நெருங்கி விட்டான் அகிலன். அதியன், செழியன், சரண் என மூவரையும் இவனிடம் கண்டாள் மீரா.

இதுநாள் வரை வெளியூர் சென்று வந்தால் வித்யாவிற்கு மட்டும் ஏதாவது வாங்கி வருவார் வசந்த். இப்போது மீராவுக்கும் சேர்த்து வாங்கி வந்து தந்தார். சிறு காதணியாக இருந்தாலும் கூட அவர் தேர்ந்தெடுத்தது தனக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது கண்டு வியந்தாள்.

"உங்க அப்பாவுக்கு செம டேஸ்ட்!" என்றாள் ஒருநாள் மகிழனிடம்.

"ஆனா என் அளவுக்கு இருக்காது!" என்றவனை கேலியாக பார்த்தாள் அவள்.

சிரித்தவன் "உனக்கு சந்தேகமா இருந்தா போய் கண்ணாடி பார்.. என் டேஸ்ட் என்னன்னு உனக்கே புரியும்!" என்றான்.

அவன் சொன்னது முதலில் புரியவேயில்லை. கண்ணாடியை திரும்பிப் பார்த்தாள். தலை முதல் கால் வரை பார்த்தாள். அழகாய்தான் இருந்தாள். நடுவில் ஒரு வருடங்களாக இழந்து விட்டிருந்த அழகு இப்போது திரும்பி வந்து விட்டது போலிருந்தது. கண்ணாடியை நெருங்கினாள். காதோரத்து தலைமுடியை நகர்த்தி விட்டாள். கண்ணாடியில் கை பதித்தாள். தன்னை அவள் ரசிப்பதை விட்டு முழுதாய் ஒன்னேகால் வருடங்கள் ஆகி விட்டிருந்தது.

மகிழன் அவளின் பின்னால் வந்து நின்று அவளின் தோளில் முகம் பதித்தான். "என் டேஸ்டும் குட் இல்ல?" என்றான்.

மீரா ஆமென்று தலையசைத்தாள். "ஆனா என் டேஸ்ட் அளவுக்கு இல்ல!" என்றாள் கண்களை சிமிட்டி.

மகிழன் அவளின் தலையோடு தன் தலையை இடித்தான். "உனக்கு பொறாமை!" என்றான்.

அவன் சொன்னதை நினைத்து தனக்குள் சிரித்தபடியே வத்தலை காய வைத்துக் கொண்டிருந்தவள் வித்யாவின் கனைப்புக் குரல் கேட்டு திரும்பினாள்.

"அக்கா!" எழுந்து நின்றவளின் அருகே வந்தாள் அவள்.

"என்ன காதல் கனவா? நான் வேணா என் தம்பிக்கு போன் பண்ணி வர சொல்லட்டா?" கேலி செய்தாள் வித்யா.

மீராவுக்கு முகம் லேசாக சிவந்தது.

"டீஸ் பண்ணாதிங்க அக்கா.!" என்றவள் அருகே வந்து வித்யாவை அணைத்துக் கொண்டாள்.

"மாரி அம்மா நல்லாருக்காங்களா?"

"ம்.. என்னோடு வந்திருக்காங்க.. ஸ்கூலுக்கு புதுசா இரண்டு பேரை வேலைக்கு சேர்த்திருக்கோம். அதனால இன்னைக்கு எங்களுக்கு நாங்களே ரெஸ்ட் தந்துக்கிட்டோம்!" என்றாள்.

மீராவும் வித்யா கீழே நடந்தார்கள்.

"அக்கா ஒரு சந்தேகம் கேட்கட்டா?" என்றவளிடம் "ம்" என்றாள் வித்யா.

"என் மேல உங்களுக்கு ஏன் வெறுப்பு வரல?"

வித்யா நடப்பதை நிறுத்திவிட்டு அவளை திரும்பிப் பார்த்தாள்.

மீராவின் கண்களில் சோகம் இல்லை. ஆனால் சிறு ஆர்வம் இருந்தது.

"ஏன் வெறுப்பு வரணும்? நாம தப்பு பண்ண மாட்டோம்ன்னு நம் மேல நாம நம்பிக்கை வைக்க முடியும். ஆனா நமக்கு விபத்து நடக்காதுன்னு நம்மால சொல்ல முடியுமா? விபத்து யாருக்கு வேணாலும் நடக்கும். அந்த இடத்துல நான் இருந்திருந்தா.. அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வராதுன்னு உன்னால சொல்லவே முடியாது. நான் உன் மேல வெறுப்பு காட்டினா அப்புறம் நான் எப்படி வாழ்க்கையை புரிஞ்ச மனுசியா இருக்க முடியும்? காயம்பட்டவங்களை வெறுப்பது சுலபம். ஆனா அதே காயம் நமக்கு உண்டானா என்ன செய்வோம்ன்னு அந்த வெறுப்புக்கும் முன்னாடி ஒரு செகண்டாவது யோசிக்கணும்.!" என்றாள்.

மீரா யோசித்தாள். வித்யா சொன்னதில் அர்த்தம் இருந்தது. விபத்துக்கள் எப்போதும் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். பாதையில் செல்கையில் தவறு நம்முடையதோ எதிரே வருபவர்களுடையதோ‌.. விபத்துகள் ஏதோ ஒரு விதத்தில் நடக்கலாம். விபத்திலிருந்து நம்மாள் மீள முடிந்தால் அது பாக்கியம். விபத்தானவர்களை மீட்டுக் கொண்டு வர நமது கரம் நீண்டால் அது இன்னும் பெரும் பாக்கியம்.

மாரியும் ரோகிணியும் ஹாலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மீராவை கண்டுவிட்டு கையசைத்தாள் மாரி.

"அம்மா.!" என்றபடி இருவருக்கும் முன்னால் சென்று அமர்ந்தாள்.

"ரொம்ப அமைதியான பொண்ணு.. இவளை போல ஒருத்தி என் வயித்துல பிறந்திருக்க கூடாதா?" என்று மீராவின் தலையை வருடினாள் மாரி.

ரோகிணிக்கு அதிர்ச்சியில் கண்கள் இரண்டும் வெளியே கொட்டிவிடும் போலிருந்தது. இந்த சில நாட்களில் மருமகளின் வாயாடிதனத்தை அறிந்துக் கொண்டு விட்டாள் அவள். எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருந்தாள். மகிழனோடு அவள் பேசுவதையெல்லாம் கேட்டால் காதிலிருந்து ரத்தம் வராத குறைதான். சம்பந்தமில்லாத விசயங்களை கூட நான்கு மணி நேரத்திற்கு பேச அவளால் முடிந்தது. உண்மையில் ரோகிணிக்கு தன் மகன் மீது சற்றுப் பரிதாபம் கூட வந்து விட்டது.

கால் இப்படி இருந்தும் கூட ஓரிடத்தில் உட்காராமல் ஒரு நாளைக்கு வீட்டை ஐம்பது முறை சுத்தி வந்துக் கொண்டிருந்தாள்.

பல நேரங்களில் கலகலப்பானவள் என்று நினைக்க தோன்றினாலும் கூட சில நேரங்களில் துடுக்கானவள் என்று எண்ணும்படி ஆயிற்று.

"அஞ்சி வயசு புள்ளையை கூட சமாளிக்கலாம். உன் பொண்டாட்டியை சமாளிக்க முடியாதுடா!" என்று ஒருதரம் மகிழனிடமே சொல்லி விட்டாள் ரோகிணி.

மகிழன் சிரித்தபடி அம்மாவின் கன்னம் கிள்ளினான். "கொஞ்ச நாள்ல பழகிடும்மா!" என்றான்.

அவள் மாறுவாள் என்றுச் சொல்லாமல் நமக்கு பழகிவிடும் என்று அவன் சொல்லி விடவும் ரோகிணிக்கு சிறு அதிர்ச்சியாகதான் இருந்தது. ஆனால் அவன் சொன்னதும் உண்மைதான். மீராவோடு பழகி பழகி விரைவிலேயே ரோகிணிக்கும் பழகி விட்டது.

மீராவை பொறுத்தவரை நமக்கு ஏதாவது வேண்டுமென்றால் அதை நாம்தான் கேட்டுப் பெற வேண்டும். அவளுக்கான உணவை மணியம்மாவிடம் சொல்வதிலும், அவளுக்கு தேவையான பொருட்கள் எதுவென்று மகிழனிடம் சொல்லவும் அவள் தயங்கவேயில்லை.

மருமகளோடு பழக ஆரம்பித்த பிறகு ரோகிணிக்கும் கூட தனது சில தயக்கங்கள் விட்டுச் செல்வது போலிருந்தது. தன்னிடம் பணம் நிலுவை வைப்போரிடம் பணத்தை கேட்டுப் பெற ஆரம்பித்து விட்டாள். இவ்வளவு நாள் கணவனிடம் சொல்லாமல் இருந்த சிறு சிறு ஆசைகளையும் கூட சொல்லி விட்டாள்.

"போங்கம்மா!" மாரியிடம் வெட்கப்பட்ட மீரா "எங்க வீட்டுல நான் மூணாவது பொண்ணு. அதனால எங்க வீட்டுல என்னை இப்படியெல்லாம் சொன்னதே இல்ல!" என்றாள்.

மாரி சிரித்தபடி மீராவின் கையைப் பற்றினாள்.

"உன் அம்மா சொல்லி உன் சிறப்பை நீங்க தெரிஞ்சிக்கற வயசை எப்பவோ கடந்துட்ட.. உன்னால உன்னை சுத்தி இருக்கற எல்லோரையும் ஆக்டிவாவும், பிரெஸ்ஸாவும் வச்சிக்க முடியுது. நிழல்ல கிடைக்கும் சிறு வெளிச்சம் உன் சிரிப்பும் பேச்சும்.!" என்றாள்.

மீராவுக்கு வெட்கம் வரும்போல இருந்தது. சிலரை மட்டும்தான் அனைவருக்கும் பிடிக்கும். அந்த சிலரில் தானும் ஒருத்தியாய் இருப்பது மீராவுக்கு பிடித்திருந்தது‌. இப்படி ஒரு வரத்தை தந்ததற்காக கடவுளிடம் நன்றி சொன்னாள்.

ரோகித் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டான். அவனுக்கு ஏழாண்டு சிறை தண்டனை கிடைத்தது. அவனின் வீட்டிலிருந்து யாரும் வந்துப் பார்க்கவில்லை. அவனும் அவர்களை எதிர்ப்பார்க்கவில்லை.

சாரதியின் வீட்டிலும் வினய்யின் வீட்டிலும் இருந்து மேல் முறையீடு செய்ததில் வழக்கு நடந்துக் கொண்டே இருந்தது. மீராவுக்கு அப்படி நடந்த நேரத்தில் அவர்கள் இருவரும் ஊரில் இருக்கவில்லை என்றும் நடு இரவிற்கு மேல்தான் வீடு வந்தார்கள் என்பது போலவும் வக்கீல் மூலம் கதை திரித்தார்கள்.

மீராவுக்கு நடந்த மருத்துவ பரிசோதனைகள் பொய் சொல்லப்பட்டு உள்ளது என்று வாதாடினார்கள். மீராவின் குடும்பம் வேண்டுமென்றே இவர்களை வழக்கில் சிக்க வைக்க முயன்றிருப்பதாக சொன்னார்கள்.

மகிழன் அவர்கள் இருவரையும் சிறையில் வைத்து கொன்று விடலாமா என்று யோசித்தான். ஆனால் மீரா அவனை சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள்.

வருடங்கள் கடந்து விட்டது.

மீரா தனது ப்ளே ஸ்கூலில் இருந்தாள். வித்யாவை பார்த்து ஆசைக் கொண்டு இந்த பள்ளியை ஆரம்பித்து இருந்தாள். ஆனால் வேலைக்கு செல்லும் பல தாய்மார்களுக்கு தான் உதவியாக இருக்கிறோம் என்றுப் புரிந்த பிறகு வேலையை இன்னும் சற்று விரும்ப கற்றுக் கொண்டாள்.

வீட்டின் பின்புறத்தில் மீராவின் ப்ளே ஸ்கூலுக்காக அழகிய கட்டிடம் ஒன்றை கட்டி தந்தார் வசந்த்.

ஆரம்பத்தில் மகிழனுக்கு இந்த யோசனை பிடிக்கவேயில்லை‌.

"ஸ்கூலுக்கு வர பிள்ளைங்களை இவ பிடிச்சி கிள்ளி வச்சிடுவா அப்பா.. அப்புறம் அவங்க பேரண்ட்ஸ் சண்டைக்கு வந்துடுவாங்க!" என்று இவன் குறை சொன்னது கேட்டு ரோகிணிக்கும் வசந்துக்கும் அட்டாக் வரதா குறை.

"நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் மாமா.. குழந்தைங்களை பொம்மை மாதிரி பார்த்துப்பேன்!" என்று சத்தியம் செய்தாள் மீரா.

"இப்ப கூட பார்த்திங்களா.. குழந்தைகளை பொறுப்பா பார்த்துக்கணும்.. பொம்மை மாதிரி பார்த்துக்க கூடாது!" என்று மறுப்பு தெரிவித்தான் மகிழன்.

"என்கிட்ட கம்பெனி ஷேர்ஸ் இருக்கு. அதை வித்துட்டு பெரிய ஸ்கூல்லா தொடங்குவேன்!" மீரா நாக்கை நீட்டியபடி சொல்ல மகிழன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

தன் தந்தையை முறைத்தான். அவரோ கூரையை வேடிக்கைப் பார்த்தார். மகனை ஒழுங்காக வேலை செய்ய வைக்கும் யுக்தி என்று எண்ணி ஷேர்ஸை மீராவின் பெயரில் மாற்றி விட்டார். அதுவும் நல்ல பயனைதான் தந்தது. மனைவியிடம் புகழ் சேர்க்க விரும்பினானோ, இல்லை அவளின் பெயரில் உள்ள சொத்துகள் பல மடங்கு பெருகி வேண்டும் என்று நினைத்தானோ.. ஒழுங்காக வேலை பார்க்க தொடங்கி விட்டான் மகிழன்.

ஆயிரம் புத்தி சொல்லி அதன் பிறகே அவளுக்கு ப்ளே ஸ்கூல் தொடங்க அனுமதி தந்தான் மகிழன். அவள் குழந்தைகளை கிள்ளியோ கடித்தோ வைத்து விடுவாளோ என்று உண்மையிலேயே பயந்திருந்தான். ஆனால் ஆரவல்லிதான் அவனுக்கு சமாதானம் சொன்னாள். மீரா பொறுப்பாக குழந்தைகளை பார்த்துக் கொண்டாள். அதை அறிந்து மகிழனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

"ஆத்தி.. என் பொண்டாட்டி மனசாலயும் வளர்ந்துட்டா!" என்று நெஞ்சில் கை வைத்தபடி சொல்லி மகிழ்ந்தான்.

குழந்தைகளை பார்த்துக் கொள்வது சவாலான விசயம். மீரா அதை சமாளித்தாள். அவளுக்கு குழந்தைகளை பிடித்திருந்தது. அவர்களோடு இருப்பது பிடித்திருந்தது. அவர்களை போலவே இவளும் குணத்தை கொண்டிருந்தாள். அதனால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"மேம்!" யாரோ அழைப்பது கேட்டு நிமிர்ந்தாள். ஆரவல்லி தனது ஸ்லோகங்களை படித்தபடி ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். ஆரவல்லியை சுற்றி அமர்ந்திருந்த குழந்தைகள் அவளின் புரியாத பாசையை வியப்போடு பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் ஆச்சரியம் தீர சில நிமிடங்களோ நாட்களோ கூட ஆகலாம்.

ப்ளே ஸ்கூலின் வாசலில் இளம்பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

"உள்ளே வாங்க!" என்று அழைத்தாள் மீரா.

"இல்ல மேடம்.. நான் இங்கேயே சில விசயங்களை கேட்டுக்கறேன்!" என்றவளை கேள்வியாக பார்த்தாள் மீரா.

"என் சைல்டை உங்களால பார்த்துக்க முடியுமா?" எனக் கேட்டாள்.

மீரா தலையசைத்தாள்.

"ஆனா ஒரு கன்டிசன். எந்த பசங்களும் அவ பக்கத்துல வர கூடாது. நிறைய ப்ளே ஸ்கூல்ல இந்த கன்டிசன் சொன்னேன். அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நீங்க என்ன சொல்றிங்க?" எனக் கேட்டாள்.

மீரா உள்ளே திரும்பிப் பார்த்தாள். ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் ஒன்றாகதான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அது எப்படி சாத்தியம் என்பதையும் தாண்டி ஏன் இவ்வாறு இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது மீராவுக்கு.

"இங்கே மட்டுமில்ல வேற எங்கேயுமே இந்த கன்டிசனோடு குழந்தைகளை பார்த்துக்க மாட்டாங்க!" என்றாள் மீரா அமைதியாக.

வந்தவள் முக கடுப்போடு திரும்பினாள்.

"ஒரு நிமிசம்!" மீராவின் அழைப்பில் திரும்பினாள்.

"குழந்தைகளும் தெய்வங்களும் ஒன்னுன்னு சொல்வாங்க.!" என்றாள்.

"ஆனா ஆண்களின் புத்தி எப்பவும் ஒன்னுதான். அது பெண்களோட மனசை உடைக்கிறது. இந்த உலகம் ஆண்களின் வன்மத்தால் நிரம்பி இருக்கு. என் பொண்ணு அந்த வன்மத்தின் காரணமாக பாதிக்கப்படுறதை நான் விரும்பல!" என்றாள்.

"ஆனா உங்க எண்ணம் தவறா இருக்கு!" மீராவால் இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மீராவை வெறித்தவள் பதில் சொல்லாமல் திரும்பி நடந்தாள். ஆனால் நான்கடி கடக்கும் முன்பே மயங்கி தரையில் சாய்ந்தாள். மீரா பயந்து விட்டாள். பாட்டியை அழைத்தாள்.

பாட்டியும் அவளும் சேர்ந்து அவளை நிழலுக்கு தூக்கி வந்தார்கள்‌. மீரா தண்ணீரை அவளின் முகத்தில் நெளிந்தாள். ஆனால் அவள் எழவே இல்லை.

"டாக்டருக்கு போன் பண்ணட்டா பாட்டி?" என்று மீரா கவலையோடு கேட்ட நேரத்தில் அவளிடம் இருந்து அசைவு தெரிந்தது.

மீரா காத்திருந்தாள். ஐந்தாறு நிமிடங்களுக்கு பிறகு கண் விழித்தாள் அவள். குழந்தைகள் அனைவரும் இந்த புது பெண்ணை ஆச்சரியத்தோடுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு அனைத்தும் ஆச்சரியம். அனைத்தும் புதுமை.

எழுந்து அமர்ந்தாள் அவள். தன் கையை பற்றியபடி நின்றிருந்த ஒரு ஆண் குழந்தையை வெறித்தவள் அவனை தன்னிடமிருந்து விலக்கி தள்ளினாள். அவளின் தள்ளலில் கீழே விழ இருந்த குழந்தையை சட்டென்று பிடித்து நிறுத்தினாள் மீரா. அந்த பெண்ணை கோபத்தோடு முறைத்தாள்.

"மயங்கி விழுந்தன்னு காப்பாத்தினா இப்படி குழந்தையை பிடிச்சி தள்ளி விடுறியே, நீயெல்லாம் என்ன பொண்ணு?" எனத் திட்டினாள் ஆரவல்லி.

"விடுங்க பாட்டி!" என்ற மீரா அந்த பெண்ணுக்கு தண்ணீரை நீட்டினாள்.

தயக்கமாக இவளைப் பார்த்தாள் அவள்.

"நான் பொண்ணுதான்.. தண்ணியை குடிங்க!" என்றாள் மீரா மென்மையாக.

யோசித்துவிட்டு தண்ணீரை வாங்கி பருகினாள் அவள்.

"தேங்க்ஸ்!" என்றவளை பரிதாபமாக பார்த்தாள் மீரா. ஆண்களை வெறுத்துவிட்டு இந்த பூமியில் வாழ்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஆட்டோ, பேருந்து, பெட்ரோல் பங்க் என்று எங்கே செல்ல முடியும்? இது மூன்று பாலினமும் கலந்து உருவாக்கப்பட்ட பூமி. ஒருவரையொருவர் விலக்கி தள்ளிவிட்டு பிறகு எப்படிதான் வாழ்வது என்று கேள்வி எழுந்தது மீராவுக்கு.

எழுந்து நின்றாள் அவள்.

"தேங்க்ஸ்!" என்று மீண்டும் சொல்லிவிட்டு வெளியே நடந்தாள். அவளின் தள்ளாட்ட நடை பரிதாபத்தை தந்தது மீராவுக்கு.

"பாட்டி இவங்களை பார்த்துக்கங்க.. நான் வந்துடுறேன்!" என்றவள் அந்த பெண்ணின் பின்னால் ஓடினாள்.

"ஹலோ!" அழைத்து நிறுத்தினாள்.

"அதுதான் தேங்க்ஸ் சொல்லிட்டேனே மேம்!" என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவள் "நாம பிரெண்ட்ஸா இருக்கலாமா? நான் மீரா!" என்று கையை நீட்டினாள்.

அவள் விழிகளை உருட்டினாள்.

"நான் உங்ககிட்ட அனுதாபத்தை எதிர்பார்க்கல!"

"ஓ.. ஆனா நானும் அப்படி ஒன்னை காட்டணும்ன்னு நினைக்கல!"

மீராவின் கையை பற்றினாள்.

"விஷாலி!"

"குழந்தை எங்கே?"

விஷாலி நெற்றியை தேய்த்தாள். "பக்கத்து வீட்டு அக்காக்கிட்ட தந்துட்டு வந்திருக்கேன்!" என்றாள்.

"இந்த சமுதாயம் பத்தி உங்களுக்கே தெரியும். உடம்புல ஏதாவது ஒரு உறுப்பை நீக்குவதை விடவும் ரொம்ப கஷ்டம் ஆண்களை ஒதுக்கிட்டு வாழ்வது. பிடிக்காத சில ஆண்களை ஒதுக்கினா கூட ஒரு நியாயம் இருக்கு. மொத்த ஆண்களையும் வெறுத்து என்ன பண்ண போறிங்க? இவங்க சின்ன பசங்க.. உங்க பொண்ணை கொண்டு வந்து விடுங்க.!" என்றாள்.

விஷாலி அருகே இருந்த மர பெஞ்சில் அமர்ந்தாள். தலை கிறுகிறுப்பது போலிருந்தது‌.

"நீங்க என் இடத்துல இல்ல மீரா. அதனாலதான் நார்மலா இருக்க முடியுது உங்களால.. நான் அவனை எவ்வளவு லவ் பண்ணேன்னு உங்களுக்கு தெரியாது. வேற பொண்ணை பார்த்துட்டு என்னை விட்டுட்டுப் போயிட்டான். இவனுக்காக என் குடும்பத்தையும் என் படிப்பையும் தூக்கிப் போட்டுட்டு வந்தேன்.!" என்றாள் கோபத்தோடு.

மீராவுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் இவள் மீதுதான் கோபம் வந்தது. காதலுக்காக குடும்பத்தையும் படிப்பையும் ஏன் தூக்கிப் போட வேண்டும் என்று குழம்பினாள். இரண்டையும் தூக்கிப் போடும்படி சூழல் வருகிறது என்றால் நிச்சயம் இவள் விவரமில்லா வயதில் காதலில் சிக்கியிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

"நீங்க செஞ்ச தப்புக்கு மொத்த ஆண் உலகத்தையும் தப்பு சொல்றது சரியான்னு தெரியல. உங்க இஷ்டம் போல நீங்க நினைக்கலாம். ஆனா இன்னும் உலகத்தை பத்தி தெரிஞ்சிக்காத உங்க பொண்ணுக்கு தவறான வழியை நீங்க காண்பிக்கறது சரின்னு தோணல!" என்ற மீராவை முறைத்தாள் அவள்.

"ஸ்வீட்டான லைஃப் வாழுற உங்களுக்கு இப்படிதான் தோணும்.!" என்றவளை கண்டு சிரித்தவள் "என்னை மூணு பேர் ரேப் பண்ணி இருக்காங்க!" என்றாள்.

விஷாலி நம்பாதது அவளின் கண்களில் தெரிந்தது.

"மீரா ரேப் கேஸ்ன்னு கூகுள்ல சர்ச் பண்ணா தெரியும்.!" விஷாலி அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தாள்.

"மூணு பேரும் என் காலேஜ்மேட்ஸ்.. அதுல இரண்டு பேர் இன்னைக்கு வரை கேஸ்ல இருந்து தப்பிக்க டிரை பண்ணிட்டு இருக்காங்க!"

விஷாலி தன் வாயைப் பொத்தினாள்.

"ஆனா மூணு பேர் என்னை சிதைக்க முயற்சி பண்ணியும் கூட நான் இன்னைக்கு உயிரோடு இருக்க காரணம் என்னை சுத்தியுள்ளவங்கதான். அதுல ஆண்களின் பங்கு ரொம்ப அதிகம். எனக்கு அண்ணன் இருக்கான். ஒரு தம்பியும் இருக்கான். அப்பா.. இரண்டு அத்தை பசங்க. அக்கா வீட்டுக்காரர்‌ இருக்காரு. எல்லோரும் என்னைத் தூய மனசோடு நேசிச்சாங்க. சில காரணத்தால என் லவ்வரால என்னை நெருங்க முடியல. ஆனா கடைசியில் அவன்தான் என்னை மீட்டுக் கொண்டு வந்தான். என் மாமனார் என்னை தன் பொண்ணா நினைக்கிறார். என் மச்சினரை பத்தி சொல்லணும்ன்னா ஹீ இஸ் எ குட் பிரெண்ட் டூ மீ.. அந்த மூணு பேரும் என்னை அப்படி செஞ்சிட்ட பிறகு என் அப்பாவை பார்த்தா கூட கத்தி கூச்சல் போட்டு பயந்து அழுவேன். மெண்டல் பிராப்ளம். ஆனா சரியா போச்சி‌. நான் யாரை பார்த்து பயந்தேன்னோ அவங்களேதான் என்னை சரி பண்ணாங்க.. உங்க லைப்பை விட என் லைஃப் ஸ்வீட்தான். இல்லன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா நான் நேசிக்கும் அனைவரும் என்னை ஏமாத்தாம திருப்பி நேசிக்கிறாங்க.. உங்களோட அனுபவத்தை வச்சி உங்க பொண்ணோட வாழ்க்கையை நெருடலா மாத்தி விடாதிங்க‌‌.. உங்க லவ்வரை காரணம் காட்டி ஆண்களை வெறுத்தா நீங்க நிச்சயம் பெண்களையும்தான் வெறுக்கணும். உங்க லவ்வரை பத்தி தெரிஞ்சும் அவரை உங்ககிட்ட இருந்து பிரிச்சி கூட்டிப் போன அவரோட லவ்வர் ஒரு பொண்ணுதானே? அவங்க தன்னை போல இன்னொரு பொண்ணுக்கு துரோகம் செய்ய கூடாதுன்னு நினைக்கலையே! அப்ப நியாயப்படி நீங்க முதல் இரு பாலினத்தையும் வெறுத்துட்டு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவங்களோடு மட்டும்தான் பழகணும்!"

விஷாலி கலவரமாக அவளைப் பார்த்தாள். அவள் சொன்னதில் உண்மைதான் இருந்தது.

அவளின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்தாள் மீரா‌.

"பெண்ணா சொன்னேன்‌ அதை. ஆனா மனுசியா ஒரு விசயம் சொல்றேன்.. நீங்க யாரை நம்பியும் பிறக்கல. உங்களை யாராவது வெறுத்துட்டு போனா அவங்களுக்குதான் நஷ்டம்ன்னு அவங்க மேல பரிதாபப்பட்டுட்டு நீங்க விலகி வந்து அவங்க பொறாமைபடும்படி இல்லன்னாலும் நீங்க சந்தோசப்படும்படியான ஒரு வாழ்க்கையாவது வாழணும். இது கடவுள் தந்த வாழ்க்கை. யாரோ சிலர் மேல இருக்கும் வன்மத்தால மத்த சகோதரர்களை நாம வெறுத்தா நம்மை படைச்ச கடவுளுக்கு நாம செய்ற துரோகம் ஆகாதா இது? அவர் நீங்க தனியா இந்த பூமியில் இருந்து பீல் பண்ண கூடாதுன்னுதான் இத்தனை சகோதரர்களை உங்களுக்காக படைச்சி விட்டிருக்கார்.. கொடுத்ததை அனுபவிங்கம்மா.. அன்பை நீங்க காட்டினா மட்டும்தான் பலரும் திருப்பி காட்டுவாங்க. சில உள்ளங்கள்கிட்ட நீங்க என்ன சொன்னாலும் மீ டூதான் இங்கே. அவங்ககிட்ட அன்பை மட்டும் காட்டுங்க. வாழ்க்கையை ரசிங்க. ஒருத்தரை வெறுத்து உங்க லைப்பை வேஸ்ட் பண்ணாதிங்க!" என்றாள்.

விஷாலி குழப்பத்தோடு எழுந்து நின்றாள்.

"சா.. சாரி.. நான் யோசிக்கணும்!" என்றவள் அங்கிருந்து ஓடாத குறையாக நடந்தாள்.

இரண்டாம் நாள் அந்த பெண் திரும்பி வந்தாள்.

"என் குழந்தையை பார்த்துக்கங்க!" என்றாள்.

மீரா புன்னகைத்தாள்.

அழகான குழந்தை வர்ஷா‌. அவளை கவனிப்பது மீராவுக்கு பிடித்திருந்தது.

அன்று இரவு நடந்ததை மகிழனிடம் சொன்னாள் மீரா.

"குட் ஜாப்!" என்றான் அவன்.

சில மாதங்கள் கடந்து விட்டது.

வினய்க்கும் சாரதிக்கும் அன்று கோர்ட்டில் வழக்கு‌. வரலாற்றில் முதன் முதலாய் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்ட அந்த வழக்கையும் மேல் முறையீடு செய்து இரண்டு ஆண்டுகள் ஓட்டி விட்டார்கள்.

இன்று நிச்சயம் விடுதலை என்ற நம்பிக்கையோடு நீதிமன்றம் வந்துச் சேர்ந்தான் வினய்.

வாசலில் கருப்பு கோட்டை அணிந்தபடி ஆராதனா நின்றிருந்தாள்.

"ஆரு!" வினய்யின் அப்பா குழப்பத்தோடு மகளைப் பார்த்தார்.

"நான் உங்க மகனுக்கு எதிரா வழக்காட வந்திருக்கும் வக்கீல். குற்றவாளிக்கு விடுதலை கிடைக்க கூடாதுன்னு வழக்காட வந்திருக்கேன். நீங்க உங்க பங்கு பாசத்தை கோர்ட்டுக்கு வெளியே வச்சிக்கலாம்!" என்றாள் ஆராதனா.

வினய்யின் கண்களில் உயிரே இல்லை.

"ஆரு!" என்றான் பயத்தோடு.

"சாரி அண்ணா.. ஐ லவ் யூ! ஆனா நீ பண்ணது தப்பு. ரொம்ப பெரிய தப்பு. அந்த இடத்துல மீராவுக்கு பதிலா நான் இருந்ததாதான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன்!"

"ஆரூ!" அதிர்ச்சியில் கத்தினான்.

ஆராதனா கண்களில் வன்மத்தை மறைக்காமல் அவனை நெருங்கினாள்.

"ஒரு நல்ல ஆண் மகன் காதலி, மனைவி, ப்ராஸ்டியூட் தவிர வேற பெண்களை தொட மாட்டான். ஆனா நீ உன்னோடு பிரெண்டா நினைச்சி பழகியவளை ரேப் பண்ணியிருக்க. அவளை தொட்ட நீ என்னை தொட மாட்டேன்னு என்ன நிச்சயம்?" என்றவளை தன் பக்கம் திருப்பி அவளின் கன்னத்தில் அறைந்தாள் அவளின் அம்மா.

"என்னடி பேசுற? இவன் உன் அண்ணன்!" என்றாள் ஆத்திரத்தோடு.

ஆராதனா தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.

"ஓ.. அண்ணனா இருந்தா தொட மாட்டானா? இவன் உண்மையிலேயே என்னை நேசிச்சானா?"

"ஆரூ!" வினய்யின் குரல் சத்தமாக வெளிவர மறுத்தது.

திரும்பியவள் "ஒரு பொண்ணை உண்மையா லவ் பண்றவன் இன்னொரு பெண்ணை அவ சம்மதம் இல்லாம தொட மாட்டான். அந்த லவ் பண்ற பொண்ணு காதலியாவோ அம்மாவாவோ தங்கச்சியாவோ இருந்தாலும் கூட இதேதான் விதி. ஆனா நீ உண்மையிலேயே அம்மாவையோ இல்ல என்னையோ நேசிச்சி இருந்தா அவளை அவ விருப்பம் இல்லாம தொட்டிருப்பியா?" எனக் கேட்டாள் கோபத்தோடு.

வினய் இடம் வலமாக தலையசைத்தான். பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது. அவன் ஆராதனாவை அதிகம் நேசித்தான்.

"நீ உன் தப்பை உணர இந்த தண்டனை. ஆனா அதையே மறுக்கற.. உன் தப்பையும் மறுக்கற.. அப்படின்னா உன் தப்பை நீ உணரலன்னுதான் அர்த்தம். நீ வந்து வீட்டுல இருந்தா நான் எப்படி நிம்மதியா தூங்க முடியும்? மீரா உன் மேல நம்பிக்கை வச்சா. அவளையே நொடியில சிதைச்சிட்ட.. நானெல்லாம் உனக்கு எம்மாத்திரம்? எனக்கு நினைச்சாவே பயமா இருக்கு! இதோ உன்னை பெத்திருக்காங்களே.. இரண்டு பேரும்.. இவங்களுக்கு தன் பொண்ணுன்னா ஒரு விதி. யாரோ பெத்த பொண்ணுன்னா வேற விதி. இவங்க சரியா இருந்திருந்தா இன்னைக்கு நீ மேல் முறையீடுன்னு வந்திருக்க மாட்ட! இந்த கேஸ் வழக்கமான கேஸை போல இழுத்தடிக்கும்ன்னு நினைச்சேன். ஆனாலும் உனக்கு தண்டனை வாங்கி தரது நானா இருக்கணும்ன்னே நான் ஆசைப்பட்ட படிப்பை விட்டுட்டு சட்டம் படிச்சேன். என் கோபம் பத்தி உனக்கு நல்லா தெரியும். இந்த கேஸ்ல நான் தோத்துட்டா இதே கோர்ட் வாசல்ல பெட்ரோல் ஊத்தி கொளுத்திக்கிட்டு செத்து போவேன். நீ உன் தப்பை உணர நான் என்ன வேணாலும் செய்வேன். என்னை பத்தி உனக்கு ரொம்ப நல்லா தெரியும்!" என்றவள் தன் பெற்றோரை முறைத்து விட்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்தாள்.

வினய் அசையாமல் நின்றிருந்தான்.

"அவ கிடக்கறா விடு!" என்று சமாதானம் சொல்ல முயன்றார் அப்பா.

மறுப்பாக தலையசைத்தவன் அமைதியாக உள்ளே நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN