தேவதை 28

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கவி ஆதியை யோசனையோடு பார்த்தான்.

"சரி.. நானே இந்த உலகத்தை விட்டுப் போறேன்!" என்றான்.

ஆதி சிறு நிம்மதியோடு நிமிர்ந்தாள்.

"ஆனா ஒரு விசயம்.." என்றவனை குழப்பமாக பார்த்தாள்.

"உன்னை சுதந்திரமா விட்டுப் போறேன். உன்னை எப்போதும் தொந்தரவு செய்யாம இருக்கேன்‌. உனக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் வருகிறேன்.!"

"நன்றிகள் ஏந்தலே!" என்றவளை மேலே பேச விடாமல் நிறுத்தியவன் "ஆனா அதுக்கு பதிலா நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்!" என்றான்.

ஆதி சரியென்று தலையசைத்தாள்.

"எனக்கு ஒரு குழந்தை வேணும்!"

"சானுவை வச்சிக்கோங்க. அவன் என் பேச்சை கேட்க மாட்டேங்கிறான். நீங்கதான் அவனை நல்வழிப்படுத்த முடியும்!" என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தான்.

"இல்ல.. எனக்கு உன் குழந்தை வேண்டும். எனது குழந்தை.. மனதால் உருவான குழந்தை இல்ல. உன் உடலின் துணைக் கொண்டு உருவாகும் குழந்தை!"

ஆதியின் அதிர்ச்சி அளவு கடந்தது. அவளுக்கு தலை சுற்றுவது போலவே இருந்தது.

"உனக்கு என்னை பிடிக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா எனக்கு வேறு வழி இல்ல. உனக்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்தால் அதன் பிறகு நான் உன்னை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவேன்.!" என்றான்.

"நான் ஏந்தல். இந்த உதவிக்கு பிரதியுபகாரமாக உனக்கு வேறு ஏதாவது உதவியும் கூட செய்ய தயார் நான்.. இங்கிருக்கும் மனிதர்களின் மனதில் இருக்கும் குரோதத்தை அழித்து தரவும் நான் தயார்!" என்றான்.

ஆதிக்கு பயம் விடவேயில்லை. தலையை பிடித்தபடி பின்னால் சாய்ந்தவளை சட்டென்று பிடித்தான் கவி. இவ்வளவு நாள் இவனின் அருகில் அன்பை உணர்ந்தவள் இப்போது பயத்தைதான் அதிகம் உணர்ந்தாள்.

"ஆதி உனக்கு என்ன ஆச்சி?" என்றான் கவலையோடு.

"நீ ஒரு தேவதை. உனக்கு எப்படி அடிக்கடி மயக்கம் வருகிறது?" என்றுக் குழப்பமாக கேட்டவன் அவளைத் தூக்கினான்.

"என்னை விட்டு விடுங்கள் ஏந்தலே!" என்றவளின் முகம் பார்த்தவன் "நான் ஏந்தல்.. யாரையும் விருப்பம் இல்லாமல் அணுக மாட்டேன்!" என்றான்.

ஆதி இடம் வலமாக தலையசைத்தாள்.

அவளை அங்கிருந்து இருக்கையில் அமர வைத்தான்.

"உனக்கு ஏதாவது தேவையா?" எனக் கேட்டவன் பானங்கள் எடுத்து வர நகர்ந்தான். நடந்தவனின் கையை பற்றினாள். கவி அவளைப் பார்த்தான்.

ஆதி நிமிர்ந்து அவனின் கண்களைப் பார்த்தாள்.

"என்னை பற்றி உண்மையிலேயே உங்களுக்கு தெரியாதா?" எனக் கேட்டாள்.

கவி குழப்பத்தோடு புருவம் நெரித்தான்.

"என்ன?" என்றான். ஒருவேளை இவள் தூய அன்பின் தேவதை இல்லையோ என்று பயந்தான். 'ஆனால் அப்படிதானே அறிந்தோம்!' தனக்குள் குழம்பினான்.

"நான் ஒரு குழந்தை!" என்றவளின் கரத்திலிருந்த தன் கரத்தை பின்னால் இழுத்தான்.

"எ.. என்ன?"

"நான் ஒரு குழந்தை. உடலாலும் மனதாலும் இன்னும் பருவ வயதை எட்டாதவள்.!" என்றவளை வியப்போடுப் பார்த்தான்.

இது உண்மையாக இருக்க கூடாது என்று விரும்பினான். தேவ தேவதைகளாக இருப்பதால் அவர்களின் வயதிற்கும் உடம்பின் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்காது என்பது உண்மைதான். ஆனால் குழந்தை என்றால் முன்பே தெரிந்திருக்கும் இல்லையா என்று குழம்பினான். ஆனால் அவளை பற்றி இதுவரை எந்த உண்மையையும் அவன் அறிய முற்படவேயில்லை.

"உ.. உன் வயது என்ன?" என்றான் அவளைப் பார்த்து.

ஆதி விரல்களை விட்டு எண்ணினாள்.

"பதினான்காயிரம் ஆண்டுகள்!" என்றாள்.

கவி பற்களைக் கடித்த சத்தம் கேட்டு அவளும் பயந்துப் போனாள்‌.

"ஆனா நீ ஏன் இதுவரை என்கிட்ட இதை சொல்லல?" ஆத்திரத்தோடு கேட்டான்.

பயந்து இருக்கையோடு ஒண்டியவள் "எ.. எனக்கு எப்படி தெரியும், உங்களின் திட்டம்? அதுவும் இல்லாமல் உங்களுக்கு என் வயது தெரியாமல் இருக்காது என்று நினைத்தேன்!"

கவி தலையை பிடித்தபடி அந்த பக்கமும் இந்த பக்கமும் நடந்தான். அவளை தன் வாள் முனையில் சாகடிக்க இருந்த முதல் நொடி நினைவில் வந்தது. அந்த கண்களில் இருந்து சிந்திய கண்ணீர் துளிகளின் பவித்திரம் இப்போதுதான் புரிந்தது‌.

அவளை சிறையில் அடைத்தது பற்றியும், அவளை மிரட்டியது, விரட்டியது, அவளை துன்புறுத்தியது பற்றி நினைத்துப் பார்த்தான். பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது.

அவளின் அன்பை சந்தேகித்தற்காக தன்னையே கொன்றுக் கொள்ள சொன்னது அவனின் மனம்.

குழப்பத்தோடு அவளின் முன்னால் வந்து நின்றான்.

"அன்று வாரியை பிடித்திருப்பதாக சொன்னாயே!" என்றான்‌ சந்தேகமாக.

"ஆமாம். எனக்கு அனைவரையும்தான் பிடிக்கும். உங்களையும் கூடதான்.."

"சொல்லாதே!" அவசரமாக தடுத்தான்.

ஏற்கனவே நொந்துக் கொண்டிருந்தான். மேலும் வேக விரும்பவில்லை.

"அவன் உன்னை மணம் முடிப்பதாக சொன்னான்.!"

"மணம் முடிப்பதில் தவறு உள்ளதா?" என அவள் கேட்க மீண்டும் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

தேவ உலகங்களில் எத்தனையோ காரணங்களுக்காக குழந்தை பருவத்தில் மணம் நடந்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் இவள் குழந்தை என்று அறியாமல் போனதுதான் அவனுக்கு பெரிய சொதப்பல் போலிருந்தது.

'குழந்தையை கொடுமை செய்து விட்டாய் கவி!' என்று மனதுக்குள் சுழற்சியாக திட்டிக் கொண்டான்.

நடந்து சலித்து, யோசித்து அலுத்து கடைசியில் ஆதியின் முன்னால் வந்து அமர்ந்தான்.

அவளின் முகம் பார்த்தான். கண்களில் அன்பு நிறைந்து வழிந்தது.

"நீ குழந்தைன்னு எனக்கு தெரியாது ஆதி. சத்தியம் இது. உன்னை நான் துன்புறுத்தியது.." முகத்தை தேய்த்துக் கொண்டான்.

"உன்னை நான் துன்புறுத்தி இருக்க கூடாது. என்னை மன்னித்து விடு. நான் அன்பின் தேவ உலகத்தை பற்றி பல விசயங்களை அறியவேயில்லை. அறிந்துக் கொள்ள முயலவும் இல்லை. நான் ஒரு சத்திய தேவன்‌. நான் ஒரு ஏந்தல். ஆனால் எனக்கும் மனமென்ற ஒன்று உண்டு. நான் துன்புறுத்திய முதல் குழந்தை நீதான். என்னை மன்னித்து விடு!" என்றான்.

ஆதியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

"மன்னிப்பு கேட்க தேவையில்லை ஏந்தலே! நான் எப்போதும் உங்களை மன்னிப்பேன்!" என்றாள் அழுகையின் இடையே.

அவனுக்கு புரியவேயில்லை. அவளுடையது குழந்தை பருவம் என்றுத் தெரிந்தும் தன் மனதில் தோன்றும் ஆசை உண்மையா, இல்லை இது அவளின் அன்பின் காரணத்தால் உருவாகும் பிணைப்பா என்று!

மனிதர்கள் உயிர்வதை செய்வதை கண்டு அவள் அழுத காரணமும் அவனுக்கு இப்போது புரிந்தது.

"நான் நல்லவள் என்று நம்புகிறீர்களா? என் உலகத்தை திருப்பிக் கொண்டு வந்து விடுகிறீர்களா?" அவனின் முகம் பார்த்து ஆர்வமாக கேட்டாள்.

அவனால் பதிலே சொல்ல முடியவில்லை. அவளின் கண்களில் தெரிந்த தவிப்பிற்கு என்ன செய்தாலும் மன வாட்டம் தீராது என்றும் புரிந்தது.

"ஆதி.. நீ விலகி அமருகிறாயா?"

அவள் அமைதியாக விலகிக் கொண்டாள். விலகுகையில் அவளின் முகத்தில் இருந்த வருத்தம் கண்டவனுக்கு அவளை பாய்ந்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN