பௌர்ணமி 1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீடு ஓசையின்றி இருந்தது. செண்பகம் தன் மகனை கவலையோடு பார்த்தாள். என்றைக்கும் தந்தையை எதிர்த்து பேசிடாதவன் இன்று கோபத்தோடு வந்து நின்றுக் கொண்டிருக்கிறான்.

மரிகொழுந்து நிமிர்ந்து தன் மகனைப் பார்த்தார்.

"இந்த சொத்து முழுக்க உனக்குத்தான் பாலா.. ஆனா.!"

பாலா கேட்கும் நிலையில் இல்லை. அவசரக்காரனுக்கு புத்தி மட்டு எனும் அதே நிலையில்தான் இவனும் இருந்தான்.

"அப்பா.. எனக்கு இப்ப காசு வேணும். இல்லன்னா என் மொத்த பிசினஸும் லாஸ்.. இப்ப நான் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கேன்னு உங்களுக்கே தெரியும். கடல்ல மூழ்காத குறை. ப்ளீஸ்.. இரண்டே இரண்டு ஏக்கர்.. நீங்க விற்க கூட வேணாம். அடமானம் வச்சி தந்தா போதும். ஒரு வருசத்துல திருப்பிடுவேன்.!" என்றான்.

"எந்த நிலத்தையும் அடமானம் வைக்க முடியாது. சொத்து எல்லாம் எங்க அப்பா பேர்ல இருக்கு.. பூர்ணிமாவும் முல்லையும் கையெழுத்துப் போட்டா மட்டும்தான் நாம எதையும் செய்ய முடியும்!" என்றார் அவர் தனது ஊஞ்சலில் இருந்து எழுந்து நின்று.

பாலாவுக்கு தலை வலித்தது. கோபமாக வந்தது. அவனது அவசரம் மட்டும்தான் அவனுக்கு முக்கியமாக இருந்தது.

"அப்பா.. ரொம்ப அர்ஜென்ட்!" என்றவனை சலிப்போடு பார்த்தவர் "அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? உனக்கு எங்க கையெழுத்து வேணுமோ நான் போடுறேன். ஆனா அவங்க கையெழுத்துக்கு என்ன பண்றது? இத்தோடு பதினேழு வருசம் ஆச்சி. இன்னும் முல்லை எங்கேன்னு கண்டுப் பிடிக்கவே முடியல.!" என்றபடி வெளியே நடந்தார் அவர்.

பாலா ஊஞ்சலின் சங்கிலியை பிடித்தபடி நின்றான்.

ஆத்திர அவசரத்திற்கு உதவாத சொத்து என்ன சொத்து என்றது அவனின் மனம்.

வீடும் தாத்தா பெயரில். வயலும் தாத்தா பெயரில்.

போன் ஒலித்தது. பாலா போனை எடுத்தான்.

"பாலா.. அமௌண்ட் கிடைச்சிடுச்சி!" என்றான் நண்பன் சுகன்.

பாலா பெருமூச்சு விட்டபடி ஊஞ்சலில் அமர்ந்தான். கொஞ்சம் தப்பினாலும் அவனது தொழில் தலைகீழாக கவிழ்ந்திருக்கும்‌. இப்போது கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

"ஓகேடா!" என்றவன் இணைப்பை துண்டித்தான்.

"அம்மா சூடா ஒரு டீ தரியா?" எனக் கேட்டான்.

செண்பகம் தலையசைத்துவிட்டு சமையலறை நோக்கி சென்றாள்.

"இந்த இரண்டு நாள்ல எவ்வளவு டென்சன்.. ச்சே!" முனகினான்.

"என்னாச்சி அண்ணா? ரொம்ப புலம்பற?" என கேட்டபடியே மாடி படியிலிருந்து இறங்கினான் பூமாறன்.

பூமாறன் பாலாவின் தம்பி. முதுகலையில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறான்.

"எல்லாம் பண பிரச்சனைதான்.! சொத்து இருந்தும் வேஸ்ட்.." என்று பற்களை கடித்தான்.

"அத்தை நிஜமா திரும்பி வரவே மாட்டாங்க.. நீங்க வேஸ்டா நம்பிக்கை வைக்கிறதுக்கு பதிலா போலிஸ் மூலமாவோ இல்ல ஏதாவது டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாவோ அத்தையை கண்டு பிடிக்கலாம். எப்படியும் உனக்கு அடிக்கடி பணம் தேவைப்படும்.!" என்ற தம்பியை சந்தேகமாக பார்த்தான் பாலா.

"எனக்கும் பணம் தேவை அண்ணா. படிப்பு முடிஞ்சதும் அடுத்த வருசம் நானும் ஏதாவது ஒன்னு செஞ்சாகணும். எந்த தொழிலா இருந்தாலும் இன்வெஸ்மன்ட் வேணும். இவ்வளவு சொத்து இருக்கையில் நான் ஏன் வெளியே கடன் வாங்கி வட்டி கட்டணும்? நான் ஒன்னும் அடுத்தவங்க காசை கேட்கல.. எனக்கு சேர வேண்டியது வந்தா போதும்ன்னுதான் நினைக்கிறேன். சீக்கிரம் அத்தையை தேடி கண்டுபிடிங்க!" என்றான்.

பாலா யோசித்தான். அம்மா தேனீரை கொண்டு வந்து தந்தாள். அம்மாவின் கழுத்தில் காதில் கூட எதுவும் இல்லை. அனைத்தையும் அவன்தான் வாங்கி பேங்கில் வைத்திருக்கிறான்.

மூன்று வருடங்கள் முன்பு சைக்கிள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை தொடங்கினான் பாலா. இப்போதுதான் நிறுவனத்தின் வேர் இலை விட தொடங்கி இருக்கிறது. இந்த சில மாதங்களாகதான் சைக்கிள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆக தொடங்கி இருக்கின்றன. பணம் அடிக்கடி தேவைப்பட்டது. ஒரு மடங்கு லாபம் வந்தால் அடுத்த லாபத்திற்காக அதை விட நான்கு மடங்கு பணத்தை உள்ளிட வேண்டி இருந்தது.

வங்கிகளிலும் முடிந்த மட்டும் வாங்கியாற்று. இன்னும் சில மாதங்கள். அதற்கு பின் அனைத்து பண பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பிறகு தேவைபடும் முதலீட்டுக்கு கம்பெனியின் வருமானமே போதுமானதாக இருந்து விடும். ஆனால் அதுவரை சமாளிப்பது அல்லவா கடினமாக உள்ளது?

பூமாறன் சொன்னதும் சரிதான். பாலாவிற்கு சேர வேண்டிய சொத்துகள் கை சேர்ந்தால் கூட அவனுக்கு போதும்.

மாலை வரை யோசித்து விட்டு தனக்கு தெரிந்த டிடெக்டிவ் ஒருவரை தொடர்புக் கொண்டு விசயத்தைச் சொன்னான் பாலா. அவர் இரண்டு நாளில் தொடர்பு கொள்வதாக சொல்லி விட்டு போனை வைத்தார்.

இரவு உணவு சாப்பிட வந்தபோது தந்தையிடம் விசயத்தைச் சொன்னான் பாலா.

"அத்தை இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சிடலாம் அப்பா!" என்றான் பூமாறன்.

மரிக்கொழுந்து எதுவும் பேசவில்லை.

"நீங்க எதுக்காக அவளை கூட்டி வர முயற்சி பண்றிங்கன்னு தெரியுது. ஆனா அவ கையெழுத்துப் போடலன்னா என்ன பண்றது?" என்றுக் கேட்டார்.

பாலா பற்களை அரைத்தான்.

"தப்பு முழுக்க அத்தை மேல. அப்புறம் ஏன் அவங்க கையெழுத்து போட மாட்டாங்க.?" எனக் கேட்டான்.

பூமாறன் மௌனமாக தலையசைத்தான். அவனால் முல்லையை தவறாக நினைக்க முடியவில்லை. அத்தையோடு நெருக்கமாக இருந்த நேரங்கள் அவனுக்கு கனவு போல நினைவில் இருந்தது. ஐந்தாறு வருடங்கள் இருந்திருக்கும் அப்போது. பூர்ணிமா மூன்று வயது குழந்தை. அவளோடு சேர்ந்து விளையாடியது கூட நினைவில் இருந்தது.

மரிக்கொழுந்து எழுந்து நின்றார். அவரால் அதற்கு மேல் உணவை உண்ண முடியவில்லை. சில தலைவிதியை நொந்துக் கொண்டாலும் பயனில்லை என்பது அவரின் கணக்கு.

"அவ இங்கே வருவதுல எனக்கும் நிம்மதிதான். ஆனா அவ வருத்தப்படும்படியா எதுவும் சொல்லிடாதிங்க.. அவ இந்த வீட்டு விட்டு ஓடி போனா. ஏன் திரும்பி வந்தோம்ன்னு அவ நினைச்சிட வேணாம்!" என்றார்.

அவர் நகரும் முன் பாலா எழுந்தான். உணவை தூர தள்ளி விட்டான்.

"நீங்க முதல்ல ஒரு விசயத்தை புரிஞ்சிக்கங்க அப்பா.. அந்த பொம்பளை ஒரு மேனாமினுக்கி. கூட பிறந்த பாசம் இருந்தா நீங்க உங்களோடு வச்சிகங்க. ஆனா எங்களை கம்பல் பண்ணாதிங்க!"

ஏன் சாப்பிட வந்தோம் என்று இருந்தது பூமாறனுக்கு. அத்தை மீது பாசம் உள்ளதுதான் அவனுக்கும். ஆனால் அண்ணன் இப்படி திட்டுவதை அத்தை கேட்டால் பிறகு எப்படி கையெழுத்துப் போடுவார் என்று கவலையாகவும் இருந்தது அவனுக்கு.

மரிக்கொழுந்து மகனுக்கு பதில் சொல்லவில்லை. அவனை அதட்டவும் இல்லை. அதட்டினால் மட்டும் அவன் சொல்வது இல்லை என்று ஆகி விடுமா என்று அவருமே கூட யோசித்தார்.

தங்கையின் தவறை அவர் மறக்கவில்லை. மன்னிக்கவும் இல்லை. ஆனால் உடன் பிறந்த பாசம் அவரை மௌனியாக்கியது. அப்போது இவரும் பாலாவை விட நூறு மடங்கு துள்ளியவர்தான். ஆனால் இப்போது வயது ஏறியதில் என்னவோ மனதுக்குள் சிறு மாற்றம். தங்கை எங்கே இருக்கிறாளோ என்ன செய்கிறாளோ என்று கவலை.

பாலா அரை வயிற்றோடு வெளியே நடந்தான். வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த நாகேந்திரன் இவனை திரும்பிப் பார்த்தார்.

"என் முகத்துல என்ன படமா ஓடுது? எதுக்கு என்னைப் பார்க்கற?" என்று எரிந்து விழுந்தான் பாலா.

நாகேந்திரன் அமைதியாக பார்வையை திருப்பிக் கொண்டார். நீண்ட தாடி வெள்ளை நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. வயலிலும் வீட்டிலும் மாறி மாறி வேலை பார்த்ததில் கைகள் இரண்டும் காப்பு காய்த்து விட்டிருந்தன. திண்ணையில் ஒரு ஓரமாக இருக்கும் கயிற்றுக் கட்டில்தான் அவரது இருப்பிடம். வேலை செய்வதற்காக அன்றி வேறு எதற்காகவும் வீட்டிற்குள் செல்வதில்லை அவர். அந்த வீட்டு மனிதர்களோடு அவர் பேசுவதும் இல்லை. அவர்களும் இவரை திட்டுவதை தவிர வேறு எதற்கும் கொண்டாடுவதில்லை. செண்பகம் மட்டும் நல்லபடியாக பேசுவாள். ஆனால் அவள் உணவு தந்தால் இவர் வாங்க மாட்டார். பழைய சாதம் தந்தால் அதில் வெறும் உப்பு தூவி உண்பார். மரிக்கொழுந்து இவரை பார்க்கும் பார்வையில் ஆத்திரம் இருக்கும். பாலா பார்க்கும் பார்வையில் கோபம் இருக்கும். ஆனால் பூமாறனோ இவரை திரும்பிக் கூட பார்க்க மாட்டான்.

முன்னால் விரிந்து கிடந்த இருளை வெறித்தான் பாலா. வீட்டின் வடக்கிலும் கிழக்கிலும் வயல் பரவி கிடந்தது. வயலின் பச்சை வாசம் அவனின் நாசியில் வந்து மோதியது.

முல்லையை பற்றி நினைக்க நினைக்க கோபம் அதிகரிப்பது போலிருந்தது. ஒழுக்கம் எனும் விசயத்தில் அவன் மிகவும் கண்டிப்பான கொள்கைகளை உடையவன். அதனாலேயே முல்லையை அதிகம் வெறுத்தான்‌.

பற்களை கடித்தபடியே திரும்பி வீட்டுக்குள் நடந்தான்.

அம்மா இவனை கண்டதும் "பால் கொண்டு வரட்டா பாலா?" எனக் கேட்டாள்.

"வேணாம்மா!" என்று இவன் சொல்லவும் செண்பகத்தின் முகம் வாடி போனது. வீட்டில் ஆண்கள் மூவருமே உண்ணவில்லை. பிறகு எப்படி அவளுக்கு மட்டும் மனம் நிறையும்?

தனது அறையில் புகுந்து கதவை சாத்தினான் பாலா. அறையின் வலது பக்க சுவரில் மேலிருந்து கீழென பக்கவாட்டு வரிசையில் புகைப்படங்கள் இருந்தன. நான்வதாக இருந்த புகைப்படத்தின் முன்னால் வந்து நின்றான்.

அவனும் பூமாறனும் இரு பக்கமும் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு இடையில் பூர்ணிமா இருந்தாள். இரண்டரை வயது குழந்தை. காலை நிரப்பிய கொலுசும், முகம் மூழ்கிய புன்னகையுமாக இருந்தாள். பாலாவின் சட்டையை ஒரு கரத்தாலும் பூமாறனின் கையை மறு கரத்தாலும் பற்றிக் கொண்டிருந்தாள்.

அவள் பிறந்தது அவனுக்கு நினைவில் இருந்தது. அவனுக்கு அப்போது ஆறு வருடம்‌. இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

மருத்துவமனையில் அத்தைக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது‌. மறுநாளே வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள்.

பாட்டி குழந்தையை சுமந்தபடி வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நொடியிலேயே அவளோடு ஒட்டிக் கொண்டு விட்டான் பாலா‌. புது குழந்தையை பார்க்க ஆர்வமாக இருந்தது.

அத்தை குழந்தையோடு கட்டிலில் படுத்துக் கொண்டாள். பாலா அவளருகே சென்று அமர்ந்தான்.

குழந்தையின் கன்னம் தொட்டு விளையாடினான்.

"அண்ணா சொல்வியா பாப்பா?" எனக் கேட்டான்.

"மாமா ஆகறடா பாலா!" என்று அத்தை சொன்னாள்.

"ஓ.!" என்றவனுக்கு இந்த உறவு முறை புதிதாக இருந்தது. தானும் ஒரு குழந்தைக்கு மாமா ஆகி விட்டதை நினைத்து வெட்கப்பட்டான்.

ஆனால் பூர்ணிமா வாய் பேச ஆரம்பித்த பிறகு அவனை ஒருநாள் கூட மாமா என்று அழைத்ததே இல்லை.

"மாமான்னு சொன்னாதான் சாக்லேட் தருவேன்!" என்பான் இவன்.

அவளோ அப்படியும் இப்படியும் தலையசைப்பாள்.

"பா.. லா!" என்று அழுத்தம் தந்து அழைப்பாள்.

பாலா சாக்லேட்டை தராமல் சட்டை பாக்கெட்டிற்குள் போட்டுக் கொள்வான்.

ஆனால் பூமாறன் தன்னிடம் இருக்கும் சாக்லேட்ஸை அவளுக்கு தருவான்.

"மாமா!" என்றபடி அவனின் கழுத்தை கட்டிக் கொள்வாள் பூர்ணிமா. பாலாவுக்கோ எரிச்சல் வரும்.

"அத்தை.. பூர்ணி என்னை மாமான்னு கூப்பிட மாட்டேங்கிறா.. நீங்க அவளுக்கு சூடு வைங்க!" என்று அத்தையிடம் குறை சொல்வான்.

ஆனால் அவனின் அம்மாவோ மகனின் தலையில் தட்டுவாள். "குழந்தைக்கு சூடா? அவளுக்கு என்ன தெரியும்? குட்டி பாப்பா அவ. அவ உன்னை மாமான்னு கூப்பிடலன்னா இப்ப உனக்கு என்ன குறையுது?" எனத் திட்டுவாள்.

"ஆனா அவ மாறனை மட்டும் மாமான்னு கூப்பிடுறா!" குறையாய் சொல்வான்.

"உன்னை அவ மாமான்னு கூப்பிடாம போனது குறை இல்ல. அவனை கூப்பிட்டுடாளேன்னு பொறாமை.. இந்த வயசுலேயே உனக்கு இவ்வளவு பொறாமை.. கோபம்.. நீ பெரிய பையனாகும்போது என் பொண்ணை உன்னோடு பழக கூட விட மாட்டேன் நான். உன் புத்தி மாதிரியே அவளுக்கும் வந்துடும். அப்புறம் அவளும் கெட்டுடுவா!" என்று முல்லை கேலி போல் திட்டியது நினைவிற்கு வந்ததில் பாலாவிற்கு முகம் கோபத்தில் சிவந்தது.

"அவங்க ரொம்ப யோக்கியம்!" என திட்டியபடியே சென்று கட்டிலில் விழுந்தான்.

பூர்ணிமா தனது படுக்கையை விட்டு எழுந்து நின்றாள்.

"அம்மா.!" கண்களை மூடியபடியே அழைத்தாள்.

முல்லை இவளின் அழைப்பிற்கு எதிர்ப்பார்த்து காத்திருந்தது போல காபியோடு வந்தாள்.

பூர்ணிமா கண்களை தேய்த்தாள். கண் திறந்து அம்மாவை பார்த்தாள்.

"குட் மார்னிங் அம்மா!" என்றாள்.

முல்லை புன்னகைத்தாள். அம்மா தந்த காப்பியை ருசிக்க ஆரம்பித்தாள் பூர்ணிமா.

சின்ன பொட்டு, இரு கையிலும் இரண்டு வளையல்கள், கழுத்தில் வெள்ளை நிறத்தில் கண்ணாடி மாலை.. இதுதான் முல்லையின் அலங்காரம்.

"நான் போய் சமைக்கிறேன்.. அப்பவாவது பல் விளக்கிட்டு வந்துடு செல்லம்.!" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் முல்லை.

பூர்ணிமா கல்லூரிக்கு செல்ல தயாராகி வந்தாள். அம்மா உணவை பரிமாறினாள்‌.

"செம டேஸ்ட்ம்மா!" பூர்ணிமா ரசித்து உண்பதை பார்த்தபடி எதிரே அமர்ந்து தனது உணவை உண்ண ஆரம்பித்தாள் முல்லை.

'பெண் குழந்தைக்கு இவ்வளவு செல்லம் தராதே!' என்று அக்கம் பக்கத்து வீட்டார் கூட முல்லையிடம் குறைபட்டு இருக்கிறார்கள். ஆனால் முல்லை மாறவில்லை.

தனக்கென இருக்கும் ஒரே ஒருத்தி இவள். வாழ்வதே இவளுக்காக எனும்போது அதீத பாசம் காட்டுவதில் தவறு என்ன என்று எண்ணியது அவளின் தாய் உள்ளம்.

பூர்ணிமா உணவை முடித்துக் கொண்டு எழுந்தாள். கல்லூரி பையை தோளில் மாட்டிக் கொண்டாள். முல்லையின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு வெளியே நடந்தாள். நாலெட்டில் பேருந்து நிறுத்தம். அவள் வந்து நின்ற ஐந்தாம் நிமிடத்தில் கல்லூரி பேருந்து வந்து விட்டது.

பூர்ணிமா பேருந்திற்குள் ஏறியதும் மெல்லிய சத்தத்தோடு விசிலடித்தான் பிரகீதன். பூர்ணிமா அவனை முறைத்தாள். பற்களை காட்டினான் அவன்.

பூர்ணிமா அவனை முறைத்துவிட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள். ஸ்டெல்லா தான் சுவைத்துக் கொண்டிருந்த சாக்லேட்டில் பாதியை அவளிடம் நீட்டினாள்.

பூர்ணிமா சாக்லேட்டை சுவைத்தாள். அவளின் கண்களில் ஆர்வம் இல்லை.

"போரடிக்குதா பூரணி?"

"ஆமா.. ரொம்ப!" என்றபடியே தோழியின் தோளில் சாய்ந்தாள் பூர்ணிமா.

மகள் கல்லூரி சென்ற பிறகு வீட்டை பூட்டினாள் முல்லை. தனது ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு கடைக்கு கிளம்பினாள்.

இவள் வந்தபோது கடையில் வாடிக்கையாளர்கள் சிலர் இருந்தார்கள். பூரணி சில்க்ஸ் என்ற பெயரில் ஒரு துணிக்கடையை நடத்தி வருகிறாள் முல்லை.

பதினேழு வருடங்களுக்கு முன்பு பூர்ணிமாவை தூக்கிக் கொண்டு வீட்டை தாண்டியவள் இந்த ஊரில் நிலைத்து அமர வேண்டி நிறைய கஷ்டப்பட்டு விட்டாள்.

அவளுக்கு பூர்ணிமா நல்லபடியாக வளர வேண்டும். அதற்காக அனைத்தும் துன்பங்களையும் சுமப்பாள். ஆரம்பத்தில் நகைகளை விற்ற பணத்தைக் கொண்டு புடவைகளை வாங்கி வீடு வீடாக தூக்கிச் சென்று விற்றாள். மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு இவள் கிளப்பினாள் மீண்டும் பூர்ணிமா திரும்பும் நேரத்திற்கேதான் திரும்புவாள். பிறகு வீட்டிலேயே வைத்து புடவைகளை விற்றாள். கொஞ்சம் வருடங்கள் கழித்து வாடகைக்கு இடம் பிடித்து கடையாக வைத்தாள். இப்போது இரண்டு வருடங்கள் முன்புதான் இந்த கட்டிடத்தை விலை கொடுத்து வாங்கி கொஞ்சம் விரிவான கடையாக மாற்றினாள்.

கடையில் வேலை செய்யும் பெண்கள் முல்லையை கண்டு புன்னகைத்து விட்டு மீண்டும் தங்களது வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்.

முல்லைக்கு பூர்ணிமாவை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை. பூர்ணிமா புன்னகைத்து இருக்க எதையும் செய்வாள். அவ்வளவே.

முல்லை மாலையில் வீடு திரும்பியபோது அவள் வீட்டின் முன்பு கார் ஒன்று நின்றிருந்தது. ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினாள். வண்டியின் பதிவெண் தகட்டில் இருந்த முதல் இரு எண்களை கண்டதுமே கால்கள் பின்னியது அவளுக்கு.

காரின் மீது இளைஞன் ஒருவன் சாய்ந்து நின்றிருந்தான்.

"பக்கத்து வீட்டுக்கு வந்த காரா இருக்கும்.!" என முனகியபடி நடந்தாள் முல்லை.

"முல்லை.!" காரின் அருகே இவள் வந்ததும் காரின் உள்ளிருந்து இறங்கினார் மரிக்கொழுந்து.

முல்லைக்கு வியர்த்தது. இவ்வளவு நாளும் அழகாய் வாழ்ந்த வாழ்வு இனி தட்டிப் பறிக்கப்பட போகிறது என்ற பயத்தில் இதயம் இரு மடங்கில் துடித்தது.

"முல்லை.!" மரிக்கொழுந்து மீண்டும் அழைத்தார்.

'முல்லை.. பயப்படாத.. உன் வாழ்க்கை இது. உன்னால எல்லாத்தையும் சமாளிக்க முடியும். உனக்காக இல்லன்னாலும் பூர்ணிமாவுக்காக ஸ்ட்ராங்கா நில்லு.!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் அண்ணனை பார்த்தாள்.

"வாங்க அண்ணா.!" என்றாள்.

காரின் மீது சாய்ந்து நின்றிருந்த பாலா அத்தையினை வெறித்தபடியே நேராக நின்றான்.

'நல்லா நடிக்க தெரியுது இவங்களுக்கு.!' என்று உள்ளுக்குள் குமுறினான்.

"முல்லை.. எங்களை மறந்துட்டியா? உன்னை எங்கேயெல்லாம் தேடினோம் தெரியுமா?" எனக் கேட்டார் மரிக்கொழுந்து.

முல்லைக்கு சிரிப்பு வரும் போல இருந்தது.

"ஏன் தேடினிங்க?" என்றாள் நேரடியாக.

"உங்களுக்கு இன்னமும் கொழுப்பு அப்படியே இருக்கு.!" என்ற பாலாவை கண்கள் இடுங்க பார்த்தவள் "தேவையில்லாதது பேசாதே பாலா. அப்புறம் நான் உன் வாயை உடைச்சிடுவேன்!" என்றாள்.

பாலா அதிர்ந்தான். தான்தான் பாலா என்பது இவர்களுக்கு எப்படி தெரியும் என்று குழம்பினான்.

முல்லைக்கு தெரியும் தன்னிடம் இப்படி பேச பாலாவால் மட்டும்தான் முடியும் என்று. பூமாறன் அடிப்படையிலேயே நல்லவன். அவன் இப்படியெல்லாம் பேச மாட்டான் என்று நம்பினாள்.

"உள்ளே போய் பேசலாமா?" எனக் கேட்டார் மரிக்கொழுந்து.

முல்லை கைகளை கட்டிக் கொண்டு அண்ணனை பார்த்தாள்.

"ஏன்?"

"பேச வேண்டி இருக்கு முல்லை.. நீ எங்களை மறந்துட்ட.. ஆனா நாங்க‌ உன்னை மறக்கல.!"

"உறவை புதுப்பிக்க விரும்பல நான். என் பொண்ணு வீடு வர டைம் ஆச்சி. நாங்க யாருமில்லா அனாதைன்னு அவக்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். இப்ப உங்களை என்னன்னு அறிமுகப்படுத்தி வைக்க முடியும்? அவ வரும் முன்னாடி நீங்க கிளம்பிடுறது நல்லது.!" என்றாள் அவள் குரல் இறங்காமல்.

பாலா ஆத்திரத்தோடு கையை முறுக்கினான். அவனின் கோபத்தையும் தனது அண்ணனின் கண்களில் இருந்த தவிப்பையும் வெளிப்படையாக காண முடிந்தது முல்லையால்.

"முல்லை.. உன்னை வீட்டுக்கு கூட்டிப் போகலாம்ன்னு வந்திருக்கோம்.!" மரிக்கொழுந்துவின் குரலில் சிறிது இறைஞ்சல் இருந்தது. அதுதான் முல்லைக்கு ஆச்சரியமாக இருந்தது.

'உன்னை மாதிரி ஒழுக்கம் கெட்டவளோடு பிறந்ததுக்கு வெட்கப்படுறேன் நான். உன்னை மாதிரி ஒருத்தி இந்த உலகத்துல வாழுறதே தப்பு. போய் செத்துத் தொலை.!' என்று தன்னை ஒருகாலத்தில் திட்டிய அதே அண்ணன்தானா இவன் இல்லை புதிதாய் யாரேனும் வேடமிட்டு வந்துள்ளார்களா என்று குழம்பினாள் முல்லை.

"இதுதான் என் வீடு!" எதிரே இருந்த வீட்டை நோக்கி கை நீட்டிச் சொன்னாள்.

"முல்லை பிடிவாதம் வேணாம். நீ செஞ்ச தப்பை மன்னிச்சி உன்னை திருப்பி கூட்டிப் போக வந்திருக்கேன் நான்.!"

முல்லை நகைத்தாள். அண்ணனின் நரைத்த தலைக்குள் மூளை என்ற ஒன்று உள்ளதா என்று சந்தேகித்தாள்.

"நீ யார் என்னை மன்னிக்க? அதுவும் இல்லாம ‌நான் எந்த தப்பும் செய்யல.!" என்றாள்.

முல்லையை நெருங்கினான் பாலா.

"உங்களோட இதே திமிர்தான் அப்பாவியான ஒருத்தரை கொன்னது.! ஆனா இன்னமும் அந்த திமிரை விடாம இருக்கிங்க.!"

"கால்ல இருக்கற செருப்பை நேத்தேதான் வாங்கி இருக்கேன் பாலா. அதை உனக்காக மாத்த விரும்பல நான்.!"

பாலாவின் முகம் கோபத்தில் சிவந்தது. நரநரவென பற்களை கடித்தான்.

"என் வயசுக்கு மரியாதை தரல நீ. நம்ம உறவுக்கும் மரியாதை தரல நீ. உன்னை மதிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. மரியாதையா போயிடு. நீ சொன்னதை என் பொண்ணு கேட்டிருந்தா நான் சொன்னதை அவ செஞ்சிருப்பா.!" என்றாள்.

மரிக்கொழுந்து மகனுக்கு முன்னால் வந்து நின்றார்.

"முல்லை.. பிரச்சனை வேணாம்.!" என்றார்.

"பிரச்சனையை நான் பண்ணேனா.? இல்லை இவன் பண்றானா.? என்னை திமிர்ன்னு சொல்ல இவனுக்கு என்ன உரிமை இருக்கு?" எனக் கத்தினாள் முல்லை.

பதினேழு வருடங்களுக்கு முன்பிருந்தே அதே முல்லை என்று நினைத்து விட்டார்கள் போல. இவளின் கத்தல் கண்டு மரிக்கொழுந்து முகம் வாடினார்.

"உங்களோடு உறவு கொண்டாட நாங்க ஒன்னும் வரல.. எங்களுக்கு தேவை.." பாலா மேலே சொல்லும் முன் "அம்மா.!" என்று அழைப்பு குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தான். பூர்ணிமாதான். பார்த்த உடன் அடையாளம் கண்டுக் கொள்ள முடிந்தது. அழகில் தன் அம்மாவை கொண்டிருந்தாள் அவள். தரையை மோதும் டாப்பில் துணிக்கடை பொம்மை போலவே இருந்தாள். ஒரு பக்கமாக பின்னியிருந்த கூந்தலில் ஒற்றை சிவப்பு ரோஜா இருந்தது.

முல்லையின் அருகே வந்து நின்றவள் "யார் இவங்க?" என்று ரகசிய குரலில் கேட்டாள்.

"உன் மாமா இவர். நான் உன் மாமன் மகன்.!" என்ற பாலாவை திகைப்போடு பார்த்தவள் அம்மாவிடம் திரும்பினாள். அம்மா சொல்லாமல் எதையும் நம்பமாட்டாள் அவள்.

பாலாவை முறைத்த முல்லை மகளிடம் ஆமென தலையசைத்தாள்.

பூர்ணிமா குழப்பமாக நின்றாள்.

"வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு டீ காபி கூட தர மாட்டிங்களா?" பாலாவின் குரலில் இருந்தது நக்கலா தெனாவாட்டா என்று முல்லையால் கண்டறிய முடியவில்லை.

மகளின் முன்னால் அவர்கள் எதையாவது உளறி வைத்து விட்டால் பிறகு மகளின் மனம் உடைந்து விடுமே என்று பயந்தாள்.

சென்று கதவை திறந்தாள்.

"வாங்க அண்ணா.. வா பாலா.!" என்றாள்.

இருவரையும் சோஃபாவில் அமர வைத்தவள் "பூரணி நீ உள்ளே போ.. உன் ஹோம் வொர்க் ஏதாவது இருந்தா செய்.!" என்றாள்.

பூரணி தயக்கத்தோடு தனது அறைக்கு கிளம்பினாள். செல்லும் முன் பாலாவை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். அவனும் இவளைதான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் அறைக்குள் சென்று கதவை தாழிட்டதும் எழுந்து நின்றான்.

"நான் பூர்ணியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.!" என்றான்.

முல்லை சிரித்தபடியே எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

"என் பொண்ணுக்கு இப்போதைக்கு நான் கல்யாணம் பண்றதா யோசிக்கல.!" என்றாள். அவனின் ஆசை அபத்தமாக பட்டது அவளுக்கு. அவனுக்கு தன் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது என்பதை அவளும் அறிவாள். பூர்ணிமாவின் வாழ்வு கேள்வி குறியாவதில் அவளுக்கு விருப்பம் இல்லை.

"இல்லன்னா நான் அவக்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடுவேன். அப்புறம் அவளே உங்களை காறி துப்பிட்டு எங்களோடு வந்துடுவா. எப்படி வசதி?" எனக் கேட்டான்.

முல்லையின் பொறுமை எல்லையை கடந்துக் கொண்டிருந்தது. ஆனால் பயமும் அதே அளவு ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN