பௌர்ணமி 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மரிக்கொழுந்து மகனையும் தங்கையையும் மாறி மாறி பார்த்தார். 'வந்த காரியம் என்ன இப்போது இவன் கேட்பது என்ன' என்று கவலைப்பட்டார் அவர்.

"பாலா.. நீ என்ன நினைச்சி இப்படி கேட்டன்னு தெரியல.. ஆனா பாரு.. பூரணிக்கு கல்யாணத்துல எல்லாம் இன்ட்ரஸ்ட் கிடையாது.!" பொறுமையை குரலில் சுமந்தபடி சொன்னாள் முல்லை.

பாலா கேலியாக உதட்டை சுளித்தான்.

"அவளை நீங்க சன்னியாசம் அனுப்ப முடிவு பண்ணலன்னு நினைக்கிறேன். அவளை கல்யாணம் பண்ணிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.!"

முல்லை எழுந்து நின்றாள்.

"அண்ணா.. ப்ளீஸ்.. உன் மகனை கூட்டிட்டு போயிடு. நிம்மதியா இருக்கேன் நான். என் வாழ்க்கையை மேலும் மேலும் நாசம் பண்றதுல உங்களுக்கு என்ன லாபம்?" வருத்தத்தின் கடைசி பிடியில் அகப்பட்டுக் கொண்டு கேட்டாள்.

மரிக்கொழுந்து மகனின் கையைப் பற்றினார்.

"உனக்கு என்னடா திடீர்ன்னு வந்தது?" என்று காதோரம் கிசுகிசுப்பாக கேட்டார்.

"அவளை பிடிச்சிருக்குப்பா.!" பூர்ணிமாவின் அறையை கை நீட்டி காட்டியபடி சொன்னான்.

முல்லையின் கண்கள் கலங்கியது.

"வேணாம் பாலா! அவளை என்கிட்ட இருந்து பிரிக்காத!" கையை கூப்பினாள்.

மரிக்கொழுந்து இருதலை கொள்ளி எறும்பு என தன் நிலையை உணர்ந்தார்.

மகனை மிரட்ட இயலாது. அவன் அந்த வயதை கடந்து விட்டான். தங்கையிடம் கெஞ்சவும் மனம் இடம் தரவில்லை. அவளை அதட்டவும் மனம் வரவில்லை.

பாலாவின் முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சமும் குறையவில்லை.

"நாங்க வேற ஏதாவது ஊருக்கு போயிடுறோம். எங்களை விட்டுடுங்க!" என்றாள்.

"எனக்கு அவ வேணும்!" அவனின் தொனி கண்டு அவளுக்கு பயமாக இருந்தது. சிறு வயதில் இருந்த அதே பிடிவாதம்.

முல்லை ஒரு முடிவு வந்தவளாக கையை கீழிறக்கினாள். கண்களை துடைத்துக் கொண்டாள்.

"அண்ணா.. உனக்கு என் பொண்ணை மருமகளா ஆக்கிக்க விருப்பம் இருந்தா எனக்கும் சம்மதம்!"

பாலாவின் முகத்தில் எதையோ சாதித்த புன்னகை வந்துச் சேர்ந்தது.

"ஆனா நான் என் பொண்ணை இவனுக்கு தர மாட்டேன். மாறனுக்கு தரேன்!" என்றாள்.

பாலாவின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து ஏமாற்றம் குடி வந்தது. அதுவும் மறைந்து கோபம் படர்ந்து அதிகமாகியது. முல்லை பெரிய தவறு செய்து விட்டாள். அவனின் குணத்தை அறிந்திருந்த அவளே அவசரத்தில் இப்படி தன்னை மறந்து சொல்லி விட்டாள். இன்னும் சற்று கெஞ்சியிருந்தால் கூட அவன் தன் மனதை மாற்றிக் கொள்ள வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் மாறனை இதில் இழுத்து விடவும் அவனின் குணம் புலியின் சீற்றமென மாறி விட்டது.

மரிக்கொழுந்து தன் தலையை கீறினார்.

பாலா முல்லையை வெறித்துவிட்டு பூர்ணிமாவின் அறை நோக்கி நடந்தான். முல்லை அவசரமாக அவனின் குறுக்கே வந்து நின்றாள். தான் தவற விட்ட வார்த்தையில் இருந்த பின்விளைவு இப்போதுதான் அவளுக்கு புரிந்தது.

"நான் அவக்கிட்ட உங்களை பத்திய உண்மையை சொல்றேன்."

"தப்பு பண்ணாத பாலா. சின்ன வயசுல இருந்ததை விட இப்ப ரொம்ப மோசமா வளர்ந்து இருக்க!"

"நீங்க முன்பை விடவும் மோசம்.. அவ உங்களோடு இருந்தா உங்களை மாதிரியே அவளும் ஒழுக்கம் கெட்டவளா.." அவன் மேலும் பேசும் முன் அவனின் கன்னத்தில் அறைந்தாள் முல்லை.

கன்னத்தை பிடித்துக் கொண்டு அத்தையை முறைத்தான்.

"உன் ***லிமிட் அவ்வளவுதான். ரொம்ப சீண்டாத பாலா. எனக்கு எப்பவுமே பொறுமை கிடையாது. நீ என்னை சீண்டினா அப்புறம் நான் பொல்லாதவளா போயிடுவேன். எல்லாமே ஒரு எல்லைதான்‌. நீ என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிச்சா அப்புறம் நானே அவக்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடுவேன். என் உண்மை எப்படி வேணாலும் இருக்கும். அவ என் பொண்ணு. நான் சொல்வதை நம்புவாளா இல்ல நீ சொல்வதை நம்புவாளான்னு சோதிச்சி பார்க்கலாமா?" எனக் கேட்டாள்.

பாலாவின் கண்கள் கோபத்தில் சிவந்தது. "நான் பார்த்ததில் மிக மோசமான பொம்பளை நீங்கதான்.!" என்றான்.

முல்லை சிரித்தாள். "நான் பார்த்ததுல பாதி ஆம்பளைங்க மோசமாதான்டா இருக்கிங்க!" என்றாள்.

பாலா பற்களை அறைத்த சத்தம் அவளுக்கும் கேட்டது. தன்னை விட அரையடி உயரமாக இருப்பதால் இவனிடம் சரணடைந்து விடுவாளா?

பாலா தன் அத்தையை வெறித்தான். கருமை தீராத கூந்தலை கொண்டையாக போட்டிருந்தாள். தெரியாதவர்கள் பார்த்தால் முப்பத்தி ஐந்து வயதுக்குள்தான் இவளை கணிப்பார்கள். உடம்பில் அரை இன்ச் கூட அதிக சதை இல்லை. கல்லில் வெட்டப்பட்ட சிலை போலவே இருந்தாள் இப்போதும்.

"அத்தையை சைட் அடிக்கறதுதான் நீ கத்துக்கிட்ட ஒழுக்கமா?" நக்கலாக கேட்டாள்.

பாலா சிரித்தான். "உங்களை போல ஒரு திமிர்காரியை அதிகமா வெறுக்கறேன் நான்!" என்றான்.

"வாவ். தேங்க்ஸ்.. என் பொண்ணுக்கு என்னை விட திமிர் அதிகம். அவ உனக்கு செட் ஆக மாட்டா.. மாறனுக்கு வேணா கொஞ்சமா செட் ஆவா.!" என்ன சொன்னால் அவனுக்கு எரிச்சல் வரும் என்று தெரிந்தே சொன்னாள் அவள்.

அவள் நினைத்தது போலவே மனதுக்குள் கொந்தளித்தான் பாலா.

மரிக்கொழுந்து இருவரின் அருகே வந்தார். அவர் பேச முயலும் முன் பூர்ணிமா தன் அறையின் கதவை திறந்தாள். இவர்கள் பேசுவதை கேட்க கூடாது என்று காதில் ஹெட்போனை மாட்டி இருந்தாள். அவளுக்கு தன் அம்மா சொல்லாமலேயே சில விசயங்கள் புரியும்.

பாலா பூர்ணிமாவின் அருகே சென்றான். அவனை கைப்பிடித்து நிறுத்த நினைத்தாள் முல்லை. ஆனால் நேரம் கடந்து விட்டது. வெளிறி போன முகத்தை மகளுக்கு காட்ட விரும்பாமல் தரை பார்த்தாள்.

"பூர்ணி.. உனக்கு என்னை ஞாபகம் இருக்கா? நான் பாலா! உன் மாமா.!" என்றான்.

பூர்ணிமா அம்மாவை பார்த்தாள்.

"சாரி.. ஞாபகம் இல்ல!" என்றாள்.

அவளின் சிறுகுரல் பிடித்திருந்தது அவனுக்கு. அவளுக்கு தன்னை ஞாபகம் இல்லாததால் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது.

"ஓ.. பரவால்ல விடு. ஐ லைக் யூ. நாம பெரியவங்களானதும் நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதா பேசியிருந்தாங்க‌.. ஆனா இடையில் அப்பாவுக்கும் அத்தைக்கும் இடையில் வந்த சின்ன சண்டையால அத்தை உன்னை கூட்டிக்கிட்டு வீட்டை விட்டு ஓடி வந்துட்டாங்க. அவங்களை நாங்க எல்லோரும் ரொம்ப மிஸ் பண்ணோம். உன்னையும்தான்! அத்தையை கண்டுபிடிக்கவே இத்தனை வருசம் ஆயிடுச்சி. ஆனா அவங்க கூப்பிட்டா வர மாட்டேங்கிறாங்க. அத்தையை வீட்டுக்கு கூட்டி போகணும். நீ என்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னா அத்தை வீட்டுக்கு வருவாங்க!" என்றான்.

'வாயை திறந்தா பொய்யை தவிர வேறு இல்ல. இவனையெல்லாம் அண்ணன் பெத்ததுக்கு பதிலா சும்மாவே இருந்திருக்கலாம்!' என்று மனதுக்குள் பொறிந்தாள் முல்லை.

பூர்ணிமா அம்மாவையும் மரிக்கொழுந்தையும் பார்த்தாள். பின்னர் இவன் பக்கம் திரும்பினாள்.

"என் அம்மாவுக்கும் உங்க அப்பாவுக்கும் சண்டையா இருந்தா அவங்க பேசி தீர்த்துக்கட்டும். அதுக்கு ஏன் நாம கல்யாணம் செய்யணும். எனக்கு புரியல!" என்றாள்.

தன் மகளுக்கு சுத்தி போட வேண்டும் என்று நினைத்தாள் முல்லை.

பாலா ஒற்றை விரலால் தன் கன்னம் சொறிந்தான்.

"ஏன்னா எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. சின்ன வயசுல இருந்தே உனக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்!"

அவன் சொன்ன பொய்யை கேட்டு வாய் விட்டு சிரிக்க தோன்றியது முல்லைக்கு.

பூர்ணிமா யோசித்தாள்.

"எனக்கு இது பத்தி எதுவும் ஞாபகம் இல்ல. தப்பா நினைக்க வேணாம். உங்களுக்கு ஏதாவது பேசணும்ன்னு அம்மாகிட்ட மட்டும் பேசுங்க. என் அம்மா என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம்!" என்றவள் "அம்மா.. நான் வெளியே போய்ட்டு வரேன்!" என்றுவிட்டு கிளம்பினாள்.

ஸ்கூட்டியின் சாவி மேஜை மேல் கிடந்தது. எடுத்துக் கொண்டவள் எதேச்சையாக பாலாவை திரும்பிப் பார்த்தாள். அவளின் கண்களில் நிலைக் கொண்டிருந்தது அவனின் பார்வை. பூர்ணிமா தன் சிலிர்ப்பை வெளிக்காட்டாமல் வெளியே நடந்தாள்.

ஸ்கூட்டியின் சத்தம் செவிகளை கடந்த பிறகு முல்லையின் பக்கம் திரும்பினான்.

"அவளே சொல்லிட்டா.. அதனால நீங்கதான் தடை நிக்காம இருக்கணும். உங்களோட சுயநலத்துக்காக அவ வாழ்க்கையை அழிக்காதிங்க.!" என்றான்.

"சாத்தான் வேதம் ஓதுது!" முல்லை நக்கலாக சொன்னாள்.

பாலா கண்களை மூடி திறந்தான்.

கோபத்தை அடக்கிக் கொண்டு புன்னகைத்தான்.

"இட்ஸ் ஓகே அத்தை.. நான் அவளோட அப்பன்கிட்ட சம்மதம் வாங்கிக்கிறேன்.. அவன் எனக்கு சம்மதம் தந்துதானே ஆகணும்!" என்றவன் திரும்பினான். அவன் நகரும் முன் அவனின் கையை பற்றினாள் முல்லை.

"வேணாம் பாலா.. உன்கிட்ட கடைசி கடைசியா கெஞ்சுறேன். லாஸ்ட் வார்னிங்ன்னு கூட வச்சிக்க‌. என் பூரணியை விட்டுடு!"

"முடியாது!" என்றவன் முல்லையை கிண்டலாக பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.

"முல்லை.. மன்னிச்சிக்கடா.. இவனுக்கு பிடிவாதம் அதிகம்ன்னு உனக்கே தெரியும்!" என்ற அண்ணனை வெறித்தவள் "என் நிம்மதியை அழிக்கிறது உங்களுக்கு சாதாரணமா தெரியுது.!" என்றாள்.

பாலா கதவை தொட இருந்த நேரத்தில் "சரி பாலா!" என்றாள் முல்லை.

பாலா திரும்பினான்.

"அவ படிச்சி முடிக்கட்டும். உனக்கே கட்டி தரேன்!" என்றாள்.

"அதுக்குள்ள வேற ஊர் ஓட திட்டமா? கட்டி வைங்க. அப்புறம் அவ படிச்சிக்கிட்டும்!" என்றான்.

மேஜை மேல் இருந்த போனை எடுத்தவன் அதில் தன் நம்பரை பதிந்தான். பிறகு தூக்கி அதை சோஃபாவின் மீது எறிந்தான்.

"அவக்கிட்ட பேசிட்டு சொல்லுங்க.. என் நம்பர் பாலான்னு சேவ் பண்ணி வச்சிருக்கேன். அவ ஒத்துக்கலன்னாலும் சரி நீங்க ஒத்துக்கலன்னாலும் சரி.. அவளோட அப்பனை வச்சாவது நான் இவளை கல்யாணம் செய்வேன்.!" என்றவன் வெளியே சென்றான்.

கார் ஹாரன் ஓயாமல் அடித்தது. மரிக்கொழுந்து தங்கையை பார்த்தார்.

"எதையும் மனசுல வச்சிக்காதம்மா.. நீ வீட்டுக்கு வரணும்ன்னுதான் அவன் இப்படி பண்றான்!" என்றவர் தங்கையிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு சென்றார்.

முல்லை அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். தலை சுற்றுவது போலிருந்தது.

பூர்ணிமாவுக்கு தன் தந்தை உயிரோடு இருக்கிறார் என்ற விசயம் தெரிந்தாலே முல்லையின் இத்தனை வருட பொய்கள் அனைத்தும் உடைந்து விடும். முல்லைக்கு பாலாவின் கொலைவெறி வந்தது.

இரவு வரை அழுது தீர்த்தாள். எட்டு மணி தாண்டும்போது பூர்ணிமா வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டில் விளக்கு கூட போடாமல் இருந்தது.

"அம்மா!" பூர்ணிமாவின் குரலில் முழுதாய் தெளிந்து விட்டாள் முல்லை. அழுகை ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம். இரண்டையும் மறைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

பூர்ணிமா ஹாலின் விளக்கு ஸ்விட்சை தட்டியபோது முல்லை முகத்தை துடைத்து விட்டிருந்தாள்.

"ஏன்ம்மா?" என்றவள் சுற்றி நோட்டமிட்டாள்.

"உங்க அண்ணன் போயிட்டாராம்மா?" எனக் கேட்டாள்.

"வேலை இருக்குன்னு கிளம்பிட்டாங்க பூரணி!"

சமையலறையில் இன்னும் விளக்கு எரியவில்லை.

"நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்ம்மா!" என்றவள் அம்மா பதில் சொல்லும் முன்பே கிளம்பி விட்டாள்.

பூர்ணிமா வந்தபோது அம்மா பழைய ஆளாக இருந்தாள்.

தோசையை அம்மாவின் தட்டில் வைத்தாள்.

"என்னாச்சிம்மா? அவங்க உங்களை திட்டினாங்களா? இத்தனை வருசமா நாம அனாதைதானே? இன்னைக்கு என்ன புது கரிசனம்? உனக்கு பிடிக்கலன்னா விட்டுடும்மா.. இவங்க வீட்டுக்கு நாம ஏன் போகணும்?" எனக் கேட்டபடியே தோசையை சாப்பிட்டாள் பூர்ணிமா.

முல்லைக்கு சாப்பாடு இறங்க மறுத்தது.

"உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா பூரணி?" தயக்கமாக கேட்டாள்.

"கொஞ்சம் அழகா இருக்கான். ஆனா ரொம்ப திமிர்ன்னு தோணுது. அவன் கண்ணுலயே அவ்வளவு திமிர்.. என்னையே கண்ணாடியில் பார்த்த மாதிரி இருக்கு!" என்று சிரித்தவள் "ஆனா குணம் எப்படின்னு பழகாம எப்படி சொல்றது? மனுசனோட குணம்தானே நமக்கு முக்கியம்?" எனக் கேட்டாள்.

முல்லை கசப்பாக சிரித்தாள்.

"குணமா? ஆணும் பொண்ணும் இந்த விசயத்துல ரொம்பவும் பச்சோந்தி பூரணி. அவங்க குணம் நிமிசத்துக்கு நூத்தியிருபது விதமா மாறும். யாரையும் நம்பவே கூடாது. அப்ப மட்டும்தான் நம்மால நிம்மதியா வாழ முடியும்.!"

அம்மா சொன்னது பூர்ணிமாவுக்கு புரியவில்லை.

"மனுசங்க தர சர்ப்ரைஸ் போல சாமியாலும் கூட தர முடியாது பூரணி. ஆனா எல்லோரும் நல்லவிதமான சர்ப்ரைஸையே தருவாங்கன்னு நம்புறதுதான் நம்ம தப்பு. உனக்கு விருப்பம் இருந்தா அவனோடு பழகி பாரு. பிடிச்சா கல்யாணம் பண்ணிக்க. அந்த வீட்டுக்கு என்னால வர முடியாது. இந்த உலகத்துல என்னை புரிஞ்சிக்கற ஒரே ஜீவன் நீ மட்டும்தான். அதனால அங்கே வர சொல்லி நீ என்னை கம்பல் பண்ண மாட்டன்னு நம்புறேன். செண்பகம் என் அண்ணி. உன்னை நல்லா பார்த்துப்பாங்க. பூமாறன் இருக்கான் அங்கே. அவனை நீ நம்பலாம். பாலாவை விட அவன் நல்லவன்.!"

பூர்ணிமா அம்மாவின் கையை பற்றினாள்.

"ஏன்ம்மா இப்படி? நான் கல்யாணம் கேட்கல. உங்களுக்கும் இதுல இஷ்டம் இல்ல. அப்புறம் ஏன் இப்படி நீங்க அட்ஜஸ்ட் பண்றிங்க? உங்க முகத்தை என்னால படிக்க முடியும்.. நமக்கு அந்த வீடு வேண்டாம். விடுங்கம்மா!" என்றாள்.

முல்லைக்கு அழுகை பொங்கி விட்டது. விம்மி அழுதாள்.

பூர்ணிமா உணவை தள்ளி வைத்துவிட்டு வந்து அம்மாவை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

முல்லை மகளின் தோளில் முகம் புதைத்தாள்.

முல்லையை புரிந்துக் கொண்டவள் பூர்ணிமா. 'அப்பா எங்கே?' என்று எட்டு வயதில் ஒருநாள் கேட்டாள்.

'அவர் இல்ல பூரணி!' என்று கண்ணீர் விட்டாள் முல்லை. அன்றிலிருந்து இன்று வரை அப்பா என்று வாய் திறக்கவே இல்லை பூர்ணிமா. அம்மா அழாமல் இருக்க வேண்டும். பூர்ணிமா அதற்காக இருட்டில் வாழவும் தயார்.

"அந்த வீடு எனக்கு தேவையில்லை. ஆனா உனக்கு தேவை பூரணி.. சொந்தங்கள் உனக்கு வேணும்.!" என்றாள் முல்லை அழுகையின் இடையே.

பூர்ணிமா வேண்டாமென்று தலையசைத்தாள்.

"எனக்கு நீங்க போதும். என்னோட மொத்த சொந்தமும் நீங்க மட்டும்தான். உங்களை தாண்டி எனக்கு எதுக்கு சொந்தம்?" என்றாள்.

ஆனால் முல்லைக்கு பயமாக இருந்தது. பாலாவின் குணம் தெரிந்தவள். பயம் கொள்ளாமல் எப்படி இருப்பாள்?

அன்று இரவு தனது அறையை துறந்து அம்மாவின் அறையில் அவளை அணைத்துக் கொண்டு தூங்கினாள் பூர்ணிமா.

இரவெல்லாம் முல்லை உறங்கவே இல்லை. இதுவரை பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறாள். அப்போது கூட இறந்த காலத்தை நினைத்துதான் அழுதுள்ளாள். ஆனால் இன்றோ எதிர்காலத்தை கண்டு பயந்து அழ வைத்த விட்டான் பாலா.

'தம்மாதூண்டு பொடியனெல்லாம் உன்னை மிரட்டும் அளவுக்கு ஆயிடுச்சே முல்லை!" என்று மனசாட்சி வேறு கேலி செய்தது.

பூர்ணிமா மறுநாள் கல்லூரியில் இருந்தபோது அவளை சந்திக்க ஆள் வந்துள்ளதாக வந்து சொன்னார் ப்யூன்.

அம்மா இதுவரை வந்தது இல்லை. இது யாராய் இருக்கும் என்ற குழப்பத்தோடு கல்லூரி கட்டிடத்தின் முன் பகுதிக்கு வந்தாள். பாலா நின்றிருந்தான். அவளுக்கு முதுகு காட்டி நின்று போன் பேசிக் கொண்டிருந்தவன் பூர்ணிமாவின் காலணி சத்தம் கேட்டுப் போன் இணைப்பை துண்டித்தான்.

இவள் புறம் திரும்பினான். புன்னகைத்தான். அவன் பற்களில் இருந்து வெளிச்சம் வருவது போல இருந்தது பூர்ணிமாவுக்கு.

'சம்திங் ராங் வித் மை ஹார்ட்!'

"ஹாய் பூர்ணி.!" என்றான்.

'அதென்ன பூர்ணி. அம்மா எவ்வளவு அழகா பூரணின்னு கூப்பிடுறாங்க.!' என்று சம்பந்தம் இல்லாமல் யோசித்தாள்.

"நேத்து நான் சொன்னதை பத்தி என்ன யோசிச்ச?" எனக் கேட்டான்.

"சாரிங்க. எனக்கு இப்ப கல்யாணம் மேல இன்ட்ரஸ்ட் இல்ல. காலேஜ் செகண்ட் இயர்தான் போயிட்டு இருக்கேன். மெதுவா இன்னும் பத்து வருசம் கழிச்சி யோசிக்கலாம்ன்னு இருக்கேன். நீங்க வேற பொண்ணை பார்த்துக்கங்க!" என்றவள் 'அவன் முகத்துல என்ன ஃபேஷன் ஷோவா ஓடுது? ஏன் அவன் முகத்தையே பார்க்கற பூரணி?' என தன்னையே திட்டிக் கொண்டு அங்கிருந்து திரும்பினாள்.

அவளின் கையை பற்றினான் பாலா. பூர்ணிமா திரும்பி பார்த்தாள். கையை பற்றி இருக்கவில்லை. இறுக்கிக் கொண்டிருந்தான். இரண்டே நொடியில் வலி தெரிந்து விட்டது. மிடறு விழுங்கினாள். அத்தோடு தன்னை மிரட்டும் பயத்தையும் விழுங்கினாள்.

"செக்யூரிட்டியை கூப்பிட வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்!" என்றாள் அவனின் கண்களைப் பார்த்து.

"பூர்ணி!" எச்சரித்தான்.

"உங்க பிகேவியர் எனக்கு சுத்தமா பிடிக்கல. கோடி ரூபா தந்தாலும் நீங்க வேணாம் சாமி. உங்களை மேரேஜ் பண்றதுக்கு பதிலா நான் என் காலேஜ்மேட் பிரகீதனை லவ் பண்ணிட்டு போயிடுவேன். அவன் உங்களை விட பெட்டர்!" என்றவள் தன் கையை உருவ முயன்றாள். ஆனால் அவன் கையின் பிடியை விடாமல் இன்னும் இறுக்கினான்.

"ஒரு பந்தங்கறது எது பெட்டர்ன்னு சூஸ் பண்றது இல்ல. அது லைஃப். விதி!" என்றான்.

"***.."

அவளை அறைய இடது கையை ஓங்கியவன் சட்டென்று கையை கீழே இறக்கினான்.

"கெட்ட வார்த்தை பேசுறது என்ன பழக்கம்? இதையும் அந்த பொம்பளைதான் கத்து தந்தாளா?" எனக் கேட்டவனை பயத்தோடு பார்த்தாள்.

அவன் சொன்ன அந்த பொம்பளை தன் அம்மாதான் என்று அவளுக்கு தெளிவாக புரிந்தது. 'அத்தையை பொம்பளைன்னு சொல்றான்.! நேத்து பார்த்த பொண்ணை அறைய கை நீட்டுறான். இவனையெல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா?' யோசித்து முடிக்கும் முன் கையை நீட்டி விட்டாள்.

பாலா அதிர்ச்சியோடு கன்னத்தை பிடித்தான். நேற்று அத்தை அடித்ததை விட மும்மடங்கு பலமாக அறை விழுந்திருந்தது. பற்களை கடித்தான்.

"நான் பேசிய கெட்ட வார்த்தைக்கும் நீ என் அம்மாவை பொம்பளைன்னு சொன்னதுக்கும் நடுவுல எந்த வித்தியாசமும் இல்ல!" என்றாள் கண்களை உருட்டி.

சிவந்திருந்த அவளின் விழிகளையும் இதழ்களையும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் பாலா. உண்மை தெரிந்த பிறகும் இவள் இதே போல தன் அன்னையின் மீது பாசம் காட்டுவாளா என்று சந்தேகித்தான்.

"என் லைஃப் இது. எனக்கு என்ன வேணும்ன்னு நான் சூஸ் பண்ணிப்பேன். நான் இந்த பூமியில் வாழ வந்திருக்கேன். விதியை பத்தி ஆராய்ச்சி செய்ய வரல! எனக்கு தேவை பெஸ்ட் மட்டும்தான். அதனால எனக்கு நீ வேணாம். இனி என் கண் முன்னாடி வந்துடாத!" என்றாள்.

பாலா நகைத்தான்.

"ஐ லவ் யூ.!" என்றான்.

அவனை விட அதிகம் நகைத்தாள் பூர்ணிமா.

"உன் ஆம்பள திமிரை என்கிட்ட காட்ட டிரை பண்ணாத மாப்ள.. அப்புறம் என்னை ஏன்டா சீண்டினோம்ன்னு நினைப்ப.!" என்றவள் தன் கையை பார்த்தாள். அவன் இன்னமும் இறுக்கமாக பற்றியிருந்தான். அவனின் கணுக்காலில் ஒரு உதையை விட்டாள். துள்ளி குதித்தான். காலை உதறினான்.

"கையை விடுடா!" என்றாள்.

"வாங்க போங்க போய், வா போ போய், இப்ப வாடா போடாவா?" அவனின் பேச்சில் நக்கல் குறையாமல் இருப்பது கண்டு எரிச்சலாக வந்தது பூர்ணிமாவுக்கு.

"அப்புறம் நான் நிஜமா செக்யூரிட்டியை கூப்பிட்டுடுவேன்.!" எச்சரித்தாள்.

அவளை அருகில் இழுத்தான் பாலா. அவளின் காதோரம் குனிந்தான். பூர்ணிமா அவனிடமிருந்து விலக முயன்றாள்.

"உன் திமிர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பூர்ணி. நீ சின்ன பாப்பாவா இருக்கும்போது உன் திமிரை வெறுத்தவன்தான் நான். ஆனா இப்ப பிடிச்சிருக்கு. உன்னை போல பார்த்த நொடியில் என்னை ஈர்த்தவ எவளும் இல்ல. இந்த கழுத்தை தயாரா வச்சிக்க. மாமான் எப்ப வேணாலும் வருவேன் தாலி கட்ட!" என்றான்.

"ஆரம்பிக்கும் முன்னாடியே லேசா அருவெறுப்பா இருக்குடா மாப்ள.! நிஜமா நீ பாழும் குழியில் விழுந்தேதான் ஆகணுமா?" பரிதாபமாக கேட்டவளை கண்டு கண்களை சிமிட்டியவன் மீண்டும் காதோரம் குனிந்தான்.

"பேசுற வார்த்தை எல்லாத்தையும் பார்த்து பேசு பூர்ணி குட்டி. இல்லன்னா பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும்!" என்றவன் அவளை‌ விட்டு விலகி நின்றான். அவளின் கையை விட்டான்.

பூர்ணிமா அவனை பார்வையால் எரித்தாள்.

"நீ என் அத்தையை போல அழகு. என் அத்தை மேல நான் வச்சிருக்கும் மரியாதைக்காக மட்டுமே உன்னை இப்ப விட்டுப் போறேன்!" என்றான்.

பூர்ணிமா அவனை வெறித்து விட்டு உள்ளே நடந்தாள். கையை பார்த்தாள். வட்டமாக சிவந்திருந்தது. திரும்பி சென்று அவனின் முகத்தில் ஒன்று குத்த வேண்டும் போல ஆத்திரம் வந்தது. அம்மாவுக்காக அமைதியாக சென்றாள்.

பாலா வெளியே வந்தான். தன் உள்ளங்கையை பார்த்தான். அவளின் கையை பிடித்திருந்த காரணத்தால் சிறிது சிவப்பாக இருந்தது.

காருக்குள் ஏறி அமர்ந்ததும் கண்ணாடியில் தன் கன்னம் பார்த்தான். ஐ விரல் அச்சு அப்படியே தெரிந்தது. லேசாக சிரித்தான்.

"நீ ரொம்ப மோசம் பூர்ணி!" என்று முணுமுணுத்தான்.

பூர்ணிமாவின் கோபம் மாலை வரையிலுமே தீரவில்லை. வீட்டை இன்றைக்கு ஒருவழி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு வந்தாள்.

முல்லை நேற்றை விடவும் இன்று அதிகம் முகம் சோர்ந்து அமர்ந்திருந்தாள். அம்மாவின் முகம் பார்த்த பிறகு கோபம் எந்த திசைக்கு ஓடியதென்றே தெரியவில்லை.

"அம்மா.!" என்றாள்.

முல்லை முகத்தை துடைத்துக் கொண்டு மகளைப் பார்த்தாள்.

"பாலாவை உனக்கு பிடிச்சிருக்கா பூரணி?" எனக் கேட்டாள் எடுத்த எடுப்பிலேயே.

அம்மாவின் குரல் சரியாக இல்லை. அதிகம் அழுது இருப்பதற்கான சுவடுகள் தெரிந்தது.

"உனக்கு பிடிக்கலன்னா நீ அவனை திரும்பி கூட பார்க்க வேணாம்.!" என்றவள் 'உனக்கு பிடிக்கலன்னா வேணாம் பூரணி. நான் என் உயிரை விட்டாவது நீ ஆசைப்படும் வாழ்க்கையை தருவேன்!' என மனதுக்குள் சொன்னாள்.

இன்று பிற்பகல் வேளையில் பாலா வீட்டிற்கு வந்திருந்தான். அண்ணன் வரவில்லை. நேற்றைய மன குழப்பத்தில் இன்று கடைக்கு செல்லவில்லை‌ முல்லை. இவனை தனியாய் கண்டதும் கொஞ்சம் பயந்து விட்டாள்.

"பூர்ணியோட அப்பா உங்களோடு பேசணும்ன்னு சொல்றாரு!" என்றபடி போனை எடுத்தான்.

முல்லைக்கு கை கால்கள் நடுங்கி விட்டது. பூர்ணிமாவின் அப்பாவோடு பேச அவள் தயார். ஆனால் தனக்கு அப்பா உண்டென்று பூர்ணிமா தெரிந்துக் கொண்டால் என்ன ஆகும் என்பது மட்டும்தான் இவளின் பயமாக இருந்தது.

"நீங்க பேசுறிங்களா? இல்ல பூர்ணிக்கிட்டயே பேச தரட்டா?" எனக் கேட்டான் பாலா.

"என்னை சாகடிக்க அவ்வளவு ஆசையா பாலா?" என்றவளை யோசனையோடு பார்த்தவன் "ஒருவேளை நீங்க அப்பவே செத்திருந்தா எந்த பிரச்சனையும் வந்திருக்காது இல்ல?" எனக் கேட்டான்.

முல்லையின் முகத்தில் ஜீவன் செத்து விட்டது.

"என்ன செய்விங்களோ தெரியாது. பூர்ணி என்னை கல்யாணம் செஞ்சிக்கணும்.‌ நீங்க நாளைக்குள்ள பதில் சொல்லலன்னா நாளைக்கு நான் அவளோட அப்பாவை கூட்டிக்கிட்டு இங்கே வருவேன்!" என்றவன் போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டுச் சென்று விட்டான்.

அவன் சொல்லி சென்ற நினைவில் இருந்த முல்லையின் மடியில் தலை சாய்ந்தாள் பூர்ணிமா.

"உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஓகேம்மா! அவனை.. அவரை எனக்கு அவ்வளவா தெரியாது இல்லையா? அதனாலதான் நேத்து அப்படி சொல்லிட்டேன். என்ன இருந்தாலும் சொந்தக்கார பையதானே? சமாளிச்சிடுவேன்.!" என்றாள்.

"நீ வாழணும் பூரணி. சமாளிக்க வேண்டிய விதி உனக்கு வேணாம்!"

"அப்புறம் லைஃப் போரடிச்சிடும் அம்மா. சில நேரங்களில் சமாளிச்சும்தான் ஆகணும்!" என்றாள்.

மகளின் உச்சந்தலையில் முத்தமிட்டாள் முல்லை.

"உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் பூர்ணி. உனக்கு இது நினைவிருக்கட்டும்!" என்றாள்.

'நானும் உங்களுக்காக எதையும் செய்வேன் அம்மா!' என நினைத்தவள் திருமண நாளான்று கடவுளை நோக்கி கை கூப்பினாள்.

'ஆண்டவா.. நான் அவ்வளவு நல்லவ இல்ல.. என் அம்மாவுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல. இந்த புது சொந்தங்கள் என் அம்மாவை ரொம்பவும் கஷ்டப்படுத்துறாங்க. பிரச்சனைகள் என்னன்னு எனக்கும் கண்ணுல காட்டு. என் அம்மாவை நான் சரி செய்யணும்!' என வேண்டினாள்.

சொந்தங்கள் அதிகம் இல்லாத திருமணம். பூர்ணிமா தலை நிமிரவே இல்லை. மணமகன் வீட்டு சொந்தமான தன் குடும்பத்தையும் அவள் கண்டுக் கொள்ளவில்லை. பாலா தாலியை கட்டி அவளின் நெற்றியில் குங்குமம் வைத்தான்.

அம்மி மிதிக்கையில் அம்மாவின் கண்களில் கண்ணீரை வெறித்தபடி நின்றிருந்தாள் பூர்ணிமா. அம்மாவின் அழுகை அவளை உடைத்தது. அம்மா அந்த வீடு வர மாட்டேன் என்று தெளிவாக சொல்லி விட்டாள். அம்மாவை விட்டுவிட்டு தான் மட்டும் அனாதையாக இருக்க போகிறோம் என்ற எண்ணம் அவளின் விழிகளிலும் கண்ணீராக சேர்ந்தது. பாலா மெட்டி அணிவித்தான். பூர்ணிமாவின் பார்வை அம்மாவின் முகத்தை விட்டு விலகவில்லை. ஆனால் வலது பாதத்தின் விரலில் மெட்டி அணிவித்தவன் மருதாணி வைத்த காலின் மத்தியில் முத்தமிடவும் திகைத்து விட்டாள் பூர்ணிமா. இதயம் கனத்து போனது போல துடித்தது.

குனிந்துப் பார்த்தாள். ஒற்றை கால்‌ மண்டியிட்டு இருந்தவனின் கழுத்தில் இருந்த மாலை தரையில் தவழ்ந்துக் கொண்டிருந்தது. அவளின் பாதத்திலிருந்து பார்வையை எடுத்தவன் நிமிர்ந்துப் பார்த்தான். அவனின் கரம் அவளின் கொலுசை வருடிக் கொண்டிருந்தது.

பூர்ணிமாவுக்கு ஏனோ பயமாக இருந்தது. புன்னகைத்தான். அழகான வெள்ளை புன்னகை. அதுவும் பயத்தைதான் தந்தது. அன்று தன்னை மிரட்டியவன் இப்போது இயல்பாய் புன்னகைப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பூர்ணிமாவின் விழிகளின் கீழ் இமையோடு ஒட்டிக் கொண்டிருந்த கண்ணீர் இமைகளை தாண்டி வழிந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN