தேவதை 31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"சக்ரவர்த்தினிக்கு பாதுகாப்பா?" ஆதியின் உதடுகள் தானாய் முணுமுணுத்தது.

கவி அவளை திரும்பிப் பார்த்தான்.

"நிச்சயம் தேவை ஆதி. ஏன்னா நீ மிகவும் பலவீனமான அன்பின் தேவ வம்சத்தை சேர்ந்தவள்!" என்றான்.

ஆதிக்கு கொஞ்சமாக வலித்தது. ஆனால் அவன் சொல்லில் இருந்த உண்மை அவளை வாயடைக்க வைத்தது.

வித்யநயனும் இயனியும் அந்த சத்திய தேவ உலகத்தின் மறு பக்கத்தில் இருந்தார்கள்.

"இப்படியொரு திருப்பத்தை நான் எதிர்ப்பார்க்கல!" என்றான் இயனி.

"நானும்.. இனி கவி அதிக பலமுள்ளவனா மாறிடுவான். அவன் உலகமும் அழியாது. அவனை பழி வாங்கவும் நம்மால முடியாது!" என்றபடியே சென்று பனி திட்டு ஒன்றின் மீது ஏறி அமர்ந்தான் வித்யநயன்.

இயனி பனி தரையை உதைத்தான்.

"ஏதாவது செய்யணும்!" என்றான்.

"ஆமா.. கூட இருந்து குழி வெட்டணும். ஆதியே அவனுக்கு எதிரியாகணும். அவளால மட்டும்தான் அவனை அழிக்க முடியும்ன்னு எனக்குத் தோணுது!" என்ற வித்யநயனை ஆச்சரியத்தோடு பார்த்த இயனி அருகில் வந்து அவனை அணைத்துக் கொண்டான்.

"சிறந்த யோசனை தந்துள்ளாய்.. ஆதியை மடக்கினால் போதும். நமது திட்டம் வெற்றி. இந்த சத்திய தேவ உலகம் மட்டுமல்ல இந்த மொத்த பிரபஞ்சத்தையும் நம்மால வளைக்க முடியும். ஏன்னா அவ கடைசி அன்பின் தேவதை. கடவுளை விடவும் பொக்கிஷமானவள் அவ!"

வித்யநயன் ஆமென்று தலையசைத்தான்.

தன் மரத்தின் அருகே ஒரு பனிக்கோட்டையை எழுப்பினான் கவி.

"இனி நீ இதில் தங்கிக் கொள்ளலாம்!" என்றான்.

"மீண்டும் அடைத்து வைக்க போறிங்களா?"

இல்லையென தலையசைத்தவன் "நீ இந்த உலகின் சக்ரவர்த்தினி. உன்னை ஏன் அடைத்து வைக்க போகிறேன்?" எனக் கேட்டான்.

அவனின் மேனியோடும் இதய வடிவிலான வெள்ளை கோடுகளை பார்த்தாள் ஆதி. அவளை மணம் முடித்ததற்கான அடையாளம் அது.

கவி தன் கையை பார்த்தான்‌.

"என் இணை நீ!" என்றான் அந்த கோடுகளைப் பார்த்தபடி.

ஆதி ஆமென தலையசைத்தாள்.

"என்னை உடைக்க மாட்டிங்கன்னு நம்புறேன்!" சிறுகுரலில் முனகினாள்.

கவி அவளின் முகத்தை வெறித்தான்.

"நீ என் வழியில் குறுக்கே வராமல் இருந்தால் உன்னை உடைக்க வேண்டிய அவசியம் எனக்கு வராது ஆதி!" என்றான். அவள் அப்பாவியாய் நிமிர்ந்துப் பார்த்தாள். அவன் அங்கிருந்து சென்றான்.

ஆதி தன் பனி மாளிகையின் உள்ளே நடந்தாள். எங்கும் கண்ணாடி போல இருந்தது சுவர்கள். சுவர்களின் மீது பனிப் பூக்களை தூவி விட்டது போல அலங்காரமாக இருந்தது. ஆதிக்கு பிடித்திருந்தது. மகிழ்ச்சியோடு சுவற்றை வருடினாள்.

கவி தன் இதயத்தின் மீது கையை வைத்தான். அவளின் மகிழ்ச்சியை அவனால் உணர முடிந்தது. அவள் ஒரு மடங்காக உணர்ந்த மகிழ்ச்சியை நூறு மடங்காக உணர்ந்தான். பிடித்திருந்தது. மகிழ்ந்திருக்க யாருக்குதான் பிடிக்காது?

நாட்கள் சில ஓடி விட்டது. ஆதி தனது பழைய தோழிகளோடு பழக ஆரம்பித்து விட்டாள்.‌ கவியை கண்டுக் கொள்ளவில்லை. அவன் மீண்டும் தனது பயிற்சி களத்தை புதுப்பித்தான். மக்கள் மீண்டும் கத்தியை தேடி எடுத்தனர். அனைவரும் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தனர்.

ஆதி தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருந்தாள். அந்த மகிழ்ச்சி கவியின் இதயம் சேர்ந்து அந்த உலகத்தின் ஒவ்வொருத்தருக்கும் போய் சேர்ந்தது. ஆதியால் சத்திய தேவ உலகம் புது பரிணாமம் அடைந்து விட்டிருந்தது.

இதற்கு முன்பும் அன்பின் தேவர்களோ தேவதைகளோ இந்த உலக மக்களோடு மணம் புரிந்து இணைந்துள்ளார்கள். ஆனால் சக்ரவர்த்தினியாய் ஒருவள் வந்தது இதுவே முதல் முறை.

மகிழ்ச்சியை உணர்ந்த அனைவருமே ஆதியை நேசித்தார்கள். கவிக்குமே கூட இந்த யோசனை முன்னேயே வராமல் போனதற்காக வருத்தம் இருந்தது.

உலகம் பழைய நிலைக்கு திரும்பிய பிறகு புவிக்கு கிளம்பினான் கவி. ஆதியிடம் சொல்லவில்லை அவன்.

அவன் வந்தபோது மனிதர்கள் அனைவரும் மிருக வேட்டையிலும் போர் பயிற்சியிலும் ஈடுப்பட்டு இருந்தார்கள். கவிக்கு இவர்களை பிடித்திருந்தது.

"தந்தையே.. எங்களை விட்டு எங்கே சென்றீர்கள்? தாயார் எங்கோ?" என கேட்டனர் அனைவரும்.

கவி அவர்களை ஆர தழுவிக் கொண்டான்.

"அவள் முக்கிய வேலையாக சென்றுள்ளாள். நானும் கிளம்ப வேண்டி உள்ளது பிள்ளைகளே!" என்றான்.

மனிதர்கள் அனைவரும் மனம் வாடிப் போனார்கள்.

"ஆனால் அதற்கு பதிலாக நான் உங்களுக்கு சிறந்ததொரு விசயத்தை கற்று தர வந்திருக்கிறேன்!" என்றவனை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.

கவி தனது கையில் இருந்த சுருளை விரித்தான். பனி மிருகத்தின் தோலால் செய்யப்பட்ட வரைப்படம் அது.

"இது இந்த பிரபஞ்சத்தின் வரைப்படம். இதில் நான் புள்ளியிட்ட கிரகங்கள் அனைத்தும் அந்தந்த அண்ட மனிதர்கள் வாழும் கிரகங்கள். உங்களால் இவர்கள் அனைவரையும் வெல்ல முடியும். உங்களின் ஆகாய ஊர்திகளை நான் இயக்கி தருகிறேன். நீங்கள் இனி சுதந்திர பறவைகளென இந்த பிரபஞ்சம் முழுக்க சுற்றி வரலாம். ஆதி கவியின் பிள்ளைகள் என்று பெருமையோடு சொல்லுங்கள். உங்களின் பாசத்தை வைத்து அனைவரையும் அடிமைபடுத்துங்கள். உங்களின் வீரத்தை வைத்து அவர்களை கொல்லுங்கள். உங்களை தவிர வேறு யாரும் உயர்ந்தவர்களாக இருக்க கூடாது!" என்றான்.

மனிதர்கள் சந்தோச கூச்சலோடு ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.

"எங்கும் தோற்காதீர்கள் பிள்ளைகளே!" என்றவன் அவர்களின் ஆகாய ஊர்திகளை மேலும் உறுதியாக்கினான். அவர்கள் தங்களின் பசி தாகத்தை எப்படி போக்கிக் கொள்வது என்பது பற்றி சொல்லி தந்தான். அதன்படி விலங்குகள் பல வேட்டையாடப்பட்டு பனியில் உறைய வைக்கப்பட்டது‌.

அவர்கள் அனைவரையும் பிரபஞ்ச வெளியில் அனுப்பி வைத்தான் ஆதி. அவர்கள் சிரித்தபடி புறப்பட்டார்கள். பால்வெளி அண்டத்தின் கடவுள்கள் உதட்டை பிதுக்கியபடி ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

"நாம் தனிமை விரும்பி!" என்றாள் ஃபயர்.

"ஆனால் நம் குழந்தைகளுக்கு இதுதான் பிடித்திருக்கிறது என்றால் அப்படியே இருக்கட்டுமே!" என்றாள்.

அக்வா இலை ஒன்றில் உருவம் வரைந்து ஹார்டிடம் நீட்டினார்.

ஃபயரின் வரைபடம் அதில் இருந்தது.

"இது எதற்கு?" எனக் கேட்டார்.

"எதுவும் இல்லை. வெறும் கலை!" என்ற அக்வா அதை எறிந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

பிரபஞ்ச வெளியே கண்டு ஆச்சரியப்பட்டார்கள் மனிதர்கள். அவர்களால் பிரபஞ்சத்தின் இடையோடும் வாயுக்களை வைத்து சுவாசிக்க முடிந்தது. அவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை. அவர்களுக்கு அப்போது மரணமும் இல்லை.

பிரபஞ்சத்தின் மனிதர்களை வேட்டையாட இவர்கள் கிளம்பி சென்ற அதே நேரத்தில் கவி தேவ உலகங்களை வேட்டையாட திட்டமிட்டான்.

எங்கும் சத்திய தேவர்களின் புகழும் வீரமும் தோற்கவே கூடாது என்று நினைத்தான்.

கவி சத்திய தேவ உலகத்திற்கு வந்தபோது அவனை தேடி வந்தாள் ஆதி.

"எங்கே சென்றிருந்தீர்கள் ஏந்தலே?" எனக் கேட்டாள்.

புன்னகைத்தவன் "நம் பிள்ளைகளுக்கு நல்புத்தி சொல்லி அவர்களை நல்வழி படுத்திவிட்டு வந்தேன். இனி அவர்கள் உயிர்வதை செய்ய மாட்டார்கள்!" என்றான்.

ஆதி மகிழ்ச்சியோடு அவனை அணைத்தாள்.

அவளை விலக்கி நிறுத்தியவன் "நீங்க சந்தோசமா இருந்தா அதுவே போதும்!" என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN