பௌர்ணமி 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பகல் முழுதாய் விடிந்திருக்கவில்லை இன்னும்.

கோவிலின் விளக்கொளியில் செண்பகமும் மரிக்கொழுந்தும் புன்னகை முகத்தோடு நின்றிருந்தார்கள்.

முல்லை மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத சோகத்தோடு ஓரமாக நின்றிருந்தாள்.

தவறு செய்வது போலிருந்தது அவளுக்கு. குளிருக்கு பயந்து நெருப்பில் குதிப்பது போலிருந்தது.

பாலாவின் மீது அவளுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. அவனின் நாக்கிலிருந்து வெளிவரும் அனைத்து வார்த்தைகளையும் வெறுத்தாள். நாக பாம்பின் விஷம் அவனின் வார்த்தைகளில் உள்ளதை உணர்ந்தாள்.

மகள் தன்னை தவறாக எண்ணி வெறுத்து விடுவாளோ என்ற பயத்தில் மகளுக்கு ராட்சசனை கட்டி வைப்பது போலிருந்தது. மனதுக்குள் வெந்து விட்டாள். நொந்து செத்துக் கொண்டிருந்தாள்.

பூர்ணிமாவின் அப்பாவையும் இந்த திருமணத்திற்கு அழைத்து விட்டிருப்பார்களோ என்று பயந்துக் கொண்டிருந்தாள். ஆனால் நல்லவேளையாக பாலா இந்த ஒரு விசயத்தில் நல்லவனாக இருந்தான். அப்படிதான் முல்லை எண்ணினாள்.

கோவில் ஒன்றில் மிக எளிமையாக நடந்தது திருமணம். இவர்கள் வருவதற்காக அதிகாலை நேரத்திலேயே காரை அனுப்பி இருந்தான் பாலா.

கோவிலில் அண்ணனும் அண்ணியும் மட்டும் இருப்பது கண்டு நிம்மதியடைந்தாள்.

திருமணம் முடிந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்த பிறகே பூமாறன் கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தான்.

கோவிலுக்குள் நுழைந்தவன் அண்ணனை கண்டுவிட்டு கோவிலின் நடைக்குள் நுழைந்தான். ஓரமாக நின்றிருந்த முல்லையை சில நொடிகள் பார்த்தான். அடையாளம் பிடிப்பட்டு போனதும் அண்ணனை விட்டுவிட்டு அத்தையிடம் சென்றான்.

"அத்தை!"

முல்லை விழிகளை துடைத்துக் கொண்டு இவன் புறம் திரும்பினாள். அடையாளம் தெரிந்தது.

"மாறா!"

"அத்தை.. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்.. என்னை கூட நீங்க மறந்துட்டிங்க!" என்றபடி அத்தையை கட்டிக் கொண்டான்.

முல்லைக்கு மீண்டும் அழுகை வந்தது.

"சாரிடா!" என்றாள்.

"நீங்க எங்கே இருக்கிங்களோன்னு நான் பயந்துட்டே இருந்தேன்‌. பூரணியோடு சேர்ந்து செத்திருப்பிங்களோன்னு கூட நினைச்சிட்டேன்!" என்றவனை அணைத்துக் கொண்டவள் "நான் என்ன அவ்வளவு கோழையா மாறா?" எனக் கேட்டாள்.

பூமாறன் மறுப்பாக தலையசைத்தான்.

"இங்கே வந்ததுல இருந்து உன்னை தேடிட்டு இருந்தேன்டா!" என்றவளை விட்டு விலகியவன் "நிஜமாவா அத்தை?" என ஆவலாய் கேட்டான்.

ஆமென தலையசைத்தவள் அவனின் கன்னத்தை வருடினாள். பாலாவை விட இவன் அழகாக இருந்தான். பாலாவை விட குணமும் நல்லதாக உடையவன் என்று முல்லைக்கு தெரியும். விதியை என்னவென்று சொல்வதென்றுதான் அவளுக்கு தெரியவில்லை.

மணமக்களை திரும்பிப் பார்த்தவன் "பூரணி வளர்ந்துட்டா அத்தை!" என்றான்.

"வருசங்கள் ஓடிட்டுச்சே.! வளராமலா இருப்பா?" எனக் கேட்ட அத்தையின் கையை பற்றினான்.

"தேங்க்ஸ் அத்தை!" என்றான்.

கேள்வியாக புருவம் உயர்த்தினாள் முல்லை.

"பூரணியும் நீங்களும் வீட்டுக்கு வரதுக்கு.!"

முல்லை இல்லையென தலையசைத்தாள்.

"நான் வரல. அவ மட்டும்தான் வரா!" என்று பூர்ணிமாவை நோக்கி கையை காட்டினாள்.

"ஏன் அத்தை இப்படி? நீங்க வரலன்னா அப்புறம் உங்களுக்கு பிரியும் சொத்தை யார் பார்த்துப்பாங்க?" எனக் கேட்டவனை குழப்பமாக பார்த்தவள் "என்ன சொத்து?" எனக் கேட்டாள்.

பூமாறன் குழப்பத்தோடு அண்ணனை பார்த்தான். அவன் பூர்ணிமாவோடு சேர்ந்து கடவுளை வணங்கிக் கொண்டிருந்தான்.

"சொத்து பிரிக்க போறோம் அத்தை. அதுக்கு உங்ககிட்டயும் பூரணிக்கிட்டயும் கையெழுத்து வாங்கதான் உங்க இரண்டு பேரையும் தேடினான் அண்ணன். அவன் இதை சொல்லலையா?"

முல்லை இடம் வலமாக தலையசைத்தபடி பாலாவின் புறம் பார்த்தாள்.

"சொத்துக்காக பூரணியை கட்டிக்கிட்டானா இவன்?" இயல்பாய் எழுந்தது கேள்வி.

"ச்சே ச்சே.. அப்படி இல்ல அத்தை. அவன் சம்பாதியமே அவனுக்கு போதும். ஆத்திர அவசரத்துக்கு பைசா தேவைப்படுது. அதுக்குதான் சொத்து பிரிக்கலாம்ன்னு முயற்சி பண்ணோம்!" என்றவனின் முகம் பார்த்தவள் "ஆனா அவன் இதை பத்தி எதுவுமே சொல்லல மாறா! பூரணியை கல்யாணம் பண்ணியே தீருவேன்னு ஒத்தை கால்ல நின்னான். பூரணியோட அப்பாவை கூட்டி வருவேன்னு கூட மிரட்டினான். நான் அதனாலதான் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன். மத்தபடி இவனுக்கு சொத்துதான் தேவைன்னா நானும் பூரணியும் கையெழுத்து போட்டிருப்போமே!" என்றாள் குழப்பமும் சந்தேகமுமாக.

தலை வலித்தது. நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டாள்.

அத்தை சொன்னது கேட்டு பூமாறனுக்குதான் குழப்பம் மிகுந்தது.

"பூரணியோட அப்பாவுக்கு நீங்க ஏன் பயப்படுறிங்க அத்தை?" எனக் கேட்டான் சந்தேகமாக.

முல்லை தலையை பிடித்தபடி நிமிர்ந்தாள். பூமாறனின் கேள்வி எதற்காய் என்று அவளுக்கு புரியவில்லை. யோசித்தாள். பின்னர் விழிகளை சிமிட்டியவள் "ம்ம்ம்.. பூரணிக்கு எந்த உண்மையும் தெரியாது!" என்றாள்.

பூமாறன் அதிர்ச்சியோடு பூரணியின் திசை பார்த்தான்.

"அத்தை நீங்க என்ன பைத்தியமா? அவக்கிட்ட எதையும் சொல்லாம ஏன் இந்த கல்யாணம்?" என்றான் கோபமாக.

முல்லை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தாள். கோவில் பிரகாரத்தின் பின்னால் வந்தவள் "என்னால சொல்ல முடியல மாறா.. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. அவ சந்தோசம் கெட்டுப் போறதுல எனக்கு விருப்பம் இல்ல!" என்றாள்.

"ஆனா அவளுக்கு உண்மையை தெரிஞ்சிக்க உரிமை உண்டு. சரி.. உங்க பாயிண்டுக்கே வரேன்‌. அவளுக்கு உண்மை தெரிய கூடாதுன்னு நினைச்சிங்க சரி. அப்புறம் ஏன் அண்ணனுக்கு கட்டி வைக்கிறிங்க? இப்ப அவளுக்கு உண்மை தெரிஞ்சிடும்தானே?"

"இல்ல.. அவன் எந்த உண்மையையும் சொல்ல மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி தந்திருக்கான்!" என்ற அத்தையை பரிதாபமாக பார்த்தவன் "ஓ.. அப்படின்னா பூரணியோட அப்பா அந்த வீட்டுலதான் இருக்காருங்கற விசயத்தை அவன் உங்ககிட்ட சொல்லல.. சரிதானே?" எனக் கேட்டான்.

அவன் சொன்னதை மனதில் பதிய வைத்துக் கொள்ளவே சில நொடிகள் பிடித்தது முல்லைக்கு. விசயம் புரிந்ததும் கோபமும் கண்ணீரும் சரிசமமாக வந்தது.

'ஏமாத்திட்டான். பாலா நல்லா உன்னை ஏமாத்திட்டான். அந்த குரங்கு பையன்கிட்ட ஏமாந்துட்டியே முல்லை!' என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.

குளிருக்கு பயந்து நெருப்பில் பாதி குதித்தவள் அந்த குளிர் எந்த நெருப்பிலுமே விட்டுச் செல்லாது என்பதைதான் புரிந்துக் கொள்ளாமல் போய் விட்டாள்.

கண்ணீர் கன்னத்தை நனைத்தது. 'பூரணிக்கு எல்லா விசயமும் இனி தெரிஞ்சிடும். அவ என்னை நம்ப போறது கிடையாது. முன்னாடியே சொல்லி இருந்தா கூட என்னோட உண்மைகளை அவளுக்கு புரிய வச்சிருக்கலாம். ஆனா இனி எதுவும் நடக்க போறது கிடையாது. அவளும் என்னை தப்பா நினைப்பா.. என் அம்மா அப்பாவை போல, என் அண்ணன் அண்ணியை போல, பாலா என்னை நம்பாம போன மாதிரி அவளும் என்னை நம்ப மாட்டா.!'

முல்லையின் தோளை பற்றினான் பூமாறன்.

"அத்தை.. நீங்க பயப்படாதிங்க.. அவளுக்கு அவங்க அப்பாவை ஞாபகத்துல இருக்காதுன்னுதான் நினைக்கிறேன். அவர் பைத்தியமாகிட்டாரு. யார் கூடவும் பேசுறது கிடையாது. நம்ம வீட்டுல வேலைக்காரனா இருக்காரு. அண்ணனை நம்பிதான் ஆகணும் போல. நீங்க டைம் கிடைக்கும்போது பூரணிக்கிட்ட உண்மையை சொல்லிடுங்க!" என்றான்.

இந்த பொய் சமாதானம் யாருக்கு என்று பூமாறனுக்கே தெரியவில்லை. பூர்ணிமாவுக்கு தன் தந்தையை நினைவிருக்காதுதான். ஆனால் அவர் உண்மையை சொல்லி விட்டால் என்ன செய்வது என்று பயந்தான். அவனுக்கு முல்லையை நினைத்து பரிதாபமாக இருந்தது. அத்தையின் வாழ்க்கை முழுக்க விதி விளையாடுகிறதே என்று கவலைக் கொண்டான்.

அருகே இருந்த சிறு கல் திண்ணையில் அமர்ந்தாள் முல்லை. மூச்சு விட சிரமமாக இருந்தது‌. கண்ணீர் நிற்கவேயில்லை.

'நீ இவ்வளவு மோசமான பொம்பளையா? தயவு செஞ்சி என்னை விட்டு போயிடு!' பூர்ணிமா தன்னை திட்டுவது போன்ற கற்பனை முல்லையின் மனதில் படம் போல ஓடியது.

"அத்தை அழாதிங்க.. பூரணி பார்த்தா இப்பவே பிரச்சனை ஆரம்பம் ஆகிடும்!" என்றான் பூமாறன்.

"என்னை கொஞ்சம் தனியா விடு மாறா.. ப்ளீஸ்!"

பூமாறன் அத்தையை கவலையாக பார்த்தான். அண்ணனின் மீது கோபமாக வந்தது. உண்மையை கூட சொல்லாமல் எதற்காக பூர்ணிமாவை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆத்திரமடைந்தான்.

தயங்கி நின்றவன் அத்தையின் கண்ணீரை காண முடியாமல் அங்கிருந்து கிளம்பினான். அருகில் இருந்த கடை ஒன்றிற்கு சென்று தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கினான். அத்தைக்கு தேவைப்படும் என்று எண்ணினான்.

சிலந்தி வலைக்கு பயந்து கடைசியில் மீன்வலையில் மாட்டிக் கொண்டது நன்றாக புரிந்தது முல்லைக்கு.‌ அழுதழுது சலித்துப் போனாள்.

பூர்ணிமா தன்னை தேடுவாள் என்ற நினைவு வந்தது. எழுந்து நின்றாள். கோயிலை நோக்கி நடக்க இருந்தவள் தன் முன் யாரோ வந்து நிற்பது கண்டு முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

கோபு நின்றிருந்தார். இவளை வெறித்துப் பார்த்தார்.

ஏற்கனவே உள்ள சங்கடம் போதாது என்று இவனையும் இன்று சந்திக்க வேண்டுமா என்று சிறு சலிப்பு தோன்றியது முல்லைக்கு. ஆனாலும் கூட கண்கள் கலங்குவதை தடுக்க முடியவில்லை அவளால்.

"நல்லாருக்கியா?" எனக் கேட்டார்.

"ம்.!" என்றவள் "இங்கே என்ன பண்ற?" எனக் கேட்டாள் கரகரத்த குரலை வெளிக்காட்டாமல்

"கல்யாணத்துக்கு வந்தேன்!" என்றவரை நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள் முல்லை.

"உன் சித்தப்பா பொண்ணு வாடாமல்லியைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்!" என்றவரை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

"உலகத்துல உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா கோபு? நம்மை பத்தி அவளுக்கு.."

"அவளுக்கு எல்லாம் தெரியும் கொடி! நான் கல்யாணம் செய்யும் முன்னாடியே சொல்லிட்டேன்!"

முல்லையின் கண்ணீர் வழிந்தது.

"ஏ.. ஏன் கோபு? இவங்க எல்லோரும் என்னை நம்பாம துரோகம் செஞ்சாங்க. ஆனா நீயும் எனக்கு துரோகம் செஞ்சிட்டியே!" என்றவளுக்கு அழுகை பொங்கியது.

கோபு முறைத்தார்.

"துரோகம் நான் செய்யல.!"

"இனி நான் எப்படி மல்லியை பார்ப்பேன்? அவ என்னைப் பத்தி என்ன நினைப்பா?" என்றவளின் தோளை பற்றினார் அவர். முல்லை பின்னால் நகர்ந்துக் கொண்டாள்.

"உனக்கு எப்பவும் அடுத்தவங்க நினைப்பு பத்தி மட்டும்தான் கவலை கொடி. ஒருநாளாவது நீ உன்னை பத்தி நினைச்சிருந்தா இன்னைக்கு நம்ம நிலமை இப்படி ஆகியிருக்காது.!" சிறு குரலில் கர்ஜித்தார்.

ஆனால் முல்லைக்கு அவரின் பேச்சு காதில் ஏறவில்லை. சுற்றி சுற்றி எதிரிகளை மட்டுமே உருவாக்கி வைத்துள்ளோம் என்ற எண்ணம் நெஞ்சை பிசைந்தது.

மயக்கம் வருவது போலிருந்தது அவளுக்கு. தலையை பிடித்தபடி தள்ளாடியவள் மயங்குவது கண்டு அவளை பிடிக்க முயன்றார் கோபு. ஆனால் அதற்குள் பூமாறன் ஓடி வந்து பிடித்துக் கொண்டான்.

கோபுவை பார்த்தான்.

"நீங்க மட்டும்தான் பாக்கியா? ஏற்கனவே அத்தை நொந்துப் போயிருக்காங்க! எங்க வீட்டுல இருப்பவங்க யாராவது வந்து என்னன்னு கேட்கும் முன்னாடி போயிடுங்க!" என்றான்.

கோபு முல்லையின் முகத்தைப் பார்த்தபடியே அங்கிருந்து கிளம்பினார்.

பூமாறன் மெள்ள தரையில் அமர்ந்தான். சுற்றிலும் பார்த்தான். மனித நடமாட்டம் இல்லை. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. திருமண நாளில் பூர்ணிமாவின் மனம் நோக வேண்டாம் என்று ஆசைப்பட்டான் அவன்.

அத்தையின் முகத்தில் தண்ணீரை தெளித்தான். அரையாய் விழித்தவளுக்கு தண்ணீரை குடிக்க தந்தான்.

"அத்தை.. தைரியமா இருங்க. உங்களால எல்லாமே முடியும். யாருக்கும் பயப்படாதிங்க ப்ளீஸ். நீங்க நல்லவங்கன்னு எனக்கு தெரியும். நம்பாம போறவங்களை தேடி போய் கால்ல விழாதிங்க. அது பூரணியாவே இருந்தாலும் கூட கெஞ்சாதிங்க. உங்க மதிப்பு உங்க மனசுக்கு தெரியும்!" என்றான்.

முல்லை மெதுவாக எழுந்து நின்றாள்.

"எல்லோருமே எனக்கு எதிரியாவே இருக்காங்க.. ஏன் மாறா?" எனக் கேட்டாள்.

"நான் இல்ல!" என்றவன் தண்ணீர் பாட்டிலுக்கு மூடியை போட்டான்.

"உங்களுக்கு ஒருத்தங்க தொல்லை தந்தா எதிர்த்து நில்லுங்க.‌ இல்லன்னா முன்ன மாதிரியே ஓடிக் கூட போங்க. ஆனா பயப்படாதிங்க!" என்றான்.

தைரிய வார்த்தைகள்தான் தந்தான். ஆனால் மூளையில் ஏற மறுத்ததே.

தூரத்தில் பாலாவும் பூர்ணிமாவும் வந்துக் கொண்டிருந்தார்கள். கோவிலை சுற்றுகிறார்கள் என்பதை புரிந்துக் கொண்ட முல்லை அவசரமாக முகத்தை முந்தானையால் துடைத்தாள்.

"கோவிலை விட்டு வெளியே போகும்வரை என் பக்கத்துலயே இரு மாறா!" என்றாள் முல்லை. அவளின் கையை பற்றிக் கொண்டான் அவன்.

பூர்ணிமா அம்மாவை கண்டு புன்னகைத்தாள். முல்லையும் புன்னகைத்தாள். தன்னை வெறித்த பாலாவை அவள் கண்டுக் கொள்ளவேயில்லை.

அருகே வந்ததும் அம்மாவை நோக்கி தனது மறுகையை நீட்டினாள் பூர்ணிமா. முல்லை தயங்கினாள். மாறன் அத்தையை அவளருகே இழுத்துச் சென்றான். பூர்ணிமா பூமாறனை யோசனையோடு பார்த்தாள்.

இந்த இரண்டு வாரத்தில் பாலா பலமுறை சென்று பூர்ணிமாவை பார்த்துள்ளான். அவன் செல்லாத நேரத்தில் கூட போன் செய்து பேசுவான். 'இவன் ஏன் இவ்வளவு அறுவை போடுறான்?' என்று பூர்ணிமா கூட சில சமயங்களில் நினைத்துள்ளாள். அப்போது தன் தம்பியை பற்றி சொல்லி உள்ளான் பாலா. ஆனால் இப்போதுதான் நேரில் பார்த்தாள் பூர்ணிமா.

அவனை தனக்கு நினைவிருப்பது போலிருந்தது அவளுக்கு. 'பூரணி குட்டி!' என்றபடி அவன் தன்னை தூக்கியது போல் நிழலாக நினைவிருந்தது.

பூர்ணிமாவை பார்த்து புன்னகைத்தான் பூமாறன். பூர்ணிமாவின் இதழ்கள் விரிந்தது.

கோவிலை சுற்றி வந்த பிறகு செண்பகம் மரிக்கொழுந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள் மணமக்கள்.

பூர்ணிமா தன் அம்மாவிடம் வந்தாள். அம்மாவின் காலில் விழுந்தாள். ஆனால் பாலா விழவில்லை. முல்லை மகளை ஆசிர்வதித்தாள். பூர்ணிமா எழுந்து நின்று பாலாவை திரும்பிப் பார்த்தாள். உணர்ச்சிகள் இன்றி நின்றிருந்தான். அவனின் மூக்கை உடைக்க வேண்டும் போல கை பரபரத்தது அவளுக்கு.

தன்னை முறைத்தவளின் கையை பற்றி அருகே இழுத்தவன் "கோபப்படாத பூர்ணி. கல்யாண நாள் அன்னைக்கு சந்தோசமா இரு!" என்றான்.

ஆனாலும் கூட அவளால் அவனை வெறிக்காமல் இருக்க முடியவில்லை. "உனக்கு திமிர் அதிகம் தெரியுமா?" என சிறு குரலில் கேட்டாள்.

"என் திமிரை பத்தி நீ இன்னும் பார்க்கல பூர்ணி. அதனால எச்சரிக்கையாவே இரு!" என்றான் அவனும் சிறு குரலில்.

"மீ டூ!" என்று பற்களை அரைத்தவளின் முகத்தை வெறித்துப் பார்த்தவன் "ரொம்ப கோபப்படாத. எனக்கு கண்டதும் தோணுது!" என்றான்.

அவளுக்கு இன்னும்தான் கோபம் வந்தது.

"பக்கத்துல ஹோட்டல் இருக்கு. சாப்பிட்டு வீட்டுக்கு போலாமா? இல்ல வீட்டுல போய் சாப்பிட்டுக்கலாமா?" பூமாறன் தனது சந்தேகத்தை கேட்டான்.

பாலா கை கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழு கூட ஆகவில்லை இன்னும்.

"பசிக்குதா உனக்கு? இன்னும் டைம் இருக்கு!" என்றான்.

"சரி கொஞ்ச நேரம் கோவில்லயாவது உட்காரலாம்!" என்ற பூமாறன் அத்தையை இழுத்துக் கொண்டு சென்றான்.

முல்லை தூண் ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்தாள். அவளின் அருகே அமர்ந்த பூமாறன் "பூரணி நல்ல பொண்ணு அத்தை.. உங்களை தப்பா நினைக்க மாட்டா!" என்றான்.

இந்த சில நிமிடங்களில் இதை மட்டும் பத்து முறை சொல்லி இருப்பான். முல்லை அவனின் தலையை வருடி விட்டாள்.

பாலா தனது போன் ஒலிப்பதை கண்டு அதை எடுத்துக் கொண்டு விலகி போனான்.

பூர்ணிமா அம்மாவின் அருகே வந்தாள். திண்ணையின் கீழே காலை தொங்க விட்டபடி தூணின் அருகே அமர்ந்தாள். அம்மாவின் தோளில் சாய்ந்தாள்.

"நிஜமா நான் அந்த வீட்டுக்கு போகணுமா அம்மா?" எனக் கேட்டாள்.

பூமாறன் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்.

"பூரணி.. நீ வேற ஏதாவது பிளான் வச்சிருக்கியா?" எனக் கேட்டான்.

பூர்ணிமா அவனைப் பார்த்து சிரித்தாள். இல்லையென தலையசைத்தாள்.

"சும்மா கேட்டேன். அம்மா என்னை விட்டு பிரிஞ்சி இருந்ததே இல்ல. காலையிலிருந்து ரொம்ப சோகமா இருக்காங்க!" என்றாள்.

"அத்தை ஸ்ட்ராங்.. அவங்க சமாளிப்பாங்க!" என்றவனின் தோளில் தட்டினாள் முல்லை.

பூர்ணிமா கன்னத்தில் கை பதித்தபடி பூமாறனை பார்த்தாள். பூமாறனுக்கு அமர்ந்திருப்பதே சிரமமாக இருந்தது.

"ஏன் இப்படி பார்க்கற?" எனக் கேட்டான்.

"கொஞ்சம் மிஸ்!" என்றவளை குழப்பமாக பார்த்தான்.

"பாலாவை விட நீங்க க்யூட். உங்களை முன்னாடியே பார்த்திருந்தா அவருக்கு பதிலா நான் உங்களை கல்யாணம் பண்ணி இருப்பேன். அவரை விட உங்ககிட்ட நம்பிக்கையும், நட்பும் வருது..‌ முன்னையே பார்த்திருந்தா பார்த்த உடனே பத்திக்கிட்டு இருந்திருக்கலாம் இந்த லவ்வும் கூட.. நீங்க.." பூர்ணிமா மிச்சத்தை சொல்லும் முன் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டிருந்தாள் முல்லை.

பூர்ணிமா நம்பிக்கை இல்லாமல் அம்மாவை பார்த்தாள். முல்லை கோபத்தோடு எழுந்து நின்றாள். பூர்ணிமா சிறு பயத்தோடு எழுந்தாள். அம்மா இதுவரை திட்டியது கூட இல்லை. தனது பேச்சில் ரொம்பவும் தப்பு உள்ளதோ என்று குழம்பினாள்.

"உனக்கு ஒன்னே ஒன்னு சொல்றேன் கேளு பூரணி.. ஒருத்தனுக்கு ஒருத்தி. ஒருத்திக்கு ஒருத்தன். இதுதான் ஆண்டவன் விதிச்சது. கழுத்துல ஒருத்தன் கட்டிய தாலியை சுமந்துகிட்டு இன்னொருத்தன்கிட்ட இப்படி பேச உனக்கு எப்படி புத்தி வருது? உன்னை நான் நல்லபடியா வளர்த்தியதா நினைச்சேன் பூரணி. ஒரு நிமிசத்துல என்னை கொன்னுட்ட!" என்றாள்.

பூர்ணிமா கன்னத்தை பிடித்தபடி தரையை பார்த்தாள். விளையாட்டு போலதான் சொல்லி இருந்தாள். ஆனால் அம்மா அதற்காக இவ்வளவு கோபப்படுவாள் என்று நினைக்கவேயில்லை.

"விடுங்க அத்தை.. அவ ஏதோ காமெடியா சொல்லி இருக்கா!" என்ற பூமாறனை முறைத்தாள் முல்லை.

"காமெடி எல்லா விசயத்திலும் பேச கூடாது மாறா!" என்றாள்.

"சா.. சாரிம்மா!" தரை பார்த்துச் சொன்ன மகளின் முகம் பார்த்தாள். கண்ணீர் கன்னத்தில் ஓடிக் கொண்டிருந்தது. மகள் அழுது பார்த்திராத தாயுள்ளம் கலங்கியது. ஆனால் அவள் சொன்ன சொல் எந்த அளவுக்கு அபாயகரமானது என்று அறிந்திருந்தவளுக்கு இன்னமும் கூட மனதை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அம்மா இன்னும் தன்னை மன்னிக்கவில்லை என்பது புரிந்ததும் பூர்ணிமாவுக்கு கண்ணீர் அதிகரித்தது. சிறு விம்மல் ஒன்று அவளின் உதடு தாண்டிய வேளையில் அவளின் தோளை பற்றி அவளை பின்னால் திருப்பியது ஒரு கரம்.

பாலா நின்றிருந்தான். அவளின் அழுத முகத்தை கண்டவன் முல்லையை கோபத்தோடு பார்த்தான்.

"ஒழுக்கத்தை பத்தி நீங்க பேசாதிங்க. உங்ககிட்ட வளர்ந்த இவ வேற எப்படி இருப்பா? உங்களை போலதான் இருப்பா! ஆனா அதை நானே.." பாலா மேலும் பேசும் முன் அவனுக்கு ஒரு அறையை விட்டு விட்டாள் முல்லை. அவனை அறைந்ததில் கையிலிருந்த இரு கண்ணாடி வளையல்களும் உடைந்து கீழே விழுந்தது.

"பாலா.. என் கோபத்தை கிளறாதே! என்னை ஒழுக்கம் இல்லாதவன்னு சொல்ல உனக்கு எந்த உரிமையும் கிடையாது. என் பொண்ணு என்னை போலதான் இருப்பான்னு நீ நம்பினா பிறகு ஏன்டா இப்படி டார்ச்சர் பண்ணி அவளை கல்யாணம் செஞ்ச? நாங்க நிம்மதியாதானே இருந்தோம்?" என்றாள் பற்களை அரைத்தபடி.

"நான் ஏன் கல்யாணம் செய்ய கூடாது? இவ என் அத்தை பொண்ணு!" என்றவனிடம் இடம் வலமாக தலையசைத்தான் பூமாறன்.

பாலா கோபத்தில் தன் கையை இறுக்கினான்.

கோவிலின் இடது ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் நின்று பாம்பு புற்றை வணங்கிக் கொண்டிருந்த செண்பகம் முல்லை பாலாவை அறைவதை எதேச்சையாகதான் பார்த்தாள். அருகில் நின்றிருந்த கணவனிடம் விபரத்தைச் சொன்னாள்.

"உன் பையன் என்னை பிரஷர்ல சாகடிச்சிடுவான்!" என்றபடி கோவில் மண்டபத்தை நோக்கி நடந்தார் மரிக்கொழுந்து.

"அத்தை இதை விடுங்க ப்ளீஸ்.!" என்று முல்லையை தன்னருகே இழுத்தான் பூமாறன்.

"என்ன ஆச்சி?" என்றார் மரிக்கொழுந்து இவர்களின் அருகே வந்து.

"உங்க தங்கச்சி நம்ம வீட்டுக்கு வந்தாலும் சரி. வரலன்னாலும் சரி. இதுக்கு மேல நான் அவங்களை கூப்பிட மாட்டேன்.!" என்ற பாலா பூர்ணிமாவை தன்னோடு இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

பூர்ணிமா தன் தாயை பார்த்துக் கொண்டே நடந்தாள்.

அம்மா தன்னை நிமிர்ந்துப் பார்ப்பாள் என்று காத்திருந்தாள். ஆனால் முல்லை நிமிரவே இல்லை.

இருக்கையில் அவள் அமர்ந்ததும் காரை கிளப்பினான் பாலா.

"எதுக்கு இப்படி அழுது தொலையற?" எனக் கேட்டான் சற்று தூரம் சென்ற பிறகு.

"என் அம்மா என் மேல கோச்சிக்கிட்டாங்க. அழ மாட்டேனா நான்? உன்னை கல்யாணம்தானே பண்ணியிருக்கேன்? அழாம இருக்க, சிரிக்காம இருக்க அடிமை சாசனமா எழுதி தந்திருக்கேன்?" கோபத்தோடு கேட்டாள்.

அவளின் கோபம் கண்டு சிறிது சிரிப்பு வந்தது அவனுக்கு. ஆனால் அவள் பூமாறனிடம் சொன்னது நினைவிற்கு வரவும் தாடை இறுகியது.

"அவனை முன்னாடியே பார்த்திருந்தா அவனை கல்யாணம் பண்ணி இருப்பியா?" நக்கலாக கேட்டவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அம்மாவிற்கு பயந்தாள். ஆனால் இவனுக்கு ஏன் பயம் கொள்ள வேண்டும்?

"நீ நினைக்கறதை விடவும் நான் ரொம்ப கெட்டவன் பூர்ணி. உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் பரிசு இருக்கு. தவறான வார்த்தைகளை பேசி தண்டனைகளை பரிசா வாங்கிடாத!" என்றான்.

பூர்ணிமா சிரித்தாள்.

"எனக்கு உன் பரிசும் வேணாம். உன் தண்டனையும் வேணாம். இன்னும் சொல்ல போனா எனக்கு நீயே வேணாம்!" என்றவள் கார் சடன் பிரேக்கிட்டு நிற்கவும் தடுமாறி அவனைப் பார்த்தாள்.

"வார்த்தைகள்.. அதுதான் முக்கியம் பூர்ணி!" என்றான் அமைதியாக.

அவன் கோபப்படாமல் தன்மையாக பேசுவதே அவளுக்கு விந்தையாக இருந்தது.

"சின்ன பொண்ணு நீ. உனக்கு லைப்பை பத்தி எதுவும் தெரியல. நீ சொல்ற வார்த்தைகள் தரும் பின்விளைவும் புரியல. உனக்கு தெரியலையா.. பரவால்ல விடு. ஆனா தெரியாததை பேசாத. அதுவும் தைரியமா பேசாத!" என்றவன் அவளின் கழுத்தில் இருந்த மாலையை பார்த்தான்.

"மாலை அன்கம்பர்டபிளா இருந்தா கழட்டி வச்சிடு!" என்றான் புன்னகையோடு.

"மனுசனா நீ?"

சிரித்தான் பாலா.

"ஒரு நேரம் திட்டுற. ஒரு நேரம் அக்கறை காட்டுற மாதிரி நடிக்கற. கோவில்ல அத்தனை பேர் பார்த்திருக்க கால்ல.. கால்ல முத்தம் தர.!" என்றாள் எரிச்சலோடு.

காரை இயக்கியவன் "நீ ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தியே.. அதனாலதான் உன் மைன்டை டைவர்ட் பண்ண முத்தம் தந்தேன். அதுவும் இல்லாம எனக்கு முத்தம் தர எனக்கு உரிமை இல்லையா என்ன?" என கிண்டலாக கேட்டான்.

கார் நகர்ந்தது.

"உரிமை இருக்குதானே? அப்படின்னா சொல்லு.. என் அம்மா ஏன் வீட்டை விட்டு போனாங்கன்னு!" என்றவளை ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தவன் உடனே சாலைக்கு பார்வையை திருப்பிக் கொண்டான்.

'நான் எதையும் அவக்கிட்ட சொல்ல மாட்டேன். உங்களை போல அவளை நான் பொய்யாய் நேசிக்கல. அவளோட மனசு வாடும்படி எதையும் சொல்ல மாட்டேன்.!' தான் முல்லைக்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை நினைத்துப் பார்த்தான்.

"உன் அம்மாவுக்கு திமிர். அதனால போயிட்டாங்க.. மத்தபடி எனக்கும் எதுவும் தெரியாது.!" என்றவனை வெறித்தாள்.

பொய் சொல்கிறான் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.

"உனக்கு நிஜமாவே என்னை ஞாபகம் இல்லையா?" வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு கேட்டான் பாலா.

பூர்ணிமா சலிப்போடு இல்லையென தலையசைத்தாள்.

"ஓ.. உன் ரைட் சைட் தொடையில் ஒரு தழும்பு இருக்கும்.!" என்றவனை குழப்பமாக பார்த்தாள்.

"அந்த தழும்புக்கு காரணம் நான்தான்!" என்றவன் காரை விட்டு இறங்கினான்.

மூன்று தையல் போட்டதற்கான அடையாளம் கூட இன்னமும் இருக்கிறது. வடு இருக்கும் இடத்தை நினைத்துப் பார்த்தாள்.

இவளுக்கு கதவை திறந்து விட்டான்.

"இறங்கு!" என்றான்.

"அப்ப நான் குழந்தைதானே? மூணு தையல் போடும் அளவுக்கு எதுக்கு காயப்படுத்தி வச்ச? நீ என்ன சைக்கோவா?" எனக் கேட்டாள்.

அவளின் காலை பார்த்தான். சிவப்பு நிற பட்டு சேலையை தாண்டி தழும்பை பார்க்க முடியாமல் போனதற்காய் கொஞ்சம் வருந்தினான்.

"வீட்டு தோட்டத்துல நீயும் மாறனும் விளையாடும்போது பாம்பு ஒன்னு உன் தொடையில் ஏறி கடிச்சிடுச்சி. வீட்டுல யாரும் இல்ல. மாறன் பயந்து அழுதுட்டு வந்து என்கிட்ட சொன்னான். வயல்ல இருந்த அத்தை அப்பா தாத்தாவை கூட்டி வர சொல்லி அவனை அனுப்பிட்டேன். ஆனா அவங்க வரும் முன்னாடி உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயம்!" என்றவனின் கண்களை இமைக்காமல் பார்த்தாள்.

"பாம்பு கடிச்சா கத்தியால் கீறினா பிழைச்சிப்பாங்கன்னு டிவியில் பார்த்திருக்கேன். அதனாலதான் கத்தியால் நானும் கீறி வச்சேன். உன்னை விட நான்தான் அழுதேன். நீ என் தோளை பிடிச்சி கடிச்சி வச்சிட்ட.. எந்த அளவுக்குன்னா.. ரத்தம் வர அளவுக்கு! என் தோள்ல கூட இன்னமும் தழும்பு இருக்கு.. பயத்துல நான் ஆழமா கீறி வச்சிட்டேன். அதனாலதான் தையல் போட்டாங்க. பாம்பு கடிச்சா கீற வேணாம், கடிச்ச இடத்துக்கு மேலேயும் கீழேயும் கட்டு போட்டா போதும்ன்னு வைத்தியர் சொல்லிட்டாரு அன்னைக்கு. ஆனா அத்தை எனக்கு மோதிரம் செஞ்சி போட்டாங்க, உன்னை காப்பாத்தியதுக்கு. இன்னும் பத்திரமா வச்சிருக்கேன் உன் ஞாபகமாவும் அத்தை ஞாபகமாவும்.!" என்றான்.

பூர்ணிமாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

"இதுதான் நம்ம வீடு. ஊருக்கு வெளியே கம்பெனி பக்கத்துல ஒரு சின்ன சைஸ் வீடும் இருக்கு.!" என்றவன் அவளுக்கு கை நீட்டினான்.

பூர்ணிமா அவனின் கையை பார்த்தாள். அவன் பெருமூச்சு விட்டபடி அவளின் கையை பற்றினான். மறுகையால் அவளை அணைத்தவன் அவளை கீழே இறக்கி நிறுத்தினான்.

Guys.. I want to tell you something. I am happy with you. I love all of you. Thanks for your friendship..💖💖💖

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN