தேவதை 32

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கவி தனது பயிற்சி மைதானத்தில் இருந்தான். பெரிய மைதானம் அது. அந்த உலகத்தின் பத்தில் ஒரு பகுதியை அந்த மைதானமே பிடித்திருந்தது. வீரர்கள் இளைப்பாற இடையிடையே நிறைய பனி மரங்களும் பனி குகைகளும் இருந்தன.

வெள்ளை நிற பனியின் மத்தியில் போர் பயிற்சி செய்யும் அவர்களின் வாளில் இருந்து புறப்படும் சிவப்பு கதிர்கள் மேகத்தை மோதுகையில் அழகின் உச்சமாக இருக்கும் அந்த இடம். ஆனால் போரை வெறுப்போருக்கு அந்த இடம் பிடிக்காது என்பதுதான் குறையே.

பயிற்சியை மேற்பார்வை புரிந்துக் கொண்டிருந்த கவி ஆதியின் நெருக்கத்தை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.

பயிற்சி மைதானத்தில் இருந்து சற்று தள்ளி இருந்த ஒரு கோட்டைக்குள் நுழைந்துக் கொண்டிருந்தாள் ஆதி. அந்த கோட்டையில் அனைத்து அண்டங்களில் உள்ள பூக்களும் காட்சிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அதன் நினைவு வந்ததும் கவி தனது வேலையை விட்டுவிட்டு அந்த கோட்டையை நோக்கி நடந்தான்.

ஆதி அங்கிருந்த பூக்கள் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்தபடி நடந்துக் கொண்டிருந்தாள். அவளின் இரு புறமும் இரு வீரர்கள் பாதுகாப்புக்கு என்று இருந்தார்கள். சொந்த உலகத்தில் பாதுகாப்பு தேவையில்லைதான்‌. ஆனால் கவிக்கு பயம். அதனால்தான் இந்த இருவரையும் நியமித்து இருந்தான்.

"உனக்கு இந்த பூக்கள் வேணும்ன்னா எடுத்துக்கோ.!" கவியின் குரல் கேட்டு திரும்பினாள் ஆதி.

"வேணாம். இருக்கட்டும். நான் அவ்வப்போது வந்து பார்த்துக்கறேன்!" என்றவளிடம் தலையசைத்தான்.

"அரசி.. உங்களுக்கு வேறு ஏதும் தேவையா?" கோட்டையில் பணிபுரியும் பெண் கேட்டாள்.

"இல்ல!" என்றவளின் முகத்தை தவிர வேறு எங்கும் பார்க்க முடியவில்லை கவியால்.

அழகின் உச்சம். ஆர்வத்தின் உச்சம். புனிதத்தின் வெண்மை. அன்பின் அரசி. அவளை காணுகையில் தனக்குள் என்னவோ உடைவது போல உணர்ந்தான் கவி. மணமான நாளில் இருந்தே அவளின் புன்னகையில் தன்னை தொலைக்க ஆரம்பித்து விட்டிருந்தான்.

"ஏந்தலே!" பணி வீரன் ஒருவனின் குரலில் திரும்பினான் கவி.

"ஒரு தேவனும் ஒரு தேவதையும் உங்களை காண வந்துள்ளார்கள்!" என்றான் அவன்‌.

கவி குழப்பத்தோடு வெளியே வந்தான்.

கண்ணை கவரும் அழகோடு இருந்த ஒரு தேவனும் தேவதையும் பனி மரத்தின் கீழே நின்றிருந்தார்கள்.

"வணக்கம் ஏந்தலே!" என்று இருவரும் கை கூப்பினார்கள். அவர்களின் மீது வீசும் அந்தமாகியான் அண்ட வாசம் அவனை சந்தேகத்தில் ஆழ்த்தியது.

"யார் நீங்க?" என்றான்

"நாங்கள் தூரத்து அண்டமான அந்தமாகியான் அண்டத்தின் தேவனும் தேவதையும். காலத்தின் முடிவு எங்கள் அண்டத்தை தொட்டு விட்டது. நாங்கள் இருவரும்தான் மீதியானவர்கள். உங்களிடம் வந்தால் நீங்கள் எங்களை உங்கள் உலகில் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்பி வந்துள்ளோம்.!" என்றாள் அந்த தேவதை.

அந்தமாகியான் அண்டம் சமீபத்தில்தான் அழிந்தது. அதில் இருந்து இவர்கள் தப்பியது ஆச்சரியமாக இருந்தது கவிக்கு.

"வீரத்தில் உங்களுக்கு அடுத்த நிலையில் இருப்போர் நாங்கள். நீங்கள் எங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு மெய்காவல் புரிவதை எங்களின் வரமென்று எண்ணுவோம்!" என்றான் அந்த தேவன்.

கவி யோசித்தான்.

அவர்களை இங்கே சேர்த்துக் கொண்டால் அவனுக்கு நலமே. இன்னொரு அண்டத்தை சார்ந்த சக்தியும் அவர்களுக்கு கிடைக்கும்.

"நிச்சயம்.. நீங்கள் இங்கே தங்கிக் கொள்ளலாம்!" கவி சொன்னது கேட்டு இருவரும் மகிழ்ந்தனர்.

"உங்களின் பெயர்?"

"நான் யனி. இவள் நனி!" என்றான் அவன்.

"அழகான பெயர்கள்!"

அவர்களை பயிற்சி மைதானத்திற்கு அனுப்பி வைத்தான் கவி.

தினமும் நாட்கள் விடிந்தது. அதன் போக்கில் சென்றது. ஆதியை தினமும் சந்தித்தான் கவி. அவனால் எவ்வளவு முயற்சி செய்தும் தன்னை தடுக்கவே முடியவில்லை. மணம் என்பது இப்படியொரு பிணைப்பை ஏற்படுத்தும் என்று அவன் அப்போது அறியவேயில்லை. ஆனால் இதுவும் பிடித்துதான் இருந்தது.

அன்பை பற்றிய அவளின் வாதங்கள் முட்டாள்தனமாக இருந்தாலும் அவளுக்காக அதையும் கேட்டுக் கொண்டான். ஆனால் அடுத்த நொடியே அதை மறு காதில் விட்டு விடுவான் என்பதுவும் உண்மைதான்.

"அன்பு.. அது எப்படின்னா எதிர்பார்ப்பு இல்லாதது. எதன் மீதும் அன்பு வரும். அன்பை எதன் மூலமும் கட்டுப்படுத்த இயலாது‌. அன்பை அழிக்கவும் முடியாது.!" அன்று மாலையும் அவள் சொல்வதை கேட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தான் கவி.

அவளின் குரல் கேட்டால் போதும். அவளின் முகம் பார்த்தால் போதும். அவளின் சொற்பொழிவு எதற்காக?

"நீ குழந்தைன்னு என்னால ஒத்துக்கவே முடியல!" என்று முணுமுணுத்தான்.

அவனை பார்த்து பளீரென புன்னகைத்தாள்.

"அன்பின் தேவதைகள் குழந்தைகளாக இருந்தாலும் முதுமை வயதினராக இருந்தாலும் ஒன்றேதான். ஏனா அன்புக்கு வயது தேவையில்ல. அன்பு அனைத்து வயதினருக்கும் உரியது. அன்பு அந்த கடவுளை போல. அன்பை கண்ணால் காட்ட இயலாது. ஆனால் உணர இயலும். அன்பு நெஞ்சத்தோடு கலந்தது.!" என்றாள்.

கவி சரியென்று தலையசைத்தான்.

"அன்பிற்கு பாலினம் கிடையாது. பதவி கிடையாது. இந்த பிரபஞ்சத்தின் ஒதுக்கப்பட்ட உயிரினத்திற்கும் அன்பு சொந்தம். இந்த பிரபஞ்சத்தால் உருவாகி இந்த பிரபஞ்சத்தை மாற்றி அமைக்கும் அளவுக்கு முன்னேறிய கடவுளருக்கும் அன்பு சொந்தம். உங்களுக்கும் அன்பு சொந்தம். எனக்கும் அன்பு சொந்தம்!" என்றாள்.

"அன்பு எதற்கு? நீ சொந்தமாகி இருப்பதே போதும்!" என்றவன் எழுந்து நின்றான்.

"உனக்கு ஏதாவது தேவையா?" எனக் கேட்டான்.

அவள் இல்லையென தலையசைத்ததும் வெளியே நடந்தான்.

யனியும் நனியும் தங்களுக்கு என‌ தரப்பட்ட பனி மரத்தின் வேரோடு இருந்த குகையில் தங்கி இருந்தார்கள்.

"வந்த வேலையை முடிச்சே ஆகணும்!" என்ற யனி தன் தலையை கலைத்தான். தலையோடு ஒட்டப்பட்டிருந்த உருவ சின்னத்தை தனியே எடுத்தான்.

அதற்குள் நனி தனது சின்னத்தை எடுத்து விட்டிருந்தாள். தரையில் கண்ணாடியாக இருந்த பனியை பார்த்தாள். வித்யநயனின் உருவம் தெரிந்தது.

எதிரே அமர்ந்திருந்த இயனியை பார்த்தான்.

"நமக்கு அவர் உதவி செய்ததை என்றுமே மறக்க கூடாது.!" என்றான்.

ஆமென்று தலையசைத்தான் எதிரே இருந்தவன்.

"இந்த உலகத்தை அழிக்கணும். ஆதியை நம் வசப்படுத்தணும். இது நீண்ட கால திட்டம். ஆனால் இதுல நாம கண்டிப்பா வெற்றி பெற்றாகணும்!" என்றான் இயனி.

"கொஞ்சம் கொஞ்சமா கலக்கணும் இவங்களுக்குள்ள!" என்ற வித்யநயன் பின்னங்கழுத்தை தேய்த்தான்.

"எவ்வளவு பயிற்சி? இந்த உலகத்தில் கால நிலையும் சற்று நீளம். தினம் இவ்வளவு நேரம் பயிற்சி செய்தால் நான் விரைவில் அழிந்தே போய் விடுவேன்!" என்று கேலியோடு சொன்னான்.

"ஆமா. விலங்குகள் போல பயிற்சி செய்கிறார்கள். அதனால்தான் நம்மால் இவர்களை வெற்றிக் கொள்ள முடியாமல் இருந்திருக்கு. இவர்களின் வீரத்தை குலைக்கணும்.!" என்றவன் அங்கிருந்த பனி மரத்தின் வேரில் கொஞ்சம் கிள்ளி எடுத்தான்.

"அன்பு உடைப்படும் போது என்னவாகும்?" எனக் கேட்டான்.

"வெறுப்பு. அவர் அதைதான் சொன்னார். வெறுப்பு. அந்த வெறுப்பு ஆதியின் மனதில் உண்டாகும் வேளையில் அவளை சார்ந்திருக்கும் அனைவரும் அன்பு என்ற ஒன்று கிடைக்காமல் தவித்து இறப்பார்கள்!" என்றான் வன்மத்தோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN