பௌர்ணமி 4

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலா பூர்ணிமாவை அழைத்துச் செல்வதை பார்த்தபடி நின்றிருந்த முல்லையின் தோளில் கை பதித்தான் பூமாறன்.

"சின்ன பொண்ணு அத்தை.. விளையாட்டுக்கு ஏதாவது சொன்னா அதை சீரியஸ் ஆக்கணுமா?" எனக் கேட்டான் வருத்தமாக.

முல்லை பூமாறனை முறைத்தாள்.

"விளையாட்டு கிடையாது மாறா. எல்லாம் தெரிஞ்ச நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்ணாத! உன் அண்ணன் குணமும் உனக்கு ரொம்ப நல்லா தெரியும்! எந்த தப்பும் செய்யாத என்னைக் கூட அவன் இன்னும் நம்பல. என்னை அவன் ஏத்துக்கவும் இல்ல. பூரணி ஏதாவது விளையாட்டுன்னு சொல்லி இவன் அதை சீரியஸா எடுத்துக்கிட்டான்னா என் பொண்ணு வாழ்க்கைதான் நாசமா போகும். இந்த கல்யாணத்தால ஏற்கனவே பல டென்சன் எனக்கு. பாலா ஏகப்பட்ட பொய் சொல்லிட்டான் என்கிட்ட! பூரணி எந்த நேரத்துல திரும்பி வந்து எனக்கும் அவளுக்குமான பந்தத்தை உடைச்சிக்கறதா சொல்றாளோ தெரியல. எனக்கு தலையை பிச்சிக்கலாம் போல இருக்கு!" புலம்பி தீர்த்தவள் தன் அண்ணனின் புறம் திரும்பினாள்.

"இத்தனை நாளா உன் வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருந்த? பூரணியோட அப்பா அந்த வீட்டுல இருக்கார்ன்னு தெரிஞ்சும் எப்படி பூரணியை அங்கே கூட்டிப் போக உங்களுக்கெல்லாம் மனசு வந்தது? என்னை ஒரேடியா கொல்லதான் உங்களுக்கு ஆசையா?" என கத்தினாள்.

பூமாறன் ஒரு பக்கமாக திரும்பி தன் செவிகளை அரக்கி விட்டுக் கொண்டான். அத்தையின் பேச்சால் காதுகள் இரண்டும் செவிடாகிவிடும் போல இருந்தது.

"அந்த ஆளை ஆயிரம் முறை துரத்தி விட்டாச்சி. எத்தனை முறை துரத்தினாலும் திரும்பி வந்துடுறாரு. அந்த ஆள் முகத்தை பார்த்துட்டு சாக எங்களுக்கு மட்டும் விதியா?" எனக் கேட்டார் மரிக்கொழுந்து.

அண்ணன் என்ன சொன்னாலும் முல்லைக்கு தலைவலி தீரவில்லை.

"வீட்டுக்கு போகலாம் முல்லை.. மீதியை அங்கே பேசிக்கலாம்!" என்ற செண்பகத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள் முல்லை.

"அலுங்காம என்னை அங்கே கூட்டிப் போயிட நினைக்கிறாங்களா?" எனக் கேட்டவள் "நான் கிளம்பறேன். என் பொண்ணை என்கிட்டயிருந்து பிரிச்சிட்டிங்க. நிரந்தரமா அவ என்னை வெறுக்கும் அளவுக்கு எதுவும் பண்ண மாட்டிங்கன்னு நம்புறேன். நீங்கதான் என் ஒழுக்கத்தை நம்பல. நான் சொரணை கெட்டுப்போய் உங்களை நம்புறேன். ஆனா ஒன்னு.. ஒருவேளை உன் பையன் ஏதாவது சொல்லி என் பொண்ணை அழ வச்சிட்டான்னா அப்புறம் நானே அவனை கொன்னுடுவேன்!" என்று எச்சரித்து விட்டு வெளியே நடந்தாள்.

பூமாறன் பெருமூச்சோடு அத்தையை பார்த்தான்.

"பாவம் அத்தை! எல்லாம் அண்ணனால வரது!" என்றுச் சலித்துக் கொண்டான்.

பூர்ணிமா பாலாவை ஆச்சரியமாக பார்த்தாள்.

"வாவ்..‌பெரிய வீடு." என்றாள்.

அவளை திரும்பிப் பார்த்தவன் அவளின் தந்தைக்கு சொந்தமான வீட்டை நினைத்துப் பார்த்தான். ஆனால் அதன் பிறகு ஏன் நினைத்தோம் என்று இருந்தது.

"நம்ம வீடுதான்!" என்றவன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான். திண்ணையில் கட்டில் இருக்கும் இடம் காலியாக இருந்தது.

'எனக்கும் பூரணிக்கும் நாளைக்கு கல்யாணம். நான் அவளை கூட்டி வரும் முன்னாடி நீங்க இந்த இடத்தை காலி பண்ணிடணும். அவ வரும்வரை நீங்க இங்கே இருந்தா அப்புறம் நான் உங்களை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்!' நாகேந்திரனிடம் தான் பேசியதை நினைத்து பார்த்தான். அவர் அங்கிருந்து சென்று விட்டிருந்தது சிறு நிம்மதியாக இருந்தது.

திறந்திருந்த வீட்டிற்குள் நுழைந்தான். மாடி படிகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்த அல்லி இவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்தாள்.

"தம்பி!" என்றவள் எழுந்து நின்றாள். படிகளிலிருந்து கீழே ஓடி வந்தாள்.

"அம்மா வரலிங்களா? அதுக்குள்ள உள்ளே வந்துட்டிங்க. ஆரத்தி எடுக்க உங்க சித்தியையாவது நான் கூட்டி வந்திருப்பேனே!" என்றாள் கவலையாக.

"அதெல்லாம்‌ வேணாம் அக்கா.. சமையல் ஆச்சா?" எனக் கேட்டவன் தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டினான்.

பூர்ணிமாவை பார்த்தான். அவள் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் கையை சுரண்டினான். திரும்பியவளிடம் மாலையை கை காட்டினான்.

கழட்டி தந்தாள்.

"சாப்பாடு ஆச்சி தம்பி.!" என்ற அல்லி பூர்ணிமாவை மேலும் கீழும் பார்த்தாள்.

"பூரணி பாப்பா இருந்திருந்தா இன்னேரம் இந்த உயரத்துக்கு வளர்ந்திருக்கும்!" என்று முணுமுணுத்தாள்.

பூர்ணிமா பாலாவின் முகம் பார்த்தாள்.

"உடனே என்னை ராட்சசன் மாதிரி பார்க்காத.. நான் யாரையும் மதிக்கறதே கிடையாதுன்னு உனக்கு நீயே கணக்குப் போட்டுக்காத. அக்கா இருந்திருந்தா நான் சொல்லியிருப்பேன்.‌ அவங்க தன்னோட ஊருக்கு போயிட்டு நேத்து சாயங்காலம்தான் வந்து சேர்ந்தாங்க.!" என்று பூர்ணிமாவிடம் சொன்னான். "அக்கா.. இது பூர்ணிதான். ஆளை விட திமிரும் வாயும் அதிகம் வளர்ந்திருக்கு!" என்று கடைசி வாக்கியத்தை மட்டும் மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.

அல்லி பூர்ணிமாவை ஆச்சரியத்தோடு பார்த்தாள். கையில் இருந்த துணியை எறிந்துவிட்டு அருகே வந்தாள்.

"இங்கேயேதான் இருப்பா. நீங்க எவ்வளவு நேரம் வேணாலும் பாருங்க. பசிக்குதான்னு கேட்டு சாப்பாடு கொடுங்க. நான் கொஞ்ச நேரத்துல வரேன்!" என்றவன் மாலையை கொண்டுச் சென்று பூஜை அறை வாசலில் இருந்த ஆணியில் மாட்டிவிட்டு வெளியே கிளம்பினான்.

சட்டென்று நின்றவன் திரும்பி வந்தான்.

சமையலறைக்குள் புகுந்தான். "அக்கா.. சர்க்கரை டப்பா எங்கே இருக்கு?" எனக் கத்தினான்.

அல்லி அவசரமாக ஓடி வந்தாள்.

"சர்க்கரை எதுக்கு தம்பி?" எனக் கேட்டபடி சர்க்கரை இருந்த அலமாரியை திறக்க முயன்றாள்.

"சர்க்கரை வேணாம். ஒரு விசயம் சொல்லணும்!" என்றவனை குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தாள்.

"அப்ப நடந்தது எதுவும் அவளுக்கு தெரியாது. அதனால நீங்க எதுவும் சொல்லிடாதிங்க.!" என்றவன் சமையலறையை விட்டு வெளியே நடந்தான்.

பூர்ணிமா நெற்றியை பிடித்தபடி ஹாலில் அமர்ந்திருந்தாள்.

"தலைவலியா?" எனக் கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தவள் "ஆமா.. அம்மாவோட கோபம் தீர எவ்வளவு நாளாகுமோ தெரியல!" என்றாள் சோகமாக.

"அந்த பொம்பளைக்கு கோபம் தீர்ந்தா என்ன.. தீரலன்னா என்ன? நீ ஏன்.."

படீரென்று எழுந்து நின்றாள். மூக்கு சிவந்திருந்தது.

"உனக்கு லாஸ்ட் வார்னிங் தரேன் பாலா! இன்னொரு முறை என் அம்மாவை பொம்பளைன்னு சொன்னின்னா உன்னை நான் என்ன செய்வேன்னே தெரியாது. ரொம்ப இரிடேட் பண்ற நீ! உன் கூட மனுசன் பேசுவானா?" எனக் கேட்டவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சோஃபாவில் சாய்ந்தாள்.

பாலா இமைக்காமல் அவளின் முகம் பார்த்தான். 'எவ்வளவு கோபம்? அத்தைக்கு எப்பவும் இவ்வளவு கோபம் வந்ததே இல்ல. இவ தனி ரகம்.!' என நினைத்தான்.

சமையலறை வாசலில் நின்றிருந்த அல்லி இருவரின் முறைப்பையும் கண்டுவிட்டு தனக்குள் சிரித்தாள்.

"என்னை பார்க்காத.. போ தூரமா!" என்று கையை வீசி அவனை விரட்டினாள்.

"அப்பவே இரண்டு பேரும் அடிச்சிக்கிட்டு கிடப்பாங்க. இப்ப என்ன ஆக போகுதோ வீடு? தம்பிக்கு பொறுமை வந்துடுச்சா இல்லையான்னு இனிதான் தெரிஞ்சிக்கணும்!" என்று சிறு குரலில் முணுமுணுத்த அல்லி சமையல் எல்லாம் சரியாக உள்ளதா என்பதை காண சென்றாள்.

"உன் வாயை உடைக்கணும் போலவே இருக்கு பூர்ணி!" என்றவனை நிமிர்ந்து வெறித்தவள் "அதுவரை உன் கை நல்லா இருந்தா அப்புறம் பார்த்துக்கலாம்!" என்றாள் நக்கலாக.

"கொஞ்ச நேரத்துல வரேன் இரு!" என்றவன் அவசரமாக கிளம்பினான்.

பூர்ணிமா தன் இடுப்பிலிருந்த போனை எடுத்தாள். முல்லைக்கு அழைத்தாள். ஆனால் முல்லை அழைப்பை ஏற்கவில்லை.

"சாரிம்மா!" என்றுச் செய்தி அனுப்பினாள்.

ஆனால் அதற்கும் பதில் வரவில்லை.

"பூரணி பாப்பா.. சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?" எனக் கேட்ட அல்லியை நிமிர்ந்துப் பார்த்தவள் வேண்டாமென்று தலையசைத்தாள்.

"ஒருத்தரும் இல்ல இங்கே. அங்கே எனக்கு எங்க அம்மா மட்டும்தான். அப்படி இருந்தாலும் சேர்ந்துதான் சாப்பிட்டு இருக்கோம். இங்கே வந்த முதல் நாளே அனாதை போல விட்டுட்டு போயிட்டாங்க எல்லோரும்!" என்று முனகினாள்.

அல்லி பரிதாபத்தோடு அவளைப் பார்த்தாள்.

வாசலை எட்டிப் பார்த்தாள். பெரியவர்கள் இருவரும் இன்னும் வராமல் என்ன செய்கிறார்கள் என்று குழம்பினாள்.

பாலா தங்களின் வயல் காட்டின் ஓரத்தில் காரை நிறுத்தினான். நாற்பது ஐம்பது பேர் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள்.

வரப்பு மேட்டின் மீது அமர்ந்து வேப்பங்குச்சியை கடித்துக் கொண்டிருந்தான் சாணக்கியன். பாலாவின் கார் சத்தம் கேட்டு எழுந்தவன் பாலாவிடம் வந்தான்.

"என்ன மாப்பிள்ளை.?" எனக் கேட்டான்.

"அந்த ஆளை பார்த்தியா?"

"எந்த ஆள்?"

"அதான்.. பூர்ணியோட அப்பா.. அவரை போக சொன்னேன். போயிட்டாரா இல்ல எங்கேயாவது போய் செத்துட்டாரான்னு தெரியல!" என்றவனை வருத்தமாக பார்த்த சாணக்கியன் "வயலோரம் உள்ள சுடுகாட்டுல பார்த்தேன் அவரை. அங்கேதான் தூங்க போறார் போல! உங்க பாட்டியோட கல்லறை கட்டிடத்துக்கு கீழே அவரோட கட்டில் கிடந்தது.!" என்றான்.

"ஓ.!" என்றபடி நிம்மதி பெருமூச்சி விட்டான் பாலா. மகளின் திருமண நாளில் செத்துப் போய் விட்டால் அதன் பழி தன் மீது விழுந்து விடுமோ என்ற பயம் அவனுக்கு.

பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்து சாணக்கியனின் கையில் திணித்தவன் "அந்த ஆளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துடு. எல்லாம் பூர்ணிக்காகதான்.. இல்லன்னா அந்த ஆளை எப்பவோ கல்லை கட்டி கிணத்துல தள்ளி இருப்பேன் நான்.!" என்றான்.

"முதல் நாளே பூர்ணிக்காகவா? அதுக்குள்ளவா விழுந்துட்ட?" என்றவன் பாலாவின் பட்டுச் சட்டையில் குங்குமத்தை கண்டுவிட்டு "இது என்ன புது டிசைனா?" எனக் கேட்டான்.

"புது டிசைன்தான்! அவகிட்ட எதுக்கு விழணும்? என்ன இருந்தாலும் அவ எங்க வீட்டு பொண்ணுதானே? மாறனை போல அவளும் முக்கியம்தானே?" எனக் கேட்டவன் காரின் கதவை திறந்தான்.

"அந்த ஆள் வீட்டு பக்கம் வராம பார்த்துக்க!" என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

பூமாறன் காரை நிறுத்தியதும் கீழே இறங்கினார் மரிக்கொழுந்து. "அவங்க இன்னமும் வரலையா?" குழப்பத்தோடு கேட்டவர் வீட்டுக்குள் நடந்தார்.

"பூரணி.. தலைவலியா?" பூமாறனின் கேள்வியில் திரும்பிய பூர்ணிமா ஆமென்று தலையசைத்தாள்.

"அம்மா..?" எனக் கேட்டாள் சந்தேகமாக‌

"அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. அவங்களுக்கு உன் மேல கோபம் ஏதும் இல்ல.. அது சும்மா மிரட்டியிருக்காங்க. நீ பீல் பண்ணாத!" என்றான்.

'என் அம்மாவை பத்தி என்கிட்டயே பாடம் எடுக்கறான்!' என்றெண்ணியவள் "டேப்ளட் இருக்குமா?" எனக் கேட்டாள்.

"ஒரு நிமிசம்!" என ஓடியவன் அடுத்த நிமிடத்தில் மாத்திரையோடு வந்தான்.

செண்பகம் சென்று தண்ணீரை கொண்டு வந்தாள்.

"நேரத்துலயே கண் விழிச்சிட்டா இல்லையா? அதான் தலைவலி!" என்றார் மரிக்கொழுந்து.

'இந்த கவனிப்பும் கூட நல்லாதான் இருக்கு!' என நினைத்தாள் பூர்ணிமா.

"கல்யாணம்ன்னு யார்க்கிட்டயும் சொல்லல.! சொந்தக்காரங்கக்கிட்ட என்னதான் சொல்றது? கோபுக்கு எப்படி மூக்கு வேர்த்துச்சின்னு தெரியல. மீதி பேர் வந்து கேட்டா என்ன பண்றது? இந்த பையனை வச்சிக்கிட்டு இம்சை!" என்று புலம்பினார் மரிக்கொழுந்து.

பூர்ணிமா வாய் திறக்க இருந்த நேரத்தில் வீட்டுக்குள் வந்தான் பாலா.

"தலைவலிக்கற புள்ளையை விட்டுட்டு எங்கேடா போன?" கோபமாக கேட்டாள் செண்பகம்.

"அவளுக்கு திமிர். அதுக்கு நானா பொறுப்பு?" எனக் கேட்டவன் தனது அறைக்கு சென்றான்.

பூர்ணிமா அவனின் முதுகை வெறித்தாள்.

வேட்டியை பேண்டாக மாற்றிக் கொண்டு வந்தவன் "அக்கா.. சாப்பாடு எடுத்து வைங்க!" என்றபடி சென்று டைனிங் ஹாலில் அமர்ந்தான்.

"பூரணி.. சாப்பிட வா!" பூமாறன் அழைத்தான்.

பாலாவை முறைத்தபடியே உணவை உண்டு முடித்தாள் பூர்ணிமா.

"வீட்டை விட்டு வெளியே போறதா இருந்தா அல்லியக்காவை கூட்டிப் போ!" என்றபடியே அறை ஒன்றின் கதவை திறந்தான் பாலா.

இளம் மஞ்சள் வண்ணத்தில் இருந்த அறையில் ஒரு பக்கம் கட்டில் இருந்தது. நேர் எதிர் சுவரில் அவளின் புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது.

"அது பால்கனி டோர். இந்த பக்கம் பாத்ரூம் டோர். உன் ரூம்க்கு நேரா இருக்கறது என் ரூம். உன் புக்ஸ் அந்த டேபிள்ல இருக்கு!" என்று கையை காட்டினான்.

இளஞ்சிவப்பு நிற மேஜை. அவளின் புத்தகங்கள் அழகாய் அடுக்கப்பட்டு இருந்தது. மேஜை விளக்கில் அரை நிலவு இருந்தது.

"உன் டிரெஸ் எல்லாம் அலமாரியில் இருக்கு. வேற ஏதாவது வேணும்ன்னா நீ என்னை வந்துக் கேட்கலாம்!" என்றான்.

பூர்ணிமா அவனை திரும்பிப் பார்த்தாள்.

"ஓகே.. உன் உதவிக்கு தேங்க்ஸ் சொல்ல முடியாது. நீ வெளியே கிளம்பு!" என்றவளை உதடு சுழித்துப் பார்த்தவன் "உனக்கு நக்கல் அதிகம்!" என்றான்.

"ஆமான்டா மாப்ளை.. உனக்கு பொண்டாட்டி ஆகி இருக்கேனே, இந்த நக்கல் கூட இல்லன்னா எப்படி?" எனக் கேட்டவள் அவனை வெளியே போக சொல்லி கையை நீட்டினாள்.

"நல்லா வசமா சிக்குவடி!" நாக்கை விளாவியபடியே சொல்லியவன் வெளியே நடந்தான்.

அவன் கதவை தாண்டியதும் கதவை அறைந்து சாத்தினாள்.

"சாத்தான்!" திட்டினாள்.

சாதாரண சுடிதார் ஒன்றுக்கு மாறினாள். பால்கனிக்கு நடந்தாள். கதவை திறந்ததும் தெரிந்த பச்சை கண்டுக்கெட்டிய தூரம் வரை அதே பச்சையாகதான் இருந்தது.

"வாவ்!" வியந்தவள் "இந்த வீட்டுக்கு வந்ததுல இது ஒன்னுதான் உருப்படி!" என்றாள்.

பிற்பகல் வேளையில் முல்லை போன் செய்தாள்.

பூர்ணிமா பயத்தோடு போனை எடுத்தாள்.

"அம்மா.!"

"எப்படி இருக்க? சாப்பிட்டியா.? அந்த வீட்டுல காரம் கொஞ்சம் அதிகமா சேர்த்துப்பாங்க.. உனக்கு செட் ஆகாதுன்னு பூமாறன்கிட்ட சொல்லி அனுப்பினேன்.!" என்றவளின் குரலில் மறைக்கப்பட்ட அழுகை இருந்தது.

பூர்ணிமாவுக்கு அழுகை வந்தது.

"அம்மா.. சாரி!"

"பரவால்ல விடு. ஆனா இனி அப்படி எதுவும் பேசாத. வாழ்க்கையில ஒழுக்கம் ரொம்ப முக்கியம் கண்ணம்மா. உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம்ன்னு நீ சொன்னதாலதான் நான் கட்டி வச்சேன். இல்லன்னா அவன் என் கழுத்தை வெட்டி இருந்தாலும் நான் ஓகே சொல்லி இருக்க மாட்டேன். உனக்கு அவனை பிடிக்கலையா.. டைவர்ஸ் பண்ணிடு. நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா கூட இருந்து துரோகம் செய்யாத. அது ரொம்ப தப்பு. உன் வாழ்க்கை இது‌. நீ யாருக்கும் பயப்பட தேவையில்ல. ஆனா உன் உள்ளத்துக்கு பயப்படு. அவன் மேல கோபம், இல்ல உனக்குள்ள மன கலக்கம்ன்னு ஏதாவது நீ தப்பு பண்ணிட்டா அப்புறம் நான்.. செத்துடுவேன் பூரணி!" என்றாள் முல்லை.

பூர்ணிமா விம்மினாள்.

"நான் கெட்டு பொண்ணு இல்லம்மா.. அது சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்!" என்றாள் அழுதபடி.

"சரி அழாத விடு. இனி அப்படி விளையாடாத!"

பூர்ணிமாவுக்கு சமாதானம் ஆகவில்லை.

"நீங்களே உங்க பொண்ணை நம்பலம்மா!"

"ஏன்னா நீ பேசியது அப்படி!"

பூர்ணிமாவுக்கு தன் மீதுதான் கோபம் வந்தது. ஏன் அப்படி பேசினோம் என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

"பத்திரமா இரு. ஐ லவ் யூ!" என்ற முல்லை தொடர்பை துண்டித்துக் கொண்டாள்.

"பூர்ணி.!" பாலா கதவை தட்டினான்.

"என்ன வேணும்?" எரிச்சலாக கேட்டபடி கதவை திறந்தாள்.

அவளின் கண்ணீரை கண்டவன் தன் நெற்றியை தேய்த்தான்.

"நீ அழற சத்தம் என் ரூம் வரை கேட்குது. அம்மா அப்பா பார்த்தா என்னைதான் தப்பா நினைப்பாங்க.!"

பூர்ணிமா முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

"கண் மையெல்லாம் அழிஞ்சிடுச்சி.!" என்றவன் சுட்டு விரலால் அவளின் இமைகளின் கீழ் துடைத்தான்.

"சிவந்துப் போச்சி கண்ணு!" சோகமாக சொன்னவன் தன்னைப் பார்த்தவளின் விழிகளைப் பார்த்தான்.

"சின்ன புள்ளையில் நல்லா புசுபுசுன்னு இருக்கும் கன்னம்.. அந்த.. உங்க அம்மா உனக்கு சரியா சாப்பாடு கூட தரல போல. மெலிஞ்சி இருக்க.!" என்றான்.

அவன் அந்த பொம்பளை என்று சொல்லி இருந்தால் முகத்திலேயே ஒரு குத்து விடலாம் என காத்திருந்தவள் அவனின் சுதாரிப்பால் அமைதியாகிக் கொண்டாள்.

"வழியாத!" என்றாள்.

சிரித்தவன் அவளின் கன்னம் கிள்ளினான். அவனின் கையை தட்டி விட்டாள்.

"உன்கிட்ட வழிய மாட்டேன். உன்னையோ உன் மனசையோ கொள்ளை அடிக்க மாட்டேன். உன்னை இந்த வீட்டுக்கு கூட்டி வர எனக்கு தெரிஞ்ச ஒரே வழி இதுவாதான் இருந்தது. என் அத்தையோட பொண்ணு நீ. உன்னை அன்பா பார்த்துப்பேன் நான். பூமாறன் மேல காட்டும் அதே அளவுக்கு அன்பு காட்டுவேன்!" என்றவன் அவளின் தலையை வருடினான்.

பூர்ணிமா விழிகளை சிமிட்டினாள்.

"உன் வீடு இது. உனக்கு நான் இருக்கேன். என் அம்மா அப்பா இருக்காங்க. மாறன் சின்ன வயசுல உன் பெஸ்ட் பிரெண்ட். அவன் இருக்கான். உனக்கு நாங்க எல்லோரும் இருக்கோம் பூர்ணி. விவரம் வந்த பிறகு உன்னை கண்டுபிடிக்க நிறைய டிரை பண்ணேன் நானும். ஆனா எப்படின்னு தெரியல. அதுவும் இல்லாம அப்பா விசாரிச்சிட்டு இருந்தாரு. உன்னை இன்னைக்கு கூட்டி வருவாரு, நாளைக்கு கூட்டி வருவாருன்னு காத்திருந்தே பதினேழு வருசம் போயிடுச்சி. உன்னை இத்தனை வருசமா அனாதையா விட்டதுக்கு சாரி!" என்றான்.

பூர்ணிமாவுக்கு தொண்டையில் என்னவோ கட்டிக் கொண்டது.

'நான் அனாதை இல்ல. என் அம்மா இருக்காங்க!' என சொல்ல முயன்றாள். ஆனால் அவனின் நெருக்கமும், அவனின் கண்களில் இருந்த அக்கறையும் அவளைக் குழப்பியது.

அன்று அறைய கை ஓங்கியவன் இன்று எதற்காய் இப்படி பேசுகிறான் என்றுக் குழம்பினாள்.

"அழாத.. அப்புறம் பார்க்கறவங்க என்ன நினைப்பாங்கன்னா நீ என்னை விரும்பியும் கூட நான் உன்னை வெறுத்து ஒதுக்கி வச்ச மாதிரியும் அதனால்தான் நீ பீல் பண்ணி அழற மாதிரியும் நினைப்பாங்க!"

அவள் சிலையாய் நின்ற வேளையில் அவனே கதவை சாத்தியபடி வெளியே கிளம்பி விட்டான்.

பூமாறன் தனது கல்லூரி புத்தகத்தை திறந்தான். படிக்க வேண்டியது நிறைய இருந்தது.

"எவ்வளவு படிச்சாலும் தீரவே மாட்டேங்குது.!" என்று புலம்பினான்.

சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். பூர்ணிமா அவனின் அறையின் கதவோரம் நின்றிருந்தாள்.

"பூரணி.. உள்ளே வா!" என்றபடி எழுந்து நின்றான்.

அவளது அறையை விட்டு சற்று பெரிய அறையாக இருந்தது. ஆண்வாசம் வீசிக் கொண்டிருந்தது அறையில். அவன் காலையில் அணிந்திருந்த வேட்டியும் சட்டையும் கட்டிலின் மீது கிடந்தது. புத்தகங்கள் இரண்டு தலையணையின் மீது இருந்தது.

துணி அலமாரியில் ஒற்றை கதவு மட்டும் சரியாய் மூடப்படாமல் இருந்தது. அதன் இடைவெளிகளில் தாறுமாறாக இருந்த உடைகள் வெளியே வர போராடிக் கொண்டிருந்தன.

"என் ரூம் கொஞ்சம் மோசம். நீ தப்பா நினைக்காத.!" என்றவன் அவளுக்கு நாற்காலி ஒன்றை கை காட்டினான்.

"பரவால்ல.. ஸ்டெல்லாவோட ரூம் இதை விட மோசமா இருக்கும். அவங்க அம்மா அவளை எவ்வளவு திட்டினாலும் அப்படிதான் இருப்பா அவ!"

"ஓ!" என்றவனுக்கு வேறு பதில் சொல்ல தெரியவில்லை.

தயக்கமாக முன்னால் வந்தவள் "கோவில்ல அப்படி நான் சொல்லி இருக்க கூடாது. சாரி.. நான் ஏதோ ஞாபகத்துல அப்படி.. ரியலி சாரி.!" என்றாள் அவனை நிமிர்ந்துப் பார்த்து.

அவளின் கலங்கும் கண்களை பார்த்தவன் நெஞ்சம் பாரமாவதை கண்டு அவளருகே வந்தான்.

"நான் தப்பா நினைக்கல பூரணி. நீ பீல் பண்ணாத!" என்றான்.

"என் அம்மா.. நான் நினைக்கவேயில்ல. நான் பேசியது தப்பா..!" பேச முடியாமல் திணறியவளுக்கு அம்மாவின் கோப முகம் நினைவில் வந்து பயத்தையும் கண்ணீரையும் தந்தது.

"டேக் இட் ஈஸி பூரணி!" என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.

"அத்தை கோபம் தீர்ந்துடும். நீ அவங்களை ரொம்ப லவ் பண்றன்னு நினைக்கிறேன். இட்ஸ் ஓகே!" என்றவன் அவளின் முதுகை வருடினான்.

அவனின் அணைப்பில் நிற்பது சங்கடமாக இருந்தது அவளுக்கு. அவனிடமிருந்து விலகினாள்.

பூமாறனும் தானும் நண்பர்கள் என்று பாலா சொன்னது நினைவிற்கு வந்தது. ஆனாலும் அவனின் அணைப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளால்.

"அத்தைக்கு நீ ரொம்ப பயப்படுற.. எனக்கு என்னவோ அண்ணனை விட அத்தை ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல தோணுது. அதனால நீ அண்ணனை ஜெயிச்சுடுவ!" என்றான் சிரிப்போடு.

மொத்தமாக தலையசைத்தவள் "நான் கிளம்பறேன். நீங்க படிங்க.. நான் சொன்னதை மனசுல வச்சிக்காதிங்க!" என்றுவிட்டு திரும்பினாள்.

அவள் திரும்பிய அதே வேளையில் அந்த அறையின் கதவில் சாய்ந்து நின்றபடி கையிலிருந்த பேப்பர்களை பார்த்துக் கொண்டிருந்தான் பாலா.

பூர்ணிமாவுக்கு திக்கென்று இருந்தது. பூமாறன் தன்னை அணைத்ததை பார்த்திருப்பானா என்று பயந்தாள். அம்மாவை போல இவனும் இப்போது தன்னை தவறாக நினைக்க போகிறான் என்பது புரிந்தது.

அவனிடம் விளக்கிச் சொல்லலாமா என்ற யோசனையோடு அவனை நோக்கி நடந்தாள். கதவிலிருந்து நகர்ந்தவன் இவளை கண்டுக் கொள்ளாமல் தாண்டி நடந்தான்.

நெஞ்சுக்குள் உண்டான ஏமாற்றத்தை அவளால் தடுக்க முடியவில்லை.

"இந்த பேப்பர்ஸை கொஞ்சம் பாரு மாறா.. உன் ஹெல்ப் வேணும்!" பாலா தம்பியிடம் பேசுவது அவளின் காதில் வந்து விழுந்தது. அமைதியாக அங்கிருந்து நடந்தாள்.

கடந்து சென்றவன் ஒரு சிறு பார்வை பார்த்திருந்தால் நெஞ்சில் இந்த பாரம் இருந்திருக்காதோ என்னவோ? கண்டுக் கொள்ளாமல் சென்றதன் காரணமாய் மனதுக்குள் புயல் அடித்துக் கொண்டிருந்தது.

பால்கனியில் நின்றபடி இருளை வெறித்தாள். வாசம் அவ்விடத்தில் நன்றாக இருந்தது.

அம்மாவின் மன கவலையை தீர்க்க வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தபடி திருமணம் செய்தவள் இப்படி ஆரம்பத்திலேயே சின்ன விசயத்துக்கு கூட கணவனின் உணர்வுகளுக்காக கவலைப்படுவோம் என்று நினைக்கவேயில்லை.

இரவு உணவு சாப்பிட செண்பகம் வந்து அழைத்துச் சென்றாள். பாலா அங்கே இருக்கவில்லை. அவளின் முகத்தை படித்தானோ என்னவோ "அண்ணன் அவன் கம்பெனிக்கு தேவைப்படும் சில ஸ்பேர் பார்ட்ஸ் ஆர்டர் பண்ண மும்பை வரைக்கும் போயிருக்கான்!" என்றான் பூமாறன்.

பூர்ணிமா புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள். ஆனாலும் உள்ளுக்குள் வருத்தம் இருந்தது‌. ஒரு வார்த்தை கூட தன்னிடம் சொல்லாமல் போய் விட்டானே என்று உள்ளம் வருந்தியது. தன் நினைப்பு கண்டு அவளுக்கே கோபம் வந்தது. காலையில் மணம் முடித்தவனுக்காக வருந்த வேண்டுமா என்று கூட கேட்டது உள்ளம். ஆனால் ஏமாற்றத்தையும் தெளிவாக உணர முடிந்ததே!

ஒன்பது மணி தாண்டி விட்டது. அறையில் படுத்த வண்ணம் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். மனம்தான் அதில் ஒட்ட மறுத்தது.

திரும்பி வந்தால் திட்டுவானோ என்று கவலைக் கொண்டாள்.

'அவன் தப்பா நினைச்சா உனக்கு என்ன?' எனக் கேட்டுக் கொண்டாள் ஒருமுறை.

கையிலிருந்த போன் அலறியது. அவன்தான் அழைத்திருந்தான்.

என்னவென்று புரியாத உணர்வோடு அழைப்பை ஏற்றாள்.

"தூங்கிட்டியா?" என்றான் அவளுக்கு பிடிபடாத குரலில்.

"இ.. இல்ல!" என்றவளுக்கு வார்த்தை தந்தியடித்தற்காக தன் மீதே கோபம் வந்தது.

"உனக்கு பயமா இருந்தா சொல்லு.. நான் அம்மாவை துணைக்கு வந்து படுத்துக்க சொல்றேன்!"

"பயம் இல்ல!" என்றவள் பூமாறனுக்கும் தனக்கும் இடையில் எதுவும் இல்லை என சொல்ல முயற்சித்த நேரத்தில் "ஸ்வீட் ட்ரீம்ஸ்!" என்று சொல்லி போனை வைத்து விட்டான் அவன்.

"கொடுமை.. எந்த தப்புமே செய்யாம, அதுவும் பிடிக்காத புருசன்கிட்ட விளக்கம் சொல்ல முடியலன்னு பீல் பண்ற ஒரே ஆள் நானாதான் இருப்பேன்!" என்று புலம்பினாள்.

போனை அருகே இருந்த இருக்கையில் வைத்தான் பாலா.

"அண்ணா.. பூரணி உன்னை தேடினா.. நீ வேலை விசயமா போயிட்டன்னு சொன்னதும் பீல் பண்ணா.!" சற்று முன் பூமாறன் போன் செய்து சொன்னது நினைவிற்கு வந்தது.

"அவ ஏன் என்னை தேட போறா?" என்றுக் காரை ஓட்டியபடி கேட்டவனிடம் 'அப்புறம் ஏன் நீயா போன் பண்ணி அவக்கிட்ட பேசின?' எனக் கேட்டது அவனின் மனசாட்சி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN