தேவதை 34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் கை சேர்ந்த வாளை உடைத்து எறிந்தான் கவி.

"என் அரசியை தாக்கும் அளவிற்கு தைரியம் உள்ளவர்களா நீங்கள்?" எனக் கேட்டவன் அவர்களை நோக்கி தன் கத்தியை நீட்டினான். நெருப்பாய்‌ பற்றி எறிந்தான் பூர்வ உலகின் தேவன் ஒருவன்.

நனி குழப்பத்தில் இருந்தாள். கவி எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் இங்கே வந்தான் என்று அவளுக்குப் புரியவில்லை. மாயமாய் வந்துச் சேர்ந்து விட்டான் அவன்.

பயத்தில் கண்களை மூடியிருந்த ஆதி கவியின் குரலில் கண்களை திறந்துப் பார்த்தாள்.

கவி மற்றொரு வீரனை நோக்கி கத்தியை நீட்டினான். அவனும் மடிந்து விழுந்து இறந்தான்.

"பாவம்!" என்ற ஆதியை பரிதாபமாக பார்த்த கவி "நீதான் உண்மையில் பாவம் ஆதி!" என்றான்.

யனி எங்கிருந்தோ ஓடி வந்தான்.

"என்ன ஆச்சி ஏந்தலே?" எனக் கேட்டான்.

"பூர்வ தேவர்கள் இருவர் ஆதியை கொல்ல முயன்று இறந்துப் போனார்கள்!" என்றான்.

"இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்?" எனக் கேட்டபடி ஆதியின் அருகே வந்தான் அவன்.

"உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லைதானே ராணி?"

ஆதி இல்லையென தலையசைத்தாள்.

"நல்ல நேரத்தில் வந்து விட்டேன் நான்!" என்று கவி சொன்ன நேரத்தில் நனி தனது வாளை எடுத்து தன் கழுத்தில் வைத்தாள்.

"மன்னிக்கவும் ஏந்தலே! நான் நல்ல காப்பாளினியாக இல்லாமல் போய் விட்டேன். இதற்கு தண்டனையாக என்னை நானே கொன்றுக் கொள்கிறேன்!" என்றாள்.

"வேண்டாம் நனி!" கத்தினாள் ஆதி.

"நீ மிகவும் நல்லவள். எதுவும் செய்துக் கொள்ளாதே. உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன்!" என்றாள்.

ஆதியை நினைத்துதான் பாவமாக இருந்தது கவிக்கு.

"உன்னை எங்களை போல மாற்ற ஏதாவது வழி உள்ளதா ஆதி?" என்று அவளிடமே கேட்டான்.

ஆதி குழப்பமாக அவனைப் பார்த்தாள்.

"உன் உயிரை விடுவதில் எந்த நியாயமும் இல்ல நனி‌. நீ சிறந்த வீராங்கனைதான். எவருக்கும் நேரம் தவறும். தவறு உன் மீது இல்லை!" என்று கவி சொல்லவும் நன்றிகளோடு அவனைப் பார்த்தாள் நனி.

"ஆதி.." கோபத்தோடு அவள் பக்கம் திரும்பிய கவி "நாளையிலிருந்து நீ எங்களின் பயிற்சி மைதானத்திற்கு வருகிறாய். நீயும் போரிட கற்றுக் கொள்கிறாய்!" என்றான் கவி.

ஆதிக்கு தன் காதில் விழுந்த செய்தி அந்நியமாக தோன்றியது. அவள் ஒரு அன்பின் தேவதை. அவளுக்கு எதற்கு சண்டையும் பயிற்சிகளும்‌?

"இவளை இனியாவது பத்திரமாக பார்த்துக் கொள் நனி. நாளை இவளை மைதானம் அழைத்து வா. நீயே அவளுக்கு பயிற்சி வழங்கு!" என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

ஆதிக்கு அவன் சொல்லியதில் நம்பிக்கை இல்லை.

அன்பு மாலையில் ஆதியிடம் வந்தான் கவி.

ஆதி வழக்கம் போல பனி பூக்களை கோர்த்து தன் கழுத்தில் இரட்டை மாலையாக போட்டுக் கொண்டிருந்தாள். அவளின் முகம் அங்கிருந்த சுவர்களில் பிரதிபலித்தது.

அவளின் அறைக்குள் நுழைந்த கவி கண்ணாடி பிரதிபலிப்பை கண்டு மயங்கி நின்று விட்டான். அவளுடனான பந்தம் நெருங்கிக் கொண்டே இருந்தது. அவள் அவனின் மனதுக்குள் நிறைந்துக் கொண்டிருந்தாள். அவளை தவிர வேறு ஒரு விசயத்தை பற்றி நினைக்க வேண்டும் என்றால் அது மிகவும் சிரமமாக இருந்தது. போர் பயிற்சி களத்திலும் கூட அவளின் நினைவுதான் இருந்தது.

அவள் அடிக்கடி மனம் மகிழ்ந்தாள்‌. அந்த விசயங்கள் அவனுக்கு சரியாக தெரியவில்லை. ஆனாலும் அவளின் மகிழ்ச்சியே போதும் என்ற அளவுக்கு நிம்மதியை தந்தது.

ஆதி அங்கிருந்த தன் பிரதிபலிப்பு ஒன்றை பார்த்தபடி கையை நீட்டினாள். பிரதிபலிப்பின் ஒரு ஓரத்தில் தெரிந்த கவியை சில கணங்கள் முடிந்த பிறகே அவளின் கண்கள் கண்டது.

திரும்பினாள். புன்னகைத்தாள்.

"ஏந்தலே!" என்றாள்.

"ஆதி.!" அவளின் அருகே சென்றான்.

"உன்னால் எப்படி என்னை அழைக்க முடிந்தது?"

அவனின் கேள்வி அவளுக்கு புரியவில்லை.

"நீ நெவத்ஸி அண்டத்தில் இருந்த போதும், புவி கிரகத்தில் அமர்ந்து அழுத போதும், இன்று உயிரை இழக்கும்படியான ஒரு சூழ்நிலையில் நீ இருந்தபோதும் நான் என்னை மீறி உன்னிடம் வந்தேன். அது எப்படி சாத்தியம்? நீ ஏதாவது மாய மந்திரத்தை பயன்படுத்தினாயா?" எனக் கேட்டான்.

ஆதி இல்லையென தலையசைத்தாள்.

"இல்லை. எங்களின் அன்பின் தேவ தேவதைகளுக்கான வரங்களில் இதுவும் ஒன்று. யாராவது ஒரே ஒருவர் எங்களை பித்து பிடித்தார் போல நேசித்தால் அவர்களோடு எங்களின் ஜீவன் பிணைந்து விடும். அவர்கள் எங்களின் ஆபத்தின் போது அருகில் வந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள் என்று சொன்னதாக எனக்கு நினைவு. இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்!" என்றாள் புன்னகை மாறாமல்.

கவிக்கு காலின் கீழ் இருந்த பனி நழுவுவது போல இருந்தது. 'பித்து பிடித்தார் போல நேசித்தால்..' குழம்பினான்.

' நான் நேசித்தேனா? உண்மையிலா?' யோசித்தவன் "ஆனால் நான் உன்னை வெறுக்கவில்லை ஆதி. இப்போது சில காலங்களாக உன்னை எங்களில் ஒருத்தியாக நேசிக்க ஆரம்பித்து உள்ளேன்.!" என்றான்.

ஆதி‌ புன்னகைத்தபடி தனது கழுத்தில் இருந்த மாலை ஒன்றை கழட்டி அவனின் கழுத்தில் போட்டாள். அதிர்ச்சியோடு அவளின் முகத்தைப் பார்த்தான்.

"இந்த மாலை உங்களுக்கு அழகாக இருக்கிறது ஏந்தலே!" என்றாள்.

பேசுவது கடினமாக இருந்தது அவனுக்கு. அவளை நேர் கொண்டு பார்த்த பிறகும் அவளை வாரி அணைக்காமல் இருப்பது சிரமமாக இருந்தது.

"நா.. நான் செல்கிறேன். நீ நாளை காலையில் மறக்காமல் வந்து விடு!" என்றவன் வெளியே நடந்தான்.

நனியும் யனியும் கோபத்தில் அமர்ந்திருந்தார்கள்.

"அவளின் மனம் கவர முடியாம போயிடுச்சி!" என்று வருத்தப்பட்டாள்‌ நனி.

"ஆனா அவளுக்கு போர் பயிற்சி வழங்க உன்னை நியமித்திருக்கிறான் அந்த முட்டாள். பயிற்சி வழங்கு. நிச்சயம் வெற்றி நமக்கே!" என்றான் யனி.

மறுநாள் காலையில் ஆதி தனது அறையை விட்டு வெளியே வராமல் இருந்த வேளையில் அவளை தேடி வந்தான் கவி. அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு பயிற்சி மைதானத்திற்கு சென்றான்.

"நான் ஒரு அன்பின் தேவதை!" என்றவளை முறைத்தவன் "நீ இந்த சத்திய தேவ உலகின் மகாராணி.!" என்றான்.

"நான் எனது அன்பின் மூலம் சக்திகளை பெற முயற்சி செய்கிறேன்!" என்றவளின் கையை பற்றியவன் தனது வாளை அவளின் கையில் திணித்தான்.

சுற்றி இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள். ஏந்தலின் வாளை வேறு யாரும் தொட இயலாது. ஒரு உலகத்தையே சாதாரணமாக அழிக்கும் சக்தி உடைய அந்த கத்தியை பிறர் தொடுவது குற்றமாக கூட பார்க்கப்பட்டது.

ஆதியின் பின்னால் வந்து நின்ற கவி அவளின் கையை பற்றி சுழற்றினான்.

"வேண்டாம்.. பயமா இருக்கு. நெஞ்சம் அடித்துக் கொள்கிறது.!" என்று திகிலாக சொன்னாள் ஆதி.

"ஆனால் இது அவசியம் என் மகாராணி.!" என்றான் கவி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

நாளைக்கு ஒரு நாளைக்கு மட்டும் தேவதை கதை அப்டேட் வராது நட்புக்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN