பௌர்ணமி 5

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அழகாய் வளர்ந்துக் கொண்டிருந்த பூச்செடியை பிடுங்கி வேறு இடத்தில் நட்டு வைத்தது போலவே மனம் வாடி இருந்தாள் பூர்ணிமா.

அன்று இரவு உறக்கம் வரவேயில்லை. தானும் அம்மாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பாலா தன்னிடம் பாசமாக இருக்கிறான்‌ என்பதை அவளால் முழுதாக நம்பமுடியவில்லை என்றாலும் கூட ஏதோ மேம்போக்காக ஒத்துக் கொள்ள சொன்னது மனது. ஆனால் அவன் தன் அம்மாவை வெறுக்கும் காரணம் அவளுக்கு புரியவில்லை.

ஒழுக்கம் கெட்டவள் என்ற அர்த்தத்தில் அவன் அம்மாவை திட்டியதை நினைத்துப் பார்த்தாள். அம்மாவை தவறாக நினைக்க மனம் வரவில்லை. இத்தனை வருடங்களில் அவள் எந்த ஆண் மகனோடும் நின்று பேசியதில்லை. அவர்களின் வீடு தேடி அனாவசியமானவர்கள் வந்ததும் இல்லை. அம்மா ஏன் இங்கிருந்து கிளம்பினாள் என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை. செண்பகமும் பூமாறனும் இதற்கு காரணமாக இருப்பார்கள் என்று எண்ண முடியவில்லை. பாலாவும் அப்போது சிறுவனாகதான் இருந்திருப்பான். அதனால் அவனையும் இந்த வட்டத்திற்குள் இழுக்க முடியவில்லை. மரிக்கொழுந்துவை விசாரிக்கலாமா என்று யோசித்தாள்.

தன் அப்பாவை கண்டறிந்தால் இந்த மொத்த பிரச்சனைக்கும் விடை கிடைக்கும் என்றுத் தோன்றியது. பூமாறனிடம் கேட்டால் அவன் சொல்வான். ஆனால் இவ்விசயத்தை அம்மா கேள்விப்பட்டால் தன்னை தவறாக நினைப்பாளே என்று கவலைப்பட்டாள். அம்மாவின் கவலை தீர்க்கதான் முயன்றாளே தவிர அம்மாவை தான் சந்தேகம் கொள்வதாக அவள் எண்ணி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

யோசித்ததில் தலைதான் வலித்தது.

தொடர்வண்டியின் ஜன்னலின் வெளியே வெறித்துக் கொண்டிருந்தான் பாலா. பூர்ணிமா தூங்கியிருக்க மாட்டாள் என்று சொன்னது அவனின் மனம்.

அவளுக்கு போன் செய்யலாமா என்ற எண்ணத்தோடு போனை எடுப்பதும் அவள் தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்ற எண்ணத்தோடு மீண்டும் போனை வைப்பதுமாகவே அரை மணி நேரமாக காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தான்.

பின்னிரவு நேரத்தில் உறங்கிப் போனாள் பூர்ணிமா. காலை நேரத்தில் முல்லை போன் செய்த பிறகே விழித்தாள்.

"அம்மா!" என்றாள் அவசரமாக எழுந்து அமர்ந்து.

"இன்னமும் தூங்கிட்டு இருக்கியா பூரணி? உடம்பு ஏதும் சரியில்லையா?" எனக் கேட்டாள்.

"இல்லம்மா.. புது இடம்.. நைட் தூக்கம் வரல!" என்றவள் எழுந்து நின்றாள். ஜன்னலை திறந்து விட்டாள்.

இவள் இல்லாமல் அங்கே அவளுக்கும் உறக்கமே வரவில்லை.

"லவ் யூ பூரணி!"

பூர்ணிமாவின் முகம் மலர்ந்தது.

"லவ் யூ டூம்மா!" என்றாள்.

குளித்து விட்டு வெளியே வந்தாள். வீடு நிசப்தமாக இருந்தது. எதிரே உள்ள பாலாவின் அறை கதவை வெறித்தவள் கீழே சென்றாள்.

பூமாறன் மட்டும் ஹாலில் அமர்ந்து இருந்தான். செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தான்.

அவனோடு பேசவும் சங்கடமாக இருந்தது. ஒதுக்கி அவனின் சந்தேகத்திற்கு ஆளாகவும் விருப்பம் இல்லை. அமைதியாய் அவனின் முன்னால் சென்று அமர்ந்தாள். செய்தித்தாளை எடுத்துப் பிரித்தாள்.

"பூரணி!" என்று இவளை பார்த்து புன்னகைத்தான்.

"பெரியப்பா சித்தப்பா பேமிலியெல்லாம் இன்னைக்கு வருவாங்க பூரணி! எல்லாம் பெரிய தாத்தா சின்ன தாத்தா பசங்கதான்.." என்றவனை கேள்வியாக பார்த்தாள்.

"நீ அவங்ககிட்ட அதிகம் பேசாம இருக்கியா?"

அவள் கண்களில் குழப்பம் தெரிந்தது.

"நீ யார்ன்னு கேட்பாங்க. உன் பேரண்ட்ஸ் உன் ஊரையெல்லாம் கேட்பாங்க.. பூரணின்னு சொல்லு. ஆனா முல்லைன்னு சொல்லாத!" என்று அவன் சொன்னதும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள்.

"திருட்டுத்தனமா என்னை கூட்டி வர காரணம்?" என்றாள் கண்கள் சிவக்க.

பூமாறன் நெற்றியை பிடித்தபடி எழுந்து நின்றான்.

"பூரணி.. முல்லை அத்தை நல்லவங்க. ஆனா அதை இங்கே நம்ப யாரும் தயாரா இல்ல. முல்லை அத்தை வெறுத்துப் போய் இந்த வீட்டை விட்டுப் போனாங்க. இப்ப நீ அவங்க பொண்ணுன்னு தெரிஞ்சா எல்லோரும் அவங்களை இங்கே கூட்டி வருவதுல குறியா இருப்பாங்க. உன் கண் முன்னாடியே அவங்களை தப்பா சொல்வாங்க. உனக்கு கோபம் வரும். மனசு வேதனைபடும். நாலு விதமாக பேசும் உறவுகளுக்கு எல்லாத்தையும் விளக்கிச் சொல்றதுக்கு பதிலா அவங்களை தவிர்த்திடுறது நல்லதுதானே?" எனக் கேட்டான்.

பூர்ணிமா சரியென்று தலையசைத்தாள். ஆனால் உள்ளுக்குள் கோபம் கனன்றது‌. தன் தாயை தவறாக சொல்பவர்களுக்கு பற்கள் கொட்டாமல் இருக்குமா என்று ஆங்காரமானாள்.

அல்லி கொண்டு வந்து தந்த தேனீரில் சுவையே தெரியவில்லை அவளுக்கு‌. அவ்வளவு குழப்பம் மனதுக்குள்.

மரிக்கொழுந்துவும் செண்பகமும் கோவிலுக்கு சென்றிருப்பதாக தகவல் சொன்னான் பூமாறன். இருவரும் சேர்ந்து சாப்பிடுகையில் அவள் அவனிடம் எதுவுமே பேசவில்லை.

பத்து மணியளவில் அவள் வெட்டியாக அமர்ந்திருந்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள் பூமாறன் சொன்ன உறவுகள்.

நிறைய பேர் வந்தார்கள்.

"எல்லோருக்கும் வணக்கம் சொல்லு!" என்றான் பூமாறன்.

பூர்ணிமா வணக்கம் வைத்தாள்.

நான்கைந்து பெண்கள் அவளை நெருங்கினார்கள். ஆண்களும் மற்றவர்களும் இருக்கைகளை நிறைத்து, இடம் பற்றாமல் தரையிலும் அமர்ந்தார்கள்.

"அழகான பொண்ணாதான் கட்டி வந்திருக்கான். எங்களை கூப்பிட்டா சோறு போடணும்ன்னு சொல்லாம விட்டுட்டான் போல!" என்று கேலியாக சொன்னாள் ஒரு நடுத்தர வயது பெண்மணி.

"அப்படி இல்ல பெரியம்மா.. அண்ணனுக்கு எதையும் கிராண்டா செய்றது பிடிக்காது!" பூமாறன் சொன்னதை அவள் காதிலேயே வாங்கவில்லை.

"பாலா எங்கே?" எனக் கேட்டார் ஒரு தாத்தா.

"அவன் வேலை விசயமா வெளியூர் போயிருக்கான்!" பூமாறன் சொல்லவும் பாட்டி ஒருத்தி நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

"கல்யாணம் ஆன மறுநாளே அப்படி என்ன வெளியூர்? அவன்தான் கல்யாணத்துக்கு அழைக்கல.. நாங்களாவது விருந்துக்கு அழைக்கலாம்ன்னு வந்தோம். ஆனா அதுக்குள்ள அந்த பையன் ஓடிட்டு இருக்கான்.!"

பூர்ணிமாவை சுற்றி நின்றிருந்த பெண்மணிகளில் ஒருத்தி தன் கையில் இருந்த சீர் வரிசை தட்டை அவளிடம் நீட்டினாள்.

"நீயாவது வாங்கிக்கம்மா.. பாலா வந்ததும் அவனை கூட்டிட்டு வா!" என்றாள்.

பூர்ணிமா பூமாறனை பார்த்தாள். ஒற்றை கையால் முகத்தை மூடியவன் மறு கையால் வாங்கிக் கொள்ள சொல்லி யாரும் அறியா வண்ணம் கை அசைத்தான்.

பூர்ணிமா தன்னிடம் நீட்டிய தட்டை வாங்கிக் கொண்டாள். அடுத்த பெண்ணும் நீட்டினாள். பூமாறன் அவசரமாக அவளருகே வந்தான். அவள் தட்டுகளை வாங்கி தர தர அவற்றை வாங்கி தரையில் சுவரோரமாக வைத்தான்.

"எல்லோர் வீட்டுக்கும் வந்துடும்மா!" என்றாள் ஒரு பாட்டி. பூர்ணிமா தலையை அசைத்தாள்.

தாவணி பெண்கள் சிலர் எழுந்து வந்து கிஃப்ட் பாக்ஸ்களை நீட்டினர்.

'மெண்டலா இவங்க? கல்யாணத்துக்கு கூப்பிடலன்னா அதையே சாக்கா வச்சி சண்டை போடுவாங்க.. இவங்க சகஜமா பழகறாங்க!' என்றுக் குழம்பினாள்.

"நான் ரோஸினி. மாமா திடீர்ன்னு கல்யாணம் பண்ணிப்பார்ன்னு நான் நினைக்கவே இல்ல. நான் அவரை ரொம்ப நம்பினேன்!" என்றாள் சிறு குரலில்.

பூமாறன் தன் முகத்தை வேறு திசைக்கு திருப்பினான். 'இது மட்டும் அண்ணன் காதுல விழுந்தா கொலை பண்ணி இருப்பான்!' என்று நினைத்தான்.

அவளுக்கு சாரி சொல்லலாமா என யோசித்தாள் பூர்ணிமா.

"முடிஞ்ச விசயத்தை ஏன் பேசணும் ரோஸி? அதை விடு!" என்றாள் பழைய பாட்டி.

ரோஸினி பூர்ணிமாவின் தோளில் தட்டி விட்டு சென்று தரையில் அமர்ந்தாள்.

"பொண்ணு நல்லா கிளி மாதிரி இருக்கா.. இந்த பையன்தான் கிறுக்கு. எதையும் யார்கிட்டேயும் கலந்துக்கறது இல்ல. சைக்கிள் கம்பெனி வைக்கிறேன்னு கோடி கணக்குல கடன் வாங்கி வச்சிருக்கான்.. இப்ப இவனை நம்பி இந்த பொண்ணு!" என்றார் நடுத்தர வயது மனிதர் ஒருவர்.

"பெரியப்பா.. என்ன கடனா இருந்தாலும் அண்ணாதான் கட்டப் போறான். பிறகென்ன?" எனக் கேட்டான் பூமாறன். அவர்கள் பேசுவது கண்டு அவனுக்கே கடுப்பாக இருந்தது.

"அல்லியக்கா.. எல்லோருக்கும் காப்பி கொண்டு வாங்க!" நின்ற இடத்திலிருந்து குரல் தந்தாள் பூர்ணிமா.

"வந்துட்டேன்ம்மா!" அல்லி சமையலறையில் இருந்து பதில் சொன்னாள்.

"வந்த அடுத்த நாளே சொந்த வீடு மாதிரி பழகிட்டா.. ரொம்ப வித்தியாசம்!" என்று முனகினாள் ரோஸினி.

"உன் பேர் என்னம்மா? அப்பா என்ன பண்றாரு?"

முதல் கேள்விக்கு பதில் தெரியும். இரண்டாம் கேள்விக்கு என்ன செய்வாள்?

"பூர்ணிமா.. அப்பா இறந்துட்டாரு!" என்றவளை அனைவரும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.

"பூர்ணிமா?" ரோஸினியும் இன்னொரு பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்தபடி முனகினர்.

"கொடியோட பொண்ணு பேர் கூட பூர்ணிதான்!" என்ற ஒரு பாட்டி தன் ஈர விழிகளை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

பூர்ணிமா விழிகளை சுழற்றினாள். பூமாறன் அவளின் கையை கிள்ளினான். "அப்படி பண்ணாத!" என்றான் சிறு குரலில்.

"நான் கொடியோட பொண்ணுதான்!" என்று அவள் சொல்ல நான்கைந்து பேர் இருக்கையை விட்டு எழுந்து நின்று விட்டார்கள்.

ரோஸினியும் சில பெண்களும் தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டார்கள். பூமாறன் பூர்ணிமாவை முறைத்தான்.

இவள் இப்படி இழுத்து வைப்பாள் என்று அவன் எதிர்ப் பார்க்கவேயில்லை. வீட்டில் பெற்றோரும் இல்லை. எப்படி இந்த சொந்தங்களை சமாளிப்பது என்று புரியாமல் குழம்பியவன் நகத்தை கடித்தான்.

அல்லி கொண்டு வந்து தந்த காப்பி டிரேயை வாங்கிய பூர்ணிமா அங்கிருந்தவர்களிடம் நீட்டினாள்.

அனைவரும் அவளை அதிர்ச்சி தீராமலேயே பார்த்தார்கள். அவள் முகத்தை தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை. காப்பியை அனிச்சை செயலாக எடுத்தார்கள்.

'நான் என்ன ஃபேஷன் ஷோவா நடத்திட்டு இருக்கேன்? ஏன் இப்படி பார்க்கறாங்க எல்லோரும்?' என்று எண்ணியவள் காலி தட்டை அல்லியிடம் நீட்டினாள்.

"பூரணி.!" என்றபடி முன்னால் வந்தான் ஒருவன்.

"நான் லஷ்மன். என்னை மறந்திருக்க மாட்டன்னு நினைக்கிறேன். உன் சின்ன மாமா பையன்.!" என்றவன் கையை நீட்டினான்.

பூர்ணிமா யோசனையோடு அவனின் கையை பற்றி குலுக்கினாள்.

"மாறா.. உங்க வீட்டுல என்னதான் நினைச்சிட்டு இருக்கிங்க? காணாம போன பொண்ணை கண்டுபிடிச்சா எங்கக்கிட்ட தகவல் சொல்லணும்ன்னு கூட உங்களுக்கு தோணலையா? உன் அண்ணன் இவளை கல்யாணம் பண்ணி இருக்கான். நாங்க எல்லாம் செத்தா போயிட்டோம்? உன் அண்ணனுக்கு அவன் இஷ்டபடி கல்யாணம் பண்ணிக்க ஆசைன்னா அதை விடு. ஆனா இவ என்ன அனாதையா?" என கேட்டு திட்டியபடி பூமாறனை நெருங்கினார் ஒரு தாத்தா.

"சின்ன தாத்தா.. நீங்க கோபப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. அண்ணன் வந்த பிறகு உங்ககிட்ட சொல்லலாம்ன்னுதான் இருந்தோம்?" பூமாறன் சமாளிக்க முயன்றான்.

"எப்ப சொல்ல போறான்? யாரை கேட்டு அவன் இவளை கல்யாணம் செஞ்சான்? அது சரி அந்த ஓடுகாலி எங்கே?" எனக் கேட்டார் பெரிய தாத்தா.

பூர்ணிமா உள்ளங்கையை மடக்கினாள். அந்த தாத்தாவின் முகத்தில் குத்த வேண்டும் போல இருந்தது.

"பூரணி.. நீ உன் ரூம்க்கு போறியா.. ப்ளீஸ்?" சிறுகுரலில் கெஞ்சலாக கேட்டான் பூமாறன்.

அவனையும் அந்த கூட்டத்தையும் மாறி மாறி பார்த்தாள்.

"நான் ஏன் போகணும்?" பற்களை கடித்தபடி கேட்டாள்.

அவளை திரும்பிப் பார்த்து முறைத்தவன் "வீட்டுல அண்ணன் இல்ல. அப்பா அம்மா இல்ல.. உன்னை வாயை விட சொன்னது நானா? என்னால இவங்களை சமாளிக்க முடியாதுன்னுதான் உன்னை எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்? அண்ணன் வந்தா உன்னைக் கொல்லப் போறான். அம்மாவும் அப்பாவும் வந்து என்னைக் கொல்ல போறாங்க!" என்று கடித்த பற்களின் இடையே சொன்னான்.

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம அந்த புள்ளைக்கிட்ட என்னடா கிசுகிசுத்துட்டு இருக்க?" தாத்தா கேட்டார்.

திரும்பி பார்த்தவன் "முன்னையே தலைவலின்னு சொன்னா தாத்தா. அதான் ரெஸ்ட் எடுக்க அனுப்பலாம்ன்னு.!" என்று இழுத்தான்.

அவர்கள் முல்லையை ஓடுகாலி என குறிப்பிட்டதே பூர்ணிமாவுக்கு எல்லையற்ற கோபத்தை தந்து விட்டது. ஆனாலும் அவர்களை எதிர்ப்பது சரியென்று தோன்றவில்லை. அனைவரும் புதிதாக இருந்தார்கள். பாலாவின் மீதும் குறை சொன்னார்கள். எதிரிகளை சரியாக அறியாமல் பதில் பேசுவது நெருடலாக பட்டது.

"நான் ரூம்க்கு போறேன்!" தலையை பிடித்தபடி மாடிப் படியை நோக்கி நடந்தாள்.

லஷ்மன் அவளை பின்தொடர முயன்றான். அவனின் கையை பற்றி நிறுத்தினான் பூமாறன்.

"அவ ரெஸ்ட் எடுக்க போறா.!" என்றான்.

"ஆனா நான் அவக்கிட்ட இன்னும் பேசவே இல்ல.!" கவலையோடு சொன்னவனை விந்தையாக பார்த்த பூமாறன் "அண்ணன் வந்த பிறகு இரண்டு பேரும் உங்க வீட்டுக்கு விருந்துக்கு வருவாங்க. அங்கே பேசிக்கோ!" என்றான்.

பெரிய தாத்தா தன் மீசையை முறுக்கியபடி முன்னால் வந்தார்.

"அப்பா செத்துட்டான்னு சொல்றா அவ.. மொத்த குடும்பமும் சேர்ந்து அவனை பைத்தியக்காரன் ஆக்கி வச்சிட்டிங்க. அவக்கிட்ட செத்து போயிட்டான்னே சொல்லிட்டிங்களா?" எனக் கேட்டார் கோபமாக.

பூமாறன் அனைவரையும் பார்த்தான்.

"அவ பூரணிங்கறதை தவிர எனக்கும் வேறு எதுவும் தெரியாது. அண்ணன்தான் கண்டுபிடிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான். அப்பா அம்மாவுக்கும் கூட வேற எந்த விசயமும் தெரியாது. அவ எங்களோடவே இன்னும் சரியா பேசல. உங்களுக்கான பதிலையெல்லாம் அண்ணனால மட்டும்தான் சொல்ல முடியும். அவன் வந்ததும் உங்களை வந்து பார்ப்பான். மத்தபடி இவளை தொந்தரவு செய்யாதிங்க. அவளுக்கு நம்ம யாரையும் ஞாபகம் இல்ல.!" என்றான்.

பாதி பேர் அவனை முறைத்தார்கள்.

"உன் அண்ணன் செய்ற எதுவுமே சரியில்ல!" என்ற பெரிய தாத்தா முதல் ஆளாக வெளியே நடந்தார். மற்றவர்களும் பூமாறனை வெறித்தபடி வெளியே கிளம்பினார்கள்.

'அப்பாடி!' நெஞ்சில் கையை வைத்தபடி சோஃபாவில் விழுந்தான் பூமாறன். 'எவ்வளவு கேள்விகள்?' சலித்துக் கொண்டான்.

பூர்ணிமா மீதுதான் கோபம் வந்தது.

'அவளுக்கெல்லாம் அண்ணன்தான் சரியா வருவான். சொல்ல சொல்ல கேட்காம வாயை விட்டுட்டா!' என்று அவளை திட்டினான். அண்ணனுக்கு போன் செய்தான். விசயத்தை சொன்னான்.

"உன் வாய்ல என்ன இருந்தது மாறா? அவகிட்ட எதையும் சொல்ல வேணாம்ன்னு சொல்லி இருக்கணும். இல்லன்னா அவங்களை இன்னொரு நாள் நான் இருக்கும்போது வர சொல்லி இருக்கணும்!" என்று அவன் காய்ந்தான்.

"உன் வாயாடி பொண்டாட்டி பண்ண தப்புக்கு என்னை ஏன் திட்டுற? அவளுக்கு கொழுப்பு!"

"செட் அப் மாறா.!" என்றவன் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.

அடுத்த நிமிடத்தில் பூர்ணிமாவுக்கு போன் வந்தது.

அழைப்பை ஏற்றவளிடம் "எதுக்கு அதிக பிரசங்கிதனம் செய்ற பூர்ணி?" எனக் கேட்டான்.

"நீ என்னை ஏன் திருட்டு கல்யாணம் பண்ணியிருக்க?" பூர்ணிமா கேட்டது அவனுக்கு புரியவில்லை.

"என்ன உளறுற?"

"பின்ன என்ன? நான் யார்ன்னு சொல்லாமயே காலம் முழுக்க கடத்த போறியா? அந்த பொண்ணு.. என்ன பேரு.. ரோஸினி.. என்னவோ நீ அவளை ஏமாத்திட்டன்னு சொல்றா.. அவ உன்னை ரொம்ப நம்பினதா வேற சொல்றா.. அந்த பல்செட் கிழவன் யாரை கேட்டு அவன் அவளை கல்யாணம் பண்ணான்னு கேட்கிறான். உங்க எல்லோருக்கும் என்னை பார்த்தா எப்படி தெரியுது?" இவளும் பிடித்து கத்தி வைத்தாள்.

பாலா நெற்றியை பிடித்தான்.

"அவங்க சொன்ன மீனிங் வேற.. நீ அவங்களுக்கும் சொந்தம். அவங்ககிட்ட அனுமதி வாங்காம நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்லி இருப்பாங்க.. ரோஸி விளையாட்டுக்கு ஏதாவது சொல்லி இருப்பா. நான் யாரையும் ஏமாத்தல.. உன்னை திருட்டுதனமாவும் கல்யாணம் செய்யல.. உனக்காகதான் அவங்க யாரையும் நான் கல்யாணத்துக்கு கூப்பிடல.. உனக்கு நிம்மதி முக்கியம்ன்னு தோணினா வாயை மூடிக்கிட்டு இரு. அவ்வளவுதான் நான் சொல்வேன்!" என்றவன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

பூர்ணிமாவுக்கு இப்போது பாலாவின் மீது கோபமாக வந்தது. அவன் வீடு திரும்பிய பிறகு நிச்சயம் போர்க்களம் ஒன்றை சந்தித்தாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

மதிய வேளையில்தான் மீண்டும் கீழே வந்தாள். மரிக்கொழுந்தும் செண்பகமும் கவலையோடு இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

பூர்ணிமா அவர்களை கண்டுக் கொள்ளாமல் வெளியே நடந்தாள்.

"பூரணி எங்கே கிளம்பிட்ட?" செண்பகம் கேட்டாள்.

"சும்மா.. வெளியே சுத்தி பார்க்க.. வீட்டுலயே இருக்க போரடிக்குது!"

"அல்லி!" செண்பகத்தின் குரலில் ஓடி வந்த அல்லி பூர்ணிமாவை பின்தொடர்ந்து சென்றாள்.

காம்பவுண்ட் கேட்டை திறந்தாள் பூர்ணிமா. அந்த பக்கமும் இந்த பக்கமும் தென்னந்தோப்புகள் இருந்தன.

"இது பெரிய பாட்டனோடது.. அதுக்கு அந்த பக்கம் சின்ன பாட்டன் தோப்பு பூரணி. இந்த தோப்பு நம்மோடது.!" என்று கிழக்கில் இருந்த தோப்பை கை காட்டினாள் அல்லி.

தோப்பின் இடையே இருந்த மண்சாலையில் நடந்தாள் பூர்ணிமா. காற்று இங்கே அதிகம் வீசுவது போலிருந்தது.

"இது எல்லாமே பாலாவுக்கு சொந்தமா?" எனக் கேட்டவளை வினோதமாக பார்த்த அல்லி எதற்கு வம்பென்று மொத்தமாக தலையசைத்து வைத்தாள்.

"இந்த பக்கம் முழுசும் நம்மோடதுதான் பாப்பா.. இதை தாண்டி போனா நெல்லும் கரும்பு காடும் இருக்கும்.!" என்றாள்.

பூர்ணிமாவுக்கு ஆச்சரியத்தில் விழிகள் விரிந்தது.

"அவ்வளவு வயலா?" என்றாள் அதிர்ச்சியோடு.

"ம்.!" என்றவள் தென்னத்தோப்பின் இடையே இருந்த ஒற்றையடி பாதைக்குள் நுழைந்தாள்.

"இப்படி வாங்கம்மா.. வயலுக்கு குறுக்கு வழி!" என்று அழைத்துச் சென்றாள்.

"பக்கத்துல மனுசங்களே இல்ல.. எப்படிக்கா குழம்பு தீர்ந்துப் போனா ஓசி குழம்பு கேட்பாங்க?" சந்தேகத்தை கேட்ட பூர்ணிமாவை கண்டு சிரித்தாள் அல்லி.

"அந்த பக்கம் பெரிய பாட்டனோட வீடு வயலோரத்துலயே இருக்கு. நம்ம வீட்டு மாடியில் நின்னு கூப்பிட்டா கூட அவங்களுக்கு கேட்கும். ஓசி குழம்பு எதுக்கும்மா நான் இருக்கையில்?" எனக் கேட்டவள் பூர்ணிமாவுக்கு வழி காட்டியபடி முன்னால் நடந்தாள்.

குறுக்கு வழி என்று சொன்னாலும் கூட அந்த தென்னந்தோப்பை தாண்டுவதற்குள் கால் வலிக்க ஆரம்பித்து விட்டது பூர்ணிமாவுக்கு.

தென்னந்தோப்பை தாண்டி இருந்த கரும்பு காடு சலசலத்துக் கொண்டிருந்தது. வியப்பாக சுற்றிப் பார்த்தாள்.

"இந்த பக்கம் கொஞ்ச தூரம் போனா நெல்வயல் வரும் பாப்பா!" என்ற அல்லியிடம் இடம் வலமாக தலையசைத்தாள் பூர்ணிமா.

"இதுக்கு மேல என்னால நடக்க முடியாது. எப்படி திரும்பிப் போறதுன்னு யோசனையா இருக்கு அக்கா.. இவ்வளவு வயல். நிறைய வருமானம் வருமே.. அப்புறம் ஏன் பாலா அவ்வளவு கடன் வாங்கி வச்சிருக்கான்?" கேள்வி தனக்கு சம்பந்தம் இல்லாதது போல தோன்றியது அவளுக்கு.

"எல்லாம் கம்பெனிக்கு வாங்கியதுதான். வீட்டுல இரண்டே கார்தான் இருக்கு. மீதியெல்லாம் வித்துட்டாங்க. அம்மாவோட எல்லா நகையும் பேங்க்லதான் இருக்கு. பேங்க்ல நிறைய லோன் வாங்கி வச்சிருக்காரு தம்பி.. எங்கெங்கேயோ கடனும் இருக்கு. எல்லாம் அந்த கம்பெனிக்குதான். ஆனா இன்னும் லாபம் வரவே இல்ல.. பாவம் தம்பி.. ராத்திரியும் பகலுமா உழைச்சிட்டு இருக்கு!" என்றாள் வருத்தமாக.

'அவ்வளவு கடன்லயும் வயலை விற்காம இருக்கானே.. நல்லவன்தானோ?' என்று தனக்குள் கேட்டாள் பூர்ணிமா.

"போலாமாக்கா?" எனக் கேட்டபடி திரும்பியவள் யாரோ திடீரென்று காலை பற்றவும் பயந்து துள்ளி விழுந்தாள்.

நாகேந்திரன் அவளின் காலை பற்றிக் கொண்டிருந்தார்.

"அண்ணே.." அல்லி அவரை அழைத்துப் பார்த்தாள்.

பயந்து நின்றுக் கொண்டிருந்த பூர்ணிமாவால் அசையவும் முடியவில்லை. காலை இறுக்கமாக பற்றி இருந்தார் அவர். அழுதுக் கொண்டிருந்தார். பூர்ணிமாவுக்கு பயமும் அதிர்ச்சியும் சரி சமமாக இருந்தது.

கதறி அழுதார் அவர். அல்லிக்கு பரிதாபமாக இருந்தது‌.

"அண்ணே.. என்ன காரியம் பண்றிங்க? அவளை விடுங்க!" என்றாள்.

நாகேந்திரன் மறுப்பாக தலையசைத்தான். பூர்ணிமாவை பார்த்து கை கூப்பினார்.

"பைத்தியமாக்கா இவர்? ஏன் என் காலை பிடிச்சி அழறாரு?" அவரை காணுகையில் அவளுக்கு துக்கம் தொண்டையில் அடைப்பதை போலிருந்தது.

"இ.. இவர் நம்ம வீட்டு வேலைக்காரன் பாப்பா.. பைத்தியம்தான். நம்ம வீட்டு திண்ணையில் இருந்தார் இவ்வளவு நாளா.. உங்களுக்கு கல்யாணம் ஆனதால சுடுகாட்டுல வந்து படுத்துட்டு இருக்காரு.!" என்றாள்.

பூர்ணிமாவுக்கு நெஞ்சம் வலித்தது.

"பைத்தியம்ன்னு சொல்றிங்க.. அப்புறம் ஏன்க்கா சுடுகாட்டுல படுக்க விட்டிருக்கிங்க?" எனக் கேட்டவள் "நான்.. நான் வீட்டுக்கு போறேன் அக்கா.. இவரை வீட்டுக்கு கூட்டி வாங்க.. ரொம்ப பாவமா இருக்காரு. சாப்பிட்டாரா இல்லையான்னு கூட தெரியல!" என்றவள் அவரை விட்டு விலகி நடந்தாள்.

அவர் தரையில் தலை வைத்து அழுதார். அவளின் பாத சுவட்டில் கை வைத்துக் கொண்டிருந்தார். பூர்ணிமாவுக்கு திரும்பிப் பார்க்கவே பயமாக இருந்தது.

பூர்ணிமா வீடு வந்து சேர்ந்தபோது பூமாறன் வாசலில் நின்றிருந்தான்.

"எங்கே போன?" எனக் கேட்டான்.

"சு..சும்மா சுத்தி பார்க்க!" என்றவளின் முகத்தில் இருந்த வியர்வையை பார்த்தவன் "என்ன ஆச்சி?" என்றான்.

"ஒ.. ஒன்னும்‌ இல்ல.!" என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் நாகேந்திரன் வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே வந்தார்.

பூமாறன் அதிர்ச்சியோடு பூர்ணிமாவை பார்த்தான்.

"பூரணி நீ உள்ளே போ!" என்றான் அவசர குரலில்.

பூர்ணிமா திரும்பிப் பார்த்தாள். நாகேந்திரனின் உடமைகளை சுமந்தபடி நாகேந்திரனை பின்தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தாள் அல்லி.

"அக்கா.. அவரை ஏன் இங்கே கூட்டி வரிங்க?" என்று கத்தினான் பூமாறன்.

"நான்தான் கூட்டி வந்தேன்!" பூர்ணிமா சொல்லவும் அதிர்ச்சியோடு அவள் புறம் திரும்பினான்.

"பாவம் பைத்தியம்.. சுடுகாட்டுல விட்டு வச்சிருக்கிங்க. இவ்வளவு பெரிய‌ வீட்டுல திண்ணையில் ஒரு ஓரமா கூடவா அவருக்கு இடம் தர கூடாது?" வருத்தமாக கேட்டாள்.

பூமாறன் நெற்றியை தேய்த்தான். நாகேந்திரன் பூர்ணிமாவை பார்த்து அழுதபடியே கை கூப்பினார். பூர்ணிமாவுக்கு ஏதோ போல இருந்தது.

"அல்லியக்கா.. அவருக்கு சாப்பாடு கொடுங்க!" என்றவள் வீட்டுக்குள் சென்றாள்.

"அடுத்த பிரச்சனையை இழுத்து விட்டுட்டா.. இவளால நாள் முழுக்க எனக்குதான் டென்சன்.!" என்று புலம்பினான் பூமாறன்.

"பாவம் தம்பி.. என்ன இருந்தாலும் நம்ம வீட்டு மாப்பிள்ளை.. எத்தனை வருசம்தான் தண்டனை அனுபவிப்பாரு? பூரணி பாப்பாவுக்காகவாவது இவரை மன்னிக்கலாம் இல்ல?" எனக் கேட்டாள் அல்லி.

"அவளுக்கு மட்டும் விசயம் தெரிஞ்சா இந்த ஆள் முகத்துல காறி துப்புவா அக்கா.. இந்த ஆள் செத்தா கூட எனக்கெல்லாம் பரிதாபமே வராது.!" என்றவன் நாகேந்திரனை தப்பி தவறி கூட பார்க்க விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

இரண்டு நாட்கள் சென்று விட்டது. பூர்ணிமாவின் செருப்பை தினமும் துடைத்து வைத்தார் நாகேந்திரன். அவளை காணும் போதெல்லாம் கை கூப்பி அழுதார். திண்ணையை சுத்தமாக வைத்துக் கொண்டார். வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களை பிடுங்கி போட்டார். பூர்ணிமா பார்வையில் தெரியும் போதெல்லாம் மௌன கண்ணீரோடு அவளை பார்த்தார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENTS

SHARE

FOLLOW
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN