நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 2

"சி... சிவசக்தி..." மகேஷிற்கு சிரிக்க வேண்டும் போல இருந்தது. 'இந்த வீட்டுல சக்தியோட பெயரை ஒரு ஆள் சொல்றாங்க. இது நிஜமா கனவா?'

"எந்த சிவசக்தி"

" நம்ம ஊர் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா இருக்குற சிவசக்தி..." தயங்கியபடி சொன்ன சந்தியாவை நம்பாமல் பார்த்தான் மகேஷ்வரன்.

"உனக்கெப்படி அவங்கள தெரியும்..?"

'உண்மையை சொன்னா ஒரு கொலை விழும்... மாமாக்கிட்ட பொய் சொன்னா நாம செத்தோம்...என்ன செய்யலாம்...'

"சந்தியா சீக்கிரம் கீழே வா..." தன் பாட்டியின் குரல் கேட்டதும், "நாம அப்புறமா பேசலாம் மாமா..." எனக் கூறி துள்ளிக் கொண்டு ஓடினாள் சந்தியா.

குளியலறையில் புகுந்து தன் சட்டையை கழட்டி வீசியவன் தன் நெஞ்சில் வடுவாக பதிந்திருந்த சிவசக்தி என்ற பெயரின் மீது விரலை ஓட விட்டான்.

"சிவசக்தி நீ ஒரு ராட்சசிடி. உன்னை சந்திச்சது நான் பண்ண பாவம்டி. உன்னை காதலிச்ச பாவத்துக்கு தினம் தினம் இப்படி கொல்லுறியேடி..." என்றவனின் புலம்பலை வழக்கம் போல அவனின் குளியலறை சுவர்களே கேட்க தொடங்கின.

சிவசக்தி காவல் நிலையத்திற்குள் ‌நுழைந்த மறு நொடியே "மேடம் எங்களை காப்பாத்துங்க..." என்று அழுதபடி ஓடி வந்தாள் ஓர் இளம் பெண்.

"என்ன‌ பிரச்சனைம்மா..?" என் விசாரித்து அப்பெண்ணை அருகிலிருந்த நாற்காலியில் அமர வைத்து சிவசக்தி "வனஜாக்கா தண்ணீர் கொண்டு வாங்க.." என உள் புறம் திரும்பி குரல் கொடுத்தாள்.

கண்ணீர் மாலை மாலையாக வர சிவசக்தியை கெஞ்சலோடு பார்த்த அப்பெண் "மேடம் என் சிவாவை எப்படியாவது ‌காப்பாத்துங்க... ப்ளீஸ்.."என்றாள்.

அவளின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த புது மஞ்சள் தாலியை சந்தேக கண்ணோடு பார்த்தாள் சிவசக்தி.

"சிவா யாரு?"

"என் புருசன் மேடம்... நேத்து தான் கல்யாணம் ஆச்சு.."

"இப்போ எங்கே அவன்?"

வனஜா கொண்டு வந்த தண்ணீரை குடித்த அப்பெண் "அவரை எங்கப்பா கூட்டிட்டு போயிட்டார் மேடம்..."என்றாள். உடனே தேம்பியழ ஆரம்பித்தாள்.

"விசயம் என்னன்னு முழுசா சொல்லும்மா..."

"மேடம் என் பேர் அன்புச் செல்வி. நானும் சிவாவும் தனியார் நிறுவனம் ஒன்னுல ஒன்னாதான் வேலை செய்யறோம். நாங்க இரண்டு பேரும் ஒன்னரை வருசமா காதலிக்கிறோம்...
ஒரு மாசத்துக்கு முன்னால் இந்த விசயம் எங்க இரண்டு வீட்டுலயும் தெரிஞ்சிடுச்சி... நாங்க இரண்டு பேரும் வேற வேற சமுதாயத்தை சார்ந்தவங்க... அதனால எங்க இரண்டு வீட்லயுமே எங்க காதலை ஏத்துக்கல. அதுவுமில்லாம எங்கப்பா எனக்கு வேற இடத்தில மாப்பிள்ளை பார்த்தாரு...
எங்கப்பா மேல எனக்கு பயங்கர கோபம், அதனால மாப்பிள்ளை வீட்டார் முன்னாடியே நான் என் காதல் விசயத்தை சொல்லிட்டேன்... அந்த கோபத்தில எங்கப்பா என்னை பயங்கரமா அடிச்சிட்டாரு. அதுவுமில்லாம அவர்கிட்ட அடி வாங்காம தப்பிக்க டிரை பண்ணும்போது மாடிப் படிக்கட்டுல ஸ்லிப் ஆகி கீழே விழுந்துட்டேன்...
இரண்டு வாரம் நான் ஆஸ்பிட்டல்லதான் இருந்தேன்...இது சிவாவுக்கு தெரிஞ்சி ஆஸ்பிட்டல்ல இருந்து யாருக்கும் தெரியாம என்னை கூட்டிட்டு போயிட்டான்..வெளியூர்ல இருந்த எங்க பிரெண்ட் வீட்டுல ஒரு வாரம் தங்கியிருந்தோம். நேத்து கல்யாணம் கூட பண்ணிக்கிட்டோம்..ஆனா இது எப்படி எங்கப்பாவுக்கு தெரிஞ்சதுன்னு தெரியல... அவர் திடீர்ன்னு எங்க பிரெண்ட் வீட்டுக்கு வந்துட்டாரு... ரொம்ப நல்லவராட்டம் பேசி எங்களை ஊருக்கு கூப்பிட்டாரு.. நாங்களும் நம்பி கூட வந்தோம்...ஆனா எங்க அண்ணன் எங்கப்பாவோட பிளான் என்னன்னு எனக்கு ரகசியமா சொல்லி என்னை மட்டும் யாருக்கும் தெரியாம தப்பிக்க வச்சிட்டான்... இப்போ நீங்க மட்டும் எங்களுக்கு உதவி பண்ணலன்னா அவங்க என் சிவாவை கொன்னுடுவாங்க மேடம்... தயவுசெய்து காப்பாத்துங்க மேடம்..."

"கொன்னுடுவாங்களா?" அதிர்ச்சியாக கேட்டாள் வனஜா.

"ஆமா மேடம்...அவங்க என் சிவாவை மகேஷ்வரன்கிட்ட கூட்டிட்டு போக போறாங்க... மகேஷ்வரனோட மாந்தோப்புக்குள்ள காதலர்களாக போன யாருமே உயிரோட திரும்பி வந்தது இல்லை... தயவுசெஞ்சி சீக்கிரம் வந்து காப்பாத்துங்க மேடம்..."

மகேஷ்வரன் பெயரை கேட்டதும் சிவசக்திக்கு இதயம் வலித்தது. அவனுக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என அவள் ஆயிரம் முறை தனக்குத்தானே சொல்லிக் கொண்டாலும் கூட ஏனோ அவனின் தவறுகளை யார் யாரோ சொல்லிக் கேட்கையில் அந்த தவறுகள் அவளின் இதயத்தில் காயங்களை உண்டாக்குவதை நிறுத்துவதில்லை.

அவனை மறப்பதற்காக அவள் எடுக்காத முயற்சிகளே இல்லை. ஆனால் அவனை மறக்க அவளால் முடியவே இல்லை.

இரவின் வானை பற்றி நினைக்கையில் நிலவும் மீனும் எப்படி நினைவுக்கு வருமோ அப்படிதான் அவளின் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியிலும் அவளின் நினைவில் அவனே வாழ்ந்து வந்தான்.

தன் முன்னால் அழுதுக் கொண்டிருந்த அப்பெண்ணை பரிதாபமும் வருத்தமும் நிறைந்த கண்களோடு பார்த்தவள் "அழாம இரு குட்டிம்மா. என்னால் முடிஞ்ச உதவியை நான் செய்யுறேன்." என்றாள்.

"வனஜா இந்த பொண்ணை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ. நான் இப்போ வந்துடுறேன்..."

காவல் நிலையத்தின் பின்னால் வந்தவள் அங்கே யாரும் இல்லாததை கண்டு சுவற்றில் சாய்ந்தபடி கண்களை மூடினாள்.

'எதுக்காக இப்படியெல்லாம் பண்ணுற மகேஷ்? எதுக்காக இப்படி ஊர் சாபத்தையும் அப்பாவி காதலர்கள் சாபத்தையும் வாங்கி கட்டிக்கிற? இதெல்லாம் தப்பு மகேஷ்...' தனக்குத்தானே பேசிக் கொண்டவளுக்கு கண்ணீர் கண்களின் ஓரம் துளிர்த்தது.

'பொம்பள புள்ள தேவையில்லாத விசயத்துக்கு அழக் கூடாது' தந்தையின் சொற்கள் நினைவுக்கு வரவும் இரண்டு முறை மூச்சை நன்றாக இழுத்து விட்டாள்.

செல்போனை கையில் எடுத்தவள் ஃபோன் செய்வதற்காக மகேஷ்வரனின் நம்பரை பதிந்தாள். மகேஷ் என்ற பெயரோடு அவனின் புகைப்படமும் திரையில் தோன்றியது... எல்லாமே ஒரு குருட்டு தைரியம்தான். 'நம்ம ஃபோனை யார் பார்க்க போறா..?' இல்லன்னா யாராவது போலிஸ் வேலையை பார்த்துக்கிட்டு ரவுடி போட்டோவையும் ஃபோன் நம்பரையும் தன்னோட ஃபோன்ல வச்சிருப்பாங்களா?

சிவசக்தி தன் ஃபோன் ஸ்க்ரீனில் தெரிந்த மகேஷ்வரன் புகைப்படத்தை ஒரு விரலால் தீண்டினாள். வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்தான்.

"நாற்பத்தி ஒரு வருசமாச்சு உனக்கு...நம்பற மாதிரியா இருக்கு? " கசப்பாக கேட்டவள் யாரோ வரும் ஓசை கேட்கவும் ஃபோனை ஆஃப் செய்து விட்டு திரும்பினாள்.

"மாமா..." அரக்க பரக்க உள்ளே வந்த சந்தியாவை கண்டு கண்ணாடியில் இருந்து முகம் திருப்பினான் மகேஷ்வரன்.

"என்ன சந்தியாம்மா..?"

"மாமா நீங்க நிஜமாவே சிவா அண்ணாவை கொல்லப் போறிங்களா?"

"யார் சிவா..?"

"என் தோழி மதுவோட அண்ணன். நீங்க அவரை கொன்னுடுவிங்கன்னு அன்புச் செல்வி அப்பாக்கிட்ட தாத்தா சொல்லிக்கிட்டு இருந்தாரு... மாமா வேணாம் மாமா... அப்படி பண்ணாதிங்க... சிவா அண்ணா ரொம்ப நல்லவரு... அவங்க வீட்டுக்கு நான் போகும் போது அவர் எவ்வளவு பாசமா பேசுவாரு தெரியுமா?"
கண்களில் கண்ணீர் துளிர்க்க பேசியவளை பார்த்து கசப்பாக சிரித்தவன் "நீ அவங்க வீட்டுக்கு போனது உன் அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்ன்னு முதல்ல யோசி.." என்றான்.

அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் சந்தியா.

"மாமா நீங்க ரொம்ப தப்பு பண்றிங்க.."

"பெத்த புள்ளைங்கள சாகடிக்க துடிக்கற அவங்க நல்லவங்க... ஆனா காசை வாங்கிக்கிட்டு அவங்க சொல்லுறதை செய்யற நான் தப்பானவனா?"

"அந்த மாதிரி காசு பாவம் மாமா..."

"ஆசைப்பட்டு எடுத்து போட்டுக்கிட்டு இருக்கியே இந்த வைர மோதிரம் இதுக்கு நான் அந்த பாவ காசை தான் தந்தேன்." என்றவன் விலகி நடக்க அவனின் பின் மண்டையில் எதுவோ மோதி கீழே விழுந்தது.
திரும்பியவன் வைர மோதிரம் தரையில் கிடப்பதை கண்டு சந்தியாவை பார்த்தான்.

"நீங்க இப்படியே தப்பான விசயங்களை மட்டும் செஞ்சிங்கன்னா ஒருநாள் இல்ல ஒருநாள் உங்க மாந்தோப்புல என்னையும் வெட்டி புதைச்சு அது மேல மாங்கன்னு வைக்க வேண்டி வரும்..." என்றவள் அவனை தாண்டி செல்ல அவளின் கைப்பிடித்து நிறுத்தினான்.

"என்ன சொல்ற?"

"உங்களுக்காகவே நீங்க ஒத்துக்காத ஒரு சமுதாயத்தை சேர்ந்த பையனா பார்த்து காதலிக்கப் போறேன்..."
அவளின் வார்த்தையில் கோபமடைந்தவன் அவளை அடிக்க கையை ஓங்கினான். சந்தியாவின் கண்களில் மிரட்சி தெரிந்தது. பற்களை கடித்த படி கையை கீழே இறக்கினான்.

"உன் சாவை என் கையில் தர நினைக்காத‌.. ஏனா அதுக்கு உன் அப்பாவும் உன் தாத்தாவும் இருக்காங்க..." சந்தியா மறு வார்த்தை பேசும் முன் அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

மகேஷ்வரனின் அப்பா முத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மகேஷின் அம்மா இவனை கண்டதும் இவனுக்கும் உணவு எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

"சாப்பாடு வேணாம் அம்மா... பசிக்கல..."

சாப்பாட்டை முடித்து விட்டு எழுந்த முத்து "பக்கத்தூர்ல ஒரு பொண்ணு இருக்கு. பார்த்துட்டு வரியா?" என்றார்.

"நாற்பது வயசுக்கு மேல ஆச்சி. இதுக்கு மேல என்ன கல்யாணம் கண்றாவியெல்லாம்..? எனக்கு ஒரு எழவும் தேவை இல்லை.." என்றான் அம்மாவை பார்த்தப் படி.

"இன்னமும் அவளதான் மனசுல நெனச்சிக்கிட்டு இருக்கியோ..?"

அப்பாவின் வார்த்தைகளை கேட்டு திரும்பியவன் அவருக்கு பின்னால் குழப்பமாக பார்த்த சந்தியாவை பார்த்தான்.

"சந்தியா என் ஃபோனை ரூம்லயே வச்சிட்டு வந்துட்டேன்... எடுத்துட்டு வா..." என்றான்.

அவள் கோபத்துடன் பழிப்புக் காட்டி விட்டு சென்றாள். பொங்கி வந்த சிரிப்பை அடக்க இரும்பலின் மூலம் மறைத்தவாறு அப்பாவை பார்த்தான்.

"நீங்க சொன்னது போல நான் அவளை விட்டு இருபது வருசங்களாச்சி... என் மனசுல யாரும் கிடையாது. தேவையில்லாத கற்பனை பண்ணி நீங்க கடுப்பாவறதும் இல்லாம என்னையும் சேர்த்து கடுப்பேத்தாதிங்க..."

"இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வேண்டாமா?" அம்மா பழைய பல்லவியை பாடினாள்.

"இந்த வீட்டுக்கு வாரிசு சந்தியா மட்டும் போதும்..."

"சந்தியாவையே கட்டிக்கிறியா..?"

இதை கேட்டவுடன் மகேஷிற்கு ரத்தம் கொதித்தது. அப்பாவை திரும்பி பார்த்தான். அப்பா அவனின் பதிலுக்கு காத்திருப்பது தெரிந்தது.

மகேஷின் அறையில் செல்போனை தேடி எடுத்த சந்தியா திரும்பி செல்ல முயன்ற போது மகேஷின் போனில் அலாரம் அடித்தது.

'என்னவளின் பிறந்தநாள்'

"யாருக்கு இன்னைக்கு பிறந்தநாள்?" என தனக்குத்தானே பேசிக் கொண்டு வந்தவள் பாட்டியும் மாமாவும் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டு விட்டு இதயம் படபடக்க தூணின் பின் மறைந்து நின்றாள்.

'பாட்டிக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா..? என்னை என் அம்மாவை போலவும் அப்பாவை போலவும் பார்த்துக்கற மாமாவுக்கும் எனக்கும் கல்யாணமா..?'

மகேஷ்வரன் பதில் ஏதும் பேசாமல் சிலையாக நிற்க சந்தியாவின் உள்ளங்கை வேர்வையில் பிசுபிசுத்தது.
அவன் பதில் கூறாமல் வாசல் நோக்கி நடக்க "என்னடா பதில் ஏதும் சொல்லாம போற..." என்றார் அப்பா.

"நீ உன் மகளை கல்யாணம் பண்ணிப்பியா?" எனக் கேட்ட மகேஷின் முகம் கோபத்தில் செவ்வானமாய் சிவந்திருந்தது.

"அவ உன் மக இல்ல... உன் அக்கா மக..."

"பெத்தாதான் மகளா? வளர்த்தால் மக இல்லையா? அக்கா அவளை பெத்தெடுத்த அடுத்த நொடியே செத்துப் போயிட்டா... அவளோட அப்பாவுக்கு சந்தியா என்ன படிக்கறா சந்தியாவுக்கு எத்தனை வயசாகுதுன்னு கூட தெரியாது... சந்தியாவை ஒரு நாள் குழந்தையில் இருந்து நான்தான் வளர்க்கிறேன்... இன்னும் சொல்லனும்னா அவளுக்கு நான் வெறும் தாய்மாமன் மட்டுமில்ல...அவளோட தாயை விட ஒசத்தி நானு... பேச வாய் இருக்கறதுக்காக எது வேணாலும் பேசலாம்ன்னு நினைக்காதிங்க... உறவு முறை இருக்குதுங்கற ஒரே காரணத்துக்காக எங்க உறவை கேவலப்படுத்தாதிங்க..."

பட்டாசாக பொரிந்து விட்டு வெளியே வந்தவனை ஓடி வந்து கைப் பிடித்து நிறுத்தினாள் சந்தியா.

"மாமா ஃபோன்..."

ஃபோனை வாங்கியவன் காரில் ஏற முயல "மாமா.." என்றாள்.

"என்ன? உனக்கென்ன வேணும்?"

"என்னவள்... இந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் என்ன மாமா..."

அவளை குழப்பமாக பார்த்தவன் "அர்த்தம் வந்து 'மை கேர்ள்' இல்லன்னா 'மை வுமன்'... ஏன்?" என்றான்.
"உங்க ஆளுக்கு இன்னைக்கு பிறந்தநாளா...?"

புருவத்தை நெரித்த படி அவன் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைக்க சொதப்பலாக சிரித்தபடி பின்னால் நகர்ந்தாள்.

"நான் எந்த தப்பும் பண்ணல... இந்த ஃபோன் தான் அலாரம் அடிச்சு காட்டிக் கொடுத்துச்சி..."

"தனிமனித உரிமை எல்லோருக்கும் உண்டு.. அதை உன் தாத்தா பாட்டிக்கிட்ட எதிர்ப் பார்க்க முடியாது... ஆனா உனக்கு அது புரியும்ன்னு நினைக்கிறேன்..."

அமைதியாக தலையாட்டினாள் சந்தியா.

பெருமூச்சு விட்டபடி அவன் காரில் ஏற "மாமா" என் மீண்டும் தடுத்தாள்.

"இன்னும் என்ன?"

"முடிஞ்சா உங்க வுமனுக்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க..." என்றவள் நிற்காமல் உள்ளே ஓடி விட்டாள்.

'என்னோட வாழ்த்தே அந்தரத்துல அநாமத்தா நிக்க போகுது... இதுல உன் வாழ்த்து வேறயா...?' என் நினைத்தபடி காரை ஓட்டியவன் காவல் நிலையத்தின் முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறக்கினான்.

"மேடம் மகேஷ்வரன் ஸ்டேசனுக்கு கையெழுத்து போட வந்துருக்காரு..."

மகேஷ்வரன் மீது எப்போதும் ஏதாவது ஒரு வழக்கு இருந்து கொண்டேதான் இருந்தது. அதனால் அவன் ஜாமின் வாங்கி வருடம் முழுக்க வெளியில் சுற்றினாலும் கூட தினம் தினம் இந்த ஸ்டேசனுக்கு வந்து கையெழுத்து போட்டாக வேண்டும்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த சிவசக்தி தன் கையிலிருந்த ஃபோனை பாக்கெட்டில் போட்டப்படி ஸ்டேசனுக்குள் நுழைந்தாள்.

'இன்னைக்கு உன்னை நான் சும்மா விடப் போறதில்ல மகேஷ்வரா...'

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்பு உள்ளங்களே.. கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top