பௌர்ணமி 6

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாகேந்திரனை காணும் போதெல்லாம் பூர்ணிமாவிற்கு மனம் பிசைந்தது. அவரை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று கூட சொன்னாள். ஆனால் அவர்தான் கேட்கவில்லை.

அவர் உண்ணும் உணவை கண்டு பரிதாபப்பட்டாள்.

அவருக்கு நல்ல உணவை தந்தாள். ஆனால் அவர் மறுத்து தட்டை ஒதுக்கி வைத்தார்.

"யார் இவர்? ஏன் இப்படி பைத்தியமா இருக்காரு?" என மாமனாரிடம் கேட்டாள்.

"ஏதோ பைத்தியம். இங்கே வந்து விழுந்து சாகுது. எவ்வளவு துரத்தினாலும் போக மாட்டேங்குது.!" என்றார் அவர்.

பூர்ணிமாவுக்கு கோபம் வந்தது.

"ஏன் இவ்வளவு திட்டுறிங்க? இவரை ஏதாவது ஒரு ஹோம்ல சேர்த்து இருக்கலாம் இல்ல?" எனக் கேட்டாள்.

மரிக்கொழுந்து கோபத்தோடு அவளிடம் வந்தார்‌.

"உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு பூரணி. கண்ட நாய்க்கும் வக்காலத்து வாங்கி வச்சிட்டு இருக்காத!" என்று எரிந்து விழுந்து விட்டு நகர்ந்தார்.

பூர்ணிமாவுக்கு பயத்தில் முதுகு தண்டு சிலிர்த்து போனது‌. திருமணத்திற்கு முன்பு வரை முல்லை அவளை திட்டியதே இல்லை. இப்போது இவர் எரிந்து விழுந்தது ஏதோ போல இருந்தது. அவரின் குரலில் இருந்த வெறுப்பு நாகேந்திரனுக்கானது என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. தனக்கானது என நினைத்து மனம் வாடினாள்.

சின்ன வெறுப்புக்கு இவ்வளவு வாடுவோம் என்று அவளே நினைத்தது கிடையாது. அதிக பேரோடு பழகாதவள். தாயை தவிர வேறு யாரிடம் நெருங்கிடாதவள். இந்த புது குடும்பத்தின் பாசமும் விந்தையாக இருந்தது. அவர்களின் வெறுப்பும் வித்தியாசமாகவே இருந்தது.

மாமன் திட்டியதில் வெகு நேரம் சோகமாக இருந்தவள் மாலை நேரத்தில் பூமாறனிடம் சென்றாள்.

"மாமா." என்றாள்.

"ம்.!" என்றபடி தன் புத்தகத்திலிருந்து திரும்பி பார்த்தான் அவன்.

"அவர் பாவம் இல்லையா? நீங்களாவது அவரை கூட்டிப் போய் ஹாஸ்பிட்டல் சேர்க்கலாம் இல்ல?" எனக் கேட்டாள்.

பூமாறன் எழுந்து வந்தான்.

"உனக்கெதுக்கு இந்த தலைவிதி பூரணி? உனக்கு எக்ஸாம் இல்லையா? போய் அதை படி. இல்லன்னா அண்ணாவுக்கு போன் பண்ணி அவனோடு பேசு. அப்படியும் இல்லன்னா அத்தையோடு பேசு. எதுக்கு அந்த ஆளை பத்தி யோசிக்கிற.?" எனக் கேட்டான்.

"பார்த்தா பாவமா இருக்கு மாமா!" என்றவளை பரிதாபமாக பார்த்தான்.

என்ன சொல்வது அவளிடம்? அவள் நாகேந்திரனை வீட்டுக்கு அழைத்து வந்ததையே தன் அண்ணனிடம் இன்னும் சொல்லவில்லை பூமாறன். வந்தால் அவன் கத்துவான் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். இந்த லட்சணத்தில் பூர்ணிமா வேறு விடாமல் தொல்லை செய்துக் கொண்டிருந்தாள்.

"அடுத்தவங்களை பாவம்ன்னு நினைக்காத பூரணி.. இந்த உலகத்துல நிலை கண்ணாடியில் தெரியும் ஜீவனை விடவும் பெரிய பாவப்பட்டவர்கள் யாரும் இருக்க மாட்டாங்க. அவரை பாவம்ன்னு நினைக்கறதுக்கு பதிலா உன்னை பாவம்ன்னு நினைச்சி எக்ஸாம்ஸ்க்கு படி.. எனக்கு புத்தகத்தை திறந்தாலே பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு. நீ எப்படி இவ்வளவு கூலா இருக்கியோ!? அந்த ஆளை அண்ணன் இங்கிருந்து துரத்தினான். நீ கூட்டி வந்து வச்சிருக்க.. அவன் வந்தா உன்னைதான் கடிச்சி வைப்பான்.‌ என்னவோ பண்ணு.." என்றபடியே சென்று புத்தக மேஜையின் முன்னால் அமர்ந்துக் கொண்டான்.

பூர்ணிமா அவனை வெறித்து விட்டு நகர்ந்தாள். அந்த வீட்டில் இருந்த அனைவருமே கல்நெஞ்ச கிராதகர்கள் போலவே தோன்றியது. பாலாவின் மீது அதிகமாக கோபம் வந்தது. நாகேந்திரன் பைத்தியம் போல இருந்தாலும் அமைதியாக இருந்தார். பூர்ணிமாவை பார்த்தால் அழுவாரே தவிர வேறு ஏதும் செய்ய மாட்டார். பிறகேன் இவர்கள் அவரை வெறுக்கின்றார்கள் என்று குழம்பினாள்.

பாலா இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை போன் செய்துக் கொண்டிருந்தான். 'சாப்பிட்டியா, தூங்கினியா, என்ன செஞ்ச, என்ன செய்ற?' என்றுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆனால் இவள் திருப்பி எதுவும் கேட்கவில்லை. 'சாப்பிடவும் தூங்கவும் அவனுக்கு தெரியாதா? நான் கேட்டுதான் அவன் அதையெல்லாம் செய்ய போறானா?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

"உனக்கு ஏதாவது வேணுமா? நான் ஏதாவது வாங்கிட்டு வரட்டா?" எனக் கேட்டான் ஒருமுறை.

"தேவையில்ல. எனக்கு தேவையானதை என் அம்மா வாங்கி தருவாங்க!" என்றாள் இவள்.

அவன் பதில் பேசவில்லை. ஆனாலும் அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் போன் செய்து பேசினான்.

'சரியான விடாக்கண்டனா இருக்கான்!' என்று மனதுக்குள் பொறிந்தாள்.

ரோஸினி இரண்டு மூன்று முறை வீட்டிற்கு வந்தாள்.

"நீதான் பூரணின்னு சொல்றாங்க. எனக்கு உன்னை பத்தி அவ்வளவா ஞாபகம் இல்ல. உன்னை விட பெரியவ நான். அக்கான்னு கூப்பிடு!" என்றாள்.

"சரிங்க அக்கா!" என்றவளை சந்தேகமாக பார்த்தாள் அவள். இவளின் குரலில் நக்கல் கிண்டல் ஏதும் இருக்கிறதா என்று யோசித்தாள். உண்மையில் இருந்தது. ஆனால் அதை அவளால்தான் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

ரோஸினி பூர்ணிமாவை விட சற்று உயரமாக இருந்தாள். எப்போதும் மணமாக இருந்தாள். தலையில் பூக்கள் குறையாமல் இருந்தது. வாய் எதையாவது மென்றுக் கொண்டே இருந்தது.

"மாமாவும் நானும் சேர்ந்து போகாத தியேட்டரே இல்ல. எல்லா இடத்துக்கும் போயிருக்கோம். ஊர் சுத்த என்னை யூஸ் பண்ணியிருக்காருன்னு எனக்கு இவ்வளவு நாளா தெரியாம போச்சி!" என்றபடி மூக்கை உறிஞ்சினாள் ஒருமுறை.

பூர்ணிமா பற்களை அரைக்கும் முன்னால் ஹாலுக்கு வந்து விட்ட பூமாறன் "பொய்யா பேசாத ரோஸி.. அண்ணன் உன்னை மட்டும் தனியா கூட்டி போன மாதிரி சொல்லிட்டு இருக்க.. நம்ம நாலு வீட்டு குடும்பத்துல இருந்தும் பதினைஞ்சி பேரும் அடிக்கடி ஊர் சுத்த போறது வழக்கம்தானே? ஆனா நீ ஏன் உங்களோடு வந்த மீதி பதிமூணு பேரையும் சொல்லாம இருக்க?" எனக் கேட்டான்.

ரோஸினி அவனை முறைத்துப் பார்த்தாள்.

"போடா புல்டோசர் தலையா!" என்றாள்.

"கரும்பு மெஷின் மாதிரி எதையாவது அரைச்சிக்கிட்டே இருக்க நீ. இதுல என்னை திட்டுறியா?" என கேலியாக கேட்டான் அவன்.

இந்த ரோஸினி சொல்வதில் பாதி பொய் உள்ளதை புரிந்துக் கொள்ள முடிந்தது பூர்ணிமாவால். பாலாவுக்கு ரூட்டு விட்டுக் கொண்டிருந்திருக்கிறாள் என்பதையும் யூகிக்க முடிந்தது. தன்னை விட நன்றாகதான் இருந்தாள் அவள். பிறகேன் இந்த பாலா தன்னை திருமணம் செய்தான் என்று புரியாமல் குழம்பினாள்.

இன்னொரு முறை வந்தபோது "நீ உன் அம்மாவை மாதிரியே இருக்க பூரணி!" என்றாள்.

பூர்ணிமா புன்னகைத்தாள்.

"ஆனா உன் அம்மா உன்னையாவது நினைச்சி இருக்கலாம்!" என்று விழிகளை துடைத்தாள்.

'என் அம்மா என்னை நினைச்சதாலதான் இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்க!' என்றெண்ணியவள் அதை வெளியே சொல்லவில்லை.

ரோஸினி மேலே பேசும் முன் "பூரணி!" என அழைத்து விட்டான் பூமாறன். அதனால் ரோஸினி அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள்.

"வெறித்தனமான லவ்வா இருக்கும் போல.! ஆனா நம்மை ஏன் டார்ச்சர் பண்றா இவ? அந்த ஆணழகனை நான் என்னவோ சொக்குப் பொடி போட்டு மயக்கி கல்யாணம் பண்ண மாதிரி பேசுறா!" என்று முணுமுணுத்தாள் பூர்ணிமா.

மறுநாள் காலையில் பாலா வீடு வந்து சேர்ந்தான். வாசலில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான். அவனின் பார்வையில் முதலில் தெரிந்தது வீட்டு திண்ணையின் ஒரு ஓரமாக இருந்த நாகேந்திரன்தான்.

காரின் கதவை அறைந்து சாத்திவிட்டு திண்ணை ஏறியவன் கட்டிலில் அமர்ந்திருந்தவரின் நொந்துப் போன சட்டையை பிடித்து மேலே தூக்கி நிறுத்தினான்.

"யாரை கேட்டு இங்கே வந்திங்க? நீங்க இனி இந்த வீட்டு பக்கம் வந்தா நான் மனுசனா இருக்க மாட்டேன்னு தெளிவா சொன்னேனா இல்லையா?" எனக் கேட்டபடி அவரைப் பிடித்து தூர தள்ளினான்.

அவனின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத நாகேந்திரன் நிலை தடுமாறி திண்ணையிலிருந்து கீழே விழுந்தார். நான்கைந்தடி உயர திண்ணைதான் என்றாலும் கூட இவன் தள்ளியதில் வலு இருந்ததால் பொத்தென்று விழுந்து விட்டார் அவர். விழுந்ததில் நெற்றி ஓரத்தில் அடி பட்டு விட்டது அவருக்கு. ரத்தம் நொடியில் கொட்டி விட்டது.

அதே நேரத்தில் தனது உணவை முடித்துக் கொண்ட பூர்ணிமா நாகேந்திரனுக்கு உணவை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள். அவள் வாசலுக்கு வரவும் பாலா நாகேந்திரனை பிடித்து கீழே தள்ளவும் சரியாக இருந்தது. அதிர்ச்சியில் உணவு தட்டை கீழே விட்டு விட்டாள்.

பாலா சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். அதிர்ந்தான். கொஞ்சம் பயந்தான்.

ஆனால் பூர்ணிமா அவனை கண்டுக் கொள்ளாமல் திண்ணையை விட்டு கீழே இறங்கி ஓடினாள். நாகேந்திரனை பிடித்து எழுப்ப முயன்றாள்.

பாலாவுக்கு கோபமாக வந்தது. பூர்ணிமாவின் அருகே சென்று அவளின் கையை பற்றினான்.

"அந்த ஆளை தொடாத.. விடு!" என்றான்.

பூர்ணிமா திரும்பினாள். கண்கள் சிவந்திருந்தது அவளுக்கு. இடது கையால் ஓங்கி ஒரு அறையை விட்டாள் அவனுக்கு.

"நிஜமா நீ மனுசனாடா? வயசான ஒரு மனுசன்.. அதுவும் பைத்தியமா இருக்காரு.. இவரை ஏன்டா இப்படி பிடிச்சி தள்ளின? ஈவு இரக்கங்கறதெல்லாம் உன் மனசுல கொஞ்சம் கூட இல்லையா?" என கோபமாக கேட்டாள்.

'வீட்டுக்கு வந்த உடனே நல்ல வரவேற்பு' என நினைத்தபடி தன் கன்னத்தை பிடித்தவன் "கோபத்தை கிளறாத பூர்ணி. நான் திருப்பி அறைஞ்சேன்னா அப்புறம் நீ என்ன ஆவன்னு யோசி!" என்றான் கர்ஜனையாக.

பூர்ணிமா மீண்டும் கையை ஓங்க முயன்றாள். ஆனால் அதற்குள் நாகேந்திரன் பாலாவின் காலை பற்றி விட்டிருந்தார். பாலாவை பார்த்து கை கூப்பினார். அழுதார். அவரின் கண்ணீரை வெறித்த பாலா "என் காலை விடுங்க!" என்று அருவெறுப்பாக சொல்லியபடி நகர்ந்தான்.

பூர்ணிமாவுக்கு பாலாவை கண்டு ஆத்திரம்தான் வந்தது.

அவள் பேசும் முன் அவளை முறைத்த பாலா "உள்ளே போ!" என்றான்.

பூர்ணிமா வெறித்தாள்.

"போடி உள்ளே.!" என்று கர்ஜித்தான்.

"நான் மாட்டேன். நீ ஒரு மிருகம். இவரை கொன்னுடுவ!" என்றவள் பாலாவின் காலடியில் இருந்த நாகேந்திரனின் கையை பற்றினாள்.

"நீங்க எழுங்க ஐயா.. அவன் காலை விடுங்க!" என்றாள்.

பாலா பற்களை கடித்தபடி அவளை முறைத்தான்.

"பூர்ணி.!" என்று எச்சரித்தான்.

"மரியாதையா போயிடு பாலா.. நான் கடுப்புல இருக்கேன். என்கிட்ட வாங்கி கட்டிக்காத.. உன் வீட்டுல இருக்கும் எல்லோரும் இவரை அப்படி திட்டுறிங்க. வெறுக்கிறிங்க.. நீ துரத்தி விட்டிருக்க.. ஒரு ஹோம்ல சேர்த்தி விட மனசு இல்லன்னாலும் சாப்பாடு போட கூடவா உங்களுக்கு இரக்கம் வரல?" எனக் கேட்டாள்.

"பர்ஸ்ட் விசயம் அவர் பைத்தியம் கிடையாது. தலையிலும் முகத்திலும் வெட்டாத முடியோடு இருக்கும் எல்லோரும் பைத்தியம்ன்னு நீ நினைக்கறதை முதல்ல நிறுத்து. நாங்க ஒன்னும் இவரை இங்கே இருக்க சொல்லல.. போய் தொலையத்தான் சொல்றோம். ஆனா இங்கே வாசல்ல கிடந்து எங்க உயிரை வாங்கிட்டு இருக்காரு. உனக்கு அவ்வளவு ஈவு இரக்கம் இருந்தா கொஞ்சம் விஷம் வாங்கிட்டு வந்து கொடு இந்த ஆளுக்கு. குடிச்சிட்டு சாகட்டும். எங்க வீட்டை பிடிச்ச சனியன் அதுக்கப்புறமாவது விட்டு போகட்டும்!" என்றவன் அவளையும் நாகேந்திரனையும் சேர்த்து முறைத்து விட்டு வீட்டுக்குள் சென்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW


நாளைக்கு ஒரு நாள் பௌர்ணமி அப்டேட் ஆகாது நட்புக்களே.. இந்த நாள்லதான் நான் டிரெக்கிங் போயிருந்தேன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN