பௌர்ணமி 7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாகேந்திரனின் நெற்றிக் காயத்திற்கு மருந்திட்டாள் பூர்ணிமா. அவரின் கலங்கிய கண்கள் கடைசி வரை அப்படியேதான் இருந்தது.

"அழாதிங்க ஐயா!" என்றவள் அவரின் முகம் பார்த்துவிட்டு "நீங்க எந்த ஊர் ஐயா?" எனக் கேட்டாள்.

நாகேந்திரன் மௌனமாய் அழுதார்.

"உங்க சொந்தக்காரங்க யாரும் இல்லையா? யாராவது இருந்தா அவங்க போன் நம்பர் கொடுங்க. நான் பேசுறேன்!" என்றாள்.

"அனாதைம்மா நான்!" என்றார் சிறு காற்றின் குரலில்.

பூர்ணிமா ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தாள்.

"பரவால்ல விடுங்க. பாலாவும் மத்தவங்களும் இனி உங்களை திட்ட மாட்டாங்க. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்.!" என்றாள்.

"இந்த பாவிக்கு பாவம் பார்க்காதம்மா.. உன் வாழ்க்கையை நீயாவது சந்தோசமா வாழு!" என்றவரை பாவமாக பார்த்தவள் மீண்டும் உணவு எடுத்து வந்து அவரிடம் தந்தாள்.

வெறும் சாதத்தை பாதி உண்டு விட்டு மீதியை கொண்டுச் சென்று கேட்டின் ஓரம் படுத்திருந்த நாயின் தட்டில் கொட்டி விட்டு வந்தார் அவர்.

பூர்ணிமா அவரை கட்டிலில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டாள்.

"தூங்குங்க ஐயா!" என்றுவிட்டு வீட்டுக்குள் வந்தாள்.

ஹாலில் அமர்ந்திருந்தார் மரிக்கொழுந்து. அவரின் அருகே அமர்ந்திருந்த பாலா தன்னை தாண்டிச் சென்ற பூர்ணிமாவை முறைத்தான். பூர்ணிமா அவனை கண்டுக் கொள்ளாமல் படியேறினாள்.

"இந்த புள்ளை ஏன்தான் இப்படி பண்ணுதோ? சொன்னா கேட்கவே மாட்டேங்கிறா.!" என்று புலம்பினார் மரிக்கொழுந்து. அவர் சொன்னது அவளின் காதிலும் விழுந்தது.

பூர்ணிமா தன் அறை கதவை சாத்திய அதே வேளையில் அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் பாலா.

முறைத்தாள். "கதவை தட்டிட்டு உள்ளே வா!" என்றாள்.

"பல்லை தட்டிடுவேன் பூர்ணி.!" என்றவனை யோசனையோடு பார்த்தாள். வியர்வை வாசத்தோடு இருந்தான். பயண களைப்பு கண்களில் தெரிந்தது. இந்த நான்கு நாட்களில் அவன் எந்த விதத்திலும் குறையவில்லை என்று கணக்கிட்டு கொண்டாள்.

"உன்னை படிச்சிட்டேன் பாலா!" என்றாள்.

புரியாமல் விழித்தான் பாலா. கைகளை கட்டியபடி அவன் முகம் பார்த்து நின்றாள் அவள். அவளது டாப்பில் வண்ண அச்சு பூக்களாக சிதறி இருந்தது. முடிச்சிடாமல் விட்டிருந்த தலைமுடி இரு பக்க தோளிலும் தவழ்ந்துக் கொண்டிருந்தது. கூந்தல் வழவழப்பாக இருக்கும் போல் தோன்றியது. தொட்டு பார்க்கும் ஆசை வந்தது அவனுக்கு. இப்படி கிறுக்குதனமான ஆசைகள் முன்பு வந்தது இல்லை. தலையில் தட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

"உன் மிரட்டல் உருட்டலுக்கு பின்னாடி எந்த வித கோபமும் இல்ல. உனக்கு என்னை பயமுறுத்தணும். அதுக்காக சும்மா முகத்தை குரங்காட்டம் வச்சிட்டு இருக்க!" என்றவளை நக்கலாக பார்த்தவன் "ரொம்பதான் ஆசை பூர்ணி!" என்றான்.

"எனக்கு உன்னை கொல்லணும் போல கோபம் பூர்ணி. நீ உன் அவுட்லைன்னை தாண்டிட்ட. நாங்க இத்தனை பேர் சொல்லியும் கேட்காம அந்த ஆளை கொஞ்சிட்டு இருக்க.. நான் பொறுத்து போக காரணம் என் அத்தை மேல நான் வச்சிருக்கும் மரியாதை மட்டும்தான்.!" என்றான் பற்களை கடித்தபடி.

"மரியாதை.? அன்னைக்கு நீதான்டா என் அம்மாவை பொம்பளைன்னு சொன்ன.. இன்னைக்கு என்னவோ புதுசா மரியாதைன்னு சீன் போட்டுட்டு இருக்க.!"

பாலா கண்களை மூடி திறந்தான்.

"பூர்ணி.. தயவு செஞ்சி அமைதியா போய் உன் வேலையை பார்!" என்றான் புன்னகையோடு.

பூர்ணிமாவுக்கு தன் சுவாச காற்று மெலிந்து போனது போல இருந்தது. திடீர் புன்னகையை அவள் எதிர்பார்க்கவில்லை.

"அந்த ஆளோடு இனி பேசாத. நீ அந்த ஆளோடு பழகினா அப்புறம் எனக்கு கோபம் வரும். நான் அந்த ஆளை ஏதாவது செஞ்சிடுவேன்.!" என்றவனை பயத்தோடு பார்த்தாள்.

"நீ அதை விரும்பலதானே? யூ லைக் மீ.! என்னை ஜெயிலுக்கு பின்னாடி பார்க்க விரும்பலதானே?"

பூர்ணிமாவுக்கு தன் இதயம் அடித்துக் கொண்டதன் காரணமும் புரியவில்லை. மூச்சு விட மறந்த காரணமும் புரியவில்லை.

எவ்வளவு தடுத்தும் பயம் வந்தது. அவனின் கண்களில் தெரிந்த உண்மை அவனின் வார்த்தைகளை மெய்யாக்கும் சக்தியை உடையது என்பதை அறிந்து பயந்தாள். இரு நாட்களாக மட்டும் பழகி இருக்கும் அந்த வயதான மனிதனுக்காக பயந்தாள். கண் முன் இருப்பவன் பைத்தியமோ என்று எண்ணிப் பயந்தாள். வயதான ஒரு மனிதனோடு தான் பழகினால் இவனுக்கு என்ன பிரச்சனை என்று புரியாமல் குழம்பினாள்.

அவளின் முகத்தை பார்த்தவனுக்கு மனம் வலித்தது. ஓரடி முன்னால் வந்தான்.

"பூர்ணி!" என்றான் செல்ல கொஞ்சல் குரலில். அந்த குரலும் வார்த்தையும் உறங்கிக் கொண்டிருக்கும் தன் உயிரை தட்டி எழுப்புவதை போல் உணர்ந்தாள் பூர்ணிமா.

கோபமும், பயமும், ஆத்திரமும் எங்கே சென்றது என்று புரியவில்லை. ஏதோ எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அவனின் அடுத்த வார்த்தைகளுக்காக காத்திருந்தது இதயம்.

"நீ ரொம்ப நல்ல பொண்ணு. உனக்கு பிரச்சனைகள் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். நீ என்னை நம்பு. உன் வேலையை மட்டும் பாரு!" என்றான். மெள்ள இமைகளை மூடி திறந்தாள் பூர்ணிமா. அவனின் விழிகளை மட்டும் பார்த்தாள். காந்தம் போல் இழுத்துக் கொண்டிருந்தது அந்த பார்வை.

அவளின் கூந்தலை வருடினான். நினைத்ததை விடவும் மென்மையாக இருந்தது. முகம் புதைத்து உறங்க ஆசை வந்தது.

"நீ ரொம்ப அழகா இருக்க பூர்ணி!" என்றான் ஏதோ குரலில். கனவில் யாரோ அழைப்பதை போல ஒலித்தது அவனின் குரல். நேரம் கெட்ட நேரத்தில் உறங்கி போய், அந்த உறக்கத்தில் இன்ப கனவு காணுவது போலிருந்தது.

அவனை நோக்கி சாய்வதை போல் உணர்ந்தாள்.

"இந்த மூணு நாலு நாளா உன்னை செகண்ட் கூட மறக்கவே முடியல. என் கரு விழிக்குள்ள உன் உருவத்தை யாரோ வச்சி தச்சிட்ட மாதிரி இருந்தது.!" என்றவன் அவளின் கழுத்தில் இருந்த தாலி சரடை பார்த்தான்.

பூர்ணிமாவின் வலது கரம் அவனின் சட்டையின் கீழ் நுனியை பற்றி இருந்தது. இருவருமே அதை கவனிக்கவில்லை.

மீண்டும் அவளின் முகம் பார்த்தவனின் கை விரல்கள் அவளின் கன்னத்தில் ஊர்ந்தது. அவனின் விரல்கள் மெள்ள அவளின் உதடுகளை தீண்டியது.

இடம் பொருள் காலம் மறந்து அவளின் ஈர்ப்பில் விட்டில் பூச்சியாக விழுவது அவனுக்கும் பிடித்திருந்தது.

"பூர்ணி.." சின்ன குரலில் அழைத்தபடி அவளின் உதடுகளை நோக்கி குனிந்தான்.

பூர்ணிமாவின் இமைகள் தானாய் மூடிக் கொண்டது. இறந்தகாலம், எதிர்காலம் மறந்து இந்த உணர்வுகளின் நெருப்பில் கருக அவளுக்கும் பிடித்திருந்தது. முத்தம் எப்படி இருக்கும் என்று யோசித்தாள்.

"அண்ணா!" பூமாறனின் திடீர் அழைப்பில் கண்களை திறந்தாள் பூர்ணிமா.

பாலாவின் அறை கதவு சாத்தியிருந்தது கண்டுவிட்டு இந்த பக்கம் திரும்பிய பூமாறன் இருவரின் நெருக்கத்தையும் கண்டுவிட்டு "சாரி.. சாரி.!" என்று விட்டு அவசரமாக முகத்தை திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினான்.

பூர்ணிமா தரையை பார்த்த வண்ணம் பின்னால் நகர்ந்தாள். அவளின் கூந்தல் காட்டில் அலை பாய இருந்த பாலாவின் கை விரல்கள் அந்தரத்தில் நின்றுப் போயின.

பூர்ணிமா அவனைப் பார்த்தாள். விழிகளை மூடியிருந்தான். கீழுதடு அவனின் பற்களின் இடையே கடிப்பட்டு இருந்தது. முகத்தில் ஏமாற்றம் அப்படியே தெரிந்தது. வலது கை விரல்களை இறுக்கி பிடித்திருந்தான்.

அவன் தன் விழிகளை திறந்தபோது பூர்ணிமா மீண்டும் தரை பார்க்க ஆரம்பித்து விட்டிருந்தாள்.

"பூ..பூர்ணி.!"

"போய் குளி பாலா.. ரொம்ப கப் அடிக்கற.!" என்றவளை என்ன ரகத்தில் சேர்ப்பது என்று அவனுக்கு புரியவில்லை.

அவளிடம் பேச முயன்றான். ஆனால் அவள் திரும்பி நடந்தாள். பெருமூச்சோடு வெளியே வந்தான்.

குளித்து விட்டு வந்து கண்ணாடி பார்த்தவன் தனக்கு திடீரென்று வந்த ஆசைகளை பற்றி யோசித்தான்.

"உண்மையிலேயே அவளை லவ் பண்றியா பாலா?" எனக் கேட்டான் கண்ணாடியிடம்.

பிரதி பிம்பம் எதுவும் சொல்லவில்லை.

"நீ ஸ்ட்ராங்கான மேன் பாலா. இதுவரை யார்கிட்டயும் நீ ஸ்லிப் ஆகல. இந்த கல்யாணம் அத்தைக்காக.. அவங்க இனியாவது நிம்மதியா இருப்பாங்கங்கறதுக்காக. பூர்ணி உன்னை வெறுக்கறா பாலா.. டோன்ட் கம்பல் ஹேர். அவ உன் அத்தையின் ஏஞ்சல். அவ மனசை கஷ்டப்படுத்தினா அப்புறம் அத்தையும் வருத்தப்படுவாங்க!" என்றுச் சொன்னவன் உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

அவன் தன் அறையை விட்டு வெளியே வந்தபோது பூர்ணிமாவும் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள். இவனை கண்டவள் தயங்கிவிட்டு இவனருகே வந்தாள்.

"சாரி பூர்ணி!" என்றவனை குழப்பமாக பார்த்தாள்.

"நான் அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்கல. முன்ன நடந்ததுக்கு சாரி.!" என்றவன் அவளை தாண்டி நடந்தான்.

பூர்ணிமா குழப்பமும் கோபமுமாக அவனின் முதுகை வெறித்தாள்.

'இவன் சரியான பைத்தியம் பூரணி. இவன்கிட்டயிருந்து விலகியே இரு!' தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் மீண்டும் தனது அறைக்குள்ளேயே நுழைந்தாள்.

பூமாறனின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் பாலா.

"அண்ணா.!"

தம்பியின் அருகே வந்து அமர்ந்தான்.

"சாரி.!" கன்னம் சிவக்க சொன்னவின் வார்த்தைகளை காதில் வாங்காதவன் "எனக்கு பைசா வேணும் மாறா.. இன்னும் இரண்டு வாரத்துல பிப்டின் லேக்ஸ் ரெடி பண்ணணும்!" என்றான் கவலையாக.

"சின்னதா பிசினஸ் ஆரம்பிச்சி இருக்கலாம்!" என்ற பூமாறனை முறைத்தவன் "அட்வைஸ் வேணாம் மாறா.. ஜஸ்ட் ஹெல்ப் மீ!" என்றான்.

பூமாறன் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றான்.

"நீ பூரணியைதானே கல்யாணம் பண்ணியிருக்க? அப்புறம் உனக்கு என்னதான் பிரச்சனை அண்ணா? அத்தைக்கிட்டயும் அவக்கிட்டயும் கையெழுத்தை வாங்கினா உன் பண பிரச்சனை தீர போகுது!"

பாலா இடம் வலமாக தலையசைத்தான்.

"பூர்ணி பீல் பண்ணுவா!" என்றான்.

பூமாறன் கொலை வெறியோடு அண்ணனை பார்த்தான்.

"நீ பைத்தியமாகிட்ட அண்ணா. எப்படி இருந்தாலும் அவளுக்கே தெரியதான் போகுது.. சரி‌ விடு எனக்கு அது எதுக்கு? இப்ப உனக்குதான் பண பிரச்சனை. நீயே சமாளி!" என்றான்.

பாலா அவனை பொய்யாய் முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

பூமாறன் முல்லைக்கு போன் செய்து விசயத்தை சொன்னான்.

"அவன் அவ்வளவு நல்லவனா?" எனக் கேட்டாள் முல்லை சிரித்தபடியே.

"அத்தை.. நீங்களுமா? எனக்கு சுயநலம்ன்னே வச்சிக்கங்க.. ஆனா எனக்கும் பணம் தேவை. வந்து கையெழுத்தை போட்டு தாங்களேன்!" என்றான் கெஞ்சலாக.

முல்லை சிரித்தாள்.

"பணம் வேணுமான்னா நான் தரேன்டா மாறா!" என்றாள்.

"அத்தை.. எனக்கு நிறைய தேவை.. உங்க கடையை வித்தா கூட எனக்கு பத்தாது. பூரணியை வச்சி கண்ணாமூச்சி ஆடாம இந்த பிரச்சனையெல்லாம் முடிச்சி கொடுங்க. ப்ளீஸ்.!" என்றவன் "அந்த ஆளை அண்ணன் வீட்டை விட்டு துரத்தி விட்டிருந்தான். ஆனா பூரணி கூட்டி வந்து வச்சிருக்கா. கொஞ்சி குலாவிட்டு இருக்கா. அதனால வீட்டுல ஆளாளும் மூஞ்சியை தூக்கி வச்சிருக்காங்க.!" என்றான்.

முல்லைக்கு சட்டென்று தொண்டை அடைத்துக் கொண்டது‌. நிதர்சனம் தெளிவாக புரிந்தது. மகள் இனி தனக்கு சொந்தம் இல்லை என்று நெஞ்சம் சொன்னது. தனது ஒரே ஒரு சொந்தம் அதன் சொந்தத்தை தேடி ஓடப் போகிறது என்பது புரிந்தது.

"நான் அவ அம்மா இல்லன்னு நானே சொல்லணுமா மாறா?" உதடு தாண்டிய விம்மலை அடக்கிக் கொண்டு கேட்டாள் முல்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN