தேவதை 36

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாளிகையில் இருந்த தனது இருக்கையில் சுருண்டு படுத்திருந்தாள் ஆதி. அவளின் மனம் சோகமாக இருந்தது. அந்த சோகம் கவியின் மூலம் அந்த மொத்த உலகத்திற்கும் பரவி விட்டிருந்தது.

கவியின் கோபம் எப்போதோ காணாமல் போய் விட்டிருந்தது. ஆதங்கமும் ஏமாற்றமும்தான் நெஞ்சில் குடி கொண்டிருந்தது. ஆனால் ஆதியின் சோகத்தால் அதுவும் கரைந்து மறைந்துக் கொண்டிருந்தது.

ஆதியினுடனான தனது பந்தம் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை அவன் அறியவில்லை. ஆனால் நனியும் யனியும் அறிந்திருந்தார்கள்.

"இந்த உலகின் காற்றில் கலந்திருக்கும் சோகத்தை உன்னால் உணர முடிகிறதா நனி?" வன்மம் கொஞ்சும் கண்களோடு கேட்டான் யனி.

"ம்.. அனைவர் மனதிலும் சோகம். எதிரிகளே புரிந்துக் கொள்ளும் அளவுக்கு மோசமான கேவலமான சோகம்!" என்ற நனி அங்கிருந்த மரத்தின் கிளை ஒன்றின் மீது ஏறி அமர்ந்தாள்.

"இந்த உலகத்தை அழிக்கணும்!"

"அதுவும் ஆதியை வச்சி!" என்று சிரித்த நனி "இந்த சின்ன சோகமே இவங்களை இவ்வளவு பாடு படுத்தினா ஆதியோட மனசு இரண்டு துண்டா உடையும்போது என்ன ஆவாங்க?" என்றுக் கேட்டாள்.

"இதயத்தின் வலி தாளாமல் மரணிப்பர்.!" பற்களை கடித்தபடி சொன்ன யனி அந்த உலகத்தை கவனித்தான்.

பயிற்சி மைதானம் கொஞ்சம் வெறுமையாக இருந்தது. பயிற்சியில் இருந்தவர்களும் வெறுமனே கடமைக்கு கத்தியை சுழற்றிக் கொண்டிருந்தனர். கவி ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். அந்த உலகின் பூக்களிலும் கூட வாட்டம் வெளிப்படையாக தெரிந்தது.

"உன் வேலையை நீ இனி தொடங்கலாம் நனி. இந்த கவியை கதற விடணும். உயிரோடு சாகணும் இவன்.!" என்றான் யனி.

நனி தலையசைத்துவிட்டு ஆதியை தேடி சென்றாள்.

ஆதியின் அறைக்குள் நுழைந்தாள் நனி. ஆதி இவளை கண்டதும் எழுந்து அமர்ந்தாள்.

"ஆதி.. நீ மனம் வாடாதே!" என்ற நனி அவளின் அருகே சென்று அமர்ந்தாள்.

"நீ ஒரு அன்பின் தேவதை. அன்பின் தேவதைகளால் சாதிக்க இயலாதது எதுவும் இல்லை.!" என்றாள்.

"ஆனால் என்னால் போரிட முடியாது.!" அப்பாவியாக சொன்னவளின் கையை பற்றினாள் நனி.

"என்னோடு வா!" என்றவள் ஆதியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

அங்கே நடப்பதை கவனிக்கும் நிலையில் இல்லை கவி.

பிரபஞ்சத்தின் மறு பக்கம் சென்றனர் ஆதியும் நனியும்.

"எங்கே செல்கிறோம்?" குழப்பமாக கேட்டாள்‌ ஆதி.

"பிரபஞ்ச விதியின் ஏடுகளை பாதுகாத்து வைத்திருக்கும் இடத்திற்கு!"

ஆனால் ஏன் அங்கே செல்ல வேண்டும் என்று ஆதிக்கு புரியவில்லை. மனதும் சோகமாக இருந்ததால் காரண காரியங்களை அவள் விசாரிக்கவும் இல்லை.

பிரபஞ்சத்தின் நடுவில் இருந்த ஒரு கருந்துளையினுள் நுழைந்து மறுபக்கம் சென்றனர் இருவரும்.

கண் கூசும் ஒளி இருந்தது அங்கே. "இந்த பக்கம்!" ஆதியின் கை பற்றி இழுத்துக் கொண்டு நடந்தாள் நனி.

சற்று தூரம் சென்ற பிறகு வெள்ளை நிறத்தில் திரை ஒன்று இருந்தது.

நனி அந்த திரை சீலையை பார்த்து கை கூப்பினாள்.

"பிரபஞ்ச விதிகளை உள்ளடக்கிய ஏடுகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் காவலரே.. அன்பின் தேவதைகளின் பலம் பலவீனம் பற்றி சொல்ல இயலுமா?" எனக் கேட்டாள்.

ஆதி நனியையும் அந்த திரைச்சீலையையும் மாறி மாறி பார்த்தாள்‌. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

திரைச்சீலை அசைந்தது. அதில் படம் போல அரை குறையாய் ஏதோ உருவம் போல ஒன்று தோன்றியது.

"அன்பின் தேவதைகளுக்கு பலமும் பலவீனமும் அன்புதான்!" என்றது அந்த திரைச்சீலையிலிருந்து வெளிவந்த ஒரு குரல்.

"விளக்கமாக விரிவாக சொல்லுங்கள்.!" என்றாள் நனி.

"அன்பு மிகவும் பலமானது. இந்த பிரபஞ்சத்திலேயே அதிக சக்தி வாய்ந்தது.!"

"இதெல்லாம் எனக்கே தெரியுமே!" முனகினாள் ஆதி‌.

"ஆனால் உமக்கு வேறு ஒரு விசயம் தெரியாது இளவரசியே! நீ நினைத்தால் இந்த பிரபஞ்சத்தையும் அழிக்க இயலும்!"

ஆதி மறுப்பாக தலையசைத்தாள்.

"அது தவறு.!"

"சரி தவறு என்று ஆராய்வதன் காரணம்தான் அன்பின் தேவ வம்சமே அழிந்துப் போனது!" திரைச்சீலையின் வார்த்தை அவளின் இதயத்தை குத்தி விட்டது.

"சரி தவறுகளை தூர எறிந்து விடுங்கள் இளவரசியே.. உங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழியை முதலில் பாருங்கள்.!"

'தான் இளவரசி இல்லை மகாராணி' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் ஆதி.

"கவியினுடனான உங்களின் பந்தம் காலத்துக்கும் இணைந்திருந்த வேண்டும் என்றால் கூட நீங்கள் உங்களின் சரி தவறுகளை ஆராய்வதை நிறுத்திதான் ஆக வேண்டும்.!" என்ற திரைச்சீலையை குழப்பமாக பார்த்தாள் ஆதி.

ஆனால் அந்த திருமண பந்தம் நிலைக்காது என்று நனி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

'சத்திய தேவ உலகில் உடையுறதும் இறப்பதுவும் சர்வ சாதாரணமாக நடக்க போகும் காலம் விரைவில் வர போகிறது!' என்று நெஞ்சுக்குள் குமுறினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN