பௌர்ணமி 8

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கம்பெனிக்கு செல்ல வேண்டி அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தான் பாலா.

"பாலா மாமா!" என்று ஹாலில் நின்றுக் கத்தினான் மகேந்தர்.

பாலா கீழே வந்தான். டைனிங் ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். மகேந்தர் அங்கிருந்த தூண் ஒன்றை கட்டிப்பிடித்தபடி நின்றிருந்தான்.

"ஏன்டா?" எனக் கேட்டபடியே உணவு மேஜையை நோக்கி நடந்தான் பாலா.

மகேந்தர் பாலாவுக்கு பெரிய தாத்தாவின் பேரன். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

"நீங்க எப்ப விருந்துக்கு வரிங்கன்னு தாத்தா கேட்டு வர சொன்னாரு.!" என்ற மகேந்தரிடம் "வா தம்பி.. சாப்பிடுவ!" என அழைத்தாள் பூர்ணிமா.

வேண்டாமென தலையசைத்தவன் பாலாவின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருந்தான்.

"யோசிச்சிட்டு அப்புறம் சொல்றேன்.!" பாலா சொன்னதும் மின்னலாக அங்கிருந்து ஓடினான் அவன்.

உணவு தட்டை பாலாவின் முன் வைத்தாள் அல்லி. பூர்ணிமா யாரையும் கண்டுக் கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

"யாரை கேட்டு சீர் தட்டை நீ வாங்கின?" அருகே அமர்ந்திருந்த பூர்ணிமாவிடம் திடீரென எரிந்து விழுந்தான் பாலா.

முருங்கைக்காயை கடித்துக் கொண்டிருந்த பூர்ணிமா அவனை திரும்பிப் பார்த்தாள்.

"மாறா மாமாவை கேட்டுதான்!" என்று எதிரே அமர்ந்திருந்த பூமாறனை கை காட்டினாள்.

'மாறா மாமா..??' மனதுக்குள் கருவிய பாலா தம்பியை பார்த்து முறைத்தான்.

"அவங்க உறவெல்லாம் நமக்கெதுக்கு? அவங்க வீட்டு விருந்து சாப்பாட்டை நம்பிதான் நான் இருக்கேனா?" பற்களை கடித்தபடி தம்பியிடம் கேட்டான்.

"அதுக்காக வீட்டுக்கு வந்தவங்ககிட்ட 'எங்களுக்கு உங்க உறவு வேணாம்'ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரியா சொல்ல முடியும்?" செண்பகம் சிறு குரலில் கேட்டாள்.

"அவங்களை யார் நம்ம வீட்டுக்கு வர சொல்றது? பொய்யான உறவுகளை போல துரோகிகள் வேற எங்கேயும் கிடையாது. நான் அவங்களை ஒதுக்கி ஒதுக்கி வைக்கிறேன். நீங்க கூட்டு சேர்த்துக்க பார்க்கறிங்க.. இவ்வளவு நாள்தான் நீங்க சொன்னிங்கன்னு அவங்களை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போனேன். ஆனா இனியும் என்னால அப்படி இருக்க முடியாது.!"

பூர்ணிமா தன் இடது காதை தேய்த்து‌விட்டுக் கொண்டாள்.

"கழுதை போல கத்துறான்.!" என்று முனகினாள்.

பாலா அவளை முறைத்தான். 'அவன் மாமாவாம்.. நான் கழுதையாம்!' என்று புலம்பி தீர்த்தது அவனின் மனம்.

"சம்பாதிக்கற திமிர்ன்னு உன்னைதான் சொல்வாங்க!" தட்டை பார்த்தபடி சொன்னான் பூமாறன்.

"நினைக்கட்டும். அவங்க என்ன நினைச்சா எனக்கென்ன?"

பூர்ணிமா உணவை முடித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

"உனக்கு இஷ்டம் இல்லன்னா அவங்கக்கிட்ட போய் முடியாதுன்னு சொல்லு. சும்மா வீட்டுல கத்தி வைக்காத. நீ ஒருத்தன் பேசுவதே சந்தைக் கடை மாதிரி இருக்கு‌.!" சலிப்போடு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

பூமாறன் வரவிருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு எழுந்தான்.

விருந்துக்கு செல்வது என்பதே பாலாவுக்கு எரிச்சலாக இருந்தது. சொந்தங்களை வெறுத்தான் அவன்.

"முல்லை ஒழுக்கம் இல்லாதவ.. அவங்க வீட்டுல அப்படிதான் பொம்பளை புள்ளைகளை வளர்த்துவாங்க போல.. அந்த வீட்டு பொம்பள புள்ளைங்க எல்லோருமே அப்படிதான் போல.."

"முல்லை மட்டும் எனக்கு பிறந்திருந்தா அவ கழுத்தை வெட்டியிருப்பேன் நான்.!"

"அந்த வீட்டுக்கு நம்ம புள்ளைங்களை அனுப்பாத.. அப்புறம் இவங்களும் முல்லையை போலவே ஒழுக்கம் கெட்டு போயிடுவாங்க!"

"இவங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா.? இப்படியொரு புள்ளை நம்ம வீட்டுல இருந்திருந்தா மானம் போச்சேன்னு நானெல்லாம் தூக்குலயே தொங்கி இருப்பேன்!"

சொந்தங்களின் இத்தனை ஆண்டு அர்ச்சனையை பாலா சுலபத்தில் மறப்பவன் அல்ல. அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் அவனின் நெஞ்சை சுட்டுக் கொண்டேதான் இருந்தது.

முல்லையை அவனும் வெறுத்தான். ஆனால் மற்ற சொந்தங்கள் குத்தி குத்தி பேச வேண்டிய அவசியம் இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை. அவரவர் வீட்டில் ஆயிரம் பிரச்சனை. அடுத்தவர் வீட்டில் இவர்களுக்கு என்ன நாட்டாமை வேலை என்றுதான் எண்ணினான் பாலா.

என்னதான் சொந்தங்களை அவன் வெறுத்தாலும் கூட அவர்களின் சொற்கள் தந்த காயத்தால் முல்லை மீதான அவனின் ஆத்திரமும் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது.

இப்போது பூர்ணிமாவை அழைத்துக் கொண்டு அவர்களின் வீட்டிற்கு விருந்துக்கு செல்வது என்பது பிரச்சனையை விலைக் கொடுத்து வாங்குவது போலதான். அவர்கள் முல்லையை பற்றி தவறாக பேசினால் பூர்ணிமா வாயை திறந்து கத்தி விடுவாள். பிறகு இல்லாத பிரச்சனைகள் வருமென்று எரிச்சலடைந்தான்.

ஏற்கனவே பல கவலை. இது ஏன் புது கவலை என்று நொந்துப் போனான்.

அது மட்டுமில்லாமல் பெரிய தாத்தாவின் மச்சினன் மகன்தான் நாகேந்திரன். தனது பெண்ணை நாகேந்திரனுக்கு கட்டி வைக்க நினைத்திருந்தார் அவர். ஆனால் நாகேந்திரனோ பாலாவின் பெரிய அத்தையான மலர்கொடியின் மீது காதல் என்று சொல்லி அவளைக் காதல் திருமணம் செய்துக் கொண்டார். அதிலேயே அவர்களுக்கு இந்த குடும்பத்தின் மீது கோபம்தான். பின்னால் நடந்த விசயங்களால் இந்த வீட்டின் மீதான அவர்களின் இளக்காரம் அதிகமாகி விட்டது‌.

எப்போது விழுவார்கள்.. எப்போது சிரிக்கலாம் என்று காத்திருக்கும் கூட்டத்தின் மத்தியில் தாங்கள்தான் புத்திசாலிகளாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பது பாலாவின் எண்ணம்.

மாலையில் பாலா வீடு வரும் வரை பூர்ணிமா புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். பூமாறன் கல்லூரி சென்று விட்டிருந்தான். பூர்ணிமா அடுத்த வருடத்தில் இருந்து இங்கேயே கல்லூரி சேர்ந்துக் கொள்ளலாம் என்று முல்லை சொல்லி விட்டாள். பரிட்சை சமீபத்தில் வர இருந்தது. அதற்கு மட்டும் அங்கே செல்ல வேண்டி இருந்தது. அம்மாவை பார்க்க வேண்டும் போல இருந்தது. இப்போதே பரிட்சை தொடங்க கூடாதா என்று மனம் ஆசைப்பட்டது.

செண்பகம் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனாள். ஏதாவது வேண்டுமா என்று கேட்க அடிக்கடி அல்லி வந்தாள். ஆனாலும் ஏனோ சலிப்பாக இருந்தது பூர்ணிமாவுக்கு.

மாலை வேளையில் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கீழே வந்தாள். தொலைக்காட்சி அனாதை போல ஓடிக் கொண்டிருந்தது. தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த அல்லி ஜன்னல் வழியே பார்க்கையில் தெரிந்தாள். செண்பகமும் மரிக்கொழுந்துவும் வயலின் மேற்பார்வைக்கு சென்று விட்டிருந்தனர்.

வாசலில் நாய் அமைதியாக புரண்டுக் கொண்டிருந்தது. கேட்டின் ஓரத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சின் மீது அமர்ந்திருந்த நாகேந்திரன் மேகத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.

பூர்ணிமா அவரின் அருகே சென்றாள்.

நாய் எழுந்து ஓடி வந்து அவளின் மடியில் முன்னங் கால்களை வைத்தது. அவளின் கழுத்தை நக்கியது.

"ரோசி.! சும்மா இரு.!" என்று நாயை தூர தள்ளி முயன்றாள். ஆனால் நாய் அவளை விட்டு நகராமல் அதையே திருப்பி திருப்பி செய்தது.

அதை துரத்தும் வேலையை விட்டுவிட்டு நாகேந்திரன் புறம் திரும்பியவள் "என்ன செய்றிங்க ஐயா?" எனக் கேட்டாள்.

பார்வையை இவள் புறம் திருப்பியவர் "பாலா உன்னை திட்டிட்டானாம்மா?" என்றார் கவலையோடு.

நேற்று காலையில் நடந்த விவகாரத்தை கேட்கிறார் என்பதைப் புரிந்துக் கொண்டவள் "அவன் திட்டினா நான் வாங்கிப்பேனா?" எனக் கேட்டு சிரித்தாள்.

அவர் ஆச்சரியத்தோடு இவளைப் பார்த்தார்.

"அவன் சரியான குரங்கு. சிடுமூஞ்சி. அவனுக்கெல்லாம் நான் பயப்படுவேனா?" நாயின் கழுத்தை கட்டியபடி கேட்டாள்.

இவளை போலவே இவளின் அம்மாவும் இருந்திருக்கலாம் என்று ஆசைக் கொண்டார் அவர்.

"அவன் உன் கணவன்ம்மா. அவன் இவன் சொல்லலாமா?" கனிவாக கேட்டவரை தலை சாய்த்து பார்த்தவள் "அவன் என் கணவன் இல்லையா? அதனாலதான் அவன் இவன்னு கூப்பிடுறேன்!" என்றுச் சொல்லி சிரித்தாள்.

குழந்தை போல இருந்தாள். அவரால் விழிகளை சிமிட்ட முடியவில்லை.

இருள் சூழ்ந்துக் கொண்டிருந்தது. பாலா கம்பெனியை விட்டு வெளியே வந்தான். காரில் ஏறி அமர்ந்தவன் கம்பெனியை பார்த்தான். அகன்று இருந்தது‌. அவனின் உழைப்பும் சுகனுடைய உழைப்பும் அந்த கட்டிடத்தின் கற்களில் கலந்து இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக அலைந்த அலைச்சல் கொஞ்சம் நஞ்சமில்லை. உறங்காத நாட்கள் எத்தனை? பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயந்த நாட்கள் எத்தனை? கடன் எக்கச்சக்கமாக இருந்தது. ஆனால் கட்டி விடுவோம் என்ற நம்பிக்கையும் இருந்தது. சைக்கிள்கள் தயாராகி வெளியே வருவதற்குள் உழைப்பையும் பணத்தையும் கணக்கில்லாமல் செலவு செய்ய வேண்டி இருந்தது.

பெருமூச்சோடு காரை இயக்கினான். தார் சாலையில் இறங்கியது வாகனம்.

பூர்ணிமாவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தவனின் போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். முல்லை அழைத்திருந்தாள். ஆச்சரியமாக இருந்தது.

"ஹலோ!" என்றான் அழைப்பேற்று.

"அந்த ஆள் எதுக்கு அந்த வீட்டுல இருக்கார்?" என்றாள் அவள்.

பாலாவுக்கு மூக்கின் மேல் கோபம் வந்தது.

"கடுப்பேத்திட்டு இருக்கிங்களா? அந்த ஆளை நான் எத்தனை முறை துரத்தி விட்டிருக்கேன் தெரியுமா?" எனக் கேட்டான்.

"ச்சை.. டெய்லியும் பக் பக்ன்னு இருக்கு எனக்கு. அந்த ஆள் வாயை திறந்து பூரணி யாருன்னு சொல்லிடுவாரோன்னு பயமா இருக்கு!" என்றாள் எரிச்சலாக‌.

அவள் சொன்னது கேட்டு பாலாவுக்குதான் கோபம் வந்தது.

"பூர்ணி யாருன்னு தெரிஞ்சிடும்ன்னு பயமா? இல்ல உங்க யோக்கியம் தெரிஞ்சிடும்ன்னு பயமா?" எனக் கேட்டான்.

"சாகடிக்காத பாலா.. அந்த ஆள் மேல எனக்கு எந்த வெங்காய லவ்வும் கிடையாது. தப்பான ஆசையில் அந்த ஆள் சுண்டு விரலை கூட நான் தொட்டது கிடையாது. என்னை ஒருத்தர் கூட நம்ப மாட்டேங்கிறிங்க. பெத்த அப்பா அம்மா நம்பல. என் கூட பிறந்தவனும் நம்பல. கூட பிறந்தவளும் நம்பல. பாலா நான் அப்படியா பாலா? நான் தப்பு பண்ணதை நீ பார்த்தியாடா?" எனக் கேட்டாள் ஆத்திரத்தோடு. ஆத்திரத்தின் பின்னால் சிறு அழுகை இருந்தது. எவ்வளவு முயற்சித்தாலும் கூட தான் உண்மையானவள் என்பதை யாரும் நம்பவில்லை என்ற எண்ணம் வருகையில் அவளையும் மீறி கோபமும் அழுகையும் வந்தது.

பாலா காரை நிறுத்தி விட்டான். ஸ்டியரிங்கை இறுக்கமாக பற்றியிருந்த விரல்களின் கணுக்களில் ரத்த ஓட்டம் நின்று வெண்மை பாய்ந்துக் கொண்டிருந்தது.

"எப்படி நம்பட்டும் நான்? உங்களாலதான் மலர் அத்தை செத்துப் போனாங்க. அவங்க செத்ததை நான் என் கண்ணால பார்த்தேன். அவங்க எத்தனை நாள் அழுதாங்கன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.!" என்றவனுக்கு அந்நினைவில் கண்கள் கலங்கியது.

"இல்லடா.. சத்தியமா என் மேல எந்த தப்பும் இல்ல. மலர் செத்து போனதுக்கு நான் ஒரு செகண்ட் கூட பீல் பண்ணல. அவ என்னை நம்பல. அது அவ தப்பு.. ஆனா தப்பே செய்யாத என்னை ஒருத்தரும் நம்பாம போயிட்டிங்க.. அதோ மேற்கே மறையும் அந்த சூரியன் மேல சத்தியம். அந்த சூரியன் மறுபடியும் கிழக்கே உதிக்கிறது உண்மைன்னா என் பரிசுத்தம் புரியட்டும் உங்களுக்கு!" என்றவள் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

பாலா கைபேசியை பக்கத்து சீட்டில் வீசி விட்டு ஸ்டியரிங்கில் நெற்றியை மோதினான்.

யாரை நம்புவான் அவன்? மலர் அத்தை இறந்ததை இரண்டு கண்களால் பார்த்தானே! நாகேந்திரன் நடு வீட்டில் நின்று தானும் முல்லையும் காதலிப்பதாக சொன்னதை அவனும்தானே காதால் கேட்டான்! பூர்ணிமாவின் மீது சத்தியம் செய்தாரே! அவர் பூர்ணிமா மீது கொண்ட பாசம் அறிந்தவனாயிற்றே. எப்படி யாரை நம்புவது?

ஊராரின் ஏச்சு பேச்சுகள், நாகேந்திரனின் பெற்றோரும் அவரின் சுற்றமும் சுமத்திய பழிகள், தன் சொந்தங்களிடமே வாங்கிய பழிச் சொற்கள், யாரும் நம்பவில்லை என்ற கோபத்தில் பூர்ணிமாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிச் சென்ற முல்லை, அவமானங்களை தாள இயலாமல் சில வருடங்களிலேயே அடுத்தடுத்து இறந்துப் போன தாத்தா பாட்டி.. எந்த நிகழ்வுகளில் இருந்து யாரைதான் நம்புவது?

நெற்றியை தேய்த்துக் கொண்டான். வீட்டுக்கு புறப்பட்டான்.

தென்னந்தோப்பை கடந்து கேட்டிற்குள் நுழைந்தவனின் பார்வையில் முதலில் தென்பட்டது அரை இருளில் அமர்ந்திருந்த பூர்ணிமாவும் நாகேந்திரனும்தான்.

கோபம் தலைகேறியது அவனுக்கு. பற்களை கடித்து கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான். கார் வந்ததை கூட கவனிக்காமல் மகளின் முகம் பார்த்து அமர்ந்திருந்த நாகேந்திரனின் முகத்தை காணுகையில் கோபம் அடங்க மறுத்தது.

கைகள் தானாய் கதவை திறந்தது. அமர்ந்திருந்தவர்களின் முன்னால் வந்து நின்றான்.

பூர்ணிமா நாயின் தலையில் தாடையை பதித்தபடி "என் அம்மாவுக்கு கொலுக்கட்டை பிடிக்கும். ஆனா எனக்கு உள்ளே உள்ள இனிப்பு மட்டும்தான் பிடிக்கும். அதனால் அம்மா கொலுக்கட்டை செய்யும் ஒவ்வொரு முறையும் பூரணம் போதவே போதாது.. செய்யும் முன்னாடியே நான் முக்கால்வாசி காலி பண்ணிடுவேன்!" என்றுச் சொல்லி சிரித்தாள்.

"பூர்ணி!" காதோரம் கர்ஜனை குரல் கேட்கவும் துள்ளி விழுந்தாள். நாய் நொடியில் அவளை விட்டு கீழிறங்கிக் கொண்டது.

படபடக்கும் இதயத்தோடு நிமிர்ந்துப் பார்த்தாள். இருளில் அவன் முகம் தெரியவில்லை. ஆனால் அவனின் கோபம் எப்படி அவளுக்கு விளங்கியது என்று அவளுக்கே புரியவில்லை.

எழுந்து நின்றாள். அவளின் கையை பற்றினான் பாலா.

நாகேந்திரன் பயத்தோடு எழுந்து நின்றார்.

"பாலா.. அவ.."

"நீங்க பேசாதிங்க.." என்று கத்தினான். அவனின் கத்தலில் பூர்ணிமாவுக்கு உடம்பு நடுங்கியது. இதுவரை இப்படியெல்லாம் அவள் யாருக்கும் பயந்ததே இல்லை. இவனும் கூட இவ்வளவு கோபம் கொண்டதாக நினைவில் இல்லை.

"பா.. லா.!" தயக்கமாக அழைத்தவளை முறைத்தவன் "நான் அத்தனை முறை சொன்னேன் பூர்ணி. ஆனா நீ என் பேச்சை கேட்கல. உனக்கு என்ன அவ்வளவு திமிர்?" என்றான் ஆத்திரத்தோடு.

"இவர் பாவம்.!"

"செட் அப் பூர்ணி. நான் உன்கிட்ட சர்டிபிகேட் கேட்கல. மைன்ட் யுவர் வோன் பிசினஸ்.!"

பூர்ணிமாவுக்கு முகம் கறுத்துப் போனது. அதே வேளையில் அல்லி வந்து வாசலின் விளக்குகளை ஒளிர விட்டாள். விளக்கின் வெளிச்சத்தில் சிவந்திருந்த அவனின் முகத்தை கண்டவள் தான் செய்தது உண்மையிலேயே தவறா என்று குழம்பியது.

பூர்ணிமாவின் முகத்தில் ரத்த ஓட்டமே இல்லை.

"உன்கிட்ட ஒரு விசயத்தை செய்யாதன்னு சொன்னா அதை செய்யாத. இல்ல உன் இஷ்டபடிதான் இருப்பன்னா தயவு செஞ்சி இந்த ஆளோட இப்பவே வெளியே கிளம்பிடு!" என்றவனை திகிலோடுப் பார்த்தாள்.

அதிகம் அறியாத ஒருவனோடு போக சொல்கிறானே என்று புரியாத பயம் மனதுக்குள் தோன்றியது.

"நா.."

"உனக்கு நான் வேணும்ன்னா மரியாதையா வீட்டுக்குள்ள போ.. இல்ல இந்த ஆள் வேணும்ன்னா இன்னும் பத்து செகண்ட் இங்கேயே நில்லு போதும். நான் புரிஞ்சிக்கிறேன்!" என்றவன் பற்களை கடித்தபடி அவளின் முகம் பார்த்தான்.

பூர்ணிமா குழம்பினாள். இவன் இப்படி பைத்தியம் போல பரிட்சை வைப்பான் என்று அவள் நினைக்கவேயில்லை.

"நா..‌" அவனின் கோபத்தின் முன்னால் பேச நாக்கு எழவில்லை. அவன் இதுவரை இப்படி ஆளுமை காட்டியதே இல்லை. இந்த நொடியில் அனைத்துமே புதிதாக இருந்தது. ஒற்றை நொடிக்குள் ஓராயிரம் யோசனைகளை தந்து விட்டான்.

அவனோடு திருப்பி சண்டையிட துடித்தது மனம். ஆனால் என்னவோ தடுத்தது.

நாகேந்திரனை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவள் வீட்டை நோக்கி நடந்தாள்.

நாகேந்திரன் பரிவோடு மகளின் முதுகைப் பார்த்தார். அவரின் பார்வைக்கு முன்னால் வந்து நின்றான் பாலா.

"உங்களுக்கு இவளையும் சாகடிக்கணும். அதுதான் ஆசை!?" எனக் கேட்டான்.

திகைத்தவர் இல்லையென தலையசைத்தார்.

"பா.. பாலா.. நான்.."

"என்கிட்ட பேசாதிங்க நீங்க.. உங்களை கொன்னா கூட என் ஆத்திரம் தீராது.. உங்களால எங்க வீட்டு பொண்ணுங்க இரண்டு பேரோட லைப்புமே நாசமா போயிடுச்சி. உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் மானம் இருந்தா செத்துடுங்க!" என்றவன் வீட்டுக்குள் நடந்தான்.

நாகேந்திரன் கலங்கிய கண்களோடு அந்த வீட்டைப் பார்த்தார். பாலா கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே சென்றான்.

"ஏய் பூர்ணி!" பாலாவின் அழைப்பில் மீண்டும் துள்ளி விழுந்தவள் திரும்பிப் பார்த்தாள். மாடி வராண்டாவில் சுவரோடு சாய்ந்து நின்று நகத்தை கடித்துக் கொண்டிருந்தவள் தன்னை நோக்கி வந்தவனை கண்டு நேராக நின்றாள்.

வந்தவன் அவளின் மேனி தொடும் தூரத்தில் நெருங்கி நின்றான். அவனின் வலது கை அவளின் தலையின் ஓரத்தில் சுவற்றில் பதிந்தது.

பூர்ணிமா அனிச்சையாக சுவரோரம் நெருங்கி நின்றாள்.

"நான் சொன்னேன் இல்ல!?" என்றான்.

பூர்ணிமா அவனின் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்தாள். "மறந்துட்டேன்!" என்றாள்.

இடது கையால் அவளின் முகத்தை பற்றியவன் தன் புறம் திருப்பினான்.

"மறக்காம இருக்க என்ன செய்யட்டும்?" என்றவனை திகைப்போடு பார்த்தவள் "ஒன்னும் வேணாம்.. நீ தள்ளி போ முதல்ல!" என்றாள்.

"பூர்ணி நான் கோபத்துல இருக்கேன்!" என்றவனின் கண்களை கண்டவள் யோசித்தாள். அவனை நெருங்கினாள். அவனை அணைத்துக் கொண்டாள்.

"கோபம் நல்லது இல்ல பாலா. டென்சனை குறை!" என்றவள் அவனின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு அவனை விட்டு நகர்ந்தாள். இரண்டடி நடந்தவள் அவன் தன் கையை பற்றியது கண்டு நின்றாள்‌.

"பா.." அவளின் முதுகு மீண்டும் சுவரோடு ஒட்டிக் கொண்டது.

"இது தப்பு பூர்ணி. அந்த ஆளோடு.."

"எனக்கு சலிக்குது பாலா.. அவரோடு நான் ஏன் பேச கூடாது.? அவர் மனுசன்,‌ நம்மை போல! உனக்கு வேண்டாம்ன்னா காரணம் சொல்லு என்கிட்ட.. ஒரே ஒரு உருப்படி காரணம் சொல்லு.. மேற்கொண்டு அவரோடு பேசலாமா வேணாமான்னு நான் முடிவெடுத்துக்கிறேன்!" என்றவளை வியப்போடு பார்த்தான்.

"உனக்கு என்னை பிடிச்சிருக்கா பூர்ணி?" மென்மையாக கேட்டவனை குழப்பமாக பார்த்தவள் "இ.. இல்லையே!" என்றாள்.

"அப்புறம் ஏன் வீட்டுக்குள்ள வந்த?"

"நீதான் அன்னைக்கு சொன்னியே, அவரை ஏதாவது செஞ்சிடுவேன்னு!"

மறுப்பாக தலையசைத்தவன் "சரி இப்ப ஏன் கட்டிப்பிடிச்சி முத்தம் தந்த?" எனக் கேட்டான்.

"பாவமா இருக்கியேன்னு பிரெண்ட்ஷிப் ஹக் தந்தேன். கோபம் உடம்புக்கு நல்லது இல்ல பாலா!" என்றபடி அவன் நெஞ்சின் மீது கை பதித்தாள்.

கையை எடுத்தான் பாலா.

"உனக்கு என்னை பிடிச்சிருக்கு பூர்ணி. அதனாலதான் நீ என்னை மேரேஜ் பண்ணிக்கிட்ட.. உன் திமிரை எனக்கு நல்லாவே தெரியும்!" என்றவனுக்கு அந்த விசயமே இப்போதுதான் புரிந்திருந்தது‌.

பூர்ணிமா தூரத்து பார்வை பார்த்தாள்.

"ரொம்ப கற்பனை பண்ணாத.. நான் என் அம்மாவுக்காக மட்டும்தான் உன்னை கட்டிக்கிட்டேன். இல்லன்னா இப்படியொரு சிடுமூஞ்சோடு வாழ எனக்கென்ன விதியா?" என்றவளின் குரல் முக்கால்வாசி இறங்கி விட்டிருந்தது.

"உண்மையாவா?" எனக் கேட்டவனின் கரம் அவளின் கழுத்தில் ஊர்ந்தது.

"தொடாதே!" என்று அவனின் கையை தட்டி விட்டவள் "சண்டை போட்டுட்டு இருக்கோம் பாலா நாம!" என்றாள்.

பாலா பெருமூச்சு விட்டான்.

"ஆமா.. ஆனா உன் பக்கத்துல வந்தா மொத்தமா டிராக் மாறிடுறேன்!" என்றான் கவலையாக.

பூர்ணிமா நக்கலாக பார்த்தாள்.

"அப்படின்னா தூரமா நின்னு சண்டை போடு!"

"லவ் யூ பூர்ணி!" என்றவனின் கரம் அவளின் பின்னங்கழுத்தை தேடி ஊர்ந்தது.

"சாரி..‌ நான் நம்பல.."

குழம்பியவன் விசித்திரமாக அவளைப் பார்த்தான்.

"என் அம்மா மேல உனக்கு என்ன கோபம்? இந்த ஐயா மேல உனக்கு என்ன கோபம்? முதல்ல உனக்கு ஏன் கோபம்? என்னை பார்த்த உடனே ஏன் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ட? என்னை ஏன் அந்த முதல் நாள்ல அப்படி பார்த்த? எதுக்கு என் கையை இறுக்கமா பிடிச்சி உடைக்க பார்த்த? ஏன் என்னை அறைய கை ஓங்கின? நேத்து ஏன் கிஸ் பண்ண வந்த? இன்னைக்கு ஏன் என்னை லவ் பண்றதா சொல்ற? அப்புறம் ஏன் கல்யாணம் ஆன அன்னைக்கே என்னை விட்டுட்டு நீ ஊருக்கு போன?"

மலைப்பாக இருந்தது அவனுக்கு.

"இவ்வளவு கேள்வியா?" என்றான் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக.

"இப்ப ஏன் பேச்சை மாத்துற மாதிரி முகத்தை கொண்டுப் போற?" இடுப்பில் கை பதித்தபடி கேட்டாள்.

பாலா சிரிப்போடு விலகி நின்றான்.

"நேசம் எப்ப வேணாலும் உருவாகும். ஆனா அதை உணர எனக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சி. ஆனாலும் சொல்றேன் கேளு பூர்ணி.. உன் எல்லா கேள்விக்கும் ஒரே பதில் நான் உன்னை நேசிக்கிறது மட்டும்தான்!" என்றவன் தன் சட்டையை நுகர்ந்தான்.

"வியர்வை வாசம்.. நான் போய் குளிச்சிட்டு வரேன். நீ மறுபடியும் வெளியே போய் அந்த ஆள்கிட்ட பேசாம இங்கேயே இரு. அந்த ஆள் சைக்கோ கொலைக்காரன்னு ஊரே பேசிக்கறாங்க. நீ பயப்படுவன்னு நான் இவ்வளவு நாள் சொல்லாம விட்டிருந்தேன். இனி உன் பாடு!" என்றவன் சட்டையை கழட்டியபடி தனது அறையை நோக்கி நடந்தான்.

பூர்ணிமா தலையை கீறிக் கொண்டாள். அவன் நாகேந்திரனை பற்றி சொன்னது பொய் என்று அவளுக்கு புரிந்தது. அவனின் உண்மை பொய்களை எப்படி தன்னால் கண்டறிய முடிகிறது என்ற விசயம் புரியாமல் குழம்பினாள்.

"கண்கள் உள்ளத்தின் கண்ணாடி என்பது உண்மையா?" தனக்குள் கேட்டுக் குழம்பினாள்.

அவளின் கோபத்தை அவனால் உருவாக்கவும் முடிந்தது. அந்த கோபத்தை மறைய செய்யவும் முடிந்தது. அந்த ரகசியம் அவளுக்கு புரியவேயில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN