தேவதை 37

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் பயத்தை விழுங்க முயன்றாள் ஆதி. அன்பின் தேவதையாக இருப்பவள் சிறு தைரியம் பெறவும், சிறு பாதுகாப்பு வளையத்தை போட்டுக் கொள்ளவும் கூட‌ தன் பயத்தை கடந்து வர வேண்டி இருந்தது.

பயமே பிரதானம் என்பது அவளுக்கே தெளிவாக தெரிந்தது.

'வெற்று பொம்மை கத்தி' என்று மனதுக்குள் கோடி முறை சொல்லிக் கொண்டாள்.

"இது ஆயுதம் அல்ல. இது யாரையும் வதைக்காது. இது வெறும் பயிற்சி மட்டுமே. பொம்மை பயிற்சி!" என்று முனகினாள்.

தூரமாக நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த கவிக்கு சிரிப்பு வந்தது அவள் சொன்னது கேட்டு.

நனி கவியை பார்த்தாள். தலை குனிந்து வணங்கினாள்.

கவி ஆதியை நெருங்கினான்.
அந்த பக்கம் பார்த்து நின்றவளின் தோளை பற்றினான்.

ஆதி திரும்பினாள்.

"பயிற்சியை நான் தரட்டுமா?" எனக் கேட்டான்.

ஆதி வேண்டாமென்று தலையசைத்தாள். அவனிடம் சிக்கினால் தன்னை கொலைக்காரி ஆக்கி விடுவான் என்று பயந்தாள்.

"உன்னால எதுவும் முடியும் ஆதி!"

'வட்டம் சுத்தி அதற்கேதான் வருவார் இந்த ஏந்தல்.!' என நினைத்தவள் "வேண்டாம் ஏந்தலே. நனியே எனக்கான பயிற்சியை வழங்கட்டும். நான் அன்பின் தேவதை‌. அன்பை பரப்பும் வேலை எனக்கு அதிகம். உங்களால் நான் கெட்டுப் போனால் பிறகு அன்பும் கெட்டுப் போகும். அது இந்த பிரபஞ்சத்திற்கோ என் மனதிற்கோ நல்லது அல்ல!" என்றாள்.

கவி அவளை வியப்போடு பார்த்துவிட்டு நகர்ந்தான். பனியில் தெரிந்த அவளின் உருவத்தை ஆச்சரியத்தோடு வெறித்தான்.

ஆதி அட்டை கத்தியை சுழற்றினாள். கவி அங்கிருந்து சென்று விட்டான். கத்தியை எப்படி கையில் பிடிக்க வேண்டும் என்று சொல்லி தந்தாள் நனி.

அன்று இரவு நனி தன் மர குகை வீட்டிற்குள் வந்தபோது யனி தனது உண்மையான உருவத்தில் இருந்தான். நனியும் தன் வேஷம் கலைத்தான். இருவரும் இன்ப பானத்தை சுவைத்தபடி பனி சுவரில் சாய்ந்து அமர்ந்தனர்.

"ஆதியை மடக்கும் வழி வேறு என்ன கற்று வைத்துள்ளாய்?" எனக் கேட்டான் வித்யநயன்.

"இதோ.!" என்றபடி சின்ன கண்ணாடி குடுவையை காட்டினான் இயனி.

"ஆசான்தான் இதையும் தந்தார். இதை ஆதி தொடர்ந்து அருந்த வேண்டும்‌. அவளின் அன்பு அந்த நெஞ்சத்தை விட்டு சுரண்டப்பட்டு விடும். இதன் வீரியம் அவளின் ரத்தத்தில் முழுதாய் கலக்க வேண்டும். பிறகு அவளால் அவளின் வெறுப்பால் இந்த உலகம் அழியும்.!" என்றான்.

வித்யநயன் குடுவையை கையில் வாங்கினான். பனிக்கட்டி குடுவை அது.

"கவியின் அழிவுக்காக இது!" என்று சூளுரைத்தான்.

ஆதி அன்று இரவெல்லாம் உறங்கவே இல்லை. கத்திகள் கனவெல்லாம் வந்து அவளை கொல்ல பார்த்தது‌. பார்க்கும் இடமெங்கும் கத்தி. கழுத்தை தொட வந்தது கத்தி. அவளின் பாதம் கீற முயன்றது கத்தி.

ஒன்றிரண்டு முறை பயத்தில் கத்தி விட்டாள் ஆதி.

"ஆதி.. இது மிகவும் கடினம். ஆனால் நீ செஞ்சிதான் ஆகணும்! உன்னோட மிக பெரிய எதிரி பயம். அதை ஒழி!" என்றது அவளின் மனதுக்குள் ஒரு குரல்.

ஆதி எழுந்து அமர்ந்தாள். கண்ணீர் கன்னத்தில் கரை புரண்டது.

"என்னை வேறு ஒருத்தியாக மாற்றுவதில் ஏன் அத்தனை பேரும் குறியாக இருக்காங்க? நான் ஒரு அருமையான அன்பின் தேவதை. மாசற்றவள். என்னை இப்படியே ஏற்றுக் கொள்ள யாராலும் முடியாதா? என்னை செதுக்க முயற்சிக்கிறார்கள். ஒன்றை அதுவாகவே ஏற்றுக் கொள்ள ஏன் இவர்களால் முடியவில்லை?" எனக் கேட்டாள் அழுகையின் இடையே.

இவளின் அழுகையில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான் கவி. அவளின் அழுகை அவனின் இதயத்தை நெருடியது. அவனுக்கு சலிப்பாக இருந்தது. இந்த பந்தத்தை இதற்காக வெறுத்தான். அவளின் மன கவலைகளை தனது மன கவலையாக ஏற்றுக் கொள்வது உண்மையிலேயே அவனுக்கு சிரமமாக இருந்தது.

"ஆதி.!" எதிரிலிருந்து குரல் வரவும் நிமிர்ந்துப் பார்த்தாள். அவளின் சகோதரி ஒருத்தி நின்றிருந்தாள். அன்பின் தேவதையாக இருந்து கவியின் கத்தியால் இறந்துப் போனவள் அவள். அவளின் ஆன்ம ரூபம் கண்டு குழம்பினாள்‌ ஆதி. ஆனால் அடுத்த சில நொடிகளில் அந்த ஒரு சகோதரியை சுற்றி மற்ற பல சகோதரிகளும் சகோதரர்களும் வந்து விட்டனர்.

ஆதி கண்ணீர் மறந்து எழுந்து நின்றாள். அவர்களை நோக்கி அடியெடுத்து வைத்தாள். அவளின் கரம் அவர்களை நோக்கி நீண்டது.

சகோதரன் ஒருவர் இடம் வலமாக தலையசைத்தான்.

"வேண்டாம் ஆதி. எங்களை தீண்ட உன்னால் முடியாது. நாங்கள் உயிரற்றவர்கள். உருவமற்றவர்கள். உன் எண்ணங்களின் பதிவில் பதிந்திருக்கும் ஞாபகங்களின் மூலம் உன்னை சந்திக்க வந்திருக்கிறோம்.!" என்றான்.

ஆதி ஆச்சரியத்தில் விழிகளை விரித்தாள்.

"ஆதி நீ எவ்வளவு சிறிய குழந்தை என்று நாங்கள் அறிவோம். அன்பின் தேவ தேவதைகள் பரிசுத்தமானவர்கள்தான். ஆனால் அன்பின் தேவர்களை பற்றி உனக்கு முழுதாய் தெரியவில்லை. உன்னை பலமில்லாதவள் என்று நீயே சொல்லிக் கொள்ளாதே.! உன்னை உன்னால் செதுக்கி கொள்ள இயலாது. ஆனால் மற்றவர்கள் உன்னை உன் கையாலேயே செதுக்க வைப்பார்கள். இது உனக்கு கிடைத்த வரம்‌ ஆதி. உன்னை நம்பியிருக்கிறோம் நாங்கள்.!" என்ற சகோதரியை ஆச்சரியமாக பார்த்தவள் "அப்படியானால் என்னால் உங்களை திருப்பிக் கொண்டு‌ வர முடியுமா?" எனக் கேட்டாள்.

மறுப்பாக தலையசைத்தான் ஒருவன்.

"இல்லை.. யாராலும் உடைக்க இயலாத அளவுக்கு நீ பலமுள்ளவளாக மாறுகையில்
நாங்கள் அனைவரும் உன் அன்போடு கலந்து விடுவோம். இந்த மொத்த பிரபஞ்சத்திற்கும் அன்பெனும் ஒளி தரும் தேவதையாக மாறுவாய் நீ. நாங்கள் இந்த பிரபஞ்ச வெளியில் வியாபித்து‌‌ அணுத்துகள்களாக மாறிப்‌போவோம்.!" என்றான்.

ஆதி ஆச்சரியப்பட்டாள்.

"அப்படியானால் நான் வதை செய்ய வேண்டுமா?" எனக் கேட்டாள்.

"இல்லை.. உன்னை நீயே தற்காத்துக் கொள்வதே போதுமானது.!" என்றவர்கள் திடீரென்னு அங்கிருந்து மறைந்துப் போனார்கள்.

ஆதி‌‌ சுற்றும் முற்றும் பார்த்தாள். கவி அந்த அறையின் பனிக் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான்.

"என்ன‌ ஆச்சி? ஏன் அழுதாய்?" எனக் கேட்டான்.

"கெட்ட கனா.!" என்றவளை பரிதாபமாக பார்த்தவன் அவளின் அருகே வந்தான். தன் வலது கையை அவளின் முன்னால் நீட்டினான்.

அவனின் கையில் பனிப்பூக்களால் செய்யப்பட்ட மாலை இருந்தது‌.

"இதை அணிந்துக் கொள். உன் சோகம் தீரட்டும்!" என்றான்.

ஆதி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். மாலையை தன் கழுத்தில் அணிந்துக் கொண்டாள்.

"நன்றிகள் ஏந்தலே!" என்ற வண்ணம் அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அவளை விலக்கி நிறுத்தியவன் "இனி அழாமல் இருப்பியா? நான் தூங்க போகட்டா?" எனக் கேட்டான்.

ஆதியின் முகம் வருத்தமுற்றது. அன்பு எப்போதும் ஒரு துணையை எதிர்பார்க்கும் என்பதை புரிந்துக் கொண்டாள். ஆனால் அந்த துணை ஜடமாக கூட இருந்தால் போதும் என்பதை அவள்தான் அறியாமல் போய் விட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN