பௌர்ணமி 9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமா போர்வையை முகத்தோடு சேர்த்து போர்த்தினாள். ஆனால் போர்வை கீழே நழுவியது. மீண்டும் எடுத்துப் போர்த்தினாள்.

"பள்ளத்துல தூங்கிட்டு இருக்கேனா?" தூக்கத்தில் புலம்பியவள் காலின் மீது ஏதோ ஊறி செல்லவும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

பாலா எதிரில் நின்றிருந்தான்.

"எதுக்குடா என்னை தூக்கத்துல இருந்து எழுப்பின?" கோபமாக கேட்டாள்.

"என் பொண்டாட்டி என்னை மரியாதையா கூப்பிடலன்னாலும் பரவால்ல.. அன்பாவாவது கூப்பிடுவான்னு எதிர்பார்த்தேன்.. ஆனா வாயாடியா வளர்ந்திருக்கா!" என்றவனை முறைத்தபடியே எழுந்து நின்றவள் "உன்னை வாடா போடான்னு கூப்பிடுறதே பாச கணக்குதான்.. எதுக்கு இந்த நைட்ல என்னை எழுப்பி இருக்க?" எனக் கேட்டாள்.

"நைட் இல்ல.. மணி ஆறரை ஆகுது!" சுவர் கடிகாரத்தை திரும்பிப் பார்த்தபடி சொன்னவன் "சீக்கிரம் ரெடியாகு.. இன்னைக்கு பெரிய பெரியப்பா வீட்டுக்கு விருந்துக்கு போறோம்!" என்றான்.

தோளின் மீது இருந்த பெட்சீட்டை தூக்கி கட்டிலின் மீது வீசியவள் இவனின் முன்னால் வந்து நின்றாள்.

"நிஜமாவா?"

அவளின் ஆச்சரியம் அவனுக்கு வியப்பை தந்தது. கடைவாயில் சிறிது ஈரம் இருந்தது. சிரிக்க தோன்றியது. புறங்கையால் அவளின் உதட்டை துடைத்து விட்டான். பின்னால் விலகி நின்றுக் கொண்டவள் "உனக்குத்தான் அவங்களை பிடிக்கலையே.. அப்புறம் ஏன் போகணும்?" என்றுக் கேட்டாள்.

"தட்டை நீதானே வாங்கின? நாம போகலன்னா அப்புறம் உன்னைதான் திமிர்காரின்னு நினைப்பாங்க!" என்றான்.

யோசித்தாள். "ஓ.. அப்ப சரி.!" என்றவள் குளிக்க கிளம்பினாள்.

பாலா தயாராகி கண்ணாடியை பார்த்தபடி வாசனை திரவியத்தை தன் உடம்பில் தெளித்துக் கொண்டிருந்தான். அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்திக் கொண்டிருந்தான்.

"பாலா.!" பூர்ணிமா வெளியே இருந்து கதவை தட்டினாள்‌.

"வா பூர்ணி.. கதவு லாக் பண்ணல!"

தயக்கமாக கதவை திறந்தவள் மெள்ள எட்டிப் பார்த்தாள்.

"உள்ளே பேய் பிசாசு இல்ல.!"

"ஆனா நீ இருக்கியே.!" என்றபடி உள்ளே வந்தவள் "வாவ்.. உன் ரூம் சூப்பரா இருக்கு பாலா.!" என்று ஆச்சரியப் பட்டப்படியே சென்று கட்டிலில் அமர்ந்தாள். படுக்கையில் ஒரு சிறு சுருக்கம் கூட இல்லாத அளவிற்கு வைத்திருந்தான். தூங்கினானா இல்லையா என்று சந்தேகப்பட்டாள் பூர்ணிமா.

தரையிலோ சுவற்றிலோ ஒரு தூசியை பார்க்க முடியவில்லை‌. ஏன் இருக்கிறது எனும்படியான பொருட்கள் ஒன்று கூட இல்லை.

அவளுக்கு எதிரே இருந்த சுவரில் மூன்று சிறு பிள்ளைகள் புகைப்படங்களில் இருந்தனர்.

"அட நான்தான் அது.!" என்றபடி எழுந்தவள் புகைப்படத்தின் அருகே வந்தாள்.

"பாலா.. என்னை லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணியா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணியா?" எனக் கேட்டாள்.

பாலா தன் கையில் இருந்து நழுவ இருந்த பெர்ப்யூம் பாட்டிலை கெட்டியாக பிடித்து மேஜையின் மீது வைத்தான்.

அவளை திரும்பிப் பார்த்தான். புகைப்படத்தில் கவனமாக இருந்தாள்.

'யாருக்கு தெரியும்?' என்றது அவனின் மனம். அவனின் மனம் அவனுக்கு புது புது சர்ப்ரைஸ்களை தந்துக் கொண்டிருந்தது.

பார்த்த உடன் அவளை வேண்டுமென்று கேட்டது. அவளை நேசிப்பதாக சொன்னது. நேசமும் கூட பல வருட காதலை போல இயல்பாய் வளர்ந்து நின்றது. அவனுக்கே அவனின் மனதை புரியவில்லை. முதலில் தன்னைதான் தான் படிக்க வேண்டும் என்று‌ நினைத்துக் கொண்டான்.

பூர்ணிமா அவன் புறம் திரும்பினாள்.

"இந்த பிக்சர்ல நீயும் கூட அழகாதான் இருக்க!" என்றாள்.

உதட்டை கோணியவன் "இப்ப அழகா இல்லையா? அப்படின்னா பாவம் அவளுக்கு கண்ணுல பிரச்சனை போல!" என்று முனகினான்.

"எதுக்கு இவ்வளவு வாசமா வர? ரோஸினிக்காகவா?" கையை கட்டியபடி திரும்பி நின்றுக் கேட்டாள்.

புகைப்படத்தையும் அவளையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பதற்கு அழகாய் இருந்தது. அச்சு பிசகாமல் வடித்த சிலையின் அழகு மாறாமல் வளர்ந்திருந்தாள்.

வேலைப்பாடுகள் அதிகம் இல்லாத ஒரு பட்டுப் புடவையை கட்டியிருந்தாள்‌. பின்னலில் பூச்சரத்தை மேலிருந்து கீழாக சுற்றியிருந்தாள். கண் மையை அடர்த்தியாக தீட்டி இருந்தாள். ஈர்க்கும்படிதான் இருந்தது.

"ரோஸினி சின்ன தாத்தாவோட பேத்தி. நீயா கண்டதையும் கற்பனை பண்ணிட்டு இருக்காத.. நானே கட்டிய பொண்டாட்டிக்கிட்ட கூட டைம் செலவு பண்ண முடியாத அளவுக்கு பம்பரமா சுத்திட்டு இருக்கேன்.!" என்றவன் "போகலாமா?" எனக் கேட்டான்.

"ம்.!" என்றவள் அவனுக்கும் முன்னால் நடந்தாள்.

"பூர்ணி!" அழைத்து நிறுத்தியவன் "அந்த வீட்டுல என்னோடவே இரு. யாராவது தனியா பேச வந்தா அவங்களோடு பேசாத.. உனக்கு யாரையும் தெரியாது. எப்ப விழுவாங்கன்னு பார்த்துட்டு இருக்காங்க.. கவனமா இருக்கணும் அங்கே!" என்றான்.

பூர்ணிமா சரியென்று தலையசைத்தாள்.

மரிக்கொழுந்து பயந்தபடியேதான் இருவரையும் அனுப்பி வைத்தார்‌.

காரை நோக்கி நடந்தவனின் கையை பற்றியவள் "வா நடந்து போகலாம்.!" என்று இழுத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

வீட்டை தாண்டி தென்னந்தோப்பிற்குள் நுழைந்ததும் அவனின் முகம் பார்த்தவள் "நீ ஏன் இவ்வளவு கெட்டவனா இருக்க பாலா?" எனக் கேட்டாள்.

அவளின் குரலில் இருந்த வருத்தம் அவனையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

"கெட்டவனா இருக்க வேண்டிய நேரத்துல இருந்துதான் ஆகணும் பூர்ணி!"

பூர்ணிமாவின் விழிகள் கலங்கியது.

"உன்னை எனக்கு பிடிக்கவே இல்ல!"

அவளின் தோளில் கை போட்டு அணைத்தபடி அடியெடுத்து வைத்தவன் "பரவால்ல பூர்ணி.! உனக்கு அதுக்கு கூடவா உரிமை இல்ல?" எனக் கேட்டான்.

"அவர் காணாம போயிட்டார் பாலா.. பாவம் இல்லையா? மூணு வேளை வெறும் சாதம் தரதுல என்ன நஷ்டம் நமக்கு? உன்னாலதான் அவர் நம்ம வீட்டை விட்டுப் போனாரு.!" சிறு அழுகையும் சிறு கோபமும் இருந்தது அவளின் குரலில்.

கவலையோடு அவளின் முகம் பார்த்தவன் "அவர் எங்கேயாவது இருப்பாரு.. செத்துட மாட்டார்.!" என்றான்.

நாகேந்திரன் வீட்டை விட்டு சென்ற அடுத்த நாளே சாணக்கியனிடம் சொல்லி அவரை பற்றி விசாரிக்க சொல்லியிருந்தான் பாலா. அவர் தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார் என்ற விசயத்தை சாணக்கியன்தான் வந்து சொன்னான். பதினேழு வருடங்களுக்கு பிறகு தனது சொந்த வீடு சென்றுள்ளாரே என்று பாலாவும் அதற்கு மேல் கண்டுக் கொள்ளவில்லை.

"எனக்கு உன் மேல ரொம்ப கோபம் பாலா.. ஆனா காட்டவே முடியல. ஏன்?" என கேட்டவளின் தோளை அழுத்தமாக பற்றியது அவனின் கரம்.

"லவ்ன்னு சொல்லு!"

"ஆனா உன்னைதான் எனக்குப் பிடிக்கலையே!" அவள் சிறு பிள்ளை போல சொன்னது கேட்டு அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

"குழப்பம் பூர்ணி உனக்கு, எனக்கும்தான்! மெதுவா நம்மை நாமே புரிஞ்சிக்கலாம்.!" என்றான்.

அவனின் பேச்சுகள் எல்லாம் அவளை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்துவதாகவே இருந்தது.

பெரிய தாத்தாவின் தோட்டம் பெரியதாக இருப்பது போலிருந்தது பூர்ணிமாவுக்கு. இரண்டு வீடுகள் அருகருகே இருந்தன.

"அது பெரிய பெரியப்பா வீடு. இது சின்ன பெரியப்பாவோடது.!" என்றவன் அவளின் கையை பற்றியபடி பெரிய பெரியப்பாவின் வீட்டிற்கு வந்தான்.

பெரிய பாட்டி ஆரத்தி சுற்றினாள். அவன் பக்கம் தட்டு வரவேயில்லை. பூர்ணிமாவுக்கு மட்டும்தான் சுற்றினாள். அவன் கண்டுக் கொள்ளாதவனாக நின்றான். ஆனால் பூர்ணிமாவுக்குதான் சுருக்கென்று என்னவோ நெஞ்சில் தைத்தது. அந்த பாட்டியை பிடிக்கவே இல்லை அவளுக்கு.

பாட்டி தன் அண்ணன் பேத்திக்கு சிறப்பு கவனிப்பு தருகிறாள் என்று பாலாவுக்கு புரிந்தது.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டில் கூட்டம் இருந்தது. பூர்ணிமாவின் இரண்டு சித்தப்பாக்கள், பெரியப்பா, அத்தைகள் இருவர் என்று அனைவரும் அந்த வீட்டில் இருந்தார்கள்.

பாலா கோபத்தில் பற்களை கடித்தான். பூர்ணிமாவுக்கு எதுவும் தெரியாது என்பது தெரிந்தே பெரிய தாத்தா இவர்கள் அனைவரையும் இங்கே அழைத்திருக்கிறார் என்பது புரிந்தது. நடப்பது நடக்கட்டும் என்று ஒரு பக்கம் தைரியம் சொல்லிக் கொண்டாலும் கூட பூர்ணிமா உடைந்து விடுவாளோ என்று பயமாகவும் இருந்தது.

வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே பாலாவின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு விட்டாள் பூர்ணிமா.

இந்த வீட்டில் எதுவோ சரியில்லை என்பது போலவே இருந்தது அவளுக்கு.

"பூர்ணிமா!" என்றபடி அவளின் அருகே வந்தார் அவளின் பெரிய சித்தப்பா.

"ரொம்ப வளர்ந்துட்ட!" என்றார். அவரின் முக சாயலில் தன் வீட்டு திண்ணை வேலைக்காரரின் முக சாயல் இருப்பது கண்டு குழம்பினாள் பூர்ணிமா. தனது நினைப்பில்தான் தவறு என்று நினைத்தாள்.

"சாப்பாடு ஆச்சா?" எனக் கேட்டவனிடம் வந்தாள் பெரியம்மா.

"அதுக்குள்ள பசிக்குதா? சரி வாங்க.. சாப்பிட்டு பேசிக்கலாம்.!" என்று அனைவரையும் அழைத்தாள். ஹாலில் ஒரு பக்கம் வரிசையாக இருந்தது வாழை இலைகள். பூர்ணிமா பாலாவின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டாள்.

"இங்கே வாடா பாப்பா!" என்று அழைத்தாள் அவளின்‌ அத்தை. பூர்ணிமா மறுப்பாக தலையசைத்துவிட்டு பாலாவின் தொடையோடு நெருங்கி அமர்ந்தாள்.

"பயப்படாத பூர்ணி.. இல்லன்னா ரொம்ப பண்ணுவாங்க!" சிறு குரலில் அவளை எச்சரித்தான்.

பூர்ணிமா புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள்.

உணவுகள் பரிமாறப்பட்டது.

"அப்பா.. என்ன வாசம்.! உன் பக்கத்துல வந்தா தலைவலி வரும் போல!" என்றாள் உணவை பரிமாற வந்த பாலாவின் பெரியப்பா மகள் ஒருத்தி.

"அடப்பாவி.. இதுக்காகதான் அரை பாட்டில் சென்டை ஒருத்தனே அடிச்சிட்டு வந்தியா? தெரிஞ்சிருந்தா மீதியை நான் காலி பண்ணி இருப்பேனே!?" என்றாள் பூர்ணிமா.

சிரிப்பை அடக்கிக் கொண்டவன் அவளின் இலையில் இருந்த இரட்டை மைசூர்பாக்கில் ஒன்றை எடுத்தான்.

பூர்ணிமாவுக்கு ஒரு சதவீதம் கூடுதல் பிடிப்பு அவனிடத்தில் வந்திருந்தது. அவளுக்கு எப்போதும் மைசூர்பாக் பிடிக்காது. எங்கேயாவது யாராவது தந்தால் கூட அதை அம்மாவிடம்தான் தருவாள். சிறு வயது ஞாபகத்தில் இன்னமும் இருக்கிறானே என்று உள்ளம் கொஞ்சம் இளகியது.

பூர்ணிமாவின் பெரியம்மா தன் இலையிலிருந்து எழுந்தாள். இவர்களிடம் விடுவிடுவென்று வந்தாள்.

"புள்ளை சாப்பிடட்டும்ன்னு ஆசையா அவளுக்கு வச்சா நீ ஏன் அதை எடுக்கற?" என்று உரத்த குரலில் கேட்டவள் "பிச்சைக்கார குடும்பங்கறது சரியாதான் இருக்கு!" என்று முனகினாள்.

"அடியே அரசி.. மைசூர்பாக்கை கொண்டு வந்து பாப்பாவுக்கு வை.!" என்று கத்தினாள்.

பாலா பற்களை அரைத்தான். பிச்சைக்கார குடும்பம் என்று அவளின் வார்த்தை அவனின் மூளைக்குள் சுழன்றது.

இந்த வார்த்தை இப்போது வருவதில்லை. எப்போது மலருக்கும் நாகேந்திரனுக்கும் திருமணம் நடந்ததோ அப்போதிருந்து ஒலித்துக் கொண்டிருக்கும் வார்த்தைதான்.

நாகேந்திரனின் குடும்பம் அரை ஊரையே சொந்தமாக வைத்திருப்பவர்கள். பண ஏற்ற தாழ்வு எப்போதும் தீராதது என்று பாலாவுக்கும் தெரியும்.

ஆயிரத்தை இளக்காரமாக பார்க்கும் லட்சம். லட்சத்தை இளக்காரமாக பார்க்கும் கோடி. கோடியை இளக்காரமாக பார்க்கும் நூறாயிரம் கோடி. இது தொடர்ந்துக் கொண்டே இருக்கும். தேவைகளுக்கும் பணத்திற்கும் சம்பந்தம் உள்ளதோ இல்லையோ.. சம்பந்தம் செய்த இடம் தங்களுக்கு சரி சமமாக இருக்க வேண்டும் என்றே நாகேந்திரனின் குடும்பத்தார் நினைத்தார்கள்.

எழுந்து அவர்களை கத்தி வைக்க வேண்டும் போல இருந்தது பாலாவுக்கு. ஆனால் தான் ஏதாவது ஆரம்பித்தால் பிறகு பூர்ணிமாவிற்கு உண்மை தெரிந்துவிடுமோ என்று கோபத்தை அடக்கியபடி அமர்ந்திருந்தான். ஆனால் பூர்ணிமாவால் அமைதியாக இருக்க முடியவில்லை.

"ஹலோ ஆன்டி.. எனக்கு மைசூர் பாக் பிடிக்காது. வேஸ்ட் ஆக கூடாதுன்னு என் வீட்டுக்காரர் எடுத்துக்கிட்டாரு. எங்களுக்கு சாப்பாட்டை வீண் பண்ண பிடிக்காது‌.. உங்களுக்கு.." அவள் மேலும் பேசும் முன் அவளின் இடது கையை பற்றினான் பாலா.

"அமைதியா சாப்பிடு பூர்ணி.. டைம் ஆச்சி.. போகணும்!" என்றான்.

பூர்ணிமா இலையை எதிர் புறத்தில் மடக்கி வைத்தாள். எழுந்து நின்றாள்.

"நான் சாப்பிட்டேன். உனக்கு உன் பெரியப்பா வீட்டு சாப்பாடு அவ்வளவு ருசியா இருந்தா பொறுமையா சாப்பிட்டு வா.. நான் கிளம்பறேன்.!" என்றவள் அங்கிருந்து நடந்தாள்.

பாலா உதட்டை கடித்தபடி எழுந்து நின்றான். உணவை வீண் செய்வதற்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டபடியே அங்கிருந்து வெளியே நடந்தான்.

பூர்ணிமா வீட்டின் கதவை தாண்டிக் கொண்டிருந்தாள். பாலா அவளை நெருங்கும் வேளையில் அவனின் அருகே வந்தார் பூர்ணிமாவின் பெரியப்பா. பூர்ணிமா தூரமாக செல்வதை கண்டவன் இவர் புறம் திரும்பினான்.

"எனக்கு வேலை இருக்கு மாமா!" என்றவனை நக்கலாக பார்த்தவர் "எது கடன் வாங்கற வேலையா?" எனக் கேட்டார்.

பாலாவுக்கு இந்த ஒரு விசயமும் சுத்தமாக புரியவில்லை. கடன் வாங்குபவன் அவன். இவர்களுக்கு என்ன வலிக்கிறது? பிரச்சனைகளை சந்திக்கும் வேளையில் பத்து பைசா தந்து உதவி செய்ய மனம் வராதவர்கள்தான் கடன் வாங்குவதையும் கேவலம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

"உங்க குடும்பத்து புத்தி என்னன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா பாலா? என் தம்பியோட சொத்து மேல ஆசைப்பட்டுதானே மலர் அவனை மயக்கினா.? இப்ப நீ.. பூர்ணிமாவோட சொத்துக்காகதானே எங்களுக்கு கூட சொல்லாம அவளை கல்யாணம் பண்ணி கூட்டி வந்திருக்க? என் தம்பியை பைத்தியமாக்கி உங்க வீட்டு நாயோடு நாயா கட்டி போட்டுட்டிங்க. இப்ப இவ.. உங்க குடும்பத்து நிழல் விழுந்த பாவத்துக்கு எங்க குடும்பம் எவ்வளவு அனுபவிக்கும்?" எனக் கேட்டார் ஆத்திரமாக.

பாலாவுக்கு ரத்தம் உயர் சூட்டில் கொதித்துக் கொண்டிருந்தது. 'பூர்ணிக்காக.!' என்று மனதுக்குள் சொன்னவன் "எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்பறேன் மாமா!" என்றுவிட்டு வெளியே நடந்தான்.

இத்தனை வருடங்களில் பல முறை அனுபவித்த அவமானங்கள்தான். இப்போது புதிதாகவா வலித்து விடப் போகிறது என நினைத்தபடி வெளியே நடந்தான். ஆனாலும் இதயத்தில் ஓரமாக வலி இருந்துக் கொண்டுதான் இருந்தது.

அவன் வந்த போது பூர்ணிமா தென்னந்தோப்பின் ஆரம்பத்தில் அவனுக்காக காத்திருந்தாள். பெரிய தாத்தாவின் வீடு வரை செல்லும் சிமெண்ட் சாலையின் ஓரத்தில் இருந்த கற்களை உதைத்து தள்ளினாள். இவன் வந்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு தோப்பிற்குள் நுழைந்தாள்.

"பூர்ணி.!" என்றபடி நெருங்கியவனை திரும்பி பார்த்து முறைத்தவள் "உனக்கு சூடு சொரணையே இல்லையா பாலா? நானா இருந்திருந்தா அவங்க வீட்டுல பச்சை தண்ணி கூட குடிச்சிருக்க மாட்டேன்.!" என்றாள் பற்களை கடித்தபடி.

"விடுப்பா.." என்றவனை பார்வையால் எரித்தாள்‌.

"நான் உன் அம்மாவை தப்பா சொன்னேன். நீ கூடதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. நீ என்னை கன்னத்துலயே அறைஞ்ச.. ஆனா நானும்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.!" என்றவனை இன்னும் அதிகமாக முறைத்தாள்.

"நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்க நூறு ஆயிரம் காரணம் உண்டு பாலா.. முட்டாள் போல பேசிட்டு இருக்காத.. என் அம்மாவுக்கு உன் மேல ஏதோ ஒரு விதத்துல நம்பிக்கை. இல்லன்னா என் அம்மாவை நீ அப்படி பேசியும் அவங்க என்னை உனக்கு கட்டி தந்திருக்க மாட்டாங்க‌. என் அம்மாவோட தைரியம் பத்தி எனக்கு நல்லா தெரியும். உன் திமிரை நல்லா தெரிஞ்சும் உனக்கு என்னை கல்யாணம் பண்ணி தந்தாங்க. என் அம்மாவோட நம்பிக்கையை நான் நம்பறேன். உன் திமிரை எனக்கும் கூட பிடிச்சிருந்தது பாலா.!" என்றவளை ஆச்சரியமாக பார்த்தான். அவளின் விரல்களில் ஜிலேபியின் பாகு ஒட்டிக் கொண்டிருந்தது.

"என்னை போலவே நீயும் திமிரா இருந்த.. யார் பேச்சையும் கேட்காம இருந்த.. பிடிச்சிருந்தது. ஆனா இப்ப பிடிக்கல.. நான் முல்லையோட பொண்ணு.. கோழையை.. அதுவும் சொந்தக்காரங்ககிட்ட அவமானப்படும் கோழையை விரும்பமாட்டேன்!" என்றவள் வீடு இருந்த திசையில் காலெடுத்து வைத்தாள். அவளின் வலது கையை பற்றினான் பாலா.

கோபத்தோடு திரும்பினாள் பூர்ணிமா. தன் சட்டையின் கீழ் ஓரத்தை பயன்படுத்தி அவளின் கையை சுத்தம் செய்தான்.

"நீ என்னை கல்யாணம் பண்ணிக்க உன் அம்மா மேல நீ வச்ச நம்பிக்கையும் ஒரு காரணம் பூர்ணி. அது போலதான் எனக்கும். ரீசன் வலுவா இருந்தா எப்படிபட்ட அவமானத்தையும் தாங்கலாம். அதுவும் இல்லாம இதெல்லாம் எனக்கு புதுசு இல்ல பூர்ணி.. சின்ன புள்ளையில் நீயும் மாறனும் விளையாட ஆரம்பிக்கும்வரை நான் தனியாதான் விளையாடி இருக்கேன். எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுலதான் அத்தைக்கு கல்யாணம் நடந்தது. அன்னையிலிருந்து நம்ம குடும்பத்து மேல கோபம் இவங்களுக்கு. இரண்டு வீட்டுலயும் நிறைய பிள்ளைகள். ஆனா நான் விளையாட போனா என்னை ஒதுக்கி வைப்பாங்க. நான் திருப்பி திருப்பி போவேன். ஆனா பெரியம்மா என்ன சொல்வாங்கன்னா உன் அம்மா கூப்பிடுறாங்கன்னு பொய் சொல்லி திருப்பி அனுப்பி வைப்பாங்க. பெரியப்பாவோ இந்த தோப்புல புகுந்து வராத. பாம்பு பூச்சி கடிச்சிடும்ன்னு சொல்லி அனுப்பி வைப்பாங்க. அது பாசம் இல்ல.. ஒதுக்கல்ன்னு பெரியவனான பிறகுதான் புரிஞ்சுது. சின்ன தாத்தா வீட்டை சொல்லவே வேணாம். சொத்து பாகம் பிரிக்கையில் இரட்டை கிணறு காடு அவங்களுக்கு போகாம நமக்கு வந்துடுச்சின்னு கோபம். ஒதுக்கப்படுறதெல்லாம் எனக்கு புதுசு கிடையாது. எனக்கு உன்னையும் மாறனையும் ரொம்ப பிடிக்கும். நீங்க என் சொந்தமா இருந்திங்க. என்னை நம்பி உங்களை பார்த்துக்கும் பொறுப்பை தந்திங்க. லவ் யூ பூர்ணி, நான் மாறனை எவ்வளவு லவ் பண்றேன்னோ அதே அளவுக்கு உன்னையும் லவ் பண்றேன்!" என்றான்.

பூர்ணிமா விழிகளை சிமிட்டினாள்.

"நான் அப்ப இருந்தே கடினம்தான் பூர்ணி. என்னை ஒதுக்கினாங்க. வலியை மறைக்க கல்லா மாறினேன். அவமானகரமான வார்த்தைகள் ரொம்ப சுலபமா அவங்க வாய்ல இருந்து வரும். எதையும் தாங்குற அளவுக்கு இதயம் வேணும் பூர்ணி. அனைவரையும் ஒதுக்கி தள்ள எனக்கும் ஆசைதான். ஆனா சில விசயங்களில் சிலரிடம் அது முடியாது.!" என்றான்.

பூர்ணிமாவிற்கு பதில் பேச ஆசைதான். ஆனால் நாக்கு எழவில்லை.

அவளின் கையை பற்றியவன் நடக்க ஆரம்பித்தான்.

"கோடிக் கணக்குல கடன் வாங்கி வச்சிருக்கேன் பூர்ணி. கடன் வாங்கிதான் கம்பெனியை ஆரம்பிச்சேன். அவங்களை விட ஒரு படியாவது மேலே இருக்கணும். அப்பதான் அவங்க வார்த்தைகளாவது என்னை வந்து சேராம இருக்கும். சில சமயத்துல ரொம்ப பயமா இருக்கும். திடீர்ன்னு எனக்கு ஏதாவது ஆகிட்டா மொத்த கடனும் வீட்டு மேலதான் விழும். அம்மா அப்பா மாறன் என்ன செய்வாங்கன்னு திக்கு திக்குன்னு மனசு அடிச்சிக்கும். உன்னை ஏன் கல்யாணம் பண்ணேன்னு கூட சில சமயத்துல யோசிச்சி இருக்கேன். எல்லா நேரத்திலும் என் பேச்சை கேட்கும் என் மனசு உன் விசயத்துல என் பேச்சை கேட்காம போயிடுச்சி. ஆனா நீ பயப்பட வேணாம். என்னோட எந்த கடனும் உன் வரைக்கும் வராது. எதுவா இருந்தாலும் மாறன் சமாளிச்சிப்பான்.!"

பூர்ணிமா அவனின் தோளில் சாய்ந்தாள்.

"ரொம்ப யோசிக்கிறப்பா.. ஆனா பயப்படாத.. உனக்கு ஒன்னும் ஆகாது.! இந்த காலத்துல ரிஸ்க் எடுக்கலன்னா எப்படி வாழ முடியும்? நீ உன் மேல நம்பிக்கை வைக்கும் வரை எல்லாம் சுபமே!" என்றவளின் கரம் அவனின் கரத்திற்குள் பிணைந்தது.

இருவரும் வீட்டிற்கு வந்தபோது ஹாலில் மரிக்கொழுந்துவும் செண்பகமும் பதட்டத்தோடு இருந்தார்கள்.

"அதுக்குள்ள போன் வந்துடுச்சா?" சலிப்போடு கேட்டான் பாலா.

"நீ பேசாத.. நான் இவங்களை சமாளிச்சிக்கிறேன்!" என்றாள் பூர்ணிமா.

அவளை‌ பார்த்து சிரித்தவன் "பெரிய மனுஷின்னு நினைப்போ?" எனக் கேட்டான்.

"ஆமான்டா தம்பி!" என்றபடி அவனின் தோளை தட்டியவள் அவனுக்கும் முன்னால் நடந்தாள்.

மரிக்கொழுந்து இருக்கையை விட்டு எழுந்து நின்றார். பாலாவை முறைத்தார்.

"ஒரு மைசூர் பாக் உனக்கு முக்கியமா? அவளுக்கு பிடிக்கலன்னா அவ ஒதுக்கி வச்சிட்டு வர போறா.. நீ ஏன் இப்படி வம்பை இழுத்துட்டு வர?" என்றுத் தொண்டை வலிக்க கத்தினார்.

"நீங்க முதல்ல நிறுத்துங்க மாமா.. நானும் என் புருசனும் ஒரு மைசூர் பாக்கை ஷேர் பண்ணிக்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா? அவங்க எவ்வளவு கேவலமா பேசினாங்க தெரியுமா? எனக்கு வந்த கோபத்துக்கு அவங்களை கடிச்சி குதறி இருப்பேன். வீட்டுல பெரிய மனுசர் நீங்க இருக்கிங்க.. நீங்க அவங்களை கவனிச்சிப்பிங்கன்னு நம்பி விட்டுட்டு வந்தேன். ஆனா நீங்க எங்களை குறை சொல்றிங்க.! என் அம்மா இருந்திருக்கணும்.. அவங்களை வகுந்திருப்பாங்க.!" என்றவள் முகத்தை தூக்கி வைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள்.

பாலா தந்தையை வெறித்துப் பார்த்தான்.

"அவங்க கால்ல விழ என்னால முடியாது‌.!" என்றவன் தனது அறைக்கு நடந்தான்.

மரிக்கொழுந்து நெற்றியை பிடித்தபடி சோஃபாவில் அமர்ந்தார். அமைதியாக சொந்தங்களோடு கலந்து சென்று விடுவதில் என்ன கஷ்டம் என்று யோசித்தது அவரின் மனம். அவமானகரமான வார்த்தைகள் அனைத்தையும் தங்கையின் மீது பழியாக போட்டுவிட்டு மீண்டும் அந்த சொந்தங்களோடு குலாவிக் கொள்வது சரியா தவறா என்று அவருக்கே புரியவில்லை.

மறுநாள் மாலையில் பாலா தனது கம்பெனியிலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது அவனின் காரை கை காட்டி நிறுத்தியது ஒரு ஜீவன்.

கோபத்தோடு கீழே இறங்கினான். நாகேந்திரன் தலைமுடியை சீராக வெட்டி விட்டிருந்தார். தாடி இல்லாமல் இருந்தது. அவர் தெளிந்து விட்டது புரிந்தது. அதுதான் கோபமாக வந்தது.

"என்ன வேணும் உங்களுக்கு?" என சீறினான்.

நாகேந்திரன் தன் கையில் இருந்த காகித கட்டுகளை நீட்டினார்.

"உனக்கு நிறைய கடன் இருக்குன்னு கேள்விப்பட்டேன் பாலா.. இந்த பத்திரங்களை வச்சி ஏதாவது பண்ண முடியும்ன்னா பண்ணிக்கோ. நான் கையெழுத்துப் போடுறேன்!" என்றார்.

இருள் சூழ ஆரம்பித்து விட்டிருந்தது. பாலாவின் உள்ளம் எரிமலையாக மாறிக் கொண்டிருந்தது‌.

"நான் பிச்சைக்காரன் இல்ல.!" என்றவன் காரை நோக்கி நடந்தான்.

"பாலா.." ஓடி வந்து அவன் முன் நின்றார்.

"வாங்கிக்க.. பூரணிக்காக வாங்கிக்க.!" என்றார்.

பாலாவின் கரம் எப்போது அவரின் சட்டையை பற்றியது அவனுக்கு தெரியவில்லை.

"பூர்ணிக்காக நீங்க உங்க பேராசையை மறைச்சி இருக்கலாமே.. பூர்ணிக்காகவாவது எங்க அத்தையை கொல்லாம இருந்திருக்கலாமே.. பூர்ணிக்காகவாவது நீங்க செத்து தொலைஞ்சி இருக்கலாமே.!" என்றான்.

கலங்கும் கண்களோடு கையெடுத்து கும்பிட்டார்.

"தப்பு பண்ணிட்டேன் பாலா.. இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரியாதுடா.. என்னால உங்க குடும்பம் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கும்ன்னு புரிஞ்சிக்காம போயிட்டேன்டா.! இந்த முட்டாளை மன்னிச்சிடு.!" என்றார்.

பாலா அவரை வெறித்தான்.

"என் மலர் அத்தையை திருப்பி தர முடியாது உங்களால.. என் முல்லை அத்தையோட கெட்டுப் போன மனசை பரிசுத்தமாக்க முடியாது உங்களால.. அப்புறம் எதுக்காக நான் உங்களை மன்னிக்கணும்?" எனக் கேட்டவன் அவரிடமிருந்து விலகி நடந்து காரில் ஏறினான். அங்கிருந்து சென்றான்.

நாகேந்திரன் முகத்தை மூடினார். குலுக்கினார். அழுகையை இந்த இருட்டு தின்று விட கூடாதா என்று பேராசைப் பட்டார்.

"முல்லை மனசு கெட்டுப் போகல.. நான்தான் கெட்டவன்!" என்றார் இருட்டோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN