குரங்கு கூட்டம் 1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அழகான மாலை நேரம். பிரேம் வீட்டின் மொட்டை மாடியில் நிழலாக இருந்தது. ஓரங்களில் கரையான் அரித்து விட்ட பாயை தரையில் போட்டு வட்டமாக அமர்ந்திருந்தார்கள் பிரேமின் நண்பர்கள்.

சந்தனக்கொடிக்காலில் மிட்டாய் கடை தெருவில் வரிசையாக உள்ளது பல வீடுகள். அதில் நடு மத்தியில் உள்ளது பிரேமின் வீடு. அந்த பக்கம் அர்விந்த் வீடும், எதிரில் மிருத்யூ, மிருதுளா வீடும் உள்ளது. நால்வரும் சிறு வயதில் இருந்து நண்பர்கள்.

பிரேம் கடந்த மூன்று வருடங்களாக வீட்டிற்கு கூட வராமல் டெல்லியில் இருந்த ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.

நேற்றுதான் படிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பி இருந்தான். அவன் வந்ததிலிருந்து நண்பர்கள் நால்வரும் அவன் வீட்டு மொட்டை மாடியிலும் அவனது அறையிலும்தான் குடியிருக்கிறார்கள். பிரேமை மூன்று வருடங்களாக பிரிந்து இருந்தது அவர்களுக்கு சோகத்தை தந்து விட்டது. அந்த சோகத்தை தீர்த்துக் கொள்ளதான் இப்போது அட்டை போல ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

மிருத்யூவும், மிருதுளாவும் இரட்டை பிறவிகள். முக அமைப்பும் கூட ஒன்று போலதான் இருக்கும். மிருதுளாவின் நீள கூந்தலையும், மிருத்யூவின் கிராப் வெட்டிய தலையும் இல்லாமல் இருந்திருந்தால் பலரும் குழம்பிக் கொண்டுதான் இருந்திருப்பார்கள்.

பிரேமுக்கும் அர்விந்துக்கும் இருபத்தி ஐந்து நடந்துக் கொண்டிருக்கிறது. மிருதுளாவும் மிருத்யூவும் போன மாதத்தில்தான் இருபத்தி மூன்றை கடந்தார்கள். பிரேமை தவிர மற்ற மூவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.

நால்வரின் நட்புக்கு யாரையும் ஒப்பிட்டு காட்ட முடியாது. ஏனென்றால் இவர்கள் ஒரு குரங்கு கூட்டம்.

நேற்று இரவு பிரேமின் அறையில்தான் நால்வரும் படுத்து உறங்கியிருந்தார்கள். இன்று காலையிலிருந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்னும் பேசி தீர்த்த பாடில்லை. அதிலும் மிருதுளாதான் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறாள்.

மகன் வீடு திரும்பியிருக்கிறான் என்று பஜ்ஜியும் வடையும் சுட்டு கொண்டு வந்தாள் பிரேமின் அம்மா. அவள் தட்டை வைத்து சென்ற ஐந்தாம் நிமிடத்தில் அனைத்தும் காலியாகி விட்டது.

தட்டில் கடைசியாக இருந்த ஒற்றை வடையை பார்த்தனர் நால்வரும். நால்வரும் ஒரே நேரத்தில் பாய்ந்து அந்த வடையை பிரித்து மேய்ந்ததில் யாருக்கும் கிடைக்காமல் வடை தூளாகி பாயில் உதிர்ந்துப் போனது‌.

"வடை போச்சி.!" சோகமாக சொன்னாள் மிருதுளா.

"நாளைக்கு அருவி கரைக்கு போகலாமா?" அர்விந்தன் வானம் பார்த்தபடி கேட்டான்.

"போலாம்.." சந்தோசத்தில் கத்தினாள் மிருதுளா.

"ஓகே!" என்றான் மிருத்யூ.

பிரேம் மட்டும் அமைதியாக இருந்தான்.

"பிரேம்.. ஏன் சோகமா இருக்க?" மிருதுளாவின் கேள்வியில் மற்ற இருவரும் அவனை திரும்பிப் பார்த்தார்கள்.

"நானா.. இல்லையே!" என்றவனின் குரலில் வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது.

வீடு வந்ததிலிருந்தே அவன் அப்படிதான் இருந்தான். பயண களைப்பு என நினைத்திருந்தார்கள் நண்பர்கள்.

"வடை இல்லையேன்னு பீல் பண்றியாடா?" அவனின் தாடையை பற்றி நிமிர்த்திக் கேட்டாள் மிருதுளா.

இல்லையென தலையசைத்தவன் "சும்மா.. லேசா தலைவலி.!" என்றான்.

நண்பர்கள் அதற்கு மேல் கண்டுக் கொள்ளவில்லை. தங்களின் அலுவலகத்தில் நடக்கும் விசயங்களை நண்பனிடம் கதையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

தினமும்தான் போனில் பேசியிருந்தார்கள். ஆனால் இப்போது நேரிலும் அதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிரேமுக்குதான் எதுவும் மனதில் பதியவில்லை.

இரவு உணவுக்காக நால்வரும் உணவகம் ஒன்றுக்கு புறப்பட்டார்கள். இருளில் நடந்து சென்றார்கள். சாலையின் விளக்கொளியில் மிருதுளா மட்டும் சற்று வண்ண மயமாக தெரிந்தாள். ஏனெனில் மற்ற மூவரும் கருப்பு வெள்ளை கலந்த உடையைதான் அணிந்திருந்தார்கள்.

துள்ளிக் கொண்டு நடக்கும் மிருதுளா வாகனங்களின் மீது மோதி விடுவாளோ என பயந்து அவளை இழுத்து இந்த பக்க ஓரத்தில் விட்டான் பிரேம்.

பிரேமின் தோளிலும் மிருத்யூவின் தோளிலும் கை போட்டுக் கொண்டவள் "இப்பதான் நம்ம குரூப் புல்பில் ஆகியிருக்கு.!" என்றாள்.

பிரேம் அவளின் தலையில் முட்டினான். உண்மைதான். இந்த மூன்று வருடங்களில் நண்பர்களை அதிகம் மிஸ் செய்து விட்டான் அவன்.

எந்த உணவு உண்டாலும் நண்பர்கள் நினைவுதான். புரண்டு படுத்தாலும் அருகில் அவர்கள் இல்லையென்று மனம் நொந்தது. ஏன் இங்கே படிக்க வந்தோம் என்று கூட பல முறை நினைத்து விட்டான்.

மிருத்யூ அர்விந்தை தாண்டி சென்று நடந்தான். மிருதுளா அவளது மொத்த எடையையும் தனது தோளில் இறக்கி வைப்பது போலிருந்தது அவனுக்கு.

அர்விந்த் அவளின் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டான்.

மிருதுளா சினிமா பாடல் ஒன்றை முனகினாள். மற்றவர்கள் தங்களின் காதுகளை தோளோடு தேய்த்துக் கொண்டனர்.

உணவகத்தில் நால்வர் அமரும் மேஜையில் சென்று அமர்ந்தவர்கள் ஆளுக்கொரு பிரியாணியை வரவைத்து உண்டனர்.

மிருதுளா சுற்றும் முற்றும் பார்த்தபடியே உணவை உண்டாள். "அந்த பொண்ணு அழகா இருக்கு. மிருத்யூ நீ ஏன் அவங்களை லவ் பண்ண கூடாது?" எனக் கேட்டபடி தூரத்து மேஜையை கை காட்டினாள். மூவரும் அவசரமாக திரும்பிப் பார்த்தார்கள். வயதான பாட்டி ஒருவர் புரோட்டாவை உண்டுக் கொண்டிருந்தார்கள்.

சகோதரியை முறைத்தான் மிருத்யூ.

"நல்ல பொண்ணாதான் இருக்கு!" சிறுகுரலில் சொன்னான் அர்விந்த்.

"அப்படின்னா நீயே கட்டிக்க!" என்ற மிருத்யூ உணவை உண்பதில் ஆர்வம் காட்டினான்.

மிருதுளாவும் அர்விந்தும் சிரித்தார்கள். ஆனால் பிரேம் சிரிக்கவில்லை. அவனே விசயத்தை சொல்லட்டும் என்ற எண்ணத்தோடு உணவை முடித்துக் கொண்டு எழுந்தார்கள் நண்பர்கள்.

உணவகத்தின் வாசலில் விற்ற குல்பியை ஆளுக்கொன்று வாங்கி சுவைத்தபடியே பாதையில் நடை போட ஆரம்பித்தார்கள்.

தேசிய நெடுஞ்சாலை ஒன்றோடு இணைக்கப்பட்டுள்ள பாதை அது. அதனால் வாகனங்கள் கணிசமாக வந்து சென்றுக் கொண்டிருந்தன.

"எங்க ஆபிஸ்ல ஒரு முட்டைக்கண்ணு பொண்ணு இருக்கா பிரேம். மிருத்யூவுக்கு ரொம்ப நாளா ரூட் விட்டுட்டு இருக்கா. ஆனா பாவம் பையன் மடங்க மாட்டேங்கிறான். நான் சொன்னேன் 'எனக்கு மசால் தோசை இரண்டு செட் வாங்கி கொடுங்க தோழி, நான் நல்ல ஐடியாவா தரேன்'னு. ஆனா என்னை நம்பவே இல்ல அவ!" என்றாள் சோகமாக.

"அவளுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான் மிருது!" என்றான் அர்விந்த்.

ஆமென தலையசைத்தாள் மிருதுளா. அதே வேளையில் அவளின் போன் ஒலித்தது.

எடுத்துப் பேசினாள். முகம் மாறினாள். போன் அழைப்பை துண்டித்துவிட்டு இவர்கள் புறம் திரும்பிப் பார்த்தாள்.

"நம்ம வீட்டு பெரியவங்க கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்காங்க!" என்றாள்.

"எனக்கா?" மிருத்யூ குழப்பமாக கேட்டான்.

மிருதுளா கவலையோடு இல்லையென தலையசைத்தாள். தன்னை கை காட்டினாள்.

"எனக்கும் பிரேமுக்கும் மேரேஜ் பண்றதா பேசி இருக்காங்களாம்!" என்றவளின் கை பற்றினான் மிருத்யூ.

"வாழ்த்துக்கள்!" என்றான்.

"பெஸ்ட் விஷ்ஸஸ் மிருது!" என்று அவளை அணைத்துக் கொண்டான் பிரேம் அவனுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல.

"பல்லாண்டு வாழ்க!" என்று அவளின் தலையை வருடி விட்டான் அர்விந்த்.

"அடிங்.. ஆளாளும் விளையாடுறிங்களா? நானும் அர்விந்தும் லவ் பண்றோம். இப்ப இப்படி கல்யாண ஏற்பாடு பண்ணினா நான் என்ன செய்வேன்?" என்றவளை ஆச்சரியமாக பார்த்தனர் அனைவரும்.

"மிருது.. நீ லவ் பண்றியா? ஆமா.. அது யார் அர்விந்த்? காலேஜ்மேட்ஸ்ல கூட யாரும் இந்த பேர்ல இல்லையே!" குழப்பமாக கேட்ட அர்விந்தனை கோபமாக பார்த்தவள் "நீதான்டா அது!" என்றாள்.

பிரேமும் மிருத்யூவும் அர்விந்தை ஆச்சரியமாக பார்த்தனர்.

"கூடவே இருக்கேன். என்கிட்ட கூட நீ சொல்லல அர்விந்த்!" என்றான் மிருத்யூ.

அர்விந்த் இடம் வலமாக தலையசைத்தான்.

"நான் இவளை லவ் பண்ணதே கிடையாது!" என்றான் அதிர்ந்த குரலில்.

இப்போது மிருதுளா அதிர்ந்தாள்.

மிருதுளாவின் முன்னால் வந்து நின்றான் அர்விந்த்.

"நீ என்னை லவ் பண்றியா மிருது? ஆனா ஏன் இத்தனை நாளா சொல்லல?" எனக் கேட்டான் ஆச்சரியத்தோடு.

திகிலோடு அவனைப் பார்த்தவள் "அன்னைக்கு கிஸ் கூட பண்ணோமே அர்விந்த்.. இப்ப இப்படி கேட்கற!" என்றாள் குழப்பமாக.

கனவுக்குள் மாட்டிக் கொண்டோமோ என்று கவலையாக இருந்தது அவளுக்கு.

அவன் யோசிப்பது விளக்கொளியில் தெரிந்தது.

"எப்ப கிஸ் பண்ணோம் மிருது?" எனக் கேட்டான் சில நொடிகள் கடந்த பிறகு.

"அவ கற்பனையில் தந்திருப்பா.. சரியா லூசு அவ!" என்றான் மிருத்யூ.

மிருதுளா தலையை இரு கைகளாலும் கீறினாள். குழப்பம் அதிகமானால் அப்படிதான் கீறுவாள்.

"அசல் குரங்கு போலவே சொறிஞ்சிட்டு இருக்க மிருது!" என்றான் அர்விந்த்.

கலைந்த தலையோடு நிமிர்ந்துப் பார்த்தாள். அர்விந்தின் கண்களில் விளையாட்டு இல்லை. அவனின் முகத்தில் கூட இவளின் பதிலுக்கான எதிர்ப்பார்ப்புதான் கூடி இருந்தது.

"ரோஜா கல்யாணத்து அன்னைக்கு கிஸ் பண்ணிக்கிட்டோமே அர்விந்த். கல்யாண மண்டபத்துல இருந்த மொட்டை மாடி ரூம்ல எல்லோரும் தூங்கிட்டு இருந்தபோது..!" மலங்க மலங்க விழித்தபடி சொன்னாள்.

யோசித்தான் அர்விந்த். அவளுக்கு திகிலாக இருந்தது. நினைவு இல்லை என்று சொல்லி விடுவானோ என்று கவலைக் கொண்டாள்.

முகம் மலர அவளை பார்த்தான். மிருதுளாவுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

"அது நீதானா மிருது? ஆனா நான் இவ்வளவு நாள் அது மிருத்யூன்னு நினைச்சேன்!" என்று அவன் சொல்ல அதிர்ந்து போனவள் நெஞ்சில் கை வைத்தபடி ஓரடி பின்னால் நகர்ந்தாள்.

"அவன்னு நினைச்சியா.?" என்றாள் சந்தேகமாக‌.

அவன் ஆமென்று தலையசைத்தான்.

"எக்ஸோட மேரேஜ்.. பையன் அந்த பீலிங்க்ல எனக்கு கிஸ் தரான் போலன்னு நினைச்சேன்.!"

மிருதுளா தலையை இரண்டு முறை கீறிக் கொண்டு நிமிர்ந்தாள்.

"ஆனா இவன் அவளை லவ் பண்ணானா? எனக்கு தெரியாதே.!"

"இவன் லவ் பண்ணது அந்த பொண்ணுக்கே தெரியாது.!" என்று தோளை குலுக்கினான் அர்விந்த்.

"நீங்க இரண்டு பேரும் லவ் பண்றிங்களா?" என்று சகோதரனையும், அர்விந்தையும் சேர்த்து கேட்டாள் சில நொடிகளுக்கு பிறகு. இருவரும் மறுப்பாக தலையசைத்தனர்.

"அப்புறம் ஏன் அவன் கிஸ் பண்ணதா நினைச்ச?" என்றாள் குழப்பமாக.

"அதான் சொன்னேனே.. எக்ஸ் லவ்வர் கல்யாணம்ன்னு.. காலேஜ் செகண்ட் இயர்ல அந்த பாத்திமா பொண்ணு இவனை ரிஜெக்ட் பண்ண அன்னைக்கு இரண்டு மணி நேரம் கட்டிப்பிடிச்சி அழுதான். அது போல இதுவும்ன்னு நினைச்சேன்.!" அரை கால் சட்டையின் பாக்கெட்டில் கை விட்டு நின்றபடி சொன்னான் அர்விந்த்.

மிருதுளாவுக்கு ரொம்ப சுத்தமாக குழம்பியது.

"அது எப்படிடா சாத்தியம்? பொண்ணுக்கும் பையனுக்கும் கூடவா உனக்கு வித்தியாசம் தெரியாது. என்னை திருப்பி கிஸ் பண்ணியேடா!" என்றவளை கண்டு உதடு பிதுக்கியவன் "போதையில் சரியா கவனிக்காம போயிட்டேன் மிருது.!" என்றான்.

மிருதுளா மேலும் விழித்தாள்.

"போதை?" என்றவளை பரிதாபமாக பார்த்தவன் "ரோஜா கல்யாணத்தின்போது லேட் நைட்ல எல்லோரும் டிரிங்க்ஸ் சாப்பிட்டோம் இல்லையா.. அதுல நீ குடிச்சது மட்டும்தான் கோக்.‌ நாங்க குடிச்சது குவாட்டர் மிக்ஸ்!" என்றான்.

மிருதுளா அதிர்ச்சியோடு மிருத்யூவை பார்த்தாள்‌.

"என்னை ஏன் அப்படி பார்க்கற.. நீ கரெக்டா இருந்தா நாங்க சொல்லி இருப்போம்.! பிரேமோட டிவென்டீத் பிறந்தநாள் அன்னைக்கு சரக்கடிச்சி பார்க்கலாம்ன்னு ஒத்தை புல்லை வாங்கிட்டு வந்தா நீ ஒருத்தியே குடிச்சிட்ட.. அது கூட பரவால்ல. ஆனா கொஞ்சமும் போதை ஏறாம 'இதுக்கு சரக்குன்னு பேர் எதுக்கு? இதுக்கு ஏன்டா வெட்டி செலவு பண்றிங்க?'ன்னு சரக்கையும் எங்களையும் சேர்த்து அவமானப்படுத்திட்ட.. அதுல இருந்து நாங்க உங்கிட்ட சொல்லாம இப்படிதான் சரக்கடிச்சிட்டு இருக்கோம்!" என்றான்.

"ஆமா.. போன ஜென்மத்துல நீ சரியான மொடா குடிக்காரியா இருந்திருப்ப போல.! அன்னைக்கு நாங்க எவ்வளவு பீல் பண்ணோம் தெரியுமா? குடிக்கும்போது உன்னை கூட்டு சேர்த்த கூடாதுன்னு நாங்க அன்னைக்கு சத்தியம் கூட பண்ணோம்.!" என்றான் பிரேம்.

"அதான் ஏதோ வாசனை வரது போல இருந்ததா?" முத்தத்தின் நினைவில் முனகினாள்.

"உனக்கு அந்த வாசமெல்லாம் சாதாரணம். அதனால உனக்கு தெரியல போல.! ஆனா நீ இப்ப சொன்ன பிறகுதான் அந்த கிஸ் தந்ததே நீதான்னு எனக்கு தெரிஞ்சது.!" என்றான் அர்விந்த்.

மிருதுளா அனைத்தையும் புரிந்துக் கொண்டது போல தலையை அசைத்தாள். நிமிர்ந்தாள்.

"ஓகே.. அர்விந்த் நான் உன்னை லவ் பண்றேன். என்னால பிரேம்மை கல்யாணம் செஞ்சிக்க முடியாது.!" என்றவள் மிருத்யூவின் புறம் திரும்பினாள். "நான் சொன்னா அம்மாவும் அப்பாவும் கேட்க மாட்டாங்க. அதனால நீ போய் மிருதுவுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லி அவங்களை சம்மதிக்க வை.!" என்றாள்.

கடைசியாக பிரேம்மின் புறம் திரும்பினாள். "நான் அவனை லவ் பண்றேன். அதனால் நீ இந்த கல்யாணம் வேணாம்ன்னு உன் வீட்டுல சொல்லிடு.!" என்றாள்.

நண்பர்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"சாரி மிருது.. அப்பா அம்மா பேச்சை என்னால மறுக்க முடியாது.!" என்றான் பிரேம்.

"ஆனா நான் அவனை லவ் பண்றேன்.!"

"அது உன் பிரச்சனை!" என்று விட்டேறியாக சொன்னான் அவன்‌.

அர்விந்தனிடம் திரும்பினாள் மிருதுளா.

"நீயாவது இவனோடு பேசு அர்விந்த்.!" என்றாள்.

"அட இரும்மா கொஞ்சம்.. நீயே இப்பதான் லவ்வை சொல்லி இருக்க. உன் லவ்வை ஏத்துக்கறதா வேணாமான்னே நான் இன்னும் யோசிக்கல. அதுக்குள்ள என் நண்பனோடு என்னை சண்டை போட சொல்ற.!" என்றான் அர்விந்த்.

அவன் சொன்னதும் நியாயம் போலதான் இருந்தது. ஆனால் அவளல்லவளா இடையில் மாட்டிக் கொண்டு உள்ளாள்!

சகோதரனை பார்த்தாள்.

"என்கிட்ட எந்த உதவியும் கேட்காத மிருது. இரண்டு பேரும் என் பிரெண்ட்ஸ். இரண்டு பேரும் எனக்கு வேணும். நடுவுல மாட்டி என் பிரெண்ட்ஷிப்பை கெடுத்துக்க விரும்பல நான்.!" என்றான் மிருத்யூ.

மிருதுளாவுக்கு தெளிவாக புரிந்துப் போனது, மூவருமே தன் விசயத்தில் எதிரி என்று. அம்மா அப்பா இன்னமும் அவளை குழந்தையாகதான் பார்த்தார்கள். ஒரு ஸ்டிக்கர் கூட அவளாக தேர்ந்தெடுத்தால் நன்றாக இல்லை என்றுதான் சொல்வார்கள். காதலிக்கிறேன் என்று சொன்னால் மட்டும் உடனே சேர்த்து வைத்து விடுவார்களா? அதை விட முக்கியமாக அர்விந்த் வேறு இனிதான் யோசிக்க வேண்டும் என்றுச் சொல்லி விட்டான்.

"ஐ ‌ஹேட் யூ.. உங்க மூணு பேரையுமே எனக்கு பிடிக்கல.!" என்றவள் அங்கிருந்து தனியாக நடந்தாள்.

ஓடிச் சென்று அவளைப் பிடித்து நிறுத்தினான் பிரேம். மற்ற இருவரும் அருகே வந்தார்கள்.

மிருதுளாவின் விழிகள் கலங்கி இருப்பது விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது.

"அழக்கூடாது செல்ல குட்டி.!" என்ற பிரேம் அவளின் விழிகளை துடைத்து விட்டான்.

"உனக்கு வீட்டுல பேசணும். உனக்கும் எனக்கும் நடக்கற கல்யாணத்தை நிறுத்தணும். அவ்வளவுதானே?" எனக் கேட்டான்.

மிருதுளா மூக்கை உறிஞ்சினாள். ஆமென தலையசைத்தாள்.

"சரி நான் பேசறேன்.!" என்று அவன் சொல்லவும் சந்தோசப்படத்தான் நினைத்தாள். ஆனால் உடனே சந்தேகத்தோடு அவனை பார்த்தாள்.

"ஆனா நீ அதுக்கு பதிலா ஒரு பேவர் பண்ணணும்.!" என்றான்.

"என்னடா தடியா?" என்றபடி அவனை வெறித்தாள்.

"என் லவ்வருக்கு அடுத்த வாரம் மேரேஜ். அவ மேரேஜை நிப்பாட்டி அவளையும் என்னையும் சேர்த்து வச்சா நான் உன் லைஃப்ல குறுக்க வர மாட்டேன்.!" என்றான்.

"கன்கிராட்ஸ்டா பிரேம்!" நண்பர்கள் இருவரும் அவனை கட்டிக் கொண்டார்கள்.

"இத்தனை நாள்ல ஒரு முறை கூட சொல்லாம போயிட்டியே.!" கோபப்பட்டான் அர்விந்த்.

"சர்ப்ரைஸா சொல்லலாம்ன்னு இருந்தேன். ஆனா என் மாமனார் எனக்கே சர்ப்ரைஸ் தந்துட்டாரு.!" என்றவனை வெறித்தாள் மிருதுளா.

"ஆனா நான் உன் பிரெண்ட்.. என்கிட்டயே பேரம் பேசுறியே.!" என்றாள்.

"நானே குழப்பத்தில் இருக்கேன் மிருது. உங்ககிட்ட ஹெல்ப் கேட்டா வருவிங்களான்னு யோசிச்சிட்டு இருந்தேன். இதை பேரம்ன்னு நினைக்காத. பரஸ்பர உதவின்னு நினைச்சிக்க.. என் லவ் சேராம போனா உன் லவ்வும் சேராது.!" என்றான் தோளை குலுக்கி.

"பைத்தியம்.!" என்றவள் அர்விந்தை பார்த்தாள்.

"தயவு செஞ்சி இப்பவாவது கருணை காட்டு அர்விந்த்.!" என்றாள்.

அர்விந்த் யோசித்தான்.

"நான் பிரேமுக்காக பொண்ணு தூக்க வரேன். இந்த கேப்ல உன் மேல ஏதாவது வந்துச்சின்னா உன் லவ்வை நான் ஏத்துக்கறேன். இல்லன்னா என்னை விட்டுடு.!" என்றான் கையை கட்டியபடி.

மிருதுளா உதட்டை கடித்தாள். தன்னையே சமாதானம் செய்துக் கொண்டு நிமிர்ந்தாள். சகோதரன் புறம் பார்த்தாள்.

"நான் என் நண்பனுக்காக வரேன்.!" என்றுக் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

"ஒரு நாளைக்கு உங்க எல்லோருக்கும் பேதி மாத்திரை கலந்து பிரியாணி செஞ்சி தர போறேன்.!" என்றாள் மூக்கு சிவக்க‌.

"நீ சாதாரணமா செஞ்சாலே நாங்க பேதியாவோம். இதுல தனியா பேதி மாத்திரை வேறையா?" எனக் கேட்ட பிரேம் முன்னால் நடந்தான். நண்பர்கள் அவனோடு இணைந்து நடந்தார்கள்‌.

மிருதுளா ஓடி சென்று இடையில் புகுந்துக் கொண்டாள். பிரேமின் இடுப்போடு அணைத்துக் கொண்டாள்.

"பொண்ணு அழகா இருப்பாளா?" எனக் கேட்டாள்.

"ம். பொண்ணு மாதிரி இருந்தாலே அழகுதானே?" என்றவனை குழப்பமாக பார்த்தவள் "அந்த பொண்ணு நீ கூப்பிட்டா வர மாட்டாளா? நாம வீர சாகசம் செஞ்சே ஆகணுமா?" எனக் கேட்டாள்.

"ம். ஆமா.. அவளோட அப்பா எக்ஸ் மினிஸ்டர்.. அண்ணன் கட்டப்பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கான். அவளுக்கு பார்த்து வச்சிருக்கும் மாப்பிள்ளை மாஃபியா கேங்கோட ஹெட்.!" என்றான்.

அவனின் இடுப்பிலிருந்த மிருதுளாவின் கை தானாய் கீழே நழுவியது. கையை பிடித்து அதே இடத்தில் வைத்தவன் தன் சட்டையை கொஞ்சம் தூக்கினான்.

"இடுப்புக்கு மேல கொஞ்சம் கீறி விடு மிருது.. அரிக்குது.!" என்றான்.

மிருதுளா கண்கள் சிவக்க அவனை முறைத்தாள்.

"எங்களை கொல்ல டிரை பண்றியா பிரேம்?"

"எதுவா இருந்தாலும் கீறி விட்டுக்கிட்டே பேசு.!" என்றவன் அவளின் நக கீறலில் "ஆஹா.. அருமை.. உன் கீறலை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் மிருது!" என்றான்.

மிருதுளா பற்களை கடித்தபடி நகங்களை ஆழமாக புதைத்தாள்.

"அம்மா.!" கத்தியபடியே நகர்ந்தவன் இடுப்பை தேய்த்து விட்டுக் கொண்டான்.

"ரவுடிங்க கையால நாங்க சாகணும்ன்னு உனக்கு என்னடா அவ்வளவு ஆசை?" எனக் கேட்டாள் கோபமாக.

"லவ்வும்மா.. மூணு வருச லவ்வு.. அவ இல்லன்னா நான் செத்துடுவேன் மிருது.!" என்றான் கலங்கும் குரலில்.

"ச்சீ நடிக்காத.. படு கேவலமா இருக்க. அப்புறம் நானே உன்னை பிடிச்சி லாரி முன்னால தள்ளி விட்டுடுவேன்!" என்றாள் எரிச்சலாக.

அர்விந்த் ஐஸ் தீர்ந்த குச்சியை பல்லில் மென்றுக் கொண்டிருந்தான். மிருத்யூ தன்னிடம் இருந்த ஐஸ் குச்சியை தூள் தூளாக மென்று துப்பி விட்டு நண்பன் புறம் திரும்பினான்.

"நாம போலிஸ்க்கு போகலாமா பிரேம்?" எனக் கேட்டான்.

"வேணாம்.‌. அவளோட சித்தி போலிஸ் இன்ஸ்பெக்டர்தான்.!" என்றவனை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள் மிருதுளா.

"அப்படி ஒரு குடும்பத்து பொண்ணை எதுக்குடா லவ் பண்ணி வச்சிருக்க?" கடுப்போடு கேட்டாள்.

"காதலுக்கு கண்ணில்லை மிருது.!" வானம் பார்த்து சொன்னவனின் பொடனியில் ஒரு அடியை விட்டான் அர்விந்த்.

"காதலுக்கு வேணா கண்ணில்லாம இருக்கலாம். ஆனா சாக போற எங்களுக்கு இருக்கே.! புலி குகையில் போய் மான் குட்டியை தூக்கி வர மாதிரி இருக்கு இது.. நமக்கு செட் ஆகாது.. அந்த பொண்ணு உனக்கு வேணாம். இந்த அரை வேக்காட்டையே கல்யாணம் பண்ணிக்க.. எல்லாம் சுலபமா முடியட்டும்.!" என்றான்.

மிருதுளா பிரேம்மை தாண்டி சென்று அர்விந்தனின் காலில் உதைத்தாள்.

"உன்னையெல்லாம் லவ் பண்ணதுக்கு.." சலித்துக் கொண்டாள்.

"சொல்லாத காதல்.. அதுல ஒரு தூக்க கலக்க போதை முத்தம்.. பாவம் அவன் மட்டும் என்ற பண்ணுவான்?" நண்பனுக்கு பரிந்து பேசினான் மிருத்யூ‌.

"சனியன்களா.. உங்களையெல்லாம் என்ன திட்டினாலும் எனக்கு ஆத்திரம் அடங்காது.. வீட்டுக்கு வரதுக்கு பதிலா இப்படியே எங்கேயாவது ஓடிடுங்க.!" என்றவள் அவர்களை விட்டுவிட்டு வேகமாக நடந்தாள்.

பாத அடி எடுத்து வைத்து நடந்தான் பிரேம். வாடி போன முகம் தரைப் பார்த்தபடி இருந்தது. அவனின் தோளில் கை போட்டான் மிருத்யூ.

"டோன்ட் வொரிப்பா.. நாம ஏதாவது செய்யலாம்.!" என்றான்.

"நாங்க வேற எதுக்கு பிரெண்ட்ஸ்ன்னு இருக்கோம்?" எனக் கேட்டான் மறுபக்கம் வந்து அணைத்த அர்விந்த்.

புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான் பிரேம். ஆனாலும் கூட அவளின் கைப்பிடிக்கும் வரை இந்த மனதின் பாரம் குறையாது என்றுத் தோன்றியது.

மூவரும் இருளின் பாதையில் நடந்தார்கள்.

"மிருது வேற கோச்சிக்கிட்டா.!" சோகமாக சொன்ன பிரேம் அர்விந்தை சந்தேகமாக பார்த்தான்.

"அவளை நீ லவ் பண்ணலையா?" எனக் கேட்டான்.

"ப்ராமிஸா கிடையாது. அவ என்னை லவ் பண்றாங்கறதே கொஞ்சம் முன்னாடிதான் எனக்கு தெரிஞ்சது.!" என்றான் காற்றில் கையை சத்தியம் போல அடித்துக் காட்டி.

"அவளைக் கட்டிக்கிறவன் பாவம்ன்னு நானே கூட பல முறை நினைச்சி இருக்கேன். ஆனாலும் நீ நிஜமாவே பாவம்டா.!" அர்விந்தனை பார்த்து பரிதாபத்தோடு சொன்னான் மிருத்யூ.

"நீ வேற ஏன்டா? கொஞ்சம் அமைதியா இருடா.. அவ லவ் பண்றேன்னு சொன்னதுல இருந்தே உள்ளே எந்த சிஸ்டமும் வேலை செய்யல.. மூச்சு காத்தே இல்லாம ப்ளட் மூவ் ஆகற மாதிரி இருக்கு. குடல்ல இருந்து மூளை வரைக்கும் எல்லாமே மந்தமா இருக்கற மாதிரி இருக்கு.!" என்றான் கவலையாக.

மூவரும் சற்று முன்னேறி வந்தனர். அங்கே இருந்த பாலம் ஒன்றின் கைப்பிடி மீது அமர்ந்திருந்தாள் மிருதுளா‌.

"பாவம்டா அவளும்.!" என்ற பிரேம் அவர்களை விட்டுவிட்டு மிருதுளாவிடம் சென்றான்.

"மிருது.!" என்றான்.

"யாரும் என்கிட்ட பேசாதிங்க.. நான் இனி வீட்டுக்கு வர மாட்டேன்.!" என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.

"அச்சோ.. நைட் ஆச்சி.. நீ இங்கேயே இருந்தா சைக்கோ கொலைக்காரங்களுக்கு கஷ்டமா போயிடும். நீ வா போகலாம். நாம மெதுவா பேசிக்கலாம்.!" என்றான்.

அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

அவளின் கைப்பற்றி கீழே இறக்கி நிறுத்தினான். மிருதுளா அசையாமல் நின்றாள். அவளை வர சொல்லி இழுத்தான். ஆனால் அவள் நகர மறுத்தாள்.

பொறுத்து பார்த்து விட்டு அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் பிரேம்.

"என்னை விடுடா குரங்கு.!" துள்ளினாள்.

"அமைதியா இரு மிருது. நானே மனசொடிஞ்சி போய் இருக்கேன். அவ மட்டும் இல்லன்னா நான் நிஜமாவே உடைஞ்சி போயிடுவேன்.!" என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN