தேவதை 40

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆதியை பெருமையோடு பார்த்துக் கொண்டு நின்றான் கவி. அவள் அவனின் கண் முன்தான் வளர்ந்தாள். அவள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு பயிற்சியையும் அவன் அருகில் இருந்துப் பார்த்தான்.

அவள் மென்மையானவள். அவளின் புன்னகையில் புது உலகம் கூட உருவாகும். அவளை பற்றி தன் மனதுக்குள் கவிதை படித்தான் கவி.

அவளின் அழகையும் அவளின் கையில் இருந்த வாளையும் வியப்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகே வந்தாள் ஆதி.

"தேர்ந்தேனா ஏந்தலே?" எனக் கேட்டாள்.

"சில நாட்களுக்கு பிறகு சொல்கிறேன் ராணியே!" என்றவன் தன் இதயம் குளிர்வதை கண்டு மேனி சிலிர்த்தான்.

பயிற்சி அரங்கத்தை சுற்றி இருந்த தேவதைகளும் தேவர்களும் ஆதியின் வெற்றியை கை தட்டி மகிழ்ந்தனர்.

ஆதி தன் வாளைப் பார்த்தாள். அதற்கு கூர்மையான ஓரங்கள் இல்லை. தவறியும் யாரையும் காயப்படுத்தி விட கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள். இந்த வாளும் போர் பயிற்சியும் தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவே என்பதில் மிகவும் தெளிவாக இருந்தாள்.

பரிசுத்த அன்பின் தேவதையாகதான் இன்னமும் இருந்தாள். ஆம். கவி அவளை ஏமாற்றிக் கொண்டிருந்தான். பூமியை சேர்ந்த அவளின் குழந்தைகள் இந்த மொத்த பிரபஞ்சத்தையும் வளைத்து விட்டார்கள் என்ற உண்மையை அவளிடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருந்தான். தான் இந்த சத்திய தேவ உலகத்தை தாண்டிவிட்டாலே ஒரு அரக்கன் என்பதை மறைத்துக் கொண்டிருந்தான். அவளின் கண்களை விட்டு மறைந்த பிறகு அவன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மரணங்களை உருவாக்குபவை என்பதையும் மறைத்து விட்டான்.

ஆதி நம்பினாள். அந்த உலகத்தில் இருந்த அனைவரையும் நம்பினாள். இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் நனி உயிர்த்தோழியாகி இருந்தாள்.

தன் ஏந்தலாக இருந்தவனை சமீப காலமாக காதலனாகவும் பார்க்க ஆரம்பித்து விட்டாள் ஆதி. சின்ன சின்ன கொஞ்சம் மொழிகள், கண் அசைவுகள், அன்பின் பரிமாற்றங்கள், மனம் மயக்கும் உடல் கூடல்கள் அவர்களுக்குள் நடந்துக் கொண்டிருந்தது‌.

கவி அவளை விரும்பினான். தன் உலகை காக்க அவள் தேவைப்பட்டாள். தன் இதயத்தின் இன்ப நினைவுகளுக்கு அவள் தேவைப்பட்டாள். அவளின் அன்பு அவனை காதலிக்க செய்தது. அவள் தன்னை மயக்குகிறாள் என்ற குற்றச்சாட்டை சொல்லாமல் காதலித்துக் கொண்டிருந்தான்.

தனது பனி மாளிகைக்குள் நுழைந்தாள் ஆதி. மாளிகையெங்கும் பனிப் பூக்களின் வாசம் கமழ்ந்துக் கொண்டிருந்தது.

தனது அறையை நோக்கி நடந்தவளின் இடையை பற்றியது ஒரு கரம். தீண்டலில் வாசத்திலும் அறிந்து விட்டாள் யாரென்று. அவளின் கழுத்தோடு நூல் அளவு இடைவெளியில் உரசியது அவனின் வாள். இந்த மணம் நடந்த பிறகு அவளின் அருகில் அவனின் வாளில் இருந்து எந்த கதிரும் வெளி வருவதில்லை. அவளை தாக்குவதும் இல்லை‌. அவனின் மறுபாதி ஆகி விட்டாள் அவள். அவனின் வாளுக்கு தலைவி அவள்.

"என்னோடு யுத்தம் செய்ய வாருங்கள் மகாராணி.!" என்று அழைத்தான்.

அவனின் நெஞ்சோடு சாய்ந்தவள் "காரணமின்றி யுத்தம் செய்ய மாட்டேன் ஏந்தலே.!" என்றாள் மெல்லிய குரலில்.

சிரித்தவன் "உன்னை காதல் அடிமை செய்ய வந்திருக்கிறேன். அதற்காகவேணும் போர் புரி.!" என்றான் அவளின் காதோரத்தில் இதழ் பதித்து.

ஆதி புன்னகைத்தாள். அவனின் புறம் திரும்பினாள். அவனின் கன்னத்தோடு உரசியது அவளின் தலை.

"நான் சரணைகிறேன் ஏந்தலே.!" என்றாள்.

ஆச்சரியப்பட்டவன் "அதற்குள்ளாகவா?" எனக் கேட்டான்.

"ஆம் ஏந்தலே.! விதித்தவர்களிடம் போரிடுவதற்கு பதிலாக சரணைடைவதே சிறந்தது.!" என்றாள்.

கவி அவளின் பேச்சை ரசித்தான். அவளின் விழிகளை ரசித்தான். அவளை அள்ளியெடுத்தான். அவனின் கத்தி எப்போதோ அவனின் காலடியில் விழுந்து விட்டது.

"சரணடைவோருக்கும் கூட தண்டனைகள் உண்டு என் ராணியே.!" என்றான். ஆதி சிரித்தபடியே ஆமென தலையசைத்தாள்.

இந்த பல ஆயிரம் வருடங்களில் அவன் மீதான தனது அன்பு காதலாக மாறிப் போனதை அவளும் உணர்ந்தாள். அவனும் உணர்ந்தான் அதை.

அன்பை விடவும் காதல் ஆபத்தானது என்று அவளின் சகோதர சகோதரிகள் அவளின் நினைவுகளின் மூலம் வந்து சொல்லினார்கள். இவள் புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாளே தவிர அவர்கள் புரிய வைக்க நினைத்ததை புரிந்துக் கொள்ளவில்லை.

பனி படுக்கையில் அவனின் நெஞ்சில் படுத்துக் கொண்டிருந்தவள் வரவிருக்கும் ஆபத்தை பற்றி அறியவேயில்லை.

"அன்பின் தேவதையே.!" என்று அழைத்தான் கவி. ஆனால் அவள் உறங்கி விட்டிருந்தாள்.

அவளை படுக்கையில் படுக்க வைத்தான். அவளின் முகம் பார்த்தான். அன்பை தவிர வேறு எதுவுமே காண முடியவில்லை. அவளும் தானும் எதிரும் புதிரும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் இந்த காதலை அவனால் தடுக்க முடியவில்லை.

அவளை பாதுக்காக நினைக்கையில் அவளை தன் சொத்துகளில் ஒன்றாக எண்ணினான். அவளை நேசிக்கையில் தன் மறுபாதியாகவும் எண்ணினான். சத்திய தேவ உலகத்திற்கு புது கட்டளைகளையிட்டு, தேவ தேவதைகளின் தேவைகளை பற்றி பேசி முடிவெடுக்கையில் அவளை தன் உலகின் மகாராணியாகதான் பார்த்தான். ஆனால் இந்த சத்திய தேவ உலகை தாண்டி விட்டால் அவளை எதிரியை போல மறைத்து வைக்க நினைத்தான். தனது பேராசைகளின் அவள் குறுக்கே வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

இரவெல்லாம் அவள் அருகில் உறங்க ஆசையாகதான் இருந்தது. ஆனால் பிரபஞ்சத்தின் மறுமுனையில் இருக்கும் விசித்திர தேவ உலகை வெற்றிக் கொள்வது பற்றி தனது படை வீரர்களோடு விவாதிக்க வேண்டி இருந்தது அவனுக்கு.

பனி பூக்களை கை நிறைய அள்ளினான். அவளின் மீது இறைத்தான். ஆதியின் இதழில் புன்னகை உண்டானது. அவளின் மூடியிருந்த விழிகளின் மீது முத்தமிட்டவன் அங்கிருந்துப் புறப்பட்டான்.

அரண்மனைக்கு வந்தான். ஆதிக்காக இந்த அரண்மனையை கட்டினான். அவன் ஏந்தலாக இருக்கையில் எதுவும் தேவைப்படவில்லை. ஆனால் உலகிற்கு மகாராணி ஒருத்தி பொறுப்பேற்ற பிறகு அனைத்தும் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காகத்தான் இந்த அரண்மனை.

அவன் அரண்மனையின் கலந்தாய்வு கூடத்திற்குள் வந்தபோது அங்கே மற்ற அனைவரும் காத்திருந்தார்கள். அந்த கூட்டத்தில் நனியும் யனியும் கூட இருந்தார்கள்.

"விசித்திர உலகம் நமக்கு அடிமையாக வேண்டும்.!" என்றான் கவி.

தேவையே கிடையாது. அவன் வாழ அவனுக்கென்று ஒரு உலகம் உள்ளது. அவனுக்கென்று பிரபஞ்சத்தில் எல்லை உள்ளது. அவனுக்கான செல்வம் இருந்தது. அவனின் சொல்பேச்சு கேட்டு நடக்க அவனின் தேவதைகளும் தேவர்களும் இருந்தார்கள். பிரபஞ்சத்தில் மிஞ்சியிருக்கும் ஒரே ஒரு அன்பின் தேவதையான ஆதியே அவனுக்கு மகாரணியாய் இணையாய் இருந்தாள். அவனுக்கு எதுவும் தேவை கிடையாது.

ஆனாலும் அவன் மற்ற உலகங்களை ஆசைப்பட்டு வேட்டை ஆடினான். தன் உலகத்தை காத்துக் கொள்ள அவனுக்கு இயற்கையாக வழங்கப்பட்ட வீரத்தை அவன் தவறாக பயன்படுத்திக் கொண்டிருந்தான்.

ஏந்தல் எவ்வழியோ மற்ற தேவ தேவதைகளும் அதே வழி என்று அந்த மொத்த உலகமும் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் மகாராணியோ எதையும் அறியாத அளவிற்கு படு முட்டாளாக இருந்ததுதான் வியப்பு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN