பௌர்ணமி 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாகேந்திரன் தன் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டவன். இரு தம்பிகள் ஒரு அண்ணன் இரு அக்காள்கள் என்று பெரிய குடும்பத்தில் பிறந்தவன். தூரத்து சொந்தமாக இருந்தாலும் கூட மலர்கொடியை அவன் காதலிக்க ஆரம்பித்தது கல்லூரியில்தான். அவளோடு பழகவும் பேசவும் அவனுக்கு பிடித்திருந்தது‌.

அவளிடம் தன் காதலை சொன்னான். மலர்கொடி ஆரம்பத்தில் மறுத்தாள். பிறகு தயங்கினாள். ஆனால் அவனின் காதல் காலப்போக்கில் அவளையும் காதலெனும் வட்டத்திற்குள் இழுத்து விட்டு விட்டது.

இருவரும் காதலித்தார்கள். மலர்கொடியின் தந்தை இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று மகளிடம் எடுத்துச் சொன்னார். ஆனால் அவள் கேட்கவில்லை.

நாகேந்திரனுடைய குடும்பம் தங்களை விட வசதி குறைந்தவர்களை இளக்காரமாக பார்க்கும் குணத்தை உடையவர்களாக இருந்தார்கள். அது புரிந்துதான் அந்த வரனை மறுத்தார் மலரின் தந்தை. ஆனால் மலர் விடாப்பிடியாக இருந்தாள்.

மரிக்கொழுந்துவுக்கும் கூட தங்கையின் காதலனை பிடிக்கவில்லை. ஆனால் நாகேந்திரன் தன் குடும்பத்தை சம்மதிக்க வைத்து விட்டான். அவர்கள் நாகேந்திரனுக்காக வந்தார்கள். மலரின் குடும்பத்தின் மீது இளக்காரம் கொண்டிருந்தாலும் கூட நாகேந்திரனுக்காக மலரை ஏற்றுக் கொண்டார்கள்.

நாகேந்திரனுக்கும் மலர்கொடிக்கும் திருமணம் நடந்தது. வாழ்க்கையும் நன்றாகத்தான் சென்றது.

மலருக்கும் பூபாலானுக்கும் ஆரம்பத்திலிருந்தே நல்ல அன்னியோன்யம். அவன் பிறந்தபோது அவள்தான் தூக்கி வளர்த்தாள். அவனும் அத்தை அத்தை என்று அவள் பின்னால்தான் சுற்றிக் கொண்டிருப்பான்.

அதே போலதான் முல்லைக்கு பூமாறன். இருவரும் அவ்வளவு நெருக்கம்.

பூர்ணிமா பிறந்து வளரும் வரை அனைத்துமே நன்றாகதான் சென்றுக் கொண்டிருந்தது, ஒருநாள் மனைவியின் கேசத்தை அளந்தபடி "நான் ஒரு விசயம் சொல்லணும் கொடி.!" என்று நாகேந்திரன் சொல்லும்வரை.

பூர்ணிமா மரிக்கொழுந்தின் வீட்டில் இருந்தாள். அங்குதான் அவள் வளர்ந்தும் வந்தாள். அதனால் இந்த வீட்டில் இவர்கள் இருவரும்தான் இருந்தார்கள். தன் குடும்பத்தார் தன் மனைவியை தரம் குறைவாக எண்ணுவதை ஏதோ ஒரு வகையில் அறிந்திருந்தான் நாகேந்திரன். அதனாலேயே தனிக்குடித்தனத்தில் இருந்தான்.

இருவருமே காவிய காதலர்கள் அளவிற்குதான் காதலித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கு அடிப்பட்டால் மற்றொருவருக்கு வலிக்கும்.

"என்ன இந்தர்?" என்றபடி அவனின் மடியிலிருந்து தலையை எடுத்தாள் மலர். எழுந்து அமர்ந்தாள். கணவனின் தயங்கிய முகம் கண்டு குழம்பினாள்.

"என்னாச்சி? ஏதாவது பிரச்சனையா?" எனக் கேட்டாள்.

இல்லையென தலையசைத்தவன் "நான் ஒரு விசயம் சொல்வேன் மலர். நீ என்னை புரிஞ்சிப்பன்னு நம்புறேன்.!" என்றான். அவனை ஆச்சரியத்தோடு பார்த்தவள் அவன் சொல்வதை எதிர்ப்பார்த்து காத்திருந்தாள்.

"நானும் முல்லையும் லவ் பண்றோம் மலர்.!" என்றான் சுவற்றை வெறித்தபடி.

மலர் நொடியில் உடைந்து விட்டாள். கலங்கும் கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். இந்த நொடியிலேயே இறந்து விட வேண்டும் என்று கூட நினைத்தாள்.

"வீட்டு மனுசங்களை கூப்பிட்டு பேசலாம் இந்தர்.. டைவர்ஸ் பண்ணிக்கலாம். நீயும் முல்லையும் வாழ நான் தடையா இருக்க மாட்டேன்.!" என்றாள்.

இப்படி ஒரு முடிவை நொடியில் எடுத்த தன் மனதை கண்டு வியந்தாள். கண்மூடித்தனமான காதல் என்றால் இப்படியும் கூட விட்டுத் தர நினைக்குமா என்று தனக்குள்ளேயே கேட்டுப் பார்த்தாள்.

நாகேந்திரன் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான்.

"நீ இல்லாட்டி நான் வாழவே முடியாது மலர்.. நீ என் ஜீவன்.!" என்றபடி அவளின் கையை பற்றினான்.

மலர் இதயத்தின் வலியை கட்டுப்படுத்த முயன்றாள். அவன் சொல்ல வருவது அவளுக்குப் புரியவில்லை.

"அவளும் நானும் காதலிக்கிறோம். ஆனா எனக்கு எப்பவும் நீதான் முக்கியம் மலர். ஐ லவ் யூ. நீ என் இதயம். அவளும் நானும் லவ் பண்ணியிருக்க கூடாதுதான். ஆனா விபத்து போல அந்த காதல். போன முறை உங்க வீட்டுக்கு போயிருந்தபோது அவளுக்கும் எனக்கும் நடுவுல தப்பு நடந்துடுச்சி. நான் மறைக்க நினைக்கல. உன்னை ஏமாத்த நினைக்கல. அவளை கை விடவும் நினைக்கல. ப்ளிஸ்.. அண்டர்ஸ்டேன்ட் மை சுச்சுவேஷன்.‌. நீ எனக்கு வேணும். அவளும்தான். இரண்டு பேர்ல யார் விலகினாலும் நான் செத்துடுவேன்.!" என்றான் தலையை பற்றியபடி.

கலங்கும் விழிகளோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினாள். காதலித்தாள். பைத்தியம் போல காதலித்தாள். காதலித்துக் கொண்டும் இருக்கிறாள். அவனை விலகினால் அவனுக்கும் முன்னால் தான் செத்து விடுவோம் என்று நம்பினாள்.

தூரத்தில் இருந்தால் கூட பொறாமை எனும் தீ நெஞ்சை எரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தவள் இவன் இப்படி சொல்லவும் முழுதாய் உடைந்து பயந்துப் போனாள். நெஞ்சத்தின் முழு காதல் அவன். அவனை எப்படி பங்கு போட்டுக் கொள்ள முடியும்? சாலையில் செல்லும் எவளையாவது அவன் பார்த்தாலே உள்ளுக்குள் எரிதணலாய் எரிபவள் அவனும் தங்கையும் குலாவிக் கொள்வதை கண்டு எப்படி இறக்காமல் இருப்பாள்? யோசிக்கவே முடியவில்லை.

அவனோ கலங்கும் விழிகளோடு அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

ப்ளே பாய்ஸை பிடிக்காது, ஆண் கடவுளர்கள் யாரையும் பிடிக்காது. அந்த கால மன்னர்கள் யாரையும் பிடிக்காது. அப்படிப்பட்ட அவளுக்கு இதை விட பெரிய தண்டனையை எமனால் கூட தர முடியாது என்று நினைத்தாள்.

கணவனே கடவுள் என்று நம்பி இருந்தததற்கு அவனே உயிரைக் கொன்றான்.

"அப்புறம் போய் வீட்டுல பேசுறேன் இந்தர்!" என்றவள் எழுந்தாள். அவளின் கை பற்றினான் நாகேந்திரன்.

"என் மேல கோபம் இல்லையே.!"

கோபம் இல்லைதான். சொரணை கெட்ட மனது. காதல் பித்து கொண்ட மனது. காதலின் மனநிலையை சரியாக கையாள தெரியாமல் அவனை மேலும் மேலும் விரும்பும் மனது. அவனை போல கோடி ஆண்கள் உலகில் இருந்தும் அவனின் காலடியில் மட்டுமே தன் உலகம் இருப்பதாக நம்பும் மனது. என்ன செய்வாள்?

"கோபம் இல்ல இந்தர்.. கொஞ்சம் மன கஷ்டம்.. உன்னை ரொம்ப லவ் பண்றேன் இந்தர். உன்கிட்ட எப்படி கோபப்படுவேன்? அழுகையா வருது. ஆனா கொஞ்ச நாள்ல சரியா போயிடும். நீ கவலைப்படாதே.. நான் பேமிலிக்கிட்ட பேசிக்கிறேன்!" என்றாள்.

அப்போதே அவனை ஓங்கி ஒரு அறை அறைந்து இரட்டை காதல் தவறு என்று சொல்லி இருந்தால் அவனும் தான் சொன்னது முழுக்க பொய் என்றுச் சொல்லி அவளிடம் மன்னிப்பு கேட்டு தன் பேராசையை அழித்துக் கொண்டு இருந்திருப்பானோ என்னவோ? அவன் மீது ஒரு மடங்கு தவறு இருந்த நேரத்தில் அவளின் சறுக்கலில் நூறு மடங்கு தவறு இருந்தது.

அழுதாள். இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுதாள். அவனிடம் முகம் காட்டாமல் அழுதாள். அந்த அழுகையை அவன் அப்போதே பார்த்திருந்தால் அவனின் எண்ணம் மாறியிருக்கலாமோ என்னவோ? தனது சாதாரண மனித காதல் என்று அவள் எண்ணியிருக்கலாம். காவிய காதல் என்றும்‍, அழிந்த ஆயிரம் காதலர்களின் மறுபிறப்பு தாங்கள் என்றும் எண்ணாமல் இருந்திருக்கலாம்.

தான் எந்த விதத்தில் அவனுக்கு குறை வைத்து விட்டோம் என்று யோசித்து தலை கனத்துப் போனது அவளுக்கு. அவளின் சமையலை ஊரே பாராட்டும். அவளின் அழகிற்கு மணமான பிறகும் கூட ரசிகர்கள் இருந்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவள் தன் பாசத்தையோ காதலையோ வஞ்சகம் இல்லாமல் காட்டி விடுபவள். அன்பு பாசத்தை மனதில் மறைத்து அடுத்த ஜென்மமா வாழ போகிறோம் என்று எண்ணுபவள். கோபத்தை கூட மறைத்து விடுவாள். பாராட்டுகளை உடனே தெரிவிப்பாள். படுக்கையில் கூட அவனுக்கு குறை வைத்ததே இல்லை. அவனே பல முறை பாராட்டி உள்ளான் அதற்காக. பிறகு எங்கே தவறினோம் என்று யோசித்து யோசித்து தனக்குள் வெம்பினாள்.

அழுத அழுகைக்கு உடல் குறையும் சக்தி இருந்திருந்தால் அவளின் அழுகைக்கு அவள் காற்றாய் கரைந்துப் போயிருப்பாள். இவளின் கண்ணீர் அவனின் நெஞ்சத்தை தட்டி எழுப்பும் அளவிற்கு காதலுக்கு சக்தி இருந்திருந்தால் இவளின் அழுகைக்கு அவன் நெஞ்சம் வெடித்து இறந்திருப்பான்.

இவளின் வலி தெரியவில்லை. இவளின் பயம் வருத்தம் நெஞ்சத்தின் விரிசல் என்று எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. முல்லையுடனான தனது இரண்டாம் மணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான்.

சொத்து இருந்தது. இளமை இருந்தது. மலரை அவன் நேசிப்பதிலேயே அவனின் குணம் பற்றி அனைவருக்கும் தெரியும். பிறகு ஏன் முல்லையை கட்டி தர மாட்டார்கள் என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

தனது நம்பிக்கை தன் பேராசை எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவன் யோசிக்கவேயில்லை. அந்த அளவுக்கு பேராசை அவனின் கண்ணை மறைத்து விட்டது.

மலர் தனக்குள் உடைந்து, தனக்குள் கரைந்தாள். இந்த பிரச்சனையை தன்னால் நகர்த்தி தள்ள இயலாது என்றுப் புரிந்துக் கொண்டாள். அவளாகவே தட்டு தடுமாறி மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக தெரியும், இனி தன் வாழ்வில் மகிழ்ச்சி என்ற ஒன்று இல்லையென்று.

விட்டுக் கொடுத்து விட்டு அழுவதை விடவும், கடைசி பருக்கை உணவையும் பிச்சையிட்டு விட்டு பசியில் இறப்பதையும் விடவும் தன்னை காப்பாற்றிக் கொள்வது புத்திசாலிதனம் என்று அவளுக்கு புரியவில்லை.

கணவனை அழைத்துக் கொண்டு பிறந்த வீடு சென்றாள் மலர்.

"அம்மா.!" என்றபடி பூர்ணிமா ஓடி வந்து அவளின் காலை கட்டிக் கொண்டாள்.

குழந்தைக்கு முத்தமிட்டவள் "நீ போய் முல்லை அம்மா கூட விளையாடு.!" என்று அனுப்பி வைத்தாள். அதை சொல்லிய பிறகு மீண்டும் உள்ளுக்குள் உடைந்து அழுதாள்.

பூர்ணிமா பால் மறக்கும் வரை மட்டும்தான் அவளை மலர் வளர்த்தி இருந்தாள்‌. முல்லைதான் அவளுக்கு தாயை போல இருந்தாள். அவள்தான் பூர்ணிமாவை கவனித்துக் கொண்டாள். சோம்பேறித்தனம் அல்ல. குழந்தையை பிறந்த வீட்டில் விட்டு விட்டால் பிறகு கணவனோடு இன்னும் சற்று நெருக்கமாக இருக்கலாமே எனும் ஆசை அவளுக்கு. ஆனால் என்ன சிந்தித்து என்ன பிரயோஜனம்?

மலரின் தாய் மகள் மருமகனுக்காக விருந்து தயாரிக்க ஆரம்பித்தாள்.

மலர் தன் தகப்பனிடம் வந்தாள்.

"சந்தைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வரட்டா மலர்?" எனக் கேட்டவரின் அருகே தயக்கமாக அமர்ந்தவள் "ஒரு விசயம்ப்பா.!" என்றாள்.

நாக்கு எழவே மறுத்தது. அப்போதும் கூட நாகேந்திரன் இதை தன்னிடம் சொல்ல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் என்றுதான் நினைத்தாள்.

"என்னம்மா? நகை ஏதும் வேணுமா? பாப்பாவுக்கு ஏதாவது?"

இல்லையென தலையசைத்தவள் "முல்லையை இந்தருக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொடுங்கப்பா.!" என்றாள் கண்களை மூடிக் கொண்டு.

அப்பா அதிர்ந்துப் போனார். பிறகு சிரித்தார். மலர் சந்தேகமாக தந்தையை பார்த்தார்.

"உனக்கு எப்பவும் விளையாட்டு.!" என்றார் அவர்‌.

மலர் மறுத்தாள். "இல்லப்பா.. நிஜமா கேட்கறேன்.. ப்ளீஸ்.." என்றவளை ஆத்திரத்தோடு திரும்பிப் பார்த்தார்.

"மலர்.!" என்றார் கர்ஜனையாக.

மரிக்கொழுந்துவும் சின்ன மகனை மடியில் வைத்தபடி அவர்களின் அருகே வந்து அமர்ந்தார். பூமாறனுக்கு அன்று காய்ச்சல். அதனால் பள்ளிக்கு செல்லவில்லை.

"அவங்க இரண்டு பேரும் காதலிக்கறாங்கப்பா.. நான் அ‌வளை எந்த கொடுமையும் செய்ய மாட்டேன். அவரும் நல்லா பார்த்துப்பாரு.. முல்லைக்கு‌‌ இவரை.." அவள் மேலே பேசும் முன் அவளின் கன்னத்தில் பளீரென ஒரு அறை விழுந்தது. அப்பா கோபத்தின் உச்சியில் இருந்தார். மறு கன்னத்திலும் அறைந்து விட்டார்.

மலர் அறையை வாங்கியபடி தந்தையை கெஞ்சலாக பார்த்தாள்.

"ச்சை.. என்ன பொண்ணு நீ? என் பொண்ணா இருந்துட்டு உன்னால எப்படி இப்படி பேச முடியுது?" என்றுக் கேட்டார் கோபத்தோடு.

"முல்லைக்கும் அவருக்கும் எல்லாமே நடந்துடுச்சி. அவளோட மானத்துக்காவாவது கட்டி வைங்கப்பா.!" சிவந்த கன்னங்களோடு கெஞ்சிக் கேட்டாள்.

அவள் சொன்னதை அப்பா நம்பவில்லை. அவருக்கு முல்லையின் மீது நம்பிக்கை அதிகம்.

"முல்லை.!" அவரின் கத்தலில் மாடியில் இருந்த முல்லை அவசரமாக கீழே இறங்கி ஓடி வந்தாள். அவளின் பின்னால் நாகேந்திரனும் குழந்தையை கையில் தூக்கியபடி வந்தான். இவ்வளவு நேரமும் முல்லையோடு அமர்ந்தபடிதான் பூர்ணிமாவை கொஞ்சிக் கொண்டிருந்தான் அவன்.

"என்னப்பா?" என்றபடி வந்து நின்ற மகளை தன் அருகில் இழுத்து நிறுத்திய தந்தை "உன் அக்கா என்னவோ உளறுறா.. என்னன்னு நீயே கேளு.!" என்றார்.

அம்மா கூடத்திற்கு வந்தாள். தூணை கட்டியபடி நின்றாள். என்ன பிரச்சனையோ என்று கவலையோடு அவர்களை பார்த்தாள்.

முல்லை அக்காவை பார்த்தாள்.

"என்னக்கா?" என்றாள் அப்பாவியாக.

இரட்டை சடையில் முழம் முழமாக பூச்சரமும், பட்டு தாவணியுமாக இருந்தாள் முல்லை. அந்த அலங்காரம் நாகேந்திரனை எதிர்ப்பார்த்துதான் என்று நினைத்தது மலரின் உள்ளம்.

"உனக்கும் இந்தருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு முழு சம்மதம் முல்லை.!" என்றாள் மலர்.

முல்லை விழித்தாள். அக்கா சொன்னதன் அர்த்தம் புரியவே சில நிமிடங்கள் பிடித்தது அவளுக்கு.

மாமனை திரும்பிப் பார்த்தாள். பூர்ணிமாவை அணைத்தபடி நின்றிருந்தவனின் பார்வை வேறு எங்கே இருந்தது.

அக்காவின் புறம் திரும்பியவள் "எதுக்கு இந்த விளையாட்டு?" என்றுக் கேட்டாள்.

அவளின் கேள்வி மலருக்கு திடுக்கிடலை தந்தது.

"பயப்படாத முல்லை.. மாமா எல்லாத்தையும் சொல்லிட்டாரு. நான் உன் மேல எந்த குறையும் சொல்லல.."

"என்ன லூசு மாதிரி பேசிட்டு இருக்க.? மாமா என்ன சொன்னாரு?" எனக் கேட்டவள் நாகேந்திரனின் முன்னால் வந்து நின்றாள்.

"அவக்கிட்ட என்ன மாமா சொன்னிங்க?" எனக் கேட்டாள்.

நாகேந்திரன் பேசும் முன் இருவருக்கும் இடையில் வந்து நின்ற மலர் "நீயும் அவரும் காதலிக்கறதை சொல்லிட்டாரு. உனக்கும் இந்தருக்கும் இடையில் நடந்த எல்லாத்தையுமே சொல்லிட்டாரு.. அவருக்கு உன்னை செகண்ட் மேரேஜ் பண்ணி வைக்க எனக்கு சம்மதம். நீ புதுசா நடிக்காம இருந்தா அப்பா அம்மாக்கிட்ட பேசலாம்.!" என்றாள்.

முல்லை அதிர்ச்சியோடு நாகேந்திரனை பார்த்தாள். காதல்? ஒருநாள் கூட அவனோடு கூடுதல் வார்த்தை பேசி இருக்க மாட்டாள் முல்லை. விலகி நின்று, கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் தருவாள்‌. எத்தனையோ வீடுகளில் மச்சினிகளும் மாமன்களும் கொஞ்சுவதை பார்த்திருக்கிறாள். ஆனால் அவள் அப்படி கிடையாது. அப்பாவின் கண்டிப்பு அப்படி.

"இவ என்ன மாமா சொல்றா?" என்றாள் நம்பிக்கை இல்லாமல்.

"முல்லை.. நமக்கு வேற வழி இல்ல.. நாம தப்பு பண்ணிட்டோம். நாம நழுவிட முடியாது.!" என்றான் அவன்.

திகைத்து போய் பின்னால் நகர்ந்தாள் முல்லை.

"அப்பா.. இவன் பொய் சொல்றான்.!" என்றாள்.

"அவன் இவன்னு பேசாத முல்லை.. அவர் இதை மறைச்சிருக்க முடியும். ஆனா உன் வாழ்க்கைக்காதான் உண்மையை சொல்லி அவமானப்பட்டுட்டு இருக்காரு.!" என்ற மலரை பைத்தியம் என நினைத்து வெறித்தாள் முல்லை.

"உன் உத்தம ஒழுக்க புருசனை வாடா போடான்னு நான் சொல்லாம இருப்பதே பெரிய விசயம்.." என்றவள் அவனை முறைத்தாள்.

"அது எப்படிடா இப்படி வாய் கூசாம பொய் சொல்லி இருக்க?" எனக் கேட்டாள்.

"முல்லை.!" மலர் கண்டித்தாள். அப்பா ஒருபுறம் நின்று நாகேந்திரனை முறைத்துக் கொண்டிருந்தார்.

"அக்கா.. மெண்டல் அக்கா.. உனக்கு மூளையே கிடையாதா? இந்த உலகத்துல ஆம்பளைங்களுக்கு பஞ்சமா வந்துடுச்சி? நான் ஏன் இவனை லவ் பண்ணணும்? உனக்கு எதுக்கு நான் துரோகம் செய்ய போறேன்?" எனக் கேட்டாள் பற்களை கடித்தபடி.

பூபாலன் பள்ளியிலிருந்து திரும்பி வந்தான். வீட்டில் நடப்பதை ஆச்சரியத்தோடு கவனித்தபடி தந்தையின் அருகே வந்தான். அவனை கண்டதும் பூர்ணிமா தந்தையின் கையிலிருந்து இறங்கி அவனிடம் ஓடி வந்தாள்‌. பூமாறனும் கூட அண்ணனிடம் வந்தாள்.

"அண்ணா சண்டை.!" என்று கிசுகிசுத்தான்.

"ஸ்ஸ்.!" என்று தம்பியை எச்சரித்த பூபாலன் ஓரமாக நின்றபடி அவர்கள் அனைவரையும் கவனித்தான்.

"இவர் பொய் சொல்றாருன்னு சொல்றியா?" நம்பிக்கை இல்லாமல் தங்கையிடம் கேட்டாள் மலர்.

"ஆமா.. உன் புருசனுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு. சம்பந்தமே இல்லாம உளறிட்டு இருக்காரு.. கூட்டிப் போய் வேப்பிலை அடிச்சி விடு.!" என்று பற்களை அறைத்தாள் முல்லை.

"முல்லை போதும் உன் விளையாட்டு.!" என்ற நாகேந்திரனை முறைத்தவள் "நீ முதல்ல உன் விளையாட்டை நிறுத்துடா. என் அக்கா உன்னை கட்டியதே பெருசு‌‌.. இதுல நான் ஒருத்திதான் உனக்கு கேடா?" என்றாள்.

தங்கையை அறைய கையை ஓங்கினாள் மலர். ஆனால் அவளின் கையை பற்றி நிறுத்தினார் அப்பா.

"என் பொண்ணு மேல தப்பு இல்லாம கூட இருக்கலாம் மலர்.!" என்றார் அழுத்தமாக‌.

மலரின் முகம் கறுத்துப் போனது‌.

"அப்படின்னா என் புருசன் பொய் சொல்றாருன்னு சொல்றிங்களா?" எனக் கேட்டாள்.

அப்பா மௌனமாக நின்றார். மருமகன் பொய் சொல்கிறானோ இல்லையோ தன் சின்ன மகள் பொய் சொல்வில்லை என்று நம்பினார்.

அக்காவின் முகத்தில் சிறிதும் மாற்றம் இல்லாததை கண்டு முல்லைக்கு எரிச்சலாக இருந்தது‌.

"போய் கற்பூரம் கொண்டு வா. நான் அணைச்சி சத்தியம் பண்றேன். அப்பவாவது நீ என்னை நம்புறியான்னு பார்க்கலாம்.!" என்றாள்‌.

மலர் தங்கையையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள். பூபாலனுக்கும் பூமாறனுக்கும் இடையில் நின்றபடி அவர்களின் கையை பிடித்து இழுத்தபடி விளையாடிக் கொண்டிருந்த பூர்ணிமாவின் அருகே சென்றாள். அவளை இழுத்துக் கொண்டு கணவனிடம் வந்தாள்.

அவள் என்ன செய்ய போகிறாளோ என்ற பயத்தில் அம்மா அருகே ஓடி வந்தாள்.

"பூர்ணி மேல நீ சத்தியம் பண்ணு இந்தர்! எல்லோரும் அப்போதாவது உன் மேல இருக்கும் சந்தேகத்தை நீக்கிக்கறாங்களான்னு பார்க்கலாம்.!" என்றாள்‌‌.

முல்லை அதிர்ச்சியோடு அக்காவை தன் பக்கம் திருப்பினாள்.

"பைத்தியமா நீ?" எனக் கேட்டாள். பூர்ணிமாவின் மீது அளவில்லா பாசம் வைத்திருப்பவள் அவள்‌. நிமிடத்திற்கு பத்து முறையாவது 'என் மகள் என் மகள்' என்று கொஞ்சுபவள். இப்போது அந்த மகள் மீதே பொய் சத்தியம் செய்வதா என்று பயந்தாள்.

"நீ பொய் சொல்ற.. எனக்கு வேற வழி தெரியல முல்லை.!" என்றாள் மலர்.

முல்லை மறு வார்த்தை பேசும் முன் மகளின் தலையில் கை வைத்து விட்டான் நாகேந்திரன்.

"என் பொண்ணு மேல சத்தியம்.. முல்லையும் நானும் காதலிச்சது உண்மை. அவளை நான் தொட்டுட்டதும் உண்மை.!" என்றார்.

முல்லை அதிர்ந்தாள். பூர்ணிமாவை தன் பக்கம் இழுத்துக் கொள்ள முயன்றாள். ஆனால் அதற்குள் அப்பா குறுக்கே வந்தார். பேத்தியை தன் அருகே இழுத்துக் கொண்டார்.

"நீங்க இங்கிருந்து போங்க.!" என்றார் நாகேந்திரனிடம்.

நாகேந்திரன் சந்தேகத்தோடு மாமனாரை பார்த்தான்.

"நாங்க கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. நீங்க போங்க.. எதுவா இருந்தாலும் தகவல் சொல்லி அனுப்புறோம்.!" என்றார் அவர்.

நாகேந்திரன் தயக்கத்தோடு வெளியே நடந்தார். மலர் அவரை பின்தொடர முயன்றாள்.

"நீ இங்கேயே இரு.!" உரத்த குரலில் கட்டளையிட்டார் அப்பா.

நாகேந்திரன் மனைவியையும் மாமனாரையும் ஒருமுறை பார்த்து விட்டு அங்கிருந்துச் சென்றார்‌.

சுற்றம் முற்றும் பார்த்தார் அப்பா. அவரின் மனைவி முந்தானையால் வாயை மூடியபடி சத்தமில்லாமல் அழுதுக் கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னால் நின்றிருந்த மருமகளை கண்டவர் "டீ கொண்டு வா செண்பகம்.. சுக்கு நிறைய போட்டு எடுத்துட்டு வாம்மா. தலைவலி.!" என்றார்.

செண்பகம் தலையசைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

அப்பா தலையை பிடித்தபடி இருக்கையில் அமர்ந்தார்.

"அப்பா அவர் ரொம்ப நல்லவர்.. என் மேலயும் நம்பிக்கை வைங்க.. முல்லைக்கு எந்த பிரச்சனையும் வராது.!" என்றாள் மலர்.

"அறிவு கெட்டவளே.. என்னையும் என் கருத்தையும் நீ கேட்கவே மாட்டியா?" எனக் கேட்டாள் முல்லை. அப்பா இடம் வலமாக தலையசைத்தார்.

"முல்லை.. அந்த ஆள் பூரணி மேல் சத்தியம் பண்ணியிருக்காரு.!" என்றார்.

"என்னை சந்தேகப்படுறிங்களா? என் மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சா?" அதிர்ச்சியோடு கேட்டாள் முல்லை.

"உன் மேல கொஞ்சமும் தப்பு இல்லன்னா இப்ப இப்படி பிரச்சனை வராது முல்லை. நெருப்பு இல்லாம புகையாது. ஊசி இடம் தராம நூலும் நுழையாது.!" என்றார் மரிக்கொழுந்து.

முல்லை சிரித்தாள். பூபாலனும் பூமாறனும் அத்தையையும் மற்றவர்களையும் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

முல்லையின் சிரிப்பை நிறுத்திக் கொண்டு நிமிர்ந்தாள். "உன்னை மாதிரி பழமொழி சொல்ல என்னாலும் முடியும் அண்ணா.. அதுதான் மனுசன் மனசு ஒரு குரங்கு. அந்த ஆள் மனசும் அப்படிதான். அவன் பேச்சை கேட்டு என்னை நீங்க சந்தேகப்படாதிங்க. என் கோபம் ரோசம் பத்தியெல்லாம் உங்களுக்கு நல்லா தெரியும். அப்புறம் நான் என்ன வேணாலும் செய்வேன்.!" என்றாள் பற்களை கடித்தபடி.

"இந்த விசயம் வெளியே தெரிஞ்சா உன் மானம்தான் போகும் முல்லை.!" மலர் சொன்னது கேட்டு முல்லைக்கு ஆத்திரமாக வந்தது.

"நான் போலிஸ்க்கு போனா உன் புருசனுக்குதான் மூஞ்சி முகரை உடையும். இது எப்படி வசதி? பொய் சத்தியம். பொய் கதை.. அந்த ஆள் வாய் திறந்தாவே பொய் மட்டும்தான் பேசுவாரு போல.. நீ சொந்த தங்கச்சி பேச்சை கேட்காம அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க.!" என்ற முல்லை மற்ற அனைவரையும் பார்த்தாள்.

"அந்த ஆள் சொன்னதுக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல. அவர் பொய் சொல்றாரு. அவ்வளவுதான்.!" என்றவள் தனது அறைக்கு சென்றாள்.

செண்பகம் கொண்டு வந்து தந்த தேனீரில் சூட்டையோ சுவையையோ உணர முடியவில்லை அப்பாவால். மருமகன் மீதுதான் அவருக்கும் சந்தேகம். ஆனால் மலரின் வார்த்தைகளை நம்பாமல் இருக்க முடியவில்லை. தங்கையின் மீது பாசமாக இருக்கும் மலர் தங்கையின் வாழ்க்கையை அழிக்க நினைப்பாளா என்று எண்ணினார்.

குடும்பமே மயான அமைதியில் இருந்தது.

விசயம் எப்படி அண்ணன் தம்பி வீடு வரை சென்றதோ? முல்லையின் பெரியப்பா சித்தப்பா வந்தனர்.

"குடும்பத்துக்கே ஒழுக்கம் இல்ல. ஒருத்தன்கிட்ட பணம் இருக்குதுங்கறதுக்காக இப்படி இரண்டு பொண்ணுகளுமேவா ஒன்னாப் போய் அவன் மேல விழுவாங்க?" எனக் கேட்டனர்.

அப்பாவுக்கு அவமானத்தில் உயிர் போவது போலிருந்தது.

அன்றிரவு முல்லையை தேடி வந்தாள் மலர்.

"முல்லை.!" என்றவளின் முகம் பார்க்க மறுத்தாள் முல்லை.

"அந்த ஆள்.."

"அவர் பொய் சொல்றாரு.!" என்று மீதியை முடித்த மலரை அதிர்ச்சியோடு பார்த்தாள் முல்லை.

"அவர் பொய் சொல்றாருன்னு எனக்கு தெரியும் முல்லை. இந்த வீட்டுக்குள்ள வந்த அடுத்த செகண்டே நான் கண்டுப்பிடிச்சிட்டேன்.!" என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN