குரங்கு கூட்டம் 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிரேமின் அறை அலங்கோலமாக இருந்தது. கட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தரையில் போர்வைகள் விரித்து போடப்பட்டு இருந்தது. தலையணைகள் ஆங்காங்கே கிடந்தது.

மிருதுளா அனைவருக்கும் முன்னால் உறங்கி விட்டாள்.

பிரேம் போனோடு அறையை விட்டு வெளியே சென்றவன் இன்னமும் திரும்பி வரவில்லை.

மிருத்யூவும் அர்விந்தும் கடிகாரத்தை கூட கவனிக்காமல் தங்களின் அலுவலகத்தில் வேலை செய்யும் சங்கரியின் அழகு பற்றி வர்ணித்துக் கொண்டிருந்தார்கள்.

"அன்னைக்கு அவ சிவப்பு சேலை கட்டி வந்திருந்தாளே.. அன்னைக்கெல்லாம் ஆபிஸே அவளைத்தான் பார்த்துட்டு இருந்தது மிருத்யூ.!" என்றான் அர்விந்த்.

லேட் நைட் ஸ்நாக்ஸ் என்று பக்கோடாவை செய்து தந்திருந்தாள் பிரேமின் அம்மா. ஆனால் அந்த பக்கோடா தீர்ந்து பல மணி நேரம் ஆகியிருந்தது.

"எனக்கு என்ன தோணுதுன்னா பிரேமோட லவ்வர் கொஞ்சம் மொக்கை பீஸ்ன்னு தோணுது.!" தண்ணீர் சொம்பில் இருந்த கடைசி விழுங்கு தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு சொன்னான் அர்விந்த்.

மிருத்யூ தனது சகோதரியின் புறம் திரும்பினான். கால்கள் இரண்டும் இரண்டு திசையில் இருந்தன. பெட்சீட்டை தலையில் போர்த்த முயன்று தோற்றதில் கடைசியில் பற்களோடு கடித்தபடி வாயை கோணிக் கொண்டு படுத்திருந்தாள்.

'நீ கொஞ்சம் கண்ணை திறந்து பாருடா.. மொக்கை பீஸ் யாருன்னு அப்ப தெரியும். உன் லவ்வரை விட மோசமான மொக்கை பீஸை நான் பார்த்ததே இல்ல.!' என்று நினைத்த மிருத்யூ அதை வெளியே சொல்லவில்லை.

"தூங்கலாமா?" என்றபடி எழுந்த மிருத்யூ சகோதரியின் அருகே வந்தான். அவளை உருட்டி சுவரோரம் தள்ளினான்.

"பாவம்.!" வழக்கம் போல சொன்ன அர்விந்த் அதன் பிறகே புத்தி வந்தவன் போல நாக்கை கடித்துக் கொண்டான்.

"பாவம்தான்.!" நக்கலாக சொன்ன மிருத்யூ தன் சகோதரி உதைத்து தள்ளியிருந்த தலையணைகளை எடுத்து வந்து தலை வைக்கும் இடத்தில் வரிசையாக அடுக்கினான்.

"அவன் வருவானா?" கடிகாரத்தை பார்த்தபடி கேட்டான் அர்விந்த். மணி இரவு ஒன்றை தாண்டிப் போய் கொண்டிருந்தது.

"அவனோட ஆளோடு பேசிட்டு இருக்கான். விடியறதுக்குள்ள வந்துடுவான்.." என்றபடி கீழே படுத்தான் மிருத்யூ.

இருவரும் கண்களை மூடினர்.

"மிருதுவை உனக்கு பிடிச்சிருக்கா அர்விந்த்?" அவன் பக்கம் திரும்பிப் படுத்தபடி கேட்டான் மிருத்யூ.

அர்விந்த் பெருமூச்சு விட்டான். தன் நெஞ்சின் மீது கையை வைத்தான்.

"தெரியல மிருத்யூ.. இதுவரை அவளை அந்த மாதிரி நான் பார்த்தது இல்ல.. இன்னும் சொல்லணும்ன்னா அவளை பொண்ணாவே நான் பார்த்தது இல்ல.!" என்றாள் சோகமாக.

நண்பனின் கவலை மிருத்யூவுக்கும் புரிந்தது. அவளை பாலினம் பிரித்து பார்த்ததே இல்லை. இவர்களை பொறுத்தவரை அவளும் இவர்களை போலவே ஒரு குரங்கு.

அர்விந்த் கவலையோடு யோசனை செய்துக் கொண்டிருந்த நேரத்தில் பிரேம் உள்ளே வந்தான்.

"அதுக்குள்ளவா விடிஞ்சிடுச்சி?" சந்தேகமாக கேட்டான் அர்விந்த்.

"காமெடி பண்ணாத அர்வி.. அவ ரொம்ப பயந்துட்டு இருக்கா.. அழறா.. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்ல.. எனக்கும் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.!" என்றான்.

அருகில் வந்து படுத்தவனின் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட அர்விந்த் "பொண்ணு தூக்குறதெல்லாம் மேட்டரா? அதெல்லாம் சுலபம்டா.!" என்றான்.

ஆனாலும் பிரேம்க்கு பயமாதான் இருந்தது.

மறுநாள்‌ காலையில் தன் மீது மழை பொழிவது கண்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் மிருதுளா.

தன் முன் இருந்தவர்களை பார்த்தாள். பிரேம் தன்னிடமிருந்த தண்ணீர் தீர்ந்த பாட்டிலை அறையின் மறு பக்கத்தில் தூக்கி வீசினான்.

"எருமை.!" என்றபடி எழுந்தவள் அவனின் வயிற்றில் குத்து விட முயன்றாள். விலகி நின்றவன் "அரை மணி நேரமா எழுப்பிட்டு இருக்கோம்.. பேய் மாதிரி தூங்கற.!" என்று சலித்துக் கொண்டான்.

"பாவம்டா நீ.. தினமும் காப்பியோடு என் பிரெண்டை எழுப்பு. அவளை மனம் வாடாம பார்த்துக்க.!" என்று அர்விந்தின் தோளில் தட்டினான்.

அர்விந்த் எதுவும் பேசாமல் அறையின் கதவை திறந்தான். அதே நேரத்தில் பிரேமின் அம்மா காப்பி தட்டை கொண்டு வந்து நீட்டினாள்.

மிருதுளா மட்டும் பல் விளக்கவில்லை. ஆனால் நால்வரும் காப்பியை அருந்தினர்.

"இவளுக்கு ரொம்ப செல்லம் தந்துட்டோம்.!" தனக்குள் சொன்னான் அர்விந்த்.

காலை உணவை முடித்துக் கொண்டு நண்பர்கள் நால்வரும் அறையின் நடுவில் வந்து அமர்ந்தனர்.

"என் லவ்வரோட வீடு பெரிய வீடு. அந்த வீட்டுக்குள்ள ஒருநாள்ல நுழையுறது சாத்தியமே கிடையாது. அதனால நாம ப்ளான் பண்ணிதான் ஆகணும்.!" என்றான் பிரேம்.

"சரி.. சொல்லு.. என்ன பண்ணலாம்ன்னு அதையும் நீயே சொல்லு.!" என்றான் அர்விந்த்.

பிரேம் நிமிர்ந்து அமர்ந்தான்.

"நாம எல்லோரும் சிபியோட வீட்டுக்கு போறோம். கல்யாணம் பண்ற அன்னைக்கு கோவிலுக்கு போற வழியில் மட்டும்தான் நம்மால சிபியை கூட்டி வர முடியும். ஏனா அந்த வீட்டோட கன்டிஷன் அப்படி. அந்த வீட்டோடவே இருந்து அவங்க கோவிலுக்கு போகும்போது அவங்களோடவே கிளம்பி சிபியை கூட்டி வர போறோம்.!" என்றான்.

மிருத்யூ ஆச்சரியத்தோடு அவனை வெறித்தான்.

"அதுக்கு நாம நேரா கோவிலுக்கு போகலாமே?" எனக் கேட்டான்.

"அந்த கோவிலுக்கும் நம்மால போக முடியாது. அந்த கூட்டத்துல கலந்தா மட்டும்தான் அந்த கூட்டத்தை உடைக்கிற வழியையும் கண்டுப்பிடிக்க முடியும்."

"ஓ.. எங்களை சாகடிக்க முடிவு பண்ணிட்ட.. என்னவோ செய்.!" என்றபடி அர்விந்தின் தோளில் சாய்ந்தாள் மிருதுளா.

"மிருது.. நீ சிபியோட பிரெண்டா அந்த வீட்டுக்கு போக போற.. உன் போட்டோ வீடியோவெல்லாம் அவ ஏற்கனவே பார்த்திருக்கா.. நீ டெல்லியில் படிச்சதா பொய் சொல்லிடு. அவளோட நம்பரை உனக்கு அனுப்பி இருக்கேன். அவளை பத்திய டீடெயில்ஸை அவ சொல்வா.." என்றவன் மிருத்யூவின் பக்கம் திரும்பினான்.

"எனக்கு என்ன தோணுதுன்னா.. மிருத்யூ நீ ஏன் மாறு வேஷம் போட்டுட்டு இவளோட இரட்டை பிறவி சகோதரியா அந்த வீட்டுக்கு போக கூடாது?" எனக் கேட்டான்.

மிருதுளா சகோதரனை பார்த்தாள். வேடமிட்டால் அவனுக்கும் அவளுக்கும் வித்தியாசம் தெரியாதுதான். ஆனால் இது கொஞ்சம் கிறுக்குதனமான யோசனையாக தோன்றியது.

"போ நான் மாட்டேன்.! என்னால பொண்ணு குரல்ல பேச முடியாது.!"

"நீ ஊமைன்னு சொல்லிடலாம்.. நோ ப்ராப்ளம்.!" அர்விந்த் தன் பங்கிற்கு சொன்னான்.

"என்ன சாகடிக்க உங்களுக்கு என்னடா அவ்வளவு ஆசை?" எனக் கேட்டபடியே எழுந்து நின்றான் மிருத்யூ.

"என்னை வச்சி காமெடி பண்ற வேலையெல்லாம் வேணாம். கொன்னுடுவேன்.!" என்று எச்சரித்தவன் மறுநாள் காலையில் சிபியின் வீட்டு வாசலில் நின்றபடி தனது தாவணி பாவாடையை கவலையோடு பார்த்தான்.

தன்னை சுற்றி நின்றிருந்தவர்களை பார்த்தான். அர்விந்த் சமையல் கரண்டிகள் நிரம்பிய பையோடு நின்றிருந்தான். பிரேம் வயதான சன்னியாசியின் கோலத்தில் இருந்தான்.

மிருதுளா மட்டும் தனது இயல்பான கோலத்தோடு மகிழ்ச்சியாக இருந்தாள்.

"யோவ் சன்னியாசி.. நீ இங்கேயே இருய்யா. நான் முதல்ல போறேன்.!" என்றபடி அந்த வீட்டின் கேட்டை நெருங்கினான் அர்விந்த்.

மாளிகையே தோற்குமோ எனும் அளவிற்கு மூன்று அடுக்கில் பரந்து விரிந்து இருந்தது அந்த வீடு. கேட்டிலேயே இரு ரவுடிகள் காவலுக்கு நின்றிருந்தார்கள். அவர்களின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கி வெளியே தெரியும்படி இருந்தது. அவர்களின் மீதிருந்து வெடிகுண்டு வாசம் வீசுவதை போலவே உணர்ந்தான் அர்விந்த்.

"யார்டா நீ?" என கேட்டபடி அர்விந்தின் முன்னால் வந்து நின்றான் ஒருவன்.

"நான் அர்விந்துங்க ஐயா.. அண்ணன் சொக்குவோட அசிஸ்டன்டு.!" லேசாக முதுகை வளைத்தபடி சொன்னான் அவன்‌.

எதிரில் இருந்தவர்கள் இருவரும் அவனை தலை முதல் கால் வரை பார்த்தனர். தலையில் துண்டு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தான். முகத்தில் எண்ணெய் வழிந்துக் கொண்டிருந்தது. கசங்கிய சட்டை சற்று அழுக்காக இருந்தது. லுங்கியை மடித்துக் கட்டியிருந்தான்.‌ காலில் இருந்த தோல் செருப்பு பாதி தேய்ந்துப் போயிருந்தது.

"போ.." என்றபடி கேட்டை திறந்து விட்டான் ஒருவன்.

எங்கிருந்தோ ஒருவன் வந்தான். "இப்படி வா.!" என்றபடி அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான். நடுங்க இருந்த உடம்பை மறைக்க முயன்றான் அர்விந்த்.

வீட்டின் கிழக்கு பக்க வாசலின் வழியே இவனை இழுத்துக் கொண்டு நடந்த அவன் உள்ளே சென்றதும் அர்விந்தை சோதித்தான். அர்விந்த் போனை கூட கொண்டு வரவில்லை. சோதித்தவன் அவனிடம் சரியென்று தலையசைத்தான். உள்ளே ஒரு திசையை நோக்கி கை காட்டினான். அர்விந்த் உள்ளே நடந்தான்.

வீட்டின் வெளியே வந்து நின்றது அந்த வாசல். கூரையிட்ட அந்த வாசலின் கீழ் பரபரப்பாக பலரும் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். நான்கைந்து கேஸ் அடுப்புகள் எரிந்துக் கொண்டிருந்தன. அடுப்பு எரியும் சத்தமே இசை போல ஒலித்தது.

"அந்த சாதத்தை வடிச்சி கொட்டுங்கடா.!" என்று கத்தினான் சொக்கு.

இரண்டு பேர் அடுப்பிலிருந்த பெரிய பாத்திரத்தை சாக்கு கட்டி தூக்கினர். அருகே இருந்த ஒரு கல்லின் மீது வைத்து சாதத்தை வடித்தனர்.

அர்விந்த் சோறு வடிப்போரை கண்டு வியந்து நின்ற நேரத்தில் அவனின் தோளில் கை பதித்தான் ஒருவன்.

"யார் நீ?" எனக் கேட்டான்.

"நான் அர்விந்து.!" என்றவனை திரும்பிப் பார்த்தான் சொக்கு.

"நீதானா அந்த புது டிக்கெட்டு? வா.. வா வந்து அந்த வெங்காயத்தை வெட்டு.!" என்று கட்டளையிட்டான் சொக்கு.

அர்விந்த் பற்களை கடித்தான். 'படுபாவி பய.. முத நாளே என்னை அழ வைக்க டிரை பண்றான்.!' என நினைத்தபடி தனது பையை ஓரமாக வைத்துவிட்டு சென்றான்.

சிபி தனது அறையில் தனியாக இருந்தாள். இதயம் படபடவென்று அடித்துக் கொண்டே இருந்தது அவளுக்கு.

அறை இளம் சிவப்பில் வர்ணம் பூசப்பட்டு இருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே வானம் தெரிந்தது.

சிபி அமைதியானவள். தந்தையிடம் இரண்டு வார்த்தை பேசினாலே திணறும் அவளுக்கு. சிபியின் அம்மா ஐந்து வருடங்களுக்கு முன்னால் இறந்துப் போய் விட்டாள். அண்ணன் பேச வந்தாலே அவளுக்கு சற்று பயம்தான். இந்த வீடே அவளுக்கு அந்நியம்தான். கல்லூரியில் நன்றாக இருந்தது போலிருந்தது.

இங்கே வந்ததில் இருந்து உணவு கூட வயிறார உண்ண முடியவில்லை. படிப்பு முடிந்ததும் வீடு வந்தது தவறு என நினைத்தாள்.

மீண்டும் படிக்க செல்வோம் என்று நம்பிக்கையோடுதான் வீடு வந்தாள். ஆனால் அப்பா ஏற்கனவே நிச்சயத்து திருமண ஏற்பாடே செய்து விட்டிருந்தார். அவரிடமிருந்தும் அந்த வீட்டிலிருந்தும் தப்பிப்பது சுலபம் இல்லை. அதனால்தான் பயந்தாள் அவள்.

பிரேம் முடிந்த அளவுக்கு தைரியம் சொல்லி இருந்தான். அவளை மீட்டு விடுவதாக சொன்னான். அந்த நம்பிக்கையில்தான் அவளும் இருந்தாள்.

"சிபி..!" யாரோ கதவை தட்டினார்கள். சென்று திறந்தாள். அத்தை நின்றிருந்தாள்.

"உன் பிரெண்டுங்க இரண்டு பேரும் வந்திருக்காங்க.!" என்றபடி நகர்ந்து நின்றாள்.

மிருத்யூவும் மிருதுளாவும் ஜோடியாக நின்றிருந்தார்கள்.

"ஹேய் சிபி.!" அவளை அணைத்தாள் மிருதுளா. "வெளியே நிற்க பயமா இருக்கு.‌ கொஞ்சம் உன் ரூம்குள்ள கூட்டி போயேன்.!" என்றாள் அவளின் காதோரத்தில்.

"தேங்க்ஸ் அத்தை.!" என்ற சிபி அவசரமாக அறைக்குள் நகர்ந்தாள். இவர்கள் இருவரும் வந்த உடன் கதவை சாத்தினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN