பௌர்ணமி 11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மலரின் அருகே வந்து அவளின் கையை பிடித்தாள் முல்லை.

"உனக்கு தெரிஞ்சிருக்கு.. அப்பாடா நான் தப்பிச்சேன்.!" என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள் "இப்பவே போய் இதை வீட்டுல சொல்லி என்னை காப்பாத்தி விடு. என்னை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க.!" என்றாள்.

மலர் மறுப்பாக தலையசைத்தாள். முல்லையின் முகம் நொடியில் மாறி விட்டது‌. அந்த மறுப்பு ஓராயிரம் பதில்களை சொன்னது. அவள் உடன் பிறந்தவள். அவளை போய் தவறாக நினைக்க இயலுமா? மாமனின் மீதுதான் சந்தேகம் வந்தது. ஏதாவது மிரட்டுகிறானா என்று பயந்தாள்.

"அவர் உன்னை லவ் பண்றாரு முல்லை.!" என மலர் சொல்லவும் இதுவரை பயந்ததும் முடிந்துப் போனது.

"அவர் ரொம்ப நல்லவர். உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பாரு.!" என மலர் சொல்லவும் அக்காவின் கையை விட்டுவிட்டு நகர்ந்தாள் முல்லை.

"உன் புருசனுக்கு என்னை செட் பண்ணி தர பார்க்கிறியா?" எனக் கேட்டாள்.

மலர் மௌனமாக தலை குனிந்தாள்.

"இந்த பொழப்புக்கு வேற பேர் இருக்கு மலர்.. உன்னை நான் ரொம்ப லவ் பண்ணேன். இவ்வளவு தரம் கெட்டு போவன்னு நான் நினைச்சி கூட பார்க்கல. அது எப்படி உன்னால இப்படி கூட யோசிக்க முடிஞ்சிருக்கு?" நக்கலாக கேட்டாள் முல்லை.

மலர் முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

"நீ கரெக்டா இருந்திருந்தா இப்படி ஒரு நிலமை வந்திருக்காது.!" என்ற மலரின் கன்னத்தில் யோசிக்காமல் ஒரு அறையை விட்டாள் முல்லை.

"என்னடி பார்த்த நீ? உன் புருசனோடு கொஞ்சி பேசி இருக்கேனா? அவனோடு உரசிக்கிட்டு நின்னிருக்கேனா? அவன் வீட்டுக்கு வரும்போது அரை குறை டிரெஸ்ஸோடு இருந்திருக்கேனா.?"

மலர் கலங்கும் விழிகளை துடைத்துக் கொண்டாள்.

"வேற எப்படி அவருக்கு மட்டும் உன் மேல லவ் வந்தது? நீ சொல்லு.. இத்தனை வருசமா லவ் பண்றோம். என்னை தவிர வேற பொண்ணை திரும்பி கூட பார்த்தது இல்ல அவர். ஆனா திடீர்ன்னு உன் மேல லவ். அதெப்படி திடீர்ன்னு லவ் வரும்? நீ ஏதாவது குறிப்பு காட்டி இருப்ப இல்ல?" என கேட்டவள் தங்கையின் முகம் எரிமலையாய் காய்வதை கூட கண்டுக் கொள்ளாமல் "நீ என்ன தப்பு செஞ்சாலும் அதை நான் மன்னிச்சிட்டேன். நீ இப்ப உன் தப்பை மறைக்காம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ.. நான் பொறாமை பிடிச்சவ கிடையாது. வருசம் முழுக்க உள்ளுக்குள் உடைஞ்சி செத்தாலும் கூட உனக்கு தடையா வர மாட்டேன். இருக்கவும் மாட்டேன்.!" என்றாள்.

முல்லைக்கு சிரிப்பு மட்டும்தான் வந்தது.

"நல்ல பைத்தியக்கார ஹாஸ்பிட்டல்ல போய் டிரீட்மென்ட் எடுத்துக்க மலர். இன்னும் கொஞ்சம் விட்டா முத்தி போயிடும்.!" என்றவள் அவ்விடத்தை விட்டு நகர முயன்றாள்.

தங்கையின் கைப்பிடித்து நிறுத்தினாள் மலர்.

"ப்ளீஸ் முல்லை.. உன் மேல தப்பு இருக்கா இல்லையா அது எனக்கு தேவை இல்ல.. என் வீட்டுக்காரரை கல்யாணம் பண்ணிக்க.!" என்றாள் கெஞ்சலாக.

"அந்த ஆள் உனக்கு செய்வினை வச்சிட்டானா மலர்? ஆனா செய்வினையெல்லாம் உண்மை கிடையாது.!"

"ப்ளீஸ் முல்லை.!" என்றவள் குலுங்கி அழுதாள்.

"நான் அவரை ரொம்ப லவ் பண்றேன்.. அவர் ரொம்ப நல்லவர்.. அவரை.!" அவள் மேலே பேசும் முன் "இதுக்கு பேர் லவ் மாதிரி தெரியல மலர். உன் புருசன் ஆசைக்காக சொந்த தங்கச்சியை பலி தர டிரை பண்ற.. ஊர் உலகத்துல அவன் ஒருத்தன் மட்டும்தான் ஆம்பளைன்னு நினைச்சிட்டு இருக்காத.. தயவு செஞ்சி அந்த ஆளை டைவர்ஸ் பண்ணிடு. உனக்கு நல்ல பையனா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.!" என்றாள் முல்லை மலரின் தோளை பற்றியபடி.

மலர் அழுதபடி தங்கையை பார்த்தாள். "இப்படி சொல்லாத. அவர்.."

"அவர் அவர்ன்னு சொல்றதை நீ நிறுத்து மலர்.. அவன் ஒரு சீட்டர். இன்னைக்கு என் மேல ஆசை. என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான். நாளைக்கு வேற ஒரு பொண்ணை லவ் பண்ணுவான். அவனையும் கட்டி வைப்பியா? இப்படி ஒரு ஆப்சனை நீ உருவாக்கி தந்தா அப்புறம் பத்து பொண்ணுங்க நூறு பொண்ணுங்கன்னு இந்த லிஸ்ட் போயிக்கிட்டேதான் இருக்கும். இதான் உண்மை. அந்த ஆளை தூக்கி போட்டு மிதிக்க முடியல உன்னால. பரவால்ல விடு. இங்கேயே இருந்துடு. அவன் பட்டு திருந்தி வருவான்.!" என்றாள்.

மலரின் கண்ணீர் நிற்கவேயில்லை. முல்லை அவளின் தோளில் தட்டி தந்து விட்டு கிளம்பினாள்.

அன்று இரவு முல்லையும் உறங்கவில்லை. மலரும் உறங்கவில்லை. வீட்டில் இருந்த மற்றவர்கள் நிலைமையும் அதேதான்.

அடுத்த நாள் வீடே அமைதி காடாக இருந்தது. யாரும் யாரோடும் பேசிக் கொள்ளவில்லை. உணவு உண்ணுவது கடமையாக இருந்தது.

அன்றைய‌ மாலை நேரத்தில் ஊரின் கிழக்கில் இருந்த குளத்தங்கரைக்கு வந்தாள் முல்லை. குளத்தின் நடுவில் இருந்த அல்லி பூக்களை வெறித்தபடி கரையில் அமர்ந்தாள்.

அவள் நாகேந்திரனை சகோதரன் போல நினைத்து வந்தாள். அக்காவின் மீது அவன் காட்டிய காதலை கண்டு மகிழ்ந்துள்ளாள். பூரணி மீது அவன் காட்டும் பாசம் கண்டு வியந்துள்ளாள்.

ஒரு ஆணுக்கு அடையாளம் என்று கூட அவனை நினைத்துள்ளாள். ஆனால் பொய் சொல்லி தன்னை திருமணம் செய்ய நினைப்பவனை நல்லவென்று அவளால் எண்ண முடியவில்லை. இன்று இப்படி ஒரு பொய் சொன்னவன் நாளை எப்படி வேண்டுமானாலும் பொய் சொல்லுவான் என்று நினைத்தாள்.

அவளின் வலது பக்க ஜடையை பிடித்து இழுத்தபடி அருகே வந்து அமர்ந்தது ஒரு உருவம்.

"கோபு.." என்றபடி அவனின் தோளில் சாய்ந்தாள் முல்லை.

"ஏன் சோகம்?" அவளின் முகத்தை நிமிர்த்தி கேட்டான் அவன்.

நடந்தது அனைத்தையும் விளக்கமாக சொன்னாள் முல்லை. கோபுவுக்கு நாகேந்திரன் மீது கோபமாக வந்தது.

"அவன் சரியான பொறுக்கியா இருப்பான் போல.. நீ ஏன் நம்மை பத்தி சொல்லாம விட்ட? சொல்லியிருந்தா பிரச்சனை தீர்ந்திருக்கும் இல்லையா?" எனக் கேட்டான் அவன்.

முல்லை இடம் வலமாக தலையசைத்தாள்.

"அது எப்படி சரியா வரும் கோபு? நாம லவ் பண்ணாம இருந்திருந்தா.. அப்ப என்ன சொல்லி இவங்களை நம்ப வைக்கிறது? ஒரு பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்றோமேன்னு ஒரு செகண்ட் கூட யோசிக்கல அவங்க. தன் சொந்த பொண்ணை நம்பல என் அம்மாவும் அப்பாவும். நான் லவ் பண்ணாம இருந்திருந்தா இந்திரனை கல்யாணம் பண்ணிக்கணுமா? இது என்ன கணக்கு?" எனக் கேட்டாள்.

கோபுவுக்கு அவளின் பிடிவாதம் தெரியும். தான் போடும் கோடு கூட கோணையாக போக கூடாது என்று நினைப்பவள் அவள்.

"ரிஸ்க் எடுக்க வேணாம் முல்லை. நம்ம விசயத்தை சொல்லிடு. ஆதாரம் இல்லன்னா யாரும் எதுவும் நம்ப மாட்டாங்க.!" என்றான் கோபு அவளின் தலையை வருடி விட்டபடி.

"யாரோ ஒருத்தர் நம்பாம போறதுக்கும் என் மனுசங்க நம்பாம போறதுக்கும் இடையில் ஓராயிரம் வித்தியாசம் இருக்கு கோபு.. ரொம்ப கடுப்பாயிடுச்சி அவங்க என்னை நம்பாம போன உடனே.!" என்றவள் எழுந்து நின்றாள்.

"நான் வீட்டுக்கு கிளம்பறேன் கோபு. நாளைக்கு காலேஜ்ல பார்க்கலாம்.!" என்றவள் அவனுக்கு கையசைத்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டாள்.

கோபுவுடனான தன் காதலை ஆதாரம் என்று சொல்லலாமா என்று யோசித்தாள் முல்லை. ஆனால் ‌அது அதிக பிரசங்கி தனமாக தெரிந்தது. நாகேந்திரன் சரியில்லை. அதற்கு தான் என்ன செய்வது என்று யோசித்தாள். கோபுவுடனான காதல் இப்போதுதான் வேர் விட்டு இரு இலை விட்ட செடி போல துளிர்த்து இருந்தது. கோபுவின் மீதே இன்னும் இவளுக்கு நம்பிக்கை வரவில்லை. பிறகெப்படி இந்த காதலை ஆதாரமாக காட்டுவாள்?

அவள் வீட்டிற்கு வந்திருந்தபோது வீடு அல்லோகல பட்டுக் கொண்டிருந்தது. பெரியப்பா சித்தப்பா வீடுகளில் இருப்பவர்கள் எல்லோரும் வாசலில் இருந்தார்கள்.

முல்லை வாசலுக்கு வந்தபோது சித்தப்பா எதிர் கொண்டு வந்தார் ‌

"எல்லாம் இந்த கேடு கெட்டவளால வந்ததுதான்.!" என்றார்.

முல்லைக்கு புரியவில்லை. சித்தப்பா அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ஒரே அறையில் கன்னம் வீங்கி விட்டது. அப்பாவை அழைக்கலாம் என அவள் வாய் திறந்த நேரத்தில் அண்ணன்கள் சிலர் தாக்க தொடங்கினார்கள்.

பத்து நொடிகளுக்குள் ஐந்தாறு அறைகள் வாங்கி விட்டாள்.

பெரியப்பா வந்து அவர்கள் அனைவரையும் விலக்கி நிறுத்தினார்.

"நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை கொன்னாலும் ஆத்திரம் தீராது.!" என்றார் அவர்.

"உன்னால உன் அக்கா செத்துப் போயிட்டா.!" என்று கத்திச் சொன்னார் பெரியப்பா.

வீட்டை நோக்கி ஓட முயன்றாள் முல்லை. அவளை பிடித்து நிறுத்தினார் சித்தப்பா.

"அக்கா புருசன் மேல உனக்கு என்ன அவ்வளவு ஆசை? நாங்க உனக்கு ஒரு மாப்பிள்ளை கூடவா தேடி தர மாட்டோம்? சொந்த அக்கா வாழ்க்கையை பறிச்சி வாழ்றதுல உனக்கு என்ன அவ்வளவு சந்தோசம்?" எனக் கேட்டார்.

முல்லை அதிர்ச்சியில் இருந்தாள். அவளின் அதிர்ச்சி அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை.

"நேத்து அவன் வந்து சொன்ன உடனே இவளை கொன்னு இருக்கணும்.!" என்றான் ஒரு அண்ணன்.

முல்லை தன் உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றாள். கூட்டம் கூடியிருந்தது. நடுவில் மஞ்சள் பூசிய முகத்தோடு மலர் படுக்க வைக்கப்பட்டு இருந்தாள். அவளின் கழுத்தை நெருக்கி கொன்ற சேலை துணி ஓரமாக கிடந்தது. பூபாலனுக்கு காது குத்து விழா நடக்கையில் அக்கா தங்கைக்கு ஒரே மாதிரி என்று சொல்லி அண்ணன் எடுத்து வந்து தந்த சேலை அது.

"என் மகளை கொன்னுட்டியேடி பாவி.!" முல்லையை கண்டதும் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் அம்மா. அம்மா கோபத்தில் விரக்தியில் சொல்லி இருப்பாள். ஆனால் வார்த்தைகள் தரும் வலி எப்போதும் ஒன்றுதானே?

அக்காவின் மஞ்சள் பூசிய முகம் பார்த்து முல்லைக்கு உள்ளுக்குள் சிரிப்புதான் வந்தது. இப்படியொரு சுமங்கலியாய் இறுதி மரியாதையை வாங்கிக் கொள்வதற்கு பதிலாக விதவையை போலொரு மரியாதையோடு அவளை அடக்கம் செய்யலாம் என்று தோன்றியது முல்லைக்கு.

அக்காவின் மரணத்தின் காரணம் புரியவில்லை அவளுக்கு. தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னதால் இவள் இறந்திருக்க மாட்டாள் என்று நம்பினாள்.

"அப்பா.!" என்றபடி தந்தையின் அருகே சென்றாள். தந்தை மலரின் தலை மாட்டில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார்.

"தூர போ முல்லை.!" என்றார் அவர் அழுதபடி.

ஆக மொத்த குடும்பமும் இவள் நாகேந்திரனை மயக்கியதால் மலர் மனமுடைந்து இறந்துப் போனால் என்று நம்பியது. அதன் காரணமாய் முல்லையை வெறுக்கவும் செய்தது.

முல்லை அனைவரையும் வெறித்தாள். அனைவரும் அழுதுக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் மனதால் செத்த முல்லையை பற்றி கவலை இல்லை.

"மலர்.!" நாகேந்திரன் வாசலில் இருந்து கத்திக் கொண்டு வந்தான்.

முல்லை அவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள். தலை தலையாய் அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

விழிகளை இமைக்க கூட விரும்பவில்லை முல்லை. அண்ணனும் அப்பாவும் இருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றார்கள். நாகேந்திரனை அடித்துக் கொன்று விடும் நோக்கோடு அவனை நெருக்கினார்கள். பெரியப்பா எங்கிருந்தோ வந்தார். இடையில் புகுந்து நின்றார்.

"எதுவா இருந்தாலும் அடக்கம் பண்ணிய பிறகு பேசிக்கலாம்.!" என்றார்.

"இவன் என் பொண்ணை கொன்னுட்டான்.!" கத்தினார் அப்பா.

"உன் சின்ன மக கொழுப்பெடுத்து கொன்னுட்டான்னு சொல்லு.! ஆம்பளன்னா அப்படி இப்படிதான் இருப்பான். இவ பல்லை இளிச்சிக்கிட்டு போய் மேல விழுந்தா எந்த ஆம்பளை அமைதியா இருப்பான்?" எனக் கேட்டார் பெரியப்பா.

முல்லை தன் தந்தையையும் அண்ணனையும் பார்த்தாள். அவர்கள் தனக்கு சாதகமென்று ஒற்றை வார்த்தையேனும் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தாள்.

"இவனை இங்கிருந்து போக சொல்லுங்க.!" என்றான் அண்ணன்.

"ஆனா இவன் சடங்கு செய்யணும்.!" என்று பதில் சொன்னார் பெரியப்பா.

"என் பொண்ணை கொன்னுட்டியேடா படுபாவி.. நீ நல்லாவே இருக்க மாட்ட.." என்றபடி வந்து மீண்டும் மலரின் தலையருகே அமர்ந்து அழுதார் அப்பா.

முல்லைக்கு அந்த வீடும் அந்த மனிதர்களும் அந்நியமாக தோன்றினார்கள். அந்த வீட்டை மொத்தமாக கொளுத்த வேண்டும் போல இருந்தது. அவளுக்கு மட்டும் காளியின் சக்தி இருந்திருந்தால் அப்போது அந்த வீட்டை நிச்சயம் கொளுத்தி இருப்பாள். அந்த அளவிற்குதான் அவளின் நெஞ்சம் கொதித்துக் கொண்டிருந்தது. அதெப்படி சொந்தமே நம்பாமல் போகும் என்று குழம்பினாள். ஒரு பேராசைக்காரன் சொன்னது பொய் என்று அறிய கூடவா இவர்களுக்கு அறிவு இல்லாமல் போய் விட்டது என்று எரிச்சல் கொண்டாள்.

"அத்தை.." அவளின் கைப்பற்றினான் பூமாறன். குனிந்து அவனைப் பார்த்தவள் "என்னடா?" என்றாள் மென்மையாக‌.

"பாப்பா அழறா அத்தை.. அம்மா வேணும்ன்னு அழறா.. பாட்டி அவளை ரூமை விட்டு வெளியே விட கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா அவ வெளியே வரணும்ன்னு அழறா.!" என்றான் பரிதாபமாக.

ஆறு வயது குழந்தை இவன் தன்னை நம்பும் அளவிற்கு கூட இந்த வீட்டில் மற்றவர்கள் யாரும் நம்பாமல் போய் விட்டார்களே என்று நொந்துப் போனாள். அவனை அழைத்துக் கொண்டு நடந்தாள்.

முல்லையின் அறையில்தான் பூர்ணிமா இருந்தாள்.

"கதவை திறந்து விடுடா பாலா பையா.." என்று மழலையில் கத்திக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.

முல்லை அறையின் கதவை தட்டினாள். பூபாலன் கதவை திறந்தான். அத்தையை கண்டு முறைத்தான். உள்ளே சென்று அமர்ந்துக் கொண்டான்.

"அம்மா.!" அவளின் காலை கட்டிக் கொண்டாள் பூர்ணிமா.

முல்லைக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. அவள் அம்மா என்று கேட்டு தொல்லை செய்தது தன்னிடம் வர வேண்டிதான் என்று புரிந்து கண்கள் கலங்கியது. அவளை அள்ளித் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.

"கதவை சாத்திடு மாறா.!" என்றாள்.

பூமாறன் கதவை சாத்தினான். கீழ் தாழ்ப்பாளை போட்டு விட்டு வந்து கட்டிலில் அத்தையின் அருகே அமர்ந்தான்.

பூபாலன் ஜன்னல் அருகே நின்றபடி வெளியே நடப்பதை வெறித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அழுகையாக வந்தது. அத்தை இறந்தாள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. எவ்வளவு பாசமான அத்தை.!

"அம்மா.. இந்த பொம்மை நல்லா இருக்கா?" பூர்ணிமா தன்னிடமிருந்த பொம்மையை காட்டி கேட்டாள்.

முல்லை ஆமென்று தலையசைத்தாள். பூர்ணிமா இங்கேயே வளர்ந்த காரணத்தாலா என்னவோ அவளுக்கு தன் தாய் யார் என்பதில் சிறு குழப்பம்தான். தனக்கு இரண்டு தாயார் என்று எண்ணியது குழந்தை மனம்.

"அத்தை இனி நிஜமாவே வர மாட்டாங்களா?" பூமாறன் முல்லையின் கையை பற்றிக் கொண்டு கேட்டான்.

முல்லை மௌனமாய் ஆமென்று தலையசைத்தாள்.

"பாப்பா பாவம் இல்ல.. அம்மா வேணும்ன்னு அழுவாளே.. என்ன செய்றது?" குழப்பமாக கேட்டான் பூமாறன்.

"கேள்வியா கேட்காத மாறா.. கொஞ்சம் அமைதியா இரு.!" என்ற முல்லை தலைவலி மருந்தை தேடி எடுத்து நெற்றியில் பூசினாள். வீங்கியிருந்த கன்னங்கள் இரண்டும் எரிந்தது.

பூர்ணிமா தரையில் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தாள்‌. அவளை காணும் போதுதான் நெஞ்சம் அதிகமாக வலித்தது‌. இவளை கூட நினைக்காமல் செத்து விட்டாளே என்று மனம் அரற்றியது.

மலரோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. இவ்வளவு நாள் பாசமாக பார்த்தவள் இப்போது அதை வெறித்தாள். வெறுத்தாள்.

நேரங்கள் நரக அரசனின் கையில் சிக்கிய விட்டதை போல கொடூரமாக நகர்ந்தது. இதயம் திக் திக் என்று அடித்துக் கொண்டே இருந்தது.

கோபமும் ஆதங்கமும் அவளை எரித்தது.

வெளியே ஒப்பாரி சத்தம் அதிகம் கேட்டது. பிணத்தை எடுத்துச் செல்கிறார்கள் என்று புரிந்தது. அக்காவிற்கு இறுதி விடை தராதது அந்த சூழ்நிலையிலும் தவறாகதான் தோன்றியது.

"மாறா.. எனக்கு கொஞ்சம் தண்ணி கொண்டு வா.!" என்றபடி மேஜையின் மீதிருந்த தண்ணீர் குடுவையை எடுத்து பூமாறனிடம் நீட்டினாள் முல்லை. அப்போதுதான் மேஜையில் அவளின் கல்லூரி புத்தகத்தின் இடையிலிருந்தபடி வெளியே பாதி தெரிந்த கடிதம் ஒன்றைக் கண்டாள்.

எடுத்துப் படித்தாள்.

"முல்லை சாரி.." மலர்தான் எழுதியிருந்தாள்.

"இந்தர் உன் மேல ஆசைப்பட்டது தப்புதான். ஆனா நான் இந்தர் மேல ரொம்ப ஆசை வச்சிட்டேன். அவன் என் எல்லாமும். அவன் என்னை எந்த அளவுக்கு பார்த்துக்கிட்டான்னு உனக்கு சொன்னா புரியாது. அம்மா அப்பா மகளை கூட மறந்துட்டேன் நான். அந்த அளவுக்கு அவன் என்னை நேசிச்சான். அவனோட அன்பை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்ல. நீ அவனை விரும்பல. ஆனா அவன் உன்னை விரும்பிட்டான். அவனோட காதலியா மனைவியா நான் என்ன செய்றதுன்னு யோசிச்சி குழம்பிட்டேன். அவனோடு நீ பேசினாலே நான் அழுவேன்னும் தெரியும். அதே சமயம் அவன் உன்னை மணம் முடிக்க முடியாம போய் மனம் உடைஞ்சான்னா அதை என்னால தாங்கிக்க முடியாதுன்னும் தெரியும். அவன் எனக்கு தந்த காதலுக்கு பதிலென நான் என்ன தருவேன்? எதுவுமே தர முடியும்ன்னு தோணல. அட்லீஸ்ட் அவனோட காதலுக்கு நான் தடையா இருக்க கூடாதுன்னாவது புரியுது.."

கடிதத்தை பற்றி இருந்த கரம் இறுகியது.

"நீ பூர்ணிமா மேல பாசம் வச்சிருக்கன்னு தெரியும். நான் செத்துட்டா பூர்ணிமாவுக்காகவாவது நீ நிச்சயம் இந்தரை கல்யாணம் செஞ்சிப்ப.. அவனுக்கு வேறு யாரோ மனைவியா வருவதை விட நீ இருப்பது எனக்கு நிம்மதி. அவன் ரொம்ப நல்லவன் முல்லை.. அவன் லவ்வை இனியாவது புரிஞ்சிக்க.."

முல்லை கலகலவென சிரித்தாள். வயிறு வலிக்கும் அளவிற்கு சிரித்தாள். தண்ணீரோடு அருகே நின்றிருந்த பூமாறனும், அத்தை வாசலை தாண்டி சென்றதை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்த பூபாலனும், பொம்மைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த பூர்ணிமாவும் இவளை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

முல்லைக்கு தன் சகோதரியை நினைத்து வியப்பாக இருந்தது. இதை விட முட்டாள்தனமாய் ஒரு மிருகத்தை கூட பார்க்காதது போல தோன்றியது. இவளை போல யோசிப்போர் வேறு யாராவது பூமியில் இருந்தால் அவர்களும் இன்றே அழிந்து போகட்டும் என்று மனதுக்குள் சாபமிட்டாள்.

'உன் லவ்வை நீ ப்ரூஃப் பண்ண வேற வழியே தெரியலன்னா செத்து போ மலர்.. நான் வேணாம்ன்னா உன்னை தடுக்க போறேன்? உன் காதலனுக்கு சேவை செய்ய நினைச்சா அவனையும் சேர்த்து சாகடிச்சி உன்னோடே கூட கூட்டிப் போ.. இந்த ஊர்ல வேற எவளாவது இந்த சுந்தரனை காதலிச்சி இருந்தா அவங்களை கல்யாணம் பண்ணி வை.. ஆனா நான் ஏன்? எனக்குத்தான் அவனை பிடிக்கலையே.! சட்டபடி தவறான திருமணம், விமர்சனத்துக்கு உள்ளாகும் உறவு.. இதெல்லாம் விடு.. எனக்கு அவனை பிடிக்கலங்கறது எவ்வளவு முக்கியம்ன்னு நீ ஏன் யோசிக்காம போயிட்ட.. நீ செத்தா நான் அவனை கல்யாணம் செஞ்சிக்கணுமா? பூரணிக்காகவா.? பூரணியை வேறு விதமா வளர்த்தவே முடியாதா என்னால.? உன் சல்லாப ஆசைக்காக இவளை இங்கே விட்டுட்டு போன நீ இவ மேல பாசம் இருக்கற மாதிரி ஏன் சீன் போடுற.? ஒரு காரணம். என்னை சம்மதிக்க வைக்க இது ஒரு காரணம் உனக்கு. ரொம்ப நல்ல காரணமாகதான் கையில் எடுத்திருக்க மலர். ஆனா அதை நான் ஏத்துக்குவேனான்னு யோசிக்காம போயிட்டியே..' சிரிப்பு மட்டும்தான் வந்தது முல்லைக்கு.

இந்த கடிதத்தை வெளியே காட்டினால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்த்தாள். நிச்சயம் தன் மீது உள்ள குற்றச்சாட்டை திருப்பி வாங்கிக் கொள்வார்கள் என்று புரிந்தது அவளுக்கு. ஆனால் அதன் பிறகு இந்த கடிதத்தில் உள்ளது போலதான் நடக்கும் என்று அவளுக்கு தெரியும்.

பூர்ணிமாவை காரணம் காட்டி நாகேந்திரனுக்கேதான் தன்னை திருமணம் செய்து வைப்பார்கள் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது. நாட்கள் பல சென்றாலும் கூட இறுதியில் அதுதான் நடக்கும் என்று அவளுக்கு தெரியும்.

இதுவரை எப்படியோ இப்போது மலரை தன் எதிரியாகதான் பார்த்தாள் முல்லை. தன் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் சாத்தான் அவள் என்று நினைத்தாள்.

கணவன் மீது காதல் கொண்டால் அதை அவனோடு வைத்துக் கொள்ள வேண்டும். அந்த காதல் அவ்வளவு சிறப்பு என்று நினைத்தால் இது விடவும் மோசமாக கிறுக்கு தனம் கூட செய்துக் கொள்ளட்டும். ஆனால் தன்னை ஏன் இடையில் இழுத்து சாகடிக்க வேண்டும் என்று மட்டும்தான் யோசித்தாள் அவள்.

சுயநலம் மட்டும்தான் தன்னை இப்போது காப்பாற்றும் என்பதை புரிந்துக் கொண்டாள்.

"அம்மா.. என்ன ஆச்சி?" பூர்ணிமா அவளின் பாவடையை பிடித்து இழுத்துக் கேட்டாள்.

முல்லை கீழே குனிந்து அவளை தூக்கிக் கொண்டாள்.

"பூரணி.!" என்றபடி அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

'இது நமக்கு பொருந்தாத இடம் பூரணி.. இங்கே இவங்க மத்தியில் வாழ்வது ரொம்ப பாவம்.. நாம இங்கே இருக்க வேணாம்.!' என்றாள் மனதோடு.

இரண்டு நாட்கள் சென்றது.

வீட்டில் இருந்த அனைவருமே முல்லையைதான் தவறு சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவளால் அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. செண்பகத்தை தவிர அனைவரும் முறைத்தாள்.

"என் மக செத்துப் போயிட்டா.!" என்று ஒப்பாரி வைத்து அழுதாள் அம்மா‌‌.

இழவு காரியத்தால் இங்கேயே இருந்தார்கள் பெரியப்பா சித்தப்பா குடும்பங்கள். அவர்களின் முன்னால் நடப்பது கூட பெரிய சிரமமாக இருந்தது முல்லைக்கு.

ஐந்தாம் நாள் காரியம் என்று முடிவானது‌. நாகேந்திரனின் குடும்ப வழக்கப்படி மூன்றாம் நாளே காரியம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவனது வீட்டிற்கு பிணத்தை எடுத்துச் செல்ல கூட விடாத அப்பா எப்படி காரியத்தை அவர்கள் வீட்டு வழக்கப்படி நடத்த விடுவார்?

வீட்டிலிருந்த அனைவரும் காரியம் செய்ய கிளம்பினார்கள். முல்லை பூர்ணிமாவோடு வீட்டை விட்டுக் கிளம்பினாள். அவர்கள் அனைவரும் வரும் முன்னால் அங்கிருந்த சென்று விட வேண்டும் என்று புறப்பட்டவளை தென்னந்தோப்பின் இடையில் வழி மறித்தான் நாகேந்திரன்.

"முல்லை.!" என்றான்.

"தூரமா போயிடு.. உன் முகத்துல விழிப்பதே பாவம்.." என்று எரிந்து விழுந்தாள் முல்லை.

"தப்பு என் மேலதான்.!" என்றவனை பார்த்து சிரித்தவள் "அதை ஏன் என் வீட்டுல சொல்லல?" எனக் கேட்டாள்.

"பயமா இருந்தது முல்லை.." என்றவனை வெறித்தவள் "உன்னை போல ஒரு கோழையையும் நான் பார்த்தது இல்ல.. உன்னை போல ஒரு பொய்க்காரனையும் நான் பார்த்தது இல்ல.. என் அக்கா முட்டாள். அவ செத்தது ரொம்ப நல்லது.." என்றாள்.

"நான் பண்ண தப்புக்கு அவ இவ்வளவு பெரிய தண்டனை தருவான்னு நான் நினைக்கவே இல்ல.." என்று தலையில் அடித்தபடி அழுதவனை கண்டு பைத்தியம் போல சிரித்தவள் தன் இடுப்பிலிருந்த லெட்டரை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN