குரங்கு கூட்டம் 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஸ்வேதா அந்த கல்யாண வீட்டை ஆவலோடு பார்த்தாள். அணிந்திருந்த தாவணியில் அழகாய்தான் இருந்தாள். ஆனால் இந்த தாவணி அவளுக்கு புதிது. அது வேறு ஒரு பக்கம் நழுவி விழுவது போலவே இருந்தது.

"விஜி.. நம்மால முடியுமா?" அருகே இருந்தவனை பார்த்துக் கேட்டாள்.

"கண்டிப்பா முடியும் ஸ்வேதா‌‌.. ஒன்னும் இல்ல. இந்த வீட்டுக்குள்ள போறோம்.. இந்த வீட்டிலிருக்கும் பணம் நகையை முழுசா அடிச்சிட்டு கிளம்பறோம்.!" என்றான் விஜி. விஜி ஸ்வேதாவின் நண்பன். சிறு வயதிலிருந்து அனாதைகள் இருவரும். தங்களை காப்பாற்றிக் கொள்வதே அவர்களுக்கான பெரிய வேலை.

ஸ்வேதாவுக்கு லேசாக இதயம் அடித்துக் கொண்டது. இதுவரை திருடாமல் இல்லை.‌ சின்ன சின்ன திருட்டுகள் நிறைய செய்துள்ளனர். ஆனால் பெரிய வீட்டில் பெரிய திருட்டு என்பதால் பயமாக இருந்தது.

"எல்லாம் சுபமே.. நீ வா.!" என்றவன் அவளின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.

முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட் தரையில் அமர்ந்திருந்தார். இருக்கையில் அமர்ந்திருந்த சாமியாரை பார்த்தபடி வணங்கினார். கூட்டம் அவர்கள் இருவரையும் சுற்றி நின்றிருந்தது. எல்லோரும் பெரிய மனிதர்கள்தான்.

"சாமியோட பாதம் எங்க வீட்டுல படுறது எங்களோட புண்ணியம்.." என்றார் வெங்கட்.

கேட்டின் வெளியே நின்றபடி பழைய பாடல் ஒன்றை சத்தம் வராதவாறு பாடிக் கொண்டிருந்தான். முதலில் சில அடியாட்கள் வந்து மிரட்டினார்கள். அவனை அங்கிருந்து போக சொல்லி விரட்டினார்கள். ஆனால் அவன் கண்களையும் திறக்காமல் பாடலை முனகிக் கொண்டே இருந்தான்.

அவனின் தாடியும், மஞ்சள் ஆடையும், விக்கால் முடியப்பட்ட கொண்டையும், திருநீறால் மூழ்கி இருந்த முகமும் அவர்களுக்கு சந்தேகத்தை தந்தது.

வெங்கட்டிடம் சென்று ஒரு சாமியார் வீட்டு வாசலில் அசையாமல் நிற்பதாக சொன்னார்கள்.

போலிஸோடு வெளியே வந்தார் வெங்கட்.

"யாருய்யா நீ?" எனக் கேட்டார்.

"நன் கைலாய மலையில் தவமிருந்த ஞானியாவேன். இங்கே ஒரு நற்காரியம் நடப்பதாகவும், அதற்கு என் ஆசிர்வாதம் தேவை என்றும் உணர்ந்தேன். அதனால் எனது இருப்பிடம் விட்டு இங்கே புறப்பட்டு வந்தேன். உன் மகளுக்கு அல்லவா மணம்? உன் மனம்படி நடக்கும். நான் இங்கிருப்பதை நீ விரும்பவில்லை என்றால் இப்போதே கைலாயம் புறப்படுகிறேன்.!" என்றவன் வடக்கே திரும்பினான். அவன் நகர்ந்த இடத்தில் அவனின் காலடி இருந்த இடத்தில் கடவுள் சிலை போல் ஓவியம் இருந்தது.

அந்த ஓவியத்தை கண்டு ஆச்சரியப்பட்ட வெங்கட் அவசரமாக ஓடிச் சென்று பிரேம்மை பிடித்து நிறுத்தினார்.

"ஐயா உங்களின் பாதம் பார்க்கலாமா?" எனக் கேட்டார்.

பிரேம் ஒற்றைக் காலை தூக்கி நடராஜர் நடனம் ஆடுகையில் தரும் காட்சியை போல தந்தான்.

"அந்த கால் சாமி.." என்றான் வெங்கட்டின் அருகே இருந்த ஒருவன்.

'கூறு கெட்ட குக்கருங்களுங்களா.. அந்த ஓவியத்தை ஒட்டி வச்சிட்டு மேல நின்னேன்டா.. என்னவோ என் கால்ல அச்சு பலகை இருக்கற மாதிரி சோதனை பண்ணி சாகடிக்கறாங்க..' என நினைத்தவன் மறுகாலை தூக்கிக் காட்டினான்.

"ஆகா.. எவ்வளவு வெண்மையான பாதம்.!" ஆச்சரியப்பட்டார் வெங்கட்.

'அடப்பாவிகளா.. படிக்கற பையன் கால் வேற எப்படிடா இருக்கும்?' என்று தனக்குள் புலம்பினான் பிரேம்.

"ஐயா.. உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு தேவை.. இந்த திருமணம் முடியும்வரை எங்களின் வீட்டில் தங்கி உங்களின் ஆசிர்வாதத்தை கொடுங்கள்.." என்று அழைத்தார் வெங்கட்.

'இந்த ஊர்லதான்டா ஒத்தை ஸ்டிக்கரை வச்சி கடவுளா கூட ஆக முடியுது.. ஆனா கடவுளே நீதான்யா பாவம்.. நீ நேர்ல வந்தா ஒருத்தனும் நம்ப மாட்டான்.. ஏனா இங்கே அத்தனை காப்பிங்க இருக்காங்க..' என்று நினைத்தபடியே வெங்கட்டின் வீட்டை நோக்கி நடந்தான்.

வாசலிலேயே நிற்க வைத்து பாலில்‌ அவனின் பாதத்தை அபிஷேகம் செய்தான் வெங்கட்.

'அட பரதேசி..' என நினைத்தவன் எங்கும் வாயை விட்டு விட கூடாது என்று பற்களை கடித்துக் கொண்டான்.‌

இருக்கையில் அமர்ந்திருந்த பிரேம் பல் இளித்தபடி தன் கையிலிருந்த கமண்டலத்திலிருந்த தண்ணீரை வெங்கட்டின் உள்ளங்கையில் ஊற்றினான்.

"அபிஷேக தீர்த்தம்.." என்று வெங்கட்டை சுற்றி இருந்த மற்றவர்களும் கையை நீட்டினார்கள்.

'போர் வாட்டருக்கு இவ்வளவு மதிப்பா?' ஆச்சரியப்பட்டான் பிரேம். ஒட்டுத் தாடி அதற்குள்ளாகவே அரித்தது.

'போலி சாமியாருக்கு உள்ள மரியாதை கூட இந்த வீட்டுக்கு வர போற மாப்பிள்ளைக்கு இல்லாம போயிடுச்சே..' கவலையோடு நினைத்தான்.

சிபியை அணைத்துக் கொண்டாள் மிருதுளா.

"நீ ரொம்ப அழகா இருக்க.. பிரேமுக்கு ஏத்த ஜோடி நீ.!" என்றாள்.

சிபி வெட்கப்பட்டாள். இரண்டு பெண்களும் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் தனக்கு சலிப்பது போலிருந்தது மிருத்யூவிற்கு. தலையிலிருந்து டோப்பாவை கழட்டி வைத்தவன் அங்கிருந்த கட்டிலில் மல்லாந்து விழுந்தான்.

அந்த அறையில் செல்வ செழிப்பு கொட்டிக் கிடந்தது. பெரிய ஜன்னலின் வழி காற்று வீசியது. ஏசி ஒரு பக்கம் குளிர் காற்றை தந்துக் கொண்டிருந்தது. எங்கிருக்கிறது என்று தெரியாத இடத்திலிருந்து மேற்கத்திய இசை பூக்காற்றுப் போல கசிந்துக் கொண்டிருந்தது. அங்கிருக்கும் கரடி பொம்மைகள் கூட வித்தியாசமாகதான் இருந்தது.

கட்டிலிலும் ஒரு கருப்பு கரடி பொம்மை இருந்தது. மிருத்யூ அந்த பொம்மையை தன் அருகே தூக்கி வைத்துக் கொண்டான்.

"எனக்கு தூக்கம் வர மாதிரி இருக்கு மிருது.. அப்புறமா எழுப்புறியா?" எனக் கேட்டான் அங்கிருந்த போர்வையை உதறி போர்த்தியபடி.

"மாமனார் வீட்டுக்கு விருந்து வந்தவன் கூட உன்னை போல அசால்டா இருக்க மாட்டான்.. பைத்தியக்கார பயலே.. எழுந்துப் போய் இவங்க அம்மா சித்தியோடு பழகுடா.!" என்று திட்டினாள் மிருதுளா.

மிருத்யூ எழுந்து அமர்ந்தான்.

"நான்தான் ஊமையாச்சே.. நான் என்னன்னு பேசுவேன்.. இவங்க அம்மா சித்தியோடு பிரெண்ட் பிடிக்கறது உன் வேலை.!" என்றவன் மீண்டும் தலையணையில் விழுந்தான்.

"இந்த கட்டில்ல நல்லா தூக்கம் வருது மிருது.. நீயும் வந்து தூங்கு.!" என்றான் விழிகளை மூடியபடி.

சிபி அவனை கலவரமாக பார்த்தாள். அவளின் கையைப் பற்றினாள் மிருதுளா. மிருதுவாக இருந்தது கரம். தனக்கு இப்படி இல்லையே என்று சற்று மனம் வருந்தினாள்.

"நீ பயப்படாத சிபி.. நாங்க உன்னை வெளியே கூட்டிப் போறோம்.. நீயும் பிரேமும் லவ் பண்றது உங்க வீட்டுல யாருக்காவது தெரியுமா?" எனக் கேட்டாள் மிருதுளா.

இல்லையென தலையசைத்த சிபி "பிரேம் கூட்டி போவாங்கற நம்பிக்கையில்தான் நான் இன்னும் சூஸைட் பண்ணிக்காம இருக்கேன்.!" என்றாள்.

"அச்சோ.." சிபியின் தலையை வருடி விட்டாள் மிருதுளா.

"இப்படி சொல்ல கூடாது சிபி.. அப்பவாவது உனக்கு ஒரு காதலன்.. ஆனா இப்ப‌.."

"ஏஏஏஏ.." எழுந்து அமர்ந்து சகோதரியை தடுக்க முயன்றான் மிருத்யூ.

"அட பக்கி.. நான் இப்ப இவளுக்கு மூணு பிரெண்ட்ஸ்ம் இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்‌.!" என்று முடித்தாள் மிருதுளா.

"ஓ..!" என்றவன் மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

அர்விந்தின் கண்களில் வழிந்தது ஆறா, அருவியா என்று அவனுக்கே தெரியவில்லை. புறங்கையால் துடைக்க துடைக்க கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் நெருப்பாக எரிந்தது.

'அவன் லவ் பண்ணதுக்கு நான் அழ வேண்டியதா இருக்கே ஆண்டவா.!' என்று புலம்பினான்.

"டேய் தம்பி இங்கே வாடா.." சொக்கு அழைத்தான்.

தன் முன் இருந்த வெங்காய தட்டை நகர்த்தி வைத்துவிட்டு எழுந்து வந்தான்.

"இந்த ஜூஸை கொண்டுப் போய் சாமியாருக்கு கொடுத்துட்டு வா.." என்றார் அவர்.

அர்விந்த் புரியாமல் அவரை பார்த்தான்.

"இதே வழியில் போ.. உள்ளே மஞ்ச டிரெஸ்ல ஒரு சாமியார் இருப்பாரு.. அவருக்கு இதை கொடுத்துட்டு வா.. கொஞ்சம் நல்லா சிரிச்சபடி கொடுத்துட்டு வா.. அப்போதான் நாளைக்கு நமக்கு நல்ல வரமா தருவார் அவரு.." என்றார் சொக்கு.

அர்விந்த்க்கு கடுப்பாக இருந்தது. குளிர்பானத்தோடு உள்ளே நடந்தான். ஹால் பெரியதாக இருந்தது. ஆங்காங்கே பலர் அமர்ந்திருந்தார்கள். இந்த வீட்டின் முன் திருமண மண்டபம் தோற்றுவிடும் என்று தோன்றியது அவனுக்கு.

சிலர் கூடியிருக்க சோபா ஒன்றில் தனியாளாக அமர்ந்திருந்தான் பிரேம். கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தான். குளிர்பானத்தை கொண்டுச் சென்று அவனின் தலையில் ஊற்றி வேண்டும் போல கோபம் வந்தது அர்விந்த்க்கு. ஆனால் பிரேம்மை மட்டும் பார்த்துக் கொண்டு நடந்தவன் தன் மீது வந்து மோதிய உருவத்தை கவனிக்காமல் போய் விட்டான். மொத்த குளிர் பானமும் அவன் மீது மோதிய ஸ்வேதாவின் மீது கொட்டியது.

"அச்சோ.." அதிர்ந்துப் போய் விலகி நின்றாள் ஸ்வேதா. ஹாலில் இருந்த மொத்த பேரும் இவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்தார்கள்.

"சாரி மேடம்.. சாரி.." அவசரமாக சொன்னான் அர்விந்த்.

"இட்ஸ் ஓகே.!" நிமிர்ந்துப் பார்த்து சொன்னவளை கண்டதும் தான் எங்கோ விழுவது போலிருந்தது அவனுக்கு.

'என்னவோ பத்திக்குது.. என்னவோ வொர்க் ஆக ஆரம்பிக்குது..' அவனுக்குள் ஒரு குரல் கேட்டது.

அந்த வீடும் சுற்றி, அந்த ஹாலும் சுற்றுவது போலிருந்தது. அவளையும் தன்னையும் யாரோ ரங்க ராட்டினத்தில் வைத்து சுழற்றுவது போலிருந்தது. அவளின் கைப்பற்ற ஆசை வந்தது. பயந்திருந்த அவளின் விழிகளில் வாழ்க்கை பாடம் படிக்க வேண்டும் என்று வெறி வந்தது.

சினிமாவில் மட்டுமே பார்த்த தாவணி பெண்ணை இன்று நேரில் பார்த்து விட்டதன் காரணமோ என்னவோ அவனுக்கு அவளை பிடித்திருந்தது. அவளின் கழுத்தை வைத்து கதை எழுத வேண்டும் போலிருந்தது. அவளின் கன்னத்தில் முத்த எழுத்தில் கவிதை எழுத ஆசை வந்தது.

'சேனல் ஓபன் ஆகிடுச்சி அர்வி.. உன் காதல் சேனலுக்கு சாட்டிலைட் கனெக்சன் கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு.!' உள்ளுக்குள் துள்ளியது அவனின் மனம்.

"யார்டா நீ?" யாரோ காதோரத்தில் கத்தவும் ரங்க ராட்டினம் நின்றுப் போனது அர்விந்துக்கு. அருகில் அரை மலை உயரத்தில் ஒருவன் நின்றிருந்தான்.

"நான்.. சமையல்காரங்க.!" என்றான் கையிலிருந்த காலி கோப்பையை காட்டி.

"இந்த பொண்ணு யாரு?" எனக் கேட்டபடி அங்கே வந்தாள் சிபியின் சித்தி ரூபாவதி.

சிபியின் பாட்டி எங்கிருந்தோ வந்தாள். ஸ்வேதாவின் பக்கம் நின்றாள்.

"என் கிராமத்துல இருந்து வந்திருக்கா.. என் அக்காவுக்கு பேத்தி.. இவ அண்ணனும் வந்திருக்கான்.. நான் போய் கூப்பிட்டபோது கல்யாணத்துக்கு வர முடியாதுன்னு சொன்ன என் அக்கா இவங்க இரண்டு பேரையும் அனுப்பி விட்டிருக்கா.." என்றாள் சந்தோஷத்தோடு.

பாட்டியின் பின்புலம் விசாரித்துக் கொண்டு வீடு வந்தது நல்லது என்று தோன்றியது ஸ்வேதாவுக்கு.

"ஓ.. அப்படியா.? சரி நீ போம்மா.. போய் டிரெஸ்ஸை மாத்திக்க.." என்ற சித்தி ரூபாவதி "யாருய்யா இந்த கண்ணு போனவனையெல்லாம் இங்கே விட்டது?" என்று கத்தினாள்.

மஞ்ச காட்டு மைனா தன்னை விட்டு பறந்து போன சோகத்தில் இருந்த அர்விந்த்க்கு ரூபாவதியின் கத்தல் பெரியதாக தோன்றவில்லை.

"விடுங்கள் தாயே.. சிறு பையன் தவறிழைத்தால் மன்னிப்பது அல்லவா இந்த தேவியின் குணம்?" கையை ஆசிர்வதிப்பது போல முத்திரை காட்டியபடியே கேட்டான் சாமியார்.

ரூபாவதிக்கு இவ்வளவு நேரமும் இந்த சாமியாரின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் இப்போது இவ்வளவு தணிவாய் பேசி விடவும் சற்று இடறி விட்டாள்.

"போ.. போய் வேற ஜூஸ் கொண்டு வா.." என்ற ரூபாவதி தரையை கண்டுவிட்டு "இதை யாராவது க்ளீன் பண்ணுங்க.." என்றாள்.

சொக்கு நன்றாக காய்ந்து எடுத்துவிட்டு மீண்டும் குளிர்பானத்தை தந்து அனுப்பினார்.

அர்விந்த்க்கு யாரோ தன்னை வலுக்கட்டாயமாக இந்த உலகத்திற்குள் இழுத்து விடுவது போலவே இருந்தது.

குளிர்பானத்தை கொண்டுச் சென்று சாமியாரிடம் நீட்டினான்.

"நலம் வாழ்க மகனே.!" என்றபடி குளிர்பானத்தை கையில் எடுத்தான் பிரேம்.

"நீ விளங்கவே மாட்டடி.." என்று சாமியாருக்கு மட்டும் கேட்கும்படி சொன்ன அர்விந்த் அங்கிருந்து நகர்ந்தான். பிரேம் புரை ஏறிய தன் தலையை தட்டிக் கொண்டான்.

"என் வீட்டில் இன்னும் அதிக செல்வம் நிரம்ப வழி உள்ளதா ஐயா?" எனக் கேட்டபடி பிரேம்மின் காலை பிடித்து விட்டார் வெங்கட்.

'என் மாமனார்தான் எவ்வளவு அழகா காலை பிடிச்சி விடுறாரு? உனக்கு கொடுத்து வச்சிருக்கு பிரேம்..' பெருமைப்பட்டுக் கொண்டான்.

ஒரு குட்டி தூக்கம் தூக்கி எழுந்து விட்டான் மிருத்யூ. அவன் கண் விழித்தபோது சிபி மட்டும் அங்கே இருந்தாள்.

"அந்த குரங்கு எங்கே?" எனக் கேட்டவனை திரும்பி பார்த்தவள் "அவங்க என் அம்மாவை மீட் பண்ண போயிருக்காங்க.." என்றாள்.

"ஓ.." என்றபடி கட்டிலை விட்டு இறங்கி கீழே நின்றவன் உடைகளை சரி செய்துக் கொண்டான்.

"இந்த டிரெஸ் எனக்கு சுத்தமா செட் ஆகல சிஸ்டர்.. கசகசன்னு இருக்கு‌.. ஏசியிலயும் வேர்க்குது.." என்றவன் பெரிய கொட்டாவியாக விட்டான்.

"நீங்க எழுந்தா உங்களை கீழே வர சொன்னாங்க மிருது. அம்மாவோடும் சித்தியோடு பேசி பழகணும்ன்னு சொன்னாங்க.." என்றாள் சிபி.

மிருத்யூ சோகமாக விக்கை தேடி எடுத்து தலையில் வைத்துக் கொண்டான்.

"நீங்க தனியா இருந்துப்பிங்களா?" எனக் கேட்டான்.

புன்னகைத்தவள் மேலும் கீழுமாக தலையசைத்தாள்.

"உங்களுக்காக ஊமையா, இப்படி ஒரு கெட்டப்ல எல்லாம் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.. நாளைக்கு என் கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை வந்தா அவனை துணைக்கு அனுப்பி விடுங்க.. கல்யாணம் ஆன உடனே நட்பை துண்டிச்சாதான் சோறுன்னு சொல்லிடாதிங்க.." என புலம்பியபடியே வெளியே நடந்தான்.

மாடியிலிருந்து கீழே செல்லவே ஐந்தாறு இடத்தில் படிக்கட்டுக்கள் இருந்தன.

"நல்லா கொள்ளையடிச்சிருப்பான் போல." என முனகியபடி படிகளில் இறங்கிய மிருத்யூ முதல் படியிலேயே கால் இடறி முன்னால் சரிந்தான். சாய்ந்தான்.

படிக்கட்டுக்களின் கைப்பிடியை பற்ற முயன்றான். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தலை காலி என அவன் நினைத்த நேரத்தில் அவனை தாங்கி பிடித்தது இரு கரங்கள். கரமா இரும்பு தூணா என்று சந்தேகமாக இருந்தது.

நிமிர்ந்துப் பார்த்தான். அவனை விட ஓரடி உயரமாக இருந்தான் எதிரில் இருந்தவன். அவனின் கையை பார்க்கவே பயமாக இருந்தது. ஜிம்மிலேயே நிரந்தரமாக குடியிருப்பான் போலிருந்தது. நரம்புகள் அனைத்தும் புடைத்துக் கொண்டிருந்தது. அவனின் முகம் மிருத்யூவின் பாட்டி ஊரில் உள்ள அய்யனாரின் முகத்தை போல இருந்தது. பயத்தை தந்தது. கண்கள் மட்டும் குட்டியாக இருந்தது. இதழ்கள் கடினமாக இருந்தது. 'யாரோ பாக்ஸர்.. இவனை ஏன்டா சைட் அடிக்கற.?'

"ஆர் யூ ஓகே?"

'குரலே கொடூரமா இருக்கே ராசா.!'

மிருத்யூ தலையசைத்தான். எதிரில் இருந்தவன் இவனை விழுங்குவது போல பார்த்தான்.

"பயப்படுறிங்களா?

மிருத்யூ என்ன பதில் சொல்வதென்று மறந்து விட்டான்.

"நீங்க அழகா இருக்கிங்க.!"

மிடறு விழுங்கினான் மிருத்யூ. 'ச்சை.. கருமம் பிடிச்சவனே.. அவன் பையன்டா.!' தன்னிடமே சொல்லிக் கொண்டவன் அவனிடமிருந்து விலகி நின்றான்.

"நான் சித்தன்.. சித்துன்னு கூப்பிடுங்க.." என்று கையை நீட்டியவன் "நீங்க?" எனக் கேட்டான்.

மிருத்யூ விழித்தான். கைகளை கூப்பி வணங்கினான். சித்து ஆச்சரியமாக பார்த்தான். அவனும் வணக்கம் சொன்னான்.

"நீங்க யார்ன்னு சொல்லல.." என்றான் விழிகளை உருட்டியபடி.

மிருத்யூ தரை பார்த்தான்.

"வெ.. வெட்கப்படுறிங்களா?" எனக் கேட்ட சித்துவிற்கு தன் வார்த்தைகள் தந்தியடிக்கும் காரணம் புரியவில்லை.

மிருத்யூ நிமிர்ந்தான்.

அவளின் விழிகள் என்னவோ சொல்வதை போல உணர்ந்தான் சித்து. ஆனால் என்னவென்று விளங்கவில்லை. ஆனால் கண்டறிய ஆசைக் கொண்டது மனம்.

"அண்ணா.. அவ என் பிரெண்ட்.." என்றபடி அவர்களின் அருகே வந்தாள் சிபி.

சித்து அவளை பார்த்துவிட்டு இவளின் புறம் திரும்பினான்.

"ஓ.. நீங்க சிபியோட பிரெண்டா? நீங்க எங்கே.. நம்மூரா இல்ல டெல்லியா?" எனக் கேட்டான்.

மிருத்யூ சங்கடமாக சிபியை பார்த்தான்.

"அண்ணா.." சித்துவின் கையை கிள்ளினாள் சிபி. "அவளால வாய் பேச முடியாது.. அவ ஊமை!" என்று அண்ணனின் காதோரம் சொன்னாள்.

சித்து பரிவோடு மிருத்யூவை பார்த்தான்.

"இவ்வளவு அழகான பொண்ணுக்கு இப்படி ஒரு குறையா?" என்று உச்சு கொட்டினான்.

"அண்ணா.. பொண்ணுங்க முன்னாடி இப்படியா பேசுவ?" என்று அண்ணனை திட்டினாள்.

"உங்களுக்கு ஏதாவது தேவையா.. மிஸ்.." அவளின் பெயர் தெரியாமல் தங்கையின் பக்கம் பார்த்தான்.

"மிருணாளினி.." சிபி சொன்னது கேட்டு வியந்தான் மிருத்யூ. 'வாவ்.. என் பேர் அழகா இருக்கு.!' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

"அழகான பொண்ணுக்கு அழகான பெயர்.." என்றான் சித்து.

'இவன் முன்னாடி நின்னா கண்ணாலயே என்னை களங்கப்படுத்திடுவான்.. நான் தப்பிச்சிடுறேன்.!' என நினைத்துக் கொண்டவன் சிபியிடம் தாகம் எடுப்பது போல கை சைகை காட்டினான்.

சித்து வியந்து அவனுக்கு வழி விட்டு நின்றான்.

"நீங்க போங்க மிருணா.. கீழே நேரா போய்‌ ரைட் கட் பண்ணி லெப்ட்ல திரும்பினா வீட்டோட கிச்சன் வரும்.!" என்றான்.

மிருத்யூ அவனை ஒட்டும் ஒட்டாமல் தாண்டி நடந்தான்.

"அண்ணா.. என் மானத்தை வாங்கற நீ.. கொலை பண்றதுக்கு மனசு தயங்கறது இல்ல.. இப்ப என் பிரெண்ட் முன்னாடி ஜொள்ளு விடவும் தயக்கம் இல்ல உனக்கு.!" என்றாள்.

சித்து தன் நெஞ்சின் மீது கை பதித்தான்.

"இதுநாள் வரை இப்படி இருந்தது இல்ல சிபி.. என்னவோ பண்ணுது மனசு.." என்றவனை திகிலாக பார்த்தவள் 'அடப்பாவி அது பையன்டா.. ஏன்டா இப்படி பண்ற?' என்று உள்ளுக்குள் கேட்டாள்.

படிகளை பார்த்தபடி நின்றிருந்த சித்து நிமிர்ந்தான். எதிரே இருந்த படிகளில் ஒரு சல்வார் பெண் துள்ளிக் கொண்டு ஏறுவதை கண்டு அதிர்ந்தான்.

"அது மிருணாளினியா?" எனக் கேட்டான் கை காட்டி.

சிபி மறுப்பாக தலையசைத்தாள்.

"அது மிருதுளா.. மிருணாளினியோட டிவின்.. தயவு செஞ்சி என் மானத்தை வாங்காத அண்ணா.. போய் உன் துப்பாக்கி குண்டுகளை சரி பார்க்கற வேலையை மட்டும் பாரு.!" என்றவள் அங்கிருந்து திரும்பிப் நடந்தாள்.

சித்து எதிரே சென்றுக் கொண்டிருந்த மிருதுளாவை வியப்போடு பார்த்தான்.

"இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க.. ஆனா மிருணா அழகு அவ இல்லன்னுதான் தோணுது.!" என்று முனகினான்.

சிபி தனது அறைக்கு வந்தாள். அவளுக்கு மிருத்யூவை நினைத்து பரிதாபமாக இருந்தது‌. அண்ணன் அவனை கடத்தி வைத்து கட்டாயப்படுத்தி.. மேற்கொண்டு யோசிக்க கூட பயமாக இருந்தது. திருமணத்திற்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தது. அதுவரை அவளாலும் வெளியே செல்ல முடியாது. மற்றவர்களும் வெளியேற முடியாது.

பிரேமின் நினைவு வந்தது. என்ன செய்கிறானோ என்று கவலைப்பட்டாள். போனை எடுத்தாள். அவனுக்கு செய்தி அனுப்பலாம் என அவள் நினைத்த நேரத்தில் அவளின் அறை வாசலில் நிழல் ஆடியது. திரும்பிப் பார்த்தாள். சாமியாரோடு வந்திருந்தார் அவளின் அப்பா.

"சாமிக்கு நம்ம வீட்டை சுத்தி காட்டிட்டு இருக்கேன் சிபி.. வந்து இவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க.!" என்றூ அழைத்தார் அவர்.

சிபி வந்தாள். கையெடுத்து வணங்கினாள். பிரேம் கண்ணடித்தான்.

'பொறுக்கி பைய.!' என நினைத்தவளின் கழுத்தில் கை பதித்தான் வெங்கட்.

"கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கு.." என்று பிரேமின் காலில் அவளை விழ வைத்தார்.

சிபிக்கு கடுப்பாக இருந்தது.

'குரங்கு பையன்.. என்னையே கால்ல விழ வச்சிடானே.!' என்று கருவினாள்.

'கல்யாணத்துக்கு முன்னாடியே என் பொண்டாட்டி என் கால்ல விழுந்துட்டா.!' என்று மனதுக்குள் பெருமை கொண்டவனின் காலை பிடித்து கிள்ளி வைத்தாள் சிபி.

"அம்மா.." கத்தியவனை திரும்பி பார்த்தார் வெங்கட்.

"அம்மா.. நீ எப்போதும் தீர்க்காயுசோடு இருக்கணும் அம்மா.." என்று சிபியை ஆசிர்வாதம் செய்தான். அவளின் தோளை பற்றி எழுப்பினான்.

"மனம் போல் மாங்கல்யம் அமையட்டும்.!" என்றான்.

அப்பா அவனை அழைத்துக் கொண்டு சென்ற பிறகு சிபி அறையின் கதவை சாத்தினாள்.

"ஆண்டவா.. நானும் என் பிரேமும் அவனோட பிரெண்ட்ஸும் இந்த வீட்டை விட்டு பத்திரமா வெளியே போகணும்.. எங்க அப்பாவோட அருவாளுக்கோ, என் அண்ணனோட துப்பாக்கிக்கோ, சம்பத்தோட கையிலயோ நாங்க செத்துப் போக கூடாது.. காப்பாத்தி விடுப்பா.!" என்று வேண்டினாள்.

அதே நேரத்தில் சிபியின் அறை நோக்கி நடந்துக் கொண்டிருந்த மிருதுளா இடையில் இருந்த அறைகளை பார்த்தபடியே கடந்துக் கொண்டிருந்தாள்.‌

அனைத்து அறைகளும் பூட்டிதான் இருந்தன. திறந்திருந்த அறைகளும் காலியாகதான் இருந்தன. ஆனால் சிபி அறைக்கு இரண்டாவது அறையாக இருந்ததில் இருந்து வெளியே வந்தான் ஒருவன்‌ இவளை கண்டதும் அவசரமாக உள்ளே சென்றான்.

"ஒரு நிமிசம்.. நில்லுங்க!" அழைத்து நிறுத்தினாள்.

அவன் பற்களை கடித்தபடி இவள் புறம் திரும்பினான். 'போயும் போயும் இந்த லூசுக்கிட்ட மாட்டிக்கிட்டியே ராகுல்..' என்று சலித்துக் கொண்டான்.

"உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்.." என்று தாடையில் விரல் பதித்து யோசிக்க ஆரம்பித்தாள் மிருதுளா.

'ஹப்பா.. லூசுக்கு ஞாபகம் இல்ல..' என்று நிம்மதியடைந்தவன் "என்னை நீங்க இங்கே எங்கேயும் பார்த்திருக்க முடியாது. நான் நேத்தேதான் தெலுங்கானாவுல இருந்து வந்தேன். என் பிரெண்ட் சம்பத்தோட மேரேஜ்க்கு வந்திருக்கோம்.. நீங்க யார்?" எனக் கேட்டான்.

மிருதுளா யோசனையோடு அவனை தலை முதல் கால் வரை பார்த்தாள். அடையாளம் பிடிப்படவில்லை.

"நான் மிருதுளா.. சிபியோட பிரெண்ட்.!" என்றவளை சந்தேகமாக பார்த்தான் அவன்.

"ஓகே.!" என்றவள் சிபியின் அறைக்கு நடந்தாள்.

யோசனையோடு உள்ளே வந்த ராகுல் கதவை தாளிட்டான்.

"யார் அவ?" எனக் கேட்டான் இருக்கையில் அமர்ந்திருந்த ஜீவன்.

"என் ஸ்கூல் ஜூனியர்.!" என்றவனின் முகத்தில் குழப்ப முடிச்சிகள் அதிகரித்தது.

"இவளுக்கு எப்படி சிபி பிரெண்டாக முடியும்? என்னவோ இடிக்குது.. இவளும் சிபியும் பிரெண்ட்டாக சான்ஸே இல்ல.!" என்றான்.

ஜீவன் எழுந்து வந்தான். ராகுலின் தோளில் கையை வைத்தான்.

"நமக்கு எதுக்கு அந்த விசயம் ராகுல்? நாம இங்கே உளவு பார்க்க வந்திருக்கோம். சம்பத்தை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம். நம்மோட வேலையை மட்டும் பார்க்கலாம்.."எ‌ன்றான்.

ராகுல் புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான். இவ்வளவு ரிஸ்க் எடுத்து பொய் சொல்லி வீட்டுக்குள் வந்தது சிபியின் நட்பை பற்றி ஆராய இல்லை. காவல்துறை அதிகாரியாய் தனது கடமையை ஆற்ற வந்திருக்கிறான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN