பௌர்ணமி 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கடிதத்தை படித்து விட்டு தரையில் விழுந்தான் நாகேந்திரன்.

அவனுடையது பேராசை. மலர் காட்டிய அன்பு அத்தகையது. அவள் தன் காதலால் அவனில் பாதியாய் கலந்து விட்டாள். அவளின் காதல் தந்த போதை அவனுக்குள் இன்னும் ஆசையை தூண்டி விட்டது. இதே போல முல்லையும் தன்னை காதலித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து விட்டான். முல்லையின் அழகும் அவனை ஆசை கொள்ள வைத்தது. மலர் தனது ஆசைக்கு குறுக்கே நிற்க மாட்டாள் என்று கண்களை மூடிக் கொண்டு நம்பினான். ஆரம்பத்தில் யாராவது சலசத்தாலும் கூட போகிற போக்கில் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பினான். ஆனால் ஆசையின் அடித்தளமே உடைந்து போகும் என்று அவன் நினைக்கவேயில்லை.

மலர் மரணித்ததை விடவும் அவள் மரணத்தின் காரணம்தான் அவனை அதிகம் சுட்டு விட்டது. கடைசி வரையிலும் அவளின் காதல் உச்சத்தில்தான் இருந்தது. அவளின் காதலுக்கு தான் தகுதியே இல்லாதவன் என்பதை இப்போதுதான் உணர்ந்தான். தடையாய் இருக்க மாட்டாள் என்று நினைத்தான். ஆனால் அவளோ தன் உயிரை தந்து அவனின் இரண்டாம் காதலுக்கு வழி வகுத்து தர நினைத்து விட்டாள். அதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

"மலர்.." என்று வாய் வலிக்க கத்தினான்.

முல்லை தன் தோளில் இருந்த பூர்ணிமாவை இந்த பக்கம் திரும்ப விடாமல் கழுத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

"நீ இப்படி செய்வன்னு நான் நினைக்கலையே.. நீ இல்லாம இனி நான் எப்படி வாழ்வேன்? இந்த முட்டாளுக்கு காலம் போன கடைசியிலா புத்தி வரணும்?" தலையில் அடித்துக் கொண்டு அழுதான்

முல்லை‌ அவ்விடத்தை நடந்தாள்.

"முல்லை.." அழுதபடி அழைத்தவனை திரும்பிப் பார்த்தாள்.

"உன் பேராசையால் அவ செத்தா.. ஆனா நான் இங்கேயே இருந்து உன் ஆசைக்கும் அவ ஆசைக்கும் வழி போட்டு தருவேன்னு நினைக்காத.!" என்றவளை பார்த்தபடி எழுந்து நின்றவன் கை கூப்பினான்.

"என் மேலதான் தப்பு.." என்றவனை பார்த்து சிரித்தவள் "அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா என் அக்கா மேல அதை விட அதிக தப்பு இருக்கு. என்னை அவ நம்பல.. நீ மயங்க நான் ஏதோ ஒரு விதத்துல காரணமா இருந்திருக்கேன்னு நம்பிட்டா.. எனக்கும் மனசு அதுல ஆசையெல்லாம் இருக்குன்னு அவ யோசிக்காம போயிட்டா.. நீ செஞ்ச ஒத்தை சத்தியத்தால என் குடும்பமே என்னை நம்பாம போயிடுச்சி. உன் மனசுல ஆசை வந்ததால என் கூட பொறந்தவளே என்னை நம்பாம போயிட்டா.. ஆனா நான் யார்ன்னு உங்க யாருக்கும் தெரியல. நான் முல்லை.. உன் ஆசையோ உன் பொண்டாட்டி ஆசையோ ஒன்னு கூட நடக்காது.. எந்த பிள்ளையை காரணம் காட்டி செத்தாலோ அதே பிள்ளையை என்னால வளர்க்க முடியும். இங்கே இருந்து குடும்பம் தர அழுத்தத்தால இன்னும் பத்து வருசம் கழிச்சி கூட உன் தாலியை என் கழுத்துல சுமக்க வேண்டிய நிலை வந்தாலும் வந்துடும். ஒரு சதவீத வழி கூட நான் இதுக்கு போட்டு‌ தர மாட்டேன். உனக்கு பொண்டாட்டி ஆகறதை விட நான் இப்பவே சன்னியாசி ஆகிட்டு போயிடுவேன்.. நீயும் அவளும் சுயநலவாதிகள். உங்க காதலுக்காக என்னையும் என் மக வாழ்க்கையையும் அழிச்சிட்டிங்க.. ஆனா நாங்க வாழ்வோம். உங்களோட பேராசைக்கு பழியாகாம நிம்மதியா வாழ்வோம்.. பின்னாடி வந்துடாத.. அப்புறம் நான் உன்னை கொன்னுடுவேன்.!" என்று எச்சரித்தவள் அங்கிருந்து திரும்பி நடந்தாள்.

நாகேந்திரன் மீண்டும் மண்டியிட்டான். நடந்துச் சென்றவளின் கொலுசு சத்தம் அவனுக்கு மரண இசை போல கேட்டது. அவளின் தோளில் இருந்த பூர்ணிமா உறங்கி விட்டிருந்தாள். கலங்கும் கண்களோடு அவர்கள் இருவரையும் பார்த்தவனுக்கு பூமிக்குள் இப்போதே புதைந்து விட வேண்டும் என்று இருந்தது.

முல்லை தன் முன் வந்து நின்ற பேருந்தில் ஏறினாள். ஏழெட்டு பேருந்துகள் மாறினாள். இரவிலும் பயணம் செய்தாள். பகலில் பூரணிக்கு உணவு வாங்கி ஊட்டி விட்டாள். தானும் உண்டாள்.

தான் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து வெகு தொலைவு வந்து விட்டாள். கையிலிருந்த பணத்தை வைத்து நல்ல காம்பவுண்ட் ஒன்றில் வாடகை வீடு பிடித்தாள். அங்கிருந்த அனைவரும் அவளோடு நன்றாக பழகினார்கள்.

'கணவன் இறந்து விட்டான். பிள்ளைக்காக மறுமணம் செய்து வைக்க முயன்றார்கள். அந்த திருமணம் பிடிக்காமல் நான் ஓடி வந்து விட்டேன்.!' என்று கதை சொன்னாள். அவர்களும் இவளை நம்பினார்கள். இவளிடம் அனுசரணையாக இருந்தார்கள்.

முல்லையை காணாமல் அவளின் வீட்டில் அனைவரும் புலம்பினார்கள். மலர் இறந்ததும் மனதின் குற்ற உணர்வு தாங்காமல் அவள் ஓடி விட்டதாக பெரியப்பா சித்தப்பா குடும்பத்தினர் பழி போட்டார்கள். முல்லை தனியாக செல்லாமல் பூர்ணிமாவோடு சென்றது இன்னும் அதிக வம்பை இழுத்து விட்டு விட்டது. ஆனாலும் கூட அந்த விசயத்தில் யாராலும் பெரிய முயற்சி எடுக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அவளை திட்டிய அப்பாவும் கூட இப்போது நாகேந்திரனையே திட்டினார். நாகேந்திரன்தான் சிறு பிள்ளை மனதில் நஞ்சை விதைத்து இப்படி ஒரு அவச்சொல்லை வாங்கி தந்து விட்டதாக சொன்னார்.

அந்த சமயத்தில் நாகேந்திரனும் மலரின் வீட்டோடு வந்து விழுந்து விட்டான். அவள் பிறந்த இடம், வளர்ந்த இடம், இறந்த இடம் என்று அவன் சுத்தி வர பல காரணங்கள் இருந்தது. ஆனால் அவனை ஏற்றுக் கொள்ளத்தான் அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு மனம் வரவில்லை.

பெரியப்பா சித்தப்பா குடும்பத்திற்கு தெரியாமல் அவனை அடித்து துரத்தினான் மரிக்கொழுந்து. ஆனால் அவனோ மீண்டும் இங்கேயேதான் வந்தான். பைத்தியம் போல இருந்தான் அவன். அவனின் பெற்றோரும் அண்ணன் தம்பிகளும் இழுத்து சென்று பார்த்தார்கள். ஆனால் அவன் மீண்டும் இங்கேயேதான் வந்தான். அதற்கும் இந்த வீட்டின் மேலேயேதான் பழி விழுந்தது.

பழி சொற்களை கேட்டு கேட்டு சலித்து போன முல்லையின் குடும்பத்தார் சில காலங்களுக்கு பிறகு அந்த பழிச் சொற்களை அந்த காதில் வாங்கி இந்த காதில் விட ஆரம்பித்து விட்டார்கள்.

நாகேந்திரன் இந்த சமயத்தில் மேலும் கோழையாகதான் மாறி விட்டிருந்தார். தன் மீது உள்ள தவறை வெளிச் சொல்ல பயந்தார்.

முன்பாவது வெறும் பொய் காதல் மட்டும்தான். இப்போது அந்த பொய் காதலால் ஒரு உயிரே பழி ஆகி உள்ளது. அதனால் அவருக்கு வாய் திறக்க பயம். மலரிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று அவருக்கு தெரியவில்லை. அதனால் அவளின் கல்லறையிலும் வீட்டிலும் பழியாய் கிடந்தார்.

பாலாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த நாகேந்திரனை பிடிக்கவில்லை. சிறு பிள்ளை அவனுக்கு எப்படி உண்மை தெரியும்? முல்லையின் காதலால்தான் மலர் அத்தை இறந்தாள் என்று நம்பினான். முல்லையையும் வெறுத்தான். அவள் பூர்ணிமாவை தூக்கிச் சென்று இருக்க கூடாது என்று கூட நினைத்தான்.

ஆனால் பூமாறன் மனம் வாடி இருந்தான். கோபுவுக்கு காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்த அத்தைக்கு நாட்டு ரோஜாவை பறித்து வந்து தந்திருக்கிறான் அவன். அந்த காதல் கடிதத்தை கோபுவுக்கு கொண்டு சென்று தந்து விட்டு அவன் தந்த சாக்லேட்டை சுவைத்தபடி வீடு திரும்பி இருக்கிறான். சற்று வளர்ந்த பிறகு அவனால் யூகிக்க முடிந்தது. யார் மீது தவறு என்று கணக்கிட முடிந்தது. நாகேந்திரனின் பேராசையால்தான் மலர் அத்தை இறந்தாள் என்றும், முல்லை அத்தை ஓடிப் போனாள் என்றும் அவனால் யூகிக்க முடிந்தது. மற்ற யாரையும் விட நாகேந்திரனை அதிகம் வெறுத்தது அவன்தான்.

கால போக்கில் முல்லையின் தாயும் தந்தையும் இறந்தார்கள். அவ்விசயத்தை பற்றி மரிக்கொழுந்து தங்கையை பார்த்த முதல் நாளே சொன்னார். அவளுக்கு வலித்தது. ஆனால் அதிகம் அதை வெளிக்காட்டவில்லை.

அவள் பூர்ணிமாவை அதிகம் நேசித்தாள். அவள் தன் அக்காவின் மகள் என்பதை கூட மறந்து விட்டாள்.

"பாலா.." பூர்ணிமாவின் குரலில் திரும்பி பார்த்தான் அவன்.

பூர்ணிமா அவனின் அறை வாசலில் நின்றிருந்தாள்.

"வா.." என்றான். பூர்ணிமா அவனருகே வந்தாள். அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள்.

"கதவை தட்டுறது.. பர்மிசன் கேட்கறதெல்லாம் எதுக்கு பூர்ணி? நீ நேரா உள்ளே வரலாமே?" என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தவள் "இதே மாதிரி நீ என் ரூம்க்குள்ள வரதை நான் விரும்பல பாலா.. கொஞ்ச நாள் ஆகட்டும்.." என்றாள்.

பாலா சரியென்று தலையசைத்தான். அவளின் விரல் நகங்களில் இருந்த நகப்பூச்சு அழகாய் இருப்பதாக நினைத்தான். அவளின் கால் விரல்களில் இருந்த மெட்டி தலைகீழாக இருந்தது. தனது இருக்கையை விட்டு எழுந்து வந்தவன் அவளின் மெட்டியை சரியாக திருப்பி விட்டான்.

"நூறாயுசு வாழு.!" என்றாள் அவள்.

சிரித்தபடியே‌ எழுந்தவன் தன் இருக்கையை அருகே இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

"என்ன விசயம் பூர்ணி?"

"நாளையிலிருந்து எனக்கு எக்ஸாம்ஸ் ஸ்டார்ட் ஆகுது பாலா.. நான் இன்னைக்கே ஊருக்கு கிளம்பணும்.!" என்றாள்.

பாலா தன் போனை எடுத்தான். பின்னர் அவளை பார்த்தான்.

"நான் லீவ் எடுத்துட்டு வரேன்.!" என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தவள் "வேணாம்.. உனக்கு வொர்க் அதிகம். உனக்கு அதிக பளுவை நான் தந்ததா இருக்க வேணாம்.. நீ இரு.. நான் போய்ட்டு வரேன்!" என்றாள்.

"நானும்தான் வருவேன்." என்றவன் அன்று மாலையே அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். அவனை அவளால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.

"இங்கே பார் பாலா.. அங்கே வந்து என் அம்மாவோடு நீ சண்டை போட்டா அப்புறம் நான் செம கடுப்பாயிடுவேன்.. உன்னை நான் நல்ல நாள்லயே மதிச்சது கிடையாது.. அப்புறம் உன்னை சல்லி சல்லியா பிரிச்சி எடுத்துடுவேன். கேர் புல்.!" என்றாள்.

பாலா ரகசியமாக சிரித்துக் கொண்டான். "மாட்டேன்.." என்றான்.

"நான் பரிட்சை எழுத போறேன். அதனால நீ உன் திருவாயை வச்சிக்கிட்டு அமைதியா இருக்கணும். என்னை டென்சன் பண்ண கூடாது.."

"ம்.." என்றான்.

"என் அம்மா சமையல்தான். நீ ஏதாவது குறை சொன்னா அப்புறம் நான் விஷம் வச்சிடுவேன்.!"

பாலா சிரித்தான். "சரி.." என்றான். "முல்லை அத்தை நல்லாதான் சமைப்பாங்க.." என்றான். பூர்ணிமா அவனை சந்தேகமாக பார்த்தாள்.

"என் அம்மா மேல உள்ள கோபம் போயிடுச்சா?" எனக் கேட்டாள்.

"இல்ல..‌ உனக்காக என் கோபத்தை குறைச்சிக்கலாமான்னு யோசிக்கிறேன்.!" என்றான்.

பூர்ணிமா அவனை யோசனையோடு பார்த்தாள்.

முல்லை அப்போதுதான் தனது கடையில் இருந்து திரும்பியிருந்தாள். வீடு திறந்திருந்தது. திருடன் வந்து விட்டானோ என்று அவசரமாக உள்ளே வந்து பார்த்தாள். பாலா சோபாவில் நடுநாயகமாக அமர்ந்து தொலைக்காட்சியில் சேனலை மாற்றிக் கொண்டிருந்தான்.

இவள் புறம் திரும்பியவன் எதுவும் பேசாமல் மீண்டும் தொலைக்காட்சியின் புறம் திரும்பிக் கொண்டான்.

"பாலா.." என்றபடி ஓரெட்டு எடுத்து வைத்தாள் முல்லை.

"அம்மா.." சமையலறையிலிருந்து மகள் குரல் கேட்கவும் புத்துணர்வோடு இந்த பக்கம் திரும்பினாள்.

"பூரணி.!" என்றாள். பூர்ணிமா ஓடி வந்து அம்மாவை அணைத்துக் கொண்டாள்.

"ரொம்ப மிஸ் பண்ணேன் அம்மா.." என்றாள்.

பாலா மனைவியின் கலங்கிய கண்களை வெறித்தான். அவளை பிரித்து வைத்து விட்டோமோ என்று எண்ணினான்.

முல்லை தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"போன் பண்ணேன்.. ஆனா ரீச் ஆகல." என்றபடி அம்மாவை விட்டு விலகி நின்றாள் பூர்ணிமா.

"சார்ஜ் காலி பூரணி.. நீ நாளைக்குதான் வருவன்னு நினைச்சேன்.!" என்றவள் "நீ போய் உட்காரு.. நான் போய் சமைக்கிறேன்.. சாப்பிடுவ.." என்றவள் தனது படுக்கையறை நோக்கி வேகமாக நடந்தாள். முகம் சுத்தம் செய்து மாற்றுடை உடுத்திக் கொண்டு வந்தாள். அதே வேகத்தில் உணவை செய்தாள். மகளுக்கு என்று பலகாரம் செய்தாள்.

பாலா அத்தையை கண்டும் காணாதவன் போல இருந்தான். பூர்ணிமா அம்மாவுக்கு துணையென்று சமையலறையில் இருந்தாள்.

"அவன் உன்கிட்ட நல்லவிதமா நடந்துக்கிறானா பூரணி?" பயத்தை மறைத்தபடி கேட்டாள் முல்லை.

"ம்.." அம்மா சுட்ட பஜ்ஜியை கடித்தபடியே தலையை ஆட்டினாள் பூர்ணிமா.

"உண்மையை சொல்லு.." மகளை தன் புறம் திருப்பிக் கேட்டாள்.

"நல்லாதான்ம்மா பார்த்துக்கறான்.. தினமும் டெய்ரி மில்க் வாங்கிட்டு வந்து தரான். அந்த வீட்டுல சாப்பாட்டு டைம் வரும்போது என்னையும் கூட்டிப் போறான். நான் அடிச்சாலும் அமைதியா வாங்கிக்கிறான்.." என்றாள் பல்லை காட்டியபடி.

முல்லை மகளை யோசனையோடு பார்த்தாள்.

"அவனை நீ சும்மா சும்மா அடிக்காத.." என்றாள்.

"உனக்கு தெரியாதும்மா.. அந்த வீட்டு வாசல்ல ஒரு பைத்தியக்காரன் இருந்தான். அவனுக்கு நான் சாப்பாடு தந்தேன்னு இவனுக்கு கோபம். திட்டிட்டான். அதான் கோபத்துல நான் அறைஞ்சிட்டேன். பாவம்மா அந்த பைத்தியம்.!" என்றாள்.

அவள் பைத்தியத்தை பற்றி சொல்ல ஆரம்பித்ததும் முல்லைக்குதான் இதயம் நடுங்கியது.

"உனக்கு எதுக்கு வேண்டாத வேலை?" சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கியபடியே கேட்டாள் முல்லை.

"பாவமா இருந்தார்ம்மா.. அப்புறம் உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. பாலா என்கிட்ட மட்டும்தான் கத்துறான்.‌ அவங்க பெரியப்பா வீட்டுல என்ன நடந்தது தெரியுமா?" என்று அனைத்தையும் விளக்கிச் சொன்னாள் பூர்ணிமா.

முல்லைக்கு அனைவர் மீதும் கோபம் வந்தது. பாலாவின் மீது சிறு கருணை கூட பிறந்தது. நாகேந்திரன் செய்த தப்பிற்கு ஒரு குடும்பம் எவ்வளவு பழி சுமக்கும் என்று வருந்தினாள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்து பிறகும் கூட நாகேந்திரன் உண்மையை சொல்லாமல் இருப்பது அவளுக்கு வியப்பை தந்தது. இந்த அளவிற்கு ஒரு கோழையை அவள் பார்க்காதது போலிருந்தது.

இரவு உணவின் போது முல்லையும் பாலாவும் பேசிக் கொள்ளவில்லை. பூர்ணிமாதான் அம்மாவிடம் தொணதொணத்துக் கொண்டிருந்தாள்.

மணி பத்து வரை அம்மாவிடம் சலசலத்துக் கொண்டிருந்த பூர்ணிமா அதன் பிறகே தூங்க கிளம்பினாள். பாலா வெளியே நின்றபடி சுகனோடு கைபேசி அழைப்பில் பேசி விட்டு வந்தான்.

அவன் வந்தபோது முல்லையும் சமையலறை பாத்திரங்களை ஒழித்துவிட்டு வந்தாள்.‌ இவனும் அவளும் ஒரே நேர்கோட்டில் வந்து மோதிக் கொள்ள பார்த்தனர். ஆனால் சற்று விலகி விட்ட பாலா அவளுக்கு வழி விட்டு நின்றான்.

"நீ என்னை நம்பவே மாட்டியா பாலா?" எனக் கேட்டாள் முல்லை.

பாலா கண்களை உருட்டினான்.

"இந்த கேள்வியை போன்ல மட்டுமே நூறு முறை கேட்டு இருப்பிங்க‌. நான் அப்பவே பதிலும் சொல்லிட்டேன்.." என்றவன் அவளை தாண்டிக் கொண்டு நடந்தான்.

"பாலா.. ப்ளீஸ்.." முல்லையின் கெஞ்சலில் திரும்பினான்.

"அத்தை.. ப்ளீஸ்.. நீங்க தப்பிச்சி ஓடி வந்துட்டிங்க. ஆனா இத்தனை வருசமா குடும்பத்தை பத்தி எல்லோரும் தப்பா பேசியபோது அதை காதல் கேட்டவன் நான்தான். வலி என்னன்னு எனக்குதான் தெரியும்.. இதையெல்லாம் கூட விடுங்க.. மலர் அத்தை.. அவங்களை நான் எவ்வளவு நேசிச்சேன் தெரியுமா?" எனக் கேட்டவனை வெறித்தாள்.

"அவ அகங்காரம் ஏறி செத்துப் போனா பாலா.. நான் காரணம் இல்ல.. நான் அவ வாழ்க்கையில் இடை புகல.. அவதான் அந்த ஆளுக்கும் எனக்கும் வழி செஞ்சி தரதா நினைச்சி செத்துட்டா.. நான் அந்த ஆளோடு தேவையில்லாம பேசியது கூட இல்ல.!" என்றவளின் முன்னால் கையை காட்டி தடுத்தான்.

"போதும்.. நீங்க விளக்கம் சொல்ல வேணாம். நீங்க என்ன சொன்னாலும் என் அத்தை திரும்பி வர போறது இல்ல.."

"ஆனா நான்.."

"எந்த ஆனாவும் வேணாம். ஆதாரம் இருக்கா?" பாலாவின் கேள்வியால் குழம்பி போனாள் முல்லை.

"என் அத்தை சாவுக்கும் உங்களுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லன்னு உங்ககிட்ட ஆதாரம் இருக்கா? பூர்ணி அப்பாவோடு உங்களுக்கு எந்த உறவும் இல்லன்னு உங்ககிட்ட ஆதாரம் இருக்கா?" எனக் கேட்டான்.

முல்லை அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்.

"ஆதாரம் கொடுங்க.!" என்று கையை நீட்டினான்.

முல்லை நகைத்தாள்.

"ஆதாரம் இருக்குபோது நீ என்னை நம்ப வேண்டிய அவசியம் என்ன பாலா?" என்றாள்.

பாலா அத்தையை வெறித்தான்.

"நம்பிக்கை நெஞ்சுல தானா வரணும். நம்பிக்கை எப்போதும் ஆதாரம் கேட்காது. நம்பிக்கையான உறவுகள் எனக்கு இல்ல. அதுதான் உண்மை. பரவால்ல விடு.. என் அம்மா அப்பா நம்பிக்கையை விடவுமா உன் நம்பிக்கை எனக்கு தேவை?" என்றவள் அவனை தாண்டிச் சென்றாள்.

பாலா பெருமூச்சில் தன் உள்ளத்தின் கவலையை மறைத்தான். பூர்ணிமாவின் அறை கதவை திறந்தான். பூர்ணிமா உறங்கி விட்டிருந்தாள். வீட்டிற்கு வந்ததும் பெட்டி படுக்கைகளை வைக்க அந்த அறைக்குள் நுழைந்திருந்தான். மீண்டும் இப்போதுதான் வந்தான். பிங்க் கலர் சுவரில்‌ பட்டாம் பூச்சி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

"எல்.கே.ஜி பாப்பான்னு நினைப்பு.!" என்றபடியே அறையை நோட்டம் விட்டான். வரும்போது அவள் அணிந்து வந்திருந்த உடை நாற்காலியில் கிடந்தது. அவளின் வளையல் முதல் கம்மல் வரை அனைத்தும் மேஜையின் மீது கடை பரப்பி கிடந்தது.

பூர்ணிமா அவனுக்கு இடம் விட்டு கட்டிலில் ஒரு ஓரமாக விளிம்பில் படுத்திருந்தாள். இந்த பக்கம் இன்னும் நால்வர் உறங்கலாம். அவ்வளவு இடம் இருந்தது. சிரிப்பு வந்தது அவனுக்கு. இரவு உடையை அணிந்திருந்தாள். தலை முடிகள் சில முகத்தின் முன் விழுந்து தவழ்ந்துக் கொண்டிருந்தன.

அவளின் முகத்தை பார்த்தால் இரவு போதாது என்று எண்ணியவன் விளக்கை அணைத்தான். தலையணையில் சாய்ந்தான். அத்தை கேட்ட கேள்வியை நினைத்தபடியே கண்களை மூடினான்.

முல்லையின் தலையணை கண்ணீரால் நனைந்துக் கொண்டிருந்தது. இது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்‌. இத்தனை ஆண்டு வாழ்க்கையில் யாராவது தன்னை நம்புவார்களா, யாராவது தனது உண்மை உறவுகளாக இருப்பார்களா என்று தேடி சலித்துப் போனாள் முல்லை. கோபுவை பற்றி அறிந்திருக்காவிட்டால் பூமாறனும் கூட தன்னை நம்பியிருக்க மாட்டான் என்று நினைத்தாள்.

பூர்ணிமா ஒருத்தியேதான் பாக்கியாக இருந்தாள். அவளின் வாய் வார்த்தையையும் கேட்டு விட்டாள் பிறகு இந்த கட்டை நிம்மதியாக வேகும் என்று நினைத்தாள்.

குரங்கு கூட்டத்தில் ஒரு குட்டி நிலா.. இந்த கதை ஒருநாள் விட்டு ஒருநாள் அப்டேட் ஆகிட்டு இருக்கு. நட்புக்கள் அந்த கதைக்கும் உங்க ஆதரவை கொடுங்கப்பா

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN