தேவதை 45

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆதி மரத்தின் கிளையிலிருந்து கீழே குதித்தாள். அவளின் சிறு இறக்கைகள் அழகாய் அசைந்துக் கொண்டிருந்தன.

பல அண்டங்களின் கடவுள்கள். அவள் எவ்வளவு முயற்சித்தாலும் ஒரு தரம் கூட பார்த்திருக்க வாய்ப்பளித்திருக்காத கடவுள்கள் அவளின் முன்னால் வந்து நின்றார்கள்.

"ஆதி.. அன்பின் தேவதையே.." என்றபடி முன்னால் வந்தான் ஒரு கடவுளன்.

"நான்தான்.." என்றவள் தலை முடியை ஓரமாக ஒதுக்கி விட்டாள். சக்கரவாகம் ஒன்று பறந்து வந்து அவளின் தோளில் அமர முயற்சித்தது. அதற்கு முன்பே அந்த சக்கரவாகத்தை தன் வாளால் நிறுத்தி விட்டாள் ஆதி.

"அங்கேயே நில்லுங்கள் கடவுளே.." என்றாள் தரையில் விழுந்த சக்கரவாகத்தை கண்டு. சக்கரவாகமாக வந்திருந்த ஃபயர் தன் உருவுக்கு மாறி நின்றாள்.

"உங்களை என்னால் அடையாளம் காண முடியும். நான் இன்னும் சிறு குழந்தை இல்ல.." என்றாள் கண்களை இடுக்கி.

"மோசமான கடவுளை போல கதாபாத்திரம் கொண்டுள்ளாள்.." என்று முணுமுணுத்தார் ஒரு பெண் கடவுள்.

"நீங்க எல்லாரும் ‌இங்கே வர காரணம்.." சந்தேகமாக கேட்டபடி கையை சொடுக்கிட்டாள். எங்கிருந்தோ ஓடி வந்தது யானை ஒன்று. அங்கிருந்த பாறை ஒன்றை உருட்டி கொண்டு வந்து அவளின் அருகே தள்ளியது. ஆதி அதையே இருக்கையாய் மாற்றி அமர்ந்தாள்.

ஆதியிடம் அன்பு முழுதாய் சாகவில்லை என்பதை ஹார்ட் அறிந்தார்.

"நாங்கள் இந்த அண்டத்தின் கடவுள் ஆதி.." என்றபடி முன்னால் வந்தார் அக்வா.

"பின்னால் போ.. நீங்கள் வெறும் கடவுள்கள். உங்களின் வேலை இனி இங்கே தேவையில்லை. அதனால் நீங்கள் நால்வரும் கடவுள்களின் ஓய்வு உலகில் போய் ஓய்வெடுக்கலாம். நான் இந்த கிரகத்தின் காப்பாளினி. அதை கூட நீங்க என்னிடம் இருந்து மறைச்சி இருக்கிங்க.." என்றாள் விழிகளை உருட்டியபடி.

ஹார்ட் யோசித்தார்.

"நீ சிறு குழந்தையா இருந்த ஆதி. அதனால்தான் நாங்க சொல்லல.." என்றார்.

"ஆனா என்னை பயன்படுத்தி மனிதர்களை உருவாகிட்டிங்க.. விதியின்படி இந்த அண்டத்தில் மனிதர்களை உருவாக்க என்னால் மட்டும்தான் முடியும். அதனால்தான் நீங்க என்கிட்ட கூட சொல்லாம அதை செஞ்சி இருக்கிங்க.."

ஃபயர் முன்னால் வந்தாள். "காரணம் அது அல்ல ஆதி.. பண்பட்ட மனிதர்களை உருவாக்க வேண்டிய சூழல்.. அதனால் உனக்கு உதவதான் அப்படி செய்தோம்.." என்றாள்.

ஆதி சிரித்தாள். "கடவுள்கள்.. அழகாய் பொய் சொல்றிங்க.. அது எனக்கு தேவையில்ல.. நீங்க உங்களிடம் இருக்கும் ஆன்மாக்கள் அனைத்தையும் தந்துவிட்டு இங்கிருந்து போகலாம். நீங்க திரும்பி‌‌ வர வேண்டிய அவசியமே இல்ல.." என்றாள்.

ஹார்ட் முகம் வாடினார்.

இவர்களின் சண்டையை பார்த்துக் கொண்டிருந்த மற்ற கடவுளர்கள் முன்னால் வந்தனர்.

"உங்களின் பஞ்சாயத்தை அப்புறமா வச்சிக்கங்க.." என்ற ஒருவன் "நீ ஒரு அன்பின் தேவதை. உனக்கு வெறுப்பு தேவையில்லாத ஒன்னு. அதனால உன் மனசுல இருக்கும் வெறுப்பை அழிச்சிட்டு பழையபடி அன்பை பரப்பு.‌." என்றான்.

ஆதி யோசித்தாள்.

"ஆனா ஏன்?" எனக் கேட்டாள்.

"உன்னால இந்த பிரபஞ்சமே அழிய கூடிய ஆபத்தில் இருக்கு. நீ உருவாக காரணம் அன்பை பரப்பதான். அதை சரியா செய்.." என்றான்.

ஆதி நகைத்தாள். "முடியாது முட்டாள் கடவுளே.. எனது உணர்வுகள் எனது சொந்தம். எனக்கு வெறுப்பைதான் இப்போது பிடித்துள்ளது. இந்த பிரபஞ்சம் தாராளமாக அழியட்டும். அழிவின் கடைசி நொடியில் ஆனந்த தாண்டவம் ஆடுவேன் நான்.." என்றாள்.

அவளின் வெறுப்பின் நெடி அவர்களை பலமாக தாக்கியது. அனைவருமே பலவீனமாக உணர்ந்தார்கள்.

"ஆதி.." வலியோடு முனகினாள் ஒரு கடவுள்.

"இது தவறு ஆதி.." என்று ஒருவர் சொன்னதும் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள் ஆதி. அவர்களை நெருங்கினாள். அவளின் கண்களிலும் வாசத்திலும் வெறுப்பு இருந்தது. அனைவரும் பின்னால் நகர்ந்தனர்.

நிழாலன் மட்டும் நகராமல் நின்றான். "உன்னை எனக்கு பிடித்துள்ளது தேவதையே.. உனது எண்ணங்கள் சரியானவை. இந்த பிரபஞ்சம் அழியட்டும். நமக்கு பிரியமானவர்கள் அழிவதை பார்த்து ரசிக்கலாம்.." என்றான்.

"பைத்தியக்கார கடவுளே.." பற்களை கடித்தபடி அவனை பிடித்து பின்னால் இழுத்தாள் ஒருத்தி.

"எனது இனம் அழிந்து போனது. எனது உலகமும் எனது சொந்தங்களும் அழிந்து போனார்கள். அன்று நீங்கள் அனைவரும் எங்கே இருந்தீர்கள்? இன்று ஏன் வந்துள்ளீர்கள்?" ஆதி கோபத்தோடு கேட்டாள். அவளின் கோபத்திற்கு பின்பாட்டு பாடுவது போல யானை பிளிறியது.

"இந்த கிரகத்தின் தண்ணீர் எனது கண்ணீர்.. எனது அழுகை சத்தம் இன்னமும் இந்த கிரகத்து மலைகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அழிந்த இனத்தின் கடைசி தேவதையாக இருப்பதன் வலியை நீங்கள் அறிய மாட்டீர்கள். அன்பின் தேவதையாய் இருப்பதால் நான் பட்ட வேதனைகளையும் அறிய மாட்டீர்கள். அன்பை அடக்க தெரியாமல் என் உலகத்தை அழித்தவனையே மணம் செய்தேன் நான்‌. இது போல ஒரு சாபத்தை பெற்றவர்கள் யாரும் உண்டா?" என கேட்டவளின் இமைகளை தாண்டி கண்ணீர் கொட்டியது.

"அன்பின் தேவதையாக இருந்து சலித்து போனேன். கோபம் இல்லை. தன்மானம் இல்லை. ரோசம், வெட்கம் மானம் என்று எதுவும் இல்லாமல் போய் விட்டது. யார் வேணாலும் ஏமாற்றும் அளவுக்கு முட்டாளாய் இருந்து வெறுத்துப் போனேன். இப்போது பிடித்துள்ளது. யாரையும் நான் நெருங்க தேவையில்லை. என் சுயமரியாதை என்னிடமே உள்ளது. யாருக்காகவும் அதை அடகு வைக்க தேவையில்ல. தைரியம் கூடியுள்ளது இப்போது. எனது வாழ்க்கையை இப்போது பிடித்துள்ளது எனக்கு.." என்றாள்.

அவளின் சோகம் என்னவென்று அவர்களுக்கு சரியாக புரியவில்லை. புரிந்துக் கொள்ள அவர்கள் முயலவும் இல்லை.

ஹார்ட் முன்னால் வந்தார். அவளை தன்னோடு அணைத்துக் கொண்டார். ஆதி தன் மனதில் அன்பு உருவாகுவதை கண்டு அதை அப்படியே புதைத்தாள்.

பற்களை அறைத்தாள். ஹார்ட்டை விட்டு பின்னால் நகர்ந்து நின்றாள்.

"என்னிடம் அன்பு காட்ட முயலாதீர்கள்.. நான் இப்போது ஒரு அரக்கியை விடவும் மோசமாக உள்ளேன். உங்களை அழிக்க எனக்கு கத்தி தேவையில்லை. என் மனதின் வெறுப்பு போதும்.." என்றாள்.

தன்மானம் அவளை விடவும் கடவுளர்களிடம் அதிகம் இருந்தது. "உன்னை சரணடைய செய்கிறோம்.." என்று சவால் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

பிரபஞ்ச வெளியில் மீண்டும் கடவுளர் கூட்டம் கூடியது.

"அவளை அழிச்சிடலாம்.." என்றான் ஒருவன்.

"அப்புறம் அவளோடு சேர்ந்து இந்த பிரபஞ்சமும் நாமும் அழியலாம்.." என்று நினைவுப்படுத்தினாள் ஃபயர்.

"இந்த பிரச்சனைக்கு வேறு வழியே இல்லையா?" எனக் கேட்டான் ஒருவன்.

"நாம ஏன் கவியிடம் உதவி கேட்க கூடாது?" ஆக்சிஜன் இதை கேட்கவும் கவியை பற்றிய முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டது. அவன் செய்த ஒற்றை செயலால்தான் இன்று இந்த பிரபஞ்சமே ஆபத்தில் உள்ளது என்பது அவர்களுக்கு புரிந்தது.

"கடவுள்கள் நாம் இருக்கும்போது இந்த மாதிரி முட்டாள் தேவன், தேவதைகள் ஏன் உருவாகணும்?" சலித்துக் கொண்டான் ஒருவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN