குரங்கு கூட்டம் 4

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ராகுல் தன்னிடமிருந்த பைலை புரட்டினான். சம்பத் மீதான குற்றங்கள் அனைத்தும் அதில் வரிசையாக இருந்தன.

"இவனை என்கவுண்டர் பண்ணலாம். ஈசியா வேலை முடியும்.." என்றான்.

ஜீவன் அவனிடமிருந்த பைலை வாங்கினான். "முடியாது ராகுல். இவனை வச்சிதான் இவனோட மொத்த குரூப்பையும் பிடிச்சாகணும்.. வெப்பன்ஸ் பிசினெஸ் செய்யுறது ரொம்ப தப்பு.!" என்றான்.

ராகுலுக்கும் புரிந்துதான் இருந்தது. நாட்டில் இருக்கும் பல ரவுடி கும்பல்களுக்கும் வெப்பன் சப்ளை செய்பவன் சம்பத்தான். அந்தந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவும் இவனிடம் இருந்தது. அரசியல் பின்புலமும், சம்பத்தின் பணமும் அவனை இவ்வளவு நாளும் காப்பாற்றி வைத்து விட்டது. ஆனால் ராகுல் விடுவதாக இல்லை. சம்பத்துக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்து அவனை கைது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறான்.

ரூபாவதியை பொறுத்தவரை ராகுலும் ஜீவனும் இங்கே வந்தது தனக்கு கையாள் வேலை செய்ய என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் இவர்கள் வந்தது அவர்களின் மற்றொரு மேலதிகாரியான குமரனின் ஆலோசனையின் பேரில்.

பொண்ணு தூக்க வந்த ஒரு குரங்கு கூட்டம். திருட வந்த ஒரு டீம். ரவுடியை பிடிக்க வந்த ஒரு டீம். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்..

''கண்ணீரும் இனிக்குதடி சகியே நான் உன்னை நினைத்து தோலுரிக்கையில்‌.. வெங்காயத்தின் நெடியும் சுகந்த வாசமென வீசுதடி உன் யோசனையில் நான் நறுக்குகையில்.." முனகிக் கொண்டே வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்த அர்விந்தின் முன்னால் அரை மூட்டை வெங்காயத்தை கொண்டு வந்து கொட்டினான் ஒருவன்.

அர்விந்த் அதிர்ச்சியோடு நிமிர்ந்துப் பார்த்தான். எதிரே இருந்தவன் இவனை பார்த்து நக்கலாக சிரித்தான். "இந்த கல்யாணம் முடியும் வரை உனக்கு இந்த ஒரு வேலைதான்டி மாப்ளை.." என்றான்.

'அப்படி என்னதான்டா பண்றிங்க? அடுப்பு அணையாம எரிஞ்சிக்கிட்டே இருக்கு. காய் வெட்டுறவங்க வெட்டிக்கிட்டே இருக்காங்க.. அரசி மூட்டை பிரிச்சிக்கிட்டே இருக்காங்க.. எங்கூர்ல கல்யாணம்ன்னா இரண்டு நாள்தான்டா விசேசம். இங்கே ஏன்டா ஒரு வாரம் முன்னாடி இருந்தே இப்படி அலப்பறை பண்ணிட்டு இருக்கிங்க..' என்று மனதுக்குள் புலம்பினான்.

ராகுலும் ஜீவனும் ரூபாவதியின் முன்னால் வந்து நின்றார்கள்.

"கூப்பிட்டிங்களா மேடம்?" என்றவர்களின் வண்ண உடையை கண்டு திருப்திப்பட்டாள் அவள். ரவுடிகள் புழங்கும் இடத்தில் காவல் உடை இருக்க கூடாது என்று நினைத்தாள் அவள்.

"சீரியல் லைட்ஸை கரெக்டா அலங்காரம் பண்ணிட்டாங்களான்னு போய் பாருங்க.." என்றாள் அவள்.

ராகுலும் ஜீவனும் ஆளுக்கொரு வீர வணக்கத்தை வைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே நடந்தார்கள்.

"முதல் காப்பை இந்த அம்மணி கையில்தான் மாட்டணும் ஜீவன்.!" என்றான் ராகுல்.

"நானும் அதான் நினைக்கிறேன். ஏதாவது நடக்கும். கரெக்டா ஆதாரம் கலெக்ட் பண்ணி இந்த ராசாத்திக்கும் தனி செல்லை ரெடி பண்ணிடலாம்.." என்றான் ஜீவன்.

இருவரும் வீட்டின் நடுவே நின்றபடி சுற்றிலும் பார்த்தார்கள். பூக்களின் அலங்காரங்களின் இடையே வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. உள்ளே அனைத்தும் சரியாக இருப்பது போல தோன்றவே வெளியே நடந்தார்கள். இரவு நெருங்கும் வேளை. வீட்டின் வெளி அலங்காரம் இன்னும் சிறப்பாக இருந்தது‌.

"கரண்ட் பில், உள்ளே அலங்காரத்திற்கு இருக்கும் பூக்கள்ன்னு இதுவே பெரிய செலவு வரும் இல்லையா ராகுல்? எவ்வளவு பணம்தான் கொள்ளையடிச்சி இருக்காங்க?" ஜீவன் வியந்தான்.

"சான்ஸ் கிடைச்சா நாமளே கூட ஆப்படிக்கலாம் ஜீவன்.. வெயிட் பண்ணலாம்.." என்றவன் அண்ணாந்து பார்த்தான். வண்ண விளக்குகளை பார்த்தான்.

அதே நேரத்தில்..

சிபியின் அறையில் மிருத்யூவும் மிருதுளாவும் நேருக்கு நேராக நின்று முறைத்துக் கொண்டிருந்தார்கள்.

"இவளோட அண்ணன் என்னை லுக் விடுறான். இந்த கேப்ல நீ புகுந்து அவனை ஒரு ஹக் பண்ணிடு. அவன் என்னை விட்டுடுவான்.." என்றான் மிருத்யூ தனது ஸ்கர்ட்டை இரண்டாய் மடித்து வேட்டி போல கட்டியபடி.

அவனின் காலில் இருந்த ரோமங்களை கண்ட மிருதுளா "நீ ஏன் இப்படி ஒரு முறை அந்த ஆள் முன்னால போஸ் கொடுக்க கூடாது?" என கேட்டாள்.

"எதுக்கு.. அவன் என்னை கண்டம் பண்ணவா?" எனக் கேட்டு பற்களை கடித்தவன் சிபியின் புறம் திரும்பினான்.

"எனக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகி நாலு புள்ளைங்க இருக்குன்னு உன் அண்ணன்கிட்ட சொல்லு சிபி.. இந்த விபரீத விளையாட்டு நமக்கு வேணாம்.." என்றான்.

சிபி தயங்கினாள்.

மிருத்யூ சகோதரனை தன் புறம் திருப்பினாள். "நாம என்ன இங்கேயா குடியிருக்க போறோம்? ஒரு வாரம்தானே? அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்க.." என்றாள்.

மிருத்யூவுக்கு இது சரி வராது என்பது போலவே இருந்தது. அவனின் உள்ளுணர்வு அவனை பிராண்டியது. தவறு நடக்க போவதாக சொல்லி அவனை எச்சரித்தது. ஆனால் வீட்டுக்குள் வந்த பிறகு பாதியில் திரும்பி போகவும் மனம் வரவில்லை. சரியென்று தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டான்.

அவன் தன் விக்கை கழட்ட இருந்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது.

"கொஞ்ச நேரம் ப்ரியா இருக்க விடுறாங்களா?" என புலம்பியபடியே சென்று கதவை திறந்தான்.

வெளியே இரு ஆண்கள் பூக்கூடையுடன் நின்றிருந்தார்கள்.

"ரூமை அலங்காரம் செய்ய வந்திருக்கோம்.." என்றான் அதில் ஒருவன்.

மிருத்யூ வாயை திறந்துவிட்டு அவசரமாக மூடிக் கொண்டான். மிருதுளாவிடம் திரும்பி கண் சைகை செய்தான்.

"இந்த வீட்டுல கல்யாணம் இப்படிதான் மிருணா.. ஒரு நாளைக்கு இரண்டு முறை பூக்கள் அலங்காரம்.." என்ற சிபி தன் அறையின் கதவை முழுதாய் திறந்து விட்டாள்.

கதவு முதல் ஜன்னல் வரை பழைய பூக்கள் எல்லாவற்றையும் கழட்டினார்கள். புது சரங்களை அலங்காரம் செய்தனர்.

அவர்கள் அலங்காரம் செய்து விட்டு சென்ற அடுத்த நொடியில் ஜன்னலில் இருந்த சாமந்தி சரம் ஒன்று கழன்று தரையில் விழுந்தது.

"நல்லா பிக்ஸ் பண்ணாம போயிட்டாங்க.." என்றபடி பூச்சரத்தை கையில் எடுத்த மிருதுளா ஜன்னலின் மேலே இருந்த ஆணியில் அதை மாட்ட முயன்றாள். ஆனால் பூச்சரம் நழுவி ஜன்னலின் வெளியே விழுந்தது.

அதே நேரத்தில் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த ராகுலின் முகத்தில் சென்று விழுந்தது இந்த சரம்.

பூவை கைகளில் எடுத்தவன் பார்வையை திருப்பினான். மிருதுளா ஜன்னலின் வழியே இவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வை மெள்ள மாறியது.

"ரொம்ப பழைய சீன் ராகுல்.. இதுக்கு நீ லுக்கு விட கூடாது.. மாலையை தூக்கி வீசிடணும்.!" என்றான் ஜீவன்.

ராகுல் திகிலாய் தலையை ஆட்டினான்.

"இதே மாதிரிதான் ஸ்கூல்ல ஒருநாள்.. அவ தலையில் இருந்து பூச்சரம் கழண்டு கரெக்டா என் மேலேயே விழுந்தது. அன்னைக்கு மேல்மாடியில் இருந்தா அவ.. இன்னைக்கும் கூட.." என்றவன் திகில் மாறாமல் நண்பனை பார்த்தான்.

"அவளுக்கு என்னை ஞாபகம் வந்திருக்குமா?" எனக் கேட்டான்.

மிருதுளாவின் முகத்தை கணித்த ஜீவன் "இருக்கலாம்.. ஆனா நீ ஏன் பயப்படுற?" எனக் கேட்டான்.

"ஏனா அவ ஒரு லூசு.." என்றவன் கவலையோடு வீட்டுக்குள் நடந்தான்.

"ராகுல்.. அவன்தான்.. இவனுக்கு இங்கே என்ன வேலை?" யோசனை வந்து விடவும் தனக்குள் குழம்பினாள் மிருதுளா.

ராகுல் வீட்டின் நடு கூடத்திற்கு வந்தபோது "போலிஸ் தம்பி.." என அழைத்தார் வெங்கட்.

"இந்த ஆள் என்ன வேலை வைக்க போறாரோ?" என முனகிக் கொண்டே இருவரும் அவரிடம் சென்றார்கள்.

"இவர் கைலாயத்துல இருந்து வந்திருக்கும் சாமி.. இவருக்கு மேலே ரூம் தந்திருக்கோம். சாமி வரும் முன்னாடி அந்த ரூமை டபுள் செக் பண்ணிடுங்க.." என்றவர் மீண்டும் சாமியாரின் காலடியில் அமர்ந்து விட்டார்.

சாமியாரை எரிச்சலாக பார்த்தான் ராகுல். சாமியார்தான் இவன் புறம் திரும்பவே இல்லை.

"இந்த நாட்டுல போலி சாமியார்களுக்கு ஒரு கேடு வர மாட்டேங்குதே.." என்று திட்டியபடியே அறையை நோட்டமிட்டான் ராகுல்.

அவன் அந்த அறையை விட்டு வெளியே நடந்த அதே வேளையில் சாமியாரோடு அங்கு வந்தார் வெங்கட். ராகுலும் ஜீவனும் ஒதுங்கி நின்றார்கள். சாமியார் அவர்களை கடந்தார். முகத்தை அருகில் கண்ட ராகுலுக்கு உள்ளே ஏதோ பல்ப் எரிந்தது‌.

"இது.. இது.. பிரேம்.. யெஸ்.. அந்த லூசோட பிரெண்ட்.." என்றவன் அந்த அறைக்குள் மீண்டும் புக முயன்றான்.

அவனை பிடித்து நிறுத்தினான் ஜீவன். "ஏன்? ஆரம்பிக்கும் முன்னாடியே நாம மாட்டிக்கணும்ன்னு அவ்வளவு ஆசையா?" எனக் கேட்டான்.

ராகுல் புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாலும் கூட உள்ளம் அவனை நெருங்க சொன்னது. அதே நேரத்தில் எதிரில் தூரத்தில் இருந்த அறையில் மிருதுளாவும் மிருத்யூவும் ஒரே மாதிரியான ஸ்கர்ட், சர்டில் இருப்பதையும் கண்டான்.

"மை காட்.. அது மிருத்யூ.. என்னடா நடக்குது இங்கே? எதுக்குடா கும்பலா வந்திருக்கிங்க? ஒருத்தன் சாமியார் வேசத்துல.. ஒருத்தன் பொண்ணு வேசத்துல.. என்னவோ பண்ண டிரை பண்றாங்க.." என்று முனகினான்.

ஸ்வேதா தான் இருந்த அறையை பார்த்தாள். "இந்த கட்டில் ஒன்னை களவாண்டாலே ஒரு மாசத்துக்கு சாப்பாட்டு பிரச்சனை இருக்காது.." என்றாள்.

கட்டிலின் மீது அமர்ந்திருந்த விஜி அவளை மேலும் கீழும் பார்த்தான்.

"சீப்பா யோசிக்காத ஸ்வேதா. வந்த இடம் பெரிய இடம். அதனால யோசனையும் பெருசாவே இருக்கட்டும்.. இருக்கும் நகை நட்டா அடிச்சிட்டு போகணும். இந்த ஒரு திருட்டுக்கு பிறகு நாம வேற எங்கேயும் திருட போக கூடாது. அவ்வளவு பக்காவா எல்லாத்தையும் திருடணும்.." என்றான்.

ஸ்வேதா ஆமென்று தலையசைத்தாள். "எனக்கு என்ன தோணுதுன்னா இந்த வீட்டை விட இந்த சாமியார்கிட்ட நிறைய இருக்கும்ன்னு தோணுது. நாம ஏன் அந்த ஆளோட ஆசிரமத்தை கண்டுபிடிச்சி அங்கே போய் கொள்ளை அடிக்க கூடாது?" எனக் கேட்டாள்.

அவனுக்கு அதுதான் மனதை பிராண்டிக் கொண்டிருந்தது. சாமியாரை பார்த்ததில் இருந்தே உறுத்திக் கொண்டேதான் இருந்தது.

"போகலாம்.. இதை முதல்ல ஒழுங்கா முடிக்கலாம்.." என்றான்.

அன்று இரவு அனைவரும் உறங்கி விட்டனர். ஆனால் சாமியாருக்குதான் உறக்கமே வரவில்லை. மெள்ள கதவை திறந்து வெளியே வந்தான். தடியர்கள் நால்வர் ஒவ்வொரு படிகளிலும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

"நைட் ஷிப்ட் டியூட்டி பார்ப்பாங்க போல.." என முனகியவன் எதிரே இருந்த அறையை பார்த்தான். போனை எடுத்து செய்தியை தட்டி விட்டான். இரண்டாம் நிமிடத்தில் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் சிபி. இவனை பார்த்தாள். கையை அசைத்தாள். பிரேம் அவளை தன்னிடம் வர சொல்லி சைகை காட்டினான்.

சிபி சுற்றும் முற்றும் பார்த்தாள். தடியர்கள் கவனிக்காத நேரத்தில் மெள்ள அடியெடுத்து இந்த பக்கம் வந்தாள். அவள் அருகில் வந்ததும் அவசரமாக அவளை உள்ளே இழுத்து கதவை சாத்தினான் பிரேம்.

"பேபி.. ஐ மிஸ் சோ மச்.." என்று கட்டி அணைத்தவன் அவளின் கன்னத்தில் ஓயாத முத்தங்களை தந்தான்.

சிபி அவனை அணைத்துக் கொண்டாள். "ரொம்ப பயந்து போனேன் தெரியுமா? நீ வர மாட்டியோன்னு நினைச்சிட்டேன்.." என்றாள் குரல் கம்ம.

அவளை விலக்கியவன் அவளின் முகம் பார்த்தான். இரவு விளக்கிலும் அவள் ஜொலிப்பது போலிருந்தது. "உன்னை என்னால விட முடியுமா சிபி? என் பிரெண்ட்ஸ் அவங்க உயிரை தந்தாவது நம்மை சேர்த்து வைப்பாங்க.. ஆமா அந்த மிருதுளா என்ன பண்றா? மிருத்யூ கூட அமைதியா தூங்கிடுவான். இவ பக்கத்துல தூங்கறவங்களை கட்டி பிடிச்சி, கால் தூக்கி தொப் தொப்புன்னு போட்டு தூங்கவே விட மாட்டா.." என்றான்.

சிபி இவ்வளவு நேரம் அந்த தொல்லையில்தான் இருந்தாள். மிருதுளாவின் அருகே தூங்க இயலாமல் எழுந்தவள் சோபாவில் தூங்க நினைத்த நேரத்தில்தான் பிரேம் அழைத்திருந்தான்.

"இப்பவே ஓடி போயிடணும்ன்னு தோணுது சிபி. ஆனா வழிதான் தெரியல.." என்ற பிரேம் அவளின் தோளில் சாய்ந்தான்.

"கல்யாண நாள் அன்னைக்கு நாம எல்லாம் ஒரே கார்ல ஏறுறோம்.. டிரைவரை மயக்கப்படுத்திட்டு காரை கன்ட்ரோலுக்கு கொண்டு வரோம். முன்னாடி வர கார், பின்னாடி வர கார்களுக்கு சந்தேகம் வராம தப்பிக்கிறோம்." என்றாள் கட்டை விரலை உயர்த்தி.

அவள் சொல்வது சரியென்பது போலதான் தோன்றியது. ஆனால் செயல்பாட்டில் எந்த அளவுக்கு சரியாக வரும் என்று அவனுக்கு தெரியவில்லை.

இருவரும் கதை கதையாக பேசியபடி அன்றைய இரவை கடத்தினர்.

மறுநாள் அதிகாலையில் மிருதுளா கண் விழித்தபோது அருகில் மிருத்யூவும் சோஃபாவில் சிபியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். கொட்டாவி விட்டபடியே பாத்ரூமுக்கு நடந்தாள்.

வெங்காயத்தின் வாசம் வருவது போலிருந்தது அர்விந்துக்கு. அருகே இருந்த தலையணையை கட்டி அணைத்தான். கல் போலவே இருந்தது தலையணை. தலைணையில் முகத்தை உரசினான். கடினமாக இருந்தது. மெள்ள கண்களை விழித்தான். சாம்பார் ஸ்பெஷலிஸ்ட் சங்கரை கட்டிப் பிடித்து தூங்கிக் கொண்டிருந்தான். அவசரமாக எழுந்து அமர்ந்தான்.

எங்கே இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். சமையல் வேலை செய்யும் டென்டின் ஓரத்தில் இருந்த பாயில்தான் படுத்து தூங்கிப் போயிருந்தான்.

"எப்படிப்பட்ட புள்ளை நான்.. எங்க அம்மா செல்லமா வளர்த்தியது இப்படி மண் தரையில் பாய் போட்டு தூங்கதானா? அந்த குரங்குகள் கூட இருந்திருந்தா கூட வலிச்சிருக்காதே.. தனியா இருக்கதானே பீல் ஆகுது.." முனகினான்.

எதிரில் பார்த்தான். அடுப்பு எரிந்துக் கொண்டிருந்தது. இரவில் அணைத்தார்களா இல்லையா என்று அர்விந்துக்கு சந்தேகம் வந்தது.

தேனீரின் வாசம் மணந்துக் கொண்டிருந்தது. பெரிய டபராவில் கொதித்துக் கொண்டிருந்தது அந்த தேனீர்.

"அடேய் வெங்காய பையா.. எழுந்து வாடா.. போய் வீட்டுல இருக்கும் எல்லோருக்கும் டீயை தந்துட்டு வருவ.." என அழைத்தார் சொக்கு.

'வெங்காய பையனா.. அது என்னப்பா நான் படிச்சி வாங்கிய பட்டமா? பையான்னு கூப்பிட்டா போதாதா?' என நினைத்தபடி எழுந்து நின்றான் அர்விந்த்.

ராகுல் தனது காலை நேர வேலைகளை முடித்துக் கொண்டு அறையின் கதவை திறந்தான். காலையிலிருந்தே இந்த வீட்டில் உள்ளவர்களோடு பழகலாம் என்று நினைத்தான் அவன்‌.

கதவை திறந்தவன் நெஞ்சில் கை வைத்தபடி பின்னால் நகர்ந்தான். கதவின் வெளியே சுவரோடு சாய்ந்து நின்றுக் கொண்டிருந்த மிருதுளா "சீனியர்‌‌.. ‌இங்கே என்ன பண்றிங்க?" என்று கேலியாக கேட்டாள்.

"காலங்காத்தால பேயை போல தலைமுடியை விரிச்சி போட்டுட்டு வந்து இந்த அப்பாவி பையனை பயமுறுத்திட்டு கேள்வி வேற கேட்கறியா?" எனக் கேட்டான் அவன்.

"நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே சீனியர்?"

"நான் போலிஸ்ம்மா.. இங்கே ரூபாவதி மேடம்க்கு கையாளா வந்து தொலைஞ்சிருக்கோம்.. உனக்கு இங்கே என்ன வேலை? எதுக்கு குரூப்பா பொய் வேசத்தோடு வந்திருக்கிங்க?" எனக் கேட்டான் இவன்.

மிருதுளா இடம் வலமாக தலையசைத்தாள். "குரூப்பா யார் வந்திருக்கா? நானே அனாதை புள்ளை போல பிரெண்ட் கல்யாணத்துக்கு வந்திருக்கேன்.." என்றவளின் அருகே நெருங்கினான் ராகுல். அவளின் முகத்தில் மோதியது அவனின் மூச்சுக்காற்று.

"மிருத்யூ லேடி கெட்டப்ல இருக்கான். பிரேம் சாமியாரா வந்திருக்கான்.. எதுக்கு இந்த பொய் வேஷம்?"

மிருதுளா ஆச்சரியப்பட்டாள். அதிர்ந்தாள்.

"பிரேம்மை நீ பார்த்தியா? அவன் சன்னியாசம் வாங்கிட்டு ஊரை விட்டு போய் நாலஞ்சி வருசம் ஆகுது. அவனை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.. அவன் எங்கேன்னு சொல்லு.. நான் உடனே பார்க்கணும்.." என்று துள்ளினாள்.

"நடிக்கறதை நிப்பாட்டு.." என்று கையை காட்டியவன் "என்ன வேலையா வந்திருக்கிங்கன்னு தெரியல.. ஆனா மாட்டினா நீங்க காலி.." என்றான்.

அதே நேரத்தில் கீழிறிருந்து சமையல்காரர்கள் ஐந்தாறு பேர் பெரிய தட்டுகளில் தேனீர் கோப்பைகளை வைத்து எடுத்துக் கொண்டு வந்தனர். அர்விந்த் இவர்களின் அருகே வந்தான். தட்டை நீட்டினான்.

"அடப்பாவி.. அர்விந்த் நீயுமா?" அதிர்ந்தான் ராகுல்.

"அர்விந்தா.. அது யார்?" என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தாள் மிருதுளா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN