பௌர்ணமி 13

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமாவை அணைத்துக் கொண்டிருந்தான் பாலா. விடிந்து சில பல நிமிடங்கள் ஆகி விட்டிருந்தது. இருவரும் கண்களை மூடியபடியே விழித்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவனின் அணைப்பில் தான் இருப்பதும் அவளுக்கு தெரியும். அவளின் விழிப்பும் அவனுக்குத் தெரியும். ஏதோ விளையாட்டு என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அவளின் கூந்தல் அதிக மென்மையாக இருந்ததை உணர்ந்தான்.

"பரிட்சைக்கு போகலையா பூர்ணி.??" அவளின் காதோரத்தில் முத்தம் ஒன்றை பதித்தபடியே கேட்டான்.

பூர்ணிமா இமைகளை திறந்தாள். அவனின் முகம் பார்த்தாள்.

"அழகா இருக்கேன் இல்லையா.?" எனக் கேட்டவனை கண்டு பற்களை காட்டியவள் ஆமென தலையசைத்தபடி மீண்டும் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

இவனை ஏன் தனக்கு பிடித்துள்ளது என்று யோசித்துப் பார்த்தாள். ஒரு காரணம் கூட பிடிபடவில்லை. 'காரணம் இல்லாமல் பிடித்தால்தான் அதுக்குதான் காதல்ன்னு பெயரோ?' என யோசித்தபடி அவனின் முதுகை வருடினாள்.

"இங்கேயே இப்படியே இருக்க எனக்கும் ஆசைதான் பூர்ணி.. ஆனா நீ எக்ஸாமுக்கு போயாகணும்.." என்றவன் அவளை விட்டு விலகினான்.

பூர்ணிமா அவனை பார்த்தபடி மறுபக்கம் கீழிறங்கினாள். . "அடுத்த வருசம் என்ன செய்ய போற நீ.?" எனக் கேட்டாள்.

அடுத்த வருடம் அவள் கல்லூரி படிப்புக்கு இங்கேயே வந்துவிட போகிறாள். அவளை விட்டு பிரிந்து இருப்பது பற்றி அவன் இதுவரை யோசிக்கவில்லைதான். ஆனால் அவள் நினைவுப்படுத்தி விடவும் அவனுக்கு முகம் வாடியது.

"என் ஆசைக்காக உன் லைப்பை நான் நாசம் பண்ண மாட்டேன் பூர்ணி. ஆனா வாரத்துக்கு இரண்டு முறை இங்கே வந்துடுவேன்.." என்றான் அவன்.

பூர்ணிமாவுக்கு அவனை கொஞ்ச வேண்டும் போல இருந்தது.

காலை உணவின் போதும் கூட மாமியாரும் மருமகனும் பேசிக் கொள்ளாததை கவனித்தாள் பூர்ணிமா. இந்த பரிட்சை முடிவதற்குள் இவர்களை சேர்த்து வைத்து விட ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று கூட யோசித்தாள். அம்மாவின் கண்களில் கோபமும், குற்ற உணர்வும் ஒரு சேர தெரிவதை அவளால் கண்டுக் கொள்ள முடிந்தது. அதே போல பாலா தன் அத்தையை நேர் கொண்டு பார்க்காமல் இருந்தான். என்ன நடந்திருந்தாலும் அம்மாவாக சொல்லாமல் வலுக்காட்டாயமாக விசயத்தை கேட்டு அம்மாவின் மனதை உடைக்கப் அவள் தயாராக இல்லை.

பூர்ணிமா ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள். வெளியே பார்க்கையில் பாலா காரின் வெளியே நின்றிருப்பது தெரிந்தது.

"நிஜமா என் எக்ஸாம் முடியும் வரை நீ இங்கேயே இருக்க போறியா பாலா?" அவனிடம் காலையிலேயே கேட்டாள்.

அவன் ஆமென்று சொன்னபோது கூட அவள் நம்பவே இல்லை. ஆனால் வீட்டுக்கு கூட செல்லாமல் அவன் கல்லூரி வாசலில் காவலுக்கு இருப்பது கண்டு அவனின் பேச்சில் நம்பிக்கை கொண்டாள்.

அவ்வளவு வேலைகளை விட்டுவிட்டு எதற்கு இங்கே வந்து ரிஸ்க் எடுக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை.

"இதுக்கு பதிலா நீ வீட்டுக்கு போயேன். என் அம்மா வீட்டுலதான் இருப்பாங்க.." என்றவளை சந்தேகமாக பார்த்தபடி சிரித்தவன் "உன் அம்மாவும் நானும் ஒரே இடத்துல இருந்தா சண்டைதான் வரும். எங்களுக்குள்ள வெட்டு குத்து நடக்கணும்ன்னு உனக்கு என்னம்மா ஆசை?" எனக் கேட்டான் புருவங்களை உயர்த்தியபடி.

அவனின் புஜத்தில் ஒரு குத்து விட்டாள் பூர்ணிமா. "பைத்தியம்.. என் அம்மா எவ்வளவு நல்லவங்க தெரியுமா?" எனக் கேட்டவள் சட்டென்று முகத்தை மாற்றிக் கொண்டு அவனை நெருங்கினாள்.

"உனக்கும் என் அம்மாவுக்கும் இடையில் என்ன பிரச்சனைன்னு தெரியல பாலா. ஆனா பாரு.. அவங்க ரொம்ப நல்லவங்க.. உங்களுக்குள்ள ஏதோ மிஸ்அண்டர்ஸ்டேன்டிங்கா இருக்கலாம்.. நீ கொஞ்சம் நல்லா யோசியேன்.." என்றாள்.

அவள் முயற்சிக்கிறாள் என்பது அவனுக்கும் புரிந்தது. ஆனால் அவளை பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.

"அமைதியா போய் எக்ஸாமை எழுது பூர்ணி.." என்றான்.

அவனை முறைத்துவிட்டு உள்ளே வந்தாள்.

ஸ்டெல்லா பூர்ணிமாவை கண்டதும் கட்டி அணைத்துக் கொண்டாள். தோழியை நேரில் பார்த்த சந்தோசம் அவளுக்கு. இப்போதும் கூட இதே அறையில் பூர்ணிமாவை விட்டு வெகு தூரத்தில் அமர்ந்து பரிட்சையை எழுதிக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் நிமிடத்திற்கு ஒரு முறையாவது இவள் புறம் திரும்பி புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

பூர்ணிமாவுக்கு தேர்வு எழுத நேரம் போதுமா என்று தெரியவில்லை. ஒரு பக்கம் பாலாவை ரசித்துக் கொண்டிருந்தாள். மறுபுறம் தோழியிடம் நட்பின் வழியான புன்னகையை பறிமாறிக் கொண்டிருந்தாள். எப்படியோ நேரத்தை சமாளித்து விட்டாள். தேர்வையும் சரியாக எழுதி விட்டாள்.

பரிட்சை முடிந்ததும் மீண்டும் பூர்ணிமாவை அணைத்துக் கொண்டாள் ஸ்டெல்லா.

"உன் ஹஸ் நேர்ல செமைய இருக்காரு.." என்றாள்.

பூர்ணிமா தோளை அசைத்தாள். "ஆனா அவனுக்கு திமிர் அதிகம்.." என்றாள் சம்பந்தமே இல்லாமல்.

ஸ்டெல்லாவை பாலாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

"என் பிரெண்ட் ஸ்டெல்லா.."

பாலா வணக்கம் வைத்தான். புன்னகைத்தான்.

"பொண்ணு தங்கம் பாஸ்.. அதனால அப்பப்ப கோபப்பட்டாலும் கண்டுக்காதிங்க.." என்றாள்.

"கோபத்துக்கு என்ன குறைச்சல்?" சிரித்தபடியே கேட்டான்.

ஸ்டெல்லா மேலும் பேசதான் நினைத்தாள். ஆனால் அதற்குள் பேருந்து வந்து விட்டது. இவர்கள் இருவருக்கும் கையசைத்து விட்டு பேருந்தில் ஏறினாள்.

"எக்ஸாம் ஈசியா இருந்ததா?" வீட்டிற்கு செல்கையில் கேட்டான் பாலா.

"ம்.. ஏதோ.." என்றவள் ஸ்டெல்லா தந்திருந்த சாக்லேட்டை பிரித்து சுவைக்க ஆரம்பித்தாள்.

"சும்மா சாக்லேட் சாப்பிடாத.. எப்ப பார்த்தாலும் சாக்லேட் இல்லன்னா மிட்டாய் சாப்பிட்டு இருக்க.." என்றான் அவன் கண்டிப்புடன்.

"சாக்லேட்ஸ் ரொம்ப பிடிக்கும் பாலா.." கண்களை மூடியபடி சாக்லேட்டை சுவைத்தபடியே சொன்னாள். அவளை ஒரு நொடி பார்த்தவன் தனக்குள் சிரித்தான்.

"என்னை லவ் பண்றியா பூர்ணி?" திடீரென்று கேட்டவனை திரும்பிப் பார்த்தவள் "நீ?" எனக் கேட்டாள்.

"தெரியல.." என்று வழக்கமான பதிலை சொன்னான்.

"சேம் டூ யூ.." என்றவள் ஜன்னலில் சாய்ந்து அமர்ந்தபடி வெளியே பார்த்தாள்.

இருவரும் வீட்டிற்கு வந்தபோது முல்லையும் எதிர் வீட்டில் குடியிருக்கும் மனிதரும் வாசல் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதை கண்ட உடனே பாலாவின் முகம் மாறி போனது. முகத்தை திருப்பிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

"ஹாய் அங்கிள்.." என்ற பூர்ணிமா அங்கேயே நின்று அந்த மனிதரோடு பேசி விட்டு சில நிமிடங்களுக்கு பிறகு வீட்டுக்குள் வந்தாள். பாலா தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டிற்கு வருகையில் நன்றாக இருந்தவனுக்கு இப்போது என்ன வந்தது என நினைத்தபடி அறைக்கு சென்று உடையை மாற்றிக் கொண்டு வந்தாள் பூர்ணிமா.

அவன் அருகே அமர்ந்து சற்று நேரம் தொலைக்காட்சியை பார்த்தாள். சலித்தது. அதே வேளையில் அவளின் போன் ஒலித்தது. ஸ்டெல்லா அழைத்திருந்தாள். போனை எடுத்துக் கொண்டு வீட்டின் பின் வாசலுக்கு நடந்தாள் பூர்ணிமா.

முல்லை காப்பியை கொண்டு வந்து பாலாவின் முன்னால் வைத்தாள். பாலா காப்பி கோப்பையை வெறித்தான்.

"ஏன் எப்பவும் கல்யாணமான ஆண்களையே கவுக்க டிரை பண்றிங்க?" எனக் கேட்டான்.

"கண்ணு நல்லா இல்லன்னா இப்படி பார்க்கறதெல்லாம் தப்பாதான் தெரியும்.." என்ற அத்தையை நிமிர்ந்து முறைத்தவன் "உங்க மனசு கெட்டது. அது எப்பவுமே தப்பை ஒத்துக்காது.. உங்களுக்கு இது தொழில் மாதிரின்னு நினைக்கிறேன், அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கிறது.." என்றான் பற்களை அரைத்தபடி.

முல்லை காப்பி கோப்பையை கையில் எடுத்தாள். அமர்ந்திருந்தவனின் தலையில் ஊற்றினாள்.

"உனக்கு அறிவு வர இன்னும் எத்தனை வருசம் ஆகுமோ தெரியல பாலா.. ஆனா முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வளர்ந்துடு.. இல்லன்னா என் பொண்ணுக்கு ஆபத்தாகிடும்.." என்றவள் சமையலறை நோக்கி நடந்தாள். நாலெட்டு வைத்தவள் திரும்பி பார்த்தாள்.

"போய் குளிச்சிட்டு வா.. நல்ல சூடான காப்பி போட்டு வைக்கிறேன்.. இதுல கொஞ்சம் சூடு பத்தலன்னு நினைக்கிறேன்.." என்றாள்.

பாலா பற்களை கடித்தபடி எழுந்தான். மூடியிருந்த கண்களை திறந்தான். சூடு உண்மையிலேயே அவ்வளவாக இல்லைதான். ஆனால் அவமானம் இருந்ததே.

பாய்ந்து சென்று அத்தையின் கை பற்றி நிறுத்தினான். "உங்க பாவத்துக்கெல்லாம் நல்லா அனுபவிப்பிங்க.." என்றான்.

"பாவம் செஞ்சவங்க எல்லாம் அனுபவிக்கிறதா இருந்திருந்தா இந்த உலகத்துல பாவமே இருந்திருக்காது. அன்ட் ஒன் கைன்ட் இன்பர்மேசன்.. நான் எந்த பாவமும் செய்யல..‌ நீயா கண்டதையும் உளறிட்டு இருக்காத.." என்றவள் அவனிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டு நடந்தாள்.

பாலாவுக்கு கோபமாக வந்தது. அத்தை தன்னை காப்பி அபிஷேகத்தால் அவமானம் செய்த மாதிரிதான் தான் அவளை வார்த்தையால் அவமானத்துக்கிறோம் என்பதைதான் அறிய மறுத்து விட்டான்.

அரை மணி நேரம் கடந்து விட்டிருந்தது. பூர்ணிமா வீட்டிற்குள் வந்தாள். போன் சூடாகி விட்டிருந்தது. தோழியோடு கதை பேச ஆரம்பித்தால் நேரம் காலம் மறந்து விடுகிறது.

அம்மாவிடம் காப்பியை வாங்கியபடியை சென்று தனது அறையின் கதவை திறந்தாள். திறந்த நொடியிலேயே சட்டென்று கதவை சாத்தினாள். "எருமை கதவு லாக் நல்லாதானே இருக்கு.. லாக் பண்ணிட்டு டிரெஸ்ஸை மாத்த வேண்டியதுதானே?" எனக் கேட்டாள் வெளியே இருந்தபடி. கையில் இருந்த கோப்பையிலிருந்த காப்பி கீழே சிந்தாமல் இருந்ததே பெரிய விசயமாக தோன்றியது அவளுக்கு.

அரை நிமிடத்திற்கு பிறகு வந்து கதவை திறந்தவன் "நான் டிரெஸ் மாத்துற டைம்க்கு வந்தது உன் தப்பு. ஆனா கதவை சாத்திட்டு வெளியே போகவும்தான் இன்சல் பண்ண மாதிரி ஆயிடுச்சி.. ஹேண்டசம் காட்ன்னு புகழன்னாலும் சாதாரண மனுசன் ரேஞ்சிக்காவது என்னை நீ நடத்தி இருக்கலாம்.." என்றான் வருத்தத்தோடு. அவளின் கையில் இருந்த காப்பியை வாங்கி பருகினான்.

கதவை சாத்திவிட்டு வெளியே வந்திருக்க கூடாதோ என்று யோசித்தாள். ஆனால் எப்படி வெட்கமே இல்லாமல் அறைக்குள் செல்வது என்றும் யோசித்தாள். இவள் யோசித்த நேரத்தில் அவன் காப்பியை காப்பியை முழுதாய் பருகி விட்டு வெறும் கோப்பையை அவளின் கையில் திணித்தான்.

"பீல் பண்றியா பூர்ணி.. நீ வேணா மறுபடியும் தூரமா இருந்து வர மாதிரி வா. நான் டிரெஸ் மாத்துற மாதிரி.." அவன் மேலே சொல்லும் முன் அவனை பார்த்து முறைத்தவள் "வேணா.. நீ டிரெஸ் மாத்தவும் வேணாம்.. இந்த அப்பாவி மூளையில் கண்ட யோசனையும் உருவாகவும் வேணாம்.." என்றாள்.

பாலா யோசித்தான். அவள் சொல்வது சரியென்பது போலதான் தோன்றியது.

"இன்னொரு முறையெல்லாம் கதவை லாக் பண்ணிட்டு பாலா.. எனக்கு பதிலா அம்மா கதவை திறந்திருந்தா என்ன ஆகியிருக்கும். உனக்குதான் சங்கடமா போயிருக்கும்.." என்றாள்.

"அந்த.. அவங்க வர மாட்டாங்க.. நான் குளிக்க போறேன்னு அவங்களுக்கு தெரியும்.." என்றவன் தன் ஈர தலையை கோதி விட்டான்.

அவனை அழைத்து சென்று ஹாலில் அமர வைத்தாள். பிறகு அம்மாவிற்கு உதவி செய்ய சமையலறைக்கு சென்றாள்.

"பூரணி.." அம்மா அழைத்தாள்.

நிமிர்ந்து பார்த்தவளிடம் "உன் புருசன் ஒரு அரை கிறுக்கு.. உன் மேல பாசமாதான் இருப்பான். ஆனா ஒழுக்கம்ங்கற ஒன்னுல அவன் ஒரு சைக்கோ.. ஏன்டா உன்னை அவனுக்கு கட்டி வச்சேன்னு நினைக்கிறேன்.. மனுசங்க எப்பவும் ஒரே மாதிரிதான் பூர்ணி. அவங்களுக்கு தேவைன்னா நாம அது செஞ்சாலும் கரெக்ட். அவங்களுக்கு பிடிக்கலன்னா நாம ராங்.. இது மட்டும்தான் இங்கே மாறாத யுனிவர்செல் விதி.!" என்றாள் புலம்பலாக.

அம்மாவும் பாலாவும் சண்டை போட்டுக் கொண்டு உள்ளார்கள் என்பதை பூர்ணிமாவால் யூகிக்க முடிந்தது. பாலாவின் மீதுதான் தவறு என்று நம்பினாள்.

இரவு உணவின் போது பாலாவின் முகத்தை பார்த்துக் கொண்டே உண்டாள் பூர்ணிமா. அவன் தன் அம்மாவை முறைப்பதை கவனித்தாள்.

இரவு அறைக்கு அவன் வந்ததும் அவனின் மூக்கில் ஒரு குத்து விட்டாள். அடிப்பட்ட மூக்கை பிடித்தபடி பின்னால் நகர்ந்தவன் "ஏன் பூர்ணி?" எனக் கேட்டான் மூக்கு விண் விண்ணென்று வலித்தது.

"எதுக்கு என் அம்மாகிட்ட சண்டை போட்டு வச்சிருக்க?" இடுப்பில் கை பதித்தபடி கேட்டாள்.

"என்ன சொன்னாங்க உங்க அம்மா?" நக்கலாக கேட்டான் அவன்.

"எதுவும் சொல்லல. ஆனா அவங்க பீலிங்கா இருந்தாங்க. அவங்க முகத்தை பார்த்தே என்னால அவங்களை படிக்க முடியும்.." என்றாள்.

சிரித்தான். 'அவங்க ஒரு குடும்பத்தை கெடுத்தவங்கன்னும் உன்னால் படிக்க முடிஞ்சதா?' என கேட்க நினைத்தான்.

"உன்கிட்ட சொல்லிதானே நான் கூட்டி வந்தேன்? பிறகேன் இப்படி பண்ற? என் அம்மா இப்பதான் அழுறதை நிறுத்தி நிம்மதியா இருக்காங்க. உனக்கு அது கூட பிடிக்கலையா?" கோபமாக கேட்டாள்.

'அழுதாங்களா? குற்ற உணர்வு தாங்காம அழுதிருப்பாங்க..' என்று நினைத்தான்.

அன்று இரவு அவனுக்கு முதுகு காட்டி திரும்பிப் படுத்துக் கொண்டாள் பூர்ணிமா.

"தினமும் ஒன்னும் மண்ணுமா தூங்கற மாதிரி சீன் போட்டுட்டு தூங்கறா.." என்று முனகியவன் மறுபக்கம் திரும்பிப் படுத்தான்.

"உனக்கு என் மேல பாசமே இல்ல பாலா.. என் அம்மா ரொம்ப மனசு உடைஞ்சி இருக்காங்க. அவங்ககிட்ட என் அப்பா யாருன்னு கூட நான் கேட்டது கிடையாது. நான் கேட்டா அவங்களுக்கு ஹர்ட் ஆகுமோன்னு பயப்படுறேன். ஆனா நீயாவது என்கிட்ட உண்மை என்னன்னு சொல்லி இருக்கலாம். என் அம்மா ஒழுக்கம் இல்லாதவங்கன்னு சொல்ற.. ஒருவேளை அவங்க என் அப்பாவுக்கு துரோகம் செஞ்சி அதனால என் அப்பா தற்கொலை செஞ்சி இறந்து போயிட்டாரோன்னு தோணுது. ஆனா என் அம்மாவை அப்படி சந்தேகப்பட முடியாது பாலா. அவங்க ரொம்ப நல்லவங்க.. இதுவரை எந்த ஆணோடும் தேவையில்லாம பேசியதே இல்ல.. அவங்க நிச்சயம் தப்பு பண்ணி இருக்க மாட்டாங்க. என் அப்பா தப்பா புரிஞ்சிட்டு இருந்திருப்பாங்க நீ புரிஞ்சிக்கிட்டு இருக்கற மாதிரி.." என்றாள் சிறு குரலில்.

அவளை தன் புறம் திருப்பினான் பாலா. கலங்கியிருந்தது அவளின் விழிகள். அவளின் வலியை புரிந்துக் கொள்ள முடிந்தது. பயங்கர குழப்பத்தில் அவளை நிறுத்தி வைத்து விட்டு அனைவரும் இல்லாத அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருப்பதை அவனுமே புரிந்துக் கொண்டான். ஆனால் உண்மையை சொல்ல பயந்தான். உன்னை வளர்த்த தாய்தான் உன்னை பெற்ற தாயை கொன்றாள் என்ற உண்மையை சொல்ல பயந்தான்.

அவளின் இதழோரம் முத்தமிட்டான். அவனின் கன்னத்தை பற்றினாள் பூர்ணிமா. சிவந்திருந்த அவனின் மூக்கோடு உரசினாள்.

"சாரி.. எனக்கு கொஞ்சம் ஆங்கர் இஸ்யூ இருக்கு.. உனக்கும் உன் அத்தைக்கும் நடுவுல ஆயிரம் இருக்கும். நான் குறுக்கே வர கூடாதுன்னுதான் நினைக்கிறேன்.. ஆனா என் கோபம் குறுக்கே வந்துடுது.." என்றாள்.

அவள் மூக்கை உரசுகையில் எரிந்தது. ஆனாலும் அவனுக்கு பிடித்திருந்தது. அமைதியாய் அவளை அணைத்துக் கொண்டான். இதழ்கள் தொட்டும் தொடாமல் இருந்தன.

"ஆங்கர் இஸ்யூ உடம்புக்கு நல்லது இல்ல பூர்ணி.." என்றவன் அவளின் இடையில் கையை பதித்தான்.

"தெரியும் பாலா.. ஆனா எப்படி கன்ட்ரோல் பண்றதுன்னு தெரியல. ஹாஸ்பிட்டல் கூட போனோம். ஆனா சரியாகல.." என்றவள் அவனின் கழுத்தில் இதழ் பதித்தாள். அவனின் கரம் உறைந்துப் போய் நின்றது. அவளின் முகம் பார்த்தான். ஆனால் அவளோ அவனின் கழுத்தில் மீண்டும் இதழ் பதித்தாள்.

"பூர்ணி.. போதும் தூங்கு.. நாளைக்கு உனக்கு எக்ஸாம்.." என்றவன் அவளை விலக்கி தள்ளி விட்டு ஒரு முறை புரண்டு தூரமாக வந்து படுத்துக் கொண்டான்.

பூர்ணிமா சலித்துக் கொண்டாள். அவன் சொல்வதில் இருந்த நியாயமும் புரிந்தது. புதிதாக உருவான உணர்வுகளும் பிடித்திருந்தது. காதல் வரும் முன்பே இது போல் ஆசை தோன்றுவது இயல்பா இல்லையா என்று யோசித்தாள்.

போனில் குறுஞ்செய்தி வந்ததாக சத்தம் கேட்டது. போனை எடுத்துப் பார்த்தாள்.

"குட் நைட் மாறா மாமா.." வாய்ஸில் அனுப்பிவிட்டு போனை மேஜையின் மீது வைத்தாள்.

பாலா தன் போனை எடுத்துப் பார்த்தான். வெற்றாக இருந்தது. இருவரும் பழங்கால நண்பர்கள் என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டான்.

இரவு மெள்ள நகர்ந்தது. முல்லை உறங்கவேயில்லை. பாலாவை நினைத்து பயமாக இருந்தது. பூர்ணிமாவை அவனுக்கு கட்டி தந்திருக்க கூடாது என்று நினைத்து தனக்குள் நொந்து போனாள்.

ஏதாவது பிரச்சனை வந்தால் என்னவாகும் என்று பயந்தாள். இப்போதே அவர்கள் பிரிந்து விட்டால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் நாளை இரண்டு குழந்தைகள் வந்த பிறகு பிரிந்தால் என்னவாகும் என்று பயந்தாள். அவனை தன் மருமகனாக தேர்ந்தெடுத்தது தவறு என்றே நம்பினாள்.

"மாமா உன்னை ரொம்ப விரும்புறார் முல்லை.. அவரை ஏத்துக்க.." மலர் முன்னால் வந்து நின்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். முல்லை கண்டுக் கொள்ளாமல் போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டாள்.

கடந்த பதினேழு வருடங்களாக இந்த பிரச்சனையையும் சமாளித்து வருகிறாள் அவள். முழுக்க முழுக்க மனதின் காரணம் என்று மருத்துவரே கூட சொல்லி விட்டார். ஆனால் அவளால் இந்த கற்பனைகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை. திடீரென்று பார்த்தால் நடு கூடத்தில் கயிற்றில் தொங்கியபடி கெஞ்சிக் கொண்டிருப்பாள் மலர். அழுதபடி கட்டிலின் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டிருப்பாள்.‌ துணிக்கடையில் மேல் மாடியில் இருட்டான படிக்கட்டுகளை கடக்கையில் அதன் கடைசி படியில் அமர்ந்து கை கூப்பிக் கொண்டிருப்பாள். ஆரம்பத்தில் அதிகம் பயந்து கத்திக் கொண்டிருந்த முல்லை காலப்போக்கில் சலித்துப் போய் விட்டாள். அவளே இது போன்ற கற்பனைகளை தூக்கியெறிய கற்றுக் கொண்டாள். கற்பனை போகவில்லைதான். ஆனாலும் பயம் கொள்ளாமல் இருக்க பழகிக் கொண்டு விட்டாள்.

பூர்ணிமா கண் விழித்தபோது பாலாவின் நெஞ்சில் தலை வைத்து படுத்திருப்பது கண்டு அவசரமாக எழுந்தாள். ஆனால் அவள் எழும் முன் அவளை பிடித்து இழுத்தான் பாலா.

"கொஞ்ச நேரம் தூங்கலாம்.." என்றான்.

அவளுக்கும் தூங்கதான் ஆசை. ஆனால் இருபது மதிப்பெண் கேள்வி ஒன்றை காலையில் படித்துக் கொள்ளலாம் என்றெண்ணி இருந்தாளே.! அதற்காக எழுந்துக் கொண்டாள்.

பாலா சில நிமிடங்களுக்கு பிறகு கண்களை திறந்தான். பூர்ணிமா புத்தகத்தில் கவனமாக இருந்தாள்.

முல்லை கொட்டாவி விட்டபடியே எழுந்து நின்றாள். கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமா என்று அவசரமாக அலாரத்தை பார்த்தாள். அலாரம் ஆன் செய்யப்படாமல் கிடந்தது. அவசரமாக தலையை முடிந்துக் கொண்டு பாத்ரூமை நோக்கி நடந்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு ஈர முகத்தை துடைத்தபடி சமையலறைக்குள் நுழைந்தவள் காப்பி போட்டுக் கொண்டிருந்த பாலாவை கண்டு நேற்றைய நினைவில் முகத்தை கடினமாக்கினாள்.

பாலா இரு கோப்பை காப்பியை எடுத்துக் கொண்டான். ஒற்றை கோப்பை சமையலறை மேடையில் இருந்தது.

"பாலா.." அவன் வெளியே செல்லும் முன் அழைத்து நிறுத்தினாள். நின்றவனின் அருகே வந்தவள் "இது சரி வரும்ன்னு எனக்கு தோணல. நீ பூரணியை விட்டுடு.." என்றாள்.

பாலா சந்தேகமாக அவளை பார்த்தான்.

"உன் சந்தேகபுத்தி கேரக்டருக்கும் அவளோட சோசியல் டைப் கேரக்டருக்கும் சுத்தமா ஒத்து வராது. அவ வாழ வேண்டிய பொண்ணு.." அத்தை மேலே பேசும் முன் "என்னோட கவலைகளை நான் பார்த்துப்பேன்.. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க.." என்றான் அவன்.

முல்லைக்கு கோபம்தான் அதிகரித்தது.

"பாலா நீ‌‌.."

"வேணாம்.. என் அத்தை பொண்ணு அவ.. அவளை என்னால புரிஞ்சிக்க முடியும். நான் சந்தேக பிராணி கிடையாது. நீங்க யோக்கியமா இல்லாததுக்கு என் மேல பழி போடாதிங்க.." என்றுவிட்டு அங்கிருந்து அகன்றான்.

பரிட்சையில் கடைசி நாள். இடையில் விடுமுறை வந்தபோதெல்லாம் அவளை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றுவிட்டு வந்தான் பாலா. இனி விடுமுறை முடியும் வரை பூர்ணிமாவும் முல்லையும் பிரிந்திருப்பார்கள் என்று நிம்மதி அடைந்தான் பாலா. அவனுக்கு பயம். எங்கே அத்தை தன்னை போலவே இவளையும் வளர்த்து விடுவாளோ என்று பயம்.

இந்த இடைப்பட்ட நாளில் அவனும் முல்லையும் சண்டை போடாமல் இருந்தால்தான் அதிசயம் எனும் அளவிற்கு வாய் சண்டை போட்டு விட்டார்கள். நல்ல வேளையாக அந்த சண்டைகளை பூர்ணிமா அருகில் இல்லாத நேரத்தில் மட்டும் போட்டுக் கொண்டார்கள்.

பூர்ணிமாவை முல்லையின் அருகே ஏன் விட்டு வைக்க விரும்பவில்லை என்பதையும் கடைசி நாளில் அத்தையிடம் சொல்லி விட்டான் பாலா. முல்லைக்கு ஆத்திரம் பொங்கியது. ஆனால் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

"ரொம்ப தப்பு பண்ற நீ.. உன்னோட எண்ணம் உன் வாழ்க்கையை அழிச்சிடும் பாலா.." என்று எச்சரித்தாள் முல்லை. அவளுக்கு பயம் அதிகரித்துக் கொண்டிருந்தது.

பாலா கேலியாக பார்த்துவிட்டு நகர்ந்தான். அவன் அத்தையோடு இன்னும் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு வந்திருக்கலாம்.

பூர்ணிமா அந்த மாலை வேளையில் குளிக்க சென்றிருந்தாள். நாளை காலையில் ஊருக்கு சென்ற பிறகு அவள் அவளின் அறைக்கு சென்று விடுவாளே என்ற யோசனையின் கவலையில் இருந்தான் அவன்.

அவன் கவலையை கலைக்கும் விதமாக பூர்ணிமாவின் போனில் மெஸேஜ் டோன் கேட்டது.

"மாறனுக்கு வேற வேலையே இல்ல.. குட் ஈவினிங் மெஸேஜ் அனுப்பி இருக்கான்.." என்றபடி போனை எடுத்தவன் செய்தி பிரகீதன் என்ற பெயருடையவனிடம் இருந்து வந்திருப்பது கண்டு குழம்பி செய்தியை திறந்தான்.

நீண்டதொரு வாய்ஸ் மெஸேஜ் வந்திருந்தது.

"பூர்ணிமா.. நிஜமா நீ என்னை விட்டு போனதை என்னால நம்பவே முடியல. என்னோடது எவ்வளவு ஆழமான காதல் தெரியுமா‌? உன்னை மனசுல வச்சி தாங்க இருந்தேன் நான்.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு உன் பிரெண்ட் சொன்னா. என்னால நம்பவே முடியல. நீ என்னை நல்லா ஏமாத்திட்ட. நம்ப வச்சி கழுத்தை அறுத்துட்ட.. ஆனா நான் எப்பவும் உன்னை மறக்க மாட்டேன்.. மாடி அறையின் வேஸ்ட் ரூமும், படிக்கட்டின் கீழ் ரூமும் உன்னை மறக்கவே விடாது.. உன் பேரை சொல்லியே.." வாய்ஸ் மெஸேஜ் ஓடிக் கொண்டிருந்த நேரத்திலேயே அறைக்குள் வந்தாள் பூர்ணிமா.

பாலாவின் கையிலிருந்த போனையும் அவனின் சிவந்த கண்களையும் குழப்பத்தோடு பார்த்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN