குரங்கு கூட்டம் 5

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மொத்த வீடும் காலை நேர சலசலப்புடன் இருந்தது. குழந்தைகளின் சிணுங்கல்களும், பாட்டு பாடும் பெரியோர்களில் குரலுமாக அந்த வீடே கலகலப்பாக இருந்தது.

மிருதுளாவின் காதை பற்றி திருகினான் ராகுல். அவளின் சிறு காது ஏன் மென்மையாக இருப்பது போல தோன்றுகிறது என்று புரியாமல் குழம்பினான். குரங்குகளின் காதுகள் மென்மையாகதான் இருக்கும் என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டான். ஸ்கர்ட்டை தொட்டும் தொடாமல் இருந்தது அவள் அணிந்திருந்த சர்ட். அவள் தன் கையை தட்டி விடுகையில் கொஞ்சமாக கண்ணில் பட்டு விட்ட அவளின் இடுப்பு பகுதியை பற்றி மறுபடி எப்போதும் நினைக்கவே கூடாது என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான் ராகுல்.

"சீனியர் என்ன பண்றிங்க? நான் ஒரு கட்ட பிரம்மசாரி.. உங்களை போல ஒரு ஆணின் கரம் என் மீது படக் கூடாது.." என்றவள் அவனின் கையை தட்டி விட்டாள்.

கைகளை நெஞ்சுக்கு நேரே கட்டிக் கொண்டு அவனை பார்த்தாள். கோபமாக பார்க்க முயற்சித்தாள். ஆனால் ராகுலுக்கு சிரிப்புதான் வந்தது.

அர்விந்த் இப்படியே திரும்பி ஓடி விடலாமா என்று நினைத்தான். 'மேலே வீசும் வெங்காய வாடைக்கு இந்த குரங்குங்க ஓடிடும் அர்வி..' என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டான்.

ராகுல் இவர்களை விட நான்கு வகுப்புகள் முன்னால் படித்தவன். ஆனாலும் அந்த நேரங்களிலேயே கூட சம்மதமே இல்லாமல் அவனிடம் வம்பிழுத்து வைத்துக் கொண்டிருந்தவள் மிருதுளா மட்டும்தான்.

ராகுல் அவளை நக்கலாக பார்த்தான். "நீங்க எல்லாம் எதுக்கு இங்கே வந்திருக்கிங்க? அதை சொல்லு முதல்ல.." எனக் கேட்டான்.

அர்விந்த் அங்கேயும் இங்கேயும் பார்த்தான். தன்னோடு காப்பி தர வந்தவர்கள் யாராவது தன்னை அழைத்தால் நலமாக இருக்கும் என்று நினைத்தான். சீனியர் தன்னிடம் கேள்வியை கேட்க ஆரம்பித்தால் என்ன செய்வது என்று பயந்தான்.

"நானும் என் சிஸ்டரும் மட்டும்தான் வந்திருக்கோம் சீனியர். மத்தவங்க யாரும் வரல.." என்ற மிருதுளா மறந்தும் கூட அர்விந்தின் புறம் திரும்பவில்லை.

"அப்புறம் ஏன் அர்விந்த் இங்கே இருக்கான்?" என்று அர்விந்தை நோக்கி கை நீட்டி கேட்டான் ராகுல்.

மிருதுளா அவன் கை காட்டிய திசையில் பார்த்தாள். விழிகள் படபடவென அடித்துக் கொண்டது அவளுக்கு.

"சீனியர் இது எங்க அர்விந்தா?" எனக் கேட்டாள்.

ராகுல் கையை கட்டியபடி சுவரில் சாய்ந்தான். இன்னும் என்ன சொல்வாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தான். அதே நேரத்தில் அவளின் முகத்தை ஆராயவும் மறக்கவில்லை அவன். அவளின் விழிகள் துள்ளுவது போலிருந்தது. இருளிலும் மின்ன கூடியது போலிருந்தது.

"ஆக்சுவலா என்ன நடந்ததுன்னா எங்க பிரேம் திடீர்ன்னு சன்னியாசம் போயிட்டான். அவனை அர்வி ஒன்சைடா லவ் பண்ணிட்டு இருந்தானாம். ஆனா அதை அவன் இருக்கும்போது சொல்லவே இல்ல. பிரேம் போன பிறகு இவனும் காதலன் இல்லாத இடத்துல இருக்க மாட்டேன்னு சொல்லி வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். எனக்கு அடையாளமே தெரியல சீனியர்.. நீங்கதான் இவனை அர்வின்னு சொல்றிங்க.. நான் அர்வியை ரொம்ப மிஸ் பண்றேன்.." என்று கண்களை துடைத்துக் கொண்டவள் அர்விந்த்தின் புறம் திரும்பி அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

"அர்விந்த்.. இது நிஜமா நீதானா?" எனக் கேட்டாள் கலங்கும் குரலில்.

'படுகேவலமா பொய் சொல்ல இவக்கிட்டதான்டா சாமி கத்துக்கணும்..' என நினைத்த அர்விந்திற்கு கையிலிருக்கும் தட்டை எடுத்து அப்படியே அவள் மீது கொட்ட வேண்டும் போல இருந்தது.

அர்விந்த்தின் கோபத்தையும் ரகசியமாக பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான் ராகுல். அர்விந்தின் தோளில் உள்ள அழுக்கு துண்டை எடுத்து மிருதுளாவின் முகத்தில் கண்ணாமூச்சி கட்டு போட வேண்டும் போல கிறுக்குதனமான யோசனை வந்தது அவனுக்கு.

"உனக்கு சிஸ்டர் உண்டா மிருது? அப்ப அது மிருத்யூ இல்லையா?" அவளின் கடைசி பொய்யையும் இப்போதே கேட்டுக் கொள்ளலாம் என நினைத்துக் கேட்டான் ராகுல்.

மிருதுளா பளீரென பற்களை காட்டினாள்.

"அவன்தான் ராகுல் அது. என்னோடு பழகி பழகி பெண்கள் மீதான மதிப்பு அவனுக்கு அதிகரிச்சிடுச்சாம். பெண்களா இருப்பது தவம், பெண்களா இருப்பது சுகம்ன்னு நினைச்சி அந்த யோசனையிலேயே உழன்றுட்டு இருக்கான். அப்புறம் அவனுக்குள் மாற்றம். போன மேவுல ஆபரேசன் பண்ணிக்கிட்டான். முழுசா பொண்ணாகவும் மாறிட்டான்.!"

அர்விந்த் கடித்த நாக்கை விடவேயில்லை. வாயை கொஞ்சமாக அசைத்தாலும் சிரிப்பு பொங்கி விடும் என்று பயந்துக் கொண்டிருந்தான். இடது கையால் அவளின் பொடனியில் ஒன்று விட போடும் இருந்தது. தண்ணீர் நிரம்பியுள்ள தொட்டியில் அவளை கொண்டு சென்று மூழ்கடிக்க வேண்டும் போல இருந்தது. கூரான கத்தியால் அவளின் வயிற்றில் குத்தி குத்தி கொல்ல வேண்டும் போல இருந்தது. அரை நிமிடத்தில் அவளை ஆயிரம் முறை மானசீகமாக கொன்று விட்டான் அவன்.

ராகுல் உதட்டை கடித்தபடி மிருதுளாவின் முகம் பார்த்தான். குரங்கு சேட்டைகள் இல்லாமல் இருந்தால் கொஞ்சம் க்யூட்டாகதான் இருப்பாள் என்று நினைத்தான். அந்த தலையை வாரியிருந்தால் இப்போதே கூட சற்று அழகாய் இருப்பாள் என்று தோன்றியதும்.

"உன்னோடு பழகி அவனுக்கு பெண்கள் மீது மதிப்பு வந்தது? இதை நான் நம்பணும்? உன்னோடு பழகினா பொண்ணுங்க கூட உன்னை பொண்ணுங்க லிஸ்ட்லயே சேர்த்த மாட்டாங்க. அப்புறம் எப்படி மிருத்யூ உன்னை பொண்ணா நினைச்சிருப்பான்? இருக்கும் பொண்ணுங்க கூட உன்னோடு பழகினா ஆணாதான் மாறி போவாங்களே தவிர நீ சொன்ன மாதிரி நடக்காது.. ஆனாலும் நல்லாதான் உருட்டற நீயும். ஜென்டர் மாறுவது ஹார்மோன்ஸால்தானே தவிர எண்ணங்களால் இல்ல.. முட்டாள்.." என்று மூக்கு சிவக்க முறைத்தவன் "நான் போலிஸ்.. உங்க எல்லோரோட தில்லு முல்லையும் கண்டுப்பிடிச்சி ஜெயில்ல போட போறேன்.." என்றான். வந்த வேலையே பெரு வேலையாக இருக்கையில் இவர்களின் பின்னால் சுற்ற அவனுக்கு நேரம் இல்லைதான். இருந்தாலும் சற்று மிரட்டி‌ வைக்கலாமே என்று எண்ணினான்.

'வேலியில போன ஓணானை பிடிச்சி வேட்டியில் விட்டுட்டாளே பாவி மக.‌!' அர்விந்த் மனதுக்குள் மிருதுளாவை திட்டினான். 'இவளை கூட்டிக்கிட்டு விளையாட போனாவே அடிப்பட்டுதான் திரும்புவோம். இங்கே ரவுடி வீட்டு பொண்ணை கடத்த வந்திருக்கோம். கன்பார்மா இவ நம்மை டெட்பாடியாதான் வெளியே போக வைக்க போறா..' என்று பயந்தான்.

அர்விந்தின் கையில் இருந்த தட்டிலிருந்து ஒரு கோப்பையை எடுத்தான் ராகுல். அர்விந்த் வாய் பேசவில்லை. அங்கே அவர்கள் குறிப்பிட்டு‌‌ பேசியது தன்னைத்தான் என்பது போல ஒரு அறிகுறியையும் அவன் காட்டவில்லை.

"சன்னியாசம் போனவனுக்காக வீட்டை விட்டு ஓடி போன மகாராசா.. உன் லவ்வர் அதோ அந்த ரூம்லதான் வயசான சாமியார் வேஷத்துல இருக்கான்.. போய் அவனுக்கும் காப்பியை கொடு.. நீ தயாரிச்ச காப்பியை குடிச்சிட்டு இதுக்கு மேலயாவது அவனுக்கு உன் மேல காதல் வரட்டும்.. இனியாவது சன்னியாசத்தை விட்டுட்டு உன்னை மனசார ஏத்துக்கட்டும்.." என்றான்.

அர்விந்த் மிருதுளாவை முறைத்தபடியே அவர்களை தாண்டிக் கொண்டு நடந்தான். அருகேதான் படிக்கட்டுகள் இருந்தன. அவளை பிடித்து தள்ளி விட்டால் எப்படி இருக்காம் என்று யோசிப்பதை அவனால் தடுக்க முடியவில்லை.

அவனின் முதுகை வெறித்தபடியே காப்பியை குடிக்க ஆரம்பித்தான் ராகுல். இவ்வளவு நேரமும் மூக்கை துளைத்துக் கொண்டிருந்த வாசம் ஒன்று இப்போது விட்டு விலகியதையும் உணர்ந்தான் அவன். திடீரென்று அவனின் வயிற்றில் கரம் ஒன்று படர்ந்தது. கூச்சத்தில் நெளிந்தவன் காப்பியை சிதற விட்டபடி எதிரில் பார்த்தான்.

"சிக்ஸ் பேக் எப்ப வந்தது சீனியர்?" என கேட்டபடி மிருதுளாதான் அவனின் வயிற்றின் மீது கரத்தை பதித்திருந்தாள். 'கொஞ்சமாவது கூச்சம் இருக்கா இவளுக்கு?'

அவளின் கையை தள்ளி விட்டவன் "நான் போலிஸ்.." என்றான் சீரியஸாக முகத்தை வைத்தபடி.

"ஓ.." என்றவள் நிமிர்ந்து அவனின் முகத்தை பார்த்தாள். "சாரி சீனியர்.. போலிஸெல்லாம் தொப்பையோடவே சினிமாவுல வந்தாங்களா.. அதான் டவுட்.." என்றாள்.

ராகுல் பற்களை கடித்தான். "இது நான் ஜிம்ல உழைச்சி சேர்த்தியது.. தயவு செஞ்சி போய் உன் ஏமாத்துற வேலையை பார்க்கறியா.?" எனக் கேட்டான் எரிச்சலோடு.

"‌ஹேண்ட்சம் பாய்ஸ்க்கெல்லாம் கோபம் வர கூடாது சீனியர்.." கண்ணடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள். ராகுல் சிலிர்த்த உடம்போடு இடம் வலமாக தலையசைத்தான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு வந்து கதவை திறந்தான் பிரேம். எதிரில் எண்ணெய் வழிய நின்றிருந்த அர்விந்தை அரை குறையாக கண்டவன் "சாரிப்பா.. காப்பி வேணாம்.." என்றான்.

"அடேய் பரதேசி.." நண்பனின் குரலில் கண்களை முழுதாய் திறந்தான்.

"ஓ மை காட்.. அர்வி.. உன் மேல ஏன் இப்படியொரு பேட் ஸ்மெல்?" எனக் கேட்டபடி மூக்கை தேய்த்தான்.

"டேய்.. பண்றதெல்லாம் பண்ணிட்டு கூந்தல் மாதிரி கேள்வி வேற கேட்டுட்டு இருக்கியா? எல்லாம் வெங்காய ஸ்மெல்டா.. என்னை வெங்காய வெட்டுற வேலைக்கு போட்டிருக்காங்கடா.." என்றான் சோகமாக.

நண்பனின் சட்டையில் புள்ளி புள்ளியாக இருப்பது அவனின் கண்ணீர்தானோ என்று யோசித்தான்‌ பிரேம்.

"வெங்காயம் வெட்டினா கண் எரியும்டா.." என்ற நண்பனை கொலை வெறியோடு பார்த்தவன் "நேத்து நான் விட்ட கண்ணீரை திருப்பி விட்டிருந்தா மேட்டூர் டேம்மே நிரம்பி இருக்கும்டா.." என்றான்.

இப்போது கொஞ்சம் பரிதாபம் வந்தது பிரேமுக்கு.

"வீட்டுக்கு போனதும் நான் உனக்கு லாலிபாப் வாங்கி‌ தரேன்.." என்று கன்னத்தை கிள்ளினான்.

"ஒரு வெங்காயமும் வேணாம். காப்பியை எடுத்துக்கிட்டு என்னை விட்டு தொலைடா.. நான் போய் அடுத்த வேலையை பார்க்கணும்.." என்றான் கோபமாக.

"கூல் டவுன் அர்வி.." என்றபடியே காப்பியை எடுத்துக் கொண்டான் பிரேம்.

அர்விந்த் கீழே வந்தபோது சொக்கு நன்றாக திட்டி வைத்தார். சமையல் கூடத்தில் இருந்த அனைவரும் இவனைதான் பார்த்தார்கள்.

ஒரு பக்கம் அரிசி மூட்டைகளும் பருப்பு மூட்டை ஒன்றும் பிரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சமையல் கூடத்தின் வாசலில் நின்றிருந்த மினி டெம்போவில் இருந்து காய்கறிகள் கீழே இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நேற்று பின்னிரவு நேரத்தில் விளக்கி கவிழ்த்தப்பட்ட பாத்திரங்களில் குடம் குடமாய் தண்ணீர் ஊற்றப்பட்டு அடுப்பில் ஏற்றி வைக்கப்பட்டன.

"உன்னால சமையல் லேட்.. காப்பி கொடுக்க போனா எதுக்கு அரை மணி நேரம் ஆகுது? போனோமா வந்தோமான்னு இல்லாம என்ன பண்ணிட்டி இருந்த?" எனக் கேட்டு கத்தினார் சொக்கு.

எல்லாம் நண்பர்களால் வந்ததுதான். வீட்டுக்குள் சென்றும் கூட தனது தேவதையை பார்க்க முடியாமல் போனதே என்ற கவலையில் இருந்தான் அவன்.

"போ.. போய் சட்டுன்னு வெங்காயத்தை அரி.." என்று அவனின் தோளில் தட்டி விரட்டினார் அவர். அர்விந்த தனது வழக்கமான இடத்திற்கு வந்தான். பழைய சாக்கு மாற்றப்பட்டு புது சாக்கு இருந்தது தரையில். சொக்கு தன் மீது காட்டிய பாசம் கண்டு அவனுக்கு வெங்காமல் வெட்டாமலேயே கண்கள் கலங்கியது.

'அடிங் ***.. அவன் இவ்வளவு நேரம் நிற்க வச்சி அந்த கிழி கிழிச்சிட்டு இருக்கான். அவனோட பாசத்தை புகழுறியே.. வெட்கமா இல்லையாடா?' என்று தன்னையே திட்டிக் கொண்டான்.

இவனின் அடுத்த சில பல மணி நேரங்கள் வெங்காயத்தின் உடனேயே செல்வதால் நாம் இவனை டீலில் விட்டுட்டு போகலாம் மக்களே..

சிபியின் பாட்டி நகை பெட்டி ஒன்றை ஸ்வேதாவிடம் தந்தாள். "குளிச்சிட்டு இதை போட்டுக்க ஸ்வேதா.. இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து இங்கே வர போறாங்க.. நீயும் ரெடியாகி இருந்தா உன்னை பார்த்து யாருக்காவது பிடிக்கலாம். உன் பாட்டிக்கு நான் செய்ற நன்றிக்கடனா இது இருக்கட்டும்.." என்றாள். ஸ்வேதா சரியென தலையசைத்ததும் பாட்டி அங்கிருந்து கிளம்பினாள்.

"மென்டல் பாட்டி.. அதுக்கு பதிலா இது போல இன்னும் பத்து செட் நகைகளை தந்தா பெரிய நன்றிக் கடனா இருக்கும் இல்ல?" எனக் கேட்டபடி வந்து நகைப்பெட்டியை வாங்கி திறந்தான் விஜி‌. பெரிய பெரிய ஆரங்கள் இரண்டு இருந்து. அதற்கு ஜோடி தோடுகளும், நெத்திசுட்டி, வளையலும் இருந்தது. ஒரு சிறு ஒட்டியாணமும் இருந்தது.

"வாவ்..‌ எதுக்கு ரிஸ்க்? விஜி நாம இப்பவே இந்த நகையோடு கிளம்பிடலாம்!" என்றாள் ஸ்வேதா.

அவளை முறைத்தான் விஜி. "முட்டாள்.. பொய் சொல்லி ஏமாத்திட்டு இருக்கோம். அந்த கிழவி இவ்வளவு நகையை தந்துட்டு போகுது. ஒரு வாரம் ஆன பிறகு இன்னும் என்னவெல்லாம் அடிக்கலாம்? நீ அமைதியா இரு.. நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்.." என்றான்.

சிபியை அலங்காரம் செய்துக் கொண்டிருந்த பெண்ணை விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா. அலங்கரிக்கும் பெண்ணின் கைகள் செய்யும் மாயங்களை கண்டு அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

சிபி நாற்காலியை விட்டு எழுந்து நின்றாள். "அழகோ அழகு பேரழகு.." என்று வியந்த மிருதுளா பாய்ந்து வருவதை கண்டு அவளை அணைக்க கைகளை விரித்தாள் சிபி. ஆனால் மிருதுளா அவளை தாண்டிச் சென்று அலங்கரிக்கும் பெண்மணியை கட்டிக் கொண்டாள்.

"வாவ்.. மேடம்.. உங்க கைகள் என்ன மாயாஜாலம் கத்து வச்சிருக்கா? இன்பாசிபில்.. அவ்வளவு அழகா அலங்காரம் பண்ணி இருக்கிங்க. உங்க போன் நம்பர் கொடுங்க. என் கல்யாணத்துக்கு நான் உங்ககிட்டதான் மேக்கப் போட்டுப்பேன்.." என்றாள்.

கட்டிலின் மீது அமர்ந்திருந்த மிருத்யூ விழிகளை சுழற்றினான். வாயை திறக்காமல் இருக்க பெரிய பாடு பட்டான்.

அலங்கரிக்கும் பெண்மணி தனது விசிட்டிங் கார்டை மிருதுளாவிடம் நீட்டினாள்.

"தேங்க் யூ.." என்றபடி வாங்கிக் கொண்டாள் அவள்.

"உட்காருங்க.. உங்களுக்கும் அலங்காரம் செஞ்சி விடுவேன்.." என்றவள் மிருதுளாவை அமர வைத்து அவளின் கூந்தலில் கரம் பதித்தாள்.

பிரேம் தனது விக் தலைமுடியையும் ஒட்டு தாடியையும் பரிசோதித்தான். புயல் அடித்தாலும் சேதாரம் ஆகாது என்று புரிந்தது.

"ஆல் பர்பெக்ட்.." தனது கமண்டலத்தையும், கைத்தடியையும் எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

ஹாலில் பெரிய கூட்டம் கூடியிருந்தது. வீட்டிலிருந்த பாதி பேர் அங்கேதான் இருந்தனர். அழகான பெண்கள் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள். திரைப்படம் ஒன்றில் நடைப்பெறும் திருமணத்திற்கு போடப்பட்ட செட் போல இருந்தது அந்த இடம்.

மிருதுளா கண்ணாடியில் தெரிந்த தன்னை அதிர்ச்சியோடு பார்த்தாள். நிச்சயம் எந்த பேரழகியும் தன் முன் தோற்று விடுவார்கள் என்பது அவளுக்கு புரிந்தது.

"யூ லுக் பிரிட்டி டியர்.." என்றாள் அலங்கரித்த பெண்மணி.

நான் அழகாய் உள்ளதை அர்விந்திடம் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டாள் மிருதுளா.

"தேங்க் யூ மேடம்.." என்றவள் அவசரமாக வெளியே ஓடினாள். மூன்று மெல்லிய அடுக்குகள் கொண்ட ஸ்கர்ட்டும், ஸ்லீவ்லெஸ் ரவிக்கையும் அணிந்திருந்தாள். இடுப்பு முழுதாய் தெரிந்தது. மேலே மெல்லிய துப்பட்டாவை ஒரு பக்கம் மட்டும் அணிந்திருந்தாள். அவ்விடத்தில் இது ஒன்றும் விசித்திரம் இல்லை என்று சொல்லி சிபிதான் இந்த உடை அணிய அவளை வற்புறுத்தி இருந்தாள். ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் பிறகு அவளுக்கு சரியாகி விட்டது.

அங்கிருந்தவர்கள் அவரவர் வேலையை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் சில இளசுகள் மட்டும் மிருதுளாவை நோட்டம் விட்டார்கள்.

படிகளில் படபடவென இறங்கிக் கொண்டிருந்த மிருதுளா கடைசி படியில் அந்த பக்கம் திரும்பி நின்றிருந்த ராகுலின் மீது மோதி நின்றாள். யாரோ என்ற எரிச்சலோடு ராகுல் திரும்பினான். அழகான பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

"சாரி சீனியர்.." என்றவள் அவனை தாண்டிக் கொண்டு ஓடினாள்.

அவளின் குரலை கேட்ட பிறகே அடையாளம் பிடிப்பட்டது அவனுக்கு. "மிருது.." குழம்பினான். அவளை தேடினான். தூரத்தில் ஒரு வாயிலை கடந்துக் கொண்டிருந்தாள். அவளின் பின்னே ஓட முற்பட்டான். ஆனால் அவனின் கரத்தை யாரோ பிடித்து நிறுத்தியிருந்தார்கள். திரும்பிப் பார்த்தான். ஜீவன் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன ராகுல்.. வந்த விசயத்தை மறந்துட்டியா?" என்றான் அவன்.

ராகுல் நெற்றியை பிடித்தபடி தனது இடத்திலேயே நின்றான். 'கொஞ்ச நேரத்துல என்னை பைத்தியமாக்கிட்டா..' என்று திட்டியவனுக்கு உடம்பு சிலிர்த்தது. கொஞ்சமாக நடுங்கியது.

சமையல் கூடத்தை நோக்கி பட்டாம் பூச்சி போல சென்றுக் கொண்டிருந்த மிருதுளா பாதியிலேயே நின்றாள்.

ஓயாமல் வெங்காயம் வெட்டி கண்களின் கண்ணீர் தீர்ந்து விட்டது அர்விந்துக்கு. மூன்று மூட்டை வெங்காயத்தை வெட்டி தந்து விட்டு எழுந்து நின்றவன் சோம்பல் முறித்தான்.

"அரை மணி நேரம் உனக்கு ரெஸ்ட்.." என்ற சொக்குவை நன்றியோடு பார்த்தான்.

"அதுக்குள்ள போய் குளிச்சிட்டு வந்துடு.. அழுக்கா உட்கார்ந்து நீ வெங்காயத்தை வெட்டினா குழம்பு கூட ருசி மாறிடும்.." என்றார் சொக்கு.

அர்விந்த் மௌனமாய் தனது பையை எடுத்துக் கொண்டு வெளியே வேலைக்காரர்கள் குளிக்க பயன்படுத்தும் குளியலறை நோக்கி நடந்தான்.

"எள்ளுதான் எண்ணெய்க்கு காயுது. இந்த எலி புழுக்கை எதுக்கு காயணும்?" தன்னையே தட்டிக் கேட்டுக் கொண்டான்.

"அவங்க எல்லாம் ஜாலியா உள்ளே ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க.. நான் ஏன் இங்கே இருக்கணும்? பிரேம்க்கு என்னை பழி வாங்க ஆசை. அதுக்கு இந்த டைம்மை யூஸ் பண்ணிக்கிட்டான்.!" புலம்பியபடியே சில் தண்ணீரில் குளித்து முடித்தான்.

அரை மணி நேரம்தான் டைம் என்பதால் சட்டென்று குளித்து முடித்தான். அவன் எப்போதுமே குளிப்பதை ரசித்து செய்பவன். வீட்டில் சாதாரண நாளில் குளித்தால் கூட ஒரு மணி நேரம் சாதாரணம் போல ஆகும். ஆனால் இங்கே என்ன சொல்ல?

ஈர தலையை துண்டால் துவட்டியபடியே சமையல் கூடம் நோக்கி நடந்தவன் தலைக்கு மேல் சிரிப்பு சத்தம் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தான். ஸ்வேதா நகைத்துக் கொண்டிருந்தாள். அர்விந்த் காலம் நேரம் உறைந்து அவளை வெறித்து பார்த்தபடி நின்றான். அவளை எட்டித் தொடும் அளவுக்கு கை நீளாமல் போய் விட்டதே என்று கவலைப் பட்டான். அதே நேரத்தில் அவனுக்கு நேர் எதிரில் நின்றிருந்த மிருதுளா அவனின் கண்களில் தெரிந்த பேராசை கண்டு அதிர்ந்துப் போனாள். இப்படி அவன் எதை ஆசையோடு பார்க்கிறான் என்ற எண்ணத்தோடு வெளியே வந்தாள். அண்ணாந்துப் பார்த்தாள். ஸ்வேதா பால்கனியின் கைப்பிடி சுவரின் மீது சாய்ந்து நின்றுக் கொண்டு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.

தன் முன் யாரோ வந்து நிற்பதை உணர்ந்து நேரே பார்த்தான் அர்விந்த். அழகான பெண் ஒருத்தி நின்றிருந்தாள். அது மிருதுளா என்பதை சில நொடிகளுக்கு பிறகுதான் அவன் இனம் கண்டான்.

அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருவாகி உருண்டு கன்னத்தில் விழுந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN