குரங்கு கூட்டம் 6

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாடியில் நின்றிருந்த பெண் அழகாய் இருந்தாள். ஆனால் அவளை ரசிக்கும் அளவுக்கு மிருதுளாவுக்கு மனம் இல்லை.

"மிருது.." அவளின் கையை பற்றினான் அர்விந்த்.

"உனக்கு ஏன் அவளை பிடிச்சிருக்கு?" அண்ணாந்து பார்த்தபடியே கேட்டாள் மிருதுளா. அவன் கண்களில் இருந்த காதலை அவளால் கண்டுக் கொள்ள முடிந்தது. இத்தனை வருட நட்பில் இதை கூட அறியாவிட்டால் பிறகு எப்படி?

"அழாத மிருது.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு.." கெஞ்சியவனை திரும்பிப் பார்த்தாள். அர்விந்த் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளின் கை பிடித்து தூரமாக அழைத்துச் சென்றான். குடோன் போல இருந்தது ஒரு கட்டிடம். அதன் பின்னே சென்ற பிறகு அவளின் கையை விட்டவன் "சாரி மிருது.." என்றான்.

மிருதுளாவுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. அவனால் பார்க்க முடியவில்லை. அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். விம்மி அழுதவளின் முதுகை வருடி விட்டான்.

"நிஜமா சாரி மிருது.. உன் மனசுல லவ் வர நான் காரணமா இருந்திருப்பேன்னு நான் யோசிக்கவே இல்ல. யெஸ் ஐ லவ் யூ‌.. ஆனா இது நீ கேட்கும் லவ் இல்ல.. உன்னை பார்த்தா எனக்கு எந்த பீலிங்க்ஸ்ம் தோணலம்மா. நான் உன்னை ஜெண்டர் பிரிச்சி கூட பார்த்ததே இல்ல. உன்னை அபெக்சனோடு பார்க்கிறது.. இட்ஸ் டிபிகல்ட் டூ மீ! நான் இந்த இரண்டு நாளா டிரை பண்ணேன் மிருது. ரொம்ப டிரை பண்ணேன். ஆனா வொர்க் ஆகல.!" என்றான் அவளின் தோளில் முகம் புதைத்தபடி.

அவன் சொல்வது அவளுக்கு புரிந்ததுதான் இருந்தது. ஆனால் அவளுக்கு வலித்தது. சின்னதாக உண்டான ஆசை. இதுவரை வெளிக்காட்டியது இல்லைதான். ஆனாலும் அவளின் ஆசை ஆசைதானே?

"நீ இப்ப என்ன மாதிரி டிரெஸ் பண்ணி இருக்க தெரியுமா? சன்னியாசம் போனவனுக்கு கூட ஆசை வரும் இப்ப உன்னை பார்த்தா.. ஆனா எனக்கு ஒன்னுமே தோணல மிருது.!" வருத்தமாக சொன்னான்.

தனது ஆசைக்காக இத்தனை வருட நட்பை உடைத்துக் கொள்ள வேண்டுமா என்று யோசித்தாள்.

அவனின் சட்டையிலேயே தன் கண்ணீரை துடைத்துவிட்டு விலகி நின்றாள் மிருதுளா.

"என்னவோ போய் தொலை." என்றுவிட்டு அங்கிருந்து செல்ல திரும்பினாள். அவளுக்கு முன்னால் வந்து நின்றான் அர்விந்த்.

"அழ போறியா?"

மிருதுளா நிமிர்ந்தாள். அவனை பார்த்தாள். அழ வேண்டும் போலதான் இருந்தது. ஆனால் தான் அழுதால் அது நண்பனுக்கு இன்னும் அதிக சங்கடத்தை வரும் என்று அறிவாள்.

"நான் போய் ஸ்வீட் சாப்பிட போறேன். சாரியாகிடுவேன்.." என்றாள் உதட்டை கடித்தபடி.

அவளின் கன்னத்தில் இருந்த கொஞ்சம் ஈரத்தை அழுத்தமாக துடைத்து விட்டான் அர்விந்த்.

"நீ ரொம்ப ப்யூட்டிபுல். ஆனா உனக்கும் எனக்கும் செட் ஆகாம போயிடுச்சி. கொஞ்சமா வருத்தப்படுறேன் மிருது, உன் மனசை காயப்படுத்தியதுக்காக. ஆனா ரியலி சாரி. உன்னோட பர்பெக்ட் பார்ட்னர் கண்டிப்பா உன்கிட்ட வந்து சேருவான்.!" அவளின் தலையை வருடியபடி சொன்னான்.

"ஆனா நாம கிஸ் பண்ணிக்கிட்டோம்.." முத்தத்தின் நினைவில் மீண்டும் குரல் உடைந்தது.

அர்விந்த் பெருமூச்சு விட்டான். "நான் அன்னைக்கு கான்சியஸா இல்ல. ஐஸ்கீரிமை கூட எத்தனையோ முறை ஷேர் பண்ணி சாப்பிட்டு இருக்கோம்.. அது மாதிரி நினைச்சிக்க வேண்டியதுதான்.." என்றவனின் தோளில் குத்தினாள்.

"நான் நிஜமான பீலிங்ல தந்தேன்.." உதட்டை சுழித்தபடி சொன்னாள்.

"ஆமா.. எனக்கு தெரியாதா உன் பீலிங்கை? ஏதாவது மூவியில் கிஸ் சீன் பார்த்திருப்ப.. கிஸ் பண்ணா எப்படி இருக்கும்ன்னு செக் பண்றதுக்காக என்னை யூஸ் பண்ணி இருப்ப.!"

மிருதுளா தன் உதட்டின் உள் பகுதியை கடித்தாள். அவன் சொன்னதில் பாதி உண்மை இருந்தது. ரோஜா திருமணத்தின் முந்தைய நாளில் ஒரு ஆங்கில திரைப்படம் பார்த்தவள் அதன் காரணமாகதான் இவனை முத்தமிட்டு இருந்தாள். முத்தமிடும் முன்புதான் இவனை காதலிக்கலாம் என்றும் முடிவெடுத்து இருந்தாள்.

"நாம இங்கே வந்த வேலை முடியட்டும். அப்புறம் வீட்டுல அலையன்ஸ் பார்க்க சொல்லலாம். நிச்சயம் உனக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை கிடைப்பான்.." நம்பிக்கையோடு சொன்னான் அர்விந்த்.

மிருதுளா சோகமாக தலையசைத்தாள். அவனை விட்டுவிட்டு வீட்டுக்குள் நடந்தாள்.

'ஒரு நண்பன் காதலுக்காக நாடகம் ஆட வந்தேன். ஒரு நண்பன் காதலுக்காக என் காதலையே கை விட்டுட்டேன்.!' மனதுக்குள் சொல்லிக் கொண்டவளுக்கு நெஞ்சம் விம்மிக் கொண்டேதான் இருந்தது.

ஹாலின் ஒரு மூலையில் நான்கைந்து பெண்கள் அமர்ந்து பாட்டு கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார்கள். ஐந்தாறு பெண்கள் அந்த பாடலுக்கு ஏற்றார் போல நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். மிருதுளாவுக்கு எதிலும் கவனம் செல்லவில்லை. எதையோ இழந்தது போல உணர்ந்தாள்.

அர்விந்தோடு இருந்தால் காலமெல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கலாம் என்று நினைத்திருந்தாள். அவன் எப்போதுமே அவளை அழ விட்டதில்லை. எப்போதும் சிரிப்பை மட்டும்தான் தருவான். அவனை தன் கணவனாக கொள்ளாதது தனது துரதிஷ்டம் என்று நினைத்தாள். சோகமாக மாடியை நோக்கி நடந்தாள். தூரமாக அமர்ந்திருந்த பிரேம் அவளின் முகம் பார்க்கவில்லை. ஆனால் அவளின் உடையை கண்டு விட்டான். கோபமாக வந்தது அவனுக்கு.

"சுவாமி.. இந்த தேர்தல்ல நான் ஜெயிப்பேனா இல்லையான்னு சொல்லுங்க.." வெங்கட்டின் நண்பர் ஒருவர் பிரேம்மின் காலடியில் அமர்ந்த வண்ணம் கேட்டார்.

பிரேமுக்கு சலித்தது. இந்த வீட்டுக்குள் அவன் சாமியாராக நுழைந்த நேரத்தில் இருந்து ஆளாளும் கேள்வி கேட்டே சாகடித்துக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் ஏதோ ஒன்று தேவையாக இருந்தது. கேட்டவர்கள் அனைவருக்கும் விபூதி தந்ததில் பிரேமின் இடுப்பு பையில் இருந்த மொத்த விபூதியும் காலியாகி விட்டிருந்தது. இத்தோடு ஐந்தாறு முறைக்கும் மேல் கமண்டலத்தில் தண்ணீரை நிரப்பி விட்டான். அவனிடம் ஆசி வாங்கிய அனைவருமே பேர், புகழ், பணம்தான் கேட்டார்கள். கல்வி தானம், அன்ன தானம், உடுப்பு தானம் செய்ய சொல்லி அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தான் அவன். ஆனால் அவர்களுக்கு அதில் திருப்தியில்லை. ஹோமங்கள் செய்யவோ, புண்ணிய யாத்திரை செல்லவோ சொல்வார் இவர் என்று எதிர்ப்பார்த்தார்கள் அவர்கள்.

"ஐநூறு பேருக்கு கல்வி தானம் செய்யுங்கள்.. நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவீர்கள்.." என்றான் தன் முன் இருந்தவரிடம்.

"சாமி.. நீங்கதான் என் தெய்வம்.." என்றபடி காலில் விழுந்தார் அவர். "இப்பவே போய் ஸ்கூல் ஒன்னு ஆரம்பிக்கிறேன் சாமி.!" என்றபடி வெளியே ஓடினார் அவர்‌. பிரேமுக்கு சிரிக்க தோன்றியது. 'தானத்திற்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் தெரியாத பிசாசு..' என்று மனதுக்குள் திட்டினான்.

"சாமி உங்க வாய்ஸ் எப்படி இவ்வளவு இளமையா இருக்கு?" பிரேமின் காலடியில் அமர்ந்திருந்த இன்னொருவன் கேட்டான்.

"பல ஆண்டுகள் தவம் செய்தால் யாருக்கு வேண்டுமானாலும் இளமை மாறாத குரல் வளம் இருக்கும்.." என்றான் பிரேம் ஞானியை போல பார்த்து.

பாலும் பழமும் தந்தார்கள். வயிறு முட்ட உண்டான்.

"நான் சென்று இரண்டு மணி நேரங்கள் தியானம் செய்து விட்டு வருகிறேன். எனக்கு சற்று தனிமை கொடுங்கள்.." என்றவன் எழுந்து நின்றான்.

"தியானத்தில் நாங்களும் கூட்டு சேரலாமா சாமி?" வெங்கட்டின் இன்னொரு நண்பர் கேட்டார்.

"தலைகீழாய் நின்று இரண்டு மணி நேரத்திற்கு தியானம் செய்ய யாரால் எல்லாம் முடியுமோ அவர்கள் அனைவரும் என்னோடு கலந்துக் கொள்ளலாம்.." என்றான். அனைவரும் திகைத்துப் போய் அப்படியே அமர்ந்துக் கொண்டனர். பிரேம் கமண்டலம் கைத்தடியோடு அங்கிருந்து கிளம்பினான்.

"சம்பத் இன்னைக்கு இங்கே வர போறான்.. அவனோட ஆட்கள்ல யாராவது ஒருத்தரை நம்மால கவுக்க முடிஞ்சா அதுவே நமக்கு அச்சீவ்மெண்ட்தான்.." ஜீவன் சொல்லியதற்கு சரியென்று தலையசைத்தான் ராகுல்.

முதல் மாடியின் கைப்பிடி சுவரில் சாய்ந்து நின்றபடி கீழே ஹாலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். யாரையெல்லாம் தனது சந்தேக வளையத்திற்குள் கொண்டு வர முடியும் என்றும், யாரை பிடித்தால் தனக்கு தேவையான ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் யோசித்துக் கொண்டிருந்தான்.

சம்பத் ஒருவனை ஒழித்தாலே இந்த நாட்டில் பத்து சதவீத வன்முறைகள் குறைந்து விடும் என்பது அவனின் கணக்கு.

ஹாலின் ஒரு மூலையில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள் ரூபாவதி. சேலை கட்டி, அலங்காரத்தோடு இருந்தாள். அவள் காக்கி உடையில் இருந்தாலும் சரி வண்ண உடையில் இருந்தாலும் சரி அவள் மீது அவன் கொண்ட வெறுப்பு தீராது. உயர் அதிகாரியாகவே இருந்தும் கூட அவளை எந்த விதத்திலும் மதிக்க வேண்டும் என்று தோன்றவில்லை ராகுலுக்கு. ரவுடிகளை விடவும் மோசமானவளாக இருந்தாள் அவள்.

அவளையே வெறித்துக் கொண்டிருந்தவன் அனிச்சை போல விழிகளை திருப்பினான். மிருதுளா சென்ற வழியிலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்தாள்‌. போகும்போது இருந்த துள்ளலும், புன்னகையும் இல்லை. சோகமாக மெதுவாய் நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.

படிகளில் கவனமே இல்லாமல் ஏறினாள். சிபியின் அறை நோக்கி செல்ல இருந்தவளின் முன்னால் வந்து நின்றான் ராகுல்.

நிமிர்ந்தவள் "சொல்லுங்க சீனியர்.." என்றாள். அவளின் குரலில் ஏன் இவ்வளவு வலி என்று வருத்தம் கொண்டான் அவன்.

"உனக்கு என்ன ஆச்சி? ஏன் இவ்வளவு பீலிங்கா இருக்க?" தயக்கமாக கேட்டவனிடம் மறுப்பாக தலையசைத்தவள் "நான் நல்லா இருக்கேன் சீனியர்.." என்றவள் அவனை தாண்டிக் கொண்டு நடந்தாள்.

அவள் அறைக்கு வந்து சேர்ந்தபோது சிபி கட்டிலில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள். மிகவும் சோகமாக இருந்தாள்‌.

"சிபி.."

"மிருது.." என்றவள் சோகமாக தன் உள்ளங்கைகளில் முகம் புதைத்தாள். "சம்பத் இன்னைக்கு இங்கே வர போறான். அவனோட இன்னைக்குதான் எனக்கு பர்ஸ்ட் மீட்.. ரொம்ப பயமா இருக்கு மிருது.." என்றவளின் கரங்கள் கூட நடுங்கியது.

மிருதுளா தனது சோகம் மறந்து விட்டு அவளின் அருகே சென்று அமர்ந்தாள். அவளின் கைப்பற்றினாள்.

"பயப்படாத சிபி.. நாங்க இருக்கும்வரை உனக்கு ஒன்னும் ஆகாது.." என்றாள். சிபி சரியென்று தலையசைத்தாள். மிருதுளாவை அவளுக்கு பிடித்திருந்தது. சிபி மிருதுளாவை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் கதவு படீரென திறக்கப்பட்டது. இரு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள். பிரேம் உள்ளே வந்து கதவை சாத்தினான். மறக்காமல் தாழிட்டான்.

சிபி எழுந்து நின்றாள். அவனோடு பேச‌ வேண்டியது நிறைய இருந்தது. நேற்றிரவு நிறைய பேசியிருந்தாலும் கூட செய்தி பரிமாற்றங்கள் தீராத ஒன்று போலவே இருந்தது.

"மிருது.. வாட் இஸ் திஸ்?" கோபத்தோடு அவன் கேட்கவும் மிருதுளா குழப்பத்தோடு எழுந்தாள்.

"எ.." அவள் மேலும் கேட்கும் முன் அவளின் அருகே வந்தவன் "என்ன கருமம் பிடிச்ச டிரெஸ் இது?" என்று கத்தினான்.

அவனின் கத்தலில் கொஞ்சம் பயந்து விட்டாள் மிருதுளா.

"ரவுடிங்களா சுத்திட்டு இருக்காங்க.. இந்த இடத்துல இந்த டிரெஸ் உனக்கு தேவையா?" எனக் கேட்டவன் அவளை அறைய கையை ஓங்கினான். அவனை பிடித்து தூர தள்ளினாள் சிபி.

"ஆர் யூ மேட்? நானும் கூடதான் அவளை போல டிரெஸ் பண்ணி இருக்கே.." சிபி மேலும் சொல்லும் முன் "நீயும் இவளும் ஒன்னு கிடையாது சிபி. நீ ஒரு ரவுடியோட தங்கை. மாஃபியா லீடருக்கு பியான்சி. உன்னை எவனும் நேரா கூட பார்க்க மாட்டான். ஆனா இவ என் பிரெண்ட்.. யாராவது டீஸ் பண்ணா கூட இவளுக்கு திருப்பி பதில் சொல்ல தெரியாது.." என்றான் அவன்.

அவனுக்கு இவ்வளவு கோபம் வரும் என்று கூட இத்தனை நாட்களாக சிபிக்கு தெரியாது. கோபத்தில் சிவந்திருந்தது அவனின் கண்கள்.

"அமைதியா விடு பிரேம்.. யார் என்னை டீஸ் பண்ண போறா.? சிபிக்கிட்ட முகத்தை காட்டிட்டு இருக்காத.. போய் உன் வேலையை பாரு.!" என்ற மிருதுளா இருக்கையை தேடி நகர்ந்தாள். அவளின் கையை பற்றி நிறுத்தினான் பிரேம்.

அவளின் முகம் பார்த்தான். கண்ணீர் காய்ந்த கோடுகள் கன்னத்தில் அரை குறையாக இருந்ததை அவனால் பார்க்க முடிந்தது. அவளின் குரலில்தான் வித்தியாசத்தை அறிந்திருந்தான் அவன்.

"என்ன ஆச்சி?" கண்களை சுருக்கியபடி கேட்டான்.

மிருதுளா சுவரை பார்த்தாள். "ஒன்னும் இல்ல.. நீ போ.?" என்றவளின் முகத்தை பற்றி தன் புறம் திருப்பினான். "எதுக்கு அழுதிருக்க? உன் குரல் ஏன் இப்படி இருக்கு? யார் என்ன சொன்னா?" எனக் கேட்டான்.

மிருதுளா இடம் வலமாக தலையசைத்தாள். "உண்மையை சொல்லு.." அவளின் முகத்தை மீண்டும் தன் புறம் திருப்பி அவளின் கண்களை பார்த்தவாறு கேட்டான்.

மிருதுளாவின் விழிகள் கலங்கியது. பிரேம் திகைத்தான். "மிருது.."

விம்மலோடு அவனை அணைத்துக் கொண்டாள். விம்மி விம்மி அழுதாள். இப்போது பிரேம் பயந்து போனான். யாராவது இவளிடம் தவறாக நடக்க முயன்றிருப்பார்களோ என்று கலங்கினான்.

"அர்விக்கு என்னை பிடிக்கல.." விம்மலுக்கு இடையே சொன்னாள் அவள்.

பிரேம் குழம்பினான். "அவன் ஏன் உன்னை பிடிக்கலன்னு சொல்ல போறான்? எங்க யாரையும் விட அவனுக்குத்தான் உன்னை ரொம்ப பிடிக்கும்.!"

மறுப்பாக தலையசைத்தவளின் மூக்கு அவனின் நெஞ்சில் உரசியது.

"அவன் என்னை லவ் பண்ணல. வேற ஏதோ பொண்ணை லவ் பண்றான். என்னை பார்த்து அவனுக்கு எந்த பீலிங்கும் வரலன்னு சொல்லிட்டான்.." என்றவள் அதிகமாக அழுதாள்.

இது பிரேம் எதிர்பார்த்த ஒரு விசயம்தான். அர்விந்த் இப்படி முன்கூட்டியே சொல்லி விட்டது சரியென்றே பட்டது அவனுக்கு. நம்ப வைத்து, இவளுக்குள் ஆசையை வளர விட்டு பிறகு முடியாதென்று சொல்வதற்கு இது பரவாயில்லை என்று தோன்றியது.

அவளின் முதுகை வருடி தந்தான்.

"இட்ஸ் ஓகேம்மா.. அவன் இல்லன்னா என்ன.. உனக்கு சூப்பரான பையன் கிடைப்பான்.." என்றான்.

மிருதுளா நிமிர்ந்துப் பார்த்தாள். "அவனை நீ தூக்கி போட்டு மிதிக்க மாட்டியா?" எனக் கேட்டாள் ஏமாற்றமாக.

பிரேமுக்கு சிரிப்பு வரும்போல இருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

"நான் அவனை அடிச்சா உன் சோகம் தீர்ந்துடுமா?"

மறுப்பாக தலையசைத்தாள்.

"அப்படின்னா குட் கேர்ளா இந்த டிரெஸ்ஸை மாத்திட்டு ஹேப்பியா இரு.." என்றவன் அவளை விட்டு விலகி நின்றான். தன் தோளில் இருந்த மஞ்சள் துண்டை எடுத்தவன் "அழுகையால மேக்கப் முழுசா கலைஞ்சி போய் இருக்கு.." என்றபடியே அவளின் முகத்தை துடைத்து விட்டான்.

சிபி அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தபடி அமைதியாக கட்டிலில் அமர்ந்தாள்.

"ஒட்டு கேட்கிறது தப்பு ராகுல்.." ஜீவனின் குரலால் ஜன்னலை விட்டு விலகி வந்தான் ராகுல். பிரேம் சிபியின் அறைக்குள் நுழைவது கண்டு ஓடி வந்தவன் உள்ளே என்ன நடக்கிறது என்பதை கேட்டே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தான். இந்த குரங்கு கூட்டத்திற்கும் சிபிக்கும் இடையில் என்ன சம்பந்தம் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. ஆனால் மிருதுளா அர்விந்தை காதலித்தது அறிந்து எரிச்சல் கொண்டான். அவளின் காதல் புஸ்வாணமாக புகைந்து போனது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான். இந்த வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு அர்விந்த்க்கு பிரியாணி வாங்கி தர வேண்டும் என்று நினைத்தான். காலரை தூக்கி விட்டபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

மிருத்யூ தன் முன் நின்றிருந்த சித்துவை பயத்தோடு பார்த்தான். சாப்பிடலாம் என்று அறையை விட்டு வெளியே வந்திருந்தான் அவன். ஆனால் சாப்பாடு கூடத்திற்கு செல்லும் முன்பே அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து விட்டான் சித்து.

சித்துவின் அறை பெரியதாக இருந்தது. மிருத்யூவின் வீடே அவ்வளவுதான் இருக்கும். கருப்பு திரை ஜன்னல்களில் இருந்தது. அந்த அறையில் அவனை தவிர வேறு யாருமே வந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது மிருத்யூவுக்கு.

மிருத்யூவை சோஃபாவில் அமர.. தள்ளி விட்டான் சித்து. எதிரே நின்றவன் வலது காலை தூக்கி சோபாவின் மேல் வைத்தான்.

'யாத்தீ.. பையன் நல்ல வேளையா பேண்ட் போட்டுட்டு இருக்கான்..' என்று நினைத்தான் மிருத்யூ.

"நீ ரொம்ப க்யூட்டாக இருக்க மிருணா.." என்றவனை குழப்பமாக பார்த்தவன் 'அது யார் மிருணா..?.. ஓ நான்தானா?' என்று நினைத்தான். 'ஆனா நான் நிஜமாவே க்யூட்டா?' குழப்பத்தோடு கண்ணாடியை தேடினான். அந்த அறையில் கருப்பை தவிர வேறு எதுவுமே இல்லை. கண்ணாடியையும் காணவில்லை.

'கண்ணாடியை ரெஸ்ட் ரூம்ல வச்சிருப்பான் போல..' கவலைக் கொண்டவன் கழுத்துக்கு கீழே தன்னை பார்த்துக் கொண்டான். மிருதுளாவின் பழைய சுடிதார் ஒன்றை அணிந்துக் கொண்டிருந்தான். சலிக்கிறது என்று குளிக்க கூட இல்லை. அவனையே அப்படி அடித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சித்து.

"உன்னால வாய் பேச முடியாதுங்கறது எனக்கும் கவலையாதான் இருக்கு.." என்றவனை விழி மூடாமல் பார்த்தான் மிருத்யூ. 'நீ இப்படி சொல்றதுதான்டா எனக்கு கவலையா இருக்கு.!'

"உன்கிட்ட விருப்பம் கேட்க ஆசைப்படல நான். ஏனா நான் ஒரு மாதிரி எல்லோரையும் கன்ட்ரோல் பண்ணியே பழகிட்டேன். உனக்கு ஓகேன்னா நீ இங்கேயே என்னோடு இருந்துடு. எங்க வீட்டுல மேரேஜ் எல்லாமே ஏதாவது ஒரு கான்ட்ராக்ட்தான். அதனால என்னால உன்னை மேரேஜ் பண்ணிக்க முடியாது. ஆனா நீ இங்கே இருந்தா உன்னை யாருமே தர குறைவா நினைக்க மாட்டாங்க. எனக்கு வர போற வொய்ப் கூட அப்படி நினைக்க மாட்டா.. ஏனா அவளை விடவும் நீதான் எனக்கு முக்கியம்ன்னு அவளுக்கும் தெரியும்.. உனக்கு இங்கே எல்லா ரைட்ஸ்ம் இருக்கு.."

'அடப்பாவி.. வைப்பாட்டியா இருப்பியாங்கறதைதான் இப்படி சுத்தி வளைச்சி கேட்டியா? விளங்குவடா நீ!' என நினைத்த மிருத்யூ மறுத்து தலையசைக்க இருந்த நேரத்தில் ‌"உன்கிட்ட இரண்டு ஆப்சன் தரேன். நீ இங்கேயே இருந்துடு. இல்லன்னா உன்னை இங்கேயே இருக்கும்படி நான் செய்வேன்.!" என்றான் அவன்.

'பரதேசி.. ஆப்சன் எங்கேடா?' கத்தி கேட்க நினைத்தான் மிருத்யூ.

"இங்கேயே இருக்கியா?" என கேட்ட சித்துவின் கரம் மிருத்யூவின் கன்னத்தில் படர்ந்தது. மிருத்யூ பயந்து பின்னால் சாய்ந்தான். அவன் சாய சாய சித்துவும் சேர்ந்து சாய்ந்தான். 'காலை இப்படி வச்சிக்கிட்டு சாய்றது ரொம்ப கஷ்டமாச்சே.. பையன் யோகாசனமெல்லாம் கத்து வச்சிருப்பான் போலிருக்கு!' பெருமூச்சு விட்டான் மிருத்யூ.

"நீ என்னை பார்த்து பயப்படும் ஒவ்வொரு முறையும் எனக்கு உள்ளுக்குள்ள ஜிவ்வுன்னு ஏறுது.!"

'இதுக்கு மேல பக்கத்துல வராதடா.. ஊமைங்கறதை மறந்து கத்தி வச்சிடுவேன்.. எனக்கும் பிரெண்ட்ஸ் பிரெண்ட்ஸ்ன்னு சில ஜீவன்கள் இந்த வீட்டுலதான் சுத்திட்டு இருக்குங்க. ஒரு குரங்கு கூடவா என்னை தேடணும்ன்னு நினைக்கல.. பாவிகளா சீக்கிரம் வந்து காப்பாத்துங்கடா‌.. இல்லன்னா இவன் என்னை ரேப் பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு.!' மனதுக்குள் கத்திக் கொண்டிருந்தான் மிருத்யூ.

சித்துவின் உதடுகள் அவனின் காதோரம் மோதியது. மிருத்யூவுக்கு மொத்த உடம்பும் நடுங்கியது.

'இவனை தள்ளி விட்டுட்டு ஓடிடு மிருத்யூ..' என்று கூச்சலிட்டது மனம். ஆனால் அவ்வளவு பெரிய உருவமாக இருந்தவனை எப்படி தள்ளுவது என்றும் மலைப்பாக இருந்தது.

சித்துவின் நாக்கு மிருத்யூவின் காதை முழுதாய் ஈரம் செய்தது. 'நான் குளிக்கலடா.. இப்படியெல்லாம் செஞ்சி என்னை பாவியாக்காதடா.. கோன் ஐஸை கூட நானெல்லாம் இப்படி நக்கியது இல்லடா.. நீ என்னடா இப்படி வெறி பிடிச்சி போய் இருக்க?' என்று கேட்க நினைத்தான் மிருத்யூ. ஊமை வேடமிட்ட பிறகு எங்கே கேட்க?

சித்துவின் உதடுகள் மிருத்யூவின் கன்னங்களை நோக்கி நகர்ந்தது. அப்போதுதான் அவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை கண்டான் மிருத்யூ. மூச்சே வரவில்லை. 'முடியாதுன்னு தலையசைச்சா கொன்னுடுவானோ?'

"நீ ரொம்ப பிரிட்டி.!" என்ற சித்துவின் பற்கள் அவனின் கன்னத்தில் பதிய இருந்த நேரத்தில் அந்த அறையின் கதவு தட்டப்பட்டது.

சித்து ஏமாற்ற முகத்தோடு விலகினான். "அப்புறம் மீட் பண்ணலாம் ப்யூட்டி.‌." என்றவன் அவனுக்கு வழி விட்டு நின்றான்.

படபடவென அடித்துக் கொண்ட இதயத்தோடு அந்த அறையை விட்டு வெளியே ஓடினான் மிருத்யூ. அந்த அறையின் வெளியே நின்றிருந்த அந்த வீட்டின் தடியன்களின் ஒருவன் மிருத்யூவின் வியர்த்த முகம் கண்டு புருவம் உயர்த்தினான்.

மிருத்யூ யாரையும் பார்க்கவில்லை. நேராக சிபியின் அறைக்கு ஓடினான்.

மிருத்யூ வந்தபோது மிருதுளா ஓரளவு தேறி விட்டிருந்தாள். சகோதரனை ஆச்சரியமாக பார்த்தாள்.

"என் பேக்.." என்றபடியே தேட ஆரம்பித்த மிருத்யூ "நான் ஊருக்கு போறேன் சாமி.. இனியும் இங்கே நான் இருந்தா என்னை போல முட்டாள் யாருமே இருக்க மாட்டாங்க.." என்றான்.

"ஏன்டா என்ன ஆச்சி?" என கேட்ட மிருதுளாவிடம் பாய்ந்து வந்து நின்றவன் "இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா இவளோட அண்ணன் என்னை கைமா பண்ணியிருப்பான்.." என்றான் கோபமாக.

சிபி விழித்தாள். மிருத்யூவின் மீது பரிதாபப்பட்டாள்.

"ஆம்பள மாதிரி பேசுடா.. ஒரு ஆம்பளையை உன்னால சமாளிக்க முடியாதா?" என கேட்ட சகோதரியை எரிச்சலாக பார்த்தவன் "பைத்தியம்.. இவ அண்ணன் ஆம்பள கிடையாது.. நரகத்துல இருந்து நேர இம்போர்ட் ஆன எருமை மாடு.. அவன் ஹார்ம்ஸ் என்னோட மூணு கைக்கு சமம்.!" என்று கையில் அளவு காட்டினான்.

"இதுக்குதான் அம்மா அப்பவே சொன்னாங்க கீரை சாப்பிடுடான்னு.."

தங்கையின் தலையில் கொட்டினான் மிருத்யூ. "அதுவும் இதுவும் ஒன்னா பேயே?" எனக் கேட்டான் எரிச்சலோடு.

மிருதுளா தன் தலையை தேய்த்துக் கொண்டாள்.

"சிபிம்மா.." சிபியின் பெரியம்மா கதவை திறந்தாள். மூவரையும் பார்த்தவள் "சம்பத் தம்பி வந்திருக்காரு." என்றுவிட்டு அங்கிருந்து சென்றாள்.

சிபிக்கு உடம்பு வியர்த்தது‌. சம்பத்தை நேரில் இன்றேதான் முதல் முதலாக பார்க்க போகிறாள். அவனின் புகைப்படமே அவளுக்கு பிடிக்கவில்லை. நேரிலும் பிடிக்காதுதான். ஆனால் அவன் முன் சென்று நிற்க கடுப்பாக இருந்தது.

மூவரும் ஹாலுக்கு கிளம்பினார்கள். சோபா ஒன்றில் சம்பத் நடுநாயகமாக அமர்ந்திருந்தான். மிருத்யூ ஆவென திறந்த வாயை மூடவில்லை. ஏனெனில் சித்துவை விடவும் இரு மடங்கு அதிகமாக இருந்தான் சம்பத்.

அவனின் பின்னால் நின்றிருந்த இருவர் மெஷின் கன் போல இருந்த துப்பாக்கிகளை கைகளில் வைத்திருந்தனர். சிபியின் உள்ளங்கை வியர்த்தது. மிருதுளாவின் கரத்தை இறுக்கமாக பற்றினாள்.

மிருதுளாவின் கண்கள் ராகுலை தேடியது. 'நம்ம சீனியர் போலிஸாதானே இருக்காரு? துப்பாக்கியோடு இரண்டு பேர் இருக்காங்க.. எதுவும் செய்யாம இருக்காரே!' என்று மனதுக்குள் பொருமினாள்.

மிருதுளா உடையை மாற்றாமல் இருப்பது கண்டு பிரேம் அவளை முறைத்தான். ராகுல் சம்பத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்‌. சம்பத்தின் அருகில் இருந்த ஒருவன் மிருதுளாவை மேலும் கீழும் பார்த்து கடைசியில் அவளின் இடுப்பில் பார்வையை நிலைக்க வைத்திருந்தான்.

இந்த இடத்துலதான் உங்க கிரேஸி ரைட்டர் பிரேக் விட போறேன்.

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN