பௌர்ணமி 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலா கன்னத்தை தேய்த்தபடி அத்தையை முறைத்தான். "அம்மாவுக்கும் மகளுக்கும் என்னை அடிச்சிக்கிட்டே இருந்தாதான் சோறு இறங்கும் போல.!" என்று முனகினான்.‌

முல்லை அவனை விடவும் அதிகம் முறைத்தாள். "எதுக்குடா பொய் சொல்லி என்னை இங்கே வர வச்ச?" என்று கத்தினாள். அவளின் கத்தலில் வீட்டில் இருந்த மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.

"என்ன ஆச்சி?" எனக் கேட்டார் மரிக்கொழுந்து.

"என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு பொய் சொல்லி உன் மகன் என்னை இங்கே வர வச்சிருக்கான். இங்கே வரதுக்குள்ள உயிரே போய்ட்டு வந்துடுச்சி. இவனுக்கு என்ன அவ்வளவு கொழுப்பு?" எனக் கத்தினாள்.

மரிக்கொழுந்து மகனை முறைத்தார்.

"இப்ப என்னடா?" என்றார்.

"இவங்ககிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருந்தது. அதனாலதான்.." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் பூர்ணிமா.

'பைத்தியமா இவன்? எதுக்கு இப்படி பண்றான்?' என்று வருந்தினாள்.

முல்லை சந்தேகத்தோடு அவனைப் பார்த்தாள். "என்ன பேசணும்?"

"தனியா பேசணும்.." அத்தைக்கு மட்டும் கேட்கும்படி சிறு குரலில் சொன்னான்.

'பிராடு.. மறுபடி என்னவோ பண்றான்.‌!' மனதுக்குள் அவனை திட்டினாள்‌ பூர்ணிமா.

முல்லையை சாப்பிட அழைத்தாள் செண்பகம். மகளை பார்க்க ஓடி வந்ததில் சாப்பிட கூட இல்லை முல்லை. ஆனால் இப்போது பசியை விட ரோசம் முன்னால் வந்து நின்றது. இந்த வீட்டில் பச்சை தண்ணீர் கூட குடிக்க கூடாது என்று கங்கணம் கட்டிய நாள் நினைவில் வந்தது.

"நான் கிளம்பறேன்.." பர்ஸை இறுக்கியபடி திரும்பினாள் முல்லை. பூமாறன் அவளை சமாதானம் செய்ய இருந்தான். அதற்கு முன் அவளின் கையை பற்றினான் பாலா.

"நாம இன்னும் பேசல.." என்றான்.

முல்லை இகழ்ச்சியாக அவனை வெறித்தாள்.

"கொஞ்சம் முக்கியமா பேசணும்.." என்றவன் பூர்ணிமாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு முல்லையை இழுத்துக் கொண்டு அருகே இருந்த அறைக்கு சென்றான்.

"அவங்க என் அம்மாதானே? அப்புறம் ஏன் இவன் இழுத்துட்டு போறான்?" ஐஸ்க்ரீமை சுவைத்தபடியே கேட்டாள் பூர்ணிமா. அவளின் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்ட பூமாறன் "அவங்க உனக்கு அம்மா ஆகும் முன்னாடியே எங்களுக்கு அத்தை ஆகிட்டாங்க. அதனாலதான்.." என்றான். அவனின் பதிலில் அவளுக்கு திருப்தி இல்லை. அம்மாவை கேட்கவே முடியாது. பாலாவை கேட்டால் உண்மையை மட்டும் கடைசி வரை சொல்லவே மாட்டான். பூர்ணிமாவுக்கு சலித்தது. அப்படி என்னதான் நடந்தது என்று இப்படி இவர்கள் சண்டை போடுகிறார்கள் என்று யோசித்துக் குழம்பினாள்.

"உனக்கு என்ன வேணும்?" கேள்வி கேட்ட முல்லையை கண்டுக் கொள்ளாமல் அறையின் கதவை தாழிட்டான் பாலா.

"பாலா.."

"ஒரு நிமிசம் சொல்ல விடுறிங்களா?" அவனின் அதட்டலில் திகைத்து நின்றாள் முல்லை.

"என்ன சொல்ல போற?" சிறு குரலில் கேட்டாள்.

"பூர்ணிமாவோட சொந்த பந்தம் வந்து எங்களை விருந்துக்கு அழைச்சிருக்காங்க.. பூர்ணிக்கு எதுவும் தெரியாதுன்னு அவங்களுக்கும் தெரியும். இருந்தும் இப்படி பண்ணிட்டு இருக்காங்க. என்ன ஆச்சி என்ன ஆச்சின்னு கேட்டு பூர்ணி தினமும் என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா. யாரோ சொல்லி அவ யாருன்னு தெரிஞ்சிக்கறதை விட நீங்களே சொல்லிடுறது நல்லது. நான் சொல்வதை விடவும் நீங்க உங்க பாயிண்ட் ஆஃப் வியூவ்ல இருந்து சொன்னா பூர்ணி உங்களை மன்னிக்க சான்ஸ் இருக்கு.."

அவனை மீண்டும் அறைய வேண்டும் போல இருந்தது முல்லைக்கு.

"இந்த வீட்டுல அவளுக்கு சேப்தான். ஆனா வெளியே எல்லோரும் எதிரிங்க.. அவ உடையுறதை நான் விரும்பல.." என்றான் சுவரை பார்த்தபடி.

"நீ அவளை லவ் பண்றியா?" தயக்கமாக கேட்ட அத்தையை வெறித்தவன் "அவ என் அத்தை பொண்ணு.. அவ என் வொய்ப்.. அப்கோர்ஸ் ஐ லவ் ஹேர்.." என்றான் சீற்றமாக.

"அவ என்னை வெறுத்துட்டா அப்புறம் நீ அவளை நல்லபடியா பார்த்துப்பியா? அவளை அழ விடாம வச்சிப்பியா?" முல்லைக்கு குரல் நடுங்கியது.

பாலா "ம்" என்றபடி தலையசைத்தான்.

"நீங்க அன்னைக்கு அப்படி ஒரு தப்பை செய்யாம இருந்திருந்தா இன்னைக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது.." என்றவன் கதவை நோக்கி நடந்தான்.‌ அவனின் கைப்பற்றி நிறுத்தினாள் முல்லை. "இரண்டு நாள் முன்னாடி பூரணிக்கு ப்ரொபசல் மெஸேஜ் வந்தபோது நீ அவளை சந்தேகப்படலன்னு சொன்னா.. ஆனா நீ ஏன் பாலா என்னை நம்பல? நம்பிக்கைன்னா அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா, எதிரில் உள்ளவங்க என்ன சொன்னாலும் சரி.. பக்கத்துல இருப்பவங்ககிட்டயும் என்ன நடந்ததுன்னு ஒரு வார்த்தை கேட்டு இவங்க சொல்றதை நம்புறது. நம்பிக்கை மனசுல தானா உருவாகி இருக்கணும். என் பொண்ணுக்கு நீ அமைஞ்ச மாதிரி எனக்கு யாரும் அமையல.!"

அவளின் உதாரணம் பாலாவுக்கு முள் போல் தைத்தது. அவள் சொன்னது உண்மைதான். பூர்ணிமாவுக்கு அப்படி ஒரு அழைப்பு வந்தபோதும் கூட அவனால் ஒரு நொடி கூட பூர்ணிமாவை சந்தேகிக்க இயலவில்லை. அவள் மீது நம்பிக்கை என்று சொல்ல முடியாது. முல்லையிடம் எப்படி செய்யாத ஒன்றுக்கு சாட்சி கேட்டானோ அது போல பூர்ணி விசயத்தில் அவள் மீது பழி சொல்ல வேண்டுமென்றால் அவனால் எந்த விதத்திலும் உடைக்க இயலாத அளவுக்கு பலமான சாட்சி கேட்டான்.

"நீங்க தப்பு செய்யலன்னு.."

"நான் எதுவும் செய்யல பாலா.. அந்த ஆள் சொன்னது முழுக்க பொய்.. மலர் சாக காரணம் என் துரோகம் கிடையாது. அப்படியாவது நான் அந்த ஆளை கட்டிக்க சம்மதம் சொல்வேன்னுதான் அவ செத்தா. அதனால்தான் நான் அவளோட ஆசை நிறைவேறவே கூடாதுன்னு இந்த ஊரை விட்டு ஓடினேன். நான் அந்த ஆளை காதலிச்சி இருந்தா அந்த ஆளை ரகசியமாக கூட்டிப் போய் கல்யாணம் பண்ணிட்டு வந்திருப்பேன். மலர் வந்து இங்கே கெஞ்சி இருக்க மாட்டா.. கடைசியா ஒரு சாட்சி தரேன். கேட்டுக்கோ.. உன் மல்லி அத்தையோட புருசன் கோபுவைதான் நான் லவ் பண்ணிட்டு இருந்தேன். பூரணியோட அப்பா குறுக்கே வராம இருந்திருந்தா நான் இன்னேரம் கோபுவை மேரேஜ் பண்ணி செட்டில் ஆகி இருப்பேன்.. நீ போய் அவன்கிட்ட கேளு.. அவன் உண்மையை சொல்வான்‌. இதை பத்தி மாறனுக்கு தெரியும். அவன்கிட்ட கேளு. அவனும் சொல்வான். என் சொந்த ரோசத்தின் காரணமா இத்தனை வருசமும் நான் இதை சொல்லல. ஆனா இன்னைக்கு சொல்ல காரணம் என் பொண்ணோட லைஃப். அவளுக்காக மட்டும்தான்.." என்றவள் கதவை திறந்தாள்.

திறந்தவள் திகைத்து நின்றாள். பாலா சந்தேகத்தோடு வந்து எட்டிப் பார்த்தான். அதிர்ந்தவன் ஹாலை நோக்கி ஓடினான். ஆனால் அவனின் முயற்சிகள் வீண்தான்.

ஹாலின் நடு மத்தியில் மண்டியிட்டு இருந்த பூர்ணிமா பாலாவின் பாத தடம் சத்தம்‌ கேட்டு நிமிர்ந்துப் பார்த்தாள். ஆறாய் நீர் பெருகிய விழிகளில் இருந்து இப்போது கோப கனலும் சேர்ந்து புறப்பட்டது.

அவன் ஓரடி முன்னால் நடந்தான். அவனை தடுத்தார் அங்கே நின்றிருந்த பூர்ணிமாவின் சித்தப்பா‌.

பூர்ணிமா அழுதாள். அவளை சுற்றி இருந்த அவளின் பெரியப்பா மகனும் சித்தப்பாவும் ஆத்திரமும் சோகமுமாக இருந்தனர்.

"பூர்ணி.." பாலாவின் அழைப்பு அவளுக்கு மேலும்தான் அழுகையை தந்தது. கோபத்தோடு எழுந்து நின்றாள்.

"இந்த வீட்டு வாசல்ல இருந்த பிச்சைக்காரர் செத்துட்டாரு பாலா.." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தான் அவன். முல்லையின் விழிகளும் அதிர்ச்சியில் விரிந்தது.

"உன்னாலதான் அவர் செத்தாரு.." என்றபடி பாலாவை நெருங்கினாள்.

பாலா அவளின் குற்றச்சாட்டில் மேலும் அதிர்ந்தான்.

"என் அப்பா செத்துட்டாரு பாலா.." பைத்தியம் போல கத்தினாள்.

"பூர்ணி.." தயக்கமாக அழைத்தவனின் அருகே வந்து அவனின் சட்டையை பற்றியவள் "என் அப்பா இத்தனை நாள் என் கண் முன்னாடி இருந்தாரு. ஒரு வார்த்தை சொல்லாம போயிட்டியே பாலா.. இப்ப எப்படி போய் நான் அவரோட பாடியை பார்க்க முடியும்? நான் போய் கூப்பிட்டாலும் அவருக்கு காது கேட்காதே. அவர் எழ மாட்டாரே.. ஒரு வாய் பழைய சாதம் கூட தராம அவரை துரத்தி விட்டுட்டியே.." என்று கதறி அழுதாள்.

பூர்ணிமாவின் அண்ணனையும் சித்தப்பாவையும் வெறித்தாள் முல்லை. இருவரும் உணர்ச்சிகளை காட்டாத முகத்தோடு சிலை போல நின்றிருந்தனர். பூர்ணிமாவின் முகத்தை விட்டு அகலவில்லை அவர்களின் பார்வை.

பாலா உதட்டை அழுத்தமாக கடித்தான். அவளின் அழுகைக்கு ஆறுதல் கூறுவது எப்படி என்றும் தெரியவில்லை. அவளின் குற்றச்சாட்டுக்கு எப்படி மறுத்து சொல்வது என்றும் தெரியவில்லை.

தன் சட்டையில் இருந்த அவளின் கையை பற்றினான். அவனின் கையை உதறினாள் அவள்.

"ஐ ஹேட் யூ.. எந்த அளவுக்கு என்னை நம்ப வச்சி ஏமாத்தி இருக்க நீ? இத்தனை நாள்ல ஒருமுறை கூட என்கிட்ட உண்மையை சொல்லவே இல்ல.." முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி அழுதாள். அவளின் அழுகையை காண முடியாமல் அவனின் கண்கள் கலங்கியது.

"பூரணி நாங்க சொல்றதை ஒரு நிமிசம் கேளு.." பூமாறனின் அழைப்பில் அவன் புறம் திரும்பியவள் "இதுக்கு மேல எதுக்கு மாமா? அவர்தான் செத்துட்டாரே.. அவரே செத்த பிறகு நான் எதை கேட்கட்டும்?" என்றாள் விரக்தியோடு.

"அவர் கெட்டவர் பூர்ணி.. அதனாலதான்.." மரிக்கொழுந்து மேலே பேசும் முன் "அவர் கெட்டவரா இருந்தா அதை நான்தான் யோசிச்சி முடிவெடுக்கணும். எனக்கு பதிலா என் முடிவை எடுக்க நீங்க யாரு?" என்று கத்தினாள் பூர்ணிமா.

முல்லை மகளின் கையை பற்றி தன் புறம் திருப்பினாள். "பூர்ணிமா.." கடுமையான குரலில் அதட்டினாள்.

அம்மாவின் பிடியிலிருந்த தன் கரத்தை பின்னால் இழுத்துக் கொண்டாள் பூர்ணிமா. "நீங்க என் அம்மா இல்லையா அம்மா?" என்றாள் மீண்டும் கலங்கிய விழிகளை துடைத்தபடி.

முல்லை மூச்சு விட மறந்தாள். இப்படி ஒரு நாள் வரும் என்று பல முறை பல விதமாக கற்பனை செய்து வைத்திருந்தாள். ஆனால் அந்த நாளை இவ்வளவு சீக்கிரம் எதிர் கொள்வோம் என்றுதான் எதிர் பார்க்கவேயில்லை.

"என் அம்மா செத்ததுக்கு நீங்கதான் காரணம்ன்னு இவங்க சொல்றாங்க.." என்று தன் சித்தப்பா நின்றிருந்த திசையில் கை காட்டினாள் பூர்ணிமா. "அது உண்மையா?" எனக் கேட்டாள்.

முல்லை மீண்டும் ஒருமுறை உடைந்தாள். மலர் இறந்த நாளில் யாரும் தன்னை நம்பவில்லை என்று அன்று உடைந்தவள் இன்று மகளின் கேள்வியை கண்டே உடைந்துப் போனாள். ஆம். சில கேள்விகளுக்கு உடைக்கும் தன்மை இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

"பூரணி.."

"சொல்லுங்க அம்மா.. நான் உங்க பொண்ணு இல்லையா? என் அம்மா உங்க காரணமா செத்துப் போனதால அந்த கில்டி பீலிங்னாலதான் என்னை தத்தெடுத்து‌ வளர்த்திங்களா?" என்று கேட்டவளின் விழிகளில் இருந்து கண்ணீர் ஓடியது.

"நா.." முல்லைக்கு பேச்சே எழவில்லை. மறுப்பாக தலையசைக்க மட்டும் முயன்றாள்.

"அப்படி இல்லன்னா பிறகேன்ம்மா பாலா உன்னை இவ்வளவு நாளா தப்பா சொல்லிட்டு இருந்தான்? இவங்க சொன்னது கூட விட்டுடலாம். ஆனா இவன் சொன்னதை எப்படிம்மா.." மேலும் கேட்க தெரியாமல் அழுதாள்.

இந்த முறை முல்லையை விடவும் பாலா அதிகம் உடைந்துப் போனான். அத்தை மீது தவறு இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் சற்று முன்தான் அவனுக்கு உண்டாகியிருந்தது. ஆனால் அந்த எண்ணம் அதற்குள்ளாகவே குற்ற உணர்வாக மாறி நின்றது.

"பூர்ணி நான் சொல்வதை கேளு.." பூமாறன் அவளை நெருங்கினான். ஆனால் அதற்குள் பூர்ணிமாவின் அண்ணன் அவளின் கையை பற்றினான்.

"போலாம் பூரணி.. அங்கே உன் அப்பாவோட இறுதி சடங்கு நடந்துட்டு இருக்கு. மீதியை நீ நாளைக்கு கூட பேசிக்கலாம்.." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டை தாண்டுகையில் பாலாவையும் அம்மாவையும் பார்த்தாள் பூர்ணிமா. அவர்களின் முகத்தை கூட சரியாக பார்க்க முடியவில்லை அவளால். அந்த அளவிற்கு கண்களில் கண்ணீர் நின்றிருந்தது.

நாகேந்திரனின் உடல் அந்த வீட்டின் வாசல் திண்ணையில் நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தது. சொந்த பந்தங்கள் கூடி அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தனர்.

அந்த வீட்டின் வாசலில் கால் வைத்தபோதே உடல் நடுக்கத்தை உணர்ந்தாள் பூர்ணிமா. பூர்ணிமாவின் பெரியம்மா, சித்திகள், அத்தைகள் அனைவரும் இவளை கண்டதும் சத்தமாக ஒப்பாரி வைத்தனர். பூர்ணிமாவின் அண்ணன் அவளை அழைத்துச் சென்று தன் அம்மாவின் அருகே அமர வைத்தான். சுற்றியிருந்த பெண்கள் பூர்ணிமாவை வட்டமாக அணைத்துக் கொண்டனர்‌. ஒப்பாரி வைத்து அழுதனர்.

ஒப்பாரியின் அர்த்தம் புரியவில்லை பூர்ணிமாவுக்கு. ஆனால் அந்த ஒப்பாரி பாடல்களில் இருந்த இழப்பு எனும் சொற்கள் அனைத்தும் தனக்காக மட்டுமே பாடப்படுவது போல இருந்தது. அனாதையாக உணர்ந்தாள். அணைத்திருந்தவர்களை தாண்டி தந்தையின் முகம் பார்க்க முயன்றாள். பாதி முகம்தான் பார்க்க முடிந்தது. அன்று அவர் தன்னோடு பேசியதை நினைத்துப் பார்த்தாள். அவரோடு உரையாடியது அனைத்தும் சில சில நிமிடங்கள்தான். ஆனால் அவளை குலுங்கி அழ வைக்க அந்த நிமிடங்களே போதுமானதாகதான் இருந்தது.

அம்மாவும் பாலாவும் தனியாய் பேச சென்றதும் பூமாறனோடு சேர்ந்து உரையாடியபடி ஐஸ்க்ரீமை தின்று முடித்தாள். அதே சமயத்தில் அந்த வீட்டுக்குள் வந்தனர் அவளின் சித்தப்பாவும் அண்ணனும்.

"பூரணி உன் அப்பா இறந்துட்டாரு.." என்று அண்ணன் சொன்னபோது குழப்பத்தோடு தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றாள் பூர்ணிமா.

"என்ன சொல்றிங்க?" மாறன் அதிர்ச்சியாக கேட்டான். ஆனால் அவனை விட அதிகம் அதிர்ந்தது பூர்ணிமாதான்.

"என் அப்பாவா?" என்றாள் நம்பிக்கை இல்லாமல்.

"இவங்க எதுவும் சொல்லல இல்ல? இந்த வீட்டு வாசல்ல பிச்சைக்காரன் போல இருந்தவர்தான் உன் அப்பா.. உன் சித்தி உன் அப்பாவை மயக்கி அவருக்கு இரண்டாம் தாரமாக முயற்சி செஞ்சா. ஆனா தங்கச்சி செஞ்ச துரோகம் தாங்காம உங்க அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போயிட்டாங்க. உன் சித்தி உன்னை தூக்கிட்டு போயிட்டா.. உன் அப்பா உன் அம்மாவோட ஆவி இந்த வீட்டுல இருக்குன்னு நம்பி இந்த வீட்டுலயே நாய் போல இருக்க ஆரம்பிச்சிட்டான்.!" என்றார் அவளின் சித்தப்பா.

பூர்ணிமாவுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. சித்தி யார் என்று கேட்க நினைத்தாள்.

"உன்னை முல்லை தூக்கிட்டு போன பிறகு நாங்களும் கூட உன்னை தேடினோன். ஆனா கண்டுபிடிக்க முடியல.!"

சித்தி யாரென்றும் புரிந்துப் போனது. ஆரம்பத்தில் அவளால் நம்ப முடியவில்லை. ஆனால் அதன் பிறகு இத்தனை நாட்களாய் தான் கடந்து வந்த விசயங்களை நினைத்துப் பார்த்தாள். அனைத்தையும் அவளால் சுலபமாக இணைக்க முடிந்தது. முல்லையின் மீதான பாலாவின் கோபம் ஒன்றே அவளுக்கு முழுதையும் உண்மை என்று சொல்லியது.

அவள் தந்தையை பற்றி கேட்டது இல்லைதான். அன்னையின் மனம் வாட கூடாது என்று கேட்காமல் இருந்தாள். ஆனாலும் உள்ளுக்குள் தந்தையின் மீதான பாசம் இருந்துக் கொண்டேதான் இருந்தது. கணவன் இறந்துப் போனதாக முல்லை சொல்லி இருந்த காரணத்தால் பூர்ணிமா இறந்த தன் தந்தையை மனதுக்குள் வணங்கிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அது அனைத்தும் பொய் என்று இப்போது தெரிவிக்கப்பட்டதும் அவளின் உலகமே சரிந்து விழுந்து உடைந்தது போலாகி விட்டது.

அதுவும் தன் வீட்டு வாசலில் இருந்தவர்தான் தந்தை என்ற விசயம் அவளை இன்னும் அதிகமாக பாதித்து விட்டது. அவரை காணும் போதெல்லாம் தனக்குள் உண்டான அந்த உணர்வுக்கான காரணத்தை இன்று அறிந்து விட்டிருந்தாள்.

இப்போது அவரின் பிரேதத்தை காணும்போது இன்னும் அதிகமாக மனம் வலித்தது அவளுக்கு. இன்னும் நான்கு வார்த்தைகள் அவரோடு பேசியிருக்கலாம் என்று நினைத்தாள். அவரும் கூட தன்னிடம் உண்மையை சொல்லாமல் போய் விட்டாரே என்று நொந்து போனாள்.

பெரியம்மா சித்திகளின் குரல்கள் அவளின் காதுகளில் விழவே இல்லை. மாலையை அணிந்தபடி அமர்ந்திருந்தவரின் முகத்திலேயே பார்வையை நிலைக்குத்தி நின்றாள்.

அவள் தனது புத்தியிலேயே இல்லை. முல்லையின் சரி தவறை பற்றி அவளால் யோசிக்க முடியவில்லை. தன் அம்மா அவள் இல்லை என்பதே பூதாகரமான விசயமாக தோன்றியது பூர்ணிமாவுக்கு.

வீட்டின் ஒரு பக்கம் நின்றிருந்த வாத்தியக்காரர்கள் இசைக்க ஆரம்பித்தார்கள்.

வாசலில் சாமியானா பந்தல் நடப்பட்டது. பூர்ணிமா எதையும் கவனிக்கவில்லை. அரை மணி நேரம் சென்று விட்டபோது வாசலில் சலசலப்பு சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

பாலாவும் அவனின் குடும்பத்தாரும் வந்திருந்தார்கள். அவர்களிடம்தான் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள் பூர்ணிமாவின் சித்தப்பாக்கள் இருவரும்.

"மரியாதையா இந்த இடத்தை விட்டு போங்க.. எங்க அண்ணன் அந்த வீட்டுல பிச்சைக்காரன் போல இருந்தபோது கண்டுக்காதவங்கதானே நீங்க.. இன்னைக்கு என்ன புது அக்கறை?" என்று விரட்ட பார்த்தனர்.

மரிக்கொழுந்து பேச முயன்றார். அவரை தடுத்தான் பாலா. இவர்களிடம் தந்தை கெஞ்சுவதில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை.

"செத்தவருக்கு மாமனார் வீட்டு செய்முறை செய்ய வரல நாங்க.. அவரோட பொண்ணோட புகுந்த வீட்டு சார்ப்பா வந்திருக்கோம்.. இந்த ஆள் எங்க வீட்டு பொண்ணுங்க இரண்டு பேரோட லைப்பையும் நாசம் பண்ண பிறகும் இவருக்கு கோடி துணி எடுத்துட்டு வர அளவுக்கு வெட்கம் கெட்டுப் போயிருக்கல நாங்க. நாங்க வந்தது பூர்ணிமாவுக்காக மட்டும்தான். அவளோட முறையை செய்ய மட்டும்தான் வந்திருக்கோம்.." என்றான்.

திண்ணையில் அமர்ந்தபடி அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த பூரணிக்கு இந்த முரண்பாடுகளில் சிக்கி பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது.

பாலா அவளை பார்த்தபடியே சென்று பந்தல் அடியில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தான். அவனின் குடும்பமும் அவனை சுற்றியே அமர்ந்தது.

நேரம் கடந்தது. உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். தூரத்தில் அமர்ந்திருந்த பாலாவின் பெரிய தாத்தா பாலாவை முறைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் பாலா யாரையும் கண்டுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

நாகேந்திரனுக்கு இறுதி சடங்கு நடந்தது. பூர்ணிமா செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் அவளின் கையை பற்றி செய்ய வைத்தனர்.

தந்தையின் தலையில் எதையோ தடவ சொல்லி தந்தார்கள். அழுதபடியே தடவினாள்‌. அவளின் கையை பற்றி இருந்த பெரியப்பா அவளை விட்டார். அதே சமயம் அவளின் தோளை பற்றியது இரு கரங்கள். நிமிர்ந்துப் பார்த்தாள். பாலா அவளுக்கு பின்னால் நின்றிருந்தான். அவனை விட்டு விலகி செல்ல முயன்றாள். ஆனால் அவளின் கையை பற்றியது அவனின் கரம்‌. அவளின் கரத்தை முதல் நாள் பற்றியதை விடவும் அதிக இறுக்கமாக பற்றியிருந்தான் அவன். அழுது அழுது அரை மயக்கத்தில் இருந்த பூர்ணிமா தன் கை உடைவதை போலவே உணர்ந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN