தேவதை 51

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆதிக்காக பிரதிலிபியில் ஒரு நண்பர் எழுதிய கவிதை 👇

"ஆதி
பனி மாலை அணிந்த பெண் தேவதை நீயே...
கடைசி தேவதையான போதும்
அன்பை கொடுக்க மறுப்பதில்லை துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் ஏமாற்றாத அன்பை கொடுத்த போதும்
ஏமாற்றத்தை சந்தித்தபோதும் இருவேறு துருவங்கள் உன்மனம் ....
உன் வெறுப்பின் சக்தியை கண்டு பயந்தவர்கள்
உன் அன்பை கண்டு ஏளனப் படுத்தியதை நினைவுப் படுத்தினார்களா....
அன்பும் திரும்பப் பெற பட்டால் தான் மதிப்பு என உணர்ந்து விட்டாய்...
புது அவதாரம் உன்னில்...
கடவுள்களும் தேடினேன் தேடினேன் என்பது போல்
தேடினார்கள் உன்னில் அன்பை....
சுயநலத்தோடு....
அன்பை வெறுப்புக் கொண்டு முலாம் பூசி
உன்னை மெருகேற்றி விட்டனர்.....
இனி உன்னை ஏமாற்ற நினைத்தால் கடவுள்களும் உன் பக்கம் துணை நிற்பார்களா இல்லை ஏமாற்றமே அவர்களால் தானா."

இப்படியொரு தண்டனையை யாராலும் தந்திருக்கவே முடியாது. கவி உடைந்தது எந்த அளவிற்கு என்று வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

பிள்ளைக்கள் பயந்து அவனை விட்டு நகர்ந்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும் உருவாக்கியவன் அவன். ஒவ்வொருவரையும் வளர்த்தியவன் அவன். அவர்களின் வீரத்தில் மகிழ்ந்தவன். அவர்களின் மகிழ்ச்சியில் மனம் குளிர்ந்தவன்.

"தந்தையே வேண்டாம்.." முதலாமவன் இறந்தபோதே மற்றவர்கள் தங்களின் நிலை என்னவென்று யூகித்து விட்டனர். அவனிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை என்று உணர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள். இத்தனை ஆயிரம் ஆண்டுகளும் சொர்க்கம் போல வாழ்ந்தவர்கள் தங்களுக்கு இப்படி ஒரு இறப்பு வரும் என்று யோசிக்க கூட இல்லை.

ஆதி மனம் குளிர பார்த்துக் கொண்டிருந்தாள். தன் மனதின் கொடூரத்தை கவியிடம் தாரை வார்த்து விட்டு நிம்மதியாக தரையில் அமர்ந்திருந்தாள்.

கவி அடுத்த மனிதனை வெட்டினான். முன்பை விட அதிகம் கதறினான். ஆதியின் வலியை போல நேராய் இதயத்தை தாக்கவில்லைதான் இது. ஆனாலும் இந்த வழி அவனை வேறு வகையில் வாட்டியது. அவர்களின் பயம் மிகுந்த கண்களும், அவர்களின் இறுதி நொடி மரண கூச்சல் சத்தமும் தாங்க இயலாமல் கதறினான்.

ஆதி சிரித்தாள். அவன் எப்படி அன்பை பலவீனமாக பயன்படுத்தி அவளை மணந்தானோ அது போலவே அவனின் பலவீனத்தை பயன்படுத்தினாள் ஆதி இப்போது.

'என் இனத்தை அழித்தவனை மணந்தேன். காரணம் என் பலவீனம். இப்போது இதோ இவன்.. என்‌ இனத்தையே மண்ணோடு மண்ணாக மக்க செய்தவன் தனது குழந்தைகளையே கொன்றுக் கொண்டிருக்கிறான். நான் எப்படி முடியாத விசயத்தை முடிக்க வேண்டி தன்மானம் இழந்தேனோ அது போல இவன் இப்போது தனது தன்மானம் இழந்துக் கொண்டிருக்கிறான். பல உலகங்களை அழித்தவன்.. பல உலகங்களை அடிப்பணிய வைத்தவன் இன்று வெறும் நூறு பேரை அழிக்க இயலாமல் கதறிக் கொண்டிருக்கிறான். இது போன்ற ஒரு மகிழ்ச்சியை தரும் நாள் உண்மையிலேயே சொர்க்கத்தை கையில் சேர்க்கும் நாள்தான்..' என்றெண்ணியவளுக்கு எழுந்து நடனமாட வேண்டும் போல இருந்தது.

செனியாதான் கடைசி மனுசியாக அங்கே மிஞ்சி இருந்தாள்.

"மன்னிச்சிடு மகளே.. என் காயம் காண பொறுக்காமல் குறுக்கே பாய்ந்து நீ காயத்தை பெற்றாய்.. ஆனால் இந்த தந்தை கோழை இப்போது. கையாளாகாதவன். வாழவே தகுதி இல்லாதவன். இந்த பிரபஞ்சத்தின் கேவலமான பிறவி நான். தயவுசெய்து இந்த தந்தைக்கு உன் உயிரை பிச்சையாக தந்து விடு.." எனக் கேட்டான்.

செனியா அழுதாள். முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள். தரையில் அமர்ந்திருக்கும் ஆதியை விரல் இடுக்கு வழியில் பாராத்தாள்.‌ ஆதியின் பார்வை வேறு எங்கே இருந்தது. ஆனாலும் அவளின் முகத்தில் இருந்த புன்னகையை செனியாவால் உணர முடிந்தது.

செனியா அழுதபடியே வந்து தந்தையை அணைத்துக் கொண்டாள். சகோதரர் சகோதரிகள் இல்லாமல் அவளுக்கு பயமாக இருந்தது. ஓர் இனத்தின் கடைசி உயிராய் இருப்பது உண்மையிலேயே நரகத்தனமான ஒரு விசயம்.

கவி அவளை விட அதிகம் அழுதான். அவனின் கடைசி பிள்ளை இவள். சாடை முழுக்க ஆதியை போலவே இருப்பவள். இவள் தன் மீது வந்து விழுந்த அந்த நாளை மறக்க முடியாமல் வெம்பி அழுதான். "செனியா.." என்றான் நொடிக்கொருதரம்.

"பரவாயில்லை தந்தையே.. இது நீங்கள் தந்த உயிர். உடல்.. நீங்கள் இதை அழிக்கலாம்.." என்றாள்.

அவள் சொன்னதை அவசர அவசரமாக நோட்டுக் குறிப்பில் எழுதினார் அக்வா. "இந்த எண்ணத்தை மனிதரிடம் ஆழமாக விதைக்க வேண்டும். என்ன நடந்தாலும் சரி. தானாய் கிடைத்த உயிர். தானாய் கிடைத்த வாழ்க்கை. அழிந்தாலும் தவறில்லை என்று நினைக்க வேண்டும்.." என்று சொன்னார்.

மேகத்தின் படுக்கையின் மீது படுத்திருந்த அக்வாவை முறைத்த ஃபயர் "அங்கே ஒரு போராட்டமே நடந்துட்டு இருக்கு.. ஆனா நீ ரொம்ப மகிழ்ச்சியா குறிப்பு எழுதிட்டு இருக்க.." என்றாள் கோபமாக.

அக்வா நிமிர்ந்துப் பார்த்தார்.

"இது அவசியம் ஃபயர்.. நமது குழந்தைகள் மரணத்தை கருவிலேயே சுமக்க போகிறவர்கள். அவர்களுக்கு இந்த எண்ணமெல்லாம் நிச்சயம் தேவை.." என்றார்.

அழுதபடியே தன்னை அணைத்திருந்தவளின் இடுப்பில் கத்தியை சொருகினான் கவி. செனியா அவனின் காது முழுக்க கத்தினாள். அவனின் கைகளில் இருந்து கரைந்தாள். கவியின் கதறல் சத்தம் மேலும் அதிகமானது. அதே இடத்தில் மண்டியிட்டான். செனியாவின் உடல் நீராய் மாறி மண்ணுக்குள் போய் விட்டது.

ஆதி நிம்மதி பெருமூச்சோடு தரையில் விழுந்தாள். அவளின் நெஞ்சத்தில் இருந்த காயத்தை குணப்படுத்தினாள். அவளின் நினைப்பிலேயே காயம் குணமானது.

தரையை பார்த்து அமர்ந்திருந்த கவி தன் இதயத்தின் வலி குணமானதை உணர்ந்தான். ஆனால் அப்போதும் கூட ஆதியின் திசைக்கு திரும்பவில்லை அவன். அவள் தன்னை எந்த அளவிற்கு பழி வாங்கி விட்டாள் என்று உணர்ந்து கோபமும்,‌வருத்தமும் ஒரு சேர வந்தது அவனுக்கு.

ஆதி சிறகடித்தபடி மேலே பறந்தாள்.

"இப்போது சந்தோசமாக இருக்கேன்.." என்றாள்.

கவி நிமிர்ந்துப் பார்த்தான். "எனது வருங்கால தூக்கத்தையும், நிம்மதியையும் ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டாய் ஆதி.." என்றான்.

அவனின் கத்தியையும், அவனின் கண்ணீர் வெள்ளத்தையும் கண்டு சிரித்தவள் "நான் இத்தனை வருடமாக நிம்மதியாக தூங்கவில்லை ஏந்தலே.. நிம்மதி என்னவென்று கூட எனக்குத் தெரியாது." என்றாள்.

"முட்டாள் நீ.. உன் இனத்தவர் தங்களை தற்காத்துக் கொள்ள மறந்த ஒரே காரணத்துக்காக என்னை திட்டம் போட்டு பழி வாங்கி விட்டாய்.." ஏற்றுக் கத்தினான்.

"என் இனத்தவரை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருந்தது. வேலியே பயிரை மேய்ந்தது போல எங்களை நீங்கள் கொன்றீர்கள்‌.. உங்கள் துரோகத்தோடு ஒப்பிடுகையில் எனது துரோகம் பெரிதில்லை ஏந்தலே.." என்றாள்.

கவி இடம் வலமாக தலையசைத்தான். "தவறு செய்து விட்டேன். உங்கள் உலகை பற்றி அறியாமல் உன் இனத்தை அழித்து விட்டேன். என்னை மன்னித்து விடு.." என்றான். அதில் மன்னித்து விடு என்பதை மட்டும் எரிச்சலோடு வேண்டாவெறுப்பாக உச்சரித்தான்.

"நீங்கள் அழித்தவர்களின் ஆன்மாக்களை கொண்டு அவர்களை வேறு ஒரு உயிராக என்னால் உருவாக்க முடியும். ஆனால் உங்களால் இதே போல என் உலகை திருப்பிக் கொண்டு வர முடியுமா?"

"தப்புதான்.. பெரிய தப்பு பண்ணிட்டேன். உங்களை பத்தி தெரிஞ்சி இருக்கணும் நான்."

"ம். ஆமாம்.. ஏந்தலாக இருந்து விட்டால் போதுமா? எதை பற்றியும் அறியாமல் யாரை பற்றியும் அறியாமல் ஏந்தலாகி மட்டும் என்ன பயன்?" எனக் கேட்டவளை வெறித்தான். அவன் முட்டாள் போல செய்த தவறுக்கு அவள் புத்திசாலி போல பதிலடி தந்துக் கொண்டிருந்தாள்.

"இப்போது உனக்கு மகிழ்ச்சியா? உன் பிள்ளைகள் இறந்துப் போனார்கள்.." என்று கத்தினான்.

ஆதி சிரித்தாள். "என் உருவில் இருந்தார்கள். ஆனால் என் பிள்ளைகள் அல்ல. அவர்களை நான் உருவாக்கவில்லை. நீங்கள்தான் உருவாக்கினீர்கள் ஏந்தலே.. இது எனது கிரகம். இங்கே மனிதர்களை உருவாக்க வேண்டிய படைக்கப்பட்ட தேவதை நான். நீங்கள் யார் என் கிரகத்தில் உயிர்களை படைக்க?" எனக் கேட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN