குரங்கு கூட்டம் 7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சம்பத்தின் முன்னால் நிற்க பிடிக்காமல் நெளிந்தாள் சிபி.

சம்பத்தின் அருகில் இருந்த ஒருவன் சம்பத்தின் காதுகளில் என்னவோ சொன்னான். சம்பத் மிருதுளா இருந்த திசையை பார்த்துவிட்டு அருகில் இருந்தவனிடம் தலையசைத்தான். இவர்களை கவனிக்காமல் ராகுலை முறைத்துக் கொண்டிருந்தாள் மிருதுளா. 'ஆக நம்ம சீனியரும் வேஸ்ட் போலிஸா.?' என்று இளக்காரமாக நினைத்தாள்.

"இப்படி வந்து உட்காரும்மா.." சிபியை அழைத்தாள் சம்பத்தின் அம்மா. சிபி பயந்து வியர்த்தாள். சம்பத்தை பார்க்கையில் பூச்சாண்டியை பார்ப்பது போலிருந்தது அவளுக்கு.

"பயப்படாம வா.." சிபியின் காதில் கிசுகிசுத்து விட்டு அவளை அழைத்துச் சென்று சம்பத்தின் முன்னால் இருந்த இருக்கை ஒன்றில் அமர வைத்தாள் மிருதுளா. சிபி பயந்து மிருதுளாவை தன் அருகே இழுத்து அமர வைத்தாள்.

அனைவருக்கும் காப்பி, குளிர்பானம் தந்த கூட்டத்தோடு சேர்ந்து வந்திருந்த அர்விந்த் தன் மைனா அங்கே இல்லாததை கண்டு கவலைப்பட்டான். கூட்டத்தோடு கூட்டமாக ஒதுங்கி நின்றவன் நடந்ததை கவனிக்க ஆரம்பித்தான்.

மிருத்யூ ஹாலுக்கு வரவேயில்லை. அவனுக்கு மீண்டும் சித்துவை பார்க்க விருப்பமே இல்லை.

சிபியை வெறித்துக் கொண்டிருந்த சம்பத்தின் விழிகளில் எந்த உணர்வையுமே கண்டுப் பிடிக்க முடியவில்லை. அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு மெஷின் கன்னை பார்ப்பதை போலவே அவளையும் பார்த்துக் கொண்டிருந்தான். சிபியும் கூட ஒரு மெஷின் கன்னை பார்ப்பதை போலதான் அவனை பார்த்தாள். ஆனால் அவளுக்கு கன்னை பார்த்தால் இதயம் நடுங்கும்.

"பாட தெரியுமா பாப்பா.?" சம்பத்தின் அம்மா கேட்ட கேள்வியில் மிருதுளா அதிர்ந்து விட்டாள். பத்தாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி கால பயணம் செய்து விட்டதை போலிருந்தது அவளுக்கு.

சிபி ஆமென்று தலையசைத்தாள். "எங்க சிபிக்கு எல்லாமே தெரியும். அத்தனையையும் சொல்லி தந்திருக்கோம்.." என்றாள் சிபியின் பெரியம்மா.

வரிசையாக இருந்த சோபாக்களில் கடைசியாக அமர்ந்திருந்தான் பிரேம். சம்பத்தை பார்க்கையில் அவனுக்கு கொலைவெறி வந்தது. தன் காதலியை பார்க்கும் சம்பத்தின் கண்களை தோண்டி எடுக்க வேண்டும் போலிருந்தது.

"ஒரு நல்ல பாட்டா பாடும்மா.." என்ற பெரியம்மாவிடம் சரியென தலையசைத்தாள் சிபி.

தயங்கிவிட்டு பாட தொடங்கினாள் சிபி.

"ச..ச..சரீ சரீ..ச..ம..கரீ..
என் பிரேமை நீயல்லவா?
என் பிரியமும் நீயல்லவா?
கண்கள் தேடும் நேரத்தில்
கானத்தின் வழி வரும் காதல் நீயல்லவா.?
காதல் தேடும் நேரத்தில்
கானகத்தின் வழி வரும் கடவுளும் நீயல்லவா.?

இமைகள் மூட வேண்டாம்
என் கண்ணா இசைக்கும் நொடிதனில்
நீ என்னை விலகிச் செல்ல வேண்டாம்!
விழிகள் கலங்க வேண்டாம்
என் கண்ணா வீசும் காற்றில்
காதலது கரைந்தும் போக வேண்டாம்!

மந்திரவாதிகள் சூழ் உலகு கிருஷ்ணா!
என் நம்பிக்கை நீ மட்டுமே கிருஷ்ணா!
மாயர்கள் வாழ் மண்ணிது கிருஷ்ணா!
என் புன்னகை நீ மட்டுமே கிருஷ்ணா!

பிரியா நேரம் அழியா பிரியம் நீ
சரியா வானம் தணியா தாகம் நீ
மறையா ஞாயிறு கரையா கண்ணீர் நீ
உறையா வாசம் குறையா காதல் நீ!

கண்ணின் மணியில் சேர்ந்த கண்ணா
காதல் நொடியில் கலந்த கண்ணா
கை சேரும் நாள் என்றோ?
உன் மணமாலை
இந்த மங்கை தோள் சேரும் நாள் என்றோ.?"

தரையை பார்த்த வண்ணமே பாடி முடித்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் ஒரு சொட்டு சிந்தி தரையில் விழுந்தது. பிரேம் அவளிடம் ஓடி வராமல் இருக்க பெரிதும் முயன்றாள். சிபியின் பயம் பற்றி அறிந்தவன் அவன். சொந்த வீட்டிலேயே அவளுக்கு இவ்வளவு பயத்தை உருவாக்கி விட்டதற்காக இந்த குடும்பத்தை வெறுத்தான் அவன்.

"பாட்டு நிஜமா பாடிட்ட.." அதிர்ச்சியோடு சொன்ன மிருதுளாவை தயக்கமாக நிமிர்ந்துப் பார்த்தாள். கலங்கிக் கொண்டிருந்த விழிகளை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படியென்று தெரியவில்லை அவளுக்கு. மிருதுளா யோசித்துவிட்டு "செமையா பாடின.." என்றபடி அவளை அணைத்துக் கொண்டாள். சிபி அந்த நேரத்தில் தன் கண்ணீரை மிருதுளாவின் தோளில் துடைத்தாள்.

"தேங்க்ஸ்.." என்று முனகிவிட்டு அவளை விட்டு விலகி அமர்ந்தாள் சிபி.

"நல்லா பாடுறம்மா.." என்றாள் சம்பத்தின் அம்மா.

சிபி வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை தந்தாள்.

"மோதிரம் மாத்திடலாமா.?" சிபியின் தந்தை சம்பத்திடம் கேட்டார். சம்பத் தலையசைத்தபடி எழுந்து நின்றான்.

"நான் சிபியோடு கொஞ்சம் தனியா பேசிட்டு வரேன்.." என்றவன் அந்த பக்கமும் இந்த பக்கமும் பார்த்தான்.

"ரூம் இந்த சைட் இருக்கு.. இப்படி வாங்க.." என்று அவனை அழைத்துக் கொண்டு நடந்தான் சித்து. சிபிக்கு எழுந்து நிற்கவும் தெம்பில்லாமல் போய் விட்டது.

"சீக்கிரம் போ சிபி.." அவளை அவசரப்படுத்தினாள் பெரியம்மா.

சிபியின் பயத்தை தூரத்தில் அமர்ந்திருந்த பிரேமாலும் உணர முடிந்தது. இது ஏன் அந்த வீட்டு மனிதர்களுக்கு தெரியவில்லை என்று வருந்தினான் அவன்.

அவளோடு உடன் செல்ல முயன்றாள் மிருதுளா. ஆனால் பெரியம்மா கை காட்டி தடுத்து விட்டாள்.

சித்து அறையின் வாசலில் நின்றிருந்தான். தங்கையை பார்த்து புன்னகைத்தான். சிபி பயத்தை மறைத்துக் கொண்டு புன்னகைத்தாள். கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவளுக்கு இதயம் மோட்டார் போல துடித்தது.

சம்பத் அவளுக்கு முதுகு காட்டி நின்றுக் கொண்டிருந்தான்.

"என்னை பார்த்து ஏன் பயப்படுற?" அவனின் கேள்வியில் திகைத்தவள் "இ.. இல்ல.!" என்றாள்.

"வார்த்தைகள் கூட தடுமாறுது!" என்றபடி இவள் புறம் திரும்பினான். புருவத்தை நெருக்கியபடி அவளை பார்த்தான். அவன் முறைப்பது போலவே இருந்தது அவளுக்கு.

கரங்கள் நடுங்குவதை மறைத்தவள் "சாரி.." என்றாள்.

விழிகளை உருட்டியவன் "என்னைப் பார்த்தா மான்ஸ்டர் மாதிரி தெரியுதா உனக்கு?"

'சத்தியமா அப்படிதான் இருக்கு!' என நினைத்தவள் இதழ்களை விரித்தபடி "இல்ல.." என்றாள்.

"நீ என் மனைவியாக போற.. உன் பயமெல்லாம் எதுக்குமே உதவாது.. இது ஒரு கான்ட்ராக்ட் மேரேஜ். உன் அப்பாவுக்காக, உன் அண்ணனுக்காக, உங்க பேமிலி பிசினஸ்காக அவங்க ஓகே பண்ணாங்க. நானும் என் பிஸினஸ்காகதான் உன்னை மேரேஜ் பண்ண ஒத்துக்கிட்டேன். என் குரூப்ல உள்ள கேர்ஸ்ஸெல்லாம் என்ன மாதிரின்னு உனக்கு சொல்ல தேவையில்ல.. அவங்க துப்பாக்கி ஏந்திய ஏஞ்சல்ஸ்‌. அந்த மாதிரி ஒரு பொண்ணைதான் நான் எதிர் பார்த்தேன். பட் ஐயம் அன்லக்கி. ஆனா நீ என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா உனக்குன்னு பல ரெஸ்பான்ஸ்பிளிட்டி இருக்கு. நீ பத்திரமா இருந்தாகணும். எந்த பக்கத்துல இருந்து வேணாலும் மரணம் வரலாம். நீ எப்பவும் பிரிப்பேரா இருந்தாகணும். உனக்கு இரண்டு பாடிகார்ட் இருப்பாங்க. இருந்தாலும் நீயும் வோன்னா பிழைக்க கத்துக்கிட்டா எனக்கு கொஞ்சம் நிம்மதி. உன்னை யாராவது கடத்தி வச்சி என்னை மிரட்டினா நிச்சயம் வந்து காப்பாத்த மாட்டேன். எனக்கு இந்த காதலில் நம்பிக்கை இல்ல.. உன் ஸ்டெக்சர் மேலயும் ஆசை இல்ல.." என்றான்.

சிபி புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள். எதிரி ரவுடி என தெரிந்தும் மோத வந்த பிரேமை மிகவும் விரும்பினாள். அவளால் தனியாய் சமாளிக்க இயலுமோ இல்லையோ துணையாய் பிரேம் இருப்பான் என்ற விசயம் மகிழ்ச்சியை தந்தது.

"என் பர்ஸ்ட் வொய்ப் போன மன்த் இறந்துட்டா.." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தாள். இதை பற்றி அவளின் வீட்டில் யாருமே சொல்லவில்லை.

"என்னோட ஆப்போசிட் கேங் அவளோட காருக்கு பாம் வச்சிட்டாங்க. நீ எனக்கு கொஞ்ச வருசமாவது வேணும். ஏனா பிசினஸ் கான்ட்ரேக்ட்ஸ் வருச கணக்குக்கு சைன் பண்ணியிருக்கோம். ஆனா அதுக்காக ரிஸ்க் எடுத்து உன்னை காப்பாத்துவேன்னு நினைக்காத.."

சிபி இம்முறையும் புரிந்ததாக தலையசைத்தாள்.

'நடக்காத கல்யாணத்துக்கு எத்தனை முறை தலையசைக்கிறதோ?' அவன் முன் நிற்கவே நடுங்குபவள் இப்படியும் யோசனை வருவதை கண்டு மனதுக்குள் சிரித்தாள்.

"எதுக்காகவும் நீ என்னை தேட கூடாது. எதுக்காகவும். புரிஞ்சதா?" எனக் கேட்டான் அதட்டலாக.

சிபி விழிகளை மூடித் திறந்தாள். "ம்.." என்றாள்.

"போலாம்.." என்றவன் அவளுக்கு முன்னால் நடந்தான்.

சம்பத்தும் சிபியும் ஹாலை விட்டு சென்ற பிறகு மிருதுளா நகத்தை கடித்தபடி அந்த கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தாள். ஒரு பக்கம் ரவுடி கும்பல் நின்றிருந்தது. சிபி வீட்டு ரவுடிகள் வெளிர் கருப்பு உடைகளிலும், சம்பத் பக்க ரவுடிகள் அடர் கருப்பு உடைகளிலும் இருந்தார்கள். அனைவருமே உயரமாக, கடினமான முகத்தோடு இருந்தார்கள். ஒவ்வொருவரின் முகத்தையும் கவனித்துக் கொண்டே வந்தாள். அனைவரும் சொல்லி வைத்தது போல நேராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்‌.

'ரோபோட்ஸ்.!' என எண்ணியபடி அமர்ந்திருந்தவர்களின் வரிசைக்கு வந்தவள் தன்னை ஒருவன் வெறிப்பது கண்டு விழிகளை உயர்த்தினாள். 'ஏன்டா என் முகத்துல படம் ஏதும் ஓடுதா?' என கேட்க நினைத்தவள் அவனை போலவே தானும் வெறித்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

"உன் பேர் என்ன?" என கேட்டான் அவன்.

பிரேமுக்கு மிருதுளாவின் உடையின் மீதுதான் கோபம் வந்தது.

"மிருதுளா" என்றவளை இமைக்காமல் வெறித்தவன் "உன் வீட்டு அட்ரஸ்.." என கேட்டான்.

மிருதுளா பற்களை மென்றாள். "எதுக்கு?"

"தேவை.. கொஞ்சம் பேசணும்.." என்றவனை சிரிப்போடு பார்த்தவள் "என்ன பேசணுமோ அதை என்கிட்டயே பேசலாம்.!" என்றாள்.

"உன்னை கல்யாணம் செய்ய ஆசைப்படுறேன் நான்.." அவன் சொன்னதும் மிருதுளாவுக்கு அதிர்ச்சியில் இதயம் நிற்பது போலிருந்தது.

"நான் சம்பத்தோட பிரதர்.. சரத்.!" என்றவன் எழுந்து வந்தான். மிருதுளா எழுந்து நின்றாள். நேராய் பார்த்தவள் "சாரி.. எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல!" என்றாள்.

சுற்றி இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு அவளை பார்த்தனர். அவன் முன் யாரும் குரல் உயர்த்தி கூட பேசியது இல்லை‌.

"நீ உன் வீட்டு அட்ரஸ் கொடுத்தா போதும்.." கழுத்தை ஒரு பக்கமா சாய்த்தபடி கேட்டவன் அவளை தொடும் தூரத்தில் வந்து நின்றான்.

வீட்டுக்கு தெரிந்தால் தன்னை கொல்லாமல் விட மாட்டார்கள் என்று மிருதுளாவுக்கு தெரியும். நண்பர்கள் நால்வரும் சேர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்வதாக சொல்லி விட்டு இங்கே வந்திருந்தனர். வீட்டை இதில் இழுத்தால் ஒரு விசயமும் நடக்காது என்று அவளுக்கு தெரியும்.

அவனை பார்த்து வராத பயம் வீட்டை நினைத்து வந்தது.

"எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லாதபோது நீங்க என் வீட்டை கான்டேக்ட் பண்ணி என்ன பண்ண போறிங்க?" என்றவளின் கன்னத்தை தொட நீண்டது அவனின் கரம்.

பிரேம் தனது இருக்கையை விட்டு எழுந்தான். சரத்தின் முகத்தை உடைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். அவன் ஓரடி எடுத்து வைக்கும் முன் மிருதுளாவுக்கும் சரத்துக்கும் இடையில் வந்து நின்றான் ராகுல்.

"மன்னிக்கவும்.. ஸீ இஸ் மை பியான்சி.." என்றான் அவசரமாக.

மிருதுளா அதிர்ச்சியோடு ராகுலை பார்த்தாள். பிரேம் அதை விட அதிகம் அதிர்ந்துப் போனான்.

"ஏய் மேன்.. என்ன சொல்ற?" எனக் கேட்டாள் ரூபாவதி.

'ஆளையும் அவளையும் பாரு.. இத்தனை பேர் பார்த்திருக்க ஒரு பொண்ணுக்கிட்ட அதிகாரம் பண்றான் இவன். அவனை விட்டுட்டு என்கிட்ட வந்து கேள்வி கேட்கறா.. மத்த எல்லோரையும் விட இவ மேலதான் ரொம்ப கடுப்பா இருக்கு. சான்ஸ் கிடைக்கட்டும். முதல் என்கவுண்டர் நீதான்டி..' என்று மனதுக்குள் கொதித்தவன் "யெஸ் மேம்.. இவ எனக்கு நிச்சயிக்கப்பட்ட பொண்ணுதான்.." என்றான்.

பிரேம் குழப்பத்தோடு ராகுலை பார்த்தான். 'சீனியர் ஏன் இப்படி ஒரு பொய்யை சொல்றாரு? ஹெல்ப் பண்றாரா?'

"அந்த பொண்ணு டெல்லியில் படிச்சான்னு கேள்விப்பட்டேன்.." ரூபாவதி இதை சொல்லவும் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை வெளியில் எடுத்தான் ராகுல்.

"நாங்க ஸ்கூல் மேட்ஸ் மேம்.. அப்ப இருந்தே லவ் பண்ணிட்டு இருந்தோம். ஸீ இஸ் மை எவ்ரிதிங். வீட்டுல பேசி நிச்சயமெல்லாம் செஞ்ச பிறகுதான் அவ படிக்க கிளம்பினா.." என்றவன் தன் பர்ஸை திறந்து காட்டினான். பர்ஸில் பள்ளி மாணவியின் புகைப்படம் ஒன்று இருந்தது. அது மிருதுளாதான். பார்க்கும்போதே தெரிந்தது. ஆனால் மிருதுளாவுக்குதான் புகைப்படம் தெரியவில்லை. ராகுலின் கை சந்தில் புகுந்து புகைப்படத்தை பார்த்தாள். "ஐ நான்தான்" சிறு குரலில் அவள் குதூகலிக்கவும் அவளின் தலையிலேயே கொட்ட வேண்டும் போல இருந்தது ராகுலுக்கு.

அனைவரும் ராகுலையும் மிருதுளாவையும் மாறி மாறி பார்த்தனர்.

"இதை என் மேன் நீ முன்னாடியே என்கிட்ட சொல்லல?" ரூபாவதி அதட்டலாக கேட்டாள்.

ராகுல் வாய் திறக்கும் முன் மிருதுளா முன்னால் வந்து நின்றாள். "இனி நான் சமாளிக்கிறேன் சீனியர்.." அவனிடம் கண்ணடித்து சொல்லிவிட்டு திரும்பியவள் "நாங்க சண்டை போட்டுட்டோம்மா. அதனால இவன் கோச்சிக்கிட்டு என்கிட்ட சரியா பேசுறது இல்ல. அதனால்தான் இந்த வீட்டுலயும் என்னை கண்டுக்கவே இல்ல. இப்ப பேஸ்மண்டுக்கே ஆபத்துன்னு தெரிஞ்சதும் தானா வந்து சரணடைஞ்சிட்டான்!" என்றாள்.

'அவன் இவன்.!?' ராகுலுக்கு சிரிக்க வேண்டும் போல இருந்தது.

சரத் முன்னால் வந்தான். "அந்த நிச்சயம் இனியும் செல்லுபடி இல்ல.. இவளை நான் மேரேஜ் பண்ணிக்க போறேன்.." என்றபடி மிருதுளாவை தன் அருகே இழுத்தான்.

ராகுலுக்கு கண்கள் சிவந்தது. சரத்தை நோக்கி பாய இருந்தான்.

அவனை பிடித்து நிறுத்தினான் ஜீவன். "செட் அப் மேன். வந்த காரியத்தை நீயே கெடுத்து வச்சிடாத.." எச்சரித்தான்.

மிருதுளா சரத்தை விட்டு விலகினாள். அவன் புறம் திரும்பினாள். அவனின் நெஞ்சுக்கு நேர்தான் இருந்தாள். அது வேறு தாழ்மை உணர்ச்சியை தூண்டி விட்டது. தன்னை விட உயரமாக இருப்போரை அவளுக்கு எப்போதுமே பிடிக்காது. கொஞ்சம் உயரமாக இருக்கும் ராகுலிடமே இந்த விசயத்தில் ஏற்ற தாழ்வு பார்த்தாள். சரத் விசயத்தில் சொல்லவா வேண்டும்?

"நீங்க என்னை மேரேஜ் பண்ணிக்க விரும்பினா அதை பத்தி அப்புறம் பேசிக்கலாம். முதல்ல சிபி மேரேஜ் முடியட்டும்.." என்றாள்.

சரத் சந்தேகத்தோடு அவளை பார்த்தான். "இவன் என்னதான் சரணடைஞ்சாலும் கூட எனக்கு இவன் மேல நம்பிக்கை இல்ல. சின்ன சின்ன விசயத்துக்கு சண்டை போடுபவனை நம்பி கல்யாணத்துக்குள்ள அடியெடுத்து வைக்க முடியாது. அதனால இந்த ஒரு வாரத்துல பார்க்கலாம். சிபி மேரேஜ் முடிஞ்சதும் நான் உங்களுக்கு ஒரு முடிவு சொல்றேன்.." என்றாள்.

சரத் தன் பாக்கெட்டில் கையை விட்டான். "நீ ஓகே சொல்லலன்னா இவனும் உன் பேமிலியும் ஒட்டு மொத்தமாக காலியாவாங்க.. நல்லா ஞாபகம் வச்சிக்க!" என்றவன் அவளை விட்டுவிட்டு வந்து தனது பழைய இருக்கையில் அமர்ந்தான்.

'பாவம் சீனியர்‌. நம்மளை காப்பாத்த வந்து அநியாயமா மாட்டிக்கிட்டாரு..' கவலைக் கொண்டாள் மிருதுளா.

அதே நேரத்தில் சிபியும் சம்பத்தும் ஹாலுக்கு வந்தார்கள்.

சிபி மிருதுளாவின் அருகே வந்து நின்றாள். பேயை கண்டது போல நின்றிருந்த மிருதுளாவின் கையை பற்றி அழுத்தியவள் "எனக்கு ஒன்னுமில்ல.." என்றாள்.

சம்பத்தின் அம்மா மோதிரங்கள் இருந்த தட்டை எடுத்து மேஜையின் மீது வைத்தாள். பழம், சீர் இருந்த தட்டுக்களை இரு வீட்டாரும் மாற்றிக் கொண்டார்கள்.

சம்பத் சிபியின் விரலில் மோதிரத்தை மாட்டினான். சிபி தூரத்தில் இருந்த பிரேமை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சம்பத்திற்கு மோதிரம் அணிவித்தாள். இது சிபிக்கு கஷ்டமான ஒரு விசயம் என்று பிரேமுக்கு தெரியும். அவள் ஒரு செண்டிமெண்டல் கேர்ள். நிச்சயத்தார்த்தம் என்பது பாதி திருமணம் என்று நினைப்பவள். பிரேம் இந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாமல் போனதற்காக வருந்தினான்.

சம்பத்தின் குடும்பம் அங்கிருந்து கிளம்பியது. அவர்கள் எப்போது போவார்கள் என காத்திருந்தது போல குரங்கு கூட்டம் மொத்தமும் சிபியின் அறையில் கூடியது. அர்விந்த் தன் வெங்காய வாடையுடனே குளிர்பானம் வழங்கும் சாக்கில் இந்த அறைக்குள் வந்து விட்டான்.

மாலை நேரம் மணி மூன்றாயிருந்தது. சிபி கட்டிலில் அமர்ந்திருந்தாள். மிருத்யூ வெளியே நகரவேயில்லை. கேம் ஒன்றில் நூறு லெவல்களை இந்த இரண்டு மணி நேரத்தில் தாண்டி விட்டிருந்தான். இன்னமும் அந்த விளையாட்டிலேயேதான் கவனமாக இருந்தான்.

பிரேம் பற்களை கடித்தான். வெறிக் கொண்டு கத்த வேண்டும் போல இருந்தது.

"சம்பந்தமே இல்லாம மிருதுவை இழுத்துட்டான்.." என்று கையை முறுக்கினான். விசயத்தை அறிந்துக் கொண்ட சிபிக்கும் கூட வருத்தமாகதான் இருந்தது.

அர்விந்த் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தில் ஒரு டம்ளரை எடுத்து குடித்து முடித்த மிருதுளா "விடு.. சிபியை இங்கிருந்து கூட்டிப் போன பிறகு இந்த வீட்டுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? சந்தனக் கொடிக்கால்ல எவன் காலை வைக்க முடியும்? கோழிக்குஞ்சை கழுத்தை திருகி போடுறதை போல போட்டுட மாட்டோம்?" என்றாள்.

"சீனியர் ஏன் உனக்கு ரூட் விட்டாரு?" பிரேமின் கேள்வியில் நிமிர்ந்தவள் "யாருக்கு தெரியும்? அவர் காப்பாத்த வந்தாரு போல.." என்றாள்.

அதே நேரத்தில் அந்த அறையின் கதவு தட்டப்பட்டது. மிருத்யூ எழுந்து சென்று கதவை திறந்தான். ராகுல் உள்ளே வந்தான். அனைவரையும் கண்டு முறைத்தவன் "இங்கே நீங்க என்னதான் பண்றிங்க?" எனக் கத்தலாக கேட்டான்.

"இவளோட மேரேஜ்க்கு.." மிருதுளா சிபியை கை காட்டியபடி சொன்னாள்.

"ஜஸ்ட் செட்அப் மிருது.. உன் பொய்யை கேட்க எனக்கு நேரம் இல்ல.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும் உன்னை அந்த ரவுடி கும்பலுக்கு தலைவியாக்கி இருப்பாங்க.. கொஞ்சமாவது சீரியஸ்னெஸ் தெரியுதா? குரங்குகளா இருந்தா மூளை சுத்தமாவே வேலை செய்யாதா?" என்று அதட்டிக் கேட்டான்.

"கோபப்படாம சூஸ்ஸை குடிங்க சீனியர்.." மிருத்யூ டம்ளரை நீட்டினான். ராகுல் அவனை முறைத்தான்.

"நாங்க எல்லாம் சிபியை எங்களோடு கடத்திட்டு போக வந்திருக்கோம் சீனியர்.." என்றபடி எழுந்த மிருதுளா "பிரேமும் சிபியும் லவ் பண்றாங்க.. இந்த ஒன்வே வீட்டுல இருந்து எப்படியாவது இவளை கூட்டிக்கிட்டு தப்பிக்க டிரை பண்ணிட்டு இருக்கோம்.‌" என்றாள்.

ராகுல் நம்பிக்கை இல்லாமல் சிபியை பார்த்தான். சிபியின் முகம் அவளது கவலையை பறைச்சாற்றியது.

"நீங்கதான் எப்படியாவது எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும் சீனியர்.." என்ற மிருதுளாவை மற்ற மூன்று நண்பர்களும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

'என்னவோ ப்ளான் பண்றா..' என்று நினைத்தான் அர்விந்த்.

"நான் கேட்காமலேயே எனக்கு லவ்வர் ஆன மாதிரி எங்களை இந்த வீட்டை விட்டு தப்பிக்க வச்சிடுங்க.. ப்ளீஸ்‌.." என்று கெஞ்சலாக கேட்டாள்.

ராகுல் யோசித்தான்.

சிபி அலறும் தன் போனை எடுத்துக் கொண்டு ஜன்னலருகே வந்தாள்.

"என் போட்டோவை நீங்க வச்சிருப்பது கூட குற்றம்தான் சீனியர். நீங்க இந்த விசயத்துல எங்களுக்கு உதவி பண்ணா அந்த போட்டோ மேட்டரை நான் டீல்ல விட்டுடுறேன்.." என்றாள் மிருதுளா. குளிர்பானத்தை பருகியபடி தன் முகத்தில் பார்வையை பதிய வைத்திருந்தவளை நக்கலாக பார்த்தான் ராகுல்.

ராகுல் புகைப்படம் பற்றி விளக்கம் சொல்ல இருந்த நேரத்தில் போன் பேசி முடித்து விட்டு திரும்பி வந்தாள் சிபி.

"பிரேம்.. பாப்பா அழுதுட்டே இருக்காளாம்.. ஹோம்ல இருந்து போன் பண்ணாங்க.." என்றாள் கலங்கும் விழிகளோடு.

அவள் சொன்னது கேட்டதும் மிருதுளா அதிர்ந்துப் போய் தான் குடித்துக் கொண்டிருந்த குளிர்பானத்தை வெளியே துப்பினாள்.

குறிப்பு: நிறைய கேரக்டர்ஸ் வச்சி கதை எழுதுவது எனக்கு ரொம்ப கஷ்டமான விசயம் மக்களே.. பல சமயத்துல ஹீரோ பெயரை மறந்துட்டு அப்புறம் முன்னாடி எபி பார்த்துட்டு வந்து எழுதியிருக்கேன். இதிலேயும் கூட குழப்பத்துல பேரை மாத்தி எழுதிடுவேன். அதனால எப்போதாவது பெயர் மாறி இருப்பதை பார்த்தா மறக்காம சொல்லுங்கப்பா.. ப்ளீஸ்..

சிபி பாடிய பாட்டு மை வோன் சாங்கு..🙈 எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN