பௌர்ணமி 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
*** இரண்டு‌ நாளா உடம்பு சரியில்ல நட்புக்களே.. அதான் லீவ்..

"என்னை விடு பாலா!" தன் கையை உருவ முயன்றாள் பூர்ணிமா.

"அமைதியா இரு பூர்ணி.. இந்த ஆளுக்காக நீ கண்ணீர் விடுறதை நான் வெறுக்கிறேன்.!" என்றான் பாலா. அவனை திரும்பிப் பார்த்து முறைத்தவள் "செத்தது உன் அப்பாவா இருந்திருந்தா இப்படி சொல்லி இருப்பியா?" எனக் கேட்டாள் கடித்த பற்களின் இடையே.

"அப்பா.. இவ்வளவு நாள் எங்கே இருந்தான் உன் அப்பன்?" பாலாவும் அவளை போலவே கேட்டான்.

"உன் வீட்டு வாசல்லதான்டா.." என்றவள் தன் கையை பின்னால் இழுத்தாள். விடவே இல்லை அவன்.

"பாலா.. என்னை ஹர்ட் பண்ற நீ.!"

"நீ விலகாம இருந்தா நான் ஏன் ஹர்ட் பண்றேன்?" அவளின் காதோரம் கிசுகிசுத்தான்.

கலங்கிய கண்ணீர் கன்னங்கள் தாண்டி வழிய அவனை ஏறிட்டுப் பார்த்தவள் "என் அப்பா இறந்துட்டாரு பாலா.. இவருக்கு இறுதி சடங்கு நடந்துட்டு இருக்கு. இந்த நேரத்துல நான் உன்னோடு ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கணுமா? இவ்வளவு சீப்பா நீ? என் பீலிங்க்ஸை உன்னால கொஞ்சம் கூட புரிஞ்சிக்க முடியாதா?" எனக் கேட்டாள் சிறு குரலில்.

"உன் பீலிங்க்ஸ் எனக்கு புரியுது பூர்ணி. அதனால்தான் உன்னை இங்கிருந்து இழுத்துட்டு போகாம இருக்கேன். ஆனா உன்னை விட்டு என்னால விலக முடியாது.!"

"இப்படியே ஒட்டிட்டு இருக்க போறியா, ஊர் பார்த்திருக்க உலகம் பார்த்திருக்க?" விழிகளை உயர்த்திக் கேட்டாள்.

"நீ என் பொண்டாட்டி.‌ உன் பக்கத்துல நான் நிற்க கூடாதுன்னு சொல்ல இங்கே எவனுக்கு உரிமை இருக்கு?"

"ஆனா என் கை வலிக்குதுடா.."

"நீ ஓடாம இரு.. நான் கையை லூசா விடுறேன்.." என்றவன் தன் கையின் இறுக்கத்தை தளர்த்தினான்.

"மிருகம் நீ!"

"இப்பதான் கண்டுபிடிச்சிருக்க நீ!"

பூர்ணிமா அவனை எரிச்சலோடு பார்த்துவிட்டு தந்தையின் புறம் திரும்பினாள்.

அடுத்தடுத்த சடங்குகள் நடந்துக் கொண்டிருந்தது. பூர்ணிமா செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்திலும் பாலா உடன் இருந்தான். அவள் அழுகையில் எல்லாம் தோளோடு அணைத்துக் கொண்டான். அழுது நா வறளுகையில் அவளுக்கு தண்ணீரை தந்தான்.

"ஆளை பாரு.. ஊருல இல்லாம இவனேதான் பொண்டாட்டி கட்டியிருக்கான். அந்த புள்ளையை ஒரு செகண்ட் விடுறானா?" நாகேந்திரனின் சொந்தங்கள் பாலாவின் காதில் விழும்படியே திட்டினார்கள். ஆனால் அவன் செவிடு போலவே இருந்தான்.

தன் வீட்டு வாசலில் இரவு தூங்கிய நாகேந்திரன் அந்த தூக்கத்திலேயே இறந்து விட்டுள்ளார்.‌ பதினொரு மணியளவில் இந்த வீட்டு வாசலுக்கு வாலிபால் விளையாட வந்த அவரின் தம்பி மகன்கள் அவர் இன்னமும் உறங்குவது கண்டு சந்தேகப்பட்டு சென்று எழுப்ப முயன்று உள்ளார்கள். அதன் பிறகே அவர் இறந்ததை கண்டு பிடித்து உள்ளனர். சொந்த பந்தங்கள் கூடிய பிறகே பூர்ணிமாவுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று நினைவு வந்தது அவர்களுக்கு. தனியாய் ஓர் ஆள் சென்று அழைத்தால் அனுப்ப மாட்டார்கள் என்றே இரண்டு பேர் சென்று உண்மைகளை சொல்லி அவளை அழைத்து வந்தனர்.

நாகேந்திரனை நல் முறையில் அடக்கம் செய்து விட்டு வீடு வந்தனர் அனைவரும். இருள் சூழ்ந்து விட்டிருந்தது. நெருங்கிய சொந்தங்கள் மட்டும் அங்கே இருந்தனர்.

பூர்ணிமா சோகத்தோடு திண்ணையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். கண்ணீரே வற்றி விட்டிருந்தது. பாலா அவளின் அருகில் அமர்ந்திருந்தான். அவள் சாய தோள் தந்தான். ஆனால் அவள் சாயவில்லை. சாய விரும்பவில்லை.

நாகேந்திரனின் உடன் பிறப்புகளும், பாலாவின் வீட்டாரும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.

'ஒற்றை நாளாவது வாழ்ந்திருக்கலாம். அவர்தான் தந்தை என்ற உண்மையை சொல்லிய பிறகு தன்னோடு ஒரே ஒருநாளாவது வாழ்ந்திருக்கலாம்' என்று நினைத்தாள் அவள். அப்பா அப்பா என்று இத்தனை வருடங்கள் அரற்றிய மனதிற்கு ஒற்றை நாள் கூட அவரோடு வாழ கொடுப்பினை இல்லாமல் போனதே' என்று மனமுடைந்துப் போனாள்.

"மணி ஒன்பது ஆக போகுது.. வா சாப்பிடுவ.." அழைத்த கணவனை நிமிர்ந்து வெறித்தவள் "என்னை விட்டு போ பாலா.." என்றாள் ஆத்திரத்தோடு.

"கோபத்துல கண்டபடி கத்திட்டு இருக்காத. அப்புறம் நான் உன் வாயை உடைப்பேன்.."

"பார்க்கலாம் அதுவும். உன்னை நான் இப்பவே கொல்லணும்ன்னு நீ அவ்வளவு ஆசைப்பட்டா அதை நான் நிறைவேத்திதானே ஆகணும்?" என்றாள் அவள்.

"பட்டினியா சாக உனக்குத்தான் ஆசை.." குற்றம் சாட்டினான் பாலா.

சுற்றி ஆட்கள் இல்லாமல் இருந்திருந்தால் தாண்டவம் ஆடியிருப்பாள் பூர்ணிமா.

"என் அப்பா செத்துட்டாரு பாலா.." என்றாள். அவனுக்கு புரிய வைக்க நினைத்தாள். ஆனால் அவனோ எதுவும் புரியாதவன் போலவே இருந்தான். நாகேந்திரனுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது என்று நினைத்தான்.

"நீ பட்டினியா இருந்தா அந்த ஆள் உயிரோடு வந்துடுவானா?"

"இன்னைய நாளை நீ ஞாபகம் வச்சிக்க.. இதுக்கு நான் உன்னை சாகடி அடிக்காம விட மாட்டேன்.." என்று எச்சரித்தாள். அவன் உதட்டை சுழித்தபடி வேறு பக்கம் பார்த்தான்.

"சாப்பிட வாடா பூரணி.." பூர்ணிமாவின் அத்தை ஒருத்தி அழைத்தாள். பூர்ணிமா வேண்டாமென்று தலையசைத்தாள்‌.

"அழுதழுது சத்தே இல்லாம போயிருக்கும். வா வந்து ஒரு வாய் சோறு மட்டும் சாப்பிட்டுக்க‌‌.." என்றவள் பூர்ணிமாவின் கையை பற்றி இழுத்தாள். பெரியவர்களுக்கு அவ மரியாதை செய்ய கூடாது என்றெண்ணி எழுந்த பூர்ணிமா அத்தையோடு நடந்தாள்.

பாலா அவளை முறைத்தான். அத்தை தந்த உணவில் கொஞ்சமாக உண்டு விட்டு போதுமென்று எழுந்து வந்து விட்டாள். பாலா அதே இடத்தில் அமர்ந்திருந்தான். அவனை உதைக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அவனருகேதான் சென்று அமர சொன்னது அவளின் மனம்.

சுவரில் தலை சாய்ந்தவள் "நீ சாப்பிடலையா?" எனக் கேட்டாள்.

"பசிக்கல.." என்றவன் அவளிடம் மாத்திரை ஒன்றை நீட்டினான்.

"தலைவலி மாத்திரை.."

"தேங்க்ஸ்.." என்றபடி எடுத்து விழுங்கியவள் "நீ என் அப்பாவை விரட்டி இருக்க கூடாது.." என்றாள்.

"அந்த ஆளை நான் கொல்லாம விட்டதே உன் ஒருத்திக்காகதான். அதுக்கும் மேலேயும் கருணை கேட்காத.. அவராலதான் உன் அம்மா இறந்து போனாங்க."

"பொய் சொல்லாத.. என் அம்மா.. முல்லையம்மாவாலதான் அவங்க இறந்து போனாங்க.."

பாலா அவளை முறைத்தான். "உனக்கு எதுவும் தெரியாது. அதனால அமைதியா இரு.. முல்லை அத்தை மேல பத்து சதவீத தப்பு இருப்பதா ஒரு காலத்துல நம்பினேன். ஆனா உன் அப்பா மேல எப்பவுமே நூறு சதவீத தப்பு இருக்கு.." என்றான் சிறு கர்ஜனை குரலில்.

"இறந்தவரை இகழாதே!"

"பட்டுன்னு ஒரு அறை விட்டிருப்பேன்.‌ சூழ்நிலை சரியா இல்ல.. தப்பு செஞ்சிட்டு செத்தா அவன் செஞ்ச தப்பும் சேர்ந்து செத்துடுமா என்ன? இல்ல அவன் தப்பால பாதிக்கப்பட்டவங்களோட மனசு காயமும் அத்தோடு ஆறிடுமா?" எனக் கேட்டான் கோபத்தோடு.

அவனின் கோபம் என்று குறைவாக இருந்துள்ளது, இன்று அவள் அவனின் கோபத்தின் காரணம் தேட?

"சூழ்நிலை சரியா இருந்திருந்தா நானும் உன்னை சும்மா விட்டிருக்க மாட்டேன். எல்லாமும் தெரிஞ்சும் எதுவும் சொல்லாம இருந்தவன் நீதான். என் அம்மா இத்தனை வருசம் மறைச்சாங்க. நீ இத்தனை மாசம்.."

"நீ வருத்தப்பட கூடாதுன்னு நினைச்சேன்.."

"இப்ப குளுகுளுன்னு இருக்கு!"

தொண்டை கட்டிக் கொண்டதில் வார்த்தைகள் காற்று போல வைத்துக் கொண்டிருந்தது. அப்படி இருந்தும் கூட இவள் இப்படி வாயாடுகிறாளே என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

மணி பன்னிரெண்டை தாண்டி விட்டிருந்தது. அல்லி வைத்துச் சென்றிருந்த உணவு தட்டு கை தொடாமல் மேஜையின் மீது இருந்தது. முல்லை தனது அறையில் இருந்தாள். அவளது பழைய அறை அது. இதுவரை யாரும் பயன்படுத்தி இருக்கவில்லை. அந்த அறையை காலி செய்திருக்கும் இல்லை.

மலரும் முல்லையும் சேர்ந்திருந்த புகைப்படம் இன்னமும் அதே இடத்தில் இருந்தது. மலர் இறந்த அன்று என்ன மனநிலையில் இருந்தாளோ அதே மனநிலையில் இன்றும் இருந்தாள்.

கையில் இருந்த சேலையை கலங்கும் விழிகளோடு பார்த்தாள். எத்தனை தடைகள் தாண்டி இந்த நாளை தொட்டிருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தாள்.

அன்று மொத்த குடும்பமும் எதிர்த்த போது கூட தப்பித்துதான் ஓடினாள். இப்படி சேலையை கையில் தூக்கவில்லை.

சேலையால் முகத்தை மூடியபடி கட்டிலில் அமர்ந்தாள். பூர்ணிமாவின் நினைவு வந்தது. அவள் பேசி சென்ற வார்த்தைகள் மூளைக்குள் சுழன்றது.

பூர்ணிமா மட்டுமே தன் வாழ்க்கை என்று நினைத்திருந்தவள் இப்படி ஒரு நாள் வரும் என்று கனவில் கூட எதிர் பார்க்கவில்லை.

குலுங்கி அழுதாள். பூர்ணிமாவுக்காக உலகத்தையே கைப்பற்றி இருப்பாள்‌. ஆனால் அவளே வெறுத்து சென்றால் என்ன செய்வாள்?

"அவளை அவ குடும்பத்தோடு சேர்த்து வச்சாச்சி.. இனி என் தேவை அவளுக்கு எதுக்கு? இந்த உலகமே வேணாம் முல்லை.." என்று சொல்லியபடி எழுந்து நின்றாள். மின்விசிறியை பார்த்தாள். கலங்கும் விழிகளை துடைத்தபடி சேலையை தூக்கி பேனின் மீது எறிந்தாள்.

இரவு நேர சில்வண்டுகளின் சத்தம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. தன் மடியில் சாய்ந்திருந்த மனைவியை பார்த்தான் பாலா. சக்தி தீர்ந்து தூங்கி விட்டிருந்தாள். சுவரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளை தோளில் சாய்த்துக் கொண்டிருந்தவன் அவள் ஓயாமல் தலையை அப்படியும் இப்படியுமாக திருப்புவதை கண்டு அவளை மடியில் சாய்த்துக் கொண்டான். இறப்பு நடந்த வீட்டின் முதல் நாள். பலரும் உறங்காமல் இருந்தனர். பூர்ணிமாவை பாலா மடியில் சாய்த்துக் கொண்டதும் பலரும் அவனை வெறித்துப் பார்த்தனர். ஆனால் அவன் யாரையும் கண்டுக் கொள்ளும் நிலையில் இல்லை.

"உள்ளே கட்டில் இருக்கு. அந்த புள்ளையை எழுப்பி கொண்டு போய் தூங்க வை." பூர்ணிமாவின் பெரியப்பா தன் மனைவியிடம் சொன்னார். ஆனால் பாலாவின் முகத்தை கண்ட பிறகும் யார் அவனின் அருகே செல்ல விரும்புவர்?

பூர்ணிமாவின் சித்தி ஒருத்தி வீட்டுக்குள் இருந்து போர்வையும் தலையணையையும் கொண்டு வந்து பாலாவின் அருகே வைத்தாள். போர்வையை தரையில் விரித்துப் போட்டாள். "பாப்பாவை இதுல தூங்க சொல்லு.." என்றுவிட்டு நகர்ந்தாள். பாலா காதில் வாங்காதவன் போல அமர்ந்திருந்தான்.

அந்த பக்கம் முகம் பார்த்திருந்த பூர்ணிமா உறக்க கலக்கத்தில் இந்த புறம் திரும்பினாள். அவனோடு இன்னும் கொஞ்சம் நெருங்க முயன்றாள். குளிர் தாங்காமல் அவனை அணைக்க முயன்றாள்.

பாலா தன் சட்டையை கழட்டினான். இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவு எடுப்பது சற்று வித்தியாசமாக இருக்கும் என்று அவனுக்கே தெரியும். யாரின் எண்ணத்துக்கும் பயப்படாதவன் ஆயிற்றே‌. தன் சட்டையை பூர்ணிமாவின் மீது போர்த்தி விட்டான். எதிரே இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த அனைவருமே இவனை பைத்தியம் என்று நினைத்தார்கள்.

அந்த வீட்டின் எந்த பொருளையும் பூர்ணிமா புழங்குவதில் அவனுக்கு விருப்பம் இல்லை.

கட்டிலின் மீது ஏறி நின்றிருந்த முல்லை சேலையை தூக்கி தூரமாக எறிந்தாள். "ஒன்னும் தேவையில்ல.. எந்த உறவும் தேவையில்ல.. அவ என்னை தப்பா நினைச்சா எனக்கு என்ன? நான் எந்த தப்பும் செய்யல. நம்பிக்கைக்கு ஆதாரம் தேவையில்லை. அவ என்னை நம்பாம போனா அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னு அர்த்தம். என் மேல நம்பிக்கை இல்லாதவங்களுக்காக நான் சாக முடியாது.." என்றவள் குளியலறைக்குள் புகுந்தாள்.

அழுகை வரவில்லை இப்போது. மனம் காலியாக கிடந்தது. எந்த உணர்வுகளுமே வரவில்லை. எந்த யோசனையும் தோன்றவில்லை. இறந்து பிறந்ததாக கணக்கில் எடுத்துக் கொண்டாள்‌. வெகு நேரம் குளித்தாள். குளியல் ஒன்றே தன் வேதனையை தீர்க்கும் என்ற எண்ணத்தோடு குளித்தாள். நடு இரவில் பச்சை தண்ணீரில் குளிப்பதை நினைத்து சிரித்தும் கொண்டாள்.

கிழக்கில் சூரியன் உதித்தது. பறவைகள் பல இசை பாடியபடி பறந்துக் கொண்டிருந்தன.

கனவெல்லாம் தந்தையின் பிணம்தான் இருந்தது பூர்ணிமாவுக்கு. கனவிலும் அழுதுக் கொண்டே இருந்தாள்.

"காப்பி.." யாரோ ஒரு பெண்மணியின் குரலில் கண் விழித்தாள் பூர்ணிமா. குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளின் பார்வையில் முதலில் தெரிந்தது வெள்ளை நிற பனியனில் இருந்த தன் கணவன்தான். சிவந்த கண்களோடு அவளின் முகம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

பூர்ணிமா தலையை பிடித்தபடி எழுந்தாள். அவனின் மடியில் படுத்து உறங்கி விட்டது கண்டு மொத்த முகமும் சிவந்து போனது. சுற்றி இருந்த சொந்தங்களை காணுகையில் இன்னும் அதிகமாக முகம் சிவந்தது.

'எருமை.. என்னை எழுப்பி விட்டிருக்க கூடாதா? இப்படி மானத்தை வாங்கிட்டானே!' என்று பாலாவை திட்டினாள்.

எதிரில் இருந்த படுக்கையையும் தன் தோளில் இருந்த சட்டையையும் மாறி மாறி பார்த்தவள் நடந்ததை யூகிக்க முயன்று தோற்றுப் போனாள்.

"வீட்டுக்கு போய்ட்டு வரலாம் பூர்ணி.!" பாலா சொன்னது கேட்டு அவன் புறம் பார்த்தவள் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். யோசனையோடு மறுப்பாக தலையசைத்தாள்.

"இங்கேயே இருக்கேன் நான்!" என்றாள்.

"காலங்காத்தால வாதம் பண்ண வேணாம்.. அமைதியா வா.. போய் சாப்பிட்டு டிரெஸ் மாத்திட்டு வரலாம்.." என்றவன் எழுந்து நின்றான். அவளின் தோளில் கிடந்த சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். ஆயிரம் சொன்னாலும் அந்த வீடு அந்நியம்தான் அவனை பொறுத்தவரை.

பூர்ணிமா என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினாள்.

"வா பூரணி‌ வீட்டுக்கு போய் பல் விளக்கிட்டு வருவ.." பூர்ணிமாவின் தங்கை ஒருத்தி அழைத்தாள்.

"என்னோட வராம நீ அவளோடு போனா.. அப்புறம் நடக்கும் எந்த சேதாரத்துக்கும் நான் பொறுப்பு இல்ல.." பாலாவின் பேச்சில் எரிச்சலுற்றவள் அவனின் காலில் ஓங்கி குத்தினாள்.

"நீ இப்படி பேசும் போதெல்லாம் நான் உன்னை ரொம்ப வெறுக்கறேன்.." என்றாள் ஆத்திரத்தோடு.

"அப்புறமா வெறுக்கலாம். இப்ப எழுந்து வா போலாம்.." என்றவன் குனிந்து அவளின் தோளை பற்றி எழுப்பினான்.

"வலுக்கட்டாயமா கூட்டி போற.." என்று முனகினாள்.

"தெரியாத இவங்களோடு உன்னை விட்டுட்டு போறதுக்கு பதிலா உன்னை நான் கடத்திட்டு போகவும் தயங்க மாட்டேன்." என்றவன் தன் காரின் கதவை அவளுக்காக திறந்து விட்டான்.

"ஐ ஹேட் யூ.." என்றபடியே ஏறி அமர்ந்தாள்.

காரை இயக்கி சாலையில் ஓட விட்டவன் "காலங்காத்தால ரொம்ப நல்லதாதான் சொல்ற போல!" என்று எரிச்சலோடு திட்டினான்.

"நீ என் பிரைவஸியை திருடுற.. என் சொந்த முடிவுகளை அவமானப்படுத்துற.." என்றாள் சாலையை பார்த்தபடி.

"உன் வோன் உலகத்துல நான் எப்பவும் தலையிட மாட்டேன். ஆனா உனக்கு இந்த குடும்பத்தை பத்தி எதுவும் தெரியாது. உனக்கு தெரியாத ஒரு இடத்துல உனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட பேச்சை கேட்பதால ஒன்னும் குறைஞ்சி போக மாட்ட.." என்றான் அவன் பதிலுக்கு.

"காலங்காத்தாலயே சண்டை.." கண்ணாடியில் தலை சாய்த்தாள்.

"என்னதான் ஆச்சி அப்படி? முக்கோண காதல் கதையா என் அம்மா, என் அப்பா, என் அம்மாவுக்கு நடுவுல?"

அவளின் கேள்வி கண்டு கொஞ்சம் சிரிப்பு வந்தது அவனுக்கு.

"இதை நான் சொல்வதை விட உன் அம்மா சொன்னா கரெக்டா இருக்கும். ஏனா நான் நேத்து வரை உன் அம்மா மேல சந்தேகப்பட்டு இருந்தேன். ஆனா அவங்க விசயங்களை விலக்கி சொன்ன பிறகுதான் என் சந்தேகம் தீர்ந்துட்டு இருக்கு. இந்த டைம்ல நானே குழப்பவாதிதான். நான் என்ன சொன்னாலும் அது எனக்கே தப்பா படலாம்.." என்றான்.

பூர்ணிமா புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள்.

"ஆனா ஒன்னு மட்டும் உண்மை பூர்ணி. உன் அப்பாவால் என் பெரிய அத்தை இறந்துப் போனாங்க‌. உன் அப்பாவால் என் சின்ன அத்தை வீட்டை விட்டு ஓடி போனாங்க. இரண்டு பேரோட லைப்புமே நாசம். அதுக்காக உன் அப்பாவை எப்பவுமே என்னால மன்னிக்க முடியாது. இன்னும் சொல்லணும்ன்னா அவருக்கு நல்ல சாவா வந்துடுச்சேன்னு எமன் மேல கூட கோபத்துலதான் இருக்கேன் நான் இப்ப." என்றான்.

வீட்டின் முன் அவன் காரை நிறுத்தியதும் கீழே இறங்க தயங்கினாள் பூர்ணிமா.

"நான் குழப்பத்துல இருக்கேன். நான் எப்படி அம்மாவை பார்க்க முடியும்.. சோகத்துல நேத்து என்னவென்னவோ பேசிட்டேன். அவங்க கோபத்துல இருப்பாங்க.." என்றாள் வருத்தத்தோடு.

"அதுக்காக கார்லயே உட்கார்ந்துட்டு இருக்க போறியா என்ன? குழப்பம் தீர நீ உன் அம்மாவோடுதான் பேசியாகணும்.." என்றவன் கதவை திறந்து அவளின் கைப்பற்றி கீழே இறக்கி விட்டான்.

பூர்ணிமா தயங்கி தயங்கி வீட்டுக்குள் வந்தாள்.

முல்லை கூடத்தில் அமர்ந்திருந்தாள். தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்தவள் தன் பின்னால் நிழல் ஆடுவது கண்டு திரும்பிப் பார்த்தாள். பூர்ணிமா தயக்கமாக நின்றிருந்தாள்.

"ம்மா.." இழுத்தாள்.

"போய் குளிச்சிட்டு வா!" என்ற முல்லை மீண்டும் தொலைக்காட்சிக்கு பார்வையை திருப்பினாள்.

அம்மாவின் கட்டுப்பாடுகள் தெரிந்தவள்‌.‌ எதுவும் பதில் பேசாமல் அமைதியாக குளிக்க கிளம்பினாள்.

பூர்ணிமா தனது அறைக்கு வந்தபோது அந்த அறையில் தன் பொருட்கள் எதுவும் இல்லாததை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள். ஊரில் இருந்து வந்த மறுநாளே பாலாவின் அறைக்கு மாறி விட்டிருந்தாள் அவள்.

எதிரே இருந்த அறைக்குள் நுழைந்தவள் தனது உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். அவள் கதவை தாழிடும் முன் கதவை உடைக்காத குறையாக உள்ளே நுழைந்தான் பாலா.

"நான் குளிக்க போறேன் பாலா.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தவன் "மீ டூ பூர்ணி.." என்றான். சட்டையை கழட்ட ஆரம்பித்தான்.

தலையை அசைத்தபடி பெருமூச்சு விட்டவள் "சரி நீயே குளி.." என்றபடி வெளியே நடக்க முயன்றாள். அவளின் கையை பற்றியவன் "நோ.." என்றான்.

பூர்ணிமா குழப்பமாக அவனை பார்த்தாள். "தண்ணீர் சேவ் பண்ணலாம் பூர்ணி.. சேர்ந்தே குளிக்கலாம்.." என்றான்.

உதட்டை அழுத்தமாக கடித்துக் கொண்டவள் சுவரை வெறித்தாள். 'என்ன பிறவி இவன்?' என்று யோசித்தாள்.

"டைமும் சேவ் ஆகும் பூர்ணி!" என்றபடியே அணிந்திருந்த கால்சட்டையையும் கழட்டி எறிந்தான்.

"என் அப்பா செத்துட்டாரு பாலா.." அவன் பக்கம் திரும்பிச் சொன்னாள்.

"ரிப்பேர் ஆன டேப்ரிக்கார்டர் மாதிரி நேத்திருந்து இதையேதான் சொல்லிட்டு இருக்க.." என்றவன் அவளின் பின்னலை விடுவிக்க ஆரம்பித்தான்.

"நான் பீலிங்க்ல இருக்கேன் பாலா.. ஆனா நீ ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க.!" என்றவளின் முகத்தை தன் புறம் திருப்பினான். அவளின் இதழில் தன் இதழ் பதித்தவன் "இதுவரை நான் அப்படி பண்ணல. ஜஸ்ட் உனக்கு கம்பர்டா இருக்க டிரை பண்ணேன். உனக்கு என்னை பார்க்கையில் கண்டதும் கற்பனையில் வந்தா அதுக்கு நான் இல்ல. உன் மனசுதான் காரணம்!" என்றான்.

பூர்ணிமா திகைத்தாள். நொடியில் தன் பக்கம் பழியை திருப்பி விட்டு விட்டானே என்று கோபமாக வந்தது.

"என் அத்தை எனக்காகவே உன் தலை முடியை இவ்வளவு அழகா வளர்த்தி விட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்.. செம வாசம் பூர்ணி.." என்றபடி அவளின் தலையில் முகம் புதைத்தான்.

"கொடுமை உன்னோடு.. தள்ளி போ மரியாதையா.." என்றவள் அவனின் நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளினாள்.

"உன்னை டைவர்ஸ் பண்றது பத்தி நான் யோசிச்சிட்டு இருந்தேன்!"

அவளை அதிர்ச்சியோடு பார்த்தவன் "வாட்? இந்த அழகான பேஸை பார்த்த பிறகும் இப்படி யோசிச்சியா? மாலை கண் நோய் பகல்லயும் வந்துடுச்சா என்ன? என்னை முழுசா பார்த்த பிறகுமா இப்படி நினைச்ச?" எனக் கேட்டான் தன்னை சுட்டிக் காட்டி.

அவனின் முகத்தை விட்டு பார்வையை கீழிறக்கவில்லை பூர்ணிமா. 'கவுக்க பார்க்கறான்.. கவுந்துடாத பூரணி!' என்று தன்னிடமே சொல்லிக் கொண்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN