குரங்கு கூட்டம் 8

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"பாப்பாவா? யாரோட பாப்பா?" மிருத்யூ தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றுக் கேட்டான். அவனுக்கு அதிர்ச்சியில் உலகமே உறைவது போலிருந்தது. மிருதுளா, அர்விந்த் மட்டுமின்றி ராகுலும் கூட அதே அதிர்ச்சியில்தான் இருந்தான்.

"எங்க பாப்பாதான்!" சிபி தரையை பார்த்தபடி சொன்னாள்.

"எத்தனை மாசம்?" எனக் கேட்ட அர்விந்தை கேள்வியாக பார்த்தாள்.

"உங்க பாப்பாவுக்கு எத்தனை மாசம்?"

"ஒன்னரை வருசமாகுது!" மீண்டும் தலை குனிந்தபடியே சொன்னாள் சிபி.

"இப்ப இதுவா பிரச்சனை? விடுங்கடா அதை!" என்ற பிரேம் தன் தாடியை சொறிந்துக் கொண்டான்.

மிருதுளா துப்பிய குளிர்பானம் அவளுக்கு முன்னால் நின்றிருந்த ராகுலைதான் நனைத்திருந்தது. ராகுல் அவளை முறைத்தான். "சாரி சீனியர்.." என்றவளின் தோளில் இருந்த துப்பட்டாவை பிடுங்கியவன் தன் சட்டையின் ஈரத்தை துடைத்தான்.

பிரேம் ஒரு பக்கம் நின்று மிருதுளாவை முறைத்துக் கொண்டிருந்தான்.

"முதல்ல இந்த டிரெஸ்ஸை மாத்து.." என்றான் கோபமாக.

"வேணாம்.." அவசரமாக சொன்ன ராகுலை மிருதுளாவும் பிரேமும் ஒருசேர பார்த்தனர். ராகுல் மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"அழகா இருக்காளே.. ஏன் இந்த டிரெஸ்ஸை மாத்த சொல்றன்னு கேட்டேன்.!" கையசைத்து சொன்னவனை சந்தேகமாக பார்த்தான் அர்விந்த்.

"என்னவோ தப்பா இருக்கே!" முனகிய பிரேமை முறைத்த மிருதுளா எழுந்து வந்தாள். பிரேமின் முன்னால் வந்து நின்றவள் "நீ முதல்ல சத்தியம் பண்ணுடா!" என்றபடி கையை நீட்டினாள்.

பிரேம் கேள்வியாக அவளைப் பார்த்தான்.

"நீ நிஜமாவே படிக்கதான் போனன்னு சொல்லுடா!"

பிரேம் தன் கீழுதட்டை கடித்தபடி சிபியை அடிக்கண்ணால் பார்த்தான்.

"படிக்கத்தான் போ.."

"செருப்பாலயே அடிப்பேன்டா!" என்றபடி அவனருகே வந்தான் அர்விந்த்.

"ஒன்னரை வயசுல பாப்பான்னா அதுக்கு அர்த்தம் நீ டெல்லி போன கொஞ்சம் மாசத்துலயே காதலிக்க ஆரம்பிச்சி.." இடை நிறுத்திவிட்டு விரல்களால் கணக்கிட ஆரம்பித்தான். "ஒன்னரை ப்ளஸ் பத்து.. மொத்தம் இருபத்தியெட்டு மாசம். மூணு வருசத்துல இருந்து கழிச்சா எட்டு மாசம்தான் பாக்கி. அப்படின்னா நீ போன உடனே லவ் பண்ண ஆரம்பிச்சி இருக்க.." என்றான்.

"ஓ.." என்ற நண்பனின் வலது தொடையில் ஓங்கி உதைத்தாள் மிருதுளா.

"என்ன ஓ? உன் அம்மாவும் அப்பாவும் பணத்தை செலவழிச்சி உன்னை படிக்க அனுப்பினா படிக்காம கல்யாணம் கூட பண்ணாம குடும்பம் நடத்திட்டு இருந்திருக்க.." என்றாள் கோபமாக.

"அது கூட பரவால்ல.. ஒன்னரை வயசுல குழந்தை.. இது மட்டும் வீட்டுக்கு தெரிஞ்சதுன்னா உங்க அம்மா உன்னை மட்டுமில்லாம எங்களையும் சேர்த்து கழுவி ஊத்துவாங்க.. என்னவோ நாங்கதான் உனக்கு குடும்பம் நடத்தவே கத்து தந்த மாதிரி கண்டபடி திட்டுவாங்க.." என்றபடியே அர்விந்த் அவனின் முதுகில் ஐந்தாறு குத்துகளை விட்டான்.

பிரேம் வலி தாளாமல் தொடையை ஒரு கையிலும் முதுகை மறு கையிலும் பிடித்தான்.

மிருத்யூ தனது பாவாடையை மடித்துக் கட்டிக் கொண்டு நெருங்கினான். பிரேமின் தலையில் நச்சென்று நான்கு கொட்டுகளை வரிசையாக வைத்தான்.

"அம்மா.." வலி தாங்காமல் கத்தினான் பிரேம். அவனின் வாயில் குத்தினாள் மிருதுளா. "சத்தம் போடாத பக்கி.. யாராவது வந்துடுவாங்க!" என்றவள் அவனின் தோளில் தட்டி மண்டியிட வைத்தாள்.

"இரண்டரை வருசம் லவ் பண்ணி இருக்க.. ஆனா எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.. குழந்தை வேற.." பற்களை கடித்தான் மிருத்யூ.

"உன்னை என்ன பண்ணா தகும்? பாத்ரூம் பக்கெட்ல மூழ்கடிச்சி கொன்னுடலாமா?" மிருதுளாவின் யோசனையை கேட்டு சிபிக்கு அடிவயிறு கலங்கியது.

"அவர் பாவம்.." என்றாள் ஓரமாக நின்றபடி.

பிரேம் வீங்கிய உதட்டோடு நிமிர்ந்து பார்த்தான். "காதலி பொண்ணு எனக்கு அடி விழுந்தா குறுக்க விழுந்து காப்பாத்துவான்னு நினைச்சேன். அடி வாங்கும் வரை வேடிக்கை பார்த்துட்டு இப்ப பாவம்ன்னு சொல்றியே?" எனக் கேட்டான் வருத்தத்தோடு. சிபி பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்.

"அவக்கிட்ட என்னடா பேச்சு? முதல்ல எங்களுக்கு பதில் சொல்றா?" என்றபடி அவனின் பின்பக்கம் உதைத்தான் அர்விந்த்.

சிபி ராகுலை பார்த்தாள். அவனோ இருக்கையில் சாகவாசமாக அமர்ந்து குளிர்பானத்தை பருகிக் கொண்டிருந்தான்.

சிபி தன்னை பார்ப்பதை கண்டவன் "நீங்க வாங்க சிஸ்டர்.. அதுங்க குரங்குங்க.. அப்படிதான் அடிச்சிப்பாங்க.!" என்று அழைத்தான் அவன். சிபி மறுப்பாக தலையசைத்துவிட்டு நின்ற இடத்திலேயே இருந்துக் கொண்டாள்.

"அவரை காப்பாத்துங்க சார்.!" என்றாள்.

"சாரி சிஸ்டர்..‌ நான் மனுசங்க பஞ்சாயத்தை மட்டும்தான் தீர்ப்பேன். குரங்குங்க பஞ்சாயத்துக்கு போகவே மாட்டேன்!" என்றவனை முறைத்தாள்.

"என்ன பதில்டா வேணும்? பேக்ல உதைக்காதடா.. ஏற்கனவே இந்த வீட்டாளுங்க பார்க்கறாங்கன்னு கண்ட ஆசனமும் செஞ்சி உட்காரும் இடமே முழுசா வலிக்குதுடா.." பிரேம் சொன்னதை கேட்ட பிறகு மீண்டும் அங்கேயே நான்கைந்து உதைகளை விட்டான் அர்விந்த்.

பிரேம் உதட்டை கடித்தான். கத்தாமல் இருக்க பாடாய் பட்டான். வலியை பற்றி சொல்லாமலேயே இருந்திருக்கலாம் என்று இப்போது நினைத்தான்.

"படிக்க போன.. சரி காதலிச்ச.. அதை கூட வாலிப பருவம்ன்னு விட்டுடலாம். ஆனா குழந்தை.. அதுவும் ஒன்னரை வயசுல.. காதலிக்கிறேன் காதலிக்கிறேன்னு சொன்னியே.. ஒரு தடவையாவது அப்பா ஆகிட்டேன்னு சொன்னியா?" அவனின் தலை முடியை பிடித்து உலுக்கியபடியே கேட்டாள் மிருதுளா.

"அப்படி சொன்னா வர மாட்டிங்களோன்னு சொல்லாம விட்டுட்டேன்.. சாரிடி மிருது.. நீயாவது கொஞ்சம் கருணை காட்டு.. ரொம்ப வலிக்குது!" கெஞ்சலாக கேட்டவனின் கன்னத்தில் தன் கை விரல்களை மடக்கி குத்தியவள் "ரவுடி குடும்பத்துல கொண்டு வந்து கோர்த்து விட்டது கூட சரின்னு ஒத்துப்போம். ஆனா இதை எப்படிடா ஒத்துப்போம்?" எனக் கேட்டாள்.

'இவங்களுக்கு என்னை அடிக்க இதுதான் சான்ஸ்ன்னு அடிக்கிறாங்க.. வாய் திறந்தாலும் அடிதான். இல்லன்னாலும் அடிதான்.. இவங்ககிட்ட இருந்து தப்பிச்சா முருகா நான் உனக்கு பால் காவடி எடுக்கறேன்ப்பா.. மனசு வச்சி இந்த பிஞ்சு குழந்தையை காப்பாத்தி விடுப்பா!' என்று வேண்டிக் கொண்டான் பிரேம்.

"மூணு வருசமும் நாள் தவறாம போன் பேசிட்டு முழு பூசணியை சோத்துல மறைச்சி வச்சிருக்க நீ.‌ உன்னை மாதிரி ஒரு லோயல் பிரெண்ட் கிடைக்க நாங்க எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும்?" பொய் ஆச்சரியத்தோடு கேட்டான் மிருத்யூ.

"சாரி.."

"வாவ்.. சாரி சொல்லிட்டான். எல்லா பிரச்சனையும் தீர்ந்தது.. வாங்கப்பா வீட்டுக்கு போகலாம்.." கை தட்டிச் சொன்னாள் மிருதுளா.

"இவ சரியான டிராமா குயின் சிஸ்டர்!" மிருதுளாவை பற்றி சிபியிடம் சொன்னான் ராகுல்.

"இப்ப என்னதான் பண்ணனும்ன்னு சொல்ற?" பிரேம் நிமிர்ந்துப் பார்த்துக் கேட்டான்.

"நாங்க யோசிச்சி சொல்றோம்!" என்றான் மிருத்யூ.

"என்னவோ பெருசா ப்ளான் பண்றாங்க!" முனகினான் ராகுல்.

மிருதுளா நண்பனை விட்டு ஒதுங்கினாள். மிருத்யூ முறைத்தபடியே நகர்ந்தான். அர்விந்த் மட்டும் பிரேமின் பின்பாகத்தில் இன்னும் சில உதைகளை தந்து விட்டு தள்ளி நின்றான். பிரேம் தரையில் கையை ஊன்றி இடுப்பை ஒரு கையால் பற்றியபடி எழுந்து நின்றான்.

சுற்றிலும் பார்த்தான். மிருத்யூ தனது தலை அலங்காரத்தை சரி செய்துக் கொண்டிருந்தான். அர்விந்த் மூச்சு வாங்கியபடி குளிர்பானம் பருகினான். மிருதுளாவோ கையை உதறிக் கொண்டிருந்தாள். இவனை அடித்ததில் அவளுக்கு கை வலி வந்து விட்டது. 'இவங்க போடும் ஷோவை பார்த்தா நானென்னவோ அடிச்ச மாதிரியும் அவங்க என்னவோ அடி வாங்கிய மாதிரியும் இருக்கு!' கவலையோடு நினைத்தான் பிரேம்‌.

"உங்க பாப்பா இப்ப எங்கே இருக்கா?" சிபியிடம் கேட்டாள் மிருதுளா.

நகத்தை கடித்தபடி ஓரமாக நின்றிருந்த சிபி "ஹோம்ல.. இங்கிருந்து அறுபது கிலோ மீட்டர்ல ஒரு சில்ட்ரன்ஸ் ஹோம் இருக்கு. அனாதை குழந்தைகளுக்கான ஹோம். ஆனா நானும் பிரேமும் அவங்கக்கிட்ட கெஞ்சி கேட்டு இரண்டு வாரத்துக்கு பார்த்துக்கோங்கோன்னு லஞ்சம் தந்துட்டு வந்தோம். ஆனா பாப்பா அழறாளாம்.!" என்றாள் இமையின் ஈரத்தை துடைத்தபடி.

இவளின் கண்ணீரை காண முடியாமல் நொண்டியபடியே அவளருகே வந்தான் பிரேம். "கவலைப்படாதே சிபி.. பாப்பாவை சீக்கிரம் போய் கூட்டி வந்துடலாம்!" என்றான்.

சிபி சரியென்று தலையசைத்தாள்.

"பாப்பா இருக்கான்னு சொல்லியிருந்தாலே இந்த கல்யாணம் நின்னிருக்கும். அதை விட்டுட்டு எங்களை ஏன்டா இப்படி கூட்டி வந்து கொடுமை பண்ற?" எனக் கேட்டபடியே முன்னால் வந்த அர்விந்த் "வெங்காயம் கட் பண்ணி என் கை ரேகையே தேஞ்சி போச்சிடா!" என்று கையை காட்டினான்.

"அதானே.. அந்த முன்னாள் எம்.எல்.ஏ வெள்ளை எலி வெங்கட்க்கிட்ட 'சார் எனக்கும் உங்க பொண்ணுக்கும் குழந்தை இருக்கு. நீங்கதான் எங்களை சேர்த்து வைக்கணும்'ன்னு சொல்லி இருந்தா விசயம் ஈசியா முடிஞ்சிருக்கும்!" என்றான் மிருத்யூவும்.

"ஆனா இவங்க அப்பா இவளை கொன்னுடுவாரே!" சோகமாக சொன்னான் பிரேம்.

"அதுக்காக ஒன்னரை வயசுல குழந்தையை எத்தனை வருசம்டா மறைச்சி வைக்க போறிங்க?" ராகுல் சந்தேகத்தோடு கேட்டான்.

"இல்ல சீனியர்.. கொஞ்ச நாள்.. எங்களுக்கு மேரேஜ் முடிஞ்சிட்டா அப்புறம் தைரியமா சொல்லிடுவோம்!" என்றான் பிரேம் நிமிர்ந்துப் பார்த்து.

"நான் தாலி ஒன்னு எடுத்துட்டு வரேன்‌. நீ கட்டு. இங்கேயே கல்யாணம் முடியட்டும்!" வெளியே நடந்த மிருதுளாவின் கையை எட்டி பிடித்து நிறுத்தினான் பிரேம்.

"கல்யாணம் ஆனாலும் இவங்க அப்பன் எங்களை கொன்னுடுவான் மிருது.. கல்யாணம் பண்ண பிறகு நாங்க எங்கேயாவது ஓடி போயாகணும்!" என்றான் கெஞ்சலாக.

"ஓகே.. எதுவா இருந்தாலும் யோசிச்சி சொல்றோம் நாங்க.." என்ற மிருதுளா அதன் பிறகுதான் ராகுலின் விழிகள் தன் கழுத்தின் கீழ் பதிந்துள்ளதை கண்டாள்.

"பொறுக்கி மாதிரி பிகேவ் பண்ணாதிங்க போலிஸ்கார்!" மிருதுளாவின் குற்றச்சாட்டில் அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டான் ராகுல்.

"சாரி.." என்றவனின் முகம் செவ்வானமாக சிவந்து விட்டிருந்தது. வருங்கால காதலி என்ற உரிமையில் கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக் கொண்டோமோ என்று வருந்தினான்.

"இதுக்குதான் அந்த டிரெஸ்ஸை மாத்தி தொலைன்னு சொன்னேன்!" பிரேம் உடல் வலியோடு மிருதுளாவை திட்டினான்.

"நீ ஏன் இவளை திட்டுற? சீனியருக்கு கண்ணு குருடா இருந்தா யார் என்ன பண்றது?"‌ என்ற மிருத்யூ காலியாகி விட்ட குளிர்பானத்தின் கடைசி சொட்டை சுவைத்து விட வேண்டி குவளைக்குள் நாக்கை நுழைத்துக் கொண்டிருந்தான்.

'கருமம்டா..' பற்களை கடித்துக் கொண்டு எழுந்து நின்றான் ராகுல்.

"ஹலோ பாய்ஸ்.. சாதா மனுசன் கண்ணுக்கு சிலையும் கருங்கல்லுதான். ஆனா சிற்பிக்கு கல்லு கூட சிலைதான்!" என்றான்.

"இதனால் தாங்கள் கூற வருவது என்னவென்று எங்களுக்கு புரியவில்லையே அமைச்சரே!" வேண்டுமென்றே நக்கலாக கேட்டான் அர்விந்த்.

பிரேமின் வீங்கிய உதட்டை விரலால் வருடினாள் அவனை அணைத்தபடி நின்றிருந்த சிபி. "ரொம்ப வலிக்குதா பேபி?" எனக் கேட்டாள். "ம்"என்று தலையசைத்தவன் ராகுலின் பதிலுக்கு காத்திருந்தான்.

"நான் ஒரு சிற்பியா இருந்து அவளை சிலையா பார்க்கறேன்!" என்றான் ராகுல் தனது கால்சட்டை பாக்கெட்டில் கை விட்டபடி.

"புரியல.." விழிகளை உருட்டியபடி சொன்ன மிருதுளா தன் கையை கிள்ளி பார்த்தாள். வலித்தது. 'சிலையா இருந்தா வலிக்காதே!'

"ஐ லவ் ஹேர்!" ராகுல் இதை சொல்லி முடித்த பிறகு அந்த அறையே மயானத்தின் நடு இரவை போல அமைதியானது.

நண்பர்கள் நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மிருத்யூ தன் சகோதரியின் முகத்தை உற்றுப் பார்த்தான். எந்த திசையில் இருந்து பார்த்தாலும் அவளின் முகத்தில் பெண்மைக்கான களை இருப்பதாகவே தெரியவில்லை அவனுக்கு.

"காமெடியா இது?" பிரேம்தான் முதலில் கேட்டான்.

ராகுல் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"நான் இவளை லவ் பண்றேன்.‌ நோ காமெடி!" என்றான்.

"எனக்கு ஓகே!" என்றான் அர்விந்த்.

நண்பர்கள் அவனை சந்தேகமாக பார்த்தனர். "போலிஸ்ப்பா.. துப்பாக்கி வச்சிருப்பாரு. நாம அப்பப்ப யூஸ் பண்ணிக்கலாம். அதை விட முக்கியமா மிருது எவ்வளவு உதைச்சாலும் தாங்கும். போலிஸ்ன்னாவே ஸ்டீல் பாடி இல்லையா?" எனக் கேட்டான் அவன்.

"அப்ப எனக்கும் ஓகே! ஆனா உங்ககிட்ட எக்ஸ்ட்ரா லத்தி இருந்தா அதை எனக்கு மட்டும்தான் தரணும்!" என்றான் மிருத்யூ.

"ஹேய்.. என்ன ஆளாளும் உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கிங்க. இங்கே நான்தான் மெயின்.!" என்ற மிருதுளாவால் அனைவரும் அமைதியாகினர்.

"அர்வி.. சீனியர் பக்கத்துல போய் நில்லு!" என்று கட்டளையிட்டாள்.

"கொடுமை இவளோடு!" என்றபடி ராகுலின் அருகே வந்து நின்றான் அர்விந்த். ராகுல் அவசரமாக மூக்கை பொத்திக் கொண்டான். வெங்காய நெடி அந்த அளவிற்கு இருந்தது. அர்விந்த் முறைத்தான் அவனை.

ராகுல்தான் உயரமாக இருந்தான். யோசிக்கலாம் என்று நினைத்தாள் மிருதுளா.

"ஓகே சீனியர்.. நான் யோசிச்சிட்டு ஒரு மாசம் கழிச்சி சொல்றேன்.!" என்றவள் "எல்லாம் அவங்கவங்க வேலையா பார்க்கலாம் இனி.!" என்றாள்.

பிரேம் தனது விக்கை சரியாக வைத்தபடி அந்த அறையை விட்டு வெளியே நடந்தான். அர்விந்த் தான் கொண்டு வந்த தட்டையும் குவளைகளையும் எடுத்துக் கொண்டு நடந்தான்.

"இந்த கல்யாணம் முடியும் வரை அந்த சித்து எருமைக்கிட்ட நான் மாட்டாம இருக்கணும்.!" புலம்பினான் மிருத்யூ.

"எனி ப்ராப்ளம்?" எனக் கேட்ட ராகுலிடம் நடந்தது முழுக்க விவரித்தான் மிருத்யூ.

"இந்த வீட்டை விட்டு வெளியே போனதும் அந்த எருமை மேல நான் செக்ஸுவல் ஹராஸ்மென்ட் கேஸ் தர போறேன்.. ப்ராமிஸ்.!" என்றான் மூக்கை உறிஞ்சியபடி.

"சும்மா சீனை போடாம இரு குரங்கு!" சகோதரனை திட்டிய மிருதுளா "நீங்களும் கிளம்புங்க சீனியர்." என்று கையை கட்டியபடி சொன்னாள்.

ராகுல் அவளின் துப்பட்டாவை அவளிடமே எறிந்து விட்டு நடந்தான்.

"ஒரு நிமிசம்." நின்றவனின் அருகே வந்தாள். "உங்க பர்ஸ்ல என் போட்டோ எப்படி?" சந்தேகமாக கேட்டாள்.

அவளின் முகத்தருகே குனிந்தான். 'அச்சோ சீனியர் கிஸ் பண்ண போறாறா? நான் வேற காலையில் சோம்பேறியா இருக்கேன்னு பல் விளக்காம விட்டிருந்தேனே..' குற்ற உணர்வில் நெஞ்சம் அடித்துக் கொண்டது அவளுக்கு.

அவளின் காதோரம் குனிந்தவன் "நீ புத்திசாலியா இருந்தா கண்டுபிடி!" என்றான் கிசுகிசுப்பாக.

மிருதுளா குழப்பத்தோடு அவனின் முகம் பார்த்தாள். ராகுல் அங்கிருந்து நடந்தான்.

"அழகா இருக்க மிருது நீ. ரொம்ப அழகு.. இந்த டிரெஸ் உனக்கு செம செக்ஸியா இருக்கு.. ஆனா இந்த ரவுடி பசங்க முன்னாடி அலைஞ்சிட்டு இருக்காத.. நான் ஒன்னும் ஓரடியில் எதிரியை வீழ்த்தும் ஹீரோ கிடையாது.!" என்றபடியே அந்த அறையை விட்டு சென்று விட்டான் ராகுல்.

மிருதுளா தன் உடையை பார்த்தபடியே வந்து இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். "என் போட்டோ எப்படி அவர்கிட்ட வந்திருக்கும்?" சந்தேகத்தோடு யோசித்தாள். ஒன்றுமே புலப்படவில்லை.

அர்விந்த் தாமதமாக வந்ததற்காக அவன் இரு மடங்கு வேகத்தில் வெங்காயம் வெட்ட வேண்டி ஆகிவிட்டது. தன் மனதுக்குள் பிரேமை கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே வெங்காயத்தை நறுக்கினான்.

சிபி தங்களின் குழந்தையின் புகைப்படங்களை மிருதுளாவிடமும் மிருத்யூவிடமும் காட்டினாள்.

"கொழு கொழுன்னு இருக்கு குழந்தை.. ஆமா நீங்க எப்படிதான் இந்த குழந்தையை பெத்து வளர்த்தினிங்க? காலேஜ்லயும், உங்க ஹாஸ்டல்லயும் சந்தேகம் வரலையா?" குழப்பத்தோடு தலையை சொறிந்தபடியே கேட்டாள் மிருதுளா.

"அதை அப்புறமா சொல்றோம் மிருது.." என்று அமைதியாகி கொண்டாள் சிபி.

"ஆனாலும் எனக்கு ரொம்ப பெரிய சோகம்.." கன்னத்தில் கை வைத்தபடி கட்டிலின் தலைமாட்டில் சாய்ந்தவளை கவலையோடு பார்த்த சிபி "என்ன சோகம்?" எனக் கேட்டாள்.

"டைட்டில்ல வந்த குட்டி நிலா நான்தான்னு நினைச்சேன். ஆனா அது உன் பாப்பான்னு யோசிக்கவே இல்ல!" அழாத குறையாக சொன்ன தங்கையின் அருகே வந்து தலையை தடவி விட்டான் மிருத்யூ.

"டோன்ட் வொரி மிருது. நான் உன்னை இனி குட்டி குரங்குன்னு கூப்பிட்டுறேன். சரியா போயிடும்!" என்றான். மிருதுளா அவனின் கையை தட்டி விட்டாள்.

"ஒன்னும் வேணாம் போ.." என்றாள் தலையை திருப்பியபடி.

"சாமி.. எங்களுக்கு கொஞ்சம் தீர்த்தம் கொடுங்க.." கமண்டலத்தில் இருக்கும் தண்ணீரை எதிரில் இருந்தவர்களின் கைகளில் விட்டுக் கொண்டே இருந்தான் பிரேம். உட்காரவே முடியவில்லை. பயங்கரமாக வலித்தது. சற்று நேரம் கவிழ்ந்து படுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அவனை விடாமல் ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் சாமி சாமி என்று அழைத்து அவனின் காதுகளை செவிடாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இரவு வந்தது. மிருத்யூ சாப்பிட கூட செல்லவில்லை. "உன் அண்ணன் இருக்கும் இடத்துல நான் இருக்க மாட்டேன்!" என்று சிபியிடம் முடிவாக சொல்லி விட்டான் அவன்.

பாவம் பார்த்து மிருதுளாவே அவனுக்கும் சேர்த்து உணவை கொண்டு வந்து தந்தாள்.

மணி பத்தை தாண்டி விட்டது. ஆளாளும் உறங்க முற்பட்டனர். ஹாலில் நடனம் ஆடும் பெண்கள் சிலர் இன்னமும் ஆடிக் கொண்டேதான் இருந்தார்கள்.

ராகுலும் ஜீவனும் முகமூடியால் தங்களின் முகத்தை மறைத்துக் கொண்டு ஆதார வேட்டைக்கு கிளம்பினார்கள். மூன்றாவது மாடி காலியாக இருந்தது. அங்கேதான் ஓரமாக இருந்தது சித்துவின் அறையும். ஆட்கள் நடமாட்டமே இல்லை. அது இவர்கள் இருவருக்கும் கை தந்தது.

"எப்படியாவது அந்த ஹல்கையும், அந்த பொம்பளையையும் கம்பி கதவுக்கு அந்த பக்கம் பார்த்துடணும் ராகுல்.!" என்ற ஜீவன் சுற்றம் முற்றும் பார்த்துவிட்டு சித்துவின் அறை கதவை திறக்க முயன்றான்.

"லாக்.. அவன் உள்ளேதான் இருப்பான் போல!" கவலையோடு சொன்னவன் "நாம வெங்கட் ரூமுக்கு போகலாம்!" என்றான்.

ராகுல் யோசித்துவிட்டு மறுப்பாக தலையசைத்தான். "இரு ஒரு நிமிசம்.!" என்றவன் அவசரமாக அங்கிருந்து கிளம்பினான். சற்று நேரத்தில் அரை உறக்கத்தில் இருந்த மிருத்யூவை இழுத்துக் கொண்டு வந்தான்.

"ஏன் சீனியர்?" கொட்டாவி விட்டபடியே வந்தவன் சித்துவின் அறை கதவை கண்டுவிட்டு "எனக்கு நடந்த கொடுமைக்கு இப்பவே பழி வாங்க போறிங்களா சீனியர்?" எனக் கேட்டான்.

இடம் வலமாக தலையசைத்த ராகுல் "பழி வாங்கதான் போறேன். ஆனா அதுக்கு உன் ஹெல்ப் வேணும். நீ இப்ப உள்ளே போய் சித்துவை டிஸ்ட்ராக்ட் பண்ணு. நாங்க ஆதாரம் தேடுறோம்!" என்றான்.

மிருத்யூவின் மொத்த தூக்கமும் கலைந்து விட்டது.

"சீன் ரொம்ப பழசு ராகுல்.!" ஜீவன் சொன்னது கேட்டு திரும்பிப் பார்த்து முறைத்தவன் "அப்படின்னா நீங்கதான் புதுசா ஒரு சீன் சொல்லுங்களேன்.!" என்று எரிந்து விழுந்தான். "நான் இங்கே என் மச்சானை பலிகெடாவா ஆக்கி இருக்கேன்‌. கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்க ஜீவன்.." என்றான்.

மிருத்யூ ராகுலின் கையை கீறினான். திரும்பி பார்த்தான் ராகுல். "சாமி வந்து கனவுல சொல்லுச்சின்னு சொல்லி மிருதுளாவை சாமியாரா அனுப்பினாலும் அனுப்புவேனே தவிர கண்டிப்பா உங்களுக்கு கட்டி தர மாட்டேன்.!" என்றுவிட்டு அங்கிருந்து கிளம்ப முயன்றான். சட்டென்று அவனை பிடித்து நிறுத்தினான் ராகுல்.

"ஹெல்ப் பண்ணு மிருத்யூ. அப்பதான் என்னால இவனையும் இவன் வீட்டுல உள்ளவங்களையும் அரெஸ்ட் பண்ண முடியும். அப்பதான் இந்த கல்யாணம் நிற்கும். அப்பதான் நாம சேப்பா வெளியே போக முடியும்.." என்றான்.

"ஆனா அவன் என்னை கைமா பண்ணிடுவான் சீனியர்.!"

"பீ ஏ மேன்.!"

"மாமன் ஆக போறிங்கன்னு கூட பார்க்காம கெட்ட வார்த்தையிலேயே திட்டிடுவேன் சீனியர்.. காட்டெருமைக்கும் காண்டாமிருகத்துக்கும் கலப்பினம் பண்ணி பிறந்த மாதிரியே இருக்கான் அவன்.!" என்றவன் ராகுலின் கையை பற்றி தன் காதின் மீது வைத்தான். "காதை கடிக்க பார்க்கறான். அவன் எச்சில் ஈரம் இன்னமும் என் காது மேலிருந்தா கூட ஆச்சரியம் இல்ல.."

அவசரமாக தன் கையை பின்னுக்கு இழுத்தான் ராகுல். மிருத்யூவின் டாப்பின் மீதே தன் கையை துடைத்தான்.

"குளிக்கலையா நீ?" முகத்தை சுளித்தபடி கேட்டான்.

"நாளைக்கு குளிக்கலாம்ன்னு‌.."

"ச்சீ.. ரொம்ப டர்ட்டி நீ.! வா வந்து மரியாதையா அவனை டிஸ்ட்ராக்ட் பண்ணு.." அவனின் டாப்பின் நுனியை பற்றி இழுத்துக் கொண்டு கதவருகே வந்தான்.

"இப்ப நீ இவனை டிஸ்ட்ராக்ட் பண்ணலன்னா அப்புறம் நான் உன்னை இங்கேயே என்கவுண்டர் பண்ணிடுவேன்.!" என்றவன் சொல்லி முடித்த நேரத்தில் ஜீவன் கதவை தட்டி வைத்தான்.

"அடப்பாவிகளா.. ஒரு கன்னி பையனை பன்னி பையன்கிட்ட இப்படி மாட்டி விட்டிங்களேடா.!" மிருத்யூ மீதியை புலம்பும் முன் கதவை திறந்தான் சித்து. ஜீவனும் ராகுலும் கதவை ஒட்டியபடி சுவரோடு சுவராக ஒட்டி நின்றனர்.

"ஹேய் ப்யூட்டி.. இந்த நேரத்துக்கு என்னை தேடி வந்திருக்க.."

மிருத்யூ தரையை பார்த்தான். பின்னர் நிமிர்ந்து விழிகளை படபடவென சிமிட்டினான்.

மிருத்யூவின் இடுப்பில் அழுத்தமாக கை பதித்த சித்து அவனை இழுத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.

கதவு முழுதாய் மூடும் முன் தன் கால் கட்டை விரலை இடை செருகினான் ஜீவன். இருவரும் காத்திருக்க ஆரம்பித்தனர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN